Home » Articles » சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…

 
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…


செந்தில் நடேசன்
Author:

கேழ்வரகை மாவாகத் திரித்து பல வகையில் உபயோகிக்கின்றனர். ரொட்டி, கூழ், கலி, புட்டு போன்ற உணவு பதார்த்தங்கள் செய்ய பயன்படுகிறது. அரிசி மற்றும் பயறு வகைகளுக்கு மாற்றாக, 50 சதம் வரை கேழ்வரகைப் பயன்படுத்தினால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் பெருமளவு கிடைக்கிறது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும்.

கேழ்வரகில் உள்ள சத்துக்கள்

கேழ்வரகின் சத்துகளின் மகத்துவம் எல்லோரும் அறிந்ததே! இதன் மூலம் எண்ணில் அடங்கா சத்துகள் கிடைக்கிறது. பல மதிப்பூட்டப்பட்ட ஆரோக்கிய உணவுகள் தயார் செய்யப்படுகிறது. கேழ்வரகில் அதிக கால்சியம், கரையும் நார்ச்சத்து (Soluble Fibre), பாஸ்பரஸ் மற்றும் குறைந்த பூர்த்தியான கொழுப்பு உள்ளது. இதில் உள்ள ஒருவகையான மாவுச்சத்து மலச்சிக்கலைத் தவிர்க்க மிகவும் உபயோகிக்கப்படுகிறது. அவ்வாரான மாவுச்சத்து முளைகட்டிய (Malted) கேழ்வரகில் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இது சிறந்த உணவாகும்.

நகர் வாழ் மக்களிடையே காணப்படும் உணவு பழக்கவழக்கத்தினால் உடல் ரீதியான பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக நீரிழிவு மற்றும் மாரடைப்பு பெரிதும் காணப்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர கேழ்வரகின் பங்கு மிக முக்கியமானதாகும். நீரிழிவு நோயாளியின் இரத்த குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் கொண்டுவர கேழ்வரகின் பங்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றது.

கேழ்வரகில் உள்ள மாவுச்சத்தில் அமைலோபெக்டீன் அதிகமாக உள்ளது. இதை தவிர பிறமாவுச்சத்துக்களும்  அதிகமாக உள்ளது. இதனால் செரிமானம் நிதானமாக நடைபெறுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு விரைவில் உயர்வதில்லை. எனவே நீரழிவு கட்டுக்குள் வருகிறது.

கேழ்வரகில் உள்ள புரதத்தில் குளுட்டலின் எனும் வகை புரதம் பெரிதும் காணப்படுகிறது. இதைத்தவிர கந்தகம் உள்ள அமினோ அமிலங்கள் பாலில் உள்ளதற்கு இணையாக காணப்படுகிறது.

கேழ்வரகில் பூர்த்தியடையாத கொழுப்பும், உடலுக்குத் தேவையான கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே இது மாரடைப்பைத் தடுக்க தகுதியான உணவாக கருதப்படுகிறது.

செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து

செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து என்பது செரிமானத்தின் பொழுது, முழுமையாக செரிமானமாகாத ஒரு வகையான மாவுச்சத்தாகும். இவை இரண்டு வகைப்படும்.

            1.கரையும் தனமையுடையது

            2.கரையா தன்மையுடையது

கெமிசெல்லுலோஸ், பெக்டீன், பசை போன்றவை கரையும் தன்மையுடையது. லிக்னின், செல்லுலோஸ் போன்றவை கரையாத்தன்மையுடையது. இவ்வகையான செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்துகள், காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், வெந்தயம் போன்றவற்றில் உள்ளவை கரையும் தன்மையுடையது. தானியங்களில் உள்ளது கரையா தன்மையுடையது. இவ்வகையான செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்துக்களை உட்கொண்டால் இரத்தத்தின் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இது மலச்சிக்கலையும் குறைக்கிறது. இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்கப் பயன்படுகிறது. ஒருவரின் சராசரி உணவில் 25 – 38 கிராம் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து இருத்தல் அவசியமாகும். அதிக நார்ச்சத்து, குறைந்த சக்தி, குறைந்த கிளைசிமிக் இன்டக்ஸ் உள்ள உணவு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்தும் சர்க்கரை நோயும்

கேழ்வரகில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து 18.6 கிராம் / 100 கிராம் என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைக்க போதுமான அளவாகும். இவ்வாறான நார்ச்சத்து குளுக்கோஸ் உறுஞ்சும் மற்றும் பரவும் தன்மையைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.

அரிசி போன்ற உணவுகளை உட்கொள்ளும்போது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை உடனே உயர்த்துகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகமாகிறது. ஆனால் கேழ்வரகு போன்ற உணவினை உட்கொள்ளும்போது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு உடனே உயர்வது இல்லை. இதன் காரணமாக இன்சுலின் அளவு குறைகிறது. முடிவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது. மேலும் இன்சுலின் சார்ந்த நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் இன்சுலின் தேவை பல மடங்கு குறைகிறது.

இவ்வாறு சீரும் சிறப்பும் மிக்க கேழ்வரகினை உட்கொண்டால் நீரிழிவு நோயின் பாதிப்பு குறைவு என்பது திண்ணம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்