Home » Articles » பல்லும்… சொல்லும்……

 
பல்லும்… சொல்லும்……


கதிர் v
Author:

பவானிக்கு அருகில் கிட்டம்பட்டி என்ற சிறிய ஊரில் தான் பிறந்தேன். அப்பா திரு.வெங்கடாசலம், குமரகுரு கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அம்மா திருமதி. சாந்தி, இல்லத்தரசி. சிறிய குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்து இன்று வரை நான் எதன் மீது ஆசைப்படுகிறேனோ அதை நிறைவேற்றிக் கொடுப்பார்கள். என்னுடைய படிப்பின் மேல் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அதிகபட்ச நம்பிக்கையை வைப்பார்கள். எனது பெற்றோர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றி இருக்கிறேன்.

எனது ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை நான் பயின்றது எல்லாமே எனது சொந்த ஊரில் தான். கல்விக்கும், ஒழுக்கத்திற்கும் பெரிதும் முன்னுரிமை கொடுக்கும் பள்ளியில் தான் படித்தேன்.

பள்ளி வாழ்க்கையை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. காரணம், நண்பர்களுடனான பழக்கங்கள், விளையாட்டுகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

சராசரியாக படிக்கும் மாணவனாக தான் இருந்தேன். காலப்போக்கில் படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வம் அதிகரித்தது. படிப்பு தான் வாழ்க்கை என்று எனது தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவார். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு படித்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய அளவில் என்னை தயார்படுத்திக் கொண்டேன். எனது பெற்றோர்களின் ஊக்குவிப்பே படிப்பில் நான் முன்னிலை வகிக்கக் காரணம்.

 கோவை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், வெளிநாட்டில் மூன்றாண்டுகள் பல் மருத்துவம் சார்ந்த பயிற்சிக்குச் சென்றிருந்தேன். மருத்துவப் பிரிவுகள் பல உண்டு. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஒரு துறையைத் தேர்வு செய்து அதில் சிறப்பானவர்களாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வார். அவ்வகையில் நான் பல் மருத்துவம் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இந்தப் பல் வலி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல் வரிசைகளில் முன் பல் அழகாகவும், எந்த பொருளை உண்ண வேண்டும் என்றாலும் இதன் பயன் அதிக அளவில் இருக்கும். சிங்கப்பல் கடினமான பொருட்களைக் கடிக்கவும்  கடவாய்ப்பல் உணவை நன்றாக மென்று சாப்பிடவும் பயன்படுகிறது.

சாப்பிடும் போது பல் வலியால் ஏற்படும் வேதனையை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது தான். மனித உடலுக்கு நோய் வருவது இயல்பு. அது போலவே பற்களுக்கும் நோய் தாக்குதல் ஏற்பட்டு சொத்தைப் பல் வரும் அபாயம் ஏற்படுகிறது. இம்மாதிரி பல் பிரச்சனை வருவதற்குக் காரணம் உணவுமுறை, உணவு உண்ட பின்பு செய்யும் சில விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்காமல் இருத்தல் போன்றவையாகும். பல் சொத்தை ஏற்பட்டால் உணவுப் பொருள் எதையும் திருப்திகரமாகவும், நன்கு மென்று சாப்பிடவும் முடியாமல் போகிறது.

பல் துலக்கும் முறை

காலை எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதைக் காட்டிலும் இரவு வேளைகளில் பல் துலக்குதல் மிகவும் நல்லது. பெரும்பாலும், இரவு வேளைகளில் உணவு உண்டதும் படுக்கச் சென்று விடுகிறோம். அப்போது பற்களைப் பற்றிய நினைப்பே நமக்கு வருவது கிடையாது. நாம் உண்ணும் உணவில் ஏதேனும் சிறு துணுக்குகள் பற்களின் இடையே மாட்டிக் கொள்ள நேரும். தூங்கும் போது வாயில் சுரக்கும் உமிழ் நீரின் அளவு குறைவாகத் தான் இருக்கும். இதனால் தூங்குகின்ற அந்த 8 மணி நேரத்தில் பல்லில் உள்ள துணுக்குகள் சொத்தையாக மாறும். அப்படி மாறுகின்ற சொத்தைப் பல் அருகிலுள்ள பற்களுக்கும் பரவும். எனவே இரவு நேரத்தில் பல் துலக்குவது அவசியமான ஒன்று.

பல்லும் ஈறும்

பல்லோடு சேர்ந்தது தான் ஈறும், இதைத் தனியே பிரிக்க முடியாது. வாயிலுள்ள பற்களை எழும்பு பிடித்திருக்கிறது என்று தான் பலர் நினைப்பர். ஆனால் எழும்பும், ஈறும் இணைந்து தான் பல்லைப் பிடித்துக்கொண்டு இருக்கிறது.

உடலில் எந்த நோய் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது ஈறு தான். உதாரணமாக, ஒருவருக்கு சர்க்கரைநோய் வந்துவிட்டால் முதலில் ஈறுகள் தான் பலவீனமாகும். எனவே நோய் ஏற்படும் அறிகுறிகளை ஈறுகள் மூலம் அறியலாம்.

பல் கிளப் பயன்பாடுகள்

குழந்தைப் பருவதில் சில குழந்தைகளுக்கு வாயில் விரல் வைத்து கைசூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவு பல் வரிசை முறையில்லாமலும், முன்னுக்கு பின்னும் வாய் மூடமுடியாமலும் பல் பெரிதாக காணப்படும். குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு பேசும் பொழுதோ அல்லது வகுப்பில் முன்நின்று பேசவோ சங்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படும். இதனால் குழந்தைக்கு தன்னம்பிக்கை குறைந்து விடும் நிலை உருவாகிறது. இதற்கு தான் பல் வரிசையை சீராக்க பல் கிளிப் முறைஉள்ளது. இந்த கிளிப் முறையை முறையாக கையாண்டால் பல் வரிசையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். எனவே அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி மற்றகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தர முடியும்.

பல் வேர் சிகிக்சை

பல் சொத்தையாகி பிடுங்குகின்ற நிலையில் ஈறுகள் வழியாக பல்லின் அடியில் செய்யும் சிகிச்சை முறைதான் பல் வேர் சிகிச்சை. இச்சிகிச்சையின் போது பல்லை பிடுங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல்லை பாதுகாக்கலாம். இந்த சிகிச்சைக்கு பின்னர் முறையாக பாதுகாத்தால் நிச்சயம் இந்த பல்வலியை சில ஆண்டுகளுக்கு வராமல் தள்ளிப்போடலாம். இந்த சிகிச்சையை முறைவாரியாக பிரித்து மாதம் ஒருமுறை, இருமுறை என சிகிச்சை பெறுவதன் மூலம் பல்லைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

பல் சந்தை அடைத்தல்

பல் ஈறுகளில் சதை வளரும் இது இயல்பானது. உதடுடன் ஈறுகள் ஒட்டி இருப்பதால் உதடுகள் ஒவ்வொரு முறையும் அசையும் பொழுது ஏற்படும் இடைவெளியால் சந்துகள் உருவாகிறது.

அதுபோலவே பல் வரிசை அமைப்புகள் சரியாக இருந்தால் சந்துகள் வராது. ஏதேனும் ஒரு பல் மாறி வந்தாலும் பல்லில் சந்து வரும். இதனை முறையற்ற பற்சந்து என்பர். இதனை சரிசெய்யும் சில வழிகள்…

  • கிளிப் முறையை கையாளுதல்
  • காம்போசிட் என்ற ஒரு மெட்டீரியல் மூலம் சரி செய்தல்

ஆரம்பத்தில் ஒரு பல்லை அடைக்க வேண்டும் என்றால் சில்வர் கொண்டு பற்களை அடைத்தார்கள். ஆனால் இப்பொழுது மாற்று பல் எனத் தெரியாத அளவிற்கு பற்களை அடைக்கலாம்.

கேப் மூலம் பற்களிலுள்ள சந்துக்களை அடைக்கலாம். பற்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கேப்பின் வடிவமைப்புகள் மாறும்.

மற்றநோய்களும், பற்களின் பாதிப்புகளும்

சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்கள் பல் ஈறுகள் வலுவிழந்து காணப்படுவார்கள். சர்க்கரை நோய் வந்தாலே உடம்பில் எதிர்ப்பு சக்திகள் குறையத் தொடங்கும். எனவே ஈறுகளுக்கு இரத்த ஓட்டம் சரியாக செல்லும் வாய்ப்பு குறைவாகத் தான் இருக்கும்.

  • ஈறு சார்ந்த எல்லா பிரச்சனைகளுமே பற்களையும் பாதிக்கும்.
  • கேன்சர் நோயால் பாதிப்படைந்தவர்களுக்கும் பல் பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் முறையாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று அதைப் பின்பற்றினால் பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
  • இதயப் பாதிப்பு ஏற்பட பல்லும் காரணமாக இருக்கிறது.

வாய் புற்றுநோய்

வாய்புற்று நோயைத் தடுக்க முழுமையான மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். புற்றுநோய் மூலம் வரும் கட்டிகளை அகற்ற மருத்துவமுறைகள் இருக்கின்றன.

பற்பசைகள் பயன்பாடு

நோய் வருமுன் காக்க புளோரைடு பற்பசைகளை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வயதுக்கு ஏற்றாற்போல் பற்பசைகளின் தேர்வு முறைமாறுபாடு செய்தல் வேண்டும். நாகரிக மாறுதலுக்கு ஏற்றாற்போல் பற்பசைகளும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. புதிதாய் வரும் அனைத்து பற்பசைகளையும் பயன்படுத்தலாம் என எண்ண வேண்டாம். சரியான முறையில் பற்பசைகளைப் பயன்படுத்தினால் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும், பல் வலிமையாகவும் இருக்கும்.

எந்த ஒரு நோயையும் வந்த பின்னர் குணப்படுத்த முடியவில்லை என்றநிலைக்கு ஆளாகாமல் வருமுன் காப்பதே ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை