– 2014 – July | தன்னம்பிக்கை

Home » 2014 » July (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  என் பள்ளி

  N. கபில் சுப்ரமணியம்

  “காக்கா கூட்டம்”

  கல்விக்கு வயதில்லை, கற்றதற்கு தீங்கில்லை” என்று சொல்வார்கள். எந்த வயதிலும் கல்வி படிக்கலாம், கல்வி கற்றவன் நிச்சயம் வாழ்வில் தோற்க மாட்டான். அந்த வகையில், தான் கற்றகல்வியின் அருமை பெருமைகளை நம்மோடு பகிர்கிறார் ‘பிராண்ட் ஃபேக்டரி’ நிறுவனத்தின் மேலாளர் திரு. N. கபில் சுப்ரமணியம் அவர்கள்.

  திருநெல்வேலி மாவட்டம், கீழமுந்நீர் பள்ளம் என்றகிராமம் தான் என் ஊர். பெற்றோர் திரு. நடராஜன், திருமதி. மறைமலைச்செல்வி. அண்ணன் திரு. ஸ்மித்தோன். மனைவி திருமதி. சந்தியா. என் அப்பா அரசாங்கப்பணியில் இருந்தார். ‘சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி, பாளையங்கோட்டையில் பள்ளிக் கல்வியைப் பெற்றேன். இந்தப் பள்ளி, பாடத்தைவிட ஒழுக்கத்தை தான் மாணவர்களுக்கு முதலில் கற்றுக்கொடுத்தது. பக்தி, யோகா போன்றவை பள்ளிப்பருவம் முதலே போதிக்கப்பட்டு மனம் பண்படுத்தப்படுகிறது. காலையில் பாடங்களைத் துவங்கும் முன் ஒழுக்கப்பாடல்கள் போதிக்கப்பட்ட பின்னர் தான் பாடங்களை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.

  எதையும் அடித்து சொல்லித்தருவதைவிட அன்பால் அரவணைத்து சொல்லிக் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே நாங்களும் ஈடுபாட்டோடு பள்ளிக் கல்வியை அனுபவித்தோம்.

  எனக்கு படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் அதிகம். சான்றிதழ்களும், பாராட்டுகளும் நிறைய பெற்றேன். பாராட்டு எதற்காக வாங்குகிறோம் என்பதைவிட யாரிடம் வாங்குகிறோம் என்பதே முக்கியம் என நினைப்பவன் நான்.

  “ஒருவர் தன் காலணியைக் கழட்டி விடுவதிலும் கூட அவரது ஒழுக்கமும், பண்பு நலன்களும் தெரிந்துவிடும்” என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரைகளைக் கேட்டு வளர்ந்ததால் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடனேயே வளர்கிறார்கள். இன்னமும் நான் அதைக் கடைபிடித்து வருகிறேன்.

  பள்ளியைப் போலவே ஒழுக்கத்திற்கும், மரியாதைக்கும் பெயர் பெற்ற கல்லூரி பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரி. அங்கு நான் B.Sc. Computer Science பட்டம் பெற்றேன். அக்கல்லூரியில் பெற்ற வாழ்க்கைப்பாடம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வழிகோலியது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களைச் சுற்றுப்புறச் சுகாதாரம் என்று கிராமப்பகுதிகளுக்கு கூட்டிச் செல்வார்கள். அதில் சிறப்பாக பணிபுரியும் மாணவருக்கு சான்றிதழ்கள் கொடுப்பார்கள். அப்படி என் தலைமையிலான குழு வெற்றி பெற்றது. அப்போது நான் ஆற்றிய சமூகப்பணி எனக்கு மிகப்பெரும் திருப்தியை ஏற்படுத்தியது.

  இறுதியாண்டு மாணவர்களுக்கு மாணவர் தேர்தல் நடைபெறும். அப்பொழுது என் நண்பர்களும், மற்றமாணவர்களும் என்னைத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இந்த தலைவர் பதவி என்னை மிகுந்த பொறுப்புள்ளவனாக மாற்றியதை உணர்ந்தேன். பொறுப்பிற்கு வந்தவுடன் பிரச்சனைகளை அறிந்து அதைச் சரிசெய்ய குரல் கொடுத்தோம். ரத்த தான முகாம், புற்றுநோய் விழிப்புணர்வு போன்றவற்றை நடத்தினோம். பொதுமக்களே எங்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கூறும் அளவிற்கு எங்களது சேவை விரிந்து செயல்பட்டது. இப்படி அணுகியவர்களின் தேவைகளை நாங்கள் சரிசெய்தும் கொடுத்திருக்கிறோம்.

  எங்கள் குழுவில் 24 பேர் இணைந்திருந்தோம். ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் இருந்தது. அவை எனக்கும் பிடித்திருந்தது. எங்கள் கல்லூரியில் துறைத்தலைவராக இருந்த திரு. ஜோதிகுமார் அவர்கள் மாணவர்களுக்கு சிறந்த ரோல் மாடலாக இருந்தார். மாணவர்களுடன் எப்போதும் நட்புணர்வுடன் பழகுவார்.

  “காக்கா கூட்டம்” என்றஅமைப்பை என் நண்பர்களின் உறுதுணையுடன் தொடங்கினேன். இந்த அமைப்பை முதலில் எப்படி தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது என்றயோசனை இருந்தது. அப்பொழுது பள்ளியிலிருந்து தொடங்குவதன் மூலம் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என அங்கிருந்து ஆரம்பித்தோம்.

  “படித்து முடித்த புத்தகங்களை வீட்டிலேயே வைக்காமல் மற்றவர்களுக்கு அதை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் புத்தகங்களை அடுத்தகட்ட மாணவர்கள் பெறுவதன் மூலம் சமூக மாற்றத்திற்கு நல்ல பலனாக அமையும். அப்படி நிறைய சமூக ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களை எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். புத்தகங்களுடன் அவர்கள் கொடுத்த கருத்துக்களும் எங்களை வெகுவாகக் கவர்ந்தன. மாணவர்கள் மேலும் மேலும் நிறைய புத்தகங்களைக் கொடுத்து எங்களது பணியையும் ஊக்கப்படுத்தினார்கள்”.

  “காக்கா கூட்டம்” அமைப்பிற்கு ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.

  •     ஆர்வலர்களும், ஆர்வம் உடையவர்களும் முடிந்த அளவிற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த புத்தகங்களைக் கொடுத்து உதவ வேண்டும். இப்புத்தகங்களை மாணவர்கள் படித்த புத்தகங்கள், தேவையில்லாத புத்தகங்கள் என ஒதுக்கும் புத்தகங்களை மட்டும் கூட அனுப்பினால் போதுமானது. புத்தகத்தின் மதிப்பை ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும்.
  •  கல்வியை ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு உகந்ததாக எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதை அறிய வேண்டும்.
  •  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது.
  •   பசுமை கிராமம்” என்று ஒவ்வொருவரும் நகர்புறங்களில் மரம் வளர்ப்பதைக் காட்டிலும் கிராமங்களில் மரம்                   நட்டால் நல்ல பலன்களும் கிடைக்கும்.
  •   விரும்புகின்ற மாற்றத்தை மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

  என்பதே இவ்வமைப்பின் முதன்மையான நோக்கம். இப்பொழுது எங்கள் நோக்கத்தைப் பாராட்டி பலர் தங்களின் புத்தகங்களை எங்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். இப்படிக் கொடுத்து உதவச் செய்வதே எங்களுக்கு பெரிய உந்துதலாக இருக்கிறது.

  தன்னைப் பார்க்க வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தனது கைவண்ணத்தின் மூலம் சுயமாக தயாரித்த பொருட்களை ஒவ்வொருவரிடமும் கொடுத்து பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய தலைமுறையினர் எதிர்கால சமுதாயத்தை ஒரு திறமை மிக்க சமுதாயமாக மாற்றவேண்டும். அம்மாற்றத்தின் மூலம் நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும் என்றகுறிக்கோளுடன் எவ்வித விளம்பரங்களோ, ஆடம்பரமோ, எதிர்பார்ப்போ இல்லாமல் இந்த “காக்கா கூட்டம்” அமைப்பை சிறப்பாக நடத்திவரும் திரு. கபில் சுப்ரமணியத்தை வாழ்த்துவோம்.

  புத்தகம் கொடுத்து உதவுவோம். நேரடியாக முடியாவிட்டாலும், இந்த அமைப்பைத் தொடர்பு கொள்வோம். தொடர்புக்கு: 97901 22177. www.kaakakootam.blogspot.com. www.facebook.com/kaakakootam.

  நல்ல எண்ணங்கள் கொண்ட மக்கள் ஒன்று சேரும்பொழுது நல்லெண்ணம் கொண்ட குழு உருவாகிறது என்பதற்கு இந்த “காக்கா கூட்டம்” அமைப்பு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

  இந்த இதழை மேலும்

   

  சிசு பராமரிப்பு

  குழந்தை பிறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தோஷத்தை தரும் நல்ல நிகழ்வு. ஒவ்வொரு தாயும் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காரணம் சிசுவின் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி  அடையாமல் இருப்பதால், முறையான கவனிப்பு குறையும் போது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

  சிசு பராமரிப்பின் முக்கியத்துவம்

  சிசு பருவம் என்பது பிறந்த முதல் 28 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் சிசு பல நிலைகளை கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தாயும் சிசுவை நோயின்றி காக்க சிசு பராமரிப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

  அதில் முக்கியமானவை,

  • தாய்ப்பால் ஊட்டுதல்
  • உடல் வெப்பநிலை பாதுகாத்தல்
  • சுத்தம் மற்றும் நோய் தடுப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

  குழந்தை பிறந்த முதல் சில மணிநேரங்களில் கவனிக்கப்பட வேண்டியவை

  சிசுவை சுத்தம் செய்தல்

  சிசு பிறந்தவுடன் சுத்தமான துணியால் இரத்தம் மற்றும் மலம் போன்றவற்றை துடைக்கவேண்டும். உடம்பில் ஒட்டியுள்ள மெண்மையான (Vernix) பொருளை துடைக்கக் கூடாது. ஏனென்றால் இது தோலுக்கு பாதுகாப்பை கொடுத்து நோய் வராமல் தடுக்கும். மேலும் துடைப்பதால் தோலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  அடையாள அட்டை

  எல்லா சிசுவிற்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டையில் தாயின் பெயர், மருத்துவமனை எண், ஆணா? அல்லது பெண்ணா? பிறந்த எடை, குழந்தையின் உள்ளங்கால் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

  சிசுவின் எடை

  சிசுவை ஒருமணி நேரத்திற்குள் எடை போட வேண்டும். மின் எடை சாதனமாக இருந்தால் நல்லது.

  வைட்டமின் K1 ஊசி

  எல்லா சிசுவிற்கும் வைட்டமின் K1 ஊசி போட வேண்டும். நிறைபிரசவமாக இருந்தால் 1 மில்லிகிராம் குறைபிரசவமாக இருந்தால் 0.5 மில்லிகிராம் போட வேண்டும். இதனால் பின்னால் இரத்தப் போக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

  வயிற்றைக் கழுவுதல்

  பிறந்த குழந்தையின் வயிற்றைக் கழுவுவது என்பது அவசியமில்லை. சில சமயம், குழந்தை பிறப்பதற்கு முன்னரே மலம் கழித்த தண்ணீரைக் குடித்தால் வயிற்றைக் கழுவ வேண்டும், எதற்காகவென்றால் வாந்தியைத் தடுப்பதற்காக.

  பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை

  குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் பிறவிக்குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் மூக்கு வழியாக கத்தீட்டர் (Catheter) போடவோ அல்லது மலவாய் மூலம் கத்தீட்டர் போடுவதைத் தடுக்கவேண்டும். குழந்தையின் உடலின் வெப்பநிலையை எலக்ட்ரானிக் வெப்பமானி மூலம் கண்டறிய வேண்டும். மெர்க்குரி வெப்பமானி மூலம் உடலின் வெப்பநிலையைப் பார்த்தால் மூன்று நிமிடம் பார்க்க வேண்டும். மலக்குடல் வெப்பமானி மூலம் உடலின் வெப்பத்தை பார்ப்பதைத் தடுக்க வேண்டும்.

  இரண ஜன்னியிலிருந்து பாதுகாத்தல்

  குழந்தையின் தாய் கர்ப்பகாலத்தில் இரணஜன்னிக்கான தடுப்பூசி போடாமல் இருந்தால் குழந்தை பிறந்தவுடன் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும். குழந்தையின் தாய் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தை பிறந்தவுடன் இரணஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும்.

  தாயும் குழந்தையும் ஒன்றாக இருத்தல்

  பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பதற்கான எந்த விதிமுறையும் இல்லை. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை சுறுசுறுப்பாகவும், விழித்துக் கொண்டும் இருக்கும். இந்த சமயத்தில் தாய் குழந்தைக்கு தாய்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு அதிகரிக்கும்.

  குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தல்

  குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். செவிலியர்களோ அல்லது மருத்துவமனை ஊழியர்களோ குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட உதவி செய்ய வேண்டும்.

  குடும்பத்தினருடன் உரையாடுதல்

  குழந்தை பிறந்தவுடன் மருத்துவரோ அல்லது செவிலியர்களோ குழந்தை பிறந்த நேரம், எடை, இனம் (ஆண்/பெண்), குழந்தையின் உடல்நிலை பற்றி குடும்பத்தினருடன் உரையாட வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை உறவினர்களிடம் காட்ட வேண்டும், எதற்காகவென்றால் குழந்தையின் இனத்தை அறிந்து கொள்ளவும் , உடல்நலத்தை பற்றி அறியவும்.

  குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் கவனிக்கப்பட வேண்டியவை:

  தொப்புள் கொடி பராமரிப்பு

  •    தொப்புள் கொடியை சுத்தமாகவும், காற்றோட்டம் படும்படியாகவும் வைக்க வேண்டும்.
  •      5 முதல் 10 நாட்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்து விடும்.
  •      தொப்புள் கொடியை ஈரம் படாமல் பாதுகாக்க வேண்டும்.
  •      பவுடர், விபூதி, மஞ்சள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தொப்புள்கொடியில் கண்டிப்பாக வைக்கக் கூடாது.

  கண் சுத்தம் செய்தல்

  குழந்தையின் கண்களை சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து துடைக்க வேண்டும்.

  முழுமையான தாய்ப்பால்

  தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றியும், அதை எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கர்ப்ப காலத்தில் இருந்தே தாய்க்கு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் தாய் குழந்தைக்கு வெற்றிகரமான முறையில் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.

  மஞ்சள்காமாலையைக் கண்டறிதல்

  எல்லா குழந்தைகளையும் பிறந்த சில நாட்களுக்கு, தினமும் இரண்டு முறை மஞ்சள்காமாலை உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். பகல் வெளிச்சத்தில் குழந்தையின் உடலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை அறிவது எளிதான முறையாகும்.

  தடுப்பூசி

  எல்லா குழந்தைகளுக்கும், பிறந்தவுடன், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்வதற்கு முன் மாநில விதிமுறையின்படி தடுப்பூசி போட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசி குழந்தை பிறந்தவுடன் போடுவதால், தாயிடமிருந்து மஞ்சள்காமாலை பரவுவதை தடுக்கலாம்.

  குழந்தையைக் குளிப்பாட்டுதல்

  மருத்துவமனையில் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டுவதை தடுக்கவேண்டும், எதற்காகவென்றால் தொற்று நோயை தடுப்பதற்காகவும், உடலின் வெப்பநிலை குறைவதை தடுப்பதற்காகவும்.

  தூங்கும் முறை

  குழந்தைக்கு பால் கொடுத்தப்பின் நேராக படுக்க வைக்க வேண்டும். குப்புறபடுக்கவைப்பதால் எதிர்பாராத இறப்பு (SIDS) அதிகமாக வருகிறது.

  பாரம்பரிய பழக்கவழக்கங்கள்

  பலவிதமான பாரம்பரிய பழக்கவழக்க முறைகள் இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படுகிறது. அதில் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களான எண்ணெய் தேய்த்தல், கண்ணுக்கு மை பூசுதல், காதுக்குள் எண்ணெய் ஊத்துதல், மாட்டுச் சாணத்தை தொப்புள் கொடியில் பூசுதல், போன்றவைகளைத் தடுக்க வேண்டும்.

  குழந்தையை வீட்டிற்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை

  குழந்தை பிறந்த 72 – 96 மணிக்குள் குழந்தையை வீட்டிற்கு அனுப்பலாம். ஆனால் குழந்தை கீழ்க்கண்ட விதிமுறைக்குள் அடங்கியிருக்க வேண்டும். அவை,

  •      குழந்தைக்கு எந்த விதமான நோய்நொடிகள் இருக்க கூடாது.
  •      குழந்தைக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
  •      தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதை எவ்வாறு அறிவது என்பது குழந்தை பால்குடித்ததும் 2 – 3               மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். குழந்தையின் எடை அதிகரிக்கும். குழந்தையின் உடல் எடை குறைவதன்           மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக இல்லை என்பதை அறியலாம்.
  •      குழந்தையின் தாய்க்கு எந்த விதமான நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் தாய் குழந்தையை நன்றாக பராமரிக்க முடியும்.

  தொடரும்

  இந்த இதழை மேலும்

   

  வெற்றிக்கு யார் பொறுப்பு?

  வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களிடம் “உங்கள் வெற்றிக்கு யார் காரணம்?” என்று கேட்டால் “எனது வெற்றிக்கு நான்தான் காரணம். எனது சிறப்புத் திறமைகள் காரணம். எனது புத்திக்கூர்மை காரணம். எனது உழைப்பு காரணம். என்னிடமுள்ள அனுபவம் காரணம்” என்று சிலர் மார்தட்டிப் பேசுவார்கள்.

  ஆனால், அதேவேளையில் “உங்கள் தோல்விக்கு யார் காரணம்?” என்று யாராவது கேட்டால், “என் தோல்விக்கு எனது குடும்பம்தான் காரணம். எனது ஊர்தான் காரணம். எனது நண்பர்கள்தான் காரணம். எனது உறவுக்காரர்கள்தான் காரணம். நான் வாழ்கின்ற சூழல்தான் காரணம் என்று பலவித காரணங்களை அடிக்கிக்கொண்டே போவார்கள்.

  தங்களின் வெற்றிக்கு தாங்களே பொறுப்பு ஏற்றுக்கொள்வதைப்போல தங்களது தோல்விக்கும் தாங்களே காரணம் என ஏற்றுக்கொள்வதுதான் நியாயமான செயலாகும்.

  “நீ தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய். அதற்குக் காரணம் என்ன?” என்று மாணவர் சுகந்தனிடம் கேட்டார் பக்கத்து வீட்டுக்காரர்.

  “எனக்கு இப்படியொரு நிலைமை வருவதற்கு எங்கள் பள்ளிதான்  காரணம். எங்கள் பள்ளியில் சரியான ஆசிரியர்கள் கிடையாது. ஒழுங்காக பாடம் நடத்தமாட்டார்கள். திருப்புதல் தேர்வு (Revision Test) கூட நடத்தமாட்டார்கள். பள்ளியில் என்கூட படிக்கும் மாணவர்களும் நல்லவர்கள் இல்லை. யாரிடமாவது சிலர் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். எங்கள் தலைமை ஆசிரியர் அடிக்கடி லீவு போட்டுவிடுவார்” என்று தனது பள்ளியின் சூழலை காரணம்காட்டி தப்பித்துக்கொள்ள நினைத்தான் சுகந்தன்.

  பக்கத்து வீட்டுக்காரர் விடுவதாக இல்லை.

  “மொத்தமுள்ள 60 பேரில் 500க்கு 490க்குமேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 34 பேர். சிலர் 495 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்றான் சுகந்தன்.

  “தம்பி… சுகந்தன் நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உனக்கு எஸ்.எஸ்.எல்.சியில் 318 மார்க்தான் கிடைத்திருக்கிறது. நீ குறைந்த மதிப்பெண்களுக்கு அந்தப் பள்ளிக்கூடம்தான் காரணம் என்று சொல்கிறாய். ஆனால், உன்னோடு படித்த மற்றமாணவர்களில் சிலர்கூட 400க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியிருக்கும்போது உனக்கு மட்டும் பள்ளியின் சூழல் பிரச்சனையாகத் தெரிகிறதே. அது ஏன்?” என்று கேட்டார்.

  சுகந்தனால் பதில் சொல்ல முடியவில்லை.

  சுகந்தனைப்போலவே, நிறைய மாணவ – மாணவிகள் தங்கள் மதிப்பெண்கள் குறைவதற்கு பல்வேறு காரணங்களை புதிது புதிதாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். தங்கள் மதிப்பெண்கள் குறைவதற்குக் காரணம் தாங்கள் படிக்கும் பள்ளிகள் என்றும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்றும் கூறுகிறார்கள். தங்கள் தோல்விக்கான பொறுப்பை அடுத்தவர்கள் தலையில் தூக்கி வைத்துவிடுகிறார்கள். ஒருவரது உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரது செயல்கள்தான் காரணமாகிறது என்பதை கண்டிப்பாக மாணவ – மாணவிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  ஒவ்வொருவரும் தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதை “பொறுப்புணர்வு” (Responsibility) என அழைப்பார்கள். இந்த பொறுப்புணர்வுதான் ஒரு செயலை ஆர்வமாகவும், அதிக ஈடுபாட்டுடனும் செய்வதற்கு தூண்டுதலாக அமைகிறது. பொறுப்புணர்வை நன்கு உணர்ந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றிகளைக் குவிக்கிறார்கள்.

  பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள், படிக்கின்ற காலத்தில் சிறந்த முறையில் படிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி, பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பழகியவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கிறார்கள். தனது பொறுப்பு இது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், எந்தப் பொறுப்பையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. மக்களின் மரியாதையும் அவர்களுக்கு உண்டு.

  “அன்னை” என்று இந்திய மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர் தெசரா. அல்பேனியா நாட்டைச் சேர்ந்த “அன்னை தெரசா” அருட்சகோதரியாக திகழ்ந்து இந்திய மக்களின் அன்னையாக அங்கீகரிக்கப்பட்டவர்.

  1957 ஆம் ஆண்டு அன்னை தெரசா இந்தியாவில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். “காந்தி பிரேம் நிவாஸ்” என்ற அந்த தொழுநோய் மருத்துவமனைக்குத் தேவையான நிதியுதவியைப் பெறுவதற்கு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினார். அந்தக் கூட்டத்தை நடத்தும்போது அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று உதவி கேட்பார். தனக்காக அல்லாமல் மற்றவர்களுக்காக அன்னை தெரசா நிதியுதவி கேட்பதை சிலர் கொச்சையாகப் பார்த்தார்கள். அவர் பிச்சை எடுக்கிறார் என்று வர்ணித்து கேலி செய்தார்கள். அன்னை தெரசா அதனைப் பொருட்படுத்தவில்லை.

  ஒருமுறை அன்னை தெரசா கடைகளுக்குச்சென்று யாசகம் செய்தபோது அந்த கடையின் உரிமையாளர் வெற்றிலைப் போட்டுக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து ஏதாவது உதவி பெறவேண்டும் என தொடர்ந்து கேட்டுக்கொண்டே கையை நீட்டினார் அன்னை தெரசா. எரிச்சலடைந்த கடைக்காரர் தெரசாவை கோபத்தோடு பார்த்தார். தனது வாய்க்குள் இருந்த சிவப்பான வெற்றிலை எச்சிலை அன்னை தெரசாவின் கையில் துப்பிவிட்டு “போ” என்றார். அன்னை தெரசா விடுவதாக இல்லை. மீண்டும் கையை நீட்டினார். “ஏதாவது தாருங்கள்” என்று கேட்டார். கடைக்காரர் முறைத்துப் பார்த்தார்.          “ஐயா நீங்கள் துப்பிக் கொடுத்ததை எனக்கு வைத்துக்கொள்கிறேன். இனி, தொழுநோய் இல்லத்தில் இருக்கும் அநாதை குழந்தைகளுக்கு ஏதாவது நிதி உதவி கொடுங்கள்” என்று பொறுமையுடன் கேட்டார். இந்த “பொறுப்புணர்வும், பொறுமையும்” கடைக்காரரை திகைக்க வைத்தது.

  மற்றவர்களுக்காக அவமானத்தை உள்வாங்கிய உன்னத அன்னையான தெரசாவை அதிர்ச்சியோடு பார்த்தார் கடைக்காரர். வெட்கித் தலை குனிந்தார். எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் தான் கொண்ட கொள்கையில் பின்வாங்காமல் தொடர்ந்து பொறுமையுடன் நிற்கும் அன்னை தெரசாவைப் பார்த்து மீண்டும் அதிர்ந்தார். “இவ்வளவு பொறுமையுடன் இருக்கும் பெண்ணை நான் இன்றுதான் முதன்முதலில் பார்க்கிறேன்” என்று சொல்லி அன்னை தெரசாவுக்கு மிகப்பெரிய தொகையை நிதியுதவியாக அளித்தார். இந்த நிகழ்வு அன்னை தெரசாவின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. தொழுநோயாளிகளுக்காக மற்றவர்களிடம் நிதியுதவி பெறுவது இவரது பொறுப்பு அல்ல. ஆனால், அதனை தனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் அன்னை தெரசா. இத்தகைய செயல்பாடுதான் அன்னை தெரசாவை அகிலம் புகழும் அளவுக்கு செய்தது.

  எனவே  இளம்பருவத்திலிருந்தே அதிக பொறுப்புகளை ஏற்று செயல்படுவதற்கு, மாணவ – மாணவிகள் பழகிக்கொள்ள வேண்டும். இளம்வயதில் தனக்கு கொடுக்கப்படுகின்ற பொறுப்புகளை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சிறப்பான வெற்றிகளை எளிதில் பெறலாம்.

  “தங்களின் வெற்றிக்கு தாங்களே பொறுப்பு ஏற்றுக்கொள்வதைப்போல தங்களது தோல்விக்கும் தாங்களே காரணம் என ஏற்றுக்கொள்வதுதான் நியாயமான செயலாகும்”.

  இந்த இதழை மேலும்

  துணை மருத்துவப் படிப்புகள்

  துணை மருத்துவத்தில் குறிப்பாக Physiotherapy  முடநீக்கியம், Occupational Therapy  செயின்முறை முடநீக்கியம் படிப்புகளைத் தனது எதிர்கால வாழ்வாக ஏற்கவிருக்கும் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இக்கட்டுரை மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக, வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சமீபத்தில் எடுத்த கணக்குப்படி வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது வருத்தப்படக்கூடிய தகவல். இதன்விளைவு தினந்தோறும் பல மக்கள் விபத்துக்கள் மூலம் தங்களது உடல் பாகங்களில் குறிப்பாக எழும்புகளில் உடைதல் அதிகமாக உள்ளது.

  உடைந்த எழும்பின் இணைதலுக்குப் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் உடல் பழைய நிலையை அடைவதற்கு முடநீக்கியப் படிப்பைப் படித்த மருத்துவர்களின் துணை தேவைப்படுகிறது. விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக நேருகின்ற சமயங்களில் தேவையான மருத்துவர்களின் தட்டுப்பாடுகளும் அதிகரித்து வருவதைப் பார்க்கும் பொழுது தான் “Physiotherapy” படித்த மருத்துவர்களின் முக்கியத்துவம் நமக்குத் தெரிய வருகிறது.

  மாத்திரைகள் அல்லாமல் பயிற்சிகளின் மூலமே ஒருவரின் உடல் பாகங்கள் சரிசெய்யப்படுவது முக்கியப் பணியாகும். சில குழந்தைகள் பிறவிக்குறைபாட்டால் சரியாக நடக்கவோ, உட்காரவோ முடியாததால் Physiotherapy மருத்துவர்களின் உதவியுடன் அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல் சராசரி வாழ்வை வாழ்வதற்கு வழிவகை செய்வதற்கும் இந்த முடநீக்கிய மருத்துவர்களின் உதவியை நாட வேண்டியது அவசியமாக உள்ளது.

  கடந்த ஆண்டுகளில் குறைந்த மாணவர்களே இம்மாதிரியான துணை மருத்துவப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவும் எதிர்காலத்தில் இவர்களின் தேவையை அதிகமாக எதிர்பார்க்கும் என்பது உறுதி. வரும் கல்வி ஆண்டுகளில் இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் அமையும்.

  தற்பொழுது பலதுறை மருத்துவமனைகள் பரவலாக அனைத்து சிறிய நகரங்களிலும் செயல்பட்டு வருவதால் Physiotherapy படித்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் பணியாற்றுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

  சேர்க்கைத் தகுதிகள்

  நான்கு ஆண்டுகள் உடன் 6 மாதம் பயிற்சியுடன் BPT மற்றும் BOT படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதியில் 17 வயதைக் கடந்தவர்கள் சேர்க்கைக்கு தகுதியானவர்கள்.

  ப்ளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 35% மதிப்பெண்கள்ப் பெற்றுத் தேர்வுப் பெற்றவர்கள் BPT மற்றும் BOT படிப்பிற்கு தகுதியானவர்கள். ப்ளஸ் டூ-வில் Vocational பிரிவைத் தேர்வு செய்தவர்கள் அனைத்து வகையான துணை மருத்துவப்படிப்புகளுக்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

  கல்விக்கட்டணம்

  B.P.T. படிப்பைப் பொறுத்த வரையில் இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.

  சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவ மையம், திருச்சியில் உள்ள அரசு பிசியோதெரபிக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள தலா 25 இடங்களிலும் மொத்தம் 50 இடங்களில் சேர்க்கை நடைபெறும். ஆண்டுக் கட்டணமாக ரூ.1200 செலுத்த வேண்டும்.

  தமிழகத்தில் உள்ள 22 தனியார் முடநீக்கிய கல்லூரிகளில் சுமார் 700 இடங்களில் அரசு கலந்தாய்வு மூலம் நிறப்பப்பட உள்ளது. இவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.28,000 செலுத்த வேண்டும்.

  B.O.T. படிப்பை பொறுத்த வரையில் அரசு கல்லூரிகள் இல்லை. கோவையில் ஒரே ஒரு தனியார் கல்லூரியில் 32 இடங்களில் அரசு கலந்தாய்வு மூலம் நிறப்பப்பட உள்ளது. இந்தக் கல்லூரியில் சேர்க்கைப் பெறும் மாணவர்கள் ரூ.28,000 ஆண்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

  நான்கரை ஆண்டுகள் B.O.T. படித்தவர்கள் முதுகலைப் படிப்பில் M.P.T. Orthopaedics, Neurology, Paediatrics, Cardiology, Sports மற்றும் Obstetrics & Gynaecology போன்ற 8 வகையான படிப்புகள் பெறுவது இத்துறையின் உயர்கல்வி வாய்ப்புகளாகக் கருதப்படுகின்றது.

  புதிய துணை மருத்துவப் படிப்புகள்

  B. Pharm, Nursing, B.P.T., B.O.T. போன்ற துணை மருத்துவப் படிப்புக்களைத் தொடர்ந்து BASLP, B.Sc. Radiology & Imaging Technology படிப்புகளும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றது.

  ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மருத்துவத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய படிப்புகளாக B.Sc. Radiology மற்றும் Radio Therapy படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

  இந்தப் படிப்புகளும் ப்ளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 35% மதிப்பெண்களுடன் தேர்வு பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு படிப்பான BAS LP படிப்பு, சென்னை மருத்துவக் கல்லூரியில் 20 இடங்களிலும், மூன்றரை ஆண்டு B.Sc. Radiology படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் B.Sc. Radio Therapy சென்னை மருத்துவக் கல்லூரியிலும் வழங்கப்படுகின்றது.

  அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் B.Sc. படிப்புகளும் ரூ. 1200 ஆண்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.

  வேலை வாய்ப்புகள்

  மத்திய, மாநில அரசுகளின் அதிக நிதி ஒதுக்கீடு விளையாட்டுத் துறைகளில் அதிகமான மாணவர்களை ஈர்ப்பதுடன் அது சார்ந்த வேலை வாய்ப்புகளாக பிசியோதெரபி படித்தவர்களுக்கும் அதிகமாக உள்ளது. விளையாட்டு வீரர்களின் உடல் நலனைப் பாதுகாப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானது.

  வெளிநாடுகளில் அதிக அளவிலான பிசியோதெரபிஸ்ட் தேவைப்பாடு உள்ளதால் அங்கு வேலைப் பெறுவதில் அதிக சிரமம் இல்லை. இரண்டு ஆண்டுகள் முதுகலைப் படிப்பை M.P.T. முடிப்பவர்கள் பிசியோதெரபிக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

  இப்பொழுது பரவலாக பெருகிவரும் Body Fitness சென்டர்களில் இவர்கள் கணிசமான அளவில் வேலை செய்கிறார்கள்.

  கடந்த ஆண்டுகளில் சரியான அளவில் மாணவர்கள் இத்துறையில் சேர்க்கை பெறாத காரணத்தினால் தற்பொழுது அதிகரித்துள்ள Fitness சென்டர், மருத்துவமனைகள், கிளினிக்கிற்குத் தேவையான பிசியோதெரபிஸ்ட் இல்லாத நிலையில் தற்போதைய மாணவர்கள் இத்துறையின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளனர்.

  வெளிநாடுகளில் மருத்துவத் துறையைச் சார்ந்த பணியாளர் குறைவினால் B.P.O. எனப்படும் I.T. Service மூலம் இந்திய பணியாளர்கள் மெடிக்கல் கோடிங் போன்ற வேலைகளைச் செய்வதால் B.P.T. படித்தவர்கள் உடனடியாக வேலையைப் பெறுகின்றனர். மெடிக்கல் ரிசர்ச் போன்ற ஆராய்ச்சி பணிகளுக்கும், இந்திய மருத்துவப் பணியாளர்களின் தேவை அதிகமாக உள்ளது. B.P.T. முடித்தவர்கள் மாதம் ரூ.15,000 வரையிலும், பகுதி நேர தொழிலாக சொந்தமாக கிளினிக் வைத்து அதன் மூலம் கணிசமான வருவாயையும் பெறுகின்றனர். M.P.T. முடித்தவர்கள் கல்லூரிகளில் பேராசிரியர்களாக தேர்வாகும் போது அவர்களின் மாத வருமானம் ரூ.20,000 தாண்டும் நிலையும் உள்ளது.

  விரைவில் Tamil Nadu Physiotherapist கல்லூரி தொடங்கப்பட உள்ளதால் அரசு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். தமிழ்நாடு Dr. MGR மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் Ph.D. படிப்பை Physiotherapie-க்கும் தொடங்கவிருப்பதால் மாணவர்களின் ஆராய்ச்சி படிப்பு உறுதி செய்யப்படுகின்றது.

  தனியார் பிசியோதெரபி கல்லூரிகளைத் தேர்வு செய்யும் முன் அக்கல்லூரி மருத்துவமனையுடன் இணையப் பெற்றதா? என்று ஆய்வு செய்து சேர்க்கை பெற்றால் தரமான உயர் கல்வியைப் பெறமுடியும். மேலும் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றதா? என்றும், அரசு அனுமதியுடன் செயல்படுகின்றதா? என்றும் உறுதி செய்வதும் முக்கியமானதாகும்.

  வெளிநாடுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் நிறைந்து இருப்பதனால் B.P.T. மற்றும் M.P.T. முடித்தவர்கள் உடனடியாக வெளிநாடுகளில் வேலை பெறுவதும் உறுதிபடுத்தப்படுகின்றது.

  B.Sc. Radiology மற்றும் Radiotherapy போன்ற படிப்புகள் மருத்துவமனைகளில் உள்ள தேவைப்பாட்டை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டிருப்பதால், அரசு கல்லூரிகளில் மட்டும் இதனை வழங்குவதால் ஆண்டு கல்விக் கட்டணம் குறைவாக இருக்கின்றது. இப்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகின்றது.

  இலவச கல்வி ஆலோசனையை பெற 0424 2500073 என்ற எண்ணிற்கு இரவு 8 மணி முதல் 9 மணி வரை தொடர்பு கொண்டு பலன் பெறலாம்.

   இந்த இதழை மேலும்

  எண்ணித் துணிக

  “ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லும் போது தோல்விகளும் இடர்பாடுகளும் வரலாம். அந்த தோல்விகளும் இடர்பாடுகளும் முன்னேற்றத்த தடுத்துவிடாது.”

  இயற்கையாக எல்லா மனிதர்களுக்கும் தான் மிகப்பெரிய சாதனையாளர்களாக வரவேண்டும் என விரும்புவதும், சாதிக்க வேண்டும் என்ற ஆவலும் பொதுவானது. சிலர் தங்களுடைய ஆவலை, பூர்த்தி செய்ய முடிவதில்லை. காரணம், ஒன்றை சாதிக்க தேவையான கஷ்டங்களை அனுபவிக்க அவர்கள் விரும்புவது இல்லை. கடும் முயற்சிகளுக்கு அவர்கள் மனம் ஒப்புதல் தருவதில்லை. தியாகங்கள் செய்ய அவர்கள் தயாராக இருப்பதில்லை.

  சிலர் சாதித்து வெற்றி பெற காரணம் அவர்களிடமுள்ள கடுமையான உழைப்பும், சோதனைகளைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம், சில இழப்புகளையும் தியாகங்களையும் எதிர்கொள்கிற மன உறுதியும் இருப்பதால் தான் அவர்கள் சாதனையாளர்களாக ஆக முடிகிறது.

  ஒன்றை சாதித்துவிட்டு  அந்த வெற்றியின் களிப்பிலே ஏற்படுகிற திருப்தியானது இணையில்லாதது.

  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

  எண்ணுவம் என்பது இழுக்கு

  என  வரையறுக்கிறது வள்ளுவம்.

  பொதுவாக மனிதர்கள் ஒரு செயலை செய்யும் அணுகுமுறையைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் ஒரு குறிக்கோளை நோக்கி வேகமாக துவங்கி, உற்சாகமாக ஆரம்பித்து, இடையிலே தொய்வு ஏற்பட்டு, வேகம் குறைந்து வெற்றி வாய்ப்பை இழக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், யோசித்து எண்ணி முடிவெடுத்தாலும் செயலைத் தொடங்கிய பின்பு அதே வேகத்தில் அதே ஈடுபாட்டுடன் குறையாத மன உறுதியுடன் தெளிவாக அடிமேல் அடி வைத்து முன்னேறுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். குறுக்கு வழியிலே வெற்றி பெறுவது நிலையானதல்ல.

  மிகப்பெரிய வெற்றிகளெல்லாம் பொறுமையான அணுகுமுறையினால் அமைகிறது. ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லும் போது தோல்விகளும் இடர்பாடுகளும் வரலாம். அந்த தோல்விகளும் இடர்பாடுகளும் முன்னேற்றத்தை தடுத்துவிடாது. மனிதனுடைய வாழ்விலே எல்லோருக்கும் தவறுகள் ஏற்படுவது இயல்பு. தவறுகள் ஏன் உண்டாகிறது என்று தெரிந்துகொண்டால் அதை தவிர்ப்பது எளிதாகும். தன்னிடம் உள்ள பலவீனத்தை அடையாளம் கண்டுகொண்டால் அந்தப் பலவீனத்தை பலமுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும்.

  ஒரு செயலைச் செய்யும் போது இடையில் ஏற்பட்ட தவறுகளை யாரும் கணக்கிடுவதில்லை. அந்த செயலின் இறுதியில் ஏற்படும் வெற்றி தான் கணக்கிடப்படுகிறது. இடையில் ஏற்படும் தவறுகள் மாபெரும் வெற்றியின் தரத்தைக் குறைப்பதில்லை. இறுதி வெற்றி தான் பேசப்படுகிறது, செய்த தவறுகள் மறக்கப்படுகின்றன. இடையில் ஏற்பட்ட தோல்விகளும் தவறுகளும் அவனுக்கு அனுபவத்தையும், பக்குவத்தையும், பொறுமையையும் புகட்டுகின்றன. அதனால் தவறுகளையும் தோல்விகளையும் கண்டு துவண்டு விடக்கூடாது.

  வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல. ஒரு குறிக்கோள், அதை அடைய திட்டமிடல், குறிக்கோளை நோக்கி முன்னேறுகிற ஈடுபாடு ஆகியவை நன்றாக இருந்தாலும்  கூட  முயற்சி செய்யாவிட்டால்  பலன் கிடைக்காது. ஒவ்வொரு படியாகத் தான் வெற்றியை அடைய முடியும். படிப்படியாக முன்னேறினால் தான் எல்லையைத் தொட முடியும். ஒரு சிறு காலடி தான் மிகப்பெரிய பயணத்தின் தொடக்கமாக அமைகிறது. ஒரு சிறு தொடக்கம் தான் ஒரு நல்ல முடிவாக அமையும்.

  தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி. அவர் பள்ளியில் படிக்கிறபோது அவருடைய ஆசிரியர் அவரை கெட்டிக்கார மாணவராக ஒப்புக் கொள்ளவில்லை. சாமர்த்தியசாலி என்ற பெயரையும் அவர் பெறவில்லை. அவரும் அவருடைய நண்பரும் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலமுறை தோல்வி அடைந்தனர். அவர் நண்பர் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விட்டுவிடலாம் என நினைத்தார். ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன் தளர்ந்து விடவில்லை. அதற்குப் பதிலாக நூறு முறையும் நான் தோல்வி அடையவில்லை ஒவ்வொரு முறையும் நான் எதை செய்யக்கூடாது என்ற படிப்பினையைப் பெற்றேன் என்று கூறினார்.

  பொறுமையும் விடாமுயற்சியும் அவருடைய  திறமைக்கு மெருகூட்டின. ஆங்கிலப் பேராசிரியர் கிறிஸ்டோபர் மோர்லி ஒருமுறை “தொடர்ந்து சுட்டுக் கொண்டிருப்பவனுக்கு மிகப்பெரிய வெடிகளும் சாதாரண வெடிகளாகத் தோன்றும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு மிகப்பெரிய வெற்றிகளும் சாதாரண வெற்றிகளாகத் தோன்றும்” என்று சொன்னார்.

  ஒரு குறிக்கோள், திட்டமிடல், கடும் உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு, குறையாத ஆர்வம், தோல்வி கண்டு துவளாத மனம், சிறுசிறு தவறுகளால் பெறும் அனுபவம், படிப்படியான முன்னேற்றம் ஆகியவையே வெற்றிக்கு வித்தாக அமைகிறது.

  இந்த இதழை மேலும்

  வாழ்க்கை விளையாட்டு

  உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சோகமாக உட்கார்ந்திருந்தார்.  அவருடைய பெண்ணுக்குத் திருமணம் நிச்சயித்திருந்த நேரம் அது.

  “என்னப்பா பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கே. ரொம்ப பெரிய இடம்னு வேறசொன்னே. எவ்வளவு சந்தோஷமான விஷயம். ஏன் இப்படி டல்லடிக்கிறே?”

  “ஒண்ணுமில்லேப்பா. பொண்ணு நல்லா இருக்கணும்ற ஆசையிலே அவசரப்பட்டு கொஞ்சம் பெரிய இடமா பார்த்துட்டேன். ஜோசியத்தை நம்பி இப்படி அகலக்கால் வச்சிட்டோமோன்னு தோணுது”

  “என்னப்பா சொல்றே?”

  “என் பொண்ணுக்கு பத்துப் பொருத்தமும் உள்ள ஒருத்தன் ஹஸ்பெண்டா வரணும்னு ஆசைப்பட்டேன். வந்த ஜாதகம் எல்லாம் ஏழு எட்டுப் பொருத்தம் மட்டுமே இருந்துச்சி. அதனாலே தேவையில்லேன்னு வந்ததையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டேன். இந்த இடம் மட்டும்தான் பத்துக்குப் பத்து சரியா இருந்துச்சி.  ஆனா அந்தஸ்திலே அவங்க நம்மளைவிட ரொம்ப பெரிய இடமா இருக்காங்க. நாம நெனைச்ச மாதிரியே பத்துப் பொருத்தம் உள்ள ஜாதகமா வேற அமைஞ்சிருக்கு. இதைவிட வேறஎன்ன வேணும். எதுவா இருந்தாலும் கடனை வாங்கியாவது சமாளிச்சிக்கலாம்னு முடிவு பண்ணினேன். முதல்லே நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரின்னு சொன்னவங்க இப்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறம் அவங்க உண்மையான முகத்தைக் காண்பிக்கிறாங்க”

  “அப்படியா என்ன வேணுமாம்?”

  “ஒரு மீடியமான மண்டபம் புக் பண்ணிணேன். முதல்லே சரின்னவங்க இப்ப ஒரு பெரிய மண்டபத்தோட பெயரைச் சொல்லி அதை புக் பண்ணாத்தான் ஆச்சுன்னு நிக்கறாங்க. அதை புக் பண்ணா மேற்கொண்டு ஒரு லட்சம் அதிகமாக செலவாகும். இதெல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒண்ணுக்கு ரெண்டா வட்டிக்கு கடனை வாங்கி பண்ணிடலாம். ஆனா இதை விட முக்கியமான விஷயம் ஒண்ணு இப்ப என் மனசை போட்டு படுத்துது.  அதான் என்ன செய்யறதுன்னு புரியாம முழிச்சிகிட்டிருக்கேன்”.

  “ஒரு மீடியமான மண்டபம் புக் பண்ணிணேன். முதல்லே சரின்னவங்க இப்ப ஒரு பெரிய மண்டபத்தோட பெயரைச் சொல்லி அதை புக் பண்ணாத்தான் ஆச்சுன்னு நிக்கறாங்க. அதை புக் பண்ணா மேற்கொண்டு ஒரு லட்சம் அதிகமாக செலவாகும். இதெல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒண்ணுக்கு ரெண்டா வட்டிக்கு கடனை வாங்கி பண்ணிடலாம். ஆனா இதை விட முக்கியமான விஷயம் ஒண்ணு இப்ப என் மனசை போட்டு படுத்துது.  அதான் என்ன செய்யறதுன்னு புரியாம முழிச்சிகிட்டிருக்கேன்”.

  “என்னப்பா. என்னென்னமோ சொல்றே”

  “சமீபத்துல ரிலேட்டிவ் வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு காஞ்சிபுரம் போயிருந்தோம். நிச்சயதார்த்தத்துலே பேச்சு வாக்கிலே அந்த ஊர்லே ஒரு பெரிய ஜோசியர் இருக்கார்னு எங்க ரிலேட்டிவ் ஒருத்தர் சொன்னாங்க. சும்மா இல்லாம பொண்ணு பையனோட ஜாகதத்தைக் கொண்டு போய் அந்த ஜோசியர்கிட்டே காண்பிச்சோம். அவர் ரெண்டு ஜாதகத்தையும் மாறி மாறி பார்த்துட்டு எட்டுப் பொருத்தம் தான் இருக்குன்னு சொல்றார். அப்புறம் மாப்பிள்ளை ஜாதகத்திலே ஏதோ தோஷம் வேறஇருக்காம். அதுக்கு கல்யாணத்துக்கு முன்னாலே பரிகாரம் பண்ணியாகணும்னு சொல்றார். ஒரே குழப்பமா இருக்கு. இப்ப என்ன பண்றதுண்னே புரியலை”

  நண்பர் சொல்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்றேபுரியவில்லை.  இந்த சூழ்நிலையிலும் கல்யாணம் என்றதும் காமராஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வந்தது. ஏனென்றால் அது மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம். ஒருமுறைபடித்தால் போதும். அது யாருக்கும் மறக்கவே மறக்காமல் மனதில் பதிந்து விடும்.

  வறுமையில் வாடிக் கொண்டிருந்த காங்கிரஸ் தியாகி ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய நாளைக் குறித்து கல்யாணப் பத்திரிகை அடித்தார். பின்னர் அவர் தனக்குப் பழக்கமான காமராஜரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். காமராஜர் தனது மகளின் திருமணத்திற்கு நிச்சயம் வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் அந்த தியாகி.  ஆனால் காமராஜரோ திருமண தினத்தன்று தனக்கு முக்கியமான பணிகள் இருப்பதாகவும் அதனால் திருமணத்திற்கு வர இயலாது என்றும் அவரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் திரும்பினார் அந்த தியாகி.

  திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திடீரென காமராஜர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். மணமக்களை ஆசிர்வதித்தார். அந்த தியாகியால் இதை நம்பவே முடியவில்லை.

  “அய்யா. தாங்கள் திருமணத்திற்கு வருவதாக முன்பே சொல்லி இருந்தால் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பேன்”.

  இதற்கு காமராஜர் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.

  “அதனாலேதான் அன்னைக்கு நீங்க என்னை அழைச்சப்போ நான் வர்றது கஷ்டம்னு சொல்லி அனுப்பினேன். நீங்க எனக்கு அழைப்பிதழை கொடுத்தப்பவே நான் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வர்றதா முடிவு செஞ்சிட்டேன். நான் வர்றதா உங்ககிட்டே சொல்லியிருந்தா எனக்காக நிறைய வீண் செலவு செய்திருப்பீங்க”

  காமராஜர் மனிதநேயம் மிக்கவர். மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்தவர். சரி. இப்போது நண்பரின் விஷயத்திற்கு வருவோம்.

  தற்காலத்தில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது.    இப்போதெல்லாம் பெண்ணிற்கு வரன்; பார்க்கும் போது அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதுதான். செல் இல்லாத மனிதன் செல்லாத மனிதன் என்பது போல சொத்து இல்லாத மாப்பிள்ளை அவன் எவ்வளவு நல்ல குணம் உடையவனாக இருந்தாலும் செல்லாத மாப்பிள்ளையே. அவனை யாரும் மதிப்பதில்லை. எதையெல்லாம் விசாரிக்க வேண்டுமோ அதையெல்லாம் விசாரிப்பதே இல்லை.  சொத்து நிறைய இருந்தால் அது நல்ல இடம். சொத்து இல்லையென்றால் அது தண்டம். சாஃப்ட்வேரில் மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தால் அவனைவிட சிறந்த மாப்பிள்ளை இந்த உலகத்தில் இல்லை. இப்படித்தான் இன்றைய மக்களின் மனநிலை இருக்கிறது.

  அடுத்ததாக ஜாதகத்தை நம்பி நம்பியே தங்கள் பெண்ணின் வாழ்க்கையைத் தொலைப்போர் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்காலத்தில் நேர்மையான ஜோசியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால்  நூற்றுக்கு எழுபத்தி ஐந்து  சதவிகிதம் பேர் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருக்கிறார்கள்.

  கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புகழ்பெற்றஜோசியர்கள்  ஸ்ரீ இராகவேந்திரரை சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் ஸ்ரீ இராகவேந்திருடைய ஜாதகத்தைக் கணித்து ஆயுளைப் பற்றிய குறிப்பை எழுதினார்கள். ஆனால் மூன்று பேர்களுக்கும் மூன்று விதமான முடிவுகள் கிடைத்தன. அதன்படி ஒருவர் இராகவேந்திர சுவாமிகளின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்றார். மற்றொரு ஜோசியர் சுவாமிகளின் ஆயுள் முன்னூறு ஆண்டுகள் என்றார். மூன்றாவது ஜோசியரோ சுவாமிகளின் ஆயுள் எழுநூறு ஆண்டுகள் என்றார். இப்படிச் சொல்லிவிட்டார்களே தவிர மூவருக்குமே கலக்கமாகத்தான் இருந்தது. இதில் ஏதாவது ஒன்றுதானே சரியாக இருக்கமுடியும்.

  இப்போது ஸ்ரீஇராகவேந்திரர் புன்னகை புரிந்தார். அவரது பதில் கலக்கத்தில் இருந்த மூன்று ஜோசியர்களுக்குமே நிம்மதியைத் தருவதாக அமைந்தது.

  “உங்களது கலக்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் யாரும் கவலை அடைய வேண்டாம். உங்கள் மூவருடைய கணிப்பும்  உண்மையே”

  இதைக்கேட்ட மூன்று ஜோதிடர்களும் மீண்டும் குழப்பமடைந்தனர். ஏதாவது ஒரு ஆயுள்தானே சரியாக இருக்கும். சுவாமிகள் மூன்றுமே சரி என்கிறாரே என்று குழப்பமடைந்தனர்.

  மூவரது குழப்பத்திற்கும் கீழ்கண்டவாறு பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீஇராகவேந்திரர்.

  “நான் இந்த மனித உடலோடு இந்த பூலோகத்தில் வாழப்போவது நூறு ஆண்டுகள் மட்டுமே. அடுத்ததாக நான் இயற்றிய நூல்கள் முன்னூறு வருஷங்களுக்கு நடைமுறையில் இருக்கும். கடைசியாக சோதிடர் சொன்னபடி நான் பிருந்தாவனத்தில் ஜீவசமாதியில் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்புரியப் போவது எழுநூறு ஆண்டுகள். ஆக உங்கள் மூவருடைய கணிப்பும் சரிதான்”

  மகான் இராகவேந்திரர் சொன்னதைக் கேட்ட ஜோதிடர்கள் மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

  இதெல்லாம் அந்தக்காலம். இராகவேந்திரருக்கு ஜோதிடம் கணித்தவர்கள் முறைப்படி ஜோதிடத்தை முழுவதுமாக கற்றவர்கள். இதைப் படித்து நீங்கள் உங்கள் மகனோ அல்லது மகளுடைய ஜாதகத்தையோ எடுத்துக் கொண்டு மூன்று ஜோசியர்களைச் சந்திக்கப் போய்விடாதீர்கள்.

  தற்காலப் பெற்றோர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு மனதிற்கு சரியென்றுபடும் ஏதாவது ஒரு ஜோசியரை திருமண விஷயமாக கலந்தாலோசியுங்கள். அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ளுங்கள். ஜோசியர்களை அடிக்கடி மாற்றாதீர்கள்.   நாலு ஜோசியர்களை கலந்தாலோசித்தால் நாலுவிதமாகத்தான் சொல்லுவார்கள்.

  ஜோசியம் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். காலங்காலமாக நம் பெரியவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விஷயம். நாமும் அதை நம்புவோம்.  தவறில்லை. அதன் பின்னாலேயே ஓடி நம் குழந்தைகளின் வாழ்க்கையைத் தொலைப்பது மாபெரும் தவறு. நம் முன்னோர்களின் காலத்தில் எல்லோரும் சரியாக இருந்தார்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்துச் செய்தார்கள். யாரையும் மனதால் கூட ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் மனசாட்சிக்கு பயந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இப்போதெல்லாம் எந்த தொழிலிலும் பணம் ஒன்றே பிரதானம்.

  கடவுளை நம்புகிறவர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. கடவுளை முழு மனதோடு நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்குங்கள். உங்களுக்குத் தோல்வி என்பதே இருக்காது. பணமில்லாமல் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளிப் போகலாம். நல்ல வரன் அமையாமல் கல்யாணம் தள்ளிப் போகலாம். நல்ல மண்டபம் கிடைக்காமல் பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போகலாம்.     ஏன் நல்ல சமையல்காரர் கிடைக்காததால் கூட பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போகலாம். ஆனால் ஜோசியக்காரரால் கல்யாணம் தள்ளிப் போகவே கூடாது. எனக்குத் தெரிந்து ஜோசியத்தால் இரண்டே நன்மைகள்தான் இருக்கிறது. ஒன்று நம்மை வைத்து உட்கார்ந்தபடியே பணம் சம்பாதித்து பல ஜோசியர்கள் பங்களா கார் என சௌகரியமாக இருக்கிறார்கள். இரண்டாவது பெண் வீட்டுப் பக்கமோ பையன் வீட்டுப் பக்கமோ ஏதாவது குறைகள் இருந்து அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஜாதகம் சரியில்லை என்று சுலபமாகச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். இந்த இரண்டையும் தவிர ஜோசியத்தால் எந்த பலனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

   இப்போது நான் என் நண்பரின் மனதைத் தேற்றவேண்டும்.

  “சரிப்பா. விடு. எல்லா தப்பையும் உன்கிட்டே வெச்சிகிட்டு இப்ப நீ அவங்களை குறைசொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. கடவுளை நீ நம்பறியா?”

  “நிச்சயம் நம்பறேன்”

  “எதையாவது ஒண்ணைத்தான் நீ நம்பணும். கடவுளை நம்பறே. ஜோசியம் ஜாதகத்தை அதைவிட அதிகம் நம்பறே. சரி. விடு. நடக்கறதெல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சி நீ உன் பொண்ணு கல்யாண வேலைகளைப் பார்.     நிச்சயம் வேற பண்ணிட்டே. இனி ஒண்ணும் பண்ண முடியாது.  அவங்க கேக்கறமாதிரி அந்த மண்டபத்தை புக் பண்ணிடு. ஜாதகம் ஜோசியம் எல்லாத்தையும் இந்த நிமிஷமே மறந்துடு. உன் பொண்னையும் மனைவியையும் அழைச்சிகிட்டு உனக்குப் பிடிச்சமான ஒரு கோயிலுக்குப் போ. பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுன்னு மனசார வேண்டிக்க.  நல்லதே நடக்கும்.  சரியா?”

  நண்பர் யோசித்தார். அவர் முகம் இப்போது தெளிவாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

  “இப்பதான்பா எனக்கு நிம்மதியா இருக்கு. நீ சொல்றபடியே செய்யறேன்”

  “அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கு இன்னொரு பொண்ணு இருக்கில்லே ?”

  “ஆமாம்”

  “அந்த பொண்ணுக்காவது நல்ல குணமுள்ள மாப்பிள்ளையா பாரு.  ஜோசியம் ஜாதகம்னு பதிமூணு கட்டத்துக்குத் தேவையில்லாம முக்கியத்துவம் குடுத்து பொண்ணோட வாழ்க்கையிலே விளையாடாதே”

   “நீ சொன்னா கூட இனி அந்த தப்பைச் செய்யவே மாட்டேன்”

  சந்தோஷமாய் புறப்பட்டு வீட்டிற்குப் போனார்.

  அப்பாடா. நான் சொல்லி ஒருவர் என் பேச்சைக் கேட்டுவிட்டார்.  அவரைவிட இப்போது எனக்குத்தான் சந்தோஷமாக இருக்கிறது.

  இந்த இதழை மேலும்

  நிழலா? நிஜமா? நினைவுகள்!!

  நண்பரோடு நடந்து செல்கின்றபாதைகள் நினைவினிலே நிழலாடத் தவறுவதில்லை. நிஜங்கள் நாளடைவில் நிழல்களாகிப் போகின்றதா? அவ்வளவு தானா? அவற்றின் வலிமை என்று யோசித்துப் பார்க்கின்றோம்.

  நிறைய அறிவியல் நிஜங்களை மன நிழல்களாகவே உருவகப்படுத்தி நினைவில் வைக்க வேண்டி உள்ளது. வகுப்பறையில் பாடம் எடுக்கின்ற பொழுது ஆசிரியரின் நிஜத்தால் தோற்றுவிக்கப்படும் நிழல்கள் மாணவர்களின் மனதில் நினைவலைகளாகப் பதிவாக வேண்டிடும். அவையே அறிவாகப் பரிமளிக்கும்.

  பொதுவான விஷயம் குறித்து மாணவர்களிடத்திலே  பேசிக் கொண்டிருந்தோம்.  பி. மலலாபுரம் தொப்பூர் உட்பட பல பள்ளி மாணவியர் வந்திருந்தனர். அது ஒரு அறிவியல் கண்காட்சி. உங்கள் எதிர்பார்ப்பு? என்ன என்று சொல்லுங்கள் என்றேன். ஓரிரு நிமிடங்கள் எந்த சலனமும் இல்லை.

  யாருமே என்னோடு பேசவில்லை. “பேசவிரும்பவில்லை, என்றால் பிறகு பேசாமல் அமர்ந்துவிடுவேன்” என்றேன். ஆசிரியர்கள் பதட்டமடைந்து மாணவர்களுக்கு ஐடியா கொடுக்கத் தொடங்கினர். அதற்கும் நாம் மறுப்புச் சொல்லிய பிறகு மூவர் வந்தனர்.  யாருக்கும் அறிவியல் கண்காட்சிக்கு வந்ததற்கும், வந்து சென்றபின் இக்கருத்தைத் தான் குறிப்பாகப் பெற்றுச் செல்லவேண்டும் என்பதற்கும் எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்லவில்லை.

  ஒரு மாணவன், குறிப்பாக “யாராவது எனக்கு அட்வைஸ் செய்தார்களேயானால் அது எனக்கு பிடிக்காது, இருந்தாலும் கேட்டுக் கொள்வோம் என்று முடிவு செய்தே வந்திருக்கின்றேன்” என்றார்.

  இவை எல்லாமே எதிர்காலத்திற்கான நினைவுகள். அவை நிழல்களாகவே உருவாக்கப்படுகின்றன. நிஜ வடிவம் பெறுவது நம் நினைவுகளின் வலிமைகளிலேதான் உள்ளது.

  சமீபத்தில் “The Secret” என்றொரு புத்தகத்தினை மரியாதை நிமித்த சந்திப்பில் நண்பரொருவர் கொடுத்தார். என்ன புத்தகம் என்றேன்?

  இதிலென்னங்க சீக்ரெட் திறந்து பார்த்தா தெரிஞ்சுடுமே? என்று கேட்டதற்கு திறந்து பார்த்தாலும் சீக்ரெட் தான் சார் என்று பதில் வந்தது.

  அப்படி வந்து சேர்ந்த புத்தகமது.

  புத்தகங்கள் மனதில் ஏற்படுத்தும் நிழல்களைக் காட்டிலும் புத்தகங்கள் வந்த வழி இருக்கிறதே அவை ஏற்படுத்தும் நிழல்கள் இன்னும் ஆழமானவை.

  சோகம், பிரிவு, காதல், கனவு, நட்பு, நேசம், திருமணம், வழியனுப்பல், வரவேற்றல் என்று எல்லா சமயங்களுக்குமாக காகிதத்தில் உறைந்த எல்லா மாணவர்களின் எழுத்து நினைவுகள் பொதிந்து கிடக்கக் காணலாம். அவற்றை நிழல்களாகிப் போன நிழல்கள் என்று கொண்டால், நிற்பதுவே நடப்பதுவே… நீங்களெல்லாம் பாட்டில், எழுதியது வேறு எழுத வந்தது வேறு… திரும்ப புத்தகத்துள் போவோம்.

  ஆஸ்திரேலியாவின் ரோண்டா பைரின் (Rhonda Bryme) எழுதிய அந்தப் புத்தகத்தில் இருந்த ஆல்ளீப்ரீட் ஐன்ஸ்டீனின் பொன்மொழி ஒன்றைத்தான் தொட விழைகின்றேன்.

  நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் மூன்றுமே பிடிவாதமாக நிலைத்திருக்கும் கற்பனைத் திரையாலேதான் பிரிந்திருக்கின்றன என்று சொல்கின்றார். அதாவது எனக்குப் புரிந்தவரை Stubbornly President Illusion என்றால், மனம்போல் வாழ்வு… இதையே விவேகானந்த சுவாமிகள் சொன்னால் ஒரு அர்த்தமும், வித்தியாசமான சுவாமிகள் சொன்னால் வேறு அர்த்தமும் வந்தாலும் பொருள் ஒன்றே!

  இரமண மகரிஷி தேச கால தூரத்தால் பிரிந்திருப்பது நிஜமல்ல என்று மனதில் ஓடும் மாயத் திரைப்படமே வாழ்வு என்றும் எளிதாக விளக்குவதும் இதுவே.

  கடவுள் அல்லது இயற்கை மனிதருக்கு அவங்கவங்க பார்வை மூலம் மட்டுமே தெரியும்னு சொல்ல வரலை. ஆனாலும் நம்ப சிலதை நிஜம்னும்  சிலதை நிழல்னும் நம்புறோம்.

  உதாரணமாக, நம்ப வீட்டில பர்ஸை கண்ணாடியை, பத்திரமாக வைத்துவிட்டு மறந்துவிட்டால் தொலைந்து போனதாய் நிழலாக நினைத்துவிட்டால் மறுபடி கிடைக்காத பொருளின் மதிப்பு மலைப்பாகிப் போய் பதட்டம் பலமடங்காகிப் போகின்றது.

  “ஆட்டைத் தோளில் போட்டுத் தேடிய கதை” என்று பகவான் இரமணர் சொல்வார் அதைப் போல் அவர் நம்மை தப்பாய் நினைப்பாரோ? அவள் நம்மை மறந்துவிட்டாளோ? என்று தப்பாய் நினைப்பதும் நிழலே. ஆனால் நிஜமாய் இம்மாதிரி நினைப்புகள் ஆழமான இரணமாக்கும்.

  இவை நிஜமே இதையே மாற்றி நம்மை எல்லோருமே நேசிக்கிறார்கள்? என்று சரியாய்ப் பார்த்தால் நினைவு நிஜமாகி நிழலும் சுகமாகும். வாழ்க்கை வாழையடி வாழையாய், சிக்னல் கிடைத்த செல்போனாய் சிரிக்கும்.

  ஆங்கில இயக்குநர் பீட் ட்ரெவிஸ்ன் “வான்டேஜ் பாய்ன்ட்டில்” ஒவ்வொருக்கும் எவ்வளவு தெரியுமோ? அவ்வளவு மட்டும் காட்டுவார்கள். பிறகு மீண்டும் அடுத்த கதாபாத்திரத்தின் பார்வைக் கோணத்திலிருந்து அதே நிகழ்ச்சி. அப்போது ஒரு காதலன், காதலி, குழந்தை, அம்மா, படப்பிடிப்பு குழுவினர், பாதுகாவலர், ஜனாதிபதி என்று ஒரு கொலை முயற்சி மற்றும் அதன் முடிவை எல்லாக் கோணங்களிலிருந்தும் காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் முன்பு பார்த்ததைவிட கொஞ்சம் அதிகமாக கொஞ்சம் மாற்றி கொஞ்சம் தவறாகவே புரிந்து  கொள்வோம். கெட்டவர் நல்லவராக மாறி மாறி நல்லவரைக் கெட்டவராக என பார்வைக் கோணம் பக்குவமாக மாறும். கடந்த 2008ல் வந்தது.

  இப்படி பல படங்களைப் பற்றி நாம் சொன்னாலும் அப்பேர்ப்பட்ட படம் நம்மிடம் வந்த வழி படத்தில் உள்ளதைக் காட்டிலும் ஒரு அழகான நிழலை நம் மனதில் தோற்றுவித்தால் பிறக்கும் கேள்வி.

  நினைவுகளை வடம்பிடித்து அழைத்துப் போவது நிழல்களாகத்தானிருக்கும். ஒவ்வொரு உள்ளமும் ஆழ்ந்த நினைவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அறிவு என்பது கூட ஒருவகை மனப்பதிவுதான். அனுபவம் என்பதும் அச்சாகப் பதித்துவிடுகின்றது. நினைவலைகள் அவ்வகை அச்சுப்பதிப்பிலிருந்துதான் கிளம்புகின்றன. கிராமத்துப் பள்ளியில் படித்த நாட்கள் நிழலாடுகின்றன. பூவரச மரங்கள் செடிகளின் வடிவத்திலிருந்து வளர கை வலிக்க வாளி சுமந்து தண்ணீர் ஊற்றிய நாட்கள் நேற்றுப் போல் இருந்தது. இன்று மரத்தைக் கட்டிப் பிடிக்க முடியாத அளவு பருமனாக வளர்ந்து இருக்கிறது.

  தொட்டனைத்து ஊறும் மணற்கேணிகளைத் தேடுகின்றோம். ஆனால் கற்றனைத்து கற்பனைப் பதிவெண்கள் பதிவுகள் ஊறுகின்றன. அவை நிழல்கள் என்று இத்தகைய அறிவு யுகத்திலே ஒதுக்கிவிடல் முடியாது. நிறைய மனிதர்களுக்கு எண்கள்தான் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. தேர்வு டிப்ஸ். அச்சிட்டுக் காகிதத்தில் வெளிவரும் போதோ இணைய தளத்தில் வெளிவந்து பளிச்சிடும் போதோ? அவற்றின் பின்னே காத்திருக்கின்ற காதலர் காதலிகளின் பணி கிடைத்தால் கல்யாணம் என்கின்ற கனவுகள் நிழலாடுமா? என்கிற கேள்வி நிஜங்களை முப்பரிமாணத்தில் உள்ளடக்கியது.

  அவற்றை ஒவ்வொன்றாக அலசிப்பார்த்தால் மிகவும் உபயோகரமாக ஆச்சர்யகரமாக இருக்கும்.

  இந்த இதழை மேலும்

  துடிப்பு கவலையை அகற்றும்

  நாம் இன்பமாக இருக்கும்பொழுது நம்மைப்போல ஆயிரமாயிரம் பேர் இன்பமாக இருக்கிறார்கள். இன்னலில் மூழ்கும்போது துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது தனியாகத்தான் இருந்து அனுபவிக்க வேண்டி இருக்கும்.

  நம்முடன் எவரும் சேர்ந்து கொள்ளமாட்டார்க்ள. இன்பத்தைப் பங்கு போடவும் அதில் கலந்து கொள்ளவும் விரும்புவார்கள். ஆனால் கவலையில் கலந்துகொள்ள யாரும் முன்வரத் தயங்குவார்கள்.

  இன்பத்தை எல்லோராலும் அனுபவித்து விடமுடியும். துன்பத்தை தாங்க ஒரு சிலரால் தான் முடியும். கவலையை நாம் மட்டும் தான் தாங்கிக்கொள்ள வேண்டும்.

  நாமாக அனுபவிக்கும் கவலையைவிட்டு ஒழித்து பலரும் பங்குகொள்ளும் மகிழ்ச்சியைப் பெற நாம் ஏன் பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது?

  நம்முடைய வீட்டிலேயே புதையல் இருக்கிறது. அதுதான் மகிழ்ச்சி. நாம் அதனைத் தோண்டி எடுக்க கவலை என்ற மண்ணை அள்ளிவீசும் பொழுது மகிழ்ச்சி என்ற புதையல் நம்முடைய கண்களுக்குத் தெரியும்.

  நம்முடைய வரவினால் ஏதாவது பயன் இருக்கும். நம்மால் சமுதாயம் சிறப்படையும். நாம் எந்தவிதத்திலாவது மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

  நாம் அனுபவிக்கும் பொருட்கள் பலருடைய உழைப்பினால் தான் உருவாகி இருக்கிறது. அதேபோல நம்முடைய செய்கையினாலும், உழைப்பினாலும் மற்றவர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி.

  நம்மால் எந்த உபயோகமும் இல்லை என்று மட்டும் எண்ணிவிடக்கூடாது. உண்மையாகவே நம்முடைய வரவு உபயோகமுள்ளது.

  ஒவ்வொருவரும் நம்மைப் போலவே கவலையில் ஆழ்ந்து சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால் எந்தக் காரியமும் நடைபெறாது. எந்தப் பொருளும் உற்பத்தியாகாது.

  புதுக்கண்டுபிடிப்பும் தோன்றி இருக்காது. தோன்றவும் முடியாது. சமுதாயமே நிலைகுலைந்துவிடும். ஆனால் இந்த நிலையை எங்கும் காணமுடியவில்லையே, ஏன்?

  எல்லோரும் துடிப்புடன் செயலாற்றிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. நமக்கும் எண்ணற்ற கடமைகள் காத்துக் கொண்டிருக்கும் போது நாம் எப்படி கவலைப்பட முடியும்.

  கவலைப்படவே நேரம் இருக்காது. இன்று செய்து முடிக்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது என்பதை நினைத்துச் செயலாற்ற வேண்டும்.

  கடமையைச் செய்ய நேரம் சரியாக இருக்கும் கடமையைச் செய்யும் போது கவலை நுழைய இடம் இருக்காது. கடமையை ஒழுங்காகச் செய்து கவலையை கழற்றிவிட்டவர்கள் வரலாற்றில் பலர் இருக்கிறார்கள்.

  நாமும் அவர்களில் ஒருவராக ஏன் சேரக்கூடாது. அறிஞர்கள் பட்ட கஷ்டங்களும் துயரங்களும் அளவிட முடியாதவையாக இருக்கும்.

  ஆனாலும் கவலையை ஒழித்தே தீருவது என்ற தீர்மான முடிவுடன் செயலாற்றியவர்கள் தான் வரலாற்றில் இடம்பெற்று இருக்கிறார்கள். உலகம் உள்ளவரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும்.

  அவர்களுடைய கஷ்டங்களுக்கும், கவலைகளுக்கும் முன்னால் நம்முடைய கவலையை வைத்தால் மிகவும் சிறிதாக இருக்கும். ஆனால் நாம் நம்முடைய கவலையை மட்டும் நினைத்து மலைத்துவிடுகிறோம்.

  மற்றவர்கள் மத்தியில் நம்முடைய கவலை தூசி. நமக்கு ஏற்பட்டிருக்கும் கவலை, கவலையே அல்ல. அதனை தூசியாகக் கருதினால் நம்மைவிட்டுப் பறந்துபோய் விடும்.

  ஆனால் நாம் அதனை மலையாக நினைத்து மயங்கிவிழுந்து நிலை தடுமாறுகிறோம். கற்பாறையினுள் தண்ணீர் ஊடுறுவிப் போகுமா? கற்பாறையின் மேலே தான் தண்ணீர் போக முடியுமே தவிர உள்ளே போக முடியாது.

  இதேபோல் உறுதி மட்டும் உள்ளத்தில் இருந்தால் கவலை நம்மைத் தாண்டி போகுமே தவிர உள்ளே வராது. நாட்காட்டியில் ஒரு நாளைக் கிழிக்கையில் நம்முடைய ஆயுளில் ஒரு நாளைக் கடந்துவிட்டோம் என்று காட்டுகிறது.

  ஒவ்வொரு நாளும் நம்மைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. நமக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்களை கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை மறந்துவிடுவது சரியா?

  வாழும் காலம் குறுகியது. அதனை மனநிறைவுடன் வாழ வேண்டும். நாம் உயிரோடு இருக்கும் வரை உற்ற நண்பனாக இருப்பது இதயம், மூளை.

  இவை இரண்டும் உறுதுணையாக நமக்கு இருக்கும் பொழுது நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இன்பமான எண்ணங்களுக்கு நம்மை உறைவிடமாக மாற்றிக் கொண்டால் கவலைக்கு இடமே இருக்காது.

  அன்பும் பண்பும் ஆற்றலும் அளவிட முடியாத வகையில் உள்ளது. ஏராளமான எண்ணங்களை உற்பத்தி செய்ய மூளைக்கு சக்தி இருக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்தினால் நாம் கவலைப்படத் தேவையில்லை.

  புது முறைகளையும், சிந்தனையையும் உருவாக்கக்கூடிய சக்தி நம்மிடம் இருக்கும் போது நாம் எதற்காகக் கவலைப்பட வேண்டும்?

  கவலைக்குரிய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நிதானமாக சோர்வு அடையாமல் கவலைப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் பிரச்சனைக்கு முடிவு காண முடியாது.

  நம்மை ஆட்டிப்படைக்கும் பிரச்சனை என்னவென்று அறிய வேண்டும். எதைப்பற்றி கவலைப்படுகிறோம் என்பதை திட்டவட்டமாக உணர வேண்டும். காரணம் இல்லாமல் கவலைப்படுவதும் மனச்சோர்வடைவதும் இயல்பாக இருக்கிறது.

  கவலைக்குரிய காரணத்தை முழுவதும் ஒன்றுசேர்த்து விட முடியும். அதன் பின்பு உண்மையாக இருக்கும் காரணத்தை வைத்துக்கொண்டு அதைத் தீர்ப்பதற்கான வழிமுறை என்ன என்பதை சிந்தித்து ஆராய வேண்டும்.

  ஆழ்ந்து சிந்தித்தபின் ஏற்படும் முடிவை உடனே செயலாற்றவேண்டும். ஒரு முடிவுக்கு வந்தபின் மீண்டும் அதனை யோசித்துக்கொண்டு காலத்தைக் கடத்தக்கூடாது.

  இது சரியா, தவறா என்று எண்ணி மனதைக் குழப்பிக் கொண்டிருக்காமல் எடுத்த முடிவு சரிதான் என்ற துணிவு நம்மிடம் இருக்க வேண்டும். சலன புத்தி ஏற்பட்டால் கவலையை விரட்ட முடியாது.

  நம்முடைய முடிவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அதனைத் தீர்ப்பதற்கு உண்டான வழிகளை மேற்கொள்ள வேண்டும். நடந்தது பற்றி நினைத்துக் கவலைப்படக் கூடாது.

  முடிந்துபோன காரியம் மீண்டும் வரப்போவதில்லை. பின்பு ஏன் அதனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனி என்கிறார் கார்லைல்.

  எது நடந்து முடிந்ததோ அதனை அமைதியுடன் ஏற்றுக்கொள்வதுதான் அறிவுடைமையாகும். இதுதான் மகிழ்ச்சியின் முதல்படி.

  அதனால் நமக்கு என்ன ஏற்பட்டாலும் அமைதியுடனும் நிதானத்துடனும் இருக்கப்பழகிக் கொண்டால் கவலை நமக்கு ஏற்படாது. நடக்க வேண்டியது நடந்தது என்று எண்ணி அமைதி அடைய வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  உலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய்

  ஒரு வெற்றியாளன் எல்லாச் சிக்கல்களிலும் வாய்ப்பைத் தேடுகின்றான்; ஒரு தோல்வியாளன் எல்லா வாய்ப்புகளிலும் சிக்கலைக் காண்கின்றான். “இந்த உலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய். எப்போது இறப்பாய் என்று உனக்குத் தெரியாது. அதற்குள் வாழ்ந்து விடு. ஏனென்றால், நீ வாழப் பிறந்தவன்” என்பார் மார்க்சிம் கார்க்கி.

  இளமையில் நீ வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் நீ கண்ணீர் சிந்தவேண்டும். வேகமாகச் செல்ல வேண்டுமென்று துடிக்காதே! வழியில் உள்ள முட்டுக் கட்டைகளை அகற்றிவிடு; விரைவாக சென்று விடுவாய்.

  “நான் உலகத்திலேயே சிறந்தவன் என்று அலங்கரிக்கப்படும் நேரம் எனக்குத் தெரியும். யாரெல்லாம் என்னை மறுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் என்னை ஏற்கும் காலம் வரும் என்று எனக்குத் தெரியும்” என்பார் வால்விட்மன். சிலருக்கு வாழ்க்கை மூடப்பட்ட வாசலாகத் தெரிகிறது. சிலருக்கோ திறக்கக் கூடிய வாசலாகத் தெரிகிறது. சிலருக்கு வாழ்க்கை ஏமாற்றங்களின் இருப்பிடமாய்த் தெரிகிறது. சிலருக்கோ வாய்ப்புகளின் வசிப்பிடமாகப்படுகிறது.

  வாழ்க்கையை வசமாக்கிக் கொள்ள துடிப்போரும், வாழ்க்கையை நேசிப்பவர் அனைவரும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஏனென்றால் வாழ்க்கையை உருவாக்குவதே நேரம்தானே!

  சில சாதனை மனிதர்களின் உழைப்பு நேரத்தை அறிந்தால், அவர்களின் முன்னேற்றத்தின் மூலவித்து எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியும். உலக புகழ்பெற்ற உலகம் உள்ளளவும் மறக்க முடியாத  மறைக்க முடியாத மாபெரும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தினமும் 20லிருந்து 22 மணி நேரம் உழைத்ததால்தான் 1039 கண்டுபிடிப்புகளை அவரால் உலகுக்கு தரமுடிந்தது.   ஜி.டி.நாயுடு 18 லிருந்து 22 மணிநேரம் உழைத்தவர்.

  தற்போது கோவையில் வாழ்ந்து வரும் கிரைம் நாவல் மன்னர் ராஜேஸ்குமார் 12 மணி நேரம் உழைக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் தினமும் 4 மணி நேரம் மட்டுமே உறங்குவாராம். எழுதி புகழ் பெறவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் பாலகுமாரன் போன்றவர்களின் உழைப்பை  பின்பற்றவேண்டும்.

  உழைக்கும் நேரத்தை எவன் உயர்த்திக் கொள்கிறானோ, அவனே சிகரத்தின் சிம்மாசனத்தில் நிற்ப்பான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உழைக்கும் நேரத்தை வீணாக்காமல் கடுமையாக உழைத்து முன்னேறுங்கள். உங்கள் உழைப்பு நேரத்தை பிறருக்குக் கொடுத்துவிட்டு ஏமாறாதீர்கள். ஒவ்வொரு வினாடியும் உங்களுக்கானது. உங்களின் முன்னேற்றத்திற்கானது. உங்களின் வெற்றிக்கானது.

  தூக்கம் கொண்டது கால்வாசி

  துக்கம் கொண்டது கால்வாசி

  ஏக்கம் கொண்டது கால்வாசி

  மீதம் இருப்பது கால்வாசி

  கவலையைத் தூரத் துரத்துங்கள்!

  கவிதையை நெஞ்சில் நிறுத்துங்கள்!

  தவணை முறையில் வாழாமல்

  சில தவங்கள் செய்வோம் வாருங்கள்!

  என்பார் கவிப்பேரரசு. வாழ்க்கையே ஒரு தவம்; அதை நாமும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

  உங்களுக்கு சிறகுகள் இருப்பதை ஏன் மறந்து போனீர்கள்? புழுக்களாக உணர்கிறீர்கள். உங்களை நீங்களே முடமாக்கிக் கொள்ள வேண்டாம். சிறகை விரியுங்கள்.  அதோ வானம் பரந்து கிடக்கிறது.

  “நேரத்தை சம்பாதித்துக் கொண்டவன் எல்லாவற்றையுமே சம்பாதித்துக் கொள்வான்” என்பார் பெஞ்சமின் டிஸ்ரேலி. வெண்டல் நேரத்தை இப்படிச் சொல்வார்: என்னுடைய இடது பையில் இருக்கிற வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொள். வலது பையை விட்டுவிடு, அதில் நான் வைத்திருப்பது பொன்னான நேரம். உங்களுடைய நாளை நீட்டித்துக் கொள்ள விரும்பினால் இரவிடமிருந்து, சில மணி நேரங்களை அபகரித்துவிடுங்கள். நியூயார்க் கிளப்பில் இப்படி ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள். காலையில் எழுவதை ஐந்து நிமிடம் தள்ளிப்போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன. அப்படியென்றால் காலையில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழவேண்டும் என்பதை மேற்கூறிய வாசகம் தெரிவிக்கிறது.

  கோடீஸ்வரர் ஒருவரிடம் நிருபர் கேட்டார், “உங்களுடைய பொழுது போக்கு என்ன?” “நான் அப்படி எதையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறிவிடுவேன்.  அதுதான் என்னுடைய பொழுதுபோக்கு, ஓய்வு எல்லாம்’ என்றார் அந்த கோடீஸ்வரர். ஒருமனிதன் வாழ்க்கையில் முன்னேற, சாதனையாளனாக மிளிர, கோடீஸ்வரானாகக் கொடிகட்ட அவனது நேர நிர்வாகமே முக்கியம். பைபிளின் வாசகம் “நீங்கள் உறக்கத்தை விரும்பினால் வறுமை அடைவீர்கள்.  கண்களைத் திறந்து வையுங்கள். நிறையவே உணவைக் காண்பீர்கள். அது மேலும் கூறுகையில் சோம்பேறிகளே! எறும்புகளின் இயக்கத்தை கவனித்தாவது புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்!”

  தேசப் பொருளாதாரத்திற்கு நேரம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தனிநபரின் குடும்ப வளத்திற்கும், நேரம் என்றாலே காசும் உள் அடக்கம்தானே!’ உங்களுடைய காரியத்தை சுறுசுறுப்பானவர் கையில் ஒப்படையுங்கள். கவலை இல்லாமல் இருக்கலாம் என்பார் வின்ஸ்டன் சர்ச்சில். சுறுசுறுப்பானவன் காலடி மண்ணே எல்லா நாட்டுக்கும் தலைநகரம் என்பார் ஒரு கவிஞர்.

  சுறுசுறுப்பான ஆசாமிதான் வேலையைத் துரித உணர்வோடு செய்து முடிப்பான்.  காலக் கெடுவில் அக்கறைக் காட்டுவான். நேரத்தில் செய்து முடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக் கொண்டிருப்பார். தம்முடைய காரியத்தின் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதையும் அறிவார். காலக்கெடு இருந்தால்தான் காரியத்தில் கவனத்தை ஒரு முகப்படுத்த முடியும். கணிசமான அளவு காரியத்தை முடிக்கவும் செய்யலாம்.

  ஒரு ஆண்டின் பெருமையை தேர்வில் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு மாதத்தின் அருமையை குறைப்பிரசவம் கண்ட பெண்மணியிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு நாளின் அருமையை, ஒரு நாள் தாமதித்து பணியில் அமர்ந்ததால் பதவி உயர்வை இழந்த ஊழியரை கேட்டுப் பாருங்கள். ஒரு மணி நேரத்தின் அருமையை, தேர்வு எழுதிவிட்டு வந்த ஒரு மாணவனிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு நிமிடத்தின் அருமையை, ரயிலை தவறவிட்டுவிட்டு நேர்காணல் வாய்ப்பை இழந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒரு நொடியின் அருமையை, விபத்தில் உயிர்பிழைத்தவரிடம் கேட்டுப் பாருங்கள். காலத்தின் அருமையை, எவ்வளவு அருமையாக கணக்கிட முடிகிறது என்பதைப் பார்த்தாவது, காலத்தின் கரங்களைப் பற்றிக்கொள்வோம் வாருங்கள்!

  நேரப்பங்கீடு செய்கிற போது, காலக்கெடுவை நினைவில் நிறுத்தி, எப்போதும் மாறுதலுக்குத் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல், மனிதர்களோடு மட்டுமல்ல, வாழ்க்கையை வாழ்க்கையுடனும் உங்களால் சமாதானம் (காம்ப்ரமைஸ்) செய்து கொள்ளமுடியாது போகும்.

  நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ, அதுதான் நாள் முழுக்க தொடர்கிறது. உங்களுடைய நாளின் ஆரம்பம் விழிப்பதில் இருந்தே தொடங்கும். எப்படி தொடங்குகிறீர்களோ அப்படித்தான் வீட்டிலும், வெளியிலும் உங்களுடைய வேலை அமைகிறது. ஆக எழுந்திருக்கும்போது சீரான மனநிலை அவசியம். அன்று செய்யப்போகிறவேலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இனிமையான வேலை என்று எண்ண வேண்டும். அந்த எண்ணமே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வேலைக்குத் தேவையான சக்தியையும் அது வழங்கிக் கொண்டே இருக்கும்.

  ‘எனக்குள் உள் ஆற்றல் இருக்கவே செய்கிறது.  இன்னமும் அதை ஒவ்வொரு நாளும் வரவேற்க, நான் போராடிக் கொண்டிருக்கிறேன், என்றான் கலீல் ஜிப்ரான்.

  ஒரு பூச்செடியில், பூத்திருக்கின்ற பூக்களில் தேன் எடுப்பதற்காக பறந்து வந்து அமர்ந்தது ஒரு தேனீ. ஏற்கனவே ஒரு வெட்டுக்கிளி அந்த செடியின் இலைகளைக் கத்தரித்து விழுங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது தேனீயிடம் சொன்னது “இந்த செடியால் நாம் இருவரும் பயன்பெறுகிறோம். அவை இல்லாமல் இருந்தால் நாம் இருவருமே செத்துப்போய்விடுவோம்” என்றது. அதற்கு தேனீ பதில் சொன்னது, “உண்மைதான்.  ஆனால், நீ இந்தச் செடியைச் சுரண்டுகிறாய். நானோ இந்தச் செடியை மகரந்தசேர்க்கையால் செழிக்கச் செய்கிறேன். இது பூத்து காய்த்து வளம்கொழிக்க என் இறகுகளால் விசிறி வீசுகிறேன். என் நாக்குகளால் வேறொரு பூவின் மகரந்தத்தை அட்சதையாகத் தூவுகிறேன்” என்றது. சிலர் பொழுதைப் போக்குகிறார்கள். சிலர் பொழுதை ஆக்குகிறார்கள் என்பதை இந்த தேனீ, வெட்டுக்கிளி உரையாடல் தெரிவிக்கிறது.

  மிகப்பெரிய செல்வச் சீமான், எஃகு தொழிற்சாலை உரிமையாளர் ஆண்ட்ரூ கார்னகியிடம் ஒருவர் கேட்டார். “இவ்வளவு பெரிய உயரத்தை எப்படி அடைந்தீர்கள்?  பதில் சொன்னார் கார்னகி “தங்கச்சுரங்கத்தில் இறங்கும்போது புழுதியும், மணலும், அழுக்கும் அப்பிக்கொள்கின்றன. அவற்றைக் கடந்து போனால்தான் தங்கம் கிடைக்கிறது. புழுதிக்குப் பயந்தால் தங்கம் எடுக்க முடியாது. சிரமங்களுக்குப் பயந்தால் சிகரம் தொட முடியாது”.

  வெற்றி பெற்ற மனிதனையே இவ்வுலகம் விரும்புகிறது. தோல்வியுற்றவர்களுக்கு இங்கு இடமில்லை. ஒரு மனிதன் வெற்றிப் பாதையில் நடைபோடும்போது, அவனது ஒவ்வொரு அசைவும் அங்கீகாரத்தையும் ஆமோதிப்பையும் பெறுகின்றன. உலகமே அவனுடன் வர விரும்புகின்றது. அவனை அத்தகைய மணிமகுடத்தில் ஏற்றி வைத்தது அவனது நேர நிர்வாகமே!

  “சிந்திப்போம் மனிதர்களே! உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சில மணி நேரங்களை அறிவுக்காக சேமியுங்கள். எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.பாறைகள் எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை. துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.  தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல்தருகின்றன மரங்கள்.  அவசரப்படாதீர்கள். அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை. இங்கே மலர்களுக்குத்தான் முதல் மரியாதை. வேர்கள் வெளிவருவதேயில்லை. தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல. தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.  சுறுசுறுப்பாயிருங்கள். ஓடிக்கொண்டிருக்கும் நீரில்தான் ஆக்ஸிஜன் அதிகம்.  எல்லோரையும் மதியுங்கள். சமுத்திரத்தில் எந்தத்துளியோ எவருக்குத் தெரியும்?  உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல. ஊர் பேசட்டும். பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பை காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது. அறிவில் நிமிருங்கள். அன்பில் நெகிழுங்கள்.  உழைப்பில் உயருங்கள். பிறகு பாருங்கள். இந்த பூவுலகமே புறாச்சிறகடியில் – கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்கு கதகதப்பாய் இருக்கும் என்பார் கவிப்பேரரசு.

  இந்த இதழை மேலும்

  ஏன் ? தோல்வி வருகிறது

  உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலே நம்பிக்கை இல்லாதவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியாயத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைபிடிக்க வேண்டும். பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழ வைக்கும். அதற்கு மாறாக பொறாமை, முரட்டுச் சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் எல்லாம் வருங்காலத்தில் நம்மை எதற்கும் தகுதியற்றவனாக்கிவிடும். எப்போது பிரச்சனை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்றமனவருத்தம் உண்டாவதில்லை. லட்சியம் நிறைவேண்டும் என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும். அப்போது நம்முடைய ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கும் என்கிறார் தாகூர்.

  எப்போதும் அச்சத்தோடு இருப்பதைவிட ஆபத்தை நேருக்குநேர் சந்திப்பதே நல்லது. இதை யார் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பொதுவாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் முதலில் வெற்றியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். தோல்வி பற்றிய பயத்திலேயே சிலர் வெற்றியை இழந்துவிடுவதும் உண்டு. ஏன்? தோல்வி வருகிறது என்று கேட்டால் என் கவனக்குறைவினால் வந்தது என்பார்கள் அல்லது எனது தவறான அணுகுமுறையினால் வந்தது என்பார்கள்.

   ஆயிரம் முறைதோல்வி கண்ட எடிசனிடம் தோல்வி பற்றி கேட்டதும், தோல்வியா அப்படி என்றால் என்ன? என்று கேட்டாராம். தோல்வி என்பதை அனுபவிக்காவிட்டால் வெற்றிக்கனியை ருசிக்க முடியாது என்ற உண்மையை நாம் முதல் புரிந்துகொள்ள வேண்டும்.

   ஏன் தோல்வி வருகிறது என்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இதுதான் காரணம் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அவரவர் செயல்களின் அணுகுமுறைகளைப் பொறுத்தே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. தேர்வுக்கு ஒழுங்காக படிக்காத மாணவனால் நன்றாக தேர்வு எழுத முடியாமல் சோர்ந்துவிடுகிறான். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இல்லாத காரணத்தால் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள்.

  தோல்வி என்பது ஒரு அனுபவப்பாடம் தான். தோல்வி தான் நம்மை வெற்றியடைய தயார் செய்கிறது. தோல்வி வந்துவிட்டால் மனம் கலங்குவதைவிட தோல்வியைக் கொண்டாட கற்றுக்கொண்டால் ஆரவாரத்தோடு வெற்றி நம்மை அரவணைக்கும். உங்கள் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிகிறதே என்று வருந்தாதீர்கள். அதுவே ஒரு நல்ல வெற்றியைத் தரலாம். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிற்கு காதுகேற்காது. முதலில் அவர் காதுகேற்கும் கருவியைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வியைத் தந்தது. அதற்கு மாறாக, நம்பிக்கையோடு முயற்சி செய்ததன் பலனாக தொலைபேசி கிடைத்தது.

  எனக்கு உதவிகள் கிடைக்கப்படவில்லையே. வசதி இல்லையே. தகுதி இல்லையே என்று வருத்தத்துடன் நம்பிக்கையற்ற தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் தான் தோல்வி நங்கூரமாய் அமர்ந்து கொள்ளும். நம்பிக்கையுடன் தொடர்ந்து அடுத்த முயற்சியை செய்பவர்களிடம் மட்டும் வெற்றிச்சாமரம் வீசும். வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் கேட்டுப்பார்த்தால், நான் இந்த நிலைக்கு வர பல சிரமங்களையும் சிராய்ப்புகளையும் பட்டுத்தான் வந்தேன் என்பார்கள். வலிகள் இல்லாமல் நமக்கான வழிகள் பிறப்பதில்லை. தாய்க்கு வலி உண்டானால் தான் குழந்தை வெளிவர முடியும். இதுதான் எதார்த்தம்.

  ஒரு வெற்றியைப் பெற நூறு தோல்விகளையும், சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் நமது முயற்சிகளில் இருந்து சிறிதும் விலகாமல் மனம் தளராமல் குறிக்கோளை அடையத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொண்டால் தோல்வி நம்மிடம் கைக்குழுக்கி விடைபெறும்.

  ராபர்ட் ஷில்லர் கூறுவார், “”எதிர்பாராமல் இழப்புகள் நேரலாம். உங்கள் மனம் இழந்ததையே எண்ணி வருந்தக்கூடாது. கைவிட்டுப்போனது போகட்டும். கையில் என்ன மிச்சமிருக்கிறது என்று பாருங்கள்” என்பார். எதுவும் இங்கே நிரந்தரமல்ல. எல்லாம் மாறக்கூடியதே. தோல்வி வரும்போது, அட இவ்வளவுதானா என சாதாரணமாக எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும். இந்த வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாகப்போனாலும் உங்களால் அவற்றைசரிசெய்ய முடியும் என்று நம்புங்கள்.

  ரூபென்கே யங்டால் சொன்ன வரலாற்று நிகழ்வொன்று. அது ஒரு போர்க்காலம். ரெய்ம்ஸ் தேவலாயத்தின் பல வண்ணக் கண்ணாடிகளான ‘ரோஸ் விண்டோஸ்’ அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வட்டாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் பொறுமையாய் மண்டியிட்டபடி அந்தக் கண்ணாடித்துண்டுகளைச் சேகரித்தார்கள். போர் முடிந்தபின்பு, திறமைவாய்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு சிதைவுகளை சரிசெய்ய முற்பட்டார்கள். ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொருத்தி ‘ரோஸ் விண்டோ’ மீண்டும் உருவாக்கப்பட்டது. ரெய்ம்ல் உள்ள இன்றைய “ரோஸ் விண்டோ” முன்பு இருந்ததையும்விட இப்போது அழகாய் காட்சியளிக்கிறது.

  நம்முடைய உடைந்துபோன வாழ்க்கையைச் சரிசெய்ய கடவுள் இருக்கிறார். நமக்கு உதவி எங்கே எப்போது தேவைப்படும் என்பது அவருக்குத் தெரியும். அங்கே அந்த கணத்தில் அவர் வந்து விடுவார்.

  தோல்வி ஏன் வருகிறது என்று வினா எழுப்பி காலத்தை வீணடிப்பதைவிட தோல்வியிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்ற விழிப்புணர்வு பெறுவதே புத்திசாலித்தனம். கரையைக் கடக்க முடியவில்லையே என்று கடல் அலையெழுப்பாமல் இருந்ததில்லை. தொடர்ந்து அது முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும். ஓடும் நதிகளால் தான் இலக்கைத் தொட முடியும். தேங்கிய குட்டையால் நாற்றத்தை மட்டுமே காண முடியும். நீங்கள் தேங்கிய குட்டையா? ஓடும் நதி நீரா? முடிவெடுங்கள் தோல்விகளில் தொலைந்து போகும் முன்.

  இந்த இதழை மேலும்