Home » Cover Story » செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!

 
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!


ஆசிரியர் குழு
Author:

திரு. L. R. வெங்கடேஷ்

இயக்குநர் வி-சாட் சோலார் தயாரிப்புகள், கோவை

தற்செயலாய் கிடைப்பதல்ல வெற்றி! தன் செயலால் கிடைப்பதே வெற்றி என அயராத உழைப்பால் உயர்ந்து வருபவர்

  •  வெற்றியோ! தோல்வியோ! போராடு, கடைசி வரை அல்ல… ஆரம்பத்தில் இருந்தே… என்று போராடும் குணம் நிரம்பப் பெற்றவர்
  • மின்சாரத்தைப் மிச்சப்படுத்தவும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும் சோலார் மின் சாதனங்களை தயாரிப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருபவர்
  • 100 லிட்டர் முதல் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு சோலார் வாட்டர் ஹீட்டர் சாதனங்களையும், 1 கிலோ வாட்டிலிருந்து 500 கிலோ வாட் வரை சோலார் மின் உற்பத்தி சாதனங்களையும் தயாரித்துவரும் “வி-சாட்’ன் நிர்வாக இயக்குனர் திரு. க.த. வெங்கடேஷ் அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி……

உங்களின் பள்ளி வாழ்க்கை குறித்து?

என் தந்தை டாக்டர் எம். லட்சுமனசிங் கல்லூரி பேராசிரியர். அவருக்கு அடிக்கடி பணியில் இடமாற்றம் ஏற்படும். இதனால் என் பள்ளி வாழ்க்கையில் இடம் மாறி மாறி படிக்கும் சூழல் அமைந்தது. நான் ஐந்தாம் வகுப்பிற்கு கோவையில் சேரும் பொழுது அது எனக்கு எட்டாவது பள்ளியாக இருந்தது. அந்த அளவிற்கு பள்ளிப்படிப்பு அமைந்தது. அதற்கு பின்பு என் பள்ளி நலன் கருதி அப்பா பணிமாறுதல் வராத வண்ணம் தன் பணியை மாற்றி அமைத்துக் கொண்டார். அதனால் தொடர்ந்து கோவையிலேயே தங்கிப் படிக்கும் சூழல் அமையப் பெற்றேன். படிக்கின்றபோது இன்ஜினியராக வரவேண்டும் என்று நினைத்தேன். அதற்காகவே பள்ளிப்படிப்பை சரியாகவும், முறையாகவும் கற்றுக்கொண்டேன்.

அதன் பிறகு கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். அப்போதே இயந்திரம், வாகனம், வீட்டின் மின்சாதன பொருட்களை பழுது பார்க்கும் அளவு எனது ஆற்றலை வளர்த்துக் கொண்டேன்.

பொறியியல் துறையில் வேறுபட்ட துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

நான் படிக்கின்ற காலத்தில் பொறியியல் கல்லூரிக்குள் செல்வதென்றால் மிகுந்த போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. நுழைத்தேர்வு அறிமுகம் ஆன ஆண்டு அது. பொறியியல் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனியார் கல்லூரியில் சேர்ந்தேன்.

அந்தக் கல்லூரி பொறியியல் துறைக்கென தனி அங்கீகாரம் வழங்கி பல பயிற்சிகளைக் கொடுத்தது. பொறியியல் முதலாம் ஆண்டின் முடிவில் துறைகளைப் பிரிப்பார்கள். அப்பொழுது என்னுடன் பயிலும் மாணவர்கள் மெக்கானிக்கல், சிவில் துறையைத் தேர்வு செய்வதில் ஆர்வமாக இருந்தார்கள்.

நான் வேறுபட்ட துறையாக ‘இன்ஸ்மென்டேசன்’ என்ற துறையைத் தேர்ந்தெடுத்தேன். அப்பொழுது கல்லூரி பேராசிரியர் உள்பட பலரும் இத்துறை எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருப்பது சாத்தியமா என்று எதிர்மறை கருத்துக்களைத் தான் தெரிவித்தனர். ஆனாலும் மனம் மாறாமல் விடாப்பிடியாக அதே துறையைத் தான் எடுத்துப் படித்தேன்.

மற்றவர்கள் சொல்லியதைப் போல் இல்லாமல் இத்துறையின் பயனை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும் என்று எண்ணி கடினமாக படித்து பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.

பொறியியல் துறையை முடித்து வெளியுலகத்திற்கு வந்தபோது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?

கல்லூரியில் பொறியியல் படிப்பைப் படிக்கின்றோம் என்றாலே அனைவருக்கும் அளப்பறியா சந்தோசம் ஏற்படும். அப்படித்தான் எனக்கும் இருந்தது. ஆனால் கல்லூரி காலங்களின் முடிவில் மற்றபடிப்புகளைப் போலத்தான் இதுவும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

வெறும் இளம்நிலை (UG) அளவில் படித்தால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று என்னால் அறிய முடியவில்லை. இதனால் CIT-யில் மெடிக்கல் இன்ஸ்மென்டேசன் என்ற துறை இருப்பதை அறிந்து அதைத்தேர்ந்து படித்தேன்.

 கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் தொழில் தொடங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதுவும் எனக்கு தோன்றவில்லை. கடலை கடக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு பாதியில் திரும்புவது முறையாக இருக்காது என்றெண்ணி படிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினேன்.

சரி, எப்போது உங்கள் பார்வை தொழில் சார்ந்து திரும்பியது?

இன்ஜினியரிங் முடித்த பின்னர் செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தைக் கண்டேன். அதில் மத்திய அரசு – Department of Science and Technology (DST) என்ற நிறுவனம் பொறியியல் சார்ந்த பயிலரங்கம் (Training Workshop) ஒன்றைதொழில் முனைவோர்களுக்கு 6 வாரம் நிகழ்த்துவதாக அழைப்பிதழ் வந்திருந்தது. பயிலரங்கில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி அதில் கலந்து கொண்டேன்.

அந்தப் பயிலரங்கத்தில் பங்கேற்க மொத்தம் 300 மாணவர்கள் வந்திருந்தனர். எங்களிடம் 200 கேள்விகள் கொண்ட வினாத்தாளைக் கொடுத்தார்கள். அவ்வினாத் தாள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் விதத்தில் இருந்தது. தேர்வின் முடிவில் 20 மாணவர்கள் மட்டும் 6 வார பயிலரங்கிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.

அந்தப் பெயர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெற்றிருந்தது எனக்கு மேலும் என் ஆற்றலை வளர்த்துக் கொள்ள உந்துதலாக அமைந்தது. அந்தத் தேர்வு என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அதோடு தனியாக தொழில் துவங்கி சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மேலும் அதிகப்படுத்தியது.

அப்போதே மெடிக்கல் இன்ஸ்மென்டேசன் பணிகள் சார்ந்து செயல்படத் துவங்கிவிட்டேன். ஆனாலும் உற்பத்தி சார்ந்த துறைக்கு வரவேண்டுமென்று நினைத்துத்தான் வாசிங்மெசின் உற்பத்தியைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இரண்டு நபர்களைக் கொண்டு வீட்டிற்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து தொடங்கினேன். அதன் பின்னர் ‘சக்தி’ என்றபெயரில் வாசிங்மெசினின் உபகரணங்களையும் தயாரித்து மார்க்கெட்டிற்குக் கொண்டு வந்தோம். நல்ல தரமான கருவிகள் கொண்டு செயல்படுவதால் எனக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் நல்ல பெயர் கிடைத்தது. பிறகு கோவை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் விற்பனையை அதிகரித்தோம்.

தொழில்நுட்பத்தின் மாறுதலாக வாசிங்மெசின் உற்பத்தி பல நிலைகளில் மாற்றம் பெற்றது. அதற்குப் பின்பு இருவருடன் இணைந்து சோலார் சாதனங்களைத் தயாரிக்க தொடங்கினோம்.

நீங்கள் தனியாக வி-சாட் நிறுவனத்தைத் தொடங்கியது எப்போது?

2004ம் ஆண்டு தனியாக வி-சாட் நிறுவனத்தை மற்றவர் செய்யும் தொழிலைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகவும், மாறுபட்டதாகவும் இருக்க வேண்டும் என நினைத்து தொடங்கினேன்.

உற்பத்தி தொடர்பான பொறியியல் துறையைத் தேர்வு செய்ததன் மூலம் பல வகையான இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடிகிறதா? அல்லது வேறு துறையில் உள்ளவர்களும் இதுபோல் தொழில் செய்ய இயலுமா?

இயந்திரங்கள் பலவகையாக இருக்கிறது. வாசிங்மெசின் தயாரிக்க வேண்டுமென்றால் இன்ஜினியராக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் இன்ஜினியரிங் மற்றும் இயந்திரவியல் படித்ததன் மூலமாகத் தான் சோலார் தயாரிப்பில் திறம்பட நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு பொருளை தரமானதாக தயாரிக்க விரும்புகிறோம் என்றால் அதிலுள்ள அனைத்து நுணுக்கங்களைப் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படையில் பொறியியல் படிப்பை கற்றதால் பெரும்பாலான கருவிகளை எப்படிக் கையாள வேண்டும் என்றமுறையை தெரிந்திருக்கிறேன். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பணத்தைவிட தரத்தையே பார்க்கிறார்கள். எனவே இயந்திரவியல் படித்ததால் தான் இத்துறையில் திறம்பட செயல்பட முடிகிறது என்று நினைக்கிறேன். படிப்பு எனக்கு பெரிதும் உறுதுணையாகத் தான் இருந்து வருகிறது.

பெரிய நிறுவனங்களும் இந்த சோலார் கருவிகள் தயாரிக்கிறார்கள். அவர்களோடு போட்டியிடும் போது எந்த மாதிரியான புதுமைகளை செய்ய வேண்டியிருக்கிறது?

நாங்கள் 1991ம் ஆண்டு முதலில் இந்நிறுவனத்தைத் தொடங்கிய போது சோலார் உற்பத்தி நிறுவனம் என்று யாரும் இருந்திருக்கவில்லை. நாங்கள் தான் முதலில் இதை அறிமுகப்படுத்தினோம். இதில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று யாருமில்லை. காரணம் வாங்குபவர்களின் மனநிலை, அவர்களின் கருத்துகள் போன்றவை பற்றி தெரிந்திருந்திருப்பதால் உற்பத்தி பொருட்களைத் தரமானதாகவே கொடுக்க முடிகிறது.

நிறுவனம் தொடங்கிய பொழுது எங்களிடம் பொருட்களை வாங்கியவர்கள், இன்றும் கூட எங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவர்களது பொருட்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படின் உடனே தொடர்பு கொண்டு அதை சரிசெய்து கொள்கிறார்கள்.

இதுபோல மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நாங்கள் மிகுந்த திறம்படனும், ஈடுபாட்டுடனும் செய்து வருகிறோம்.

இத்திட்டத்திலுள்ள சவால்கள் என்னென்ன?

 ஒரு பொருளை உற்பத்தி செய்து மார்க்கெட்டிற்கு வந்த உடனே வெற்றி பெற்றதாக எண்ணுதல் கூடாது. அப்பொருளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு இதைப் பற்றிய தெளிவுகள் குறைந்த அளவிலேயே கிடைக்கப் பெற்றிருக்கும்.

 எனவே அவர்களுக்கு அப்பொருளைப் பற்றி முழுவதும் தெரிவித்து அதைப் புரிய வைக்க வேண்டும். இந்நிறுவனம் தொடங்கிய 21 ஆண்டுகளில் இப்பொழுது தான் தமிழகத்தைத் தாண்டி ஆந்திராவிற்கும், கேரளாவிற்கும் உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு சோலாரைப் பற்றிய அணுகுமுறைகளை தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதுபோன்ற முறைகளைக் கையாளுதல் பற்றி தெரிவிப்பது மிகவும் அவசியம். படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் புரிய வைப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றை சிறப்பாக செய்தாலே வெற்றி கிடைக்கப் பெறும்.

வி-சாட் துவங்கியபோது இருந்ததற்கும், தற்போது இருக்கின்ற நிலை குறித்தும்?

ஆரம்பத்தில் சூரிய ஒளி பயன்பாட்டில் வாட்டர் ஹீட்டர் மட்டுமே தயாரித்து விற்பனை என்றிருந்தது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய மின் சாதன கருவிகளையும் தயாரிக்க ஆரம்பித்தோம்.

பின்னர் வீட்டு உபயோகத்திற்கு மட்டுமின்றி கல்லூரிகள், விடுதிகள், உணவகம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், பெரிய அளவில் அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தி உள்ளோம்.

வி-சாட்டின் சிறப்பம்சம் என்பது…

  • சோலார் டியூப்கள் உலகத்தரம் வாய்ந்தது
  • ஆண்டுகள் பல கடந்தும் எங்கள் சர்வீஸ் இன்றும் பாராட்டப்படுவது
  • மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம்
  • ISO, ISI, RTC-MKU தரச் சான்றிதழ் பெற்றிருப்பது
  • மின்சாரத்தை மிச்சப்படுத்தியும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் தன்மை

            எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளர்களே எங்களுடைய பொருட்களுக்கு அதிகளவு விற்பனைதாரர்களாக பங்கு கொண்டிருப்பது.

சாதித்து விட்டேன் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியதுண்டா?

 அப்படிப்பட்ட எண்ணம் எழுந்து விட்டாலே தொடர்ந்து தேடல், சாதிப்பு என்பதெல்லாம் நின்றுவிடும் என்பதை நான் நன்கு உணர்வேன். நான் பொறியியல் படிப்பை முடித்தவுடனே சோலார் சிஸ்டம் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கினேன். இதைத் தொடங்கியதும் என் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலரும் என்னை ஏளனமாகத்தான் பார்த்தார்கள். அந்தப் பார்வையே இதில் ஏதேனும் சாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று என்னைத் தூண்டியது. உழைப்பிற்கு மேல் சாதிக்க ஏதும் இல்லை என்று எண்ணுபவன் நான், எனவே கடினமாக உழைத்தேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு பொருளையும் தரமானதாகவும், மதிப்பீட்டுடனும் தேர்வு செய்து உற்பத்திகளை செய்தேன். வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து என்னிடம் பொருளை வாங்கிச் சென்றார்கள். ஒரு மார்க்கெட்டில் நம்முடைய பொருள் நன்றாக விற்பனையாகிறது என்றால் அதுவே அந்நிறுவனம் தொடங்கியதன் வெற்றி என கருதுகிறேன். இந்த வெற்றியை இன்னும் பல படிகள் உயர்த்த வேண்டும் என்பது தான் இப்போதைய சிந்தனை.

இத்தொழிலில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இன்றைய இளைஞர்கள் வேகமாக வெற்றி அடைய வேண்டும் என விரும்புகிறார்கள். இளைஞர்கள் அவர்களது தந்தை தற்போது வாங்கும் சம்பளத்தை விடவும் அதிகமாகவே சம்பளம் பெறுகிறார்கள். அதற்குக் காரணம் தொழில்நுட்பம் அடைந்த வளர்ச்சியே.

சொந்தமாக தொழில் தொடங்கினால் ஏதேனும் தோல்வி வந்துவிடுமோ என்றெண்ணி நிறுவனங்களில் வேலைக்கு சேர்கிறார்கள். ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சோலார் போன்றநிறுவனங்களைத் தொடங்கினால் இந்நிறுவனம் இன்னமும் பலவாறாக மாற்றங்களை அடைந்து பலருக்கு வேலை தரும் நிறுவனமாக நிச்சயம் மாறும்.

வேகமாக முன்னேறலாம் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் வேகத்தைக் காட்ட வேண்டும் என்றெண்ணி தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. பொறுமையும், தைரியமும் இருந்தாலே வெற்றி பெற்றுவிடலாம்.

குடும்ப தொழில் செய்வதற்கும், புதிதாய் மாறுபட்ட தொழில் தொடங்குவதற்கும் உள்ள வேறுபாடு?

முதல் தலைமுறையினர் ஒரு தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாகவும், திறம்படவும் செய்திருப்பார்கள். அதே தொழிலை அடுத்த தலைமுறையினர் செய்யும் பொழுது அவர்களுக்கிருந்த ஈடுபாடு கொஞ்சம் குறையலாம். இத்தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், குடும்பத் தொழில் என்றகாரணத்திற்காகச் செய்யலாம். ஆனால் இந்தத் தொழில் தான் நிரந்தரத் தொழில் என்று எண்ணிவிட்டால் முழு திறமையுடன் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

உங்களின் வழிகாட்டிகளாக நீங்கள் பார்க்கக்கூடியவர்கள்?

முதலில் என் தந்தை தான். அவரின் தனித்திறமைகள் என்னை வெகுவாக கவர்ந்திழுக்கும். எதைச் செய்தாலும் சரியாகத் தான் செய்வார். அவர் துணிந்து எதைச் செய்தாலும் அது தோல்வியடையாது என்றேசொல்லலாம்.

இன்பத்தைக் கண்டு அளப்பறிய மகிழ்வையும் அடைய மாட்டார். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடவும் மாட்டார். இவர் எனக்கும் என் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய முன் உதாரணம்.

அடுத்து என் தொழில் குரு திரு. அ. மகேஷ். இவர் எனக்கு அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொடுத்தவர். மேலும் ஒஇஐ ரமேஷ் பட்டாவியா அவர்கள் எப்போதும் எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தவர் மற்றும் உற்றநண்பர்கள், ஜீனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பாளர்கள்.

“வி-சாட்” அடுத்த இலக்கு?

இலக்கு என்பதை உருவாக்கிக் கொள்வது என்று தான் கூறுவேன். ஒரு வட்டம் போட்டு அதிலே சுற்றிக் கொண்டிருந்தால் அதிலே தான் இருக்க முடியும். அதனால் பயன் ஒன்றும் இல்லை. வானத்தில் திடீரென்று தோன்றும் வானவில் போல் இருக்க வேண்டும் என விரும்கிறேன். சில மணித்துளிகளே இருந்தாலும் அனைவரும் அதிசயித்து பார்க்கச் செய்ய வேண்டும். அதுபோலத் தான் இலக்கும் அற்புதமானதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சந்தை நிலவரத்தில் வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும், புதுமைகளையும் கொண்டு வந்து உற்பத்திப் பொருட்களின் அளவை அதிகரித்து மக்களிடையே மேலும் நன்மதிப்பு பெற்றாலே போதும். இலக்கை அடைவது உறுதிஙு

இந்தியாவில் சோலார் திட்ட வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

இந்த சோலார் திட்டம் குளிர்ந்த நீரை சூடான நீராக மாற்றும் இயந்திரமாக இருக்கிறது. இதன் தேவைகள் வீடு, ஹோட்டல், மருத்துவமனை, விடுதி போன்றஇடங்களில் அதிகளவில் தேவைப்படுகிறது. இதை வாங்கி உபயோகிக்கும் அளவு நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து தான் வருகிறது.

இயற்கையான சூரிய ஒளியின் மூலம் சூடாவதால் உடலுக்கும், தோலுக்கும் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்பதால் இந்தியாவில் மேலும் இதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சோலார் திட்டத்தின் மூலம் மின்சாரக் கட்டணம் மிகக்குறைந்த அளவு தான் ஆகும். அதுபற்றிய புராஜக்ட்டை இப்பொழுது பல இடங்களில் செய்து வருகிறோம்.

முழுவதும் சோலார் சிஸ்டம் முறை இந்தியாவில் எப்போது வரும்?

இதற்கு கால அளவு கொடுக்க முடியாது. காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஒரு பெரும் தடையாக இருக்கிறது. உதாரணமாக வாகனப்புகை, எரிமூட்டும் பொழுது ஏற்படும் புகை போன்றவற்றால் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசுபாடு பெரிதும் ஏற்படுகிறது.

ஐரோப்பா போன்றநாடுகளில் கிடைக்கின்ற அளவைவிட இங்கு இரண்டு மடங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அங்கு இருக்கின்ற பயன்பாடுகளை விட இங்கு குறைந்த அளவே பயன்பாடு இருக்கின்றது. இந்நிலை மாறினால் நிச்சயம் இந்தியா முழுவதும் இந்த சோலார் முறை சாத்தியமாக அமையும்.

பொறியியல் துறைபடித்து இன்று ஒரு சாதனையாளராக இருக்கிறீர்கள். இதற்கு உங்களின் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றால் யாருக்கு செலுத்த நினைக்கிறீர்கள்?

நான் படிக்கின்ற காலத்தில் இதில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. ஒருமுறைஅவினாசிலிங்கம் கல்லூரியில் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கு திருமதி. ராஜம்மாள் தேவதாஸ் அவர்களின் சோலார் குக்கர் கருத்தரங்கு உரையாடல் எனக்கு மிகவும் உந்துதலாக அமைந்தது. அதுவே எனக்கு பெரிதும் வளர்ச்சியடை காரணமாக அமைந்தது.

அதுபோல IIT-யில் பணியாற்றிய திரு. வெங்கடேசன் அவர்களின் பேச்சும், திரு. சி. சுப்ரமணியம், திரு. சூர்யமூர்த்தி போன்றவர்களும் என்னை வெகுவாக கவர்ந்தவர்கள்.

சோலார் சிஸ்டம் குறித்த விழிப்புணர்வுக்கு…

மொபைல் டெமோ வாகனத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

 தனியாக தொழில் துவங்குபவர்களுக்கு பயிலரங்கம் ஏற்பாடு செய்கிறோம்.

‘தன்னம்பிக்கை’ குறித்து?

ஒருவருக்கு தன்னம்பிக்கை இல்லையேல் அவர் முழுமனிதனாக இருக்க முடியாது. அதேசமயம் அந்த தன்னம்பிக்கையை நிரந்தரமாக்கி கொண்டால் அவரின் சாதிப்பிற்கு எல்லையே இருக்காது.

 இந்த இதழை மேலும்

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை