![]() |
Author: இராஜேந்திரன் க
|
குழந்தை பிறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தோஷத்தை தரும் நல்ல நிகழ்வு. ஒவ்வொரு தாயும் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காரணம் சிசுவின் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பதால், முறையான கவனிப்பு குறையும் போது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
சிசு பராமரிப்பின் முக்கியத்துவம்
சிசு பருவம் என்பது பிறந்த முதல் 28 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் சிசு பல நிலைகளை கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தாயும் சிசுவை நோயின்றி காக்க சிசு பராமரிப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
அதில் முக்கியமானவை,
- தாய்ப்பால் ஊட்டுதல்
- உடல் வெப்பநிலை பாதுகாத்தல்
- சுத்தம் மற்றும் நோய் தடுப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆகும்.
குழந்தை பிறந்த முதல் சில மணிநேரங்களில் கவனிக்கப்பட வேண்டியவை
சிசுவை சுத்தம் செய்தல்
சிசு பிறந்தவுடன் சுத்தமான துணியால் இரத்தம் மற்றும் மலம் போன்றவற்றை துடைக்கவேண்டும். உடம்பில் ஒட்டியுள்ள மெண்மையான (Vernix) பொருளை துடைக்கக் கூடாது. ஏனென்றால் இது தோலுக்கு பாதுகாப்பை கொடுத்து நோய் வராமல் தடுக்கும். மேலும் துடைப்பதால் தோலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அடையாள அட்டை
எல்லா சிசுவிற்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டையில் தாயின் பெயர், மருத்துவமனை எண், ஆணா? அல்லது பெண்ணா? பிறந்த எடை, குழந்தையின் உள்ளங்கால் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.
சிசுவின் எடை
சிசுவை ஒருமணி நேரத்திற்குள் எடை போட வேண்டும். மின் எடை சாதனமாக இருந்தால் நல்லது.
வைட்டமின் K1 ஊசி
எல்லா சிசுவிற்கும் வைட்டமின் K1 ஊசி போட வேண்டும். நிறைபிரசவமாக இருந்தால் 1 மில்லிகிராம் குறைபிரசவமாக இருந்தால் 0.5 மில்லிகிராம் போட வேண்டும். இதனால் பின்னால் இரத்தப் போக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
வயிற்றைக் கழுவுதல்
பிறந்த குழந்தையின் வயிற்றைக் கழுவுவது என்பது அவசியமில்லை. சில சமயம், குழந்தை பிறப்பதற்கு முன்னரே மலம் கழித்த தண்ணீரைக் குடித்தால் வயிற்றைக் கழுவ வேண்டும், எதற்காகவென்றால் வாந்தியைத் தடுப்பதற்காக.
பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை
குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் பிறவிக்குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் மூக்கு வழியாக கத்தீட்டர் (Catheter) போடவோ அல்லது மலவாய் மூலம் கத்தீட்டர் போடுவதைத் தடுக்கவேண்டும். குழந்தையின் உடலின் வெப்பநிலையை எலக்ட்ரானிக் வெப்பமானி மூலம் கண்டறிய வேண்டும். மெர்க்குரி வெப்பமானி மூலம் உடலின் வெப்பநிலையைப் பார்த்தால் மூன்று நிமிடம் பார்க்க வேண்டும். மலக்குடல் வெப்பமானி மூலம் உடலின் வெப்பத்தை பார்ப்பதைத் தடுக்க வேண்டும்.
இரண ஜன்னியிலிருந்து பாதுகாத்தல்
குழந்தையின் தாய் கர்ப்பகாலத்தில் இரணஜன்னிக்கான தடுப்பூசி போடாமல் இருந்தால் குழந்தை பிறந்தவுடன் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும். குழந்தையின் தாய் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தை பிறந்தவுடன் இரணஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும்.
தாயும் குழந்தையும் ஒன்றாக இருத்தல்
பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பதற்கான எந்த விதிமுறையும் இல்லை. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை சுறுசுறுப்பாகவும், விழித்துக் கொண்டும் இருக்கும். இந்த சமயத்தில் தாய் குழந்தைக்கு தாய்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தல்
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். செவிலியர்களோ அல்லது மருத்துவமனை ஊழியர்களோ குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட உதவி செய்ய வேண்டும்.
குடும்பத்தினருடன் உரையாடுதல்
குழந்தை பிறந்தவுடன் மருத்துவரோ அல்லது செவிலியர்களோ குழந்தை பிறந்த நேரம், எடை, இனம் (ஆண்/பெண்), குழந்தையின் உடல்நிலை பற்றி குடும்பத்தினருடன் உரையாட வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை உறவினர்களிடம் காட்ட வேண்டும், எதற்காகவென்றால் குழந்தையின் இனத்தை அறிந்து கொள்ளவும் , உடல்நலத்தை பற்றி அறியவும்.
குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் கவனிக்கப்பட வேண்டியவை:
தொப்புள் கொடி பராமரிப்பு
- தொப்புள் கொடியை சுத்தமாகவும், காற்றோட்டம் படும்படியாகவும் வைக்க வேண்டும்.
- 5 முதல் 10 நாட்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்து விடும்.
- தொப்புள் கொடியை ஈரம் படாமல் பாதுகாக்க வேண்டும்.
- பவுடர், விபூதி, மஞ்சள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தொப்புள்கொடியில் கண்டிப்பாக வைக்கக் கூடாது.
கண் சுத்தம் செய்தல்
குழந்தையின் கண்களை சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து துடைக்க வேண்டும்.
முழுமையான தாய்ப்பால்
தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றியும், அதை எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கர்ப்ப காலத்தில் இருந்தே தாய்க்கு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் தாய் குழந்தைக்கு வெற்றிகரமான முறையில் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
மஞ்சள்காமாலையைக் கண்டறிதல்
எல்லா குழந்தைகளையும் பிறந்த சில நாட்களுக்கு, தினமும் இரண்டு முறை மஞ்சள்காமாலை உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். பகல் வெளிச்சத்தில் குழந்தையின் உடலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை அறிவது எளிதான முறையாகும்.
தடுப்பூசி
எல்லா குழந்தைகளுக்கும், பிறந்தவுடன், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்வதற்கு முன் மாநில விதிமுறையின்படி தடுப்பூசி போட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசி குழந்தை பிறந்தவுடன் போடுவதால், தாயிடமிருந்து மஞ்சள்காமாலை பரவுவதை தடுக்கலாம்.
குழந்தையைக் குளிப்பாட்டுதல்
மருத்துவமனையில் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டுவதை தடுக்கவேண்டும், எதற்காகவென்றால் தொற்று நோயை தடுப்பதற்காகவும், உடலின் வெப்பநிலை குறைவதை தடுப்பதற்காகவும்.
தூங்கும் முறை
குழந்தைக்கு பால் கொடுத்தப்பின் நேராக படுக்க வைக்க வேண்டும். குப்புறபடுக்கவைப்பதால் எதிர்பாராத இறப்பு (SIDS) அதிகமாக வருகிறது.
பாரம்பரிய பழக்கவழக்கங்கள்
பலவிதமான பாரம்பரிய பழக்கவழக்க முறைகள் இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படுகிறது. அதில் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களான எண்ணெய் தேய்த்தல், கண்ணுக்கு மை பூசுதல், காதுக்குள் எண்ணெய் ஊத்துதல், மாட்டுச் சாணத்தை தொப்புள் கொடியில் பூசுதல், போன்றவைகளைத் தடுக்க வேண்டும்.
குழந்தையை வீட்டிற்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை
குழந்தை பிறந்த 72 – 96 மணிக்குள் குழந்தையை வீட்டிற்கு அனுப்பலாம். ஆனால் குழந்தை கீழ்க்கண்ட விதிமுறைக்குள் அடங்கியிருக்க வேண்டும். அவை,
- குழந்தைக்கு எந்த விதமான நோய்நொடிகள் இருக்க கூடாது.
- குழந்தைக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
- தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதை எவ்வாறு அறிவது என்பது குழந்தை பால்குடித்ததும் 2 – 3 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். குழந்தையின் எடை அதிகரிக்கும். குழந்தையின் உடல் எடை குறைவதன் மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக இல்லை என்பதை அறியலாம்.
- குழந்தையின் தாய்க்கு எந்த விதமான நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் தாய் குழந்தையை நன்றாக பராமரிக்க முடியும்.
தொடரும்
இந்த இதழை மேலும்

July 2014















1 Comment
மிகவும் பயனுள்ள தகவலை பிரசுரத்தமைக்கு நன்றி