Home » Articles » கார்த்திகை பிறந்த போது

 
கார்த்திகை பிறந்த போது


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

ஐப்பசியின் அடைமழை கொட்டித்தீர்த்த பிறகும் இன்னும் தீர்ந்துபோகாமல் இருப்பு வைத்திருக்கும் கருத்த மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவோம் என்று பயமுறுத்தியபடி அங்கும் இங்கும் வானவீதியில் உலாவிக் கொண்டிருக்கும், அவ்வப்போது, சில் சில்லென்று குளிர்ந்த காற்று வீசி உடலையும், மனதையும் குளிரவைக்கும். அந்த மாதிரி சமயங்களில் பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளியைவிட்டு வரும்போதும், நெஞ்சோடு புத்தகப்பையை அணைத்துக்கொண்டு வருவார்கள் சின்னஞ்சிறு குழந்தைகள். மழைக்காலமான நாள் முடிந்து விடைபெறப் போகிறேன் என்று சொல்லி தன் தங்கை குளிர்காலத்தை கைபிடித்து அழைத்து வந்து வீதியில் விட்டுவிட்டுச் செல்வதைப் போல தோன்றும். நடுங்கவைக்கும் குளிர் இல்லையென்றாலும், குளிரும், சாறலும், தூறலும் வந்து பெருமழைக்கும் கட்டியம் சொல்லிச் செல்லும். நீல வானத்தில் சூரியனின் கதிர்கள் எட்டிப்பார்த்து சிரிக்கும். அந்த மாதிரி சமயங்களில் குளிர் காய்வதற்காக பரந்த பரப்புகளில் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் பேசி பொழுதைக் கழிப்போம். தீபாவளி முடிந்து கார்த்திகை பொறியும், அவல் உருண்டைகளும் கொஞ்சகாலம் நிரந்தரமாக இடம்பிடித்துக் கொள்ளும். நினைத்தபோதெல்லாம் வாயில் எடுத்துப்போட்டு, கூட இருக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து சந்தோஷப்படும் பருவமாக இருந்தது அது.

வந்துவிட்டது என்று அறிவிப்பு தந்தபடி தினம் தினம் வீட்டு வாசல்களில் விளக்கு ஏற்றிவைப்பதற்கு என்றே இருக்கும் சின்னச்சின்ன அழகழகான மாடங்களில் அகல் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கும். அந்த மாடங்களில் தான் எத்தனை வகைகள்! எத்தனை வேலைப்பாடுகள்! சிலவற்றில் மாடத்தைச் சுற்றி வரையிடப்பட்டு, அந்த மேடுபள்ளக்கோடுகளில் வெவ்வேறு நிறங்களில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். வாசல் திண்ணைக்கு மேல் நுழையும் இடத்தின் இரு பக்கங்களிலும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் அந்த மாடங்களின் உள்ளே சுடர்விட்டு எரியும் அகல்விளக்குகள் குடிபோகும்போது தான் வீட்டுக்கே ஒரு தனி அழகு பிறப்பது போல இருக்கும். நெய் தீபங்களும் உண்டு. நின்று நிதானமாக அமைதியுடன் எரியும் அந்த சிறிய அகல் விளக்குகளின் ஆர்ப்பாட்டம் இல்லாத சௌந்தரியம் வாழ்க்கையின் ஏதோ பெரிய தத்துவத்தை நமக்கு உணர்த்துவதுபோல இருக்கும். மாதம் பிறந்தவுடன் குடிபுகத் தொடங்கும் இந்த விளக்குகள் கார்த்திகை நாளில் திருவிழா கண்டு மாதம் முடிந்தவுடன் விடைபெற்றுச் செல்லும்.

தெற்கு பகுதிகளில் மரோட்டிகாயின் கொட்டாங்குச்சிகளிலும், மண் அகல்களிலும் விளக்குகள் ஏற்றப்படும். ஆங்காங்கே தீபங்கள் மின்னி மின்னி எரிந்து ஏற்படுத்தும் அழகு மனதைக் கொள்ளை கொள்ளும். சில இடங்களில் ஓலைகளை வயல்வரப்புகளில் கூம்பாரமாக கட்டி அதை எரித்து “றொகரா” என்று குழந்தைகள் கூவி சத்தம் போடுவார்கள். இந்த தீயில் நெல்லை நாசப்படுத்தும் பூச்சிகளும், சிறிய உயிரினங்களும் விழுந்து இறந்து போய்விடும்.

கடலில் மீன்கள் அதிகமாக கிடைப்பதும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான். கோயில்கள் பாராயணங்களும், தீபங்களுமாக பக்திமயமாகக் காட்சியளிக்கும். மங்கிய சூரிய ஒளியில் பிரகாசிக்கும் அகல்களின் வரிசைகள் கோயிலுக்குள் நம்மை இழுத்துச் செல்லும். சபரிமலை சீசன் தொடங்கிவிடும் என்பதால் ஊரில் தினம் எப்படியும் கன்னிசாமியின் பூஜை இருக்கும். சரணகோஷம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஜாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் இதில் கலந்து கொள்வார்கள். கன்னிபூஜை முடிந்து நடைபெறும் விருந்தில் கிராமமே பங்கு கொள்ளும். கூடி வாழும் தத்துவமும், சாதி மத வேறுபாடுகளை மறந்து மக்கள் எல்லோரும் ஒன்று என்ற சகோதர உணர்வும் பாரம்பரியமாக நிலைத்து நிற்க இது வழிவகுத்தது.

கார்த்திகையும், மார்கழியும் பொதுவாக பக்தியுடன் நெருங்கி தொடர்பு கொண்டுள்ளதால் ஒவ்வொரு வீட்டிலும் அது எதிரொலிக்கும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பெருக்கி, சாணத்தால் மெழுகி துடைத்து சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் தன்னடக்கத்தைக் கற்றுத்தரும் மாதமாக இருந்தது இந்த கார்த்திகை மாதம் தான். கார்த்திகை மாதத்தில் இருந்து பல நல்ல விசயங்களையும், உடல் சுத்தத்தையும், மன சுத்தத்தையும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவையெல்லாம் இயற்கையோடு சேர்ந்த ஒத்திசைவான வாழ்க்கையாக இருந்தது. பூவுக்கும், புல்லுக்கும், புழுவுக்கும், பறவைக்கும், பசுவுக்கும் எல்லா உயிரினங்களுக்கும் உரிமை உள்ளதாகும் இந்த பூமி என்றபாடமே அது. அதனால் தான் எல்லாவற்றையும் ஒன்றாகக் காணும் சமுதாயமாக இருந்தது அன்றைய ஊரும், நாடும் எல்லாம்.

கார்த்திகை மாதத்தின் கடைநாட்களில் அகல்கள் சிறிது சிறிதாக நம்மிடம் இருந்து விடைபெறத் தொடங்கும். கண்ணின் காட்சியில் இருந்து மறையத் தொடங்கினாலும், மனதோடு பூட்டிவைத்துக் கொள்ள வேண்டும் என்றஅடங்காத ஆசை மனதுக்குள் சுடர்விடச் செய்து கொண்டிருக்கும். கார்த்திகை நாள் வருவதற்கு சில நாட்கள் முன்பாகவே தெருவில் கூடைகளில் விளக்குகளைச் சுமந்தபடி அகல்விற்பவர்கள் வந்துவிடுவார்கள். யானை விளக்கு, பெண்கள் கையில் ஏந்தியபடி நிற்கும் பொம்மை விளக்குகள், காமாட்சி விளக்கு, புதுமண் வாசனையோடு வீட்டுக்கு வரும் புது உறவாக மண் அகல் விளக்குகள் என்று எத்தனை எத்தனை விதமான விளக்குகள்! எல்லாம் கார்த்திகை முடிந்தவுடன் தகர டப்பாக்களில் தேய்த்து கழுவி வெய்யிலில் உலர்த்தி குடிபுகுந்து கொள்ளும். இனி அடுத்த வருடம் தான். இனி இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

எவ்வளவு கழுவினாலும் போகாத எண்ணை வாசனையும், வெல்லத்தின் மணத்தோடு செய்த அப்பத்தின் மணமும், அவல் பொறி உருண்டைகளின் வாசனையும், நெல் பொறியில் கலந்து வீசும் நெல்லின் மனமும் எல்லாம் மனதில் என்றும் நறுமணமாக வீசிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு வருடம் வரும்போதும், ஒரு புதுக் கார்த்திகை. ஒவ்வொரு வருடமும் அது ஒரு புது வெளிச்சத்தை கொண்டுவந்து தந்துவிட்டுப் போகும். அந்த ஒளிச்சுடர் என்றும் நம் வாழ்க்கையை வழிநடத்தட்டும்!

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2014

என் பள்ளி
என் கல்லூரி பக்கம்.
திறமைகள் உடன் பிறந்தவைகளா?
நம்பிக்கை வேண்டும்
பிரம்ம முகூர்த்தம்
அலை பாயும் மனதை அடக்குங்கள்
திரும்பத் திரும்ப வெற்றியாளர் கூறும் விளக்கங்கள்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
கார்த்திகை பிறந்த போது
புல் இங்கே… மாடுகள் எங்கே?
பெர்னார்டு
வெற்றியின் மறுபக்கம்
முத்திரை
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
வைகறை உன் வாசலில் பூக்கோலம் போடுவதைப் பார்!
நம்மை நாமே வெல்வோம்! உயர்வின் பாதையில் செல்வோம்!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்