Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

சுயமுன்னேற்ற நூல்கள் வாசிப்பதால் ஒருவருக்குள் எழும் மாற்றங்கள் குறித்து?

மா. திருமுருகன்
கல்வீரம்பாளையம்

சுயமுன்னேற்ற நூல்கள் படிக்கும் பழக்கம் போதுமான அளவுக்கு இல்லாத இன்று இந்த கேள்வியைக் கேட்ட   மா. திருமுருகன் அவர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நூலகங்களிலும், புத்தகக் கடைகளிலும் பலவிதமான நூல்களைக் காணமுடிகிறது. இதில் எதைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது மிக முக்கிய முடிவாகும். ஏனென்றால் நாம் படிக்கும் நூல்கள் நமது எண்ணங்களை, வாழ்க்கையை, ஏன் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் ஆற்றல் படைத்தவை. ஒரு சிலர் மத சம்பந்தமான நூல்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். சிலர் இலக்கிய நூல்களுக்கு, இன்னும் பலர் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்தும் வருகிறார்கள். ஒரு மனிதனின் எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள், படிப்பறிவு, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவன் நூல்களைத் தேர்வு செய்கிறான். ஆனால் இந்த உலகில், அதுவும் போட்டி நிறைந்த உலகில் சுதந்திரமாக, தைரியமாக, நம்பிக்கையுடன் வாழ விரும்பும் ஒருவர் சுயமுன்னேற்ற நூல்கள், அதுவும் தரம் மிக்க நூல்களைப் படிப்பதும், அதன்படி நடப்பதும் மிகவும் அவசியமாகிறது.

அறிவு விரிவாக்கம்

சுயமுன்னேற்ற நூல்கள் நமது அறிவை அகலப்படுத்துகின்றன; ஆழப்படுத்துகின்றன. இன்றைய உலகம் அறிவாளிகள் உள்ள உலகம் (World of Knowledge Workers); யாருக்கு அறிவாற்றல் அதிகம் உள்ளதோ அவருக்கு பல சாதகங்கள் உண்டு. சமீபத்தில் டாட்டா நிறுவனரின் ‘நானோ’ என்ற குட்டி கார் திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், பின்னர் மேற்கு வங்காளத்தின் சிங்கூர் என்ற ஊரில் இந்தக் காரை தயாரிக்க சந்தித்த பிரச்சனைகளும், குறுகிய காலத்தில் ரட்டன் டாட்டா அவர்கள் அதை எப்படி சரி செய்து கார்களைத் தயாரித்தார் என்ற செய்திகளும் TATA NANO – The People’s Car என்ற ஒரு நூலாக வந்தது. தொழில் முனைய விரும்புபவர்களுக்கு அது பயனுள்ள கருவியாக இருக்கிறது. பிரச்சனைகளைச் சந்தித்தவரே நேரடியாக உங்களிடம் ரூ.99-க்கு (புத்தக வடிவில்) சொல்கிறார். இது சுயமுன்னேற்ற நூல்களின் மகிமை அல்லவா? உங்களுக்கு அறிவுப் பெட்டகத்தைப் பரிசாகத் தருகிறது சுயமுன்னேற்ற நூல்கள்!

சிந்திக்க வைக்கின்றன

பல சுயமுன்னேற்றநூல்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. உலகிலேயே பிரபலமாக பேசப்பட்ட பல நூல்கள் மக்களை சிந்தனைக்கு (Logical Thinking) உள்ளாக்கின. இந்த உலகம் உருவானதா (Creation) அல்லது உருவாக்கப்பட்டதா (Evolution) என்ற பெரிய வாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. உருவாக்கப்பட்டது என்று பல அறிஞர்களும், உருவானது என்று பல அறிஞர்களும் தங்களது வாதங்களை எடுத்துரைத்தனர். இதில் சார்லஸ் டார்வின் 1859ம் ஆண்டு எழுதிய ‘Origin of Species’ என்றநூல், இந்த உலகில் உயிரினங்கள் படிப்படியாகத் தோன்றி உயர்நிலை உயிரினங்களாகத் தோன்றியது என்பதை நம்பக்கூடிய வகையில் நிரூபித்துவிட்டது.

இவரது கண்டுபிடிப்புகளை வைத்து உலகம் எந்த உயர்ந்த சக்தியாலும் தோற்றுவிக்கப்படவில்லை என்று விவாதம் செய்யும் ரிச்சார்ட் டாக்கின் என்பவர் எழுதிய God Delusion என்றநூல் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அதுபோல ராபின் சர்மா என்பவர் எழுதிய The Leader Who Had No Title என்றநூல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. “நாம் ஒவ்வொருவரும் தலைவர் தான். நம் அனைவருக்கும் தலைமைப் பண்பிற்கான பயிற்சிதேவை. மாணவன் ஒருவன் அவனது கடமையைச் சரியாகச் செய்ய அவனுக்குத் தலைமைப்பண்பு வேண்டும். இதைப் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன் தானும் இன்றைய தலைவன் தான்; நாளைய தலைவன் மட்டும் அல்ல என்பதை உணர்வான். அந்த சிந்தனையே அவனது நடவடிக்கைகளை மாற்றும். இதை உணர்ந்தால் ஒரு தலைவனைப் போல் மிடுக்காக நடப்பான் அவன்.”

நம்மை உருக வைக்கும்

சிறப்புமிக்க சுயமுன்னேற்றநூல்கள் நம்மை உருக வைத்துவிடும். தென்துருவத்திற்கு செல்ல வேண்டும் என்று புறப்பட்டு பின்னர் சடலமாகிவிட்ட ராபர்ட் ஸ்காட் (Robert Scott) பற்றிய செய்தியும், அவர் இறந்த பின் டென்னிசன் என்பவர் எழுதிய Ulysses என்றபாடலும், அவரது கடிதமும் உருக வைக்கிறது. அவர் சாதிக்க முனைத்த தென் துருவத்திற்கு Roald Amundsen என்றநார்வே நாட்டவர் மாணவர்களுடன் சென்றடைந்து சாதனை செய்தார். வயது ஒரு புறம், உணவு இல்லாமல் இருந்தது இன்னொரு புறம், உடல் நலம் குன்றிய நிலையில் அவரது கடிதம் மனதை உருக்கியது. பல விளக்குகள் தந்த ஒளி (Light From Many Lamps) என்றநூலில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளது.

தன்னம்பிக்கை ஊட்டும்

கண்பார்வையற்ற எரிக் வேய்ஹென்மேயர் (Erik Weihenmayer), 8848 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். இவரது அனுபவங்களைத் தொகுத்தளித்த Touch The Top Of The World என்ற நூல் நமக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவது அல்லவா? சென்னையைச் சேர்ந்த 32 வயது இளங்கோவிற்கு இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. ஆனால் அவர் இன்று சுயமுன்னேற்றபேச்சாளராக உள்ளார். 400 ஆங்கில ஆசிரியர்களை வைத்து “Ace panacea” என்றநிறுவனத்தை நடத்துகிறார். அவரது “ஜெயிப்பதுநிஜம்” என்றநூலைப் படியுங்கள்; உங்களுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

உலகை பார்க்கும் மனப்பக்குவம் வரும்

தரமான நூல்களைப் படித்தவர்கள் உலகில் காணும் நிகழ்வுகளில் பெருத்த மகிழ்ச்சியும், அதே வேளையில் பெருத்த துன்பமும் இல்லாமல் ‘நடுநிலை உணர்வு’ கிடைக்கப் பெறுவார்கள். “The Feeling Of Equanimity” நான் முதலில் குறிப்பிட்ட ‘விளக்குகள் பல தந்த ஒளி’ என்னும் நூலில் ‘இதுவும் கடந்துவிடும்’. “This too shall pass” என்ற தத்துவம் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு மனப்பக்குவம் வந்துவிட்ட நிலையில் சந்திக்கும் சங்கடமான அல்லது சந்தர்ப்பமான சூழ்நிலைகளை எப்படி சந்திப்பது என்பதுதெரிந்துவிடும்.

வெற்றித் தத்துவங்கள் தெரிந்துவிடும்

பல சுயமுன்னேற்ற நூல்கள் வெற்றிப்படிகளை வெளிச்சம் இட்டுக் காட்டுகின்றன. அதாவது வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தருகின்றன. “Laws of Success” என்பதுநெப்போலியன் ஹில் எழுதிய ஒருசிறந்த நூல். பல வழிகளில் உயரத் தேவையான விதிமுறைகளை நமக்குத் தருகிறது. “7 Habbit of Highly Effective People” என்ற Stephen Covey என்பவர் எழுதிய சுயமுன்னேற்றநூல் சிறந்துவிளங்கத் தேவையான 7 முக்கிய பழக்க வழக்கங்களைத் தருகிறது. “48 Ways of Our” என்பது ராபர்ட் கிளைவ் தந்துள்ள அற்புத வெற்றித் தத்துவ நூல்.

ஞானோதயம் பிறக்கும்

புத்தனுக்கு ஞானோதயம் வந்தால் போதுமா? நமக்கு வர வேண்டாமா? அவருக்கு போதி மரத்தடியில் இருந்ததால் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மாணவனாகிய உனக்கு ஞானோதயம் வர வேண்டுமானால் அது ஒரு சுயமுன்னேற்றநூலையோ அல்லது பல நூல்களையோ படிப்பதால் மட்டுமே ஏற்படும். அதுவும் எந்த நூல்களைப் படிக்க வேண்டும் என்பதும், படித்தபடி நடந்து கொள்ளுதலும் வேண்டும். சமீபத்தில் ஒரு நூலைப் படித்தேன். The Power of Now – இன்று இப்போதைய நேரத்தின் ஆற்றல் அதிகம் என்பது அந்த நூல். நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் உள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களைத் திறந்து பார்ப்பதில்லை. நமது முக்கியத்துவம் உணர்வதில்லை. நமது நேரத்தின் மகிமையையும் உணர்வதில்லை என்பதை இடித்து உணர்த்த இந்த நூலை Elcort Tolle எழுதியுள்ளார்.

நகைச்சுவை உணர்வு வளரும்

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களிடம் தான் நல்ல மனிதர்களைப் பார்க்க முடியும். இந்த நகைச்சுவை உணர்வுடன், சுயமுன்னேற்ற நூல்களை வழக்கமாக கற்றவர்களிடம் அதிகம் இருக்கும். Murphy’s Law என்றநூல் Arthur Bloch என்பவரால் தொகுக்கப்பட்டது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்த நூல் “If Anything that can go wrong, will go wrong” என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டது.

நல்ல சுயமுன்னேற்றநூல் படித்தவர்களின் வேறு பெயர்கள்:

சிந்தனையாளர், மகான், நிபுணர், மகிழ்ச்சி உள்ளவன், அறிவாளி, இடம் அறிந்தவன், பிறரை மதிப்பவன், நேரத்தின் அருமையை உணர்ந்தவன், பிறருக்கு உதவுபவன், தலைவன், திறமைசாலி, நல்ல மனிதன். நல்ல சுயமுன்னேற்ற நூலால்,

            அறிவு வளர்ந்து பெருமரமாகும்

            சிந்தனை மலர்ந்து நறுமணமாகும்

            மனிதர்களைப் புரிதல் உயரும்

            மனம் விரிந்து வானமாகும்

            நடவடிக்கைகள் முதிர்ந்து கனியும்

            நகைச்சுவை உணர்வு வாசனை பரவும்

            பேச்சைக் குறைத்து செயலை அதிகமாக்கும்

            நம்மையும் நேசித்து பிறரையும் நேசிக்க வைக்கும்

            உள்ளேயும் பார்த்து, வெளியேயும் பார்க்க வைக்கும்.

சுயமுன்னேற்ற நூல்கள் ஆயிரம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்; சில நூல்களைப் பற்றி தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. அவற்றுள் சில:

  1. திருக்குறள்
  2. சுவாமி விவேகானந்தரின் My Eternal India
  3. காந்தி அடிகளின் My Experiments with Truth
  4. பாரதியார் கவிதைகள்
  5. பண்டித நேருவின் Tryst With Destiny

சுயமுன்னேற்றநூல்களைப் படியுங்கள்; படித்த நூல்களையே திரும்பவும் படியுங்கள்; உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு நீங்களே வியந்து போகலாம். பின் ஒருநாள் உங்கள் வாழ்க்கையும் சுயமுன்னேற்றநூலாகலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2015

என் பள்ளி
பயப்படாதே
வரலாற்றில் ஒளிவீசும் தைரியத் திலகங்கள்
நாளைய விடியலுக்கான நம்பிக்கைக் கதவுகள் திறக்கப்படும்!
படித்தால் பெரியாளாகி விடுவாய்
யாரிடம் வேலையை ஒப்படைப்பது
தன்னம்பிக்கை விஞ்ஞானிகள்
பன்றிக்காய்ச்சல்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
வெற்றி எங்கே?
பிராணயாமம்
கண்ணா மூச்சு
உழைக்க உறுதி எடு! உலகம் போற்றப் பெயரெடு!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்