Home » Articles » விழித்தெழும் நேரம் வந்துவிட்டது

 
விழித்தெழும் நேரம் வந்துவிட்டது


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

மனித இனம் உட்பட பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தேவைக்கும் அதிகமாகவே வளங்களை இயற்கை அக்கறையோடு காத்து வைத்திருக்கும் ஒரு அமுதசுரபி தான் பூமி. இதெல்லாம் தங்களுக்காக மட்டுமே என்று மனிதன் தப்புக்கணக்கு போடுகிறான். சுயநலமும், தீயசிந்தனைகளுமாக நிறைந்த மனிதன் பேராசையோடு இந்த இயற்கை வளங்களை எல்லாம் சுருட்டி, சுரண்டி, கொள்ளையடித்து அனுபத்துத் தீர்க்கிறான். திறமையுள்ளவன் வாழ்ந்தால் போதும் என்ற அதர்மமான தத்துவம் தான் அவனுக்கு முக்கியம். அவனுடைய கொடுமைக்கு இரையாவது மண்ணும், மரங்களும், காற்றும், நீரும் மட்டும் இல்லை. மனிதன் உட்பட இருக்கும் எல்லா தாவர, விலங்கு உயிர்களும் தான். பிரபஞ்சம் என்ற மாபெரும் ஆற்றல் கருணையோடு கை நீட்டி அளித்திருக்கும் வளங்களை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக சுரண்டி எடுத்துத் தீர்க்கும் சுயநலவாதிகளுக்குத் தங்களுடைய இதே மாதிரியான வாழ்க்கையும், வளமும் எப்போதும் எந்தக் காலத்துக்கும் தொடராது என்று தோன்றுவது இல்லை. பல சமயங்களிலும் நடக்கும் இயற்கை பேரிடர்கள் இயற்கை, மனிதனுக்கு தரும் தண்டனை என்பதை நம்புபவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒன்று…

மனிதன் இயற்கையை கொள்ளையடிப்பதில் ஒரு நெறிமுறையைக் கடைபிடிப்பது அவனுக்கே நல்லதாக இருக்கும். செய்யும் சூழல் சீர்கேடுகளுக்கு அவனே வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டு வரும் பேரிடர்கள் ஏராளம், ஏராளம். இதுபோன்ற பேரிடர்களுக்கு இந்தியா பல நேரங்களிலும் சாட்சியாக இருந்துள்ளது.

பைபிளில் பிரளயம் பற்றிய கதை ஒரு கதை என்றாலும் அது சொல்லும் சிறப்பான செய்தி கவனிக்க வேண்டியதாகும். படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புகள் தீயவர்களாவதைக் கண்டவுடன் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. கடவுளோடு கடவுளின் பாதையில் நடந்தவனும், தன் வாரிசுகளில் களங்கம் இல்லாதவன் என்று சொல்லும் அருகதை பெற்றவனுமான நோகாவையும், அவனுடைய குடும்பத்தையும், வம்சத்தை நிலைநிறுத்துவதற்கான தேவையான பறவை, விலங்குகளையும் மட்டும் காப்பாற்றவும், மிச்சம் இருப்பதை எல்லாம் அழித்த கதை தான் அது.

எந்தக் காலத்துக்கும் மனித இனத்துக்குத் தேவையான ஒரு முன்னெச்சரிக்கை இந்தக் கதையில் இருக்கிறது. சமுதாயம் சீர்கெட்டுப்போனால் நாசம் ஏற்படுவது உறுதி என்பதே அது. வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் இயற்கைக்கு எதிரான துரோக செயல்கள் தான் இன்றைய காலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். வயல்களை அழித்து அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. குன்றுகளையும், மலைகளையும் இடித்துத்தள்ளி அங்கே வானளாவ கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. நதிகளை சுரண்டியும், காடுகளை வெட்டிச் சாய்த்தும் அங்கெல்லாம் சுற்றுலா மையங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வளர்ச்சி, முன்னேற்றம் என்றால் இதுதான் என்ற முரட்டுத்தனமான வழிகாட்டுதல் தான் இன்றுள்ள புதிய சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் எதிராக விரல் நீட்டி சுட்டிக்காட்டுபவர்களை சுற்றுச்சூழல் காவலர்கள் பைத்தியக்காரர்கள் என்று பரிகாசத்தோடு அவர்கள் கூக்குரல் எழுப்பி அவர்கள் கேலி முரசு கொட்டுகிறார்கள்.

எல்லாம் லாபத்துக்காக தான் என்றாகிவிட்டது. இன்றைக்கு பொருளாதார உலகம் எடுத்துச் சொல்லும் புதிய பொருளாதார தத்துவமும், கோட்பாடும்… பூமியும், காற்றும், நீரும், வெளிச்சமும், சாலைகளும், கல்வியும், சுகாதாரமும் விற்பனைச் சரக்குகள் என்ற பொருளாதாரத் தத்துவத்தை அவர்கள் சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக நாம் அதை கற்றுக்கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும் செய்து கொண்டிருக்கிறோம். அரசியலிலும், உயர்ந்த பதவிகளிலும் இதற்கு புகழ் பாடுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் எல்லா தீயசக்திகளுக்கும் ஜனநாயகத்தையும், சட்ட நெறிமுறைகளையும் சவால் விட முடிகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். மனிதநேயம் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்களால் சிறிய சிறிய காரியங்களாவது நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இயற்கையைக் காப்பாற்றுவதற்காக, மனித இனம் உட்பட அண்டத்தில் இருக்கும் எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்காக, சட்டத்தின்படி நடப்பதை உறுதி செய்வதற்காக செயல்திறன் உடையவர்கள் விழித்து எழுந்திருக்க நேரம் வந்துவிட்டது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2014

என் பள்ளி
வெற்றியின் ரகசியம்
அச்சமில்லை… அச்சமில்லை……
மரணம் தீது
நீ உன் தலைமுறைக்கு ஒரு அடையாளத்தை விட்டுச்செல்!
ஒழுங்குடன் வேலையைச் செய்
உங்களுடைய வலிமையை உணருங்கள்
பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்
விழித்தெழும் நேரம் வந்துவிட்டது
குழந்தைகள் நலன்
வெற்றி உங்கள் கையில் – 9
திருப்பம்
தோல்வியிலிருந்து மீண்டெழுக
தன்னம்பிக்கை மேடை
பயணங்கள் இனிதாகட்டும்! பலன்கள் பரவலாகட்டும்!!
உள்ளத்தோடு உள்ளம்