Home » Articles » பேச்சுப் பட்டறை பேச்சுக் கலை

 
பேச்சுப் பட்டறை பேச்சுக் கலை


செல்வராஜ் P.S.K
Author:

மக்களாட்சி, தேசியம், பொதுவுடைமை, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், விழிப்புணர்வு போன்ற பண்புகள் ஒரு நாட்டில் வளர்வதற்கும், மலர்வதற்கும் பெருந்துணையாக இருப்பது ஒரு தனிமனிதனின் தனித்திறமை வாய்ந்த பேச்சுக்கலையாகும்.

பிறருக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அப்பாவி மக்களின் அறியாமை இருளை அகற்றவும், மனிதனை மேன்மை அடையச் செய்யவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், தன்வசப்படுத்தவும், ஒரு தேசத்தின் குடியரசு நிலைக்கவும், இறையாண்மை பாதுகாக்கப்படவும்  தேவையான உரத்தையும், உறுதியையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் நமக்குக் கொடுப்பது மேடைப் பேச்சாகும்.

பேச்சுக் கலைக்கென்று இலக்கணமும், பண்புகளும், வகைகளும், வளர்ச்சியும் பல உள்ளன.

ஒரு சிறிய அறிவிப்பு, மேடைப் பேச்சு, இலக்கியப் பேச்சு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிறப்புரை, பரப்புரை, பாராட்டுரை, வாழ்த்துரை, வரவேற்புரை, தொகுப்புரை, பேருரை, தலைமையுரை, எழுச்சியுரை,  நிறைவுரை, ஏற்புரை, நன்றியுரை, கருத்தரங்க விவாதம், சமய சொற்பொழிவு, நகைச்சுவை மேடை, தொலைக்காட்சி விவாத மேடை, வானொலிப் பேச்சு, ஆன்மீகச் சொற்பொழிவு, இன்னிசைப் பட்டிமன்றம், பாட்டு மன்றம், அரசியல் பேச்சு, கண்டன உரை, புரட்சிகரமான போராட்ட முழக்கம், எழுச்சிகரமான ஆர்ப்பாட்ட முழக்கம், உண்ணாவிரத உரை, புத்தகத்திருவிழா உரை, நேர்காணல் பேச்சு, தொலைக்காட்சிப் பேச்சு, திருமணநாள் மேடைப் பேச்சு எனப் பலவகைகளையும், பல வடிவங்களையும் கொண்டுள்ள அற்புதமான கலைதான் பேச்சுக்கலை என்பதாகும்.

அனைவருமே “சிறந்த பேச்சாளர்” ஆக வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் அது நம்மவர்கள் விரும்பியபடி அப்படி நடந்துவிடுவது இல்லை. பலருக்கும் அது ஒரு கனவாகவே உள்ளது.

தன்னிடம் உள்ள அறிவு, ஆற்றல்களால் இயற்கையாகவே சிறந்த பேச்சாளர்களாகத் திகழ்பவர்களும் உண்டு.

பல்வேறு வகையான பயிற்சிகள் செய்தபின் சிறந்த மேடைப் பேச்சாளராக இந்த உலகை வலம் வருபவர்களும் இப்பூமியில் உண்டு.

இருந்தபோதிலும் உலகில் பல கோடிபேர் மேடைப் பேச்சைக் கேட்பவர்களாகத்தான் இருக்கிறோம். பல நூறு பேரால் மட்டுமே சிறந்த பேச்சாளராக சிறந்து விளங்க முடிகிறது உலகில்.

மேடைப்பேச்சை ரசித்து, ருசித்துக் கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஒருவர் நாவன்மையுடைய சிறந்த பேச்சாளராகப் பல தகுதிகள் உள்ளன.

தொடக்கம், உடற்பகுதி, முடிவு போன்றவை இக்கலையின் அடிப்படை அமைப்பு முறைகளாகும். சொல் தடுமாறாமல் பேசிப் பழகும் பயிற்சி, பார்வையாளர்களை எதிர்கொள்ளும் ஞானச்செருக்கு, பல துறை அறிவு, தினமும் தொடர்ந்து படித்தல், நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்தல், நடைமுறைச் செய்திகளை நாள்தோறும் சேகரித்தல், சேகரித்தவைகளை முறைப்படி குறித்து வைத்தல், நாள்தோறும் நடக்கும் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள பல்வேறான நாளிதழ்கள், தகவல் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்தல், வார இதழ்களையும், வாழ்க்கைப் பற்றிய புத்தகங்களையும் தொடர்ந்து படித்தல், தன் தேச வரலாற்றையும், உலக வரலாற்றையும் நன்கு படித்தறியும் தனியாத ஆர்வம், மற்ற பேச்சாளர்களின் பேச்சை நன்கு கேட்பது ஆகியவை ஒருவர் சிறந்த பேச்சாளராவதற்கான தகுதிகள் ஆகும். இக்கûலைக்கென்று தகுதிகள் உள்ளதைப் போல் பல பண்புகளும் உண்டு.

நாவன்மை, கருத்துத் தெளிவு, சுருக்கம், தன் கருத்தில் என்றும் உறுதி, நூல் வழிக் கற்றது மட்டுமின்றித் தன் சுயசிந்தனைக் கருத்துக்களை முன் வைத்தல், கேட்பவர்களுக்குப் புரியும் எளிய மொழிநடை, நகைச்சுவை உணர்வு, அவையறிந்து பேசுதல், நேரமறிந்து பேசுதல், உண்மையை மட்டுமே பேசுதல், ஜாதி, மத, மொழி, இன, தூண்டல்களும் வேறுபாடுகளும் இன்றிப் பேசுதல், பிறரது கருத்துக்களை ஏற்கும் மனப்பான்மை, பிறரது நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடித்தல் போன்றவை பேச்சாளனின் தனிச்சிறந்த பண்புகளாகும்.

மனிதன் பேசத்தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பேச்சுக்கலை தனிக்கலையாகவே வளர்ந்து கொண்டே வருகின்றது.

“பேச்சுக்கலை” என்பது ஆற்றல் வாய்ந்த கலைகளுள் ஒன்றாகும்.

மன்னர் ஆட்சியை, ஏகாதிபத்திய ஆட்சியை, ஆங்கிலேய ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, முடியாட்சியை வீழ்த்தி மக்களாட்சியை மலரச்செய்த பெருமைக்குரிய கலை “பேச்சுக்கலை” ஆகும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியல்வாதிகளின் ஊழல்களையும், அநீதிகளையும், நிர்வாகத் திறமை இன்மையையும் வெளிப்படுத்த ஆளுங்கட்சியை எதிர்கட்சியாகவும், எதிர்கட்சியை ஆளுங்கட்சியாகவும் மாற்றி அகற்றி அமரச் செய்யும் பெருமைமிகு கலைப் பேச்சுக்கலையாகும். ஜனநாயகத்தின் மிகச்சிறந்த மக்கள் பாதுகாப்புப் பெட்டகமாக விளங்குவது பேச்சுக்கலையே ஆகும்.

இலக்கியம், அரசியல், சமயம், சமுதாயம், பொருளாதாரம், அறிவியல், வாழ்வியல், ஆன்மிகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மேடைப்பேச்சும், பேச்சுக்கலையும் இன்று மிகவும் செல்வாக்குப் பெற்றுவிட்டன.

மக்களின் வாழ்க்கை முறைகளையும், நமது நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாத்து ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட சமுதாயத்தை வடிவமைத்துத் தரும் பேராற்றல் பெற்றது பேச்சுக்கலையே ஆகும்.

அதுமட்டுமல்லாமல், நாவன்மையே மூலதனாகக் கொண்டு நாட்டையே ஆட்டிவைக்கும் கலையும் இக்கலையாகும். தேசியம், மக்களாட்சி, பொதுவுடைமை என்னும் மூன்று கொள்கைகளும் உலக வரலாற்றில் செல்வாக்குப் பெற்று வளர்ந்த காலகட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களின் வெற்றிக்கு முழு முதற்காரணமாக அமைந்தது இக்கலையே.

“ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

வார்த்தை பதினாயிரத்து ஒருவர்”

என்பது ஒளவையாரின் வாக்காகும்.

கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறுபேரில் ஒருவருக்கே வாய்க்கும்.

ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராகத் திகழ்வர். ஆனால் பேச்சாளராக இருப்பவர்களில் பதினாயிரம் பேரில் ஒருவரே என்று ஒளவையார் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சு என்பதும் சொல் என்பதும் கருத்தை விளக்கும் கருவிகள் ஆகும்.

மனிதனைப் பேசும் விலங்கு என்று குறிப்பிடுவர். பேச்சுத்திறன் தான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

இன்றைய யுகத்தை “அணுயுகம்”, “விண்வெளி யுகம்”, “கணினி யுகம்”, “தகவல் தொடர்புப் புரட்சி யுகம்”, “அறிவியல் யுகம்” என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய யுகத்தைச் “சொற்பொழிவு யுகம்’ எனக் குறிப்பிடுவதே மிகவும் சரியானதும், பொருத்தமுடையதுமாகும்.

இந்த மனித சமுதாயம் பெற்ற மகத்தான சாதனம் “பேச்சு” ஆகும். கருத்தும், தெளிவும் இக்கலைக்கு மிகவும் இன்றியமையாதனவாகும்.

கருத்து சுருங்கும்போது தான் பேச்சு சுவைக்கும், இனிக்கும்.

கருத்தில் தெளிவில்லாத போது தான் சொல்லில் வெற்று எதுகை மோனையும், அலங்காரமும் தோன்றும்.

மேடையில் பேசும் பேச்சாளர்களுக்குக் கருத்தே முதலில் நினைவுக்கு வர வேண்டும்.

அதற்குப் பின்பு தான் சொன்ன அக்கருத்தினை விளக்கும் சொல்லைப் பற்றிய நினைப்பு வர வேண்டும். இதுதான் மேடைப் பேச்சுக்கலையின் அடிப்படை இலக்கணமாகும்.

எனவே தன் கருத்தில் தெளிவும், சொல்லில் சிக்கனமும், மேடைப் பேச்சில் இன்றியமையா இலக்கணமாகும்.

பேச்சின் அடிப்படை தெளிவாகும். ஆகையால் சொல் தெளிவும், கருத்துத் தெளிவும் மிக முக்கியமானவையாகும். எளிமையான சொற்களைக் கொண்டதாகவும், கருத்தாழ முடையதாகவும், தெளிவுடையதாகவும், கருத்து விளக்கமுடையதாகவும், பேசும் பேச்சு வெற்றியடையவும், பல கைதட்டல்களைக் கொடுக்கும்.

மற்றவர்கள் கேட்க, நாம் பேசுவது என்பது ஒரு கலை.

இக்கலை பேராற்றல் வாய்ந்தது

முத்தொழில் புரியும் வல்லமையும் வாய்ந்தது

பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை

மேடைப்பேச்சு நாட்டை வளப்படுத்தும்

வாக்காளரைப் பண்படுத்தும்

என்று திரு.வி.க. சுட்டிக்காட்டியுள்ளார்.

“நா அசைத்தால் நாடசையும்” எனும் தொடர் பேச்சுக்கலையின் இலக்கணத்தையும், தொடர் பேச்சுக்கலையின் இலக்கணத்தையும், சிறப்பையும் நன்றாக விளக்குகின்றது.

மேடையில் பேச்சாளர்கள் கட்டளையிட்டால் அக்கட்டளையை மார்தட்டி, தோள்கொட்டி எதுவும் செய்யத் தயாராக இருக்கும் நாட்டு மக்களையே இத்தொடர் காட்டுகின்றது.

இதற்குப் பேச்சாளர் கொள்கை உறுதி படைத்தவராகவும், சலியாத உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத உள்ளம், புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மயங்காதவராகவும், நேர்மையானவராகவும், தியாக மனப்பான்மையும், அர்ப்பணிப்பு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். மேடைப்பேச்சு மக்களிடையே உற்சாகத்தையும், ஊக்கத்தையும், புத்துணர்வையும் ஊட்டுகின்றது. தனிமனித சுதந்திர உணர்வை உண்டாக்குகின்றது.

மேடைப் பேச்சுக்கலை வளர வளர ஒரு நாட்டில் மக்களாட்சியும், ஜனநாயகமும் வாழ்வு பெறும். ஆள்பவர்கள், ஆளப்பெறுபவர்கள் ஆகிய இருசாரர்களுக்கே மேடைப்பேச்சு மூலதனமாக அமைந்திருக்கிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2014

என் பள்ளி
எழுந்து வா… இளையவனே!
தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை
கவலைப்பட ஒன்றுமில்லை
பத்து நிமிடம் பத்து வருடம்
வீட்டில் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்
வெற்றி உங்கள் கையில் – 10
பேச்சுப் பட்டறை பேச்சுக் கலை
இயற்கை
முயற்சி திருவினையாக்கும்
ஸ்வீட் கார்ன்
பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்
வாழ்க்கை
உலகமே வியந்தது! மங்கள்யான் செவ்வாயை அடைந்தது!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்