Home » Articles » உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது

 
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது


சொக்கலிங்கம் சிவ
Author:

பிறக்கும்போது  தாலாட்டு. இருக்கும்போது பாராட்டு. இறக்கும் போது நீராட்டு. இதுவே வாழ்க்கைப்பாடம். ‘ஒரு குழந்தைக்கு கதகதப்பான அரவணைப்பு எப்படி அவசியமோ அதுபோலவே பாராட்டுதல்களும் அவசியமாகும். அது பண்பையும். பாசத்தையும் அதிகரிக்கும். தேவைப்படும் அளவுக்கு பாராட்டுவது என்பது மலர்களுக்கு சூரியன் எப்படியோ அப்படி அவசியமானது’. ‘யாரையும் அவரது முகத்தருகே பாராட்டாதீர்கள். அதுபோல் அவர்களது முதுகுக்குப்பின்னே திட்டாதீர்கள்?’

யாரை எப்போது பாராட்டினாலும். எந்தக் காரணத்துக்காக பாராட்டுகிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். வீண்புகழ்ச்சிக்கும், பாராட்டுக்குமிடையேயான வித்தியாசம் அப்போதுதான் தெரியும். ‘பாராட்டுதல்கள் என்னை வெட்கப்பட வைக்கின்றன,  காரணம் நான் அவற்றுக்காக ரகசியமாகப் பிச்சை எடுக்கிறேன்’ என்பார் இரவீந்திரநாத தாகூர். நாம் பிறரைப் பாராட்டும் போது நாமும் பாராட்டப்படுகிறோம். பாராட்டின் பரவசத்தில் முன்னேற்றத்தின் மூலவித்து இருக்கிறது.

வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றைக் கடக்க முயன்றன ஒரு தேளும். தவளையும். திடீரென ஒரு யோசனை தேளுக்கு வந்தது. “தவளையாரேÐ என்னை சுமந்து சென்று மறுகரையில் சேர்ப்பீர்களா? நாம் இருவருமே கடந்துவிட வாய்ப்பு கிடைக்குமே?” “நீ கூறுவது சரிதான்!, ஆனால் நீ என்னை கொட்டி விடுவாய் என்று தயக்கமாக இருக்கிறது” என்றது தவளை. தேளின் தெளிவானப் பேச்சு தவளைக்குப் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டது. தவளையை ஏற்றிக் கொண்டது.

தேளினை ஏற்றிக் கொண்டு நீச்சல் போட்டபடி சென்று கொண்டிருந்த தவளை இப்போது பாதி ஆற்றினைக் கடந்து விட்டது. திடீரென கோணி ஊசியால் ஆழமாகச் சொருகி எடுத்தது போன்றவலி. நுரைதள்ளி இறக்கும்முன் கடைசி மூச்சை விட்டவாறு கேட்டது தவளை. “கொட்டமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னாய். இப்போது பேச்சு மாறியதேன்? என்னை மன்னித்துக் கொள். கொட்டுவது என் சுபாவம்!” மனிதரிலும் தேள் உண்டு. அவரிடமிருந்து தள்ளி எட்ட நின்றாலே சிகரத்தில் சிம்மாசனம் கிடைக்கும்.

அரசன் சித்தார்த்தனிடம், புத்தனாக துறவிக்கோலத்தில் இருந்தபோது அவன் மனைவி யசோதை கேட்ட கேள்விகள் உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது!அப்படி என்னதான் அவள் கேட்டிருப்பாள்?

அரசன் சித்தார்த்தன். புத்தனாக மாறியபின் துறவிக்கோலத்தில், தன் ஊரையும் கடக்க முயன்றபோது, புத்தனை தடுத்த மனைவியும், மகன் ராகுலும், ஐந்து நிமிடம் மட்டும் அவரை தனியாக சந்திக்க அனுமதி கேட்டார்கள். ஒப்புக்கொண்டார் புத்தரும். தனியறையில் மனைவி, மகன் ராகுல், புத்தர் மூவரும் பேசிய பின் குறிப்பிட்ட ஐந்து நிமிடத்தில் புத்தர் வெளியேறினார். மூவரும் என்ன பேசியிருக்க முடியும்? என்று வரலாற்றின் 1000 பக்கங்களுக்கு மேல் வரலாற்று ஆசிரியர்கள் பலகோணங்களில் சித்தரித்திருக்கிறார்கள்.

 புத்தனிடம் மனைவி என்ன கேள்வி கேட்டிருக்கக் கூடும். எப்படி கேட்டிருப்பாள்? எதைக் கேட்டிருப்பாள்? என்று ஒரு முடிவுக்கு வந்தால், மிகவும் ஆழமாக மூன்று கேள்விக்களைக் கேட்கும் அளவுக்குத்தான் ஐந்து நிமிடத்தில் முடியும் என்று வைத்துக்கொண்டால் கூட மூன்று கேள்விகளும் எப்படி கேட்டிருக்கக் கூடும்? அப்படியென்றால் அந்த மூன்று கேள்விதான் என்னவாக இருக்கும்? முதல் கேள்வி ‘ஏன் சென்றாய்?’ இரண்டாவது கேள்வி ‘என்னிடம் சொல்லாமல் ஏன் சென்றாய்?’ மூன்றாவது கேள்வி ‘ஏன் நடுநிசியில் சென்றாய்?’ நீ போகும் செய்தியை ஒருவேளை என்னிடம் சொல்லி இருந்தால் அழுது புலம்பி பயணத்தை தடைப்படுத்தி விடுவேனோ என்றா நினைத்தாய் கௌதம புத்தா? அப்படியென்றால் நீ அவ்வளவு பலவீனமானவனா? ஆசையை அறவே துறந்த புத்தன் என்று உலகம் உன்னை போற்றுகிறதே! இப்போது சொல்: நீ ஆண். நான் பெண். ஒரு வேளை பெண்ணாகிய நான் நடுநிசியில் இரவோடு இரவாக சென்றிருந்தால் ஆணாகிய நீ என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாய்? உலகம் தான் என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கும்? புத்தா! சொல்! இப்படி கேட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். ஏன் சென்றாய்? ஏன் சொல்லாமல் சென்றாய்? ஏன் நடுநிசியில் சென்றாய்? இவற்றின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில்கள் இன்றுவரை புரியாத புதிராகவே, மர்ம முடிச்சாகவே இருக்கிறது. பதில் எப்போது கிடைக்கும்?

நகைக்கண்ணாடி பெட்டியில் கண்ணைப் பறித்த வைரக்கல்லைப் பார்த்து தெருவில் கிடந்த கருங்கல் பொறாமைப்பட்டது. எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஒரு கல்தானே? என்று ஓலமிட்டது. தெருவோரத்தில் கிடந்த கடப்பாறைக் கூறியது. ஏÐ கருங்கல்லேÐ காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால் இந்த வைரக்கல்லோ அப்படியல்ல! நிறைந்து வளர்ந்து வைரமாகும்வரை வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே மௌனங்களால் உருவாக்கி கொண்டிருக்கிறது. அப்படியென்றால்? என்று இழுத்தது கருங்கல். கடப்பாறைசொன்னது… “நிறைவாகும் வரை மறைவாக இரு” என்று கூறும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் இறுதிவரிகளில்தான் வாழ்க்கையை வசப்படுத்தும் வைரவரிகள் மின்னுகின்றன.

நான் இன்றைய குஜராத் சோகத்தை பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாள் 2001ல் ராணி இதழில் பூமிக்குத் தாகமா? என்றதலைப்பில் எழுதியதை கீழே கொட்டிக்கிடக்கும் கவிதை வரிகளாக பிரசுரித்தார்கள் அப்போதும் அந்த சோகம் ஒரு குலுக்கு குலுக்கியது.

“எனக்குள் ஆயிரம் சோகம் – அட

இப்படியா பூமிக்குத் தாகம்!

தனக்குள் சமாதி சரியா? – எம்மை

சாகடிப்பதே உந்தன் குறியா!

பொறுமைக்குப் பூமியை சொல்லுவார் – உந்தன்

பூகம்ப முயற்சியை எள்ளுவார்!

வெறுமையாய் எம்மினம் கிடக்குதே – உயிர்

வீரமாய் மானமும் துடிக்குதே!

காந்திய மண்ணுக்கா சோதனை? – எங்கள்

கண்களும் கக்குமே வேதனை!

ஏந்திய உயிர்கள் எத்தனை – உன்

 இடிபாட்டில் கிடக்குதே சாதனை!

சதிராடும் தாயே சாதனையா? – உன்

சரித்திரத்தில் இத்தனை வேதனையா?

புதிராய் அங்கே வெடித்தாய் – குஜராத்தை

பொசுக்கியே கொள்ளை அடித்தாய்!

நம்பிக்கைத் துடுப்பை எடுப்போம் – நல்ல

நல்ல உதவி தொடுப்போம்!

தும்பிக்கை போன்றேஎழுவோம் – துயர்

துடைத்திட அன்பை பொழிவோம்!”

கவிஞன் என்பவன் காலத்தின்  கண்ணாடி. நடக்கும் விஷயங்களை அப்படியே படம் பிடிப்பவன். மானுடம் அழைக்க பாடிவந்த பாட்டுச் சிறுத்தை பாரதிகூட இயற்கையை கொஞ்சியும் இருக்கிறான். சீற்றத்தைக் கண்டு பொங்கியிமிருக்கிறான். இயற்கையின் அங்கம்தானே மானுடம். மானுடம் பாடுவோம்! புதிய பூபாளக் கீதம் தேடுவோம்!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்