Home » Articles » நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது

 
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது


சொக்கலிங்கம் சிவ
Author:

கனவுக்குள்ளும் நீ கனமாயிரு

பூவுக்குள்ளும் நீ பூகம்பமாயிரு

வேருக்குள்ளும் நீ விசுவரூபமாயிரு

நீருக்குள்ளும் நீ நெருப்பாயிரு

நீ நீயாயிரு

என் கவிதைத் தொகுப்பில் நான் எழுதிய கவிதை வரிகளோடு உங்கள் இதயம் என்னும் வாசல் கதவைத் தட்டி உள்ளே நுழைகிறேன்.

கடல்களின் கதைகளுக்கும், மலைச் சிகரங்களுக்கும் இடையில் ஓர் இரகசியப் பாதை செல்கிறது. பூமியின் மகனாக ஆவதற்கு முன்னால் நீங்கள் அந்தப் பாதையில் பயணம் செல்ல வேண்டும்.

உமது அறிவிற்கும், புரிந்து கொள்ளுதலுக்கும் இடையில் ஓர் இரகசியப் பாதை செல்கிறது.  மனிதரோடு ஒன்றாக உம்மை அடையாளம் கண்டு கொண்டு அதன் மூலம் உங்களை அடையாளம் கண்டு கொள்ளுமுன், அந்தப் பாதையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பார் கலீல் ஜிப்ரான்.

மனிதனிடம் அமைந்துள்ள ஆற்றல்கள் எண்ணற்றவை. ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதற்கான துணிச்சல் இல்லாத காரணத்தால் அந்த ஆற்றல்கள் உலகத்துக்கு பயன்படாமல் போய்விடுகின்றன.  உங்கள் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றிக் காட்டும் மாபெரும் சக்தி துணிச்சலுக்கு உண்டு. துணிச்சல் இருந்தால் தடைகளும் பிரச்சனைகளும் தூள் தூளாகிவிடும். நேர்மையும், விவேகமும் நிறையப் பெற்றமனிதர்கள் விண்ணளவு உயர்ந்ததற்குக் காரணம் துணிச்சலே!

நீங்கள் போராடிய காரணத்தால் அனுபவிக்கவும், உழைத்த காரணத்தால் ஓய்வு பெறவும் விதைத்த காரணத்தால் அறுவடை செய்யவும் உங்களுக்கு உதவக்கூடிய பரிசுதான் எது? அவை உங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது!

அது உங்களுக்கு நீங்களே அணிந்துக் கொள்ளக்கூடிய பரிசு. வாழ்வில் அடைய வேண்டுமென்று இரகசியமாக மனதுக்குள்ளேயே ஏங்குகின்ற அனைத்தையும் பெற உதவுகின்ற பரிசு அது. துன்பம் நிறைந்த வாழ்க்கைப் பாதையை வியத்தகு முறையில் எளிமையாக்கித் தந்து உண்மையான இன்பத்தை நீங்கள் அடைய வழிவகுக்கும். மந்திரம் போல் அமைந்திருக்கும் பரிசு உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. அந்தப் பரிசின் பெயர்தான் துணிச்சல்.

துணிச்சல் என்ற பரிசை நீங்களே உங்களுக்கு வழங்கிக் கொண்டு நீங்கள் துணிச்சல்காரனாக ஆகிவிட்டால் மற்றவையெல்லாம் உங்களைத் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்; கட்டிக் கொள்ளும்.

கேப்டன் ஸ்காட் அண்டார்டிக் கண்டத்தை நோக்கி மேற்கொண்ட பயணம்.  அழிவினை தோற்றுவித்த போது, அவர் பின்வருமாறு குறிப்பெழுதிய போது அவருக்கிருந்த அந்தத் துணிச்சலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

“எங்கள் பயணம் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கடிதம் எப்படியாவது கண்டெடுக்கப்பட்டு உங்களுக்கு அனுப்பப்படும் என்ற நம்பிக்கையோடு இதை எழுதி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். என்னுடைய நிலைமை பற்றியும், என்னுடைய முடிவு பற்றியும், நல்லவிதமாக எண்ணி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், போய் வருகிறேன்”. எங்களுக்கு நேர்ந்த இத்தகைய முடிவு குறித்து நான் அஞ்சவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற நீண்ட பயணங்களை மேற்கொண்டு அவற்றின் மூலம் பெறக்கூடிய எளிய இன்பத்தை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்படுகிறேன்.

நம்பிக்கையிழந்த நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கால்கள் எல்லாம் பனியால் உறைந்துவிட்டன. கப்பலுக்கு எரிபொருள் இல்லை. உணவைக்கண்டு நெடுநாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும், எங்கள் முகாமுக்கு வந்து எங்களுடைய பாடல்களையும், மகிழ்வூட்டும் உரையாடல்களையும் கேட்பீர்களாயின் உங்கள் மனதுக்கு இதமாக இருக்கும். நாங்கள் எங்கள் முடிவின் எல்லைக்கு மிக அருகாமையில் நெருங்கிவிட்டோம்.

அண்டார்டிக் பாலைவனத்தின் துயர்மிகுந்த சூழ்நிலையில் இருண்ட முகாமுக்கு வெளியே ஒரு நிமிடம் நின்று பாருங்கள். உங்களுக்கு மேலேயும் இருள் இருக்கும். உங்களைச் சுற்றிலும் இருள் படிந்திருக்கும். ஆனால் அந்த முகாமுக்கு உள்ளே இருக்கின்ற கேப்டன் ஸ்காட்டின் உள்ளத்திலும், அவருடைய நண்பர்களின் உள்ளத்திலும் இருளைக் காண முடியாது. இறப்பதற்கென்றே விதிக்கப்பட்டு அங்கு சென்ற அவர்களின் மகிழ்வூட்டும் பாடல்களையும், உரையாடல்களையும் இன்றும் கேட்கலாம். கவனமாக கேளுங்கள். அவர்களின் துணிச்சலை உங்களுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

1909 ஆம் ஆண்டில் கியூபாவில் ஒரு காட்சி. அந்தக்காட்சியின் கதாநாயகர்கள் லாசரும், அவரது நான்கு நண்பர்களும். அவர்களுடைய துணிச்சலை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.

கியூபாவில் அப்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கடுமையான மஞ்சள் காய்ச்சல் மக்களை ஆயிரக்கணக்கில் தாக்கி அழித்துக் கொண்டிருந்தது. அந்தப் பேரழிவுக்கான காரணம் கொசுக்கடிதான் என்று விஞ்ஞானிகளும், டாக்டர்களும் கருதினர். அந்த வியாதி எவ்வாறு பரவுகிறது என்பதைத் சோதித்துக் கண்டுபிடிக்க சில மனிதர்கள் தேவைப்பட்டனர். அப்போது லாசரும், அவரது நான்கு நண்பர்களும் தாமாக முன்வந்து அந்தச் சோதனைக்கு “நாங்கள் தயார்” என்று டாக்டர்களிடம் கூறினர்.

ஒரு சிறிய வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டில்களின் நுனியில் ஐந்து பேரும் அமர்ந்து கொண்டனர். வெள்ளி நிற வரிகள் கொண்ட கொசுக்களை ஒவ்வொன்றாக அவர்களின் கைகளில் அமர்ந்து கடிக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டே படுத்துவிட்டார்கள். தம்நாட்டு மக்கள் காய்ச்சல் நோயின் கொடுமையிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக அந்தக் கொசுக்களுக்கு இரையாகி அவர்கள் தம்மையே மாய்த்துக் கொண்டார்கள்.

இராணுவ முகாமின் நடுவில் அழகிழந்த அந்தச் சிறிய வீட்டுக்கு வெளியே ஒரு நிமிடம் நின்று அந்த வீட்டுக்குள்ளே துணிச்சலின் உருவங்களாக வாழ்ந்து மடிந்த அந்த நண்பர்களின் வீரத்தையும், நாட்டுப்பற்றையும் நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் நெக்குறுகிறது.

நாம் இதுவரை கண்ட அனைத்தும் எவ்வளவு உண்மையான காட்சிகள்!  மனித நேயத்தின் உச்சநிலை! மனிதனின் அளப்பரிய மாண்பு! மேன்மையில் தோய்ந்து தூய்மை பெற்ற துணிச்சலின் சாரம்!

வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், ஊன்றிக் கவனித்தால் எத்தனையோ ஆண்டுகளும், மாதங்களும் அவர்கள் வாழ்வில் எத்தகைய பலன்களும் கிடைக்காத நிலையில் வீணாகக் கழிந்திருக்கும். சாதனை எதுவும் நிகழ்த்த முடியவில்லையே என்ற மனச்சோர்வு அவர்களை வாட்டி வதைத்திருக்கும். ஆனாலும் அத்தகைய மனச்சோர்வை மீறி விடாப்பிடியாக அவர்கள் உழைத்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்கள் வெற்றி அடைந்திருக்க மாட்டார்கள். எவனொருவர் தொடர்ந்து முயற்சி செய்கின்றானோ அவனை வெற்றி மகள் தேடி வருவாள்.

அன்றாடச் சோதனைகளில் வெற்றி காணும் அளவுக்குத் தேவையான துணிச்சலைப் பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க நினைத்த சாதனையை உங்களோடே சேர்ந்து புதைக்க வேண்டுமா? என்றோ ஒரு நாள் நீங்கள் ஒரு சாதனையை நிகழ்த்தத்தான் போகிறீர்கள். ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் செயல்களை என்றோ ஒருநாள் செய்யத்தான் போகிறீர்கள். உங்களுடைய சிறப்பான சாதனைகள் மூலம் என்றோ ஒருநாள் இந்த உலகத்தையே திகைக்க வைக்கப் போகிறீர்கள். உங்களை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் என்றோ ஒருநாள் துடைத்தெறியத்தான் போகிறீர்கள்.

வெளியே நின்று காத்துக் காத்துக் களைத்துப் போன நீங்கள் என்றோ ஒருநாள் விருந்து மண்டபத்தில் உரிமையோடு நுழைந்து உங்களுக்குரிய நாற்காலியில் உட்காரத்தான் போகிறீர்கள்! அது நிச்சயமாக ஒருநாள் நடக்கத்தான் போகிறது.

செய்ய வேணடும் என்று பல ஆண்டுகள் பேசிக்கொண்டே நாட்களை கழித்த நீங்கள் அதை செய்து முடிப்பதற்கான முதல் கட்டத்தை தேட நினைத்த புகழைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆண்டுகள் பல ஓடிமுடிவதற்குள் அந்தச் துணிச்சல் உங்களை செயல்படத் தூண்டுகின்றது.

உங்கள் மனமென்றும் மாளிகையில் கவலையில் பாதிப்புனுறாத அறைகள் சிலவற்றை அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அறையில் வாழுங்கள்.  நேற்றைய அறையை மூடிக்கொண்டு நாளைய அறையைப் பற்றிக் கவலைப்படாமல் இன்றைய அறையில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

ஒவ்வொரு நாளும் தோற்றுவிக்கின்றவாய்ப்புகளைப் பெரும்பான்மையாகப் பயன்படுத்திக் கொண்டு கவலையின்றி வாழுங்கள்.

மனதைக் கவலையிலிருந்து மீட்பதற்கு ஒரே வழி இன்றையப் பிரச்சனைகளுக்கு இன்றே தீர்வு காண முயற்சிப்பது. செயலற்று இருந்தாலும், செய்யாமல் இருந்தாலும் மனிதன் அந்தச் சுமையின் கீழே சிதைந்து விடுவான். பணத்தைப் பற்றிக் கவலைப்படுதல், வியாபாரம் பற்றிக் கவலைப்படுதல், குடும்பம் பற்றிக் கவலைப்படுதல், வேலையைப் பற்றிக் கவலைப்படுதல். இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது. ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். உடனே அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்.

மனமகிழ்ச்சியில்லாத தொல்லைத்தரக்கூடிய, விருப்பமற்றசெயல்களைத் தினந்தோறும் தொடர்ந்து செய்ய வேண்டாம். உங்கள் இலட்சியத்தை கண்முன்னே நிறுத்துங்கள். அந்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்கும் வகையில் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்துங்கள்.

கவலைக்கு உட்படாத மனஅறையில் ஒவ்வொரு நாளும் வாழுங்கள். வருங்காலம் பற்றிக் கவலைப்பட மறுத்துவிடுங்கள். மனம் ஒரு சிறைச்சாலை, அதில் நீங்கள் ஓர் ஆயுட்கைதி. பூட்டப்பட்ட அந்த அறையில்தான் உங்கள் காலமெல்லாம் வாழுகிறீர்கள்.  அதனுள் ஆண்டுக்காண்டு, நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் வெற்றிகள் பற்றிய நினைவுகளையே உங்கள் மனச்சுவரில் மாட்டி வையுங்கள்.  மனத்தளர்ச்சியை உதறிவிட்டு வலிமையின் உதவியை நாடுங்கள். நீங்கள் இதுவரை செய்த நல்ல செயல்களையே நினைத்துப் பாருங்கள். நீண்ட நாட்களாக மனதில் புதைத்து வைத்திருந்த எண்ணத்தையோ, ஆசையையோ, கனவையோ நிறைவேற்றும் வகையில் சராசரி நிலைக்குச் சற்று மேலே உயர்ந்து நீங்கள் நிகழ்த்திய சாதனைகளை எண்ணிப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த காலக்கட்டத்தை நினைத்துப் பாருங்கள்!  அவற்றையெல்லாம் உங்கள் மனச்சுவரில் வரிசையாக மாட்டி வைத்து அவற்றைப் பார்த்த வண்ணம் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்! வெற்றிக்கான பாதையை அமைக்கும் பணி எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்களும் உண்டு. துயர் மிகுந்த நாட்களும் உண்டு. துயரமான நாட்கள் வரும்போதெல்லாம் வாழ்க்கையைக் கசப்பானதாக நினைத்துவிடக் கூடாது. துயரமான நாட்களை சந்திக்கும்போது ஆச்சரியப்படுவதோ, அதிர்ச்சி அடைவதோ, மனமுடைந்து போவதோ கூடாது. அதே நேரத்தில் இனிவரும் வாழ்நாளெல்லாம் நமக்குத் துயரம்தான் என்று நினைத்துவிடவும் கூடாது.

ஒருவேளை நேற்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கலாம். உலகின் உச்சியில் நேற்று நீங்கள் உட்கார்ந்திருந்தீர்கள். உங்கள் இதயம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து களிப்புடன் பாடிக் கொண்டிருந்தது. இனிவரும் நாளெல்லாம் இன்ப நாட்கள் என்றகனவினில் மகிழ்ந்திருந்தீர்கள். வாழ்க்கையின் தோற்றத்தில் பலஅற்புதமான வண்ணங்கள் அமைந்து கிடந்தன. நீங்கள் பணியில் ஈடுபட்ட போது இயற்கையும் உங்களோடு இனைந்து பாடியது. இந்த உலகின் பொருட்களெல்லாம் உங்கள் ஆன்மாவின் சந்தத்திற்கு ஏற்ப இசை கூட்டி ஒத்தன. நீங்கள் நடந்து சென்றபோது இந்த உலகமே நிமிர்ந்து நின்று உங்களுக்கு மரியாதை செலுத்தியது. பல நகரங்களை வென்று வாகை சூடிய மாவீரனைப் போல அலங்கார வளைவுகள் வரவேற்க, பல மனிதர்களை வழி நடத்திச் சென்றீர்கள். சீக்கிரம் செல்லுங்கள், அதோ சிகரத்தில் சிம்மாசனம் காத்துக் கிடக்கிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை