Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

“ஈன்றபொழுதினும் பெரிதுவர்க்கும் தன் மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பிள்ளையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களும் இந்தக் குறளின் தனித்தன்மையை அறியவே ஆசைப்படுவார்கள். ஒரு குழந்தை சான்றோனாகிறான் என்றால் முதலில் சூழல் அவனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். குடும்பம், பெற்றோர், பள்ளி, நண்பர்கள், ஆசிரியர்கள் என்று எல்லா தரப்பிலும் ஏதேனும் ஒரு வகையில் அவனுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். இதில் பள்ளிக் கல்வி பெரிதும் துணை புரியும். பள்ளியில் பயின்றதன் மூலமாக தான் அவனின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமையும். அப்படி நல்லதொரு கல்வியைக்கற்று இன்று பல நிலைகளில் பெற்றோருக்கு பெருமை சேர்த்துவரும் இந்திய வனத்துறையில் பணியாற்றும் செல்வி வித்யா அவர்களின் தனித்தன்மைகளை “என் பள்ளி’ மூலம் நம்மோடு பகிர்கிறார்.

கோவை மாவட்டத்திலுள்ள கவுண்டம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தேன். எங்கள் கிராமத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எங்கு திரும்பினாலும் இயற்கை அன்னையின் எழில் காட்சிகள் தென்படும். பருவம் தவறாத மழை, விவசாயக் கிணற்றில் எப்பொழுதும் வற்றாத நீர், வேளாண்மை சிறப்புமிக்க, செம்மைமிக்க நிலப்பரப்பு என்று அழகாகக் காட்சியளிக்கும் எங்கள் கிராமம்.

விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தாலும் என் பெற்றோர் படித்தவர்கள். இதனால் இருவரும் கணினித் துறையில் வேலைபார்த்து வருகிறார்கள். என் அண்ணா திரு. வினோத் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். பெற்றோர்கள் படித்தவர்கள் என்பதால் பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த அக்கறைகொண்டு பள்ளியைத் தேர்ந்தெடுத்து சேர்த்தார்கள்.

அப்படி தேர்ந்தெடுத்து சேர்ந்த பள்ளி தான் வித்யவிகாஷ் மெட்ரிக் பள்ளி. முதல் நாள் என் பெற்றோர் ஒரு கனவோடு என்னை விட்டு சென்றநாள் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. வீட்டிற்கும், பள்ளிக்கும் சிறுதொலைவு தான் என்றாலும் வருத்தம் கலந்த புன்னகை இருந்தது. இருந்தும் வெளிக்காட்டாமல் ஏதோ லட்சியம் நிறைவேறிவிட்டது போல என் பெற்றோர்கள் சென்றார்கள்.

பள்ளியைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் படிப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் பெயரெடுத்த பள்ளி. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் அன்பாகப் பழகும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் ஒழுங்கின்மையாக நடந்துகொண்டால் சற்றும் குறையாமல் தண்டனைகள் கொடுப்பார்கள். தண்டனைக்குப் பயந்தே யாரும் தவறுகள் செய்யமாட்டார்கள்.

என்றாலும் ஒரு பள்ளிக்கூடம் என்றால் அதில் எவ்வளவு சுதந்திரமாக இருக்க வேண்டுமோ அத்தனை சுதந்திரத்தையும் என் பள்ளி வாழ்க்கையில் கிடைக்கப் பெற்றேன். விளையாட்டு, சுற்றுலா, வினாடி வினா போன்றவற்றில் என் பங்கு எப்போதும் முதன்மையாகவே இருக்கும்.

பள்ளிக் காலங்களில் வகுப்புத் தலைவியாக இருந்திருக்கிறேன். இதனால் மேலாண்மை பற்றி கற்றுக்கொள்ள இந்தப் பள்ளி எனக்குப் பெரிதும் துணைநிற்கின்றது. எனக்குப் பிடிக்காத பாடம் கணிதம். ஏனென்றால் கணக்கைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமான ஒன்று. மிகுந்த சிரமப்பட்டு தான் சரியான விடையைக் கண்டுபிடிப்பேன். கணிதம் எனக்கு வராத பாடம் என்றாலும், கணிதம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் திரு. யோகேந்திர குமார் அவர்கள் என் பள்ளி வாழ்வில் மறக்கமுடியாத ஆசிரியர்.

மாணவர்களைப் பிரித்துப் பார்க்க மாட்டார். வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தாலும் அனைவருக்கும் புரியும் வகையில் பாடம் எடுப்பதில் தனித்திறன் மிக்கவர். ஒரு கணக்கைப் போட்டதும் ஒட்டுமொத்த வகுப்பே தெளிவு பெற்றால் தான் அடுத்த கணக்கிற்குச் செல்வார். அந்த அளவிற்கு மிகுந்த ஈடுபாட்டோடு பாடத்தை நடத்துவார். மற்றஆசிரியர்களும் எனக்கு நல்ல உந்துதல்களைக் கொடுத்து வழிநடத்தி உள்ளார்கள்.

அதுவே மேல்நிலை வகுப்புகளை வெற்றிகரமாக முடிக்க வழிகோலியது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் எனக்குள் ஒரு திட்டத்தை வரையறுத்துக் கொண்டேன். அந்தத் திட்டத்தில் சற்றும் மழுங்காமல் அர்ப்பணிப்புடன், விடாமுயற்சியுடன் ஈடுபட்டேன்.

அப்போது தான் வனத்துறைஅதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் மேட்டுப்பாளையத்திலுள்ள வனத்துறை கல்லூரியில் B.SC., M.SC. வனத்துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்து வெற்றியும் பெற்றேன். என்னுடைய இந்த வெற்றிக்கு எனது பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

பின்னர் வனத்துறை வேலையைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கவில்லை. எனக்கு எப்பொழுது படிக்க தோன்றுகிறதோ அப்போது படிப்பேன். முதல் தேர்விலேயே வெற்றியும் பெற்றேன். இந்த வெற்றியில் நான் மகிழ்வடைந்ததை விட எனது குடும்பத்தாரும், எனது சுற்றத்தாரும் பெரிதும் சந்தோசமடைந்தனர். இந்த வெற்றியால் என்னுடைய பெற்றோர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்க முடிந்தது என்று நினைக்கும் போது அதுவே எனது சாதனையாக உணர முடிந்தது.

“எண்ணிய காரியத்திலிருந்து எள்ளளவும் பின் வாங்காதே. எண்ணியதை எண்ணிய படி செய்வதே வெற்றியின் அளவுகோல்” என்று தன் கல்வி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து இளம் வயதில் சாதனை படைத்து இன்று வனத்துறை அதிகாரியாக பயிற்சி மேற்கொண்டு வரும் செல்வி வித்யா அவர்களை வாழ்த்துகிறோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்