Home » Articles » நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்

 
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்


அனந்தகுமார் இரா
Author:

இவ்வுலகின் அழகான விஷயங்களை அனுபவிப்பதற்கு மனது அன்பினை நிரப்பிக் கொள்வது அவசியமாகின்றது. அன்பே சிவம் என்பதை உணர்கையில் கொண்டாட்டம் ஆரம்பமாகின்றது. அன்பு யாரையும் பிரித்துப் பார்க்க அனுமதிப்பதில்லையாதலால் ‘நான்’ என்கின்ற உணர்வு இருப்பதில்லை. ‘நான்’ என்கின்ற எண்ணத்தை நிறுத்திக் கொள்வதே நான் ‘ஸ்டாப்’ என்கிற பொருளின் தலைப்பாக வந்திருக்கின்றது என்றும் பொருள் கொள்ள வேண்டுகின்றேன். நிற்காமல், தடுமாறாமல் தொடர்ச்சியான மகிழ்ச்சி என்றும் ஒரு பொருள் கொள்ளலாம்.

இரு பொருள் கொள்வதற்கு பொறுமை அவசியமாகின்றது. இரு பொருள்பட ஒரு வாக்கியத்தை கண்டவுடன் தோன்றுமேயானால் நமக்குக் கற்பனை வளம் கூடுதல் என்று முடிவு செய்து கொள்ள முடியும். ஒரு பொருள் கொள்வதற்கே மூளை நிறைய வேலை செய்ய வேண்டி உள்ள சூழ்நிலையில் இரு பொருளுக்கு வாய்ப்பு இருக்கின்றதா?   என்று சிந்திக்க, சிந்திக்க கோணங்கள் பலவாகின்ற பொழுது கோலங்கள் மாறித் தெரிய துவங்குகின்றது. இக்கட்டுரையின் இலக்கு படிக்கின்ற மாணவர்கள் மட்டுமல்ல சகலவிதமானவர்களுக்கும் ஒரு வழிகாட்ட சிந்திக்க தூண்டுவதாகவே அமையப் போவதேயாகும். வழிகாட்ட என்றால் ஏதோ பின்பற்றவேண்டிய ஒன்று என்று பொருளில்லை. ஒரு இடத்தை அடைய எண்ணற்ற வழிகள் இருக்கலாம்.  அதிலொன்று  இஃது பின்பற்றினால் பிறகு கொண்டாட்டம் தான், எழுதுவது  நம்  சந்தோஷத்தின் வெளிப்பாடு  அவ்வளவே. நான்கு வழிகளை முதலிலேயே  சொல் விட்டு பிறகு முழுவதாக அலசுவோம்.

தூக்கம், கோபம், ஆசை, மறதி

என்பன இந்நான்கும். என்னடா இது?

அன்பும்  சிவனும்  இரண்டென்ப அறிவிலார்

அன்பே சிவமாவது யாறும் அறிகிலார்

எதிர்மறையாகத் தெரிகின்றதே என யோசிக்கக்கூடும். ஒரு வார்த்தைதானே சொல்லப்பட்டுள்ளது இவை கூடாது என்று முடிப்போமா? என்றும் நீவிர் கருதக்கூடும்.

இல்லை…

ஒன்றொன்றையும் ஆழ்ந்து விரித்துப் பார்த்தால் ‘நானை’ நிறுத்தும் கொண்டாட்டம், இருபொருள் கொள்ளும் பொறுமை, வாழ்வை வெல்லும் வலிமை  பிறக்கும் வாய்ப்பு உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் மாணவிகள் இருநூற்றைம்பது பேருக்குச் சொன்ன கதை இந்தக் கதை. இதில் ஒவ்வொன்றிற்கும் மறுப்புக் கிளம்பி அதில் விரித்து விளக்கம் அளித்ததும் ஒப்புக் கொள்ளப்பட்ட  மகிழ்வு அலாதியானது ணீயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ணீ  எனும் எண்ணத்தின் வெளிப்பாடு இக்கட்டுரை எனலாம்.

தூக்கம்

தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்களையும், பரிட்சைக்குப் படிக்க விழித்திருக்க வேண்டுமே என்று மாத்திரை போட்டுக் கொள்பவர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

படுத்தா படுத்த இடத்தில், படுத்த நிமிடத்தில் தூங்கிப் போகின்றவர்கள் பாக்கியசாலிகள். மாத்திரைகள் தூக்கம் மாத்திரம் தொடுவதில்லை. மொத்த உடற்செயலையும் பிரித்துப் போட்டுவிடுகின்றன. எனவே தான் ஏழு மணி நேர தூக்கம் அவசியமானது என்று அறிவியலறிஞர்கள் முடிவு செய்திருப்பதாக செய்தித்தாளிலும் படித்தேன். படிப்பதை நினைவு கொள்ள மாணவர்கள் தூங்க வேண்டியது அவசியம். உடல்நலத்தை பேணாமல், தூங்காமல் உழைத்துப் பொருள் சேர்த்து, பின்பு அப்பொருளை தேய்ந்த உடல்நலத்தை திரும்பப் பெறும் முயற்சியில் மருத்துவமனைகளில் செலவிடுவது மதியாகுமோ?

தேர்விற்கு முதல்நாள் நன்றாகத் தூங்கி எழுந்தால் தெளிவு தூக்கம் என்கின்ற கர்ப்ப காலத்தில் அழகாய் வளர்ந்த குழந்தையாய்ப் பிறந்து மதிப்பெண்களாய் சிரிக்கின்றது.

அவசர யுகத்தில் அனைவர் கரங்களிலும் அடிபட்டு அழும் குழந்தை தூக்கம் தான்.  குறைவாகத் தூங்குவது ஒரு பெருமைக்குரிய விசயமாக மாணவர்கள் மத்தியிலே பேசப்பட்டிருக்க  பார்த்திருக்கின்றேன். அனுபவித்தும் இருக்கின்றேன். உடற்பயிற்சி போல மனப்பயிற்சிக்கான அடிப்படை நாதம் உறக்கமே. உறக்கத்தின் பொழுது விழிப்பு நிலையில் உருவான வேதிப்பொருட்கள் உடைபட்டு புணருத்தாரணம் செய்யப்படுகின்றது. கண்களில் ‘ரெட்டினால்’ சுழற்சி என்னும் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றது.

இவை தூக்கம் எனும் நேரடிப் பொருளுக்கான வாதங்கள். இன்னொரு தூக்கம்  பொறுமை என அழகான பொருளில் வரும்.

இவ்வளவு ஏன், திருவள்ளுவரே ‘தூங்குக’ என்று சொல்லி இருக்கின்றார் என்றதும் பல புருவங்கள் அரங்கில் நிமிர்ந்தன.

உண்மைதான், இருபத்தைந்தாம் தேதி ஒரு தேர்வு என்றால், பத்தரை மணிக்கு ஒரு கூட்டம் என்றால், மாலை மூன்று மணிக்கு ஒரு நேர்முகம் என்றால், மாதம் முதலிலேயே,  அதிகாலையிலேயே அல்லது மதிய உணவிற்கு முன்னே பதட்டப்படத் தொடங்கிவிடுதல் தவறு என்கின்றதையே, பாலம் வருவதற்கு முன்பே அதைக் கடக்கத் தொடங்கிவிடாதீர்கள் என்கின்ற பொருளில் ஒரு ஆங்கில பழமொழி சொல்கின்றது.

அமைதி பிறக்க பொறுமை அவசியமே

அதையே தூக்கம் என்று சொன்னேன்.

கோபம்

ரௌத்திரம் பழகு! என்று பாரதி சொல்வது கோபப்படக் கற்றுக் கொள்வதற்காகத் தான். நியாயமான கோபம் பிறக்காத நெஞ்சம் ஊனமுற்றுள்ளதோ? என்று யோசிக்கப்படத் தக்கது.

உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் ஏன் என்கின்ற கேள்வி கேட்பதற்கான கோபம் இவை இரண்டுமே அவசியமானவை.

பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்கள் மீது கோபப்பட வேண்டும், மாணவர்கள் சோம்பல் மீது கோபப்படலாம்.  காதலர்கள் கண்ணிமைகள் கூட பிரிப்பதாகக் கோபப்படலாம், அறிவியலறிஞர் அறியாமை மீது கோபப்படலாம், நடிக்கத் தெரியாத நடிகர்கள் இயக்குநர் மீது கோபப்படலாம், நம்மைச் செதுக்கிக் கொள்வதற்காக நம்மேலேயே தாராளமாக கோபப் படலாம்.

திருவள்ளுவர் 31ஆம் அதிகாரத்தை சினம் கொள்ளாமலிருக்க அர்ப்பணித்திருந்தாலும் கோபத்தை எப்படி கட்டுப்படுத்தி எங்கே வெளிக்காட்ட வேண்டும் என்று சொல்ல முற்படுகின்றார்.

பரிட்சை மீதிருக்கின்ற கோபம் மதிப்பெண்களாக வெளிப்படுத்த வேண்டும். திருடர்கள் மீது இருக்கின்ற கோபம் நாய் வளர்ப்பதில் பைரவர் மீது வைக்கின்ற பாசத்தில் வெளிப்படுத்தப்படுவது போல்,

நோய் மீதும் ‘ஆஸ்பிடல் வாசத்திற்கும்’ இருக்கின்ற கோபம், பல்லைக் கடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வதிலும், அதிகாலை சூரியனோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதிலும் காட்டப்பட வேண்டும். அணை தடுப்புச் சுவர் மீது வைக்கும் கோபம் வாய்க்கால் வழியாகப் பாய்வதில் பயிர் செழிக்க வளர்வதில் தான் காட்டப்படுகின்றது.

நம்மை யாரும் கோபப்பட்டு திட்டிவிட்டாலோ? அல்லது கடிந்து கொண்டாலோ? அதற்கான சூழ்நிலைக்கு நம்மைக் கொணர்ந்த நிகழ்வை மாற்றிக் காட்ட கோப ஆற்றலை பயன்படுத்த வேண்டும். மைக்கேல் பெல்பஸ் ஒலிம்பிக் நீச்சலில் கால் உந்து தளத்தை உதைத்துப் பாய்ந்தே பெற்றாரே ஒழிய தன் சக போட்டியாளரை அல்ல. தேர்வுக்குத் தயாராகையில் நம்முடைய போட்டி கண்களுக்குத் தெரியாத ஏராளமான பேரோடன்றி, நமது உடன் படிப்பவர்கள் அல்ல. எனவே ஒருவருக்கொருவர் உதவி செய்தே வாழ வேண்டும்.

தின்னவரும் புலியையும்  அன்போடு சிந்தையில் போற்றிடுவாய் என்று பாரதி பகையை நேசிக்கும் கோபத்தைப் புகட்டுகின்றார்.

நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கான இரண்டாம் வழி கோபம், என்கிறேன்.

ஆசை

அத்தனைக்கும் ஆசைப்படு என்றொரு ஞானி சொல்கின்றார். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? என்று முண்டாசுக்கவி சிலாகித்துப் பாடுகின்றார்.

துன்பம் இருப்பதாலேயே இன்பம் இருக்கின்றது.

இருள் தான் ஒளிக்கு இலக்கணம் வகுக்கிறது.

வாசனை நாற்றத்தால் தான் முதல் வரிசைக்கு வருகின்றது.

இசை சத்தத்தால் தான் இமயம் தொடுகின்றது.

இலக்கு ஆசையால் தான் அடையாளம் காணப்படுகின்றது.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றால், அதுவே தான் இன்பத்திற்கும் காரணமாகிப் போகின்றது. ஆசை பாவப்பட்ட ஜென்மமல்ல, கோணம் மாற்றிப்படம் பிடிக்க வேண்டியிருக்கின்ற கோபுரம்.

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று உற்சாகப்படுத்துவதும், உள்ளம் பெருங்கோவில் என்று திருமூலர் சொல் மந்திரம் போடுவதும் மனம்போல் வாழ்வென்று விவேகானந்தர் வீரியம் சேர்ப்பதும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவம் பகர்வதும் அனைத்துமே சரியான விசயத்திற்காய், முறையான வழிநடையில், பண்பான அடையாளத்தோடு ஆசைப்படுவதையே!

அதையே நாம் மூன்றாம் வழியாகக் கொள்வோம். வானவெளிபோல பரந்து கிடக்கின்ற உலகில் சிறகுகளுக்கு ஏன் சிறையிட்டுப் பார்க்க வேண்டும். அனுமார் இலங்கைக்குப் போக ஆரம்பத்தில் ஆசைப்படவில்லை. ஜாம்பவான் சொன்னதன் பிறகுதான் அளவுக்கதிகம் என்று முன்பு நினைத்த விசயத்தைக் கூடத் தாண்டி சாதித்தார்.

எனவே தான் சொல்கிறேன். ஆசை மூன்றாம் வழி

மறதி

அடடா, அடடா

மறதிக்குத்தான் எத்தனை மாறுவேடங்கள்,

மன்னிப்பு… யாராவது தவறு செய்திருந்தால் அதை தேவைப்படும் பொழுதெல்லாம் குத்திக் காட்டாமலிருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கின்றது

இந்த குறிலாக இருக்கின்ற மனம் வீசும் மனப் ‘பூ’ மீட்சி… ‘ரிசையன்ஸ்’ என்று ஆங்கிலத்திலே சொல்கின்ற உத்வேகம், ஏற்கனவே நாம் பெற்ற தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்காக வைத்திருக்கின்ற குணப்பெயர் முதிர்ச்சி…. மெச்சூரிட்டி என ஆங்கிலத்தில் போற்றப்படும் பக்குவப்பட்டுப் போவதான போக்கு பலதரப்பட்ட அனுபவங்களிலிருந்து பிறந்து வளர்ந்ததொரு நிலைப்பாடுதான்…

கனவுகள் முயற்சி கால்களை ஊன்றி நடக்க நடக்க நனவுகள் நடனமாடத் தொடங்கி வெற்றி விழாவில் விடாமுயற்சி அரங்கேற்றம் செய்கின்றன. தோல்விகள் இடையில் மறதி என்கின்ற பக்கவாத்திய இசையில் பக்குவமாக மறக்கப்படுகின்றன.

மறத்தல் நன்றென சொன்ன வள்ளுவப் பெருந்தகை அப்படியே விடவில்லை, சரி அவனோ, அவளோ செய்து விட்டாள் ஒரு அரை நூற்றாண்டு காலம் பழி வாங்கி விட்டு பிறகு மறப்போம் என்று சொல்லாமல் ‘அன்றே’ என்றொரு வார்த்தையைப் போட்டார்.

அவசர அவசரமாக அப்பொழுதே மறதி வேண்டும் என்கிறார். என்ன விஷயத்தில் என்றால் நன்றல்லாத விஷயம் என்றும் ஒரு பதில் கூட வருகின்றது.

“பவர் ஆப் பாசிடிவ் திங்கிங்” என்று நார்மண் வின்சென்ட் ஃபில் சொல்லும் புத்தகத்தில் நேர்மறை சிந்தனைகளில்  ஆற்றல் சொல்லப்பட்டு உள்ளது.

வானவில்  போன்று வளைந்து மிளிரும் வண்ண வாழ்க்கையின் எண்ணற்ற நிறங்களில் ஏதேனும்  நினைவிருக்க  வேண்டுமென்றால் ஏராளமானவற்றை மறக்க வேண்டி உள்ளது.

  • குற்ற மனப்பான்மை
  • பணிப் பளு
  • தாழ்வு மனப்பான்மை
  • மன அழுத்தம்
  • மனச் சிதறல்

இந்த வார்த்தைகளெல்லாம் இருந்த இடந்தெரியாமல் மறந்தும் மறைந்தும்  போவதற்கான வழி ‘செக்டிவ் அம்னெஷியா’ எனப்படும் (எதிர்மறையாகவும் சில சமயம் பேசப்படும்) ஆங்கிலத்திலே தேர்ந்தெடுத்து மறந்து விடுகின்ற உத்தியே ஆகும். உலகே நம்மைச்  சுற்றித்தான் இயங்குகின்றது என்ற நினைப்பை மறந்தால் எல்லாம் சுபமே!

மோகத்தைக் கொன்று விடு என்று பாரதி சொன்னது மறதி

அஹிம்சை என்று காந்தி சொன்னது திருப்பி

அடிக்கின்ற கோபத்திற்கு மறதி!

மௌனம் என்று புத்தன் சொன்னது பேச்சின் மறதி

உற்சாகம் என்பது விரக்தியின் மறதி

கலைகள் என்பது உணர்ச்சிகளின் மறதி

கல்வி என்பது அறியாமை மறதி

ஆங்கிலத்திலே ‘அன்லேர்னிங்’ என்று சொல்கின்றனர். ஏற்கனவே தவறாகப் புரிந்து கொண்டதை சரிப்படுத்துவது மறதியிலிருந்து தொடங்க வேண்டும். அது முதலிலேயே சரியாகப் புரிந்து கொள்வதை விடவும் சிரமமானது.

கற்றுக் கொள்வதோடு காற்றுப் போலக்

கலந்திருப்பது மறதி!

இத்தனை விஷயங்களையும் அந்தக் கல்லூரியில் பேசினேனா? என்பதை மறந்ததால் தான் என்னால் இவ்வளவையும் எழுத முடிந்தது, கட்டுப்பாடுகளை மறக்க உதவுவதும் மறதி தான்.

எனவே நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கான

நான்கு வழிகளையும் மறந்து விடலாம்.

மறக்க வேண்டும் என்று ஞாபகமாக வைத்துக் கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள் உலகில் ஏராளமாக இருக்கின்றன.

அதிலொன்றாக இக்கட்டுரை இருந்து விட்டுப் போகட்டுமே.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை