Home » Articles » வாழ்க்கை விளையாட்டு

 
வாழ்க்கை விளையாட்டு


பதி ஆர்.வி
Author:

உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சோகமாக உட்கார்ந்திருந்தார்.  அவருடைய பெண்ணுக்குத் திருமணம் நிச்சயித்திருந்த நேரம் அது.

“என்னப்பா பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கே. ரொம்ப பெரிய இடம்னு வேறசொன்னே. எவ்வளவு சந்தோஷமான விஷயம். ஏன் இப்படி டல்லடிக்கிறே?”

“ஒண்ணுமில்லேப்பா. பொண்ணு நல்லா இருக்கணும்ற ஆசையிலே அவசரப்பட்டு கொஞ்சம் பெரிய இடமா பார்த்துட்டேன். ஜோசியத்தை நம்பி இப்படி அகலக்கால் வச்சிட்டோமோன்னு தோணுது”

“என்னப்பா சொல்றே?”

“என் பொண்ணுக்கு பத்துப் பொருத்தமும் உள்ள ஒருத்தன் ஹஸ்பெண்டா வரணும்னு ஆசைப்பட்டேன். வந்த ஜாதகம் எல்லாம் ஏழு எட்டுப் பொருத்தம் மட்டுமே இருந்துச்சி. அதனாலே தேவையில்லேன்னு வந்ததையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டேன். இந்த இடம் மட்டும்தான் பத்துக்குப் பத்து சரியா இருந்துச்சி.  ஆனா அந்தஸ்திலே அவங்க நம்மளைவிட ரொம்ப பெரிய இடமா இருக்காங்க. நாம நெனைச்ச மாதிரியே பத்துப் பொருத்தம் உள்ள ஜாதகமா வேற அமைஞ்சிருக்கு. இதைவிட வேறஎன்ன வேணும். எதுவா இருந்தாலும் கடனை வாங்கியாவது சமாளிச்சிக்கலாம்னு முடிவு பண்ணினேன். முதல்லே நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரின்னு சொன்னவங்க இப்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறம் அவங்க உண்மையான முகத்தைக் காண்பிக்கிறாங்க”

“அப்படியா என்ன வேணுமாம்?”

“ஒரு மீடியமான மண்டபம் புக் பண்ணிணேன். முதல்லே சரின்னவங்க இப்ப ஒரு பெரிய மண்டபத்தோட பெயரைச் சொல்லி அதை புக் பண்ணாத்தான் ஆச்சுன்னு நிக்கறாங்க. அதை புக் பண்ணா மேற்கொண்டு ஒரு லட்சம் அதிகமாக செலவாகும். இதெல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒண்ணுக்கு ரெண்டா வட்டிக்கு கடனை வாங்கி பண்ணிடலாம். ஆனா இதை விட முக்கியமான விஷயம் ஒண்ணு இப்ப என் மனசை போட்டு படுத்துது.  அதான் என்ன செய்யறதுன்னு புரியாம முழிச்சிகிட்டிருக்கேன்”.

“ஒரு மீடியமான மண்டபம் புக் பண்ணிணேன். முதல்லே சரின்னவங்க இப்ப ஒரு பெரிய மண்டபத்தோட பெயரைச் சொல்லி அதை புக் பண்ணாத்தான் ஆச்சுன்னு நிக்கறாங்க. அதை புக் பண்ணா மேற்கொண்டு ஒரு லட்சம் அதிகமாக செலவாகும். இதெல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒண்ணுக்கு ரெண்டா வட்டிக்கு கடனை வாங்கி பண்ணிடலாம். ஆனா இதை விட முக்கியமான விஷயம் ஒண்ணு இப்ப என் மனசை போட்டு படுத்துது.  அதான் என்ன செய்யறதுன்னு புரியாம முழிச்சிகிட்டிருக்கேன்”.

“என்னப்பா. என்னென்னமோ சொல்றே”

“சமீபத்துல ரிலேட்டிவ் வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு காஞ்சிபுரம் போயிருந்தோம். நிச்சயதார்த்தத்துலே பேச்சு வாக்கிலே அந்த ஊர்லே ஒரு பெரிய ஜோசியர் இருக்கார்னு எங்க ரிலேட்டிவ் ஒருத்தர் சொன்னாங்க. சும்மா இல்லாம பொண்ணு பையனோட ஜாகதத்தைக் கொண்டு போய் அந்த ஜோசியர்கிட்டே காண்பிச்சோம். அவர் ரெண்டு ஜாதகத்தையும் மாறி மாறி பார்த்துட்டு எட்டுப் பொருத்தம் தான் இருக்குன்னு சொல்றார். அப்புறம் மாப்பிள்ளை ஜாதகத்திலே ஏதோ தோஷம் வேறஇருக்காம். அதுக்கு கல்யாணத்துக்கு முன்னாலே பரிகாரம் பண்ணியாகணும்னு சொல்றார். ஒரே குழப்பமா இருக்கு. இப்ப என்ன பண்றதுண்னே புரியலை”

நண்பர் சொல்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்றேபுரியவில்லை.  இந்த சூழ்நிலையிலும் கல்யாணம் என்றதும் காமராஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வந்தது. ஏனென்றால் அது மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம். ஒருமுறைபடித்தால் போதும். அது யாருக்கும் மறக்கவே மறக்காமல் மனதில் பதிந்து விடும்.

வறுமையில் வாடிக் கொண்டிருந்த காங்கிரஸ் தியாகி ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய நாளைக் குறித்து கல்யாணப் பத்திரிகை அடித்தார். பின்னர் அவர் தனக்குப் பழக்கமான காமராஜரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். காமராஜர் தனது மகளின் திருமணத்திற்கு நிச்சயம் வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் அந்த தியாகி.  ஆனால் காமராஜரோ திருமண தினத்தன்று தனக்கு முக்கியமான பணிகள் இருப்பதாகவும் அதனால் திருமணத்திற்கு வர இயலாது என்றும் அவரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் திரும்பினார் அந்த தியாகி.

திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திடீரென காமராஜர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். மணமக்களை ஆசிர்வதித்தார். அந்த தியாகியால் இதை நம்பவே முடியவில்லை.

“அய்யா. தாங்கள் திருமணத்திற்கு வருவதாக முன்பே சொல்லி இருந்தால் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பேன்”.

இதற்கு காமராஜர் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.

“அதனாலேதான் அன்னைக்கு நீங்க என்னை அழைச்சப்போ நான் வர்றது கஷ்டம்னு சொல்லி அனுப்பினேன். நீங்க எனக்கு அழைப்பிதழை கொடுத்தப்பவே நான் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வர்றதா முடிவு செஞ்சிட்டேன். நான் வர்றதா உங்ககிட்டே சொல்லியிருந்தா எனக்காக நிறைய வீண் செலவு செய்திருப்பீங்க”

காமராஜர் மனிதநேயம் மிக்கவர். மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்தவர். சரி. இப்போது நண்பரின் விஷயத்திற்கு வருவோம்.

தற்காலத்தில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது.    இப்போதெல்லாம் பெண்ணிற்கு வரன்; பார்க்கும் போது அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதுதான். செல் இல்லாத மனிதன் செல்லாத மனிதன் என்பது போல சொத்து இல்லாத மாப்பிள்ளை அவன் எவ்வளவு நல்ல குணம் உடையவனாக இருந்தாலும் செல்லாத மாப்பிள்ளையே. அவனை யாரும் மதிப்பதில்லை. எதையெல்லாம் விசாரிக்க வேண்டுமோ அதையெல்லாம் விசாரிப்பதே இல்லை.  சொத்து நிறைய இருந்தால் அது நல்ல இடம். சொத்து இல்லையென்றால் அது தண்டம். சாஃப்ட்வேரில் மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தால் அவனைவிட சிறந்த மாப்பிள்ளை இந்த உலகத்தில் இல்லை. இப்படித்தான் இன்றைய மக்களின் மனநிலை இருக்கிறது.

அடுத்ததாக ஜாதகத்தை நம்பி நம்பியே தங்கள் பெண்ணின் வாழ்க்கையைத் தொலைப்போர் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்காலத்தில் நேர்மையான ஜோசியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால்  நூற்றுக்கு எழுபத்தி ஐந்து  சதவிகிதம் பேர் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புகழ்பெற்றஜோசியர்கள்  ஸ்ரீ இராகவேந்திரரை சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் ஸ்ரீ இராகவேந்திருடைய ஜாதகத்தைக் கணித்து ஆயுளைப் பற்றிய குறிப்பை எழுதினார்கள். ஆனால் மூன்று பேர்களுக்கும் மூன்று விதமான முடிவுகள் கிடைத்தன. அதன்படி ஒருவர் இராகவேந்திர சுவாமிகளின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்றார். மற்றொரு ஜோசியர் சுவாமிகளின் ஆயுள் முன்னூறு ஆண்டுகள் என்றார். மூன்றாவது ஜோசியரோ சுவாமிகளின் ஆயுள் எழுநூறு ஆண்டுகள் என்றார். இப்படிச் சொல்லிவிட்டார்களே தவிர மூவருக்குமே கலக்கமாகத்தான் இருந்தது. இதில் ஏதாவது ஒன்றுதானே சரியாக இருக்கமுடியும்.

இப்போது ஸ்ரீஇராகவேந்திரர் புன்னகை புரிந்தார். அவரது பதில் கலக்கத்தில் இருந்த மூன்று ஜோசியர்களுக்குமே நிம்மதியைத் தருவதாக அமைந்தது.

“உங்களது கலக்கம் எனக்குப் புரிகிறது. நீங்கள் யாரும் கவலை அடைய வேண்டாம். உங்கள் மூவருடைய கணிப்பும்  உண்மையே”

இதைக்கேட்ட மூன்று ஜோதிடர்களும் மீண்டும் குழப்பமடைந்தனர். ஏதாவது ஒரு ஆயுள்தானே சரியாக இருக்கும். சுவாமிகள் மூன்றுமே சரி என்கிறாரே என்று குழப்பமடைந்தனர்.

மூவரது குழப்பத்திற்கும் கீழ்கண்டவாறு பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரீஇராகவேந்திரர்.

“நான் இந்த மனித உடலோடு இந்த பூலோகத்தில் வாழப்போவது நூறு ஆண்டுகள் மட்டுமே. அடுத்ததாக நான் இயற்றிய நூல்கள் முன்னூறு வருஷங்களுக்கு நடைமுறையில் இருக்கும். கடைசியாக சோதிடர் சொன்னபடி நான் பிருந்தாவனத்தில் ஜீவசமாதியில் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்புரியப் போவது எழுநூறு ஆண்டுகள். ஆக உங்கள் மூவருடைய கணிப்பும் சரிதான்”

மகான் இராகவேந்திரர் சொன்னதைக் கேட்ட ஜோதிடர்கள் மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதெல்லாம் அந்தக்காலம். இராகவேந்திரருக்கு ஜோதிடம் கணித்தவர்கள் முறைப்படி ஜோதிடத்தை முழுவதுமாக கற்றவர்கள். இதைப் படித்து நீங்கள் உங்கள் மகனோ அல்லது மகளுடைய ஜாதகத்தையோ எடுத்துக் கொண்டு மூன்று ஜோசியர்களைச் சந்திக்கப் போய்விடாதீர்கள்.

தற்காலப் பெற்றோர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு மனதிற்கு சரியென்றுபடும் ஏதாவது ஒரு ஜோசியரை திருமண விஷயமாக கலந்தாலோசியுங்கள். அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ளுங்கள். ஜோசியர்களை அடிக்கடி மாற்றாதீர்கள்.   நாலு ஜோசியர்களை கலந்தாலோசித்தால் நாலுவிதமாகத்தான் சொல்லுவார்கள்.

ஜோசியம் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். காலங்காலமாக நம் பெரியவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விஷயம். நாமும் அதை நம்புவோம்.  தவறில்லை. அதன் பின்னாலேயே ஓடி நம் குழந்தைகளின் வாழ்க்கையைத் தொலைப்பது மாபெரும் தவறு. நம் முன்னோர்களின் காலத்தில் எல்லோரும் சரியாக இருந்தார்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்துச் செய்தார்கள். யாரையும் மனதால் கூட ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் மனசாட்சிக்கு பயந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இப்போதெல்லாம் எந்த தொழிலிலும் பணம் ஒன்றே பிரதானம்.

கடவுளை நம்புகிறவர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. கடவுளை முழு மனதோடு நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்குங்கள். உங்களுக்குத் தோல்வி என்பதே இருக்காது. பணமில்லாமல் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளிப் போகலாம். நல்ல வரன் அமையாமல் கல்யாணம் தள்ளிப் போகலாம். நல்ல மண்டபம் கிடைக்காமல் பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போகலாம்.     ஏன் நல்ல சமையல்காரர் கிடைக்காததால் கூட பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போகலாம். ஆனால் ஜோசியக்காரரால் கல்யாணம் தள்ளிப் போகவே கூடாது. எனக்குத் தெரிந்து ஜோசியத்தால் இரண்டே நன்மைகள்தான் இருக்கிறது. ஒன்று நம்மை வைத்து உட்கார்ந்தபடியே பணம் சம்பாதித்து பல ஜோசியர்கள் பங்களா கார் என சௌகரியமாக இருக்கிறார்கள். இரண்டாவது பெண் வீட்டுப் பக்கமோ பையன் வீட்டுப் பக்கமோ ஏதாவது குறைகள் இருந்து அந்த இடத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஜாதகம் சரியில்லை என்று சுலபமாகச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். இந்த இரண்டையும் தவிர ஜோசியத்தால் எந்த பலனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 இப்போது நான் என் நண்பரின் மனதைத் தேற்றவேண்டும்.

“சரிப்பா. விடு. எல்லா தப்பையும் உன்கிட்டே வெச்சிகிட்டு இப்ப நீ அவங்களை குறைசொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. கடவுளை நீ நம்பறியா?”

“நிச்சயம் நம்பறேன்”

“எதையாவது ஒண்ணைத்தான் நீ நம்பணும். கடவுளை நம்பறே. ஜோசியம் ஜாதகத்தை அதைவிட அதிகம் நம்பறே. சரி. விடு. நடக்கறதெல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சி நீ உன் பொண்ணு கல்யாண வேலைகளைப் பார்.     நிச்சயம் வேற பண்ணிட்டே. இனி ஒண்ணும் பண்ண முடியாது.  அவங்க கேக்கறமாதிரி அந்த மண்டபத்தை புக் பண்ணிடு. ஜாதகம் ஜோசியம் எல்லாத்தையும் இந்த நிமிஷமே மறந்துடு. உன் பொண்னையும் மனைவியையும் அழைச்சிகிட்டு உனக்குப் பிடிச்சமான ஒரு கோயிலுக்குப் போ. பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுன்னு மனசார வேண்டிக்க.  நல்லதே நடக்கும்.  சரியா?”

நண்பர் யோசித்தார். அவர் முகம் இப்போது தெளிவாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

“இப்பதான்பா எனக்கு நிம்மதியா இருக்கு. நீ சொல்றபடியே செய்யறேன்”

“அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கு இன்னொரு பொண்ணு இருக்கில்லே ?”

“ஆமாம்”

“அந்த பொண்ணுக்காவது நல்ல குணமுள்ள மாப்பிள்ளையா பாரு.  ஜோசியம் ஜாதகம்னு பதிமூணு கட்டத்துக்குத் தேவையில்லாம முக்கியத்துவம் குடுத்து பொண்ணோட வாழ்க்கையிலே விளையாடாதே”

 “நீ சொன்னா கூட இனி அந்த தப்பைச் செய்யவே மாட்டேன்”

சந்தோஷமாய் புறப்பட்டு வீட்டிற்குப் போனார்.

அப்பாடா. நான் சொல்லி ஒருவர் என் பேச்சைக் கேட்டுவிட்டார்.  அவரைவிட இப்போது எனக்குத்தான் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment