Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நான் என் அச்சத்தைப் போக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ரம்யா, சேலம்

அச்சத்தைப்போக்க ஆறு வழிகள்

1. இதற்குமுன் வெற்றிகரமாகச் செய்து முடித்த செயல்களை எண்ணு, அப்போது உன்னால் முடிந்தது என்றால் இப்போது மட்டும் ஏன் முடியாது என்று எண்ணு.

திருப்புதல் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கிய நீ பொதுத் தேர்விலும் வாங்கமுடியும் என நம்பு. மற்றவரால் முடியும் என்றால் என்னாலும் முடியும். மற்றவரால் செய்ய முடியாதது, என்னால் முடியும் என்று உரக்கச் சொல்; நிமிர்ந்து நில்; வெல்.

2. அச்சம் அகல அதையே செய்.

புரியவில்லையா? நாயைக் கண்டாலே பயம் என்றால் அப்பாவிடம் சொல்லி ஒரு சிறிய நாய்க்குட்டியை வாங்கி வளர்த்து, தொட்டு, தூக்கி நாயைப் பற்றிய பயத்தைப் போக்கு.

முதல்நாள் பள்ளியில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் பேச முடியாமல் தடுமாற்றமா? விடாதே அடுத்தடுத்த நாளும் பேசு. பயம் தன்னால் நீங்கும். நான்கு வரிப்பாடல் மனப்பாடம் ஆகவில்லையா? விடாதே. நாள் முழுவதும் படி, அப்புறம் பார். நூறு வரிகளை நொடிப்பொழுதில் மனப்பாடம் செய்ய இயலும்.

3. வெற்றியாளரைப் பற்றிக்கொள்.

சென்ற ஆண்டு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவரிடம் . ( பேசு (IIT – JEE)-ல் வென்ற மாணவரிடம் அவர்கள் தேர்வு பயத்தை எப்படி விரட்டினார்கள் என்பதைத் தெரிந்துகொள்.

4. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப்படி.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன், சர் ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், ஹெலன் கெல்லர், லூயிஸ் பாஸ்டர், பீத்தோவன், லூயி பிரெயில் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் பயம் எனும் உணர்வு உன்னைவிட்டு அகலும்.

5.பகுத்துச் செயலாற்று.

‘பையத் தின்றால் பனை மரத்தையும் தின்னலாம் என்பது மலையாளப் பழமொழி’. பாடங்களைப் பகுத்துப் பருவம் தோறும் படித்தால் பயமின்றி முழுவதையும் படித்து முடிக்கலாம்.

6.நோய் முதல் நாடு.

பயம் என்பது நோய். அந்நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் களைய வேண்டும். தானாக ஏணியில் ஏறி சறுக்கி விழுந்தவர் அடுத்த முறை ஏணியில் ஏறபயப்படுகிறார். அடுத்த முறை ஒருவரை ஏணியை ஆடாமல் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு அச்சமின்றி ஏறவேண்டும்.

இத்தனை வழிகளிலும் உன்னுடைய பயம் குறையாவிட்டால் ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது.

தகுதி வாய்ந்த மருத்துவரை அல்லது மனநல மருத்துவரை நாட வேண்டும். போலி மருத்துவர்களிடம் சென்றால், ‘முதுகு வலி போய் திருகு வலி வந்தது’ என்ற கதையாக மாறிவிடும்.

சிலர் பேய் ஓட்டிகளிடம் செல்வதுண்டு. அவர்கள் செய்யும் கொடுமை அளவற்றது. முற்றிய தேங்காயை தலையில் அடித்து உடைக்கிறார்கள். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் தான்! மண்டை உடைந்து மரணம் ஏற்படுவதற்கான மதிகெட்ட செயல்தான் இது.

வேகமாக தவழ்ந்து செல்லும் குழந்தை, திண்ணையின் ஓரத்தில் சென்றால் தவழ்வதை நிறுத்தும். விழுந்து விடுவோம் என அஞ்சும்; அழும். வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது தாயைப்பிரிந்து ஓர் அடி கூட எடுத்து வைக்காது குழந்தை. காரணம் பயம். எனவே பய உணர்வு என்பது மனித இனத்துக்கு உரிய அடிப்படையான உந்துணர்வாகும்.

“”மற்றவரால் முடியும்

என்றால் என்னாலும்

முடியும்.

 மற்றவரால் செய்ய

முடியாதது,

என்னால் முடியும் என்று

உரக்கச் சொல்”

இன்னொரு கோணத்தில் சொல்வதென்றால், துணிச்சல் என்பது பயமில்லை அன்று, மாறாக பயத்தை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு செயல்படுவது தான் துணிச்சல்.

சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்வதற்கு அஞ்ச வேண்டும். “வாள் கொண்டு பிளந்தாலும், தாள் வீழ்ந்து பணிந்தாலும் பொய் சொல்லக்கூடாது” என்பார் பாரதிதாசன். சட்டத்திற்குப் புறம்பாகத் தினையளவு தவறு செய்தாலும் பனையளவாகக் கொள்வார்  அவர் நல்லவராக இருந்தால்.

ஒருவன் தன் திறமையை சந்தேகிப்பதுதான் மிக மோசமான பலவீனம். அது உன்னை முடக்கிப்போட்டுவிடும். திறமைக்குறைவு வருத்தத்திற்கு உரியது அல்ல; உழைப்புக் குறைவு தான் வருத்தத்திற்குரியது.

வரலாற்று ஏடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். வெற்றியாளர்கள் பெரிய பலசாலிகளாகவோ, பாக்யசாலிகளாகவோ இருந்ததில்லை. தம் பலவீனங்களைப் புறந்தள்ளிவிட்டு தம்மிடம் இருந்த திறமைகளை வைத்துக் கொண்டு முயற்சியால் முன்னேறியவர்கள் அவர்கள். தன்னம்பிக்கை ஒன்றுதான் அவர்களின் முதலீடாக இருந்தது.

உன்னிடத்தில் நம்பிக்கை வை. தோல்வி கண்டு அஞ்சாதே. உன்னால் மலையைக் கூட நகர்த்த முடியும் நம்பு.

இந்த இதழை மேலும்

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2014

என் பள்ளி
சிசு பராமரிப்பு
வெற்றிக்கு யார் பொறுப்பு?
துணை மருத்துவப் படிப்புகள்
எண்ணித் துணிக
வாழ்க்கை விளையாட்டு
நிழலா? நிஜமா? நினைவுகள்!!
துடிப்பு கவலையை அகற்றும்
உலகில் ஒருமுறை தான் நீ பிறக்கிறாய்
ஏன் ? தோல்வி வருகிறது
பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்
விதி என்று மயங்காதே! மதி உண்டு தயங்காதே!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேளாண்மைப் படிப்புக்கு ஏன் இவ்வளவு போட்டி?