Home » Articles » சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?

 
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?


ராமசாமி R.K
Author:

உச்சியை அடைய சுலபமான வழி இல்லை
உச்சியை அடைந்த யாரும் சுலபமாக அதை அடைந்ததில்லை

– மஹாத்ரயாரா

Touch Situations Make people strong .ஒரு மனிதன் எதிர்கொள்ளும் கடினமான தருணங்கள் அல்லது கஷ்டங்கள் அவனுக்கு உரமேற்றி வலுவூட்டுகின்றன. வலிமையானவன் வெற்றி பெறுகிறான்.

கடவுள் ஏன் உங்களுக்கு சோதனைகளைத் தருகிறார்? உங்களை வலுவூட்ட, உங்களை வெற்றியாளராக உருவாக்க, சோதனைகளிலே வென்று சாதனையாளராக மாற ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காக உங்களை இறைவன் தயார் செய்கிறான் என்று பொருள். வீரத்துறவி விவேகானந்தர் “When I asked God for Strength, he gave me difficult situation to face “‘எனக்கு வலிமையை தருக என்று கடவுளிடம் வேண்டினேன், ஆனால் கடவுள் கடினமான தருணங்களை எனக்குத் தந்தார், அதை எதிர்கொண்டு நீ பலத்தைப் பெறுக என்றார்’என்று சொல்லுவார்.

– இன்ஃபினி

பல நேரங்களில் நம் முயற்சிகளில் ஏற்படும் தோல்விகள் துயரத்தையும், மன அழுத்தத்தையும் தருகின்றன. இந்த துயரத்தையும், மன அழுத்தத்தையும் வெற்றி கொள்வது என்பது சாதாரணமான காரியமல்ல. வெற்றிக்காக நாம் கடுமையாக உழைத்தபோதும் சில நேரங்களில் தோல்வியின் விளிம்பிலே நிற்கிறோம். இத்தகு தோல்வி என்பது பயணத்தின் முடிவு அல்ல.

நிலவிலே கால் பதிப்பது என்பது நடவாத காரியம் என்று நினைத்த காலம் உண்டு. ஒரு கட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் நிலவில் கால் வைத்தான். இந்த சாதனை ஒரு நாளிலோ, ஒரு ஆண்டிலோ நடந்து முடிந்ததல்ல. பல ஆண்டு கால ஆராய்ச்சியாலும், பல தோல்விகளின் படிப்பினைகளாலும், இந்த வெற்றி கை கூடியது. தோல்விகளால் ஏற்பட்ட அனுபவங்களை சரி செய்து வெற்றி பெறமுடியும் என்ற நேர்மறைஎண்ணத்தை வளர்த்துக் கொண்டதனாலே தான் விஞ்ஞானிகளால் சாதிக்க முடிந்தது. நேர்மறை எண்ணங்கள் தான் தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்.

எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும் என்று எண்ணுவதும், எது நடந்தாலும் அதை நல்லதாகவே மாற்றிக்கொள்ளும் திறமையும் தான் நடைமுறையில் ஒரு உண்மையான உடன்பாட்டுச் சிந்தனை அல்லது நேர்மறை எண்ணம் ஆகும். நேர்மறை எண்ணம் கொண்டவர்களோடு மட்டுமே இணைந்து கொண்டால் அது வெற்றிக்கு பாதை அமைக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களோடு கலந்திருந்தால் அவர்களால் உற்சாகக் குறைபாடு ஏற்படும். அவர்களோடு இணைந்திருந்தால் உடன்பாட்டு எண்ணங்களும், உற்சாகமும் மெல்ல மெல்ல குறையும் வாய்ப்பு ஏற்படும்.

ஒருவனுடைய வெற்றி, முயற்சி, உற்சாகம், ஈடுபாடு, எண்ணங்கள் இவைகள் எல்லாம் சுற்றுப்புற சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. ‘மண்ணில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் நல்ல குழந்தைகளே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் உண்டு. நல்லவர்களுடன் சேர்ந்து நல்ல, ஆரோக்கியமான சூழ்நிலையிலே வளர்கிற குழந்தைகள் நல்ல மனிதர்களாக உருவாகின்றன. மோசமான சூழ்நிலையிலே, தீய எண்ணம் கொண்டவர்களின் நட்பிலே, தீயவர்களின் கூட்டத்திலே, வளரும்போது அந்தக் குழந்தை தீயவனாக மாறுகிறான். நல்ல குணத்தையும், நல்ல எண்ணத்தையும் உடையவர்கள் கூட, கூடா நட்புகளாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் தவறு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.

கார்த்திகைக்கு பின் மழை இல்லை, கர்ணனுக்குப் பின் கொடை இல்லை என்று புகழப்பட்டவன் கர்ணன், சூரியனின் புதல்வன், தெய்வ அம்சத்திலே பிறந்தவன், மாவீரன், தானத்தில் சிறந்தவன். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட கர்ணன் தீயவர்களான துரியோதனனுடனும், துச்சாதனனுடனும், சகுனியுடனும் நட்பு கொண்டதால் அதர்மத்திற்கு துணை போனான். இதன் மூலம் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், கூடா நட்புகளும் ஒரு மனிதனை மாற்றிவிடுகின்றன என்பது உண்மையாகிறது.

மனிதனின் எண்ணங்களிலும், வளர்ச்சியிலும், ஆர்வத்திலும், ஈடுபாட்டிலும், வெற்றிகளிலும், சாதனைகளிலும் சந்தர்ப்ப சூழ்நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஊக்குவிப்பவர்கள், உற்சாகம் தருபவர்கள், தன்னை முழுமையாக ஈர்த்தவர்கள் ஒருவனுடன் இருக்கும்போது உற்சாகமும், தன்னம்பிக்கையும் அவனுக்கு அளவு கடந்து கிடைக்கிறது. அதே நேரத்தில் ஒருவன் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களோடும், அதைரியத்தை தருபவர்களோடும், தோல்வி மனப்பான்மை கொண்டவர்களோடும், சாதிக்க வேண்டும் என்றவெறி இல்லாதவர்களோடும், ஒத்திப்போடுகிற தன்மை கொண்டவர்களோடும், உழைப்பை நேசிக்காதவர்களோடும், நேரத்தை மதிக்காதவர்களோடும் கூடாநட்பு கொண்டு இருந்தால் அதன் பிரதிபலிப்பு அவர்களின் மனதை பாதித்து உற்சாகத்தைப் போக்குகிறது, மனோதைரியத்தை குறைக்கிறது, வெற்றி வாய்ப்பு நழுவ விடுகிறது. ஆக, நம் உடன் இருப்பவர்களுடைய எண்ணங்கள் நம்மில் பிரதிபலிக்கின்றன. அதன் பதிவுகள் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பாதிப்புகள் நம்மில் இருப்பதை நம்மால் உணர முடியாது, ஆனால் நம்மில் ஏற்படும் மாற்றங்களை நம் உடன் இருப்பவர்களால் உணர முடியும்.

தலைவன் தருகிற உற்சாகம், தலைவன் மேல் இருக்கிற நம்பிக்கை ஒரு போரையே வெற்றி கொள்ள உதவும். மாவீரன் அலெக்ஸôண்டர் ஒருமுறை ஒரு பெரும்போரை சந்திக்க வேண்டியிருந்தது. எதிரணியில் இருக்கும் போர்வீரர்களை விட எண்ணிக்கையில் அலெக்ஸôண்டரின் படை குறைவாகவே இருந்தது. இரவு ஆலோசனையின்போது   அலெக்ஸôண்டர் தன் படைத்தலைவரிடம் ‘எத்தனை ஆயிரம் பேர் நம் படையிலே இருக்கிறார்கள்’? என்று கேட்டார். அறுபதாயிரம் பேர் நம் படையிலே இருக்கிறார்கள் என்று பதில் சொன்னான் படைத்தலைவன். அலெக்ஸôண்டர், உடனடியாக மறுதளித்து நம் படையில் இருப்பவர்கள் ஒரு லட்சம் பேர் என்றார், திகைத்தான் படைத்தலைவன். அறுபதாயிரம் படைவீரர்களுடன் என்னையும் சேர்த்துக்கொள் ஒரு லட்சம் பேர் ஆகிவிடும் என்றார் அலெக்ஸôண்டர். அந்தத் தன்னம்பிக்கை தான் அவருக்கு வெற்றியைத் தந்தது.

இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சர்ச்சிலினுடைய பேச்சு நேச நாடுகளின் வெற்றிக்கு உதவியது. சில இராணுவங்கள் தோல்வியைத் தழுவியதின் காரணம் என்னவென்றால் அவர்களுக்கு ஊக்கப்படுத்துகிற, உற்சாகப்படுத்துகிற, வெறி ஏற்படுத்துகிற உள்ளத்திலே தீயை உண்டாக்குகிற சூழல் அமையவில்லை என்பது தான் உண்மை. நம்மில் பலரைப் பார்க்கலாம்,        ஆண்களிலும், பெண்களிலும் பலர்          புத்திக் கூர்மையுடையவர்களாகவும், திறமைசாலிகளாகவும், பல விஷயங்கள் தெரிந்த மேதைகளாகவும், நுட்பமான அறிவை கொண்டவர்களுமாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் ஒரு சாதனையை செய்ய முடிவதில்லை. போற்றப்படுகிற திறமையும் அறிவும் இருந்தாலும் கூட சாதகமான சூழ்நிலையும், சந்தர்ப்பமும் வாய்க்காத காரணத்தினால் வெற்றியைத் தொட முடிவதில்லை.

‘தன்னுடைய திறமை தனக்குத் தெரிவதில்லை’ என்பது பழமொழி. “நீ கடலைத் தாண்ட முடியும், உன்னிடம் கடலைத் தாண்டக் கூடிய சக்தி இருக்கிறது” என்று ஜாம்பவான் சொல்லித்தான் அனுமனுக்கே தெரியும். அதுபோல ஒரு ஆத்மார்த்தமான துணையும், உங்கள் திறமைகளை எடுத்துச் சொல்ல, உங்களை ஊக்கப்படுத்துகிற ஒரு சக்தியும் தான் வெற்றிக்கு வழி வகுக்கும். இப்படிப்பட்ட நண்பர்கள் தான் வெற்றிக்கு மூலகாரணமாக இருப்பார்கள். நீங்கள் ஒரு பட்டைத் தீட்டப்படாத வைரம். சந்தர்ப்பமும் சுற்றுப்புறச் சூழலும் உங்களை பட்டை தீட்டி ஒளிர வைக்கும். உங்களிடம் மறைந்துள்ள திறமைகளை சுட்டிக்காட்டி பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிர வைக்க முயற்சிப்பவர்களைத் தான் துணையாகக் கொள்ள வேண்டும்.

கண்ணில் தெரிகிற ஏதாவது ஒரு காட்சி, மனதிலே ஏதோ ஒரு நொடியில்  தோன்றுகிற ஒரு எண்ண மின்னல், கேட்ட ஒரு ஆவேசமான பேச்சு, படித்த உள்ளத்தைத் தொடுகிற ஒரு செய்தி, உணர்ச்சியைத் தூண்டுகிற ஒரு நிகழ்வு, கொழுந்து விட்டு எரிகிற ஆர்வம், பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட ஒரு உற்சாகப்பொறி, இவைகள் விதையிலிருந்து ஒரு செடி முளைப்பதைப்போல அவனுடைய திறமைகளை வெளிக்கொணரும் காரணிகளாக அமையும்.

“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்பதைப்போல திறமையானவர்கள் திறமையானவர்களால் கவரப்படுகிறார்கள், வெற்றி பெற்றவர்கள் வெற்றியாளர்களால் கவரப்படுகிறார்கள், சாதிக்கப்பிறந்தவர்கள் சாதனையாளர்களால் கவரப்படுகிறார்கள், தோல்வியாளர்கள் தோல்வியாளர்களால் கவரப்படுகிறார்கள், ஒரே தரத்திலும் ஒரே தளத்திலும், ஒரே காந்த வீச்சிலும், ஒரே எண்ண அலையிலும் இருப்பவர்கள் அதே தரத்தில் இருப்பவர்களால் கவரப்படுகிறார்கள், ரசிக்கப்படுகிறார்கள். இயற்கையாகவே தோல்வி மனப்பான்மை தோல்வியைத் தழுவுகின்றன, வெற்றி மனப்பான்மை வெற்றியைத் தழுவுகின்றன. சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு, பாதகங்களை நமக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு உற்சாகப்படுத்துகிற, ஊக்குவிக்கிற, நம் திறமை உணர்ந்த கூட்டத்தோடு இருந்து விடாமுயற்சியோடு வெற்றிக்கனியை தொடுவது தான் அறிவார்ந்த செயலாகும்.

வெற்றி பெற்றபின்பு தட்டிக் கொடுத்தவர்களையும், தட்டி எழுப்பியவர்களையும் மறவாதிருக்கும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக என்னைத் தொட்ட ஒரு சின்னக் கவிதை இங்கே பொறுத்தமாக அமைகிறது.

மலை அசையாமல் இருந்தது

அலை ஆவேசமாய் அதன்மேல் மோதியது

மலை சொன்னது “நான் பலமானவன்”

அலை சொன்னது “நான் பலவீனமானவன்”

ஆயிரம் வருடங்கள் கடந்த பின்பு மலையைக் காணவில்லை

அலையோ இன்னும் அடித்துக் கொண்டே இருக்கிறது

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை