Home » Articles » ஏன் ? தோல்வி வருகிறது

 
ஏன் ? தோல்வி வருகிறது


நந்தவனம் சந்திரசேகரன்
Author:

உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலே நம்பிக்கை இல்லாதவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியாயத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைபிடிக்க வேண்டும். பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழ வைக்கும். அதற்கு மாறாக பொறாமை, முரட்டுச் சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் எல்லாம் வருங்காலத்தில் நம்மை எதற்கும் தகுதியற்றவனாக்கிவிடும். எப்போது பிரச்சனை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்றமனவருத்தம் உண்டாவதில்லை. லட்சியம் நிறைவேண்டும் என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும். அப்போது நம்முடைய ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கும் என்கிறார் தாகூர்.

எப்போதும் அச்சத்தோடு இருப்பதைவிட ஆபத்தை நேருக்குநேர் சந்திப்பதே நல்லது. இதை யார் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பொதுவாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் முதலில் வெற்றியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். தோல்வி பற்றிய பயத்திலேயே சிலர் வெற்றியை இழந்துவிடுவதும் உண்டு. ஏன்? தோல்வி வருகிறது என்று கேட்டால் என் கவனக்குறைவினால் வந்தது என்பார்கள் அல்லது எனது தவறான அணுகுமுறையினால் வந்தது என்பார்கள்.

 ஆயிரம் முறைதோல்வி கண்ட எடிசனிடம் தோல்வி பற்றி கேட்டதும், தோல்வியா அப்படி என்றால் என்ன? என்று கேட்டாராம். தோல்வி என்பதை அனுபவிக்காவிட்டால் வெற்றிக்கனியை ருசிக்க முடியாது என்ற உண்மையை நாம் முதல் புரிந்துகொள்ள வேண்டும்.

 ஏன் தோல்வி வருகிறது என்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இதுதான் காரணம் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அவரவர் செயல்களின் அணுகுமுறைகளைப் பொறுத்தே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. தேர்வுக்கு ஒழுங்காக படிக்காத மாணவனால் நன்றாக தேர்வு எழுத முடியாமல் சோர்ந்துவிடுகிறான். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இல்லாத காரணத்தால் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள்.

தோல்வி என்பது ஒரு அனுபவப்பாடம் தான். தோல்வி தான் நம்மை வெற்றியடைய தயார் செய்கிறது. தோல்வி வந்துவிட்டால் மனம் கலங்குவதைவிட தோல்வியைக் கொண்டாட கற்றுக்கொண்டால் ஆரவாரத்தோடு வெற்றி நம்மை அரவணைக்கும். உங்கள் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிகிறதே என்று வருந்தாதீர்கள். அதுவே ஒரு நல்ல வெற்றியைத் தரலாம். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிற்கு காதுகேற்காது. முதலில் அவர் காதுகேற்கும் கருவியைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வியைத் தந்தது. அதற்கு மாறாக, நம்பிக்கையோடு முயற்சி செய்ததன் பலனாக தொலைபேசி கிடைத்தது.

எனக்கு உதவிகள் கிடைக்கப்படவில்லையே. வசதி இல்லையே. தகுதி இல்லையே என்று வருத்தத்துடன் நம்பிக்கையற்ற தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் தான் தோல்வி நங்கூரமாய் அமர்ந்து கொள்ளும். நம்பிக்கையுடன் தொடர்ந்து அடுத்த முயற்சியை செய்பவர்களிடம் மட்டும் வெற்றிச்சாமரம் வீசும். வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் கேட்டுப்பார்த்தால், நான் இந்த நிலைக்கு வர பல சிரமங்களையும் சிராய்ப்புகளையும் பட்டுத்தான் வந்தேன் என்பார்கள். வலிகள் இல்லாமல் நமக்கான வழிகள் பிறப்பதில்லை. தாய்க்கு வலி உண்டானால் தான் குழந்தை வெளிவர முடியும். இதுதான் எதார்த்தம்.

ஒரு வெற்றியைப் பெற நூறு தோல்விகளையும், சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் நமது முயற்சிகளில் இருந்து சிறிதும் விலகாமல் மனம் தளராமல் குறிக்கோளை அடையத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொண்டால் தோல்வி நம்மிடம் கைக்குழுக்கி விடைபெறும்.

ராபர்ட் ஷில்லர் கூறுவார், “”எதிர்பாராமல் இழப்புகள் நேரலாம். உங்கள் மனம் இழந்ததையே எண்ணி வருந்தக்கூடாது. கைவிட்டுப்போனது போகட்டும். கையில் என்ன மிச்சமிருக்கிறது என்று பாருங்கள்” என்பார். எதுவும் இங்கே நிரந்தரமல்ல. எல்லாம் மாறக்கூடியதே. தோல்வி வரும்போது, அட இவ்வளவுதானா என சாதாரணமாக எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும். இந்த வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாகப்போனாலும் உங்களால் அவற்றைசரிசெய்ய முடியும் என்று நம்புங்கள்.

ரூபென்கே யங்டால் சொன்ன வரலாற்று நிகழ்வொன்று. அது ஒரு போர்க்காலம். ரெய்ம்ஸ் தேவலாயத்தின் பல வண்ணக் கண்ணாடிகளான ‘ரோஸ் விண்டோஸ்’ அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வட்டாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் பொறுமையாய் மண்டியிட்டபடி அந்தக் கண்ணாடித்துண்டுகளைச் சேகரித்தார்கள். போர் முடிந்தபின்பு, திறமைவாய்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு சிதைவுகளை சரிசெய்ய முற்பட்டார்கள். ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொருத்தி ‘ரோஸ் விண்டோ’ மீண்டும் உருவாக்கப்பட்டது. ரெய்ம்ல் உள்ள இன்றைய “ரோஸ் விண்டோ” முன்பு இருந்ததையும்விட இப்போது அழகாய் காட்சியளிக்கிறது.

நம்முடைய உடைந்துபோன வாழ்க்கையைச் சரிசெய்ய கடவுள் இருக்கிறார். நமக்கு உதவி எங்கே எப்போது தேவைப்படும் என்பது அவருக்குத் தெரியும். அங்கே அந்த கணத்தில் அவர் வந்து விடுவார்.

தோல்வி ஏன் வருகிறது என்று வினா எழுப்பி காலத்தை வீணடிப்பதைவிட தோல்வியிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்ற விழிப்புணர்வு பெறுவதே புத்திசாலித்தனம். கரையைக் கடக்க முடியவில்லையே என்று கடல் அலையெழுப்பாமல் இருந்ததில்லை. தொடர்ந்து அது முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும். ஓடும் நதிகளால் தான் இலக்கைத் தொட முடியும். தேங்கிய குட்டையால் நாற்றத்தை மட்டுமே காண முடியும். நீங்கள் தேங்கிய குட்டையா? ஓடும் நதி நீரா? முடிவெடுங்கள் தோல்விகளில் தொலைந்து போகும் முன்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment