Home » Articles » விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது

 
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது


சுவாமிநாதன்.தி
Author:

சதாரணமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவர். இன்று மிகப்பெரிய மந்திரியாகி விட்டார். பொருட்களை தலையில் வைத்துக் கொண்டு, தெருத் தெருவா தவணைக்கு விற்று வந்தவர். இன்று பெரிய தொழிலதிபராகி விட்டார். பெட்ரோல் பங்க்-ல வேலை பார்த்தவரு இன்னைக்கு பல நிறுவனங்களுக்கு உரிமையாளராகி விட்டார். வாடகை வீட்ல குடுத்தனம் பண்னினவரு, இன்னைக்கு பங்களா கட்டி விட்டார் என சொல்லக் கேட்கிறோம். எப்படி இந்த அசுர வளர்ச்சி, மாற்றம், மலர்ச்சி, சிலருக்கு சாத்தியமாயிற்று? பொதுவாக நல்ல சிந்தனையாளர்களின் நட்பும், வழிகாட்டுதலும் பலருக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.

தோல்விகளைக் கண்டு மனம் தளர்ந்து பாதியிலேயே நிறுத்தி விடாமல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன், தாமஸ் ஆல்வா எடிசன் 1000 வழிமுறைகளில்  சோதித்ததால்தான் அவரால் மின்சார விளக்கை கண்டு பிடிக்க முடிந்தது. முதல் முயற்சியிலேயே உலகத்திற்கு ஒளியூட்டி விடவில்லை. சராசரி மனிதர்களோ, ஓரிருமுறை முயற்சி செய்துவிட்டு கைவிட்டு விடுகிறார்கள். சாதனையாளர்களோ, தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். தோல்வியில் பாடம் கற்கிறார்கள்.

“நான் தேர்வில் சில பாடங்களில் தோல்வியுற்றேன். ஆனால், என் நண்பர் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்றார். இப்போது அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். நான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறேன்” என்கிறார் பில்கேட்ஸ்.

சிலந்தியால் தன் முதல் முயற்சியிலேயே வலை பின்னிவிட முடிவதில்லை. அலட்சியப் படுத்துபவர்களையும், ஆதரிக்க  மறுப்பவர்களையும், கண்டு மனம் தளராமல் எதிர்நீச்சல் போட்டதால்தான், ஸ்காட்லாந்து நாட்டை, ராபர்ட் புரூஸால் மீட்க முடிந்தது. வாஸ்கோடாகாமா தன் லட்சிய பயணத்தில், எதிர்ப்புகளை, விமர்சனங்களை, இடர்களை, இன்னல்களை, பொருட்படுத்தாமல், மன வலிமையோடு தாங்கிக் கொண்டு போராடி  இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். ஆபிரகாம் லிங்கன் முயற்சியின்றி இருப்பதைவிட முயன்று தோற்பது அவமானகரமானதல்ல எனக் கருதியதால்தான் பின்னாளில் வெற்றி பெற்றார்.

11.09.1893 அன்று சிக்காக்கோ-வில், உலக ஆன்மீக மாநாட்டில் பேசுவதற்கு மேடையேறிய விவேகானந்தரை அவரது எளிமையான காவி உடை கண்டு கேலியாகப் பார்த்தவர்கள், அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களைக் கேட்டு மயங்கினர். அளவுக்கு மீறிய மதப்பற்று மூடத்தனமானது, மதவெறியால் உலகம் வன்முறையிலும், இரத்தக்களறியாலும் மிதக்கிறது என்றார். தோல்வியில் பாடம் கற்றுக் கொள்ளத் தவறியவர்கள் வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். சவால்களை வாய்ப்புகளாக எடுத்துக் கொண்டால், சோதனைகள் சாதனைகளாகிறது. தடைகற்கள் படிக்கற்களாகிறது. முட்கள் நிறைந்த பாதைகளை, விநாடிகளைக் கூட விரயமாக்காமல் இடையில், பாதியில் விட்டுவிடாமல், திரும்ப திரும்ப முயற்சி செய்யும் போதுதான் கடக்க முடிகிறது. விடாமுயற்சி வீண்போவதில்லை. அது வெற்றியின் ரகசியம். அது வெற்றியின் திறவுகோல்.

தனிமுயற்சி, கூட்டு முயற்சி, தளராத முயற்சி, இடைவிடாத முயற்சி போன்றவற்றால் நம்மால் மற்றவர்களுக்கும், மற்றவர்களால் நமக்கும் வெற்றி கிடைக்கிறது. நமக்கு சரியான துறை எது என்பதை தேர்வு செய்துவிட்டாலே பாதி வெற்றிதான். பின் போர்க்குதிரை போல பாய்ந்து செல்ல வேண்டியதுதான். ஆழகான சிற்பங்கள், பிராமாண்ட கட்டிடங்கள் எல்லாம் ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்ல. வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர்கள் பலர், மற்றவர்கள் விரயமாக்கிக் கொண்டிருந்த, தூங்கிக் கொண்டிருந்த நேரங்களில் விழித்திருந்து, உற்சாகத்துடன் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தவர்களே.

விடாமுயற்சியின்றி தடைகளைக் கண்டு தளர்ந்து, அரைக்கிணறு தாண்டுவதால் உயர்ந்த காரியங்கள் சாதிக்கப்படுவதில்லை. ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்கு உதவுகிறது. வழி வகுக்கிறது. பாதை அமைக்கிறது. சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டால், டூ வீலர் பேலன்ஸ் பண்ண முடிகிறதல்லவா? தான் தொடங்கிய வேலையை முடிக்காமல் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தியதால் உலகில் பல சக்திமிக்க திறமைசாலி முயல்கள் தோற்கும் போது, மெதுவாக ஓடினாலும், சளைக்காமல் ஓடியதால், நிஜ வாழ்வில் பல ஆமைகள் வெற்றிக்கொடி கட்டுகின்றன. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நம் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பிரச்சனைகளில் கூட வாழ்வதற்கு ஒரு வழியைக் கணடு பிடித்துவிட முடிகிறது. ஒரு கதவு மூடினால், நிச்சயமாக இன்னொரு கதவு திறக்கும். மூடிய கதவையே எண்ணி வருந்தாமல், திறக்கும் கதவை கவனிக்கத் தவறி விடக்கூடாது.

தோல்விகள், சிக்கல்கள், மேடுபள்ளங்களை கடந்து வரும் மனிதனே வரலாற்றில் இடம் பெறுகிறான். அவன் புகழ், உச்சிக்குப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடிவதில்லை. எறும்பு ஊரக் கல்லும் தேயுமல்லவா? விடாமுயற்சியே பல சந்தர்ப்பங்களில் வெற்றியை பிரசவிக்கிறது. அதை விலை கொடுத்து வாங்க முடியாது. நதிகள் இடைவிடாத பயணத்தால்தான் சமுத்திரத்தை அடைகின்றன. முயற்சியைக் கைவிடும் பலருக்கும் தெரிவதில்லை எவ்வளவு நெருக்கமாக வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்பது. தடை, துன்பம், சோகம், துயரம், நோய், இறப்பு அனைவருக்குமே பொதுவானதுதான். சேற்றில்தான் செந்தாமரை முளைக்கிறது. நாளை உலகம் அழியப்போகிறது என்றாலும் கூட இன்று செடியை நடுபவர்தான் விடாமுயற்சியாளர். இடைவிடாத முயற்சியே பல வெற்றிப்பூட்டுக்களை திறந்திருக்கிறது. தடைகளால் நாம் உடைந்து போகிறோமா, அல்லது உருவாக்கப்படுகிறோமா என்பதுதான் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. அழுகையும், சோகமும், விரக்தியும் நம்மை மயானத்திற்குதான் அழைத்துச் செல்கின்றன.

வெற்றிக்குப் போராடுவது மல்யுத்தம் செய்வது போன்றது. எதிரி சோர்வடையும் வரை போராடினால்தான் நமக்கு வெற்றி. நம் தளராத முயற்சிதான் நம்மை வாழ்வில் எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எப்போதுமே தோல்வி நமக்கு இரண்டு விஷயங்களை சொல்கிறது. ஒன்று, நம் தோல்விக்கு காரணமான தவறு. இரண்டாவது, புதிய கோணத்தில், புதிய வழியில், புதிய முறையில் மீண்டும் முயற்சிக்க அரிய வாய்ப்பைத் தருகிறது. வெற்றியும், விடாமுயற்சியும் நன்றாகவே பயணிக்கின்றன. தோல்வி தவறானதோ, தாழ்வானதோ அல்ல. அது வெற்றிக்கு நாம் கொடுக்கும் விலை. நமது வாழ்க்கைப் படகை, வெற்றிக் கரைக்கு கொண்டு சேர்த்திட, விடாமுயற்சி என்ற துடுப்பே உதவுகிறது. கறையேறிய பின் நாம் மெருகேறி மிளிர்கிறோம். வெற்றியும், விடாமுயற்சியும் இரு துருவங்கள் அல்ல. தாயின் கருப்பையில் கட்டுண்டு இருந்தவர்கள்தான் நாம். மாணவப் பருவத்தில் பள்ளி ஆசிரியரின் பிரம்புகளைக் கடந்தவர்கள்தான் நாம். நெருப்பும், தீவிரவாதமும், அணுகுண்டுகளும் நிறைந்த உலகில்தான் வெற்றியைத் தேடிய நமது இனிய பயணம் துவங்குகிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்