Home » Articles » தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்

 
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்


வைகை அனிஷ்
Author:

தமிழகத்தில் அந்நிய நாட்டு கலாச்சாரம் நுழைந்தாலும் இன்றும் பாரம்பரியமிக்க சுவடுகளாக பலவற்றை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மாறிவரும் கலாச்சாரத்தால் மண்பாண்டத் தொழில் மண்ணோடு மண்ணாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் புல்லக்காபட்டி, கள்ளிப்பட்டி, ஜி. கல்லுப்பட்டி உள்பட பல இடங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்தத் தொழிலை செய்து வந்தனர். மண்பானை, மண்ணால் ஆன குதிரை, மண் சட்டி, மண் அடுப்பு, மண் கலயம், கார்த்திகை சட்டி, கோயில்களில் மண்சட்டிகளில் திரி ஏற்றுதல், கோயில் திருவிழாக்களில் தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் என மண்ணால் செய்யப்பட்ட பொருள்களையே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.

தற்பொழுது மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சைனா களிமண்ணால் உருவாக்கப்பட்ட பொருட்கள், பிளாஸ் ஆப் பாரீஸ், செயற்கை மண் வருகையால் பாரம்பரிய மண்பாண்டத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் உபயோகப்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் தங்களது வயிற்றுப்பிழைப்பிற்காக மாற்றுத் தொழிலுக்கு மாறிவிட்டனர். ஒரு சிலர் மட்டும் தங்களது பாரம்பரிய தொழிலைச் செய்து வருகின்றனர். இதன் சம்பந்தமாக புல்லக்காபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர்  கூறுகையில், இப்போது யாரும் மண்பாண்டம் வாங்குவது கிடையாது. பக்கத்திலுள்ள கேரளா மாநிலத்தில் தேவை உள்ளது. ஆனால் கொண்டு செல்வதற்குரிய செலவு அதிகமாக உள்ளது. கோயில் திருவிழாக்களில் அக்னி சட்டி, விநாயகர் சதுர்த்தி பொம்மைகள், தைப்பொங்கலை முன்னிட்டு காளை போன்ற உருவங்கள், கார்த்திகை விளக்குகள் தேவையின்போது எங்களுக்கு வேலை கிடைக்கும். மத்த நாளில் வேலை இல்லை. கடந்த சில மாதங்களாக மழை பொழிந்து வருவதால் மண்பாண்டங்களை தயாரித்து காய வைக்க முடியவில்லை. ஒரு சில கோயில்களுக்கு எங்கள் மூலமாகத்தான் சாமி சிலைகள் செய்யவேண்டியுள்ளது. அதனால் இந்தத்தொழிலை விடாமல் செய்துவருகிறோம். இந்தத்தொழில் எங்கள் தலைமுறையோடு போய்விடும் என்றார்.

இத்தொழில் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கவோ அல்லது அதனைப்பற்றி தெரிந்து கொள்ளவோ தற்கால இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை. மண் பொருட்களை கையாள்வதில் பொறுமை மிகவும் அவசியம். தற்பொழுது விஞ்ஞான யுகத்தில் பொறுமை இல்லை; இதனால் மண்பானைகளுக்கு வேலை இல்லை.

குளங்களில் உள்ள மண்ணை எடுத்துவந்து அதனைப் பக்குவமாக பிசைந்து இத்தொழிலை செய்கின்றனர். ஒரு சக்கரத்தை மட்டும் மூலதனமாக்கி தங்களுடைய நுண்ணிய பார்வையால் மண்பாண்டங்களைச் செய்கின்றனர். சக்கரம் சுற்றச்சுற்ற களிமண்ணைத் தடவிக் கொடுத்த படியே அதே வேளையில் களிமண்ணின் மேல்பக்கம் லேசாக அழுத்தம் கொடுக்க, குழி விழுகிறது. அதை அப்படியே இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி அதனுள்ளேயே விரல்களால் தடவிய படியே மண்பாண்டங்களைச் செய்கிறார்கள். இடையிடையே விரல்களில் சிறிது தண்ணீர் தொட்டுக் கொண்டு சிறிதும் கவனம் மாறாமல் ஒரே சிந்தனையுடன் பானையைச் செய்கிறார்கள்.

அதன் பின்னர் கட்டை விரலால் அழுத்தம் கொடுத்து கழுத்துப்பகுதியை உருவாக்குகிறார்கள். விரல் நுனியால் லேசாகக் கீறி கழுத்துப் பகுதியின் கீழே கோடு வரைந்து பானையின் வாய்ப்பகுதியை உருவாக்குகிறார்கள். சாதாரண களிமண் நொடி நேரத்தில் சக்கரம் சுற்றி பானையாக எடுக்கிறார்கள். அதன் பின்பு அதனை வெயிலில் காயவைத்து எடுக்கிறார்கள். அதன் பின்னர் செம்மண் கரைத்துப் பூசி மீண்டும் காயவைக்கிறார்கள். பானைகளின் மீது சொரசொரப்பான அட்டையால் தேய்த்து மிருதுத்தன்மையை உருவாக்கி அதன் பின்னர் சூளையில் சுட்டெடுக்கிறார்கள். இவ்வாறு கஷ்டப்பட்டு திருமணச் சடங்குகளுக்கும், கோயில் விழாக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தயார் செய்யப்பட்ட மண்பாண்டங்களை கூட்டு வண்டியில் கட்டி சந்தை சந்தையாக எடுத்துச்சென்று விற்பனை செய்துவந்தனர். தற்பொழுது கூட்டு வண்டியும் இல்லை; சந்தையும் இல்லை. அதன்பின்னர் கால ஓட்டத்தில் மண் பானையை பித்தளை, எவர்சில்வர் அதன் பின்னர் குக்கர் என பரிணாம வளர்ச்சி அடைந்த பின்னர் பொங்கலுக்கு மட்டுமே மண்பானையை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவிழாவும் மண்பாண்டத் தொழிலும்

வயல்கள், ஓடைகள், சலசலக்கும் அருவிகள், பறவைகளின் ஒலிகள், வண்டுகளின் ரீங்காரங்கள், மண் சட்டிகள், மண்பானைகள் மட்டுமே சிற்றூர்களின் அடையாளப் பொருளாகிவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை உறவினர்களுடன் கூடுதல், ஆடல், பாடல், கூடி உண்ணுதல் என்ற சமூக அசைவுகளில் ஒன்றான திருவிழா இன்றும் மறக்கடிக்கப்படாமல் வாழ்ந்து வருகிறது.

விவசாயிகளின் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் விவசாயப் பணிகள் தை மாதம் வரை தொடர்வதால் கிராமப்புறங்களில் பெரும் விழாக்கள் தவிர்க்கப்படுகின்றன. சிறிய கிராமங்களில் எத்தனையோ விழாக்கள் எடுத்தாலும் குறிப்பாக புரவி எடுக்கும் விழா இன்றும் பின்பற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைப் பிரித்துக் கொண்ட மனிதன் விவசாயத்தைக் கருத்தில் கொண்டு ஏரி, குளம், கண்மாய்கள் போன்றவற்றில் நீர்களைத் தேக்கி வைக்கும் முறையைக் கற்றுக்கொண்டான். இந்த நீர் நிலைகளுக்கு அருகாமையில் குளம், ஏரிக் கண்மாயில் சிறிய அளவில் கோவில் கட்டி வழிபடுகின்ற தெய்வமே அய்யனார். சில ஊர்களின் நுழைவு வாயிலிலும் அய்யனார் கோயில் இருக்கும்.

அய்யனார் பவுத்த தெய்வம் என்றும், ஆசிவக மதத்தின் தெய்வமென்றும் ஐயப்பனே அய்யனார் என்றும் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. அய்யன் என்ற சொல் தலைவனையும் குறிக்கும். ஒரு இனக்குழு அல்லது ஊரின் தலைவனுக்காக எடுக்கப்பட்ட கோயிலாகவும், மூதாதையர் வழிபாட்டு தலமாகவும் கருத வாய்ப்புண்டு. யானை மற்றும் குதிரைகளைக் களிமண்ணில் வடிவமைத்து சூளையில் சுட்டு அய்யனாருக்கு நேர்த்திக் கடனாக வழங்கும் விழாவே புரவி எடுப்பு என்கிறார்கள். அய்யனாருக்கு மற்ற கால்நடைகளான ஆடு, மாடு, குதிரை என விலங்குகளின் வடிவங்களை நேர்ச்சையாக வழங்கினாலும் பெரும்பாலான ஊர்களில் குதிரைகளையே வடிவமைக்கப்படுவதால் புரவி எடுப்பு விழா என்ற பெயர் நிலைத்துவிட்டது. இப்பொழுது பிளாஸ் ஆப் பாரீஸ் வருகையால் களிமண் பிள்ளையாருக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அதே வேளையில் மண்பாண்டத்தில் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஐந்து நட்சத்திர உணவகங்களில் பல மடங்கு விலைகொடுத்து வாங்கி உண்பது சற்று ஆறுதலான விடயமே. அந்நிய கலாச்சாரம் பிளாஸ்டிக் பொருட்கள் வருகை, பிளாஸ் ஆப் பாரிஸ் முற்றுகை என மண்தொழிலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் இன்றும் அனைத்துப் போட்டிகளை எதிர்கொண்டு மண்பாண்டத் தொழிலை ஒரு சிலர் செய்து வருவது அவர்களது தன்னம்பிக்கையை பாராட்டும் வகையில் உள்ளது. அரசு மண்பாண்டத் தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய பழமொழி உண்மையாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை