Home » Articles » இடைவெளியை பூஜ்யமாக்குவோம்

 
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

உபாயங்கள் என்றால் வழிகள் ஆகும். முன்பு உபாத்தியாயர் என்று ஆசிரியர்களைச் சொல்வார்கள். அந்த ஊரில் பல குடும்பங்களிலும் ஏதேனும் பிரச்னைகள், நோய்கள் என்றால், அவரை அணுகி ஆலோசனை கேட்பார்கள்.

பிரச்னைகள், நோய்களின் விபரம் அறிந்து, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள், பல வழிகள் சொல்வார். எனவே தான் அவரை உபாத்தியாயர் என்றனர்.

இன்றைய ஆசிரியர்களின் நிலை அப்படியா உள்ளது? அவர் ஆசிரியர் என்பதே அந்தப் பகுதியில் பலருக்கும் தெரியாது; அப்படித் தெரிந்தாலும், எந்தப் பள்ளியில் பணிபுரிகிறார் என்பதும் தெரியாது. அந்த அளவுக்கு ஆரவாரமில்லாமல் பணிபுரிகின்றனர் என்று சொல்லிக் கொள்ளலாம்.

இடைவெளியைக் குறைப்பது, இடைவெளியை பூஜ்யமாக்குவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக நமக்கும் ரயிலுக்குமான இடைவெளி 500 அடி என்றால், ரயிலை நோக்கி நாம் நடந்து செல்லச் செல்ல இடைவெளி குறைந்து கொண்டே இருக்கும்.

நமது பெட்டிக்குச் சென்று, அதில் ஏறி, நமது இருக்கையில் (Seat/ berth) அமரும் போது, இடைவெளி பூஜ்யமாகிறது.

சமீபத்தில் என் நண்பரின் மகன் ஓணம் பண்டிகையின் போது, சென்னையிலிருந்து கோவை செல்ல, கேரளா செல்லும் ரயிலில் 3ம் ஏ.சி. வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து டிக்கெட் வைத்திருந்தார். நமக்குத்தான் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டோமே என வழக்கம் போல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றார்.

இவர் பயணிக்க வேண்டிய இரயில் நிற்கும் (பிளாட் பாரம்) நடைமேடைக்குப் பக்கமே செல்ல முடியாதவாறு ஏராளமான மக்கள் கூட்டமாம். எப்படியோ, அந்த பிளாட்பாரத்தை நெருங்கிவிட்டார். இவர் பயணம் செய்யும் பெட்டி அந்த இடத்திலிருந்து 15 பெட்டிகளுக்கு அப்புறமாய் இருந்தது.

அந்த நடைமேடையில் ஓர் அடிகூட முன்னேற முடியாமல், நின்றுவிட்டு, இரயில் புறப்பட்ட பின், சென்னையில் தங்கி, மறுநாள் திரும்பியதாயும், தன் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தைப் பார்த்ததில்லை என்றும் கூறினார்.

பயணத்தன்று, சம்பந்தப்பட்ட இரயில் நிலையம் சென்று, ரயில் நிற்கும் பிளாட் பாரத்தை அடைந்து, நாம் பயணிக்கும் பெட்டிக்குச் சென்று, நமக்காகப் பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமரும் வரையான இடைவெளியை, அதாவது நமக்கும், நம் இருக்கைக்குமானதை, குறைக்கும் செயல் தான் பூஜ்யமாக்குதல் என்பது. இதில் வெற்றியும் பெறலாம்; தோல்வியும் பெறலாம்.

சமீபத்தில் சீரடி சென்றுவிட்டு, நள்ளிரவு 2 மணிக்கு பூனா இரயில் நிலையத்தில் மும்பையிலிருந்து கோவைக்கு வந்த இரயிலில், நம் பெட்டியில் ஏறினால், நமது குழுவுக்கான எல்லா பெர்த்துகளிலும் பயணிகள் இருந்தனர். கூட்டமாக இருந்ததால் அரை மணிநேரம் போராடி, அவர்களை எழுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

இதேபோல் மறுநாள் மந்த்ராலயத்தில் மதியம் 12.30க்கு இரயில் ஏறினால், நமக்காக பூனாவிலிருந்து பதிவு செய்த இருக்கைகளில் வேறு ஒரு குழுவினர் அமர்ந்திருந்தனர். இது எங்களுடையது, எழுந்திருங்கள் என்றால் காது கேட்காதது போல் அமர்ந்திருந்தனர்.

மந்த்ராலயத்தில் வெயிட்டிங் லிஸ்ட் என்பதால், பணம் அதிகமானாலும் பரவாயில்லை என பூனாவிலிருந்து டிக்கெட் எடுத்து அதற்கான தொகை செலுத்தி, ஏறுமிடம் மந்த்ராலயம் என வாங்கியிருந்தோம்.

 நம் இருக்கையில் அமர்ந்திருந்த இந்தி மொழி பேசிய பெண்கள், நம்மிடம் டிக்கெட் கேட்டனர். எப்படி இருக்கிறது கதை? அவர்கள் டிக்கெட்டைக் காண்பிக்குமாறு எல்லோரும் இணைந்து சப்தம் போட்டு, அங்கிருந்து எழ வைத்தோம்.

இடைவெளி பூஜ்யமாவது, அதாவது நமக்குப் பதிவு செய்த இருக்கைக்குச் சென்று அமர்வதற்கு எவ்வளவு நேரமானது பாருங்கள்.

நமக்கு ஒதுக்கிய இடத்தில் வயதானவர்கள், முடியாதவர்கள் அமர்ந்திருந்தால், மனித நேயத்தோடு, இடைவெளியை பூஜ்யமாக்க விரும்பாத பல நல்ல உள்ளங்களும் நம்மிடையே உள்ளார்கள்.

எனவே, நம் நோக்கம் இடைவெளியை பூஜ்யமாக்குவது தானே தவிர, குறைப்பதல்ல. இடைவெளி பூஜ்யம் என்பது நம்முடன் பல இலக்கை, குறிக்கோளை இணைப்பது தான். இப்போது இடைவெளியை பூஜ்யமாக்குவோம் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை என உறுதியாக நம்புவோம்.

சரி! நம் வாழ்க்கையில் எதில் இடைவெளியைப் பூஜ்யமாக்குவது? இது பெரிய கேள்வி தான்.

இப்போது நாம் கீழ்கண்டவற்றில் எந்த நிலையில் இருக்கிறோம்?

 உடல் நலத்தில்,

பொருளாதாரத்தில்,

மன அமைதியில்,

கல்வியறிவில்,

சம்பாதிப்பதில்,

எதிர்பார்ப்பதில்,

எண்ணங்களில்,

ஆசைகளில்,

வாழ்வின் இலட்சியங்களில்

(அதாவது குறிக்கோள்களில்)

இவற்றில் இன்று எந்த அளவில் இருக்கிறீர்கள் எனப்பட்டியல் தயாரிக்க வேண்டும். ஒரு சிலை செதுக்க நல்ல கல் எப்படி மிக முக்கியமோ, அதுபோல் இந்தப் பணி முக்கியமானதாகும்.

உடல் நலம்

நோய் விபரம், பசி, தூக்கம், கழிவு நீக்கம் இவற்றில் இன்றைய நிலையை எழுத வேண்டும். (உ.ம்) கண்கோளாறு; நீண்ட நேரம் வாசித்தால் கண் வறட்சியாகி வலிக்கிறது.

எதிர்பார்ப்பு

கண் வறட்சியால் உண்டாகும் கண்வலியிலிருந்து விடுபட வேண்டும். எவ்வளவு நேரம் படித்தாலும் கண் வலிக்கக் கூடாது என்பதே எதிர்பார்ப்பு.

தகவல் சேகரித்தல்

கண் வறட்சிக்கான காரணம் தெரிந்துவிட்டது; அதிக நேரம் படிப்பது. ஆனால், அதிக நேரம் வாசிக்கும் எல்லோருக்குமே கண் வறட்சி வருவதில்லை என்பதால், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். எந்த நேரம் வாசித்தால் கண் வறட்சியாகிறது; அதற்கு கண்களைக் கழுவினால் சரியாகிறதா? வேறு சொட்டு மருந்துகள் விட வேண்டுமா? ஓய்வு எடுக்க வேண்டுமா? பயிற்சிகள் ஏதேனும் செய்ய வேண்டுமா? உணவில் கண்களைப் பாதுகாக்கும் பப்பாளிப் பழம், பொன்னாங்கன்னிக் கீரை போன்றவைகளைச் சேர்க்க வேண்டுமா? டாக்டரிடம் காண்பிக்க வேண்டுமா? எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டுமா? உடல் சூடு குறைய மிளகு நீர் அல்லது கடுக்காய் நீர் குடிக்க வேண்டுமா? போன்ற தகவல்கள் சேகரித்தல் தான் உங்களுக்கும் கண் வறட்சிக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பவை.

தேர்வு செய்தல்:

 மேற்கூறிய தகவல்களுள் உங்களுக்குப் பொருத்தமான, தேவையான தகவல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

 முறை:

ஒவ்வொன்றையும் ஒரு தாளில் சிவப்பு மையால் எழுதி, முக்கோணமாக மடித்து வைக்கவும். எழுந்து நின்று, வலது கையை தோள்பட்டை உயரத்தில் கிடைமட்டமாக நீட்டிக் கொள்ளவும். இடது கையில் இந்தத் தாளைப்பிடித்து, உள்ளங்கையை மூடி, இதயத்தின் முன்புறம் வைக்கவும்.

இப்போது வேறு ஒருவரை உங்கள் எதிரில் நீட்டிய கைமுன் நிற்கச் சொல்லி, அவரது வலது கையை உங்கள் வலது கை மணிக்கட்டின் மீது வைத்து அழுத்தச் சொல்லுங்கள். அதேநேரம், நீங்கள் உங்கள் வலது கையை தம்கட்டி கீழே விடாமல் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

 தொடரும்

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை