Home » Articles » உலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய்

 
உலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய்


சொக்கலிங்கம் சிவ
Author:

ஒரு வெற்றியாளன் எல்லாச் சிக்கல்களிலும் வாய்ப்பைத் தேடுகின்றான்; ஒரு தோல்வியாளன் எல்லா வாய்ப்புகளிலும் சிக்கலைக் காண்கின்றான். “இந்த உலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய். எப்போது இறப்பாய் என்று உனக்குத் தெரியாது. அதற்குள் வாழ்ந்து விடு. ஏனென்றால், நீ வாழப் பிறந்தவன்” என்பார் மார்க்சிம் கார்க்கி.

இளமையில் நீ வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் நீ கண்ணீர் சிந்தவேண்டும். வேகமாகச் செல்ல வேண்டுமென்று துடிக்காதே! வழியில் உள்ள முட்டுக் கட்டைகளை அகற்றிவிடு; விரைவாக சென்று விடுவாய்.

“நான் உலகத்திலேயே சிறந்தவன் என்று அலங்கரிக்கப்படும் நேரம் எனக்குத் தெரியும். யாரெல்லாம் என்னை மறுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் என்னை ஏற்கும் காலம் வரும் என்று எனக்குத் தெரியும்” என்பார் வால்விட்மன். சிலருக்கு வாழ்க்கை மூடப்பட்ட வாசலாகத் தெரிகிறது. சிலருக்கோ திறக்கக் கூடிய வாசலாகத் தெரிகிறது. சிலருக்கு வாழ்க்கை ஏமாற்றங்களின் இருப்பிடமாய்த் தெரிகிறது. சிலருக்கோ வாய்ப்புகளின் வசிப்பிடமாகப்படுகிறது.

வாழ்க்கையை வசமாக்கிக் கொள்ள துடிப்போரும், வாழ்க்கையை நேசிப்பவர் அனைவரும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஏனென்றால் வாழ்க்கையை உருவாக்குவதே நேரம்தானே!

சில சாதனை மனிதர்களின் உழைப்பு நேரத்தை அறிந்தால், அவர்களின் முன்னேற்றத்தின் மூலவித்து எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியும். உலக புகழ்பெற்ற உலகம் உள்ளளவும் மறக்க முடியாத  மறைக்க முடியாத மாபெரும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தினமும் 20லிருந்து 22 மணி நேரம் உழைத்ததால்தான் 1039 கண்டுபிடிப்புகளை அவரால் உலகுக்கு தரமுடிந்தது.   ஜி.டி.நாயுடு 18 லிருந்து 22 மணிநேரம் உழைத்தவர்.

தற்போது கோவையில் வாழ்ந்து வரும் கிரைம் நாவல் மன்னர் ராஜேஸ்குமார் 12 மணி நேரம் உழைக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் தினமும் 4 மணி நேரம் மட்டுமே உறங்குவாராம். எழுதி புகழ் பெறவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் பாலகுமாரன் போன்றவர்களின் உழைப்பை  பின்பற்றவேண்டும்.

உழைக்கும் நேரத்தை எவன் உயர்த்திக் கொள்கிறானோ, அவனே சிகரத்தின் சிம்மாசனத்தில் நிற்ப்பான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உழைக்கும் நேரத்தை வீணாக்காமல் கடுமையாக உழைத்து முன்னேறுங்கள். உங்கள் உழைப்பு நேரத்தை பிறருக்குக் கொடுத்துவிட்டு ஏமாறாதீர்கள். ஒவ்வொரு வினாடியும் உங்களுக்கானது. உங்களின் முன்னேற்றத்திற்கானது. உங்களின் வெற்றிக்கானது.

தூக்கம் கொண்டது கால்வாசி

துக்கம் கொண்டது கால்வாசி

ஏக்கம் கொண்டது கால்வாசி

மீதம் இருப்பது கால்வாசி

கவலையைத் தூரத் துரத்துங்கள்!

கவிதையை நெஞ்சில் நிறுத்துங்கள்!

தவணை முறையில் வாழாமல்

சில தவங்கள் செய்வோம் வாருங்கள்!

என்பார் கவிப்பேரரசு. வாழ்க்கையே ஒரு தவம்; அதை நாமும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

உங்களுக்கு சிறகுகள் இருப்பதை ஏன் மறந்து போனீர்கள்? புழுக்களாக உணர்கிறீர்கள். உங்களை நீங்களே முடமாக்கிக் கொள்ள வேண்டாம். சிறகை விரியுங்கள்.  அதோ வானம் பரந்து கிடக்கிறது.

“நேரத்தை சம்பாதித்துக் கொண்டவன் எல்லாவற்றையுமே சம்பாதித்துக் கொள்வான்” என்பார் பெஞ்சமின் டிஸ்ரேலி. வெண்டல் நேரத்தை இப்படிச் சொல்வார்: என்னுடைய இடது பையில் இருக்கிற வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொள். வலது பையை விட்டுவிடு, அதில் நான் வைத்திருப்பது பொன்னான நேரம். உங்களுடைய நாளை நீட்டித்துக் கொள்ள விரும்பினால் இரவிடமிருந்து, சில மணி நேரங்களை அபகரித்துவிடுங்கள். நியூயார்க் கிளப்பில் இப்படி ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள். காலையில் எழுவதை ஐந்து நிமிடம் தள்ளிப்போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன. அப்படியென்றால் காலையில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழவேண்டும் என்பதை மேற்கூறிய வாசகம் தெரிவிக்கிறது.

கோடீஸ்வரர் ஒருவரிடம் நிருபர் கேட்டார், “உங்களுடைய பொழுது போக்கு என்ன?” “நான் அப்படி எதையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறிவிடுவேன்.  அதுதான் என்னுடைய பொழுதுபோக்கு, ஓய்வு எல்லாம்’ என்றார் அந்த கோடீஸ்வரர். ஒருமனிதன் வாழ்க்கையில் முன்னேற, சாதனையாளனாக மிளிர, கோடீஸ்வரானாகக் கொடிகட்ட அவனது நேர நிர்வாகமே முக்கியம். பைபிளின் வாசகம் “நீங்கள் உறக்கத்தை விரும்பினால் வறுமை அடைவீர்கள்.  கண்களைத் திறந்து வையுங்கள். நிறையவே உணவைக் காண்பீர்கள். அது மேலும் கூறுகையில் சோம்பேறிகளே! எறும்புகளின் இயக்கத்தை கவனித்தாவது புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்!”

தேசப் பொருளாதாரத்திற்கு நேரம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தனிநபரின் குடும்ப வளத்திற்கும், நேரம் என்றாலே காசும் உள் அடக்கம்தானே!’ உங்களுடைய காரியத்தை சுறுசுறுப்பானவர் கையில் ஒப்படையுங்கள். கவலை இல்லாமல் இருக்கலாம் என்பார் வின்ஸ்டன் சர்ச்சில். சுறுசுறுப்பானவன் காலடி மண்ணே எல்லா நாட்டுக்கும் தலைநகரம் என்பார் ஒரு கவிஞர்.

சுறுசுறுப்பான ஆசாமிதான் வேலையைத் துரித உணர்வோடு செய்து முடிப்பான்.  காலக் கெடுவில் அக்கறைக் காட்டுவான். நேரத்தில் செய்து முடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக் கொண்டிருப்பார். தம்முடைய காரியத்தின் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதையும் அறிவார். காலக்கெடு இருந்தால்தான் காரியத்தில் கவனத்தை ஒரு முகப்படுத்த முடியும். கணிசமான அளவு காரியத்தை முடிக்கவும் செய்யலாம்.

ஒரு ஆண்டின் பெருமையை தேர்வில் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு மாதத்தின் அருமையை குறைப்பிரசவம் கண்ட பெண்மணியிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு நாளின் அருமையை, ஒரு நாள் தாமதித்து பணியில் அமர்ந்ததால் பதவி உயர்வை இழந்த ஊழியரை கேட்டுப் பாருங்கள். ஒரு மணி நேரத்தின் அருமையை, தேர்வு எழுதிவிட்டு வந்த ஒரு மாணவனிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு நிமிடத்தின் அருமையை, ரயிலை தவறவிட்டுவிட்டு நேர்காணல் வாய்ப்பை இழந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒரு நொடியின் அருமையை, விபத்தில் உயிர்பிழைத்தவரிடம் கேட்டுப் பாருங்கள். காலத்தின் அருமையை, எவ்வளவு அருமையாக கணக்கிட முடிகிறது என்பதைப் பார்த்தாவது, காலத்தின் கரங்களைப் பற்றிக்கொள்வோம் வாருங்கள்!

நேரப்பங்கீடு செய்கிற போது, காலக்கெடுவை நினைவில் நிறுத்தி, எப்போதும் மாறுதலுக்குத் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல், மனிதர்களோடு மட்டுமல்ல, வாழ்க்கையை வாழ்க்கையுடனும் உங்களால் சமாதானம் (காம்ப்ரமைஸ்) செய்து கொள்ளமுடியாது போகும்.

நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ, அதுதான் நாள் முழுக்க தொடர்கிறது. உங்களுடைய நாளின் ஆரம்பம் விழிப்பதில் இருந்தே தொடங்கும். எப்படி தொடங்குகிறீர்களோ அப்படித்தான் வீட்டிலும், வெளியிலும் உங்களுடைய வேலை அமைகிறது. ஆக எழுந்திருக்கும்போது சீரான மனநிலை அவசியம். அன்று செய்யப்போகிறவேலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இனிமையான வேலை என்று எண்ண வேண்டும். அந்த எண்ணமே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வேலைக்குத் தேவையான சக்தியையும் அது வழங்கிக் கொண்டே இருக்கும்.

‘எனக்குள் உள் ஆற்றல் இருக்கவே செய்கிறது.  இன்னமும் அதை ஒவ்வொரு நாளும் வரவேற்க, நான் போராடிக் கொண்டிருக்கிறேன், என்றான் கலீல் ஜிப்ரான்.

ஒரு பூச்செடியில், பூத்திருக்கின்ற பூக்களில் தேன் எடுப்பதற்காக பறந்து வந்து அமர்ந்தது ஒரு தேனீ. ஏற்கனவே ஒரு வெட்டுக்கிளி அந்த செடியின் இலைகளைக் கத்தரித்து விழுங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது தேனீயிடம் சொன்னது “இந்த செடியால் நாம் இருவரும் பயன்பெறுகிறோம். அவை இல்லாமல் இருந்தால் நாம் இருவருமே செத்துப்போய்விடுவோம்” என்றது. அதற்கு தேனீ பதில் சொன்னது, “உண்மைதான்.  ஆனால், நீ இந்தச் செடியைச் சுரண்டுகிறாய். நானோ இந்தச் செடியை மகரந்தசேர்க்கையால் செழிக்கச் செய்கிறேன். இது பூத்து காய்த்து வளம்கொழிக்க என் இறகுகளால் விசிறி வீசுகிறேன். என் நாக்குகளால் வேறொரு பூவின் மகரந்தத்தை அட்சதையாகத் தூவுகிறேன்” என்றது. சிலர் பொழுதைப் போக்குகிறார்கள். சிலர் பொழுதை ஆக்குகிறார்கள் என்பதை இந்த தேனீ, வெட்டுக்கிளி உரையாடல் தெரிவிக்கிறது.

மிகப்பெரிய செல்வச் சீமான், எஃகு தொழிற்சாலை உரிமையாளர் ஆண்ட்ரூ கார்னகியிடம் ஒருவர் கேட்டார். “இவ்வளவு பெரிய உயரத்தை எப்படி அடைந்தீர்கள்?  பதில் சொன்னார் கார்னகி “தங்கச்சுரங்கத்தில் இறங்கும்போது புழுதியும், மணலும், அழுக்கும் அப்பிக்கொள்கின்றன. அவற்றைக் கடந்து போனால்தான் தங்கம் கிடைக்கிறது. புழுதிக்குப் பயந்தால் தங்கம் எடுக்க முடியாது. சிரமங்களுக்குப் பயந்தால் சிகரம் தொட முடியாது”.

வெற்றி பெற்ற மனிதனையே இவ்வுலகம் விரும்புகிறது. தோல்வியுற்றவர்களுக்கு இங்கு இடமில்லை. ஒரு மனிதன் வெற்றிப் பாதையில் நடைபோடும்போது, அவனது ஒவ்வொரு அசைவும் அங்கீகாரத்தையும் ஆமோதிப்பையும் பெறுகின்றன. உலகமே அவனுடன் வர விரும்புகின்றது. அவனை அத்தகைய மணிமகுடத்தில் ஏற்றி வைத்தது அவனது நேர நிர்வாகமே!

“சிந்திப்போம் மனிதர்களே! உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சில மணி நேரங்களை அறிவுக்காக சேமியுங்கள். எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.பாறைகள் எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை. துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.  தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல்தருகின்றன மரங்கள்.  அவசரப்படாதீர்கள். அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை. இங்கே மலர்களுக்குத்தான் முதல் மரியாதை. வேர்கள் வெளிவருவதேயில்லை. தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல. தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.  சுறுசுறுப்பாயிருங்கள். ஓடிக்கொண்டிருக்கும் நீரில்தான் ஆக்ஸிஜன் அதிகம்.  எல்லோரையும் மதியுங்கள். சமுத்திரத்தில் எந்தத்துளியோ எவருக்குத் தெரியும்?  உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல. ஊர் பேசட்டும். பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பை காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது. அறிவில் நிமிருங்கள். அன்பில் நெகிழுங்கள்.  உழைப்பில் உயருங்கள். பிறகு பாருங்கள். இந்த பூவுலகமே புறாச்சிறகடியில் – கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்கு கதகதப்பாய் இருக்கும் என்பார் கவிப்பேரரசு.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment