– 2014 – June | தன்னம்பிக்கை

Home » 2014 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  நமக்குள் புதுயுகம் பிறக்கட்டும்

  ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 15.06.2014; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,

  இடம் : மாயாபஜார் அ/இ ஹால்,

  (வடிவு சுப்ரமணியம் மண்டபம் எதிரில்),

  Opp. E.B. அலுவலகம் எதிரில்,

  E.V.N. ரோடு,

  ஈரோடு.

  தலைப்பு     : நமக்குள் புதுயுகம் பிறக்கட்டும்”

  சிறப்புப் பயிற்சியாளர்: Jc. G. புவனேஸ்வரி, M.A., M.Phil. இயக்குனர்,

  செவன்த் சென்ஸ் அகாடமி,

  திருப்பூர்

  போன்: 80568 80859

  தொடர்புக்கு

  தலைவர் ஆடிட்டர்  P. வெங்கடேஸ்வரன்  97879 50100

  செயலாளர் M. மணிகண்டன்  90255 51777

  பொருளாளர் S.A. சிவசாமி  99943 46686

  வான்மகள் வைரக்கிரீடத்தோடு காத்திருக்கிறாள்!

  சீனத்து புரட்சிக் கவிஞர் அய் குங். இவருக்கு அதிசயக்குடை ஒன்று கிடைக்கிறது. அந்தக் குடைக்கும் அவருக்குமிடையே உரையாடல் நடக்கிறது.

  “ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்; நீ விரும்புவது மழையில் நனைவதையா? வெயிலில் காய்வதையா?”

  குடை புன்னகைத்து பின் சொன்னது, “என் கவலை இதைப்பற்றி அல்ல”.’

  “பின் எதைப்பற்றி உன் கவலை?”

  குடை சொன்னது, “என் கவலை எல்லாம் எத்தகைய பேய் மழையானாலும் என் மக்களை நனைய விடக்கூடாது, எத்தகைய வெயிலானாலும் என் மக்களை காய விடக்கூடாது” எழுதிய கவிஞரையே பதில் என்னும் குடையின் கம்பி ஆழமாய்த் தாக்கிற்று.

  இந்த உணர்வும் எண்ணமும் மனிதனிடம் வரமாக வரவேண்டும். அந்த எண்ணம் அவனிடம் வரும்போது வானமும் அவனுக்குள் வசப்பட்டுக் கைக்குலுக்கும்.

  உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே, “யார் சிறந்தவர்?” என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும்விட நான்தான் சிறந்தவன் என்று இருமாப்புடன் கூறியது கட்டைவிரல்.  இல்லை!  இல்லை!

  மற்றவிரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே, நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல். மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிர விரல். மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப்பிள்ளைகள் மீதுதான் பிரியம் அதிகம். எனவே உங்களைவிட நான் கடைக்குட்டி அதனால் செல்லப்பிள்ளையும் நான்தான் என்றது சுண்டுவிரல். ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மௌனம் சாதித்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளங்கை உங்களுக்கு சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு நாட்டாமையானது.

  நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத் தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் ஆள் காட்டி விரல் மட்டும் திசைதெரியாமல் வரும் பிறருக்கும் “அதோ வழி” என சுட்டிக்காட்டி உதவுகிறது.  பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் மட்டும் கொண்டிருப்பதால் அதுவே முதல் இடம் என்று உள்ளங்கை தீர்ப்பளித்தது. பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் முதலிடம் பிடிக்கிறார்கள் என்ற கருத்தினால் விரலுக்குள்ளும் இத்தனை வீரியமா? கைகளுக்குள்ளும் இத்தனை காரியமா? என்று வியக்க வைக்கிறது. திசை தெரியாதவர்களுக்கு திசைகாட்டியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய ஆள்காட்டி விரல் போல் இந்த மண்மண்டலத்தில் இன்னும் சிலர் இருப்பதால்தான் பூமித்தாய் பொறுமையின் சிகரமாகவே பூரித்து நிற்கிறாள்.

  அறிவுக்குள் உணர்ச்சியும், உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பெற்றுள்ள ஓர் அலகான பின்னல் ஆடையே நம் வாழ்க்கை. வாழ்வின் மாபெரும் இரகசியம் ஈர்ப்பு விதிதான். ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்று ஈர்ப்பு விதி கூறுகிறது. அதனால் நீங்கள் ஒரு எண்ணத்தை எண்ணுபோது அதையொத்த எண்ணங்களை உங்களை நோக்கி கவர்ந்திழுக்கிறீர்கள். எண்ணங்களுக்கு காந்த சக்தி இருக்கிறது; அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட அலைவரிசையும் உண்டு. நீங்கள் எண்ணங்களை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்படுகின்றன. அவை அதே அலைவரிசையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்கின்றன. அனுப்பப்பட்ட அனைத்தும் மூலத்திற்கே திரும்பி வருகின்றன. “நீங்கள் தான் அம்மூலம்!” என்பார் ரோண்டா ஃபைன். வாழ்க்கையில் “முடியும்” என்கிற நம்பிக்கையாளர்களை நாடிச் செல்லுங்கள். அவர்களுடைய நம்பிக்கை உங்களுடைய நம்பிக்கைக்கு வலிமை சேர்த்து உங்களுடைய வாழ்க்கைப் பாதையை வெற்றிப் பாதையாக்கும். உங்களிடம் இருக்கும் தனித்தன்மையை எந்தச் சூழ்நிலையாலும் உறுதி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் நீங்களாவே இருங்கள். ஏனெனில் உங்கள் திறமைக்கு அல்லது எண்ணங்களுக்கு நீங்களே வாய்ப்புத்தர தவறிவிட்டால் வேறுயார் வாய்ப்புக் கொடுப்பார்கள்? தவிர, உங்கள் எண்ணங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் போதுதானே அதனுடைய பயனையும் நீங்கள் உணரமுடியும்.

  எண்ணங்களுக்கு வலிமை கொடுக்கும் சக்தி மனித மனதுக்கு இருக்கிறது.  இதைத்தான் “மனோசக்தி” என்று சொல்கிறார்கள். எதைச் சாதிக்க வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அதைக் கொழுந்துவிட்டு எரியும் ஆசையாக முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அந்த ஆசை நிறைவேறியே தீரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முயற்சியில் ஈடுபடுங்கள். அலெக்சாண்டர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், முறையான பாதைகள் அமையாத காட்டுமிராண்டி காலத்தில் 13 ஆண்டுகளில் 3 கண்டங்களை ஒருவன் வென்றான் என்றால், அவனுடைய மன உறுதி எத்தகையது? மனிதனிடம் உள்ள இந்த மனோசக்தியை அலெக்சாண்டர் பயன்படுத்தியதால்தான் வரலாற்றின் உதடுகளில் இவர் பெயரை வாழ்நாள் முழுதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வைக்கிறது.

  மனம் என்பது விசித்திரமான பேட்டரி. எடுக்க எடுக்க சக்தியை அது உங்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கும்.  இந்த மனோசக்திதான் மனிதர்களை மகத்தான காரியங்கள் புரியத்தூண்டியிருக்கும்.

  “மனிதா! உனக்கு முன்னால் இருந்த மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய். வாழ்த்துக்கள். உன் அறிவாலும், அறிவியலாலும் தூரத்தையும் நேரத்தையும் சுருக்கிவிட்டாய் நன்றி. இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்கைக்கோள் பறக்கவிடுவாய். மகிழ்ச்சி. மனிதன் தான் விரும்புகிற வரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்துவிடுவாய். அற்புதம். ஒன்றைமட்டும் மறந்துவிடாதே. மனிதநேசம் இருக்கட்டும். இந்த மண்மண்டலம் இருக்கட்டும். நமக்கு முன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்த காற்றுமண்டலத்தில் இன்னும் இருக்கிறது. இருக்கட்டும்” கவிப்பேரரசு வைரமுத்து மனிதன் தன் அறிவையும், அறிவியலையும், தன் ஒட்டுமொத்த எண்ணங்களின் மூலம் எப்படிப் படைத்தான்? இனி எப்படிப் படைப்பான்? என்பதை அழகாக படம்பிடிப்பது ஆயிரம் எண்ணங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது.

  நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கையே மரியாதைக்குரிய வாழ்க்கையாகத் திகழ்கிறது. வாழும் வகை அறிந்து வாழ்வதே வாழ்க்கை. இந்த வாழ்க்கை எவ்வளவு அருமையானது!  எவ்வளவு பெருமைக்குரியது!

  இதை நாம் பாழாக்கிவிடக் கூடாது. நல்ல சிந்தனைகளால், நல்ல செயல்களால் நாளுக்கு நாள் வாழ்க்கை மெருகேற்றப்பட வேண்டும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒளி துலங்க வேண்டும். காண்பவர்கள் கைகூப்பி வணங்கும்படி நம் வாழ்க்கை கோபுரமாய் உயர்ந்திலங்க வேண்டும்.

  சர்ச்சிலைப் பார்த்து ஒருமுறைகேட்கப்பட்டது. ‘அரை நிர்வாண பக்கிரி’ என்று காந்தியை அழைத்தீர்களே? அவரால் அல்லவா இந்தியா சுதந்திரம் அடைந்தது எப்படி? அவர் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன். காந்தியோ, அகிம்சையை அல்லவா ஆயுதமாக எடுத்துக் கொண்டார். நான் தோற்றுப்போனேன் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். காந்தியின் எண்ணமே இந்தியாவின் சுதந்திரம்! லிங்கனின் கனவே அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பதவி! ஏன் நீங்களும் நானும் எண்ணும் எண்ணமே நாளை நம்பிக்கையின் விடியல்!

  “எண்ணங்கள் நம்மைச் சுற்றியுள்ள பரந்தவெளியில் இருந்துதான் நமக்குக் கிடைக்கிறது. இது ஆச்சரியமானதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கலாம்.  ஆனால் உள்ளம் நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும். “வெளியிலிருந்துதான் எண்ணங்கள் நமக்குக் கிடைக்கின்றன” என்பார் தாமஸ் ஆல்வா எடிசன்.

  அடிக்கடி சிந்திப்பதன் மூலமாகவும், அழுத்தமாக சிந்திப்பதன் மூலமாகவும், உறுதியாக சிந்திப்பதன் மூலமாகவும் மனோ சக்தியை நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டே போகலாம். உங்களுடைய மனோசக்தி பலமாக இருக்கும்போது உங்களிடமிருந்து வெளிப்படும் எண்ணங்களின் அதிர்வுகளும் பலம் பொருந்தியவையாக இருக்கின்றன. மனோசக்தி ஒருவரிடம் எப்போது அதிகரிக்கிறது? அவர் எண்ணங்களை வலிமையாக்கிக் கொள்ளும்போது அதிகரிக்கிறது. எண்ணங்கள் எப்போது வலிமையடைகின்றன? நாம் செய்ய நினைக்கின்றகாரியத்தில் ஒரு வெறியையும், வேகத்தையும் வளர்த்துக் கொள்ளும்போது எண்ணங்கள் வலிமை பெருகின்றன. ஒரு காரியத்தில் வெறியும், வேகமும் எப்போது நமக்கு ஏற்படுகிறது? நம்மால் ‘முடியும்’ என்கிற நம்பிக்கையுடன் செயலில் ஈடுபட்டால் ஏற்படுகிறது. ஆகவே, மனோசக்தியை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் இயற்கையாகவே நம்மிடம் அமைந்திருக்கிறது. இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘என்னால் முடியும்’ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதுதான்.

   ‘என்னால் முடியும்’ என்பது தனிமகுடம் பதிக்கும் தன்னம்பிக்கையின் ஒரு மகத்தான மந்திரச்சொல். ‘என்னால் மட்டுமே முடியும்’ என்பது தலைக்கணத்தின் மொத்தக் குத்தகை. ‘எந்நாளும் முடியும்’ என்பது நம்பிக்கையின் நாத முடிச்சு. ‘இந்நாள் முடியும்’ என்பது உயிர்த்துடிப்போடு வாழும் வாழ்க்கையின் வசீகரச் சொல். வாழ்க்கை வழிநெடுக பயணங்களில் பல மர்ம முடிச்சுகள் நமக்குத் தெரியாமலே அவிழ்க்கப்படுகிறது; ஆராதிக்கப்படுகிறது. புரிதலோடு போகும்போது இணக்கம் என்ற கை நம்மை இறுகத் தழுவிக் கொள்ளும்போது ஆச்சரியம் என்ற வாய் அகலத்திறந்து நம்மை அரவனைத்துக் கொள்கிறது.

  போராட்டக் குணமே மனிதனின் மாபெரும் சொத்து. ‘சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன், நீ மனிதன்’ என்ற கவிப்பேரரசின் வரிகளில் நெருப்புக்கும், மனிதனின் பொறுப்புக்கும் இடையேயான கொள்கைத் துள்ளல்கள் கொடிகட்டி பறப்பதை அடிமனத்தின் ஆழத்தில் சுவடுகளாய் பதிக்க வேண்டும்.

  “நெப்போலியன்களையே நிற்கவைத்து பேசுகிற என்னிடம், நிழல்களா உட்கார்ந்து பேசுவது? சீசர்களை மாத்திரமே சந்திக்கப் பிறந்த எனக்கு சிட்டுக்குருவிகளா சிம்மாசனம் செய்வது? என்று கவிதையில் புலிப்பாய்ச்சல் செய்தவர் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். இந்தக் கவிதையில் திமிர் இருக்கிறது, தலைக்கணம் தலைகாட்டுகிறது என்று சிலர் விழிப்புருவங்களை வில்லாக்குவது எனக்குத் தெரிகிறது. அன்பிற்கினிய நண்பா! இந்த திமிர்கூட இல்லையென்றால் அவன் கவிஞனா? (நான் எல்லோரையும் சொல்லவில்லை). கம்பீரம் தானே கவிஞனின் அடையாளம், தலைக்கணம் தானே தன்மான முத்திரை, கர்ஜனைதானே கவிதையின் உயிர்நாடி. உயிரோடு இருக்கும்போதே வார்த்தைச்சித்தர் வலம்புரிஜானோடு நேரிடையாகவே அவரோடும், அவர்தம் கட்டுரை, கவிதையோடும், மேடைப்பேச்சோடும் ஒரு பைத்தியக்காரனைப் போலவே சமகால கவிஞனோடு பயணித்திருக்கிறோம் என்று எண்ணும்போது அவரிடம் திமிர் இருப்பதாகவே எனக்குப் படவில்லை. இந்த திமிர்தானே கவிஞனை காலப்பெட்டகம் பத்திரமாகவே பாதுகாத்து வைத்திருக்கிறது. குற்றால அருவிபோல் கொட்டுகின்ற பேரழகை காணக் கண்கோடி வேண்டும். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் பொக்கிஷம் வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் என்பதை இலக்கிய வரலாறு எடைபோட்டு வைத்திருக்கிறது.

  மனசுக்குள் எழுந்து நிற்காமல் உங்களால் ஜெயிக்க முடியாது. ‘மனிதன் உறங்கும் பனிமனை அல்ல, கனன்று கொண்டே இருக்க வேண்டிய எரிமலை’ தடைகளை விடைகளாக்கு, தடைக்கல்லை படிக்கல்லாக்கு. வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம். வாசிக்கும்போதே சிலவரிகள் சீண்டிப்பார்க்கும், சில வரிகள் சீட்டி  அடிக்கும், சில வரிகள் தூங்வைக்கும், சில வரிகள் தூங்கவே விடாது. இவைகளை நாம் கொள்முதல் செய்து கொண்டால் வாழ்க்கைச் சிறக்கும்! வசந்தம் அடிக்கும்!

  நம்மால் முடியுமா? என்று நீ எண்ணினால் நண்டுகூட சிரிக்கும். அறிவுள்ள மனிதனுக்கு எல்லா நாட்களும் ஒவ்வொருநாளும் திருநாளே. இந்த நாள் இனிய நாளே! வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு சில உத்திகள் வேண்டும். வாழ்க்கையை ஜெயிப்பதற்கு சில சக்தியும் வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் உங்களை செயல் இழக்கச் செய்யக்கூடாது. அவை உங்களை யாரென்று அடையாளம் காட்ட வேண்டும்.

  எத்தனை முறைவிழுந்தோம் என்பதை விட எத்தனை விரைவாய் எழுந்தோம் என்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது. விழுந்தால் என்ன… எழலாமே! மேலே மேலே கொடுக்கப்பட்டது வாழ்க்கை நமக்கு வாரி வழங்கும் வைரக்குவியல்கள். வான் மகள் அதோ வைரக் கிரீடத்தோடு காத்திருக்கிறாள்… வாருங்கள் கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

  இந்த மாத இதழை

  சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!

  முனைவர்A.S. பிரபுகுமார், M.S., MBA., Ph.D.

  தலைவர், SPK குழுமங்கள், திருச்செங்கோடு

  •  “சந்தர்ப்பங்கள் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்க்கையில் பெற்றி பெறுகின்றார்கள்” என்பார் பெர்னாட்ஷா. அந்த வகையில் சந்தர்ப்பங்களைத் தேடித்தேடி ஒவ்வொன்றிலும் தன் முத்திரையைப் பதித்து வரும் இளம் சாதிப்பாளர் இவர்.
  • நாம் வாழும் வாழ்க்கையை யாரோ ஒருவர் தீர்மானிப்பதல்ல, நம் வாழ்க்கை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்புரிந்து கொண்டிருப்பவர்.
  • இளம் வயதில் SPK பள்ளிகளின் தலைவர் பதவி வகிப்பவர்.
  • SPK கல்வி அறக்கட்டளையின் தாளாளராக அங்கம் வகிப்பவர்.
  • “முடியும் என்றே முன்னேறினால். எல்லாம் முடியும்” என்கிற துடிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படும் இளைஞர்..
  • ஆளுமைத் திறனுடனும் சாதித்து வரும் இளம் தொழிலதிபர்.
  • தம்முடைய SPK பள்ளிக் கல்வியில் புதுமையைப் புகுத்தியவர். 32 உலக சாதனைகளைப் படைக்க வைத்தவர். இப்படி தம்முடைய கல்விப் பணியிலும், தொழில் முனைவிலும் தனித்துவத்தை நிலைநாட்டி வரும் SPK குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் முனைவர் திரு. S. பிரபுகுமார் அவர்களை உலக சாதனையாளர் “எலைட்” Dr. K. பிரதீப்குமார் அவர்களுடன் நாம் நேர்முகம் கண்டபோது, “பன்முக சிந்தனையுடன் தானும் வளர்ந்து, தம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன்னை சான்றோனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டும்” என்றவருடன் இனி நாம்…

  பிறந்தது… படித்தது…

  நான் பிறந்தது திருச்செங்கோடு மாவட்டத்தில் உள்ள அனிமூர் என்கிற கிராமம். அப்பா திரு. செங்கோடன், அம்மா திருமதி. அங்கம்மாள். எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம் தான்.

  ஆரம்பப் பள்ளிக்கல்வி திருச்செங்கோட்டிலும், 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை கல்வி கற்றது அருகிலிருக்கும் ஈரோடு நகரத்திலும் தான். தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்குச் செல்வேன். பள்ளியின் பெயர் BVB மெட்ரிகுலேசன் பள்ளி. 10ம் வகுப்பில் முதல் நிலையில் (First Class) 2000ல் தேர்வானேன். அதே பள்ளியில் மேல்நிலை படிப்பையும் தொடர்ந்தேன். 2002ல் 12ம் வகுப்பிலும் முதல் நிலையில் (First Class) தேர்வானேன்.

  பொதுவாகவே, தைரியமும், துணிச்சலும் இருந்ததால் பள்ளிகளில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் பங்குகொள்வேன். பரிசுகளும், சான்றிதழ்களும் கிடைக்கின்றதோ, இல்லையோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை. மேடைகளும், அனுபவங்களும் கிடைத்தால் போதும் என்ற காரணத்தினாலேயே அனைத்துப் போட்டிகளிலும் பங்கு கொள்வேன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்ததும் ஒரு காரணமாகும்.

  புத்தகங்களில் படிப்பது மட்டுமல்லாமல் இயன்றளவு அனைத்தையும் செயல்படுத்தி பார்க்கவும் முயல்வேன். வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, வெளிவட்டாரத்திலும் கூட எனக்கு அதற்கு தடைகள் இருந்ததில்லை. அப்படி தடைகள் இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை. ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நான் எனதாக்கிக் கொண்டேன் என்றே சொல்லலாம்.

  கல்லூரி வாழ்க்கை

   12ம் வகுப்பு முடித்தவுடன் கோயம்புத்தூர், அவினாசி ரோடு, பீளமேட்டில் உள்ள கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Coimbatore Institute of Technology)-யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன். 3 வருடம் விடுதியில் தங்கி படித்தேன். அங்கு அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டம், அதிலும் 2006ம் ஆண்டில் முதல் நிலையில் தேர்ச்சியடைந்தேன்.

  தொடர்ந்து முதுகலைப் படிப்பிற்காக பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், அமெரிக்கா (University of Birmingham, UK)-வில் MS (Manufacturing Engineering and Management) படித்தேன். 2007ல் முதல் நிலையில் (First class) தேர்வானேன். அதைத் தொடர்ந்து 2010ம் ஆண்டில் மலேசியா சன்வே பல்கலைக்கழகம் / விக்டோரியா பல்கலைக்கழகத்தில் MBA (General Management)  படிப்பை முடித்தேன். அதன்பின்பு இத்தாலியில் உள்ள Universita Popolare Degli Studi Di Milano பல்கலைக்கழகத்தில் Ph.D. தொழில் மேலாண்மை (Business Administration) முடித்து சமீபத்தில் 2014 பிப்ரவரியில் டாக்டர் பட்டமும் பெற்றேன்.

  நீங்கள் எப்பொழுது SPK குழுமத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்கள்?

  என்னுடைய இளங்கலைப் படிப்பு கோவை CIT-யில் முடிந்தவுடனேயே என்னையும் மேலாண்மை பங்குதாரராக SPK குழுமத்தில் என் அப்பா சேர்த்தார். SPK கல்வி அறக்கட்டளையின் தாளாளராகவும் என்னை இணைத்தார். அதற்கு பிறகு ஸ்ரீ SPK பப்ளிக் ஸ்கூல் எனும் CBSE பாடத்திட்டம் கொண்ட பள்ளியை 2007ல் துவங்கினோம். பள்ளி நிர்வாகத்தினையும் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டு என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தேன். எல்லா வேலைகளையும் தொலைபேசியின் மூலமாகவே செய்துவந்தேன்.

   MS-க்காக அமெரிக்காவிலும், பின்பு ஒரு வருடம் கழித்து MBA-விற்காக மலேசியாவிலும் நான் இருந்தேன். விடுமுறையில் இந்தியா வரும்பொழுது நேரில் சென்று பள்ளி தொடர்பான பணிகளைப் பார்ப்பேன். 2013ல் படிப்பு முடிந்து நிரந்தரமாக இங்கேயே தங்கி இப்பொழுது முழுநேரமும் மாணவர்கள், பள்ளி, கல்வி, வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் என்று என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

  SPK பள்ளிகளின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த ஒரு வருடத்தில் தாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள்?

  தலைசிறந்த கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் SPK பள்ளி என்ற பெயரினை ‘SPK GEMS’ என்று பெயர் மாற்றம் செய்தேன்.

  GEMS என்பதற்கு,

  G – Global, E – Education, M – Mentor, S – Structure

  பள்ளி கட்டுமான வசதிகளை உயர்த்தினேன். கல்விப் பயிற்றுவிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஏற்றபடி சூழலை மாற்றினேன்.

  மாணவர்களின் அறிவை உணரச்செய்யும் படி பயிற்றுவிக்கும் மிகவும் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களை நியமித்தேன். கல்வித்திட்டத்துடன் பயிற்றுவிக்கும் திட்டம், ஆசிரியர் கூட்டங்கள், மாணவர் கூட்டங்கள் போன்றவைகளை நடத்தினேன்.

  SPK பள்ளி மாணவ மாணவிகளை உலக சாதனையாளர்களாக்கி அவர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினேன்.

  SPK குழுமத்தின் அனைத்து இலச்சினைகளையும் அரசாங்கத்தில் பதிவு செய்தேன். உடனேயே புதிதாக கட்டுமானத் தொழிலும் ஈடுபட்டு முதல் அடுக்குமாடி திட்டத்தை கோவையில் துவக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

  தாய் தந்தையைப் பற்றியும், தந்தை காட்டிய வழிகாட்டுதல் பற்றியும் சொல்லுங்கள்…

  அப்பா அம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் மிகவும் சாதாரண விவசாயக் குடும்பம் தான். அப்பா விவசாயக் குடும்பத்தில் இருந்து நன்கு படித்து விவசாயக் கல்லூரியில் பொறியாளராகப் பணிபுரிந்தவர்.

  1986ம் ஆண்டு திருச்செங்கோட்டில் “SPK போர்வெல்ஸ்’ என்கிற இந்நிறுவனத்தை தொடங்கினார். திருச்செங்கோடு என்றாலே போர்வெல்ஸ்-க்கு பெயர் பெற்ற ஊராகும். 1996ம் ஆண்டு வரை  போர்வெல்ஸ் தொழிலை மட்டுமே அப்பா செய்து வந்தார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலைத் துவக்கினார். நில விற்பனையை தவணைமுறைத் திட்டமாக தமிழகத்தில் கொண்டு வந்தது என் அப்பா என்றே சொல்லலாம். இந்த ரியல் எஸ்டேட் மூலம் இதுவரை 80,000 வீட்டுமனைகளை மக்களுக்கு திருப்திகரமாகவும், நேர்மையாகவும் செய்து கொடுத்திருக்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  இந்த தவணைமுறைத் திட்டத்தை ஏற்படுத்தியதன் நோக்கமே ஏழை எளிய மக்கள் கூட இந்த தவணைத் திட்டத்தில் வீடு வாங்கும் நிலை பெறவேண்டும் என்ற எண்ணம் தான்.

  2001ம் ஆண்டு SPK கல்வி அறக்கட்டளையைத் துவக்கி அதன் கீழ் SPK மெட்ரிக்குலேசன் பள்ளியைத் துவக்கினார். நன்கு படித்த ஆசிரியர்களை வைத்து தரமான கல்வியை கொடுத்து பள்ளியை படிப்படியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினார்.

  கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படுகிறது?

  மாணவர்கள் அவர்களது பள்ளிக்கல்வி நேரத்திலேயே வீட்டுப்பாடங்களைச் செய்யுமாறு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். அதாவது வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கென்று கடைசி 45 நிமிட வகுப்பை ஒதுக்கி செய்துவிட்டு, அன்று பள்ளியில் நடத்திய பாடத்தை வீட்டில் முடித்துவரும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அன்றன்றையப் பாடங்களை அன்றே முடித்துவிட வேண்டும் என்பதற்காக இப்படி செயல்படுத்தப்படுகிறது. அந்தப் பாடமுறையை முறையாகப் பயன்படுத்தாத மாணவர்கள் தான் பின்தங்குகிறார்கள்.

  வீட்டில் வீட்டுப்பாடங்களை முடிக்கமுடியவில்லை என்பதற்கு பல காரணங்களைக் கூறுவதைத் தடுப்பதற்காக இம்முறை கையாளப்படுகிறது. இப்படி செய்யும் பொழுதும் குழுமமாக செயல்படுவதன் மூலம் பின்தங்கிய மாணவர்களும், நன்றாக படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு அமைகிறது. இதனால் சகமாணவர்களுடன் படித்து தெரியும் பொழுது படிப்பது சுலபமாக அமைந்துவிடுகிறது. இதுவே எங்களது 100% தேர்ச்சியின் முக்கிய காரணம்.

  மாணவர்களது படிப்பிற்கு கல்வி நிறுவனத்தின் பங்கைப்போல் பெற்றோர்களின் பங்கும் அவசியமானதே. பெற்றோர்களின் கவனக்குறை உள்ள பிள்ளைகளே கல்வியில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பெற்றோர்களுக்குப் பணிச்சுமை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அவர்களது பிள்ளைகளின் படிப்பிலும் அக்கறை செலுத்தி அவர்களையும் கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு எப்படி இருக்கிறது என்பதை நிச்சயம் பெற்றோர் தெரிந்து, அதை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  SPK பள்ளியின் தனித்தன்மைகள் சிறப்புகள் என்னென்ன?

  படிப்பை மட்டுமல்லாமல் அறிவுப்பூர்வமாக மாணவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை செய்முறைப் பயிற்சிகளாக வழங்க வேண்டும் என்பதில் முயற்சிகள் பல செய்து வருகிறோம். ஆறாம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் தொழில் சார்ந்த பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனால் பள்ளிப்படிப்போடு தொழில் படிப்புகளையும் செய்துகொள்ள முடிகிறது.

  உதாரணமாக, மின்சாதனப் பொருட்களை சரிசெய்வது எப்படி என்பது போன்ற பல பயிற்சிகளை அவர்களாகவே கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். பொதுவாக, தன்னுடைய வேலைகளை அடுத்தவர் செய்யவேண்டும் என்பதை எதிர்பார்க்கும் மனப்போக்கை மாற்ற அவர்கள் பழக வேண்டும். அந்த மாதிரியான சுயவேலைகளைச் செய்யும் பொழுது தான் எதிர்காலத்தில் எந்த ஒரு முடிவையும் சரியாக, தனியாக எடுக்க முடியும் என்பது என் கருத்து.

  பள்ளியின் பின்பகுதியில் வேளாண்மைக்கு என்று நிலம் ஒதுக்கியுள்ளோம். அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு அந்த நிலத்தில் வேளாண்மை எப்படி செய்ய வேண்டும், பயிரிடுவது எப்படி என்று அடுத்தடுத்த வழிமுறைகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். நமது நாட்டின் பாரம்பரியமான விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுவே இம்முயற்சியின் நோக்கம்.

  விளையாட்டுடன் சேர்ந்த கல்விமுறையை வழங்கிவருகிறோம். வெறும் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டில் தனித்திறன் வாய்ந்த மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் நிறுவனத்தின் பொறுப்பிலேயே செய்து கொடுக்கிறோம்.

  மழலையர் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியாக ஓவியம் வரைதல், பெயிண்டிங் & வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறோம். பள்ளி நேரங்களிலேயே சதுரங்கம் (Chess), கேரம், வாள் சண்டை, பெயிண்டிங், கால்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் பிற்காலத்தில் விளையாட்டில் ஒரு சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

  பள்ளியின் அடுத்தகட்ட வளர்ச்சியில் தற்போது உங்களது சிந்தனை என்பது

  கல்வி நிறுவனத்தைப் பொறுத்த வரையில், அடுத்த கல்வியாண்டில் மழலையர் கல்விக்காக “SPK கிட்ஸ்” என்ற பள்ளியைத் தனியாக தொடங்க உள்ளோம். இதில் Pre KG, LKG, UKG என்று மழலையர் மட்டுமே படிக்க தனிச்சிறப்புடன் கூடிய பள்ளியை வடிவமைக்க இருக்கிறோம். SPK கல்விக் குழந்தைகள் தங்களது மழலைக் கல்வி முடித்தவுடன் 1ம் வகுப்பை துவங்க, மெட்ரிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதும், CBSE கல்வியைத் தேர்ந்தெடுப்பதும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையவே இந்த தனிக் கல்வி நிறுவனத்தின் நோக்கம்.

  நான் படித்தது இயந்திரம் சார்ந்தது என்பதால் இரும்பு சம்பந்தமான (Steel Industries) நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இதை தொடங்க நிச்சயம் 2 ஆண்டுகள் தேவைப்படும். இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், நமது நாட்டுப் பொருள்களை நாமே தரமானதாக தயாரிக்க வேண்டும். இதன் மூலம் நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும். வேலை வாய்ப்பிற்காக அயல்நாட்டிற்கு செல்லாமல், அயல்நாட்டு இளைஞர்களையும் நம்மிடம் ஈர்க்கும் மந்திரத்தை நம்மவர்கள் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.

  இளைய தலைமுறையினர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தான் நாம் ஒரு சிறந்த இடத்தை உலக நாடுகளின் முன்னிலையில் பெறமுடியும். இதுவே எனது எதிர்காலத் திட்டமும் ஆகும்.

  தேர்வில் முதல் மதிப்பெண், விளையாட்டில் பதக்கம் பெறும் மாணவர்களுக்கும் எதுமாதிரியான ஊக்கங்களைக் கொடுத்து வருகிறீர்கள்?

  வருடத்திற்கு 50 லட்சம் முதல் 1 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை எங்களது அறக்கட்டளையின் சார்பில் செய்து வருகிறோம். ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் பின்புலத்தை அறியும் பொருட்டு ஆவணங்கள் அடங்கிய சான்றிதழ்களைச் சரிபார்த்த பிறகே இந்த சேவை வழங்கப்படுகிறது

  வறுமையைக் காரணம் காட்டி யாரும் படிப்பை நிறுத்திவிடக்கூடாது. நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் எங்களை அணுகி இந்த சேவையைப் பெறலாம்.

  விளையாட்டில் தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்காக தனிக்கவனம் செலுத்தி பயிற்சியாளரை நியமித்துள்ளோம். மேலும் பயிற்சிகள் வழங்கி பதக்கங்கள் பெற எங்களால் இயன்றதை செய்கிறோம்.

  ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனம் என்று இரு வேறுபட்ட தொழில்கள். அதிலுள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து?

   நிச்சயமாக ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத தொழிலில் இரு மாதிரியான தலைமைப் பொறுப்புகள். பிரச்சனைகள் இல்லாத தொழில்கள் என்று ஏதும் இல்லை. பிரச்சனைகளை எப்படி திறம்பட சமாளிக்கிறோம் என்பதில் தான் நின்று காட்டுகிறோம். அதில் சாதித்தும் காட்டுவோம். எந்த ஒரு தொழிலைச் செய்தாலும் அதிலுள்ள விதிமுறைகளைச் சரியாக கடைபிடிக்க வேண்டும். எதற்காகவும் வருத்தப்படுவதோ, நிலைதடுமாறுவதோ கூடாது. நம்மை நாடி வருபவர்களின் நம்பிக்கையை அவர்களுக்கு நிச்சயம் நல்ல நம்பிக்கையாகவே கொடுக்க வேண்டும்.

  SPK என்ற நிறுவனத்தை நம்பினால் நிச்சயம் பலன் உண்டு என்று முதலீடு போடும் மக்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத் திருப்பிக் கொடுத்தாலே போதும். உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.

   “விரும்பி வருபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான் ஒரு சிறந்த தொழில் தர்மம்”.

  வளரும் தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

  இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. “பிறந்து விட்டோம் எப்படியும் வாழ்ந்து விடுவோம்” என்று மட்டுமே சிலர் நினைக்கிறார்கள். அது மிகப்பெரிய தவறு. பிறந்தால் பிறப்பின் பலனை இந்த நாட்டிற்கு ஏதேனும் ஒரு வகையில் செலுத்த வேண்டும். நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருந்தாலும், அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம். நிச்சயம் அதற்கும் பலன் கிடைக்கும்.

  ஒரு புதிய முயற்சி செய்து அதை யாரும் பாராட்டவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்றாலும் மனம் தளராது, முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நிச்சயம் எதிர்காலத்தில் பலன் அமையும்.

  “மாற்றங்கள் ஒவ்வொரு நொடியும் நிகழும். ஆனால் மாறும் மாற்றம் ஒரு சாதனையாக இருக்க வேண்டும்” என்பதை ஒவ்வொரு இளைஞனும் நிச்சயமாக எண்ணி நடைபோட்டால் போதும்.

  ஒருவரை ஒருவர் எப்போதும் வேறுபடுத்திப் பார்க்கவே கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அந்த திறமையை வெளிக்கொணர எவ்வித தடைகளையும், முட்டுக்கட்டுகளையும் அடுத்தவர் போடவோ, நாம் போட்டுக் கொள்ளவோ கூடாது.

  எனது ஊரையும், எனது சமுதாய மக்களையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற நிலையை இளைஞர்கள் உணர்ந்தாலே ஊரும், நாடும், சமுதாயமும் தனித்தன்மை பெற்று உயர்ந்து வளரும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

  பெற்றவிருதுகளும், பட்டங்களும்

   120 ஆண்டுகாலம் பழமைபெற்ற மிலானா (இத்தாலி) பல்கலைக்கழத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றேன். இப்பல்கலைக்கழகத்தில் இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்றமைக்கான பெருமையைப் பெற்றேன்.

  என் திறமையைப் பாராட்டி மிலானா பல்கலைக்கழகம் எனக்கு “கல்விக்குழு உறுப்பினர்” என்ற சிறப்பைக் கொடுத்தார்கள். உலக அளவில் இதற்கு 5 பேர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் நானும் ஒருவன் என்பதில் நமது நாட்டின் சார்பிலும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

  நான் பள்ளியில் பொறுப்பேற்ற பின்னர் பள்ளி மாணவர்களை வைத்து உலக சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணி 5 நாட்களில் 32 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறேன். உலகிலேயே அதிகமுறை உலக சாதனை நிகழ்த்திய பள்ளி என்றால் அது SPK பள்ளி மட்டுமே என்று பெருமையாகச் சொல்வேன்.

  எனக்கு இவர்கள் வழிகாட்டிகள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புபவர்கள்

  எல்லா மகன்களுக்கும் போலவே எனக்கும் “”எனது தந்தை தான் முதல் வழிகாட்டி”.

  ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்ந உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. அவர் சந்தித்த இடர்பாடுகளையும்,  தடைகளையும் சாமர்த்தியமாக சமாளித்து தான் இந்நிலையை அடைந்துள்ளார். இதுவே அவர் மேல் மரியாதையையும், மதிப்பையும் எனக்கு ஏற்படுத்தி அவரை எனக்கு ஒரு முன்னோடியாக ஆக்கியது.

  எந்த ஒரு செயலையும் முழுமையாகவும், ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் செய்பவர். கடுமையான உழைப்பாளி. என்னைப் பொறுத்த வரையில் நேர்மைக்கு அவர் தான் சிறந்த உதாரணம். யாரும் எந்த நிலையிலும் எங்களுடைய நேர்மையின் மேல் குறை சொல்ல முடியாத அளவில் தான் நடந்து வருகிறோம்.

  “எந்த ஒரு தொழிலையும், செயலையும் செய்வதற்கு முன்னர் நன்றாக யோசி. தொடங்கிய பின்னர் யோசிக்காதே” என்பது அவரின் அறிவுரை. அதன்படி தான் இன்றும் நான் நடந்துவருகிறேன்.

  பிறகு சச்சின் டெண்டுல்கர், நாற்பது வயதிற்கு மேலும் தனது சாதனைகளை நிகழ்த்தியது அவரின் தனிப்பெரும் சாதனை. நிறைய சோதனைகளையும், நிறைய சாடல்களையும் சந்தித்த அவர் அதற்கான பதில்களை மைதானத்தில் காட்டியவர். யாருக்கும் எப்பொழுதும் நாம் நின்று விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் அதற்கு மட்டும் தான் சரியாகப் போகும். யார் என்ன சொன்னாலும் நமது முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று உணர்த்தியவர் அவர்.

  ரத்தன் டாட்டா, அப்துல்கலாம், ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்கேல் ஜோர்டன் போன்றவர்களும் எனது விருப்பத்திற்கு உரியவர்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விசயத்தை எனது வாழ்நாளில் கடைபிடித்து வருகிறேன். இதில் பெரிதும் நான் மதிப்பது எளிமையைத் தான். எவ்வளவு தான் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் சரிசமமாக பழகும் பொழுதுதான், எளிமையுடன் இருக்கும் பொழுது தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கப் பெறுகிறது.

  ஒரு நிறுவனம் மேன்மை பெறவேண்டும் என்றால் எப்படிப்பட்ட உத்திகளைக் கையாள வேண்டும்?

  ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும். ஒரு மேலாளரின் திறமையைப் பொறுத்து தான் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் செயல்கள் அமையப் பெறும். அவர்களின் செயல் ஈடுபாட்டின் வெளிப்பாட்டில் தான் நிறுவனத்தின் மேன்மை தென்படும். வேலையாட்களுக்கு சம்பளங்களும், சன்மானங்களும், பாராட்டுக்களும், பதவிகளும் உரிய நேரத்தில் கிடைத்தாலே ஒவ்வொரு பணியாளரும் சிறப்பாக பணியாற்றுவார்கள்.

  புதிய புதிய கண்டுபிடிப்புகள், புதிய தேடல்கள், புதிய முயற்சிகள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றங்கள் மாறமாறத் தான் விருப்பங்களும், எண்ணங்களும் மாறும்.

  தன்னம்பிக்கை வாசகர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

  எவ்வளவு பெரிய தோல்விகள் வந்தாலும் தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது. மனதில் தோன்றிய நிகழ்வுகளையும், செயல்களையும் உடனுக்குடனே செயல்படுத்தி விட வேண்டும். எதனையும் காலம் தாழ்த்தி செய்யக் கூடாது. இறக்கும் தருவாயிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் மனிதர்களைத் தான் வரலாறு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.

  இந்த மாத இதழை

  படிப்பதற்கு பணம் ஒரு தடையல்ல

  “கற்கை நன்றே கற்கை நன்றே

  பிச்சை புகினும் கற்கை நன்றே”

  பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தில் படிப்பதனாகினாலும் அதற்காக வருத்தப்பட தேவை இல்லை என்ற ஒளவையாரின் மொழிப்படி உயர்கல்வியைப் பெறுவதற்கான செல்வத்தை எப்பாடுபட்டானாலும் அதன் மூலம் பெறும் கல்வி போற்றுதலுக்குரியது.

  இன்று பெரும்பாலான மாணவர்களின் கவலை தன்னிடம் கல்லூரி சேர்கைக்கான மதிப்பெண் இருக்கப் பெற்றாலும், அதற்கான ஆண்டு கட்டணத்தை செலுத்த முடியவில்லையே என்பது தான். உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உள்ளது. சாதாரணமான மாணவர்களுக்கு இது ஒரு எட்டாக்கனி.

  ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியான ஒரு சில நாட்களில் நாம் செய்தித்தாள்கள் படிக்கும் பெரும்பாலான செய்திகள் ஒரு குறிப்பிட்ட மாணவருக்கோ அல்லது மாணவிக்கோ கல்விக்கட்டணம் செலுத்த வழியில்லை. அதிக மதிப்பெண் பெற்ற இவர்களுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ வேண்டும் போன்ற அன்புக்கட்டளைகள் அதிகம் வருகின்றன. நன்றாக படிக்கக்கூடிய மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அவர்களுடைய கல்லூரி கட்டணத்தைக் கட்ட வசதியில்லாமல் வழிமுறை தெரியாமல் திணறுகின்றனர். ஜெர்மனி போன்ற வளர்ந்த மேலை நாடுகளில் உயர்கல்வி அரசின் பொதுநடைமுறையாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இன்னும் பல மாணவர்கள் பணம் இல்லை என்ற ஒரே காரணத்தினால் தன்னுடைய உயர்கல்வி வாய்ப்புகளை பள்ளிக்கல்வியுடன் முடிக்கின்றனர்.  இந்நிலை மாறவேண்டும்.உயர்கல்விக்கு பணம் ஒரு தடையல்ல என்ற நிலை உருவாக வேண்டும். இதுவே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோள்.

  இன்றைய சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல உயர்கல்வி தொடர்பான பணச்சலுகைகள், சில தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளும், பல ஆயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை வெளிச்சம் மிக்கதாகின்றது. இன்னும் இதுபோன்ற மாணவர்கள் கிராமங்களில் உள்ள நிலையில் அறியாமை காரணமாக இதுபோன்ற  சலுகைகளை பெற முடிவதில்லை. அவர்களுக்கு இக்கட்டுரை மிகப்பயனுள்ளதாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  கல்விக்கடன்கள்:

  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியமான கடமைகளுள் ஒன்று உயர்கல்வி பயில உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான வசதியை செய்து கொடுப்பது. அந்த வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் அனைத்து தகுதியுள்ள மாணவர்களுக்கும் கல்விக்கடனை வழங்க வேண்டும். கல்லூரி சேர்க்கை அரசு கலந்தாய்வு மூலமாகவோ அல்லது தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களாகவோ இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உத்தரவு.

  411க்கும் மேற்பட்ட பொது மற்றம் தனியார் வங்கிகள் வழங்கும் கல்விக்கடன்களின் வட்டி விகிதம் சுமார் 0.5 வங்கிக்கு வங்கி வேறுபடும். ஒவ்வொரு மாணவரும் தன் இருப்பிடத்தின் வரைமுறைக்குட்பட்ட தொலைவில் உள்ள வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வழியாக தனக்குத் தேவையான கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

  நான்கு லட்சத்திற்குட்பட்ட கல்விக்கடனில் உள்நாட்டில் படிப்பதாயின் அவற்றிற்கு எந்தவொரு பிணையத்தொகையை அடமானமாக வைக்கத் தேவையில்லை. மாணவர்களின் பெற்றோர்கள் சான்றிதழ் கொடுத்தால் போதுமானது. இந்தியாவில் படிப்பதற்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் படிப்பதற்கு 20 லட்சம் வரையிலும் கல்விக்கடன் வழங்கப்படுகின்றது.

  7.5 லட்சம் வரை மூன்றாம் நபரின் செக்யூரிட்டியின் பேரில் கல்விக்கடனும், அதற்கு மேல் சொத்து பத்திரத்தின் அடமானத்தின் பேரிலும் கல்விக்கடன் வழங்கப்படுகின்றது.

  பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் 12 முதல் 13% வரையில் மாணவர்களுக்கு வட்டி விகிதத்தில் 0.5% சலுகை வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. மத்திய அரசின் கல்விக்கடன் வசதிகளில், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பட்சத்தில் அவர்கள் தகுதியான அரசு சான்றிதழ்களை காண்பித்து வங்கி மூலம் அவர்கள் முழு கடனுக்காக வட்டி சலுகைகளைப் பெறமுடியும்.  காலிடே பிரியாடு எனப்படும் படிக்கும் காலங்களில் கல்விக்கடனுக்கான வட்டி ஏதும் கணக்கிடப்படுவதில்லை.

  மாணவர்கள் தங்களுடைய கல்விக்கடனை படிப்பு முடிந்த ஒரு ஆண்டிற்கு பிறகோ அல்லது வேலை கிடைத்த 6 மாதத்திற்குப் பிறகோ திருப்பி செலுத்த வேண்டும்.மாணவர்கள் நேர்மை தவறாது திருப்பி செலுத்தும்போது அந்தப் பணம் வருங்கால மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். வங்கிகளின் மேலாளர்கள் மாணவர்கள் எடுக்கவிருக்கும் உயர்கல்வியின் வேலை வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு உடனடியாக கல்விக்கடனை வழங்குகின்றனர். B.E., MBBS, MBA, MCA படிப்பதற்கு உடனடியாக கல்விக்கடன் வழங்கப்படுகின்றது. மாணவர்கள் வங்கிகளின் மூலமாக கடனை வாங்குவதில் சிரமமாக இருப்பின், அவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை ஆன்-லைன் வாயிலாக அளிக்கலாம். 40க்கும் மேற்பட்ட வங்கிகளில் நேரடி இணையதள இணைப்பை www.sseservices.in என்ற இணையதளத்தில் பெற்று நாம் விரும்பும் வங்கிகளில் வீட்டிலிருந்தபடியே கல்வி கடனுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். அதன்பிறகு வங்கி அலுவலர்கள் மாணவர்களைத் தொடர்புகொண்டு கல்வி கடனிற்கான வழிவகைகளை ஆவணங்களாக செய்கின்றனர். கல்விக் கடனில் ஆண்டுக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புக்ஸ், லேப், காப்பீட்டுத் தொகை, கம்ப்யூட்டர் சாதனங்கள் வாங்குவதற்கான செலவினம் போன்ற அனைத்து வகையான செலவுகளும் இதில் அடங்கும்.

  கல்வி உதவித்தொகைகள்:

  மத்திய அரசின் உதவிகள்:

  •  ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான முழு வட்டியை மத்திய அரசே வழங்குகின்றது. அதற்கான ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • 2008ம் ஆண்டு முதல் B.Sc. பட்டயப் படிப்புகளான இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் படிக்கும் 10000 மாணவர்களுக்கு ரூ.80,000 வரை மத்திய அரசின் நிறுவனமான Department of Science and Technology (DST)மூலம் வழங்கப்படுகின்றது.
  •  மத்திய அரசின் ஊனமுற்றோர் மறுவாழ்வு நிறுவனத்தின் மூலம் பார்வை குறைபாடு மற்றும் காது கேளாதல் போன்ற குறைபாடு உள்ளவர்களின் இளங்கலை படிப்பிற்கு மாதம் ரூ.2500, முதுகலை படிப்பிற்கு ரூ.3000 வரை வழங்கப்படுகின்றது. இத்துடன் புத்தகங்களின் செலவினத் தொகையும் ஆண்டுதோறும் இளங்கலை படிப்பிற்கு ரூ.6000, முதுகலை படிப்பிற்கு ரூ.10,000 வழங்கப்படுகின்றது.
  • மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பதால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 மற்றும் விடுதியில் அல்லாமல் படித்து வரும் மாணவர்களுக்கு ரூ.700ம் வழங்கப்படுகின்றது.

   மாநில அரசின் உதவித் தொகைகள்:

  •  குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுள்ளது. அதன்படி பொறியியல் கல்வியாக இருந்தால் ரூ.20,000யும், மருத்துவக் கல்வியாக இருந்தால் ரூ.1,00,000-யும் அரசே செலுத்துகின்றது.
  •  SC/ST மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பட்சத்தில் அவர்களின் முழு படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கின்றது.
  •  தனியார் பொறியியல் கல்லூரிகளின் All India Council for Technical Education, New Delhi (AICTE) வழியாக 5% இடங்களில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணச் சலுகை.

  தனியார் நிறுவனங்களின் உதவித் தொகைகள்:

  •  ICICI வங்கி ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகின்றது.
  •  Indian Oil Corporation, பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு 200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றது.
  • Reserve Bank of Indiaஆண்டுதோறும் 150 மாணவர்களுக்கு உதவி வருகின்றது.
  • Fair & Lovely நிறுவனம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஒரு லட்சம் வரையில் உதவித் தொகை வழங்குகின்றது.
  • LIC எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.10,000 வரை ஆண்டு உதவித் தொகையாக வழங்கி வருகின்றது.

  குறிப்பாக, அரசுத் தேர்வுகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புத் தேர்வில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து கலை அறிவியல் படிப்புகளுக்கு ரூ.5,000, பொறியியல் படிப்பிற்கு ரூ.25,000 வழங்குகின்றது. ஒரு தனியார் நிறுவன அறக்கட்டளையான ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் 1000 கோடி அளவில் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

  மேலும் இலவச கல்வி ஆலோசனைகளுக்கு அழைக்கவும். 0424 2500073 (இரவு 8 முதல் 9 மணி வரை)

  இந்த மாத இதழை

  மரசுரைக்காயும் ஏட்டுச் சுரைக்காயும்

  இந்தப் பூவை பார்த்த பொழுதுதான் மரம் என்கின்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதலாம் என்கின்ற, எண்ணம் வந்தது. உயிரியல் படிப்பில், நிறைய மலர்களை பதினொன்றாம் வகுப்பில் படித்தது நினைவில் மின்னியது. இந்தப் பூக்கள் கூறுகின்ற வடிவத்தில் அல்லி வட்டம், புல்லி வட்டம் வைத்து மனதிற்குள் வரைந்து பார்த்தேன். எதனோடும் சேர்கின்ற மாதிரி தெரியவில்லை. மரம் என்கின்ற தலைப்பு பலமுறை உருமாறி இப்போதிருக்கின்ற வடிவத்திற்கு வந்திருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு டேபிள் ரோஸ்  செடியை  மண்ணில் வைத்து இருந்தால், பூத்திருக்கும் அது நடந்தேவிட்டது.

  பூக்கள் என்றாலே, செடிப் பூ கடவுளுக்கு பறித்து செல்கின்ற மல்லிப்பூ என தரைமட்டத்தில் மேல்நோக்கி பூத்துக் குலுங்குகின்ற பூக்கள் நினைவு வந்தன. திரைப்படங்களில் எண்பதுகளில், சில இயக்குநர்கள், கதாநாயகிகளை காட்ட வேண்டிய இடங்களில் பூக்களைக் காட்டியிருப்பார்கள். ஆனால் இந்தப் பூ தலைக்கு மேலே மரத்திலிருந்து விழுந்திருக்கின்றது. தினந்தோறும் பார்க்கும் பொழுதெல்லாம், இப்பூக்களைப் பற்றி மேலும் படிக்க வேண்டும் என்று தோன்றினாலும், அவசர உலகின் அத்தியாவசியங்கள், தள்ளி போடச் செய்தன. பலன் கருதாமல் ஆர்வத்திற்காக செய்கையில் ஆத்மார்த்தமான அமைதி கிடைக்கின்றது. பூவின், வடிவம் குறித்து சொல்ல வேண்டும் என்றால் ஒரு வித்தியாசமான ஒழுங்கற்ற வடிவமைப்புதான். உருவ அளவில் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கிரிக்கெட் பந்து அளவிற்கு சற்றேக்குறைய இருக்கும் போல உள்ளது. இந்தக்கட்டுரைக்கு, மரம் தொடர்பாக தலைப்பு வைத்திருந்தாலும் அதன் விதை இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பூவிலிருந்துதான் வந்திருக்கிறது ‘மர சுரைக்காய்’ என்று மரத்தின் பெயரை ‘சட்’ என்று அறிமுகப்படுத்திவிட்டால் என்ன? அதை தெரிந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு வாரம் செய்த முயற்சிகள் குறித்து, விளக்கி  கூறமுடியாது. இவ்வாறு யோசித்து அதனை கட்டுரையாகவே எழுதிவிடலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்து ஆயிற்று. இணைய தளத்தில் தேடியதை மட்டுமே பல நாட்கள் கதையாய் எழுதலாம் போல. இடையிடையே  ஃபேர்ரல் வில்லியம்ஸ் உடைய

  “யாரும் சந்தோஷமாக இருக்கலாம்!

  என்னோடு சேர்ந்து கைதட்டலாம்!; உங்கள்,

  வசிப்பறைக்கு வானமே கூரை எனலாம்!”

  என்ற பாடல்களை, யூடியூபில் கேட்டது. வழி தவறுதல் என்று சொல்லிவிட முடியாது.  ஆனால் இதுதான் மரம் என்று கட்டுரை எழுதுமளவு விவரங்கள் கிடைத்ததா?  என்றால் இல்லை. அதன் பின்னர் ஒருநாள், அண்ணா பல்கலைகழக வளாகத்தில், காலடியில் அதே பூ கிடந்தது. அந்த மரத்தில் நம்மைப்போல் எவ்வளவோ பேர் தேடுவார்கள்? (எவ்வளவு பேர்?) என்று கெஜ்ஜிலியா ஆஃபிரிக்கானா என்று தாவரவியல் பெயரோடு சேர்த்து விவரமாக தமிழ் பெயரையும் புண்ணியவான் யாரோ எழுதியிருந்தார். பேராசிரியர்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டு செயல்படுகின்றனர் என மகிழ்ச்சி பிரவாகமெடுத்தது. கல்வி நிறுவனங்கள் அறிவுத் திருக்கோவில்களாய் உள்ளன. இளம் வயதில், அண்ணா பல்கலைகழகத்தில் படிக்கும் பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டது, பசு மரத்தில் பதிந்தது போல, நினைவுக்கு வருகின்றது. வளர்த்தியான பீடிகை இல்லாமல் போயிருந்தால், இந்த மரத்தின் பெயர் அறிமுகமான சுவாரஸ்யத்தையும் நீங்கள் இழந்துவிடக் கூடும். ஐந்தாவது மாடியிலிருக்கின்ற தாவரவியல் பகுதிக்கு, நூலகத்தில் நுழைந்தவுடன் சென்று, அரைமணி நேரத்திற்கும் மேல் அலசி தேடியதில் ஆழமான பாடங்கள் எல்லாம் கிடைத்தன. ஆனால் மர “சுரைக்காய்” மரம் குறித்து ஏட்டு சுரைக்காய்களில் இருந்து அதிகமாக தெரிந்துகொள்ள முடியவில்லை.

  பூக்கள் தான் கவனத்தை உடனே ஈர்த்தன என்றாலும், காய்கள் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி கடந்து போய்விட முடியாதவை. காய்கள் ‘யானை புளியங்காய்’ என்று சொல்லப்படுகின்ற உருவத்தில் இருக்கின்றன. மெரினா கடற்கரையில் இந்த மரம் நீச்சல் குளத்தின் அருகே இருக்கின்றது. அந்த காய்கள் சுரைக்காய் போல நீளமாக ஆனால் வலிமையாக இருக்குமாம். புஷாவெளி என்று ஒருவர் (சரியான தமிழாக்கம் என்று உறுதியாக கூறமுடியவில்லை) தன்னுடைய வலைப்பதிவில் ‘ரெட்ஹில்ஸ்’ அருகே கண்ட இந்த மரத்தை குறித்தும் இந்த காய்களின் வலிமை குறித்தும் மிக விளக்கமாக எழுதி இருக்கின்றார். கூடவே இவரது வலைப்பதிவும் மிக நன்றாக இருக்கின்றதென்று கூறவேண்டும். மரங்கள் இயற்கையன்னையின் வரங்கள். நிழலிலும், நல்ல காற்றிலும் நம்மை வருடும் அவற்றின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம் என்று நினைத்தால் அவை எங்கெங்கெல்லாம் கூட்டிச் செல்கின்றன பாருங்கள்.

  ஐந்து முதல் ஏழு கிலோ வரை வளரும் இந்த மர சுரைக்காய்கள் விழுந்தால் மரத்தின் கீழே நின்றிருப்பவர்களுக்கு அடிபட்டு விடுமாம். கார்கள் நிறுத்தி இருந்தால் மென்மையான பகுதிகள், கண்ணாடி குறித்து கவனமாக இருக்க வேண்டுமாம். காய்கள் உண்ணத்தகுந்தவை அல்ல. இந்த மரத்திற்கு கல் தேக்கு என்னும் மற்றொரு பெயர்கூட உண்டாம். மரப்பட்டையில் இருந்து ஏதோ மருந்துகள் எடுக்கின்றார்கள் போல.  சிஃபிலிஸ் உட்பட எல்லா வியாதிப் பெயர்களையும் அடுக்கி இருந்தனர். எவ்வளவோ மரங்கள் ஊருக்குள் இருக்கையில் ஏன் மெனக்கெட்டு மர சுரைக்காய் மரத்திற்காக ஆராய்ச்சி செய்கின்றோம் என்று தோன்றியது.

   அந்த ஆராய்ச்சிக் குணமே, மனதில் படிக்கின்ற விஷயங்களைப் பதிவுசெய்ய உதவியாக இருக்கின்றது. ‘ஆர்வம் கண்டுபிடிப்பின் தாய்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. இரு மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வின் நேர்முகத்திற்காக பயிற்சிக்கென வந்திருந்தனர். பொழுது போக்கான நேரத்தில் மகிழ்ச்சி கருதி மட்டுமே செய்யக் கூடிய செயல்களை ‘ஹாபி’ என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். அமெச்சூர் என்னும் சொல்லாட்சி குறித்தும் தெரிந்துகொள்ள நேர்ந்தது. அது பிரெஞ்சு மொழியில் மகிழ்ச்சி கருதி செய்யப்படும் செயல் என்று பொருள்படுமாம். அதே செயலை பொருள் ஈட்ட வேண்டும் என்னும் நோக்கத்துடன்  செய்தால் அதனை ‘ப்ரபொஷனல்’ என்று சொல்லிவிடலாம். தாவரவியலை மகிழ்ச்சி கருதி அமெக்சூராக படித்தால் மரசுரக்காய்க்கு செலவிட்ட நேரம் எல்லாம் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாமல் போவது, போல போய் விடாது. இருபது முப்பது புத்தகங்களுக்கும் மேல் இந்த ஆங்கிலத்தில், ‘சாஸேஜ்’ மரம் என்று சொல்லக்கூடிய மரம் பற்றி தெரிந்து கொள்ள தேடப்பட்டது.  ஐ.ஏ.எஸ். படிக்கும் பொழுதும் இப்படி ஒன்றிரண்டு கேள்விகளுக்காக தேடிய பொழுதுகள் நினைவில் வந்தன. இந்தத் தேடல்கள் சுகமானவை. விடையைக் கண்டறிதல் மட்டுமே நோக்கம் அன்று, வழித்தடத்தில் நிறைய கற்றுக்கொள்ள நேர்கின்றது. அதுவும் பலன்களில் அடக்கம்.

   ஆப்பிள் மரத்தை அண்ணாந்து பார்த்திட்ட நியூட்டன் மாதிரியெல்லாம் விசேஷமாக எதுவும் நடந்துவிடவில்லை என்று இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படும் இப்பொழுது நமக்கு தெரிந்திருக்கின்றது. வௌவால்கள் இந்தக் காய்களை விரும்பி சாப்பிடுகின்றனவாம். எக்மோர் அருங்காட்சியகத்தில் பின்புறமாக, சுற்றுச்சுவர் அருகே கடைசியில் இந்த மரங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் வௌவால்களும் ஏராளமாக இருக்கின்றன, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சுவை போல. கோவில் மரம் என்று இன்னொரு மரத்திற்கு ஆங்கிலப் பெயர் இருக்கின்றது. இது ஒரு வேளை, அரச மரமாகத்தான் இருக்கும். அதுதானே ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் இருக்கின்றது என்று அவசரப்பட்டு நானும் உங்களைப் போலத்தான் நினைத்தேன்.   ஆனால், இல்லை.

  அரளிப் பூப்போல பிரித்தெடுத்தால் பால் வருமே! அதுதான் இலைகளெல்லாம் மெழுகு பூசிக் கொண்டு வெள்ளையும் சற்றேசிவப்பு நிறமும் கலந்த பூக்களோடு, தண்ணீரே இல்லாமல்  இருக்கிற இடத்தில் கூட, வளர்ந்து, இலைகள் அதிகமின்றி, ஆனால், தலை நிறைய பூவோடு மலை மேலே ஏறி வா, என்று  வரவேற்கின்ற மரம் தான் கோவில் மரமாம்.

  “இந்திய மலர் மரங்களும், புதர்களும்” என்று புத்தகம் எழுதியுள்ள சி.டிகோவன் அவர்களது குறிப்புகள் குறித்து முன்பொரு கட்டுரையில் எழுதியாயிற்று. இவரது புத்தகம் நன்றாக மரங்களை அறிமுகப்படுத்தி நட்பு ஏற்படுத்தி வைக்கின்றது. இதுவரை மூன்று மரங்களின் அடையாளங்கள் குறித்து பார்த்தோம். அவை மரங்களை தெரிந்து கொள்ள உதவும்.

  பூக்கள், காய்கள் முதலியவற்றின் மூலம் தனது முகவரியை எழுதிக்கொண்டு காற்றோடு இலை வீசி நம்மை வழியெல்லாம் உற்சாகமாக, நிழலால் வருடி அழைத்து அடைத்துக் கொள்கின்ற அன்னை சரணலாயங்களோ? இம்மரங்கள் என உணர்ச்சிவசப்பட்ட போது தோன்றியது.

  மசூரி, தர்மபுரி, வத்தல்மலை, கோவை, நீலகிரி, கேரளம் என மரங்கள் விதவிதமான ஊர்களில் வகைவகையான வடிவ இலைகளோடு நிறைய தகவல்களால்  நிறைந்து இருக்கின்றன. தாவரவியலுக்கு தாவுகின்றது மனது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் விலங்கியல் படித்து அதில் தீவனப் பயிர்கள் மட்டுமே படித்திருந்தாலும்  கற்றது கையளவே! என கையடக்க பூவின் மூலம் புதிர் போட்டு புன்னகையோடு சொல்லிவிடுகின்றது. ஏதாவதொரு செடியோ? மரமோ? நண்பன் ஒருவன் நன்றாக தெரிந்தவனை பேர் சொல்லி அழைத்து பேசாமல் சிரிக்காமல் பார்த்துவிட்டுத் தாண்டிப் போனால், அதுபோலத்தானே பூத்துக் குலுங்குகின்ற மரங்களும் மனசால் வாடும். மரங்களின் முகவரிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நின்று அரை நிமிடமாவது பேச வேண்டும். அவை தம் தனித்தன்மைகளை பூக்களின், காய்களின் வடிவமாக நிறங்களாக மணங்களாக அலங்கரித்துக்கொண்டு நிற்பது கண்டு, புரிந்துகொள்ள முடியுமானால், நமக்கு ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு கல்யாண வீட்டு அளவு வரவேற்பு காத்திருப்பது புரியும், என்றால் மிகையல்ல! இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்தால் ரொம்ப ஓவராக… டூ மச்… என்று தோன்றினாலும் அப்படிக்கூட எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

   “கற்பனை இல்லாத படிப்பு செரிமானம் ஆகாமல் உண்பது போன்றது” என்று ஹேர்ரி மேடாக்ஸ் என்ற கல்வியியலாளர் கூறியுள்ளார். ஆங்கில மொழி படிக்கையில் ப்ராக்மாடிக்ஸ் என்றொரு பிரிவு அதில் இருப்பது தெரிய வருகின்றது. செமான்டிக்ஸ் என்கின்ற பிரிவுக்கு அருகாமையில் வைத்துத்தான் பொருள் சொல்ல வேண்டும்.  செமான்டிக்ஸ் என்றால் வார்த்தைகள் சொல்கின்ற பொருளை  வாக்கியத்தின்  மீது படிய வைத்து பொருள் கொள்வது. ஆனால் ப்ராக்மேடிக்ஸ் என்பதை உள்ள வார்த்தைகளையும் தாண்டி சில பல விஷயங்களை வார்த்தையிலேயே சொல்லாமல் புரிந்து கொண்டு அர்த்தப்படுத்திக் கொள்வது. இவ்வாறு சொல்ல வந்ததை சொல்லாமல்  புரிய வைப்பது மரங்களின் பாஷையாக இருக்கக்கூடும். புத்தர் ஞானம் பெற்றதும் முனிவர்கள் காலந்தோறும் தவம் புரிவதும் மரத்தடியிலேயே நடைபெற்றதை என்ன சொல்வது.

  “அரம் போலும் கூர்மையான அறிவுள்ளவராக இருந்தாலும் மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதோர்” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார். மக்கட் பண்பு வளர்த்துக்கொள்ள பலன் கருதாமல் எதையாவது படிக்கின்ற’ஹாபி’ தேவை. அது ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது என்று சொல்கின்றனர். தோல்வியடைவதற்கு செய்ய வேண்டிய வேலையில் இருபது சதவிகிதம் செய்திருந்தாலே வென்றிருக்கலாம் என்று சொல்வார்கள். கடுமையாக உழைத்து செய்ய வேண்டாத பணியைச் செய்யாமலிருக்க பணிக்கு வெளியே ஒருமுறை நின்று பார்க்க வேண்டும். அப்பொழுது ‘பளிச்’ என பணி, பனியாய் மாறிவிடும். மரத்திலிருந்து மாங்காய் பறிப்பது போல வெற்றிக்கனி பறிக்கலாம்.

  இந்த முறை இ.ஆ.ப தேர்வின் நேர்முகத்திற்கு இருவரோடு தயார்செய்ய கலந்துரையாடியதில் இருவரது ‘ஹாபி’ தெரிய வந்தது. மிக வித்தியாசமானவை, ஒன்று  தரை கட்டுமான பொருட்கள். மற்றொன்று, கோவில்களை சுற்றிப் பார்த்தல். இரண்டாமவர் ஒரு, கேள்விப்பட்ட ஆனால் பரவலாக இல்லாத ஹாபி கொண்டுள்ளார்.  முதலாமவரோடு அதிகம் அவர் பேச, கேட்டே காலம் கழிந்தது. ஏட்டுக் கல்வியறிவைத் தாண்டிய உட்கிரகிப்புதான் தேவைப்படும் போது வெளிவரும் என்று தெரிந்து கொண்டோம். மரங்களைப் பற்றிப் படிக்கும் பொழுது எப்படியெல்லாம் கற்பனை போகலாம் என்பதற்கு அதன் போக்கிலேயே போனதன் பதிவுதான்  இந்தக் கட்டுரை.

  கற்பனை ஒரு மேக்கப் சாதனம் மாதிரி. கற்பனை கலந்து படிக்கையில்தான் ஏடுகள் இரசிக்கப்படுகின்றன. சுமாரான பாடப்பொருளை அது சூப்பராக புரிய வைக்கின்றது. சாதாரண பாட்டுக்கு ஒரு பின்னணி மெட்டுப் போட்டு தருவது போல நீண்ட நாள் நினைவில் விரும்பிப் படிக்கப்படும். அதேசமயம் அமைதியான நிம்மதியான மனநிலையோடு படிக்கப்படும் பாடங்களே கற்பனை மூலம் மனதில் நிலைத்து நிற்கின்றன. மதிப்பெண்கள் மட்டுமே குறியாக படிக்கப்படும் படிப்பு கற்பனை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏட்டு சுரைக்காய்களை உற்பத்தி செய்யும். அவற்றை சமைத்து சாப்பிடும் பக்குவத்திற்கு கற்பனையே மாற்றும். எனவே நிறைய யோசிப்போம் கொஞ்சமாய் படிப்போம் அல்லது அதையே யோசித்து மாற்றி கொஞ்சமாய் படிக்கும் போதே நிறைய யோசிப்போம். அதோ தொலைவில் இன்னொரு பூ மென்மையாய் விழுகின்றது.

  -இன்னும் பூக்கும்

  இந்த மாத இதழை

  என் பள்ளி

  திரு. கருப்புசாமி

  மின்னணு பொறியாளர்

  கோவை

  “”ஒரு மனிதனை மனிதனாக

  மாற்றும் மிகப்பெரிய

  பொறுப்பு கல்விக்கு

  இருப்பதால் மட்டுமே இதனை

  செய்து வருகிறோம்.”

  ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு இருக்கும். தொடக்கமானது நன்றாக அமைய வேண்டும். அவ்வாறு நன்றாக அமையாவிடின் அம்முடிவால் யாதொரு பயனும் இல்லை. அதுபோலத்தான் கல்வியும். பள்ளிக்கல்வி ஒவ்வொருவருக்கும் எப்படி அமைகின்றதோ அவ்வாறே அவர்களின் எதிர்காலமும் அமையும். அந்த வகையில் மின்னணு பொறியாளராய் இருக்கும் திரு. கருப்புசாமி அவர்களின் பள்ளி அனுபவங்களின் பகிர்வு இதோ நம்மிடம்.

  கோவை அருகில் விலாங்குறிச்சி அருகில் ஒரு சிறிய கிராமத்தில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் படித்தது எங்கள் ஊரிலுள்ள நம்பியூர் குமரா பாளையத்திலுள்ள ஆரம்பப்பள்ளியில் தான். இப்பள்ளியில் படிக்கும் பொழுதே நிறைய தடைகளும் பிரச்சனைகளும் இருந்தது. இதனால் என் பள்ளி வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக அமைந்தது. கேள்விக்குறியோடு இருந்து எந்த பயனும் இல்லை. அனைவரும் ஆச்சரியப்படும் ஒரு ஆச்சரிய குறியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு முதல் படியாக கல்வி தான், படிப்பு தான் என்பதை புரிந்து கொண்டேன். இதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தேன்.

  கல்வி என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். அந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டாலே போதும். வாழ்க்கையில் மேன்மை பெறலாம் என்பதை எனக்கு கல்வி கற்றுக்கொடுத்த என் ஆசான்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர்கள் கூறிய அறிவுரைகளும், கருத்துக்களையும் இன்று வரை நினைத்து கடைபிடித்து வருகிறேன். ஆசிரியர்களின் ஆலோசனையுடன் ஒவ்வொரு மாணவரும் கேட்டறிந்தாலே போதும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்.

  என் பள்ளி வாழ்க்கைக்கு பின்னர் நான் விரும்பி தொழிற்படிப்பைத் (ITI) தேர்ந்தெடுத்து படித்தேன். விரும்பி எடுத்து படித்ததால் விருப்பத்தோடு என்னால் படிக்க முடிந்தது. என் பள்ளிப்படிப்பிற்கு பின்னர் முழு நேரமாய் படித்தது இந்த படிப்பை மட்டுமே தான்.

  இதன்பின்னர் பகுதி நேர படிப்பை மட்டுமே படிக்க முடிந்தது காரணம் வறுமை தான். அதன் பிறகு மேற்படிப்புகள் அனைத்தையும் பகுதி நேரமாகவே 13 வருடம் படித்து முடித்தேன். இதில் டிப்ளமோ, இன்ஜினியர், PG டிப்ளமோ, அதன்பிறகு ஒரு சான்றிதழ் துறை போன்றவை படித்தேன். இதன் மூலம் என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இதற்கு காரணம் ஆர்வமும், விடாமுயற்சியம் மட்டும் தான்.

  என் பள்ளி வாழ்க்கைக்கு பின்னர் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றால். மேற்படிப்பாக டிப்ளமோ படித்த போது வறுமையின் காரணமாக என்னால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்தேன். எனது வறுமையை அறிந்த எனது நண்பர்கள் மூன்று பேர் உதவி செய்ய முன்வந்தனர். அதை எந்நாளும் என்னால் மறக்கவே முடியாது. அதுபோல் என் ஆசிரியர்கள் பெரிதும் பல நிலைகளில் உதவி புரிந்திருக்கிறார்கள் அதையும் என்னால் மறக்கவே முடியவில்லை.

  சிறு வயதிலிருந்தே தொழிற்படிப்பு தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கிருந்தது. அந்த ஆர்வமே என்னை வாழ்வில் உயரச் செய்தது. ITI முடித்தவுடன் எனக்கு பணி கிடைத்தது. இந்த பணியின் மூலம் என் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை நன்றாக திட்டமிட்டுக் கொண்டேன். அதுபோல தான் நான் வளர்ந்து வருகிறேன். எந்த தொழிலையும் சிறப்பாக செய்ய உறுதுணை புரிவது கல்விதான். பள்ளிக் கல்வியை முறையாக பயின்று வந்தாலே மேற்கல்விகளும் சிறப்பாக அமையும். அந்தக் காலத்தில் போல் இப்பொழுது இல்லை. வெறும் கண்ணால் பார்த்து கற்றுக்கொள்வது எந்த அளவிற்கு சரியாக அமையும் என்று எளிதில் சொல்ல முடியாது.

  எதையும் நன்கு கற்றுக்கொள்வதன் மூலம் அதிலுள்ள நுணுக்கங்களை நன்றாக கற்றுக்கொள்ள முடியும். இதனால் அடிப்படையில் படிக்கும் கல்வி எதிர்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவி புரியும் என்பது மறக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை.

  நான் படித்த பள்ளிக்கும் இந்த சமூகத்திற்கும் கல்வியின் மூலம் நிறைய மாற்றங்களும், மாறுதல்களும் செய்து வருகிறேன். இதற்கு பழைய மாணவர்கள் சங்கம் என்று ஒன்றை நிறுவி அதன் மூலம் கல்வி சம்பந்தமான சேவைகள் செய்து வருகிறோம். ஒரு மனிதனை மனிதனாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு கல்விக்கு இருப்பதால் மட்டுமே இதனை செய்து வருகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை “மாணவர் மன்றம்’ ஒன்றை நிறுவி மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறி வருகிறோம். ஒவ்வொரு மாணவர்களின் எதிர்கால திட்டங்களைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் அவர்களைத் தயார்படுத்தி வருகிறோம்.

  பள்ளிக் கட்டிடம், மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் போன்றவை எங்கள் சங்கம் மூலம் அரசாங்கத்தின் துணையோடு நன்றாக நடத்தி வருகிறோம். கிராமப்புறமாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, கனிணி வழிக்கற்றல் போன்றவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

  இன்றைய மாணவர்கள் நிறைய பேர் நன்றாக படிக்கிறார்கள். அன்று படித்த படிப்பைவிட இப்போதைய மாணவர்கள் நிறைய படிக்கிறார்கள். படிக்க வேண்டிய சிலவற்றை விட்டுவிடுகிறார்கள். வெறும் பாடத்தை மட்டுமே படித்தால் போதாது. வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அறிந்து படித்தாலே போதும் வாழ்க்கை மேம்படும் என்று தன்னுடைய மனப்பகிர்வை வரும் எதிர்கால மாணவர்களின் நலனில் அக்கறையோடு இருக்கும் இவரின் சேவை மேலும் மேலும் சிறக்க தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

  இந்த மாத இதழை

  உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!!

  வயப்படுத்துதல்:

  சொல்லும் சொற்கள், அவற்றைக் கேட்பவர்களைத் தன்வயப்படுத்தி, மற்ற எல்லா எண்ணங்களையும் புறந்தள்ளுவதாக அமைவதை வயப்படுத்துதல் என்கிறோம். வாயிலிருந்து வருவது எல்லாமே பேச்சாக இருக்க முடியாது. வயிற்றில் இருப்பதன் மணம் வாய் வழியாக, வாயுவாக, ஏப்பமாக, விக்கலாக வெளிவருவதுடன் பேசும் வார்த்தைகள் நம் மனதிலிருந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  கேட்டார் பிணிக்குந் தகையவாய்க்கேளாரும்

  வேட்ப மொழிவதாஞ் சொல்   

  (குறள் 643)

  கேட்பவர்கள் நம் சொற்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமாறு பேசுதல் மிக முக்கியம். சந்தேகமே இல்லாமல் மிகத் தெளிவாகப் பேச வேண்டும். இந்தப் பேச்சு, பாலில் ஊற்றிய தயிர், அந்தப் பால் முழுவதையும் தயிராக்குவதைப் போல் கேட்பவரைத் தன்வயம் இழுக்கச் செய்துவிடும்.இதைத்தான் பிணித்தல் என்றார் வள்ளுவர்.

  இதுபோன்ற பேச்சுக்களை இதுவரை கேட்காதவர்களும் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஆசையை உண்டாக்குவதுதான் சிறப்பு. இதற்குச் சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  • என்ன பேச வேண்டும் என்பதைத் தேர்வு செய்தல்;
  • கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்குபடுத்துதல்;
  • சந்தேகமில்லாமல் தெளிவடைதல்;
  • இனிமையான குரலில் கேட்பவர் கண்களைப் பார்த்துப் பேசுதல்.

  இந்த நான்கையும் கவனத்தில் கொண்டு, கேட்பவர்கள் சொல்வதையும் அக்கறையுடன் கேட்டு, அதன்பின் சொல்கின்றபோது, கேட்பவர்களின் உள்ளத்தை வெல்லும் சூழல் உருவாகும்.

  இராமாயணத்தில் இராமன்  இராவணன் யுத்தத்தில் இராவணனிடம் இராமன், “இன்றுபோய் நாளை வா” என்றுகூறியதை உதாரணமாய் கூறலாம். இராமன் அளித்த வாய்ப்பு உயிர்ப்பிச்சை அல்லவா? ஒருநாள் என்றாலும் கூட இந்த வார்த்தை தான் சரியானது.

  விமர்சனம்:

  பிறர் செயல்களைப் பற்றிக் கருத்து கூறுவதை விமர்சித்தல் என்று சொல்கிறோம். பொதுவாகப் பேச்சு என்றால் நான்கு அம்சங்கள் வேண்டும்.

  1. பேசுபவர்; 2. கேட்பவர்; 3. பேச்சு; 4. கேட்டுப் புரிந்தமைக்கான ஒப்புதல்.

  இந்த நான்கில் எது குறைந்தாலும் அது முழுமையானதாக இருக்காது.

  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், கேட்பவர் மனதில் எவ்வித எதிர்ப்புமின்றிப் பதிய வேண்டும். ஜீன்ஸ்பேண்ட் துணியில் ஊசியைக் குத்திப் பாருங்கள்; எவ்வளவு சிரமம் என்பது தெரியும். உள்ளதைச் சொல்லி, கேட்பவர்களின் உள்ளத்தை வெல்வது அவ்வளவு சிரமமான செயல்.

  இதற்கான வழிதான் ஷேவிங் டெக்னிக்.முகத்தில் ஷேவிங் செய்வது போல் செய்ய வேண்டும். முதலில் சோப்பு தடவி, மெத்தென்றாக்கிய பின், பிளேடால் வழிக்கும்போது, முடிகள் மிகச்சுலபமாய் வந்துவிடும். இதுபோன்றே உள்ளதைச் சொல்வதற்கு ஒரு சில முக மூடிகள் (MASK) தேவைப்படுகின்றன.

  MASK – முகமூடி

  M  Multiple – பலவகைப்பட்ட

  A  Action – நடிப்பு / செயல்

  S  Stimulating – தூண்டும் / ஊக்கம் தரும் / சுறுசுறுப்பு தரும்

  K  Key – சாவி / பேச்சு (விடை) / முக்கியமான

  இந்த முகமூடியை அணிந்து கொண்டால், நாம் சொல்வதை உறுதியாக, பிடிவாதமாகச் சொல்வதுடன், கேட்பவர்கள் அதை ஏற்கவும் செய்ய முடியும்.

  இந்த முகமூடியை அணியுமுன் சுயசங்கல்பம் ஒன்றைமேற்கொள்ள வேண்டும். அதாவது விருப்பு, வெறுப்பில்லாமல், சுய ஆதாயமில்லாமல், நடுநோக்கு நிலையில் இருப்பேன் என்பது தான் அது.

  ஒன்றன்பின் ஒன்றாக:

  நல்லது செய்யாத மனிதன் இந்த உலகில் எவருமே இல்லை.மூச்சு எல்லோருமே விடுகிறோம். அதில் வெளியேறும் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) மரங்கள் சுவாசிக்கப் பயன்படுகிறதல்லவா?எனவே, எந்த ஒன்றையும் ஒருவரிடம் சொல்லுமுன் தெளிவாக அவரைப் பற்றியும், நாம் சொல்ல இருப்பதைப் பற்றியும் ஆராய்ந்து சொன்னால், கட்டாயம் ஏற்றுக்கொள்வார்.

  அவர் செய்த நல்லவைகளை முதலில் கூறி, அவரது செயலால் விளைந்த பாதிப்புகளை மாற்றி அமைக்க, வேறு வழியில் செயல்பட்டிருக்கலாம் எனத் தீர்வோடு, அவரது மனம் புண்படாதவாறு ஆலோசனையாகக் கூறும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சிறு உதாரணம் மூலம் தெளிவு பெறலாம்.கோயிலில் ஆடு வெட்ட வேண்டும். அதற்கு மாலை போட்டு, நீர் தெளித்து கயிறு கட்டி அழைத்துச் (இழுத்துச்) செல்லும்போது, மேளம் முழங்க, மகிழ்ச்சியோடு ராஜநடை போட்டு வருகிறதல்லவா? அந்த உணர்வைக் கேட்பவர் மனதில் உருவாக்க வேண்டும். அதன்பின் நல்லதைச் சொன்னால் நம்பி ஏற்றுக்கொள்வார்.

  சொல்பவரும் நல்லவை மட்டுமே கேட்டல், பார்த்தல், பேசுதல், செய்தல் இவற்றோடு இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும் பெருந்தன்மை (Magnanimity) என்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  அறியாமை:

  Ignorance என்று ஆங்கிலத்தில் சொல்லுகின்றனர். நாம் அதன் அர்த்தத்தை வேறுமாதிரி சிந்திக்க வேண்டும். பொதுவாக“உனக்கு இதெல்லாம் தெரியாது” என்றுகூறுவோம். ஆனால், பிறர் உள்ளத்தை வெல்ல நினைப்பவர்கள், தம்மிடம் இருப்பதை அறியாத நிலை தான் அறியாமை என்பதை உணர வேண்டும்.

  பிறகு இருப்பதை வைத்துச் செயல்பட வேண்டும். இதிலிருந்து, மனிதனாய் வாழ்ந்துவரும் எல்லோருக்கும் எல்லாமும் உள்ளது என்றும், ஆனால் பெரும்பாலானவர்கள் தம்மிடம் இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

  ஞானம்:

  Wisdom என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். அறிவிலே பல நிலைகள் உண்டு. பசி, தூக்கம் போன்றவைகளை வெளிப்படுத்துவது இயற்கை அறிவு; செய்யும் செயலுக்கு இதுதான் பலனாக வரும் என்று கணிப்பது செயல் விளைவறிவு; எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வைப்பது உள்ளுணர் அறிவு; கற்றும், கேட்டும், கண்டும் விருத்தி செய்து கொள்வது தேர்ந்த அறிவு. அனைத்துக்கும் மேலாக நான் யார் என்றறிவதே மெய்யறிவாகும். இதை மெய் ஞானம் என்றும் கூறுகிறோம். ஞானம் என்பது தன்னை அறிதல் என்று பலர் கூறுகிறார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால், ஒருவர் தன்னிடம் இல்லாததை அறிவதே ஞானம் என்பது தான் சரி. இல்லாதது எது, தேவையானது எது, இருப்பது எது இவை மூன்றுமே வேறுபட்ட நிலைகள்.

  இல்லாததில் இருவகை உள்ளது. மனித வாழ்க்கைக்கு தேவையானது ஒன்று; தேவையற்றது மற்றது. தேவையான ஒன்று தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து, அறிந்து அதனைப் பெறுவதே ஞானமாகும்.

  ஓர் உதாரணம் தெளிவாக்கும்.

  சிவா ஒரு சிடுமூஞ்சி.சதா எடுத்தெறிந்து பேசுதல், பிறர் வருந்துமாறு பேசுதல் அவரது வாடிக்கை.அவரிடம் இல்லாதது பொறுமை. இதை அவர் தெரிந்து கொண்டு, பிறருடன் அமைதியாகப் பேசுவது தான் அவருக்கான ஞானம்.

  சுவாமி விவேகானந்தர்:

  அவர் கூறுகிறார் ஒழுக்கம், பக்தி, சேவை மூன்றும் இளைஞர்கட்கு வேண்டும் என்று. மாறி வந்த காலத்திற்கேற்ப, அறிவியல் முன்னேற்றம், சிந்தனையில் தெளிவு, இவற்றின் அடிப்படையில் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை.

  ஒழுக்கம், நம்பிக்கை, செயல் என்று கூறுவதே பொருத்தமானதாகும்.

  ஒழுக்கம்:

  உலகத்தை அளவோடு அனுபவித்து, பிறருக்கும், தனக்கும் இன்றும், என்றும் பாதிப்பில்லா வகையில் வாழ்வதுதான் ஒழுக்கம்.

  நம்பிக்கை:

  இது பக்தியிலிருந்து மாறுபட்டது.பக்தியில் பிறரை நம்புகிறோம். இங்கு தன்னையே நம்ப வேண்டும். தானே தன் செயல்கட்கு பொறுப்பு என்பதால், இதைத் தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம்.

  செயல்:

  செயல்படாவிட்டால் சடமாகி, பின் சவமாகி விடுவோம். அசையாப் பொருட்களை சடப் பொருட்கள் என்று சொல்கிறோம். செயல்படாத நிலையில் நாமும் சடப்பொருளாகி விடுவோம் என்பதை மறந்துவிடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். செயல்படாத நிலை  செயலற்ற நிலை  கோமா நிலை. இது இறந்த நிலைக்குச் சமம் ஆகும்.

  தேவை மாற்றம்:

  சாதாரண மாற்றமல்ல. 100% மாற்றம். இதுவரை நடந்ததை ஒன்றும் செய்ய முடியாது; அதிலிருந்து கற்றுக்கொண்டு, மாறிய நிலையில் இனி செயல்பட்டால், உள்ளத்தை வெல்லுமளவு உள்ளதைச் சொல்லும் பக்குவம் கைகூடும்.

  எதைச் சொல்கிறோம், யாரிடம் சொல்கிறோம், ஏன் சொல்கிறோம் என்பதை விழிப்பு நிலையிலிருந்து அறிவு நிலையில் ஆராய்ந்து, தேர்ந்து முடிவு செய்ய வேண்டும். சரியான முடிவு என்பது மிக முக்கியமானது. தவறாக முடிவெடுத்துவிட்டால், வாழ்க்கையே தொலைந்துவிடும்.

  குளிர்காலத்தில் ரஷ்ய நாட்டின் மீது படை எடுத்துச் சென்று போரிட்டதால் வாழ்வை இழந்த ஹிட்லர் போல் நம் முடிவுகள் இருக்கக் கூடாது. உறுதியான, தெளிவான முடிவுக்கும், பேச்சுக்கும் வலது நாசியில் மூச்சு இழுத்துவிடுவதும்; இனிமையான குரலுக்கு சங்கு முத்திரை செய்வதும் பயிற்சிகளாகும். நல்ல நோக்கத்துடன், மற்றவர்கள் மனம் வருந்தாதவாறு, தேர்ந்து முடிவு செய்த நியாயமான தன் கருத்தை இனிமையாக, உறுதியாகச் சொல்வது எல்லோருக்கும் எளிமையானதே! இதனால், கேட்பவர்களது உள்ளத்தை மட்டுமல்ல, இந்த உலகத்தையும் வெல்ல முடியும். இதற்குச் சிறந்த உதாரணம் சுவாமி விவேகானந்தர்.

  அவர் காட்டிய ஒழுக்கம், தன்னம்பிக்கை, செயல் என்ற மூன்றையும் ஏற்றுச் செயல்படுவோம்; செகத்தில் சிறப்பாய் வாழ்வோம்.

  இந்த மாத இதழை

  வெற்றிச் சிந்தனையில் இருங்கள்!

  வாழ்க்கையில் ‘எப்படியாவது’ முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே, இந்த எண்ணம் சரிதானா? என்று சிந்தித்துப் பாருங்கள்! நேர்மையான வழியில் உழைத்து முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. தகாத வழியில் சென்றாவது தகுந்த முன்னேற்றத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று எல்லோருமே துடிக்கிறார்கள். ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா! தம்பி புரிந்து நடந்து கொள்ளடா!’ என்ற திரைப்படப் பாடல் இவர்களுக்காக எழுதப்பட்டதோ, என்னவோ? குறுக்கு வழியில் சென்று குவலயம் போற்ற உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கக் காரணம் என்ன? சோம்பேறித்தனம் தான்! உழைக்கக் கூடாது என்ற எண்ணம் வந்துவிட்டால், பிறகு குறுக்கு வழியில் செல்வதற்குத்தானே நாட்டம் வரும்! சமுதாயத்தில் எப்படியாவது முதலிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று எல்லோருமே முயற்சி செய்கிறார்கள்! மாணவர்கள் படிக்காமலேயே பட்டத்தைப் பெற்று விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். “நான் இந்தச் செயலில் வெற்றிபெறுவேன்” என்று நம்பிக்கையோடு இருங்கள்.நீங்கள் எப்பொழுதும் வெற்றிச் சிந்தனையில் இருங்கள்.

  உழைக்கும் எண்ணம் வந்து விட்டால்  வலுப்பெற்று விட்டால் இந்த வக்கிரப் புத்தியெல்லாம் பக்கத்தில் கூட வந்து நிற்காது. இந்தக் குறுக்குப்புத்தி வருவதற்குக் காரணம், ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சோம்பல்தான்! பத்தாயிரம் ரூபாய்களை முதலீடாகப் போட்டுப் பத்துக் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்க வேண்டும் என்று முதலாளி நினைக்கிறார். இந்த எண்ணம் தவறு என்று சொல்லவில்லை.பொருளீட்டும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளாமல், எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா ஆசைப்பட்டு என்ன பலன்?

  சமுதாயத்திற்கும், மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், தான் மட்டும் முன்னேற வேண்டும் என்ற சுயநல மனப்பான்மையோடு திரியும் அரசியல்வாதி, அரசியல் வானில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்று நினைக்கிறான். கார்களும், பங்களாக்களுமாக வந்து குவிய வேண்டும் என்று எண்ணுகிறான். தனக்குச் செல்வாக்கு பலமடங்கு பெருக வேண்டுமென்று விழைகின்றான். சில சிறு வியாபாரிகளும் நேர்மை மனப்பான்மையைக் கைவிட்டு விட்டு, மக்களிடமிருந்து பணத்தைக் கண்டபடி உறிஞ்சும் மனப் பான்மைக்கு வந்து விடுகிறார்கள். எனவே ‘ஏமாற்றிப் பிழைப்பது தவறல்ல.’ என்ற சித்தாந்தத்தை வெகு ஜோராகக் கடைப் பிடிக்கிறார்கள்.

  சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் ஏமாற்றும் குணம், தான் ‘எப்படியாவது’ முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம், உழைக்கும் மனப்பான்மையின்மை மற்றும் சுயநலப்போக்குகள் தான் மட்டும் சிறப்பாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆகியவைகளை மூட்டை கட்டி வங்காள விரிகுடாக் கடலில் போட்டால்தான் இந்த நாடு உருப்படும். இவைகளை ஒழிக்காத வரை நாடு முன்னேற்றப் பாதைக்குச் செல்ல முடியாது.

  நாம் சிறிய வயதிலிருந்தே, சிறுவர்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றோம். “டேய்! அந்தக் கடைக்காரன் பெரிய பங்களா கட்டியிருக்கிறான். நூறு ஏக்கரா நிலம் வாங்கிப் போட்டிருக்கிறான்…. எப்படி முன்னுக்கு வந்தான் தெரியுமா?கள்ளக் கடத்தல் மூலம் சம்பாதிக்கிறான். நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அவ்வளவு பொருளைச் சேர்க்க முடியாது! வாழ்ந்தால் அவனைப் போல வாழ வேண்டும்!” என்றுசின்னஞ்சிறு வயதிலேயே அவர்களின் பிஞ்சு மனதில் நஞ்சை ஊட்டிவிடுகின்றோம்.“நீ எ.ஈ.நாயுடுவைப் போல…. அம்பானியைப் போல உயர்ந்திடு!…இவர்களெல்லாம் மிகவும் கடினமாக உழைத்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள்!” என்று உபதேசம் செய்து சரியான முறையில் அவர்களுக்கு வழிகாட்டினால்  கடினமாக உழைக்க வேண்டும் என்ற மந்திரத்தைச் சொல்லி உற்சாகப்படுத்தினால் நிச்சயமாக அவர்கள் முன்னுக்கு வந்துவிடுவார்கள்.

  உற்சாகத்துடன் கூடிய இனிமையான – உறுதியான சொல் உங்கள் நெஞ்சில் ஆழப் பதிந்து விடும். நீங்கள் மிக விரைவாக முன்னேறுவதை எவரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், கடுமையான உழைப்பைச் சிந்த வேண்டும். உழைப்பு இல்லை என்றால், முன்னேற்றத்துக்கான அழைப்பு இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

  நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு, உங்களுக்கு முக்கியமாக வேண்டியது, தன்னம்பிக்கையே! தன்னம்பிக்கை இல்லாமல் நீங்கள் உழைப்பின் வாசலைக் கூட மிதிக்க முடியாது. உங்கள் மேல் உங்களுக்கு தளராத தன்னம்பிக்கை இருக்குமானால், நீங்கள் எதையும் சாதிக்கலாம்!

  வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள், அனைவருமே தன்னம்பிக்கை என்ற ஆடையை அணிந்து கொண்டவர்கள் தாம்! மாவீரன் அலெக்சாண்டர், உலகத்திலுள்ள பல நாடுகளை வென்று வெற்றி வாகை சூடியதற்குக் காரணம், அவனிடமிருந்த அசைக்க முடியாத ‘தன்னம்பிக்கை’  என்னும் கவசமேயாகும்.

  சில பேருக்குத் தன்னம்பிக்கை இருந்தும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அபாரமான வெற்றிகளைப் பெற்றாலும் கூடச் சில சறுக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. அதற்குக் காரணம், ‘தான்’ என்ற அகம்பாவம் அவர்களை ஆட்டிப் படைப்பது தான்! அவர்கள் எதற்கும் வளைந்து கொடுத்துப் போக மாட்டார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என்று சாதிப்பவர்கள். தனக்கு மட்டுமே எல்லா விஷயங்களும் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணி மண்டைக் கனம் பிடித்துத் திரிந்து கொண்டிருப்பார்கள்.

  தன்னம்பிக்கை நிரம்பப் பெற்றவர்கள்தாம்! உழைக்கும் மனோபாவம் உள்ளவர்கள்தாம்! நல்ல முறையில் முன்னேறி முதன்மை இடத்திற்கு வந்தார்கள். மற்றவர்களுக்கு அனுசரித்துப் போகாத வளைந்து கொடுத்துப் போகாத தன்மையும் அகம்பாவமும் இருந்த காரணத்தால் கிடுகிடு வென்று கீழே இறங்கி விட்டார்கள். அவர்களுக்கு நேரம் சரியில்லை என்று அவர்கள் சொல்லலாம்.ஆனால் அவர்களின் எண்ணங்கள் சரியில்லாத காரணத்தால்தான், அவர்கள் உயர்வுப்பாதையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்தது.

  எனவே எவராக இருந்தாலும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், மற்றவர்களுக்கு வளைந்து கொடுத்துப் போகத் தெரிய வேண்டும். தன்னை ஆட்டிப் படைக்கும் தான் என்ற அகம்பாவத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட வேண்டும்.

  மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவன்தான் மனிதன்! நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள்! உயர்வு கிடைக்கும் வரை பொறுமையாக இருங்கள்! ‘தான்’ என்ற மமதையைத் தூக்கியெறிந்து விட்டு, அனைவரிடத்திலும் அனுசரித்துப் பழகுங்கள்! மற்றவர்களின் உணர்வுகளுக்குக் கொஞ்சமாவது மதிப்புக் கொடுங்கள்!

  நீங்கள் மற்றவர்களுக்கு வளைந்து நெளிந்து அனுசரித்துப் போனாலே, உங்கள் மேல் பொறாமை கொண்டு சீறி விழுபவர்கள் எத்தனை பேர்! இப்படியிருக்கும் போது, நீங்கள் கர்வத்தோடு இருந்தால், உங்களுடைய நிலைமை இன்னும் மோசமாகப் போய்விடும் என்பதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு கர்வம் இருந்தால் உங்களால் வெற்றிச் சிந்தனையோடு இருக்க முடியாது. ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அந்தக் காரியத்தை முடிப்பதில் முழு ஆர்வத்தையும் செலுத்துங்கள். அந்தக் காரியத்தைச் செய்யாமலேயே பாதியில் விட்டு விடாதீர்கள்! காரியம் முழுவதையும் முடித்து விட்டுத்தான் மறுவேலை என்று எண்ணி அதில் மன உறுதியோடு இருங்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் என்று திடமாக இருந்து எப்பொழுதும் வெற்றிச் சிந்தனையில் இருங்கள். வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று நீங்கள் முனைப்புடன் செயல்படும்போது, உங்களுக்குப் பல துன்பங்கள் வரத்தான் செய்யும். உங்களை வீழ்த்துவதற்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்பாடின்றி வந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் பயந்து கொண்டு இடையிலேயே உங்களுடைய செயலை விட்டு விடலாமா? விடாதீர்கள்! மன உறுதியோடும், பொறுமையோடும் இருந்து காரியத்தைக் கச்சிதமாக செய்து முடியுங்கள்.செயல்திறனும் விடாமுயற்சியும் இருந்தால் நீங்கள் எதையும் சாதித்துக் காட்டலாம். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்ததற்கு அவருடைய செயலாற்றும் திறனும், இடைவிடா முயற்சியும், சோர்ந்து போகாத தன்மையும்தான் காரணம்.

  அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெற்றிச் சிந்தனையோடு இருந்து செயல்பட்டார்.

  உயரத் துடிக்கும் உள்ளங்களே! மற்றவர்களின் கேலி, கிண்டல், நக்கல், எதிர்ப்பு ஆகியவைகளைக் கண்டு நீங்கள் கொஞ்சமும் பயப்படாமல் – வருத்தப்படாமல் முன்னேற்றம் ஒன்றையே முழூ மூச்சாகக் கொண்டு கடுமையாக உழையுங்கள். நீங்கள் முன்னுக்கு வருவதை எவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.வெற்றிச் சிந்தனையுடன் இருங்கள்! உங்களைப் பற்றி வரும் உயர்வும் புகழும்!

  இந்த மாத இதழை

  மலர்கள் மலரட்டும்

  ரஷ்ய நாட்டின் அடிமை நாடுகளுள் ஒன்றாக போலந்து, பிரான்ஸ் நாடு இருந்தது.ரஷ்யாவின் கொடூர கட்டுப்பாட்டில் போலந்து நாட்டின் போனீஷ் மொழி இருந்தது. இந்நாட்டில் போனிஷ் மொழி பேசவோ, படிக்கவோ, எழுதவோ, பாடம் நடத்துவதோ கூடாது என்பதும், தவறிப் போனிஷ் மொழி பேசினாலோ, பேசும் உரிமையைத் தூண்டினாலோ, சைபரி பாலைவனத்தில் தண்டனை என்பது அறிவிக்கப்படாத சட்டமாக இருந்தது.

  ஆனால், போலந்து அறிஞர்கள் ஒன்றுகூடி பள்ளிகளில் போனிஷ் மொழியைக் கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். பள்ளிகளில் பார்வையிட ரஷ்ய அதிகாரிகள் வரும்போது ஒரு மின்சார ஒலியை ஒலிப்பதன் மூலம் ஆசிரியர்கள் உஷாராகி ரஷ்ய பாடம் நடத்துவார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒருமுறை அதிகாரிகள் வந்தபோது மின்சார மணி ஒலிக்கவில்லை (இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால்) ரஷ்ய அதிகாரி பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் என்ன பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாய்?என்றார்.ஆசிரியை தையற்பயிற்சி பாடம் என்றார். உடனே ரஷ்ய அதிகாரி ஒரு மாணவியை அழைத்து ரஷ்ய மொழியில் கேள்விகள் கேட்க, அந்த மாணவி அளித்த பதிலில் மகிழ்ந்து அதிகாரி சென்ற பிறகு, ஆசிரியை கட்டிப்பிடித்து தேம்பித்தேம்பி அழுதது அந்தக் குழந்தை. “நம் தாய்மொழி நன்குதெரிந்தும் சுதந்திரமாகப் பேசமுடியவில்லையே” என்று ஏங்கிய அந்தக் குழந்தை பிந்நாளில் யுரேனியம் என்ற கழிவுப் பொருளிலிருந்து ஒருபுது தனிமம் ஒன்றைப் பிரித்து எடுத்து, ஆற்றலுடைய அந்த தனிமத்திற்குத் தன் தாய்நாட்டினுடைய பெயரையே “பொலேனியம்” என்றுவைத்தார்.

  புற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும் ரேடியத்தைக் கண்டுபிடித்தார். பத்து வயதில் அன்னையை இழந்து, வேலை இழந்த தந்தையால் பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியாததால், பணிப்பெண்ணாக வேலை பார்த்து தனது சகோதரியை படிக்க வைத்து, அதன்பின் சகோதரி அனுப்பிய பணத்தில் படித்தவர். போதுமான உணவு கிடைக்காமல் ரத்தசோகை நோயே வரும் அளவிற்கு வறுமையோடு போராடியவர்.

  கிரோகா பல்கலைக்கழகத் தலைவர் “பெண்களுக்குவிஞ்ஞானம்தேவையில்லை. வேண்டுமென்றால் நீ சமையல் விஞ்ஞானம்கற்றுக்கொள்” என்று எள்ளி நகையாடியதற்குப் பதிலடியாக பாரிஸ் சென்றுமேற்படிப்பு படித்து பவுதீகம், கணிதம் என்ற இரண்டிலும் பட்டங்கள் பெற்றார். கணவரோடு இணைந்துநோபல் பரிசினை வென்றவர் மேரிகியூரி. கணவர் கியூரிவிபத்தில் பலியானபோது“கியூரி தான் அறிவியல் அறிஞர் மேரி வெறும் எடுபிடி” என்றுசிலர் விமர்சித்தபோது மறுபடியும் சோதனைச் சாலையில் தன்னையே உருக்கிக்கொண்டு இரண்டாவதுமுறையாக நோபல் பரிசை தனித்தே வென்றுநோபல் பரிசுபெற்ற உலகின் முதல் பெண் ஆராய்ச்சியாளராகவும், உலகிலேயே இயற்பியல் மற்றும் வேதியியல் என்ற இரண்டு அறிவியல் துறைகளில் நோபல் பரிசுபெற்ற மேரிகியூரியின் சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

  “பெண் தானே என்று அலட்சியப்படுத்துகிறவர்களை எண்ணிநேரத்தையும் நினைவுகளையும் செலவழிக்காதீர்கள். எந்த ஒருமுட்டாளாலும் குறைசொல்ல முடியும். கண்டனம்செய்ய முடியும். புகார் கூறமுடியும். நிறைய முட்டாள்கள் அதைத்தான் செய்கிறார்கள்” என்ற பெஞ்சமின் பிராங்கலின் சாதனையின் வாசகத்தை நினைவில் நிறுத்திசுதந்திரச் சிறகடித்துப் பறப்போம்…

  இலட்சியம் நோக்கி…

  இந்த மாத இதழை

  உள்ளத்தோடு உள்ளம்

  உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கக்கூடிய  இளைஞன் அவன்.

  அடுத்தடுத்து தடைகள், பிரச்சனைகள். வாழ்வதே சிரமமாக இருக்கிறது” என்று ஊர்ப் பெரியவர்  ஒருவரிடம் அந்த இளைஞன் புலம்பினான்.

  அவர் என்றுமே “நீ சிங்கமாகவே இருÐ நாயாக இருந்திடாதே” என்றார். புரியாமல் இளைஞன் விழித்தான்.

  பெரியவர் சொன்னார்,”நீ சிங்கமாகவே இரு என்றது, சிங்கத்தை நோக்கி ஒருவர் ஒரு பொருளை எய்தினால், சிங்கம் எய்த பொருளை நோக்கி ஓடாது, எய்தவரை நோக்கிப் பாயும். ஆனால் நாயோ எய்தியவரை நோக்கி ஓடாமல் எய்த பொருளை நோக்கியே ஓடும்”. அதனால் தான் உன்னை சிங்கமாக இரு” என்றேன்.

  பிரச்சனைகளைக் கண்டு முடங்கிப் போகாமல் அந்தப் பிரச்சனை எங்கு எழுந்தது என்பதை கண்டுணர்ந்து அதில் வெற்றி பெருபவர்களே சாதிக்கிறார்கள்!