– 2014 – May | தன்னம்பிக்கை

Home » 2014 » May (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  வரலாற்றில் வரவு வைத்துக்கொள்

  “மலை அசைந்தாலும், நிலை குலையாதே! உன் நம்பிக்கையே வாழ்க்கையின் ஆதாரம், ஆணி வேர்! இயற்கை உன்னிடம் சகலத்தையும்  உன்  பிறப்பின்போதே வழங்கிவிட்டது.”

  நீ ஆற்றல் மிகுந்தவனாக, தன்னம்பிக்கை நிறைந்தவனாக ஓர் நதியைப் போல் முன்னோக்கி நகரும்போது நீ ஓர் காந்தமாக செயல்படுகிறாய். காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல் உன்னைச் சுற்றிய மனித கூட்டத்தை நீ ஈர்க்கிறாய்.

  என்னுடைய எழுத்தும், பேச்சும் இளைஞர்களுக்கு புத்திமதிகளைச் சொல்வதற்காக எழுந்தவையல்ல. கசப்பான அனுபவங்களைக் கலந்து கொடுப்பதும் என் நோக்கமல்ல. எதிர்காலத்தின் முன்னே இளைஞர்கள் எடுத்து வைக்கும் திசைகளைத் தீர்மானிப்பதற்கே என் எழுத்தும், பேச்சும் ஏணியாகவும் தோணியாகவும் இருக்கும். கண்டவைகளை, கேட்டவைகளை, படித்தவைகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொண்டு கைகுலுக்கிக் கொள்கிறேன்.

  “என்னால் முடியும்” என்று சொல்லும்போது மனசில் மைய மண்டபத்தில் தன்னம்பிக்கை தனியாக தங்க நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது. வீதிகள் தோறும் நம்பிக்கையற்ற நிலை, நொந்து நைந்த உள்ளங்கள் வேதனையின் விளிம்புகளில் நிற்பதை சமூக அவலத்தோடு நான் பார்த்து வருகிறேன். எல்லாவற்றையும் இழந்ததுபோல் நிற்கும் இந்த மனித மனங்களுக்கு நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமே! பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் வரிசையில் நாமும் உரத்தக் குரலை உடனே பதிவு செய்ய வேண்டுமே! மூலை முடுக்குகளில் ஒடுங்கிக் கிடக்கும் ஓராயிரம் இளைஞர்களையாவது தட்டி எழுப்ப வேண்டுமே! அவர்களின் நாடி நரம்புகளில் மின்சாரக் கசிவை ஏற்படுத்த வேண்டுமே! வல்லரசாகப் போகும் பரந்துபட்ட பாரதத்திற்கு நமது பங்களிப்பும் வேண்டுமே! என்ற ஆவலின் தூண்டலே இவை.

  பேனா பிடித்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்களுமில்லை. ஒலிப்பெருக்கியைப் பிடித்தவர்கள் எல்லாம் பேச்சாளர்களுமில்லை. கருத்துத்தூவலில் அவன் எப்படிக் கரைந்திருக்கிறான்; எழுத்தோடு அவன் எப்படி இணக்கமாகி இருக்கிறான்; பேச்சோடு அவன் எப்படிப் பிடிவாதம் பிடிக்கிறான் என்பவையே எழுத்தாளன், பேச்சாளனை இனம் காட்டும் காலக் கண்ணாடிகள். மேகத்தோடு பேசிக்கொண்டா காற்று புயலாகிறது? அலையோடு பேசிக்கொண்டா ஆறு பெருக்காகிறது? வேதனைக்குள்ளிருக்கும் விரக்திக்கும், சாதனைக்குள்ளிருக்கும் சக்திக்கும் உள்ள வேறுபாடு சாதனையாளனுக்கு மட்டுமே சரியாய்த் தெரியும், புரியும்.

  “என்னால் முடியும்” என்ற நம்பிக்கையோடு இந்நாள் விடிந்திருக்கிறது. எதிர்ப்புகள் இருந்தால் தான் ஓர் மனிதனால் முன்னேறமுடியும். விண்ணில் வட்டமிடும் பட்டம்கூட எதிர்காற்றில்தான் வட்டம் அடிக்கிறது. காற்றாடியைப் பாருங்கள், காற்றை எதிர்கொண்டு ஓடும்போது தான் வேகமாகச் சுழல்கிறது. இதுபோலத்தான் இங்கு நம்மில் பலர் நிலைமை இருக்கிறது. நீ ஓர் ஜீவ நதியாக இரு. ஒரு நதி எப்போதும், யாரைப் பற்றியும் எந்தக் குறையும் கூறுவதில்லை. அதற்கு நான் என்ற கர்வமும் இல்லை. அதன் குறிக்கோள் கடலைத் தேடிச்சென்று அடைவது தானே!

  நாமும் இலட்சியமும் என்ற நோக்கை மட்டுமே கவனத்தில் கொண்டு பயணிக்க வேண்டும். உன்னிடம் ஆக்கபூர்வமான எண்ணத்தின் நெருப்பு மூட்டப்பட வேண்டும். அஞ்சாதே! யாரைப் பார்த்தும் அஞ்சாதே! நெருப்பாக இருப்பாய் நீ!தோல்வியின் எண்ணங்களை உன் நெருப்பில் இட்டு எரித்துவிடு. வெற்றி பெறுகிறவன் நெருப்பாக இருக்கிறான். தன் நெருப்புக் கனலை மற்றவனும் உணரச் செய்கிறான். எந்த ஒரு மனிதனும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடினால் வெற்றியை அடைந்தே தீருவான்.

  வாழ்க்கை  நமக்கு அத்தியாயம், அத்தியாயமாய் பிரிக்கப்பட்டு இருக்கிறது. வெற்றிகரமான எண்ணம், மகிழ்ச்சியான மனநிலை, உறுதியுடன் செயல்படும் பழக்கம் ஆகியவையே எந்த ஒரு மனிதனையும் வெற்றி முனைக்கு அழைத்துச் செல்லும். இறந்தகாலச் சுமையைத் தூக்கி எறிந்துவிடு. உன்னைக் கைப்பிடித்து முன்னோக்கி அழைத்துச் செல்ல உன் அழகிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே.

  மலை அசைந்தாலும், நிலை குலையாதே! உன் நம்பிக்கையே வாழ்க்கையின் ஆதாரம், ஆணி வேர்! இயற்கை உன்னிடம் சகலத்தையும்  உன் பிறப்பின்போதே வழங்கிவிட்டது. இனி அதை நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நீ நிமிர்ந்து நின்றால் இந்த பூவுலகமே உன்னுடையது என்பதை மறவாதே! நீ ஓர் மகத்தானவன் என்பதை மறந்துவிடாதே! நீ தனித்தன்மை வாய்ந்தவன்  உன்னைப்போல் மற்றொருவன் இந்த பூமியில் இல்லை என்பதை நம்பு.

              நீ – நீயாக இரு  மறந்துவிடாதே!

              நீ – சாதிப்பதற்கான தகவல்களைத் திரட்டு!

              ஒருமுறை உன் கண்களை சிறிதுநேரம் மூடி    

              உன் ஆற்றலை – தினமும் எழுந்தவுடன் வணங்கு!

  நீ ஆற்றல் மிகுந்தவனாக, தன்னம்பிக்கை நிறைந்தவனாக ஓர் நதியைப் போல் முன்னோக்கி நகரும்போது நீ ஓர் காந்தமாகச் செயல்படுகிறாய். காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல் உன்னைச் சுற்றிய மனிதக் கூட்டத்தை நீ ஈர்க்கிறாய்  அது உன்னை அறியாமலே நிகழ்ந்துகொண்டே இருக்கும். தன்னம்பிக்கையும், ஆக்கபூர்வமான எண்ணமும், ஆற்றலும் நிறைந்த ஒரு மனிதன் உன்னைக் கடந்து சென்றால் நீ அவன்பால் ஈர்க்கப்படுவாய்.

            கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே!

            உன் வார்த்தையும் ஒருவனுக்குத் தாகம் தணிக்கலாம்!

            உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்!

            தாகமுடையவன் குடிக்க தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை!

             கொடு

              நீ சுகப்படுவாய்!

             கொடு

            அது உன் இருத்தலை நியாயப்படுத்தும்…

   என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்

  மண்ணில் எந்த விதையை விதைக்கிறோமோ அதுதான் வெளியே தலை காட்டும். அதைப்போல் நம் மனதில் எந்த எண்ணத்தை பூட்டி வைக்கிறோமோ அதுதான் செயலாக தலைகாட்டும்.

  ஒவ்வொரு நொடியும் காலத்தின் மடியில் படுத்துறங்குபவர்களை வரலாறு கண்டுகொள்வதில்லை. நொடிதோறும் விழித்துக்கொண்டே இருந்து காலம் தருகின்றஅரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறியவர்களையே வரலாறு வரவு வைத்துக் கொள்கிறது.

  “உங்கள் வாழ்க்கைக்குள் வருகிற ஒவ்வொரு மனிதரும் ஒன்று உங்களுக்கு ஏதாவது கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார் அல்லது உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வந்திருக்கிறார்”.

  இந்தப் பூமியில் ஒவ்வோர் உயிரும் ஏதாவது ஒரு நோக்கத்துடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் யாரும் இங்கு பிறப்பதில்லை. ஏனென்றால் கடவுள் குப்பைகளைப் போடுவதில்லை. எல்லோரும் ஓடுகின்ற பாதையில் நீங்கள் ஓடினால் வேகமாக ஓடுங்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு ஓடுங்கள். ஆனால் அந்தப் பாதையில் உங்களால் ஓட முடியவில்லையென்றால் அல்லது ஓட விருப்பமில்லையென்றால் வேறொரு திசையில் ஓடுங்கள். உலகம் உங்கள் பின்னால் ஓடிவரும். வேறு திசையில் ஓடுவது மட்டும் முக்கியமல்ல. வேறு திசையில் ஓடினாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. வேறு திசையில் நாம் ஓடத் துவங்கும்போது நாம் அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். மழை வேண்டி பிரார்த்தனைக் கூட்டம் கிருஸ்துவ தேவாலாயத்தில் நடைபெற இருந்தது. எல்லோரும் வந்தார்கள். ஒரு குழந்தை மட்டும் ஒரு குடையுடன் வந்தது. குழந்தையின் நம்பிக்கை பிரார்த்தனை முடிந்தவுடன் மழை பெய்யும். எனவே குடையோடு வந்தது. மழையும் பெய்தது. குழந்தைக்கு  குழந்தை மனசுக்குள் இருக்கிற நம்பிக்கை  மனிதனிடமும் மண்டியிட்டு அல்லவா வரவேண்டும்?

  ஒரு மரங்கொத்தி தன் அலகால் மரத்தைக் கொத்திக் கொண்டு இருந்தது. அதைக்கண்ட ஒருவன் “முட்டாள் மரங்கொத்தியே… ஏன் இப்படி மரம் முழுக்க கொத்தித் துழைக்கிறாய். இது வீண் வேலை தானே?” என்று கேட்டான்.

  “மனிதனே… நான் எனது உணவைத் தேடுகிறேன், தேடினால் கிடைக்கும்” என்றது.

  “நாள் முழுவதும் இப்படிக் கொத்திக் கொண்டிருப்பது மடத்தனம்” என்றான் மனிதன். அதே நேரம் மரத்திலுள்ள புரை ஒன்றைக் கண்டுபிடித்துவிட்ட மரங்கொத்தி அந்த இடத்தை கொத்திப் பெயர்த்தது. உள்ளே இருந்த புழு, பூச்சிகளைப் பிடித்து விழுங்கியது. அதன் பிறகு மனிதனைப் பார்த்துச் சொன்னது!

  “மனிதா! நீயும் தேடு! மரம், மண், நீர், வான் என்று எல்லா இடங்களிலும் தேடு! உனக்கும் ஏதாவது கிடைக்கும். வாழ்க்கையின் தேடலே ஒரு தித்திப்பு தானே!

  இந்த மாத இதழை

  தனித்திரு! விழித்திரு! பசித்திரு!

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார்; பல வாழ்வியல் நெறிமுறைகளையும், தத்துவ போதனைகளையும் அறநெறிச் சாரல்களையும், ஆன்மீக தேடலுக்குரிய வழிகளையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று ஆன்மிக முழக்கம் தந்த பெருமகனார் சொல்லிவிட்டுச் சென்ற வாழ்வியல் நெறிமுறைகளில் தனித்திரு! விழித்திரு! பசித்திரு! என்ற இந்த மூன்று தாரக மந்திரங்கள் உன்னதமானவை.

   தனித்திரு

  தனித்திரு என்ற வாசகத்தில் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியுள்ளன. சாதிக்க வேண்டுமென  விரும்புகிற மனிதன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எப்பொழுதும் ஒரு தனித்தன்மை (Specialty) கொண்டவராக இருக்கவேண்டும். எத்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்தக் கூட்டத்திலும் அவருடைய தனித்திறமையின் காரணமாக முதன்மையானவராக, முக்கியமானவராக தவிர்க்க முடியாதவராக தனி ஆளுமை படைத்தவராக தனித்து பிரகாசிக்க வேண்டும் என்பது அதன் உட்கருத்து. ஒருவர் எத்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் உதாரணமாக விளையாட்டுத் துறையாக இருந்தாலும் சரி, கலைத்துறையாக இருந்தாலும் சரி, ஆசிரியர் துறையாக இருந்தாலும் சரி, அறப்பணியாக இருந்தாலும் சரி, தொழில் துறையாக இருந்தாலும் சரி, அறிவியல் துறையாக இருந்தாலும் சரி, ஆன்மிகத் துறையாக இருந்தாலும் சரி, அந்தத் துறையில் அவர் தனது தனித்திறமையால் முதன்மையானவராக இருந்து முக்கியப் புள்ளியாகப் புகழப்பட்டு தன்னுடைய வாழ்வில் ஒரு சாதனை சரித்திரத்தைப் படைக்க வேண்டும்.

  ஒரு மேனாட்டுச் சிந்தனையாளர் ஒருவர் சொன்ன கருத்து இங்கு பொருத்தமாக இருக்கும். “உன்னுடைய பணி தெருக் கூட்டும் பணியாக இருந்தாலும் சரி உன்னை விட அப்பணியை வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்று சொல்லும்படியாக உனது பணி மேன்மையானதாக இருக்க வேண்டும்” என்பது உண்மையும் கூட.விளையாட்டு அல்லது தொழிலில்  ஒரு இழப்போ, ஒரு நஷ்டமோ வருகிறபோது அந்த தலைமைப் பொறுப்பில் இன்னார் இருந்திருந்தால் இந்த இழப்பெல்லாம் இல்லாமல் சாதித்துக் காட்டியிருப்பார் என்ற பெருமையைப் பெறுவது தான் சிறப்பான அம்சம் ஆகும்.

  தன்னம்பிக்கையும், தனித்திறமையும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும், ஆர்வமும் உற்சாகமும் தான் ஒருவனைப் பிரகாசப்படுத்த முடியும் என்பது தெளிவு.

  விழித்திரு:

  ஒருவன் வாழ்வில் முன்னேற வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை பெற்றவனாக இருக்க வேண்டும். வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும் ஒரு முறைதான் வரும். கண்முன்னால் இருக்கும் வாய்ப்புகளையும், காலடியில் இருக்கும் வாய்ப்புகளையும் அடையாளம் கண்டு அதை தக்கமுறையில் பயன்படுத்தி முன்னேறவேண்டும்.  ஒருவனுக்கு வாய்ப்புகள் எதிர்பாராமல் வந்து கையிலே விழுமானால் அவன் அதிர்ஷ்டசாலி. கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி கொள்பவன் அறிவாளி.

  வந்த வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டு அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பவன் ஏமாளி.  வருகிற எல்லா வாய்ப்புக்களையும் தவறவிட்டு விட்டு சமாதானம் சொல்பவன் கோமாளி.

  ஒருவன் அறிவாளியா? ஏமாளியா? கோமாளியா? என்று தீர்மானிப்பது அவன் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்கிற விதத்தைப் பொறுத்தது. வரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்கிற விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வாய்ப்புக்காக விழித்துக் காத்திருக்க வேண்டும்.

  “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

  வாடி இருக்குமாம் கொக்கு.”        

  எனும் பழம் பாடலின் படி காத்திருந்து, எந்த நேரமும் விழிப்புணர்வோடு இருந்து வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஓளிமிகு எதிர்காலம் நிச்சயம்.

  கவனமாக காத்திருந்து வந்த வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு விழிப்புணர்வோடு எவன் முன்னேறுகிறானோ, அவனுக்கு வானம் வசப்படும்.

  பசித்திரு:

  உளவியல் வல்லுநர்கள் மனிதனை 3 வகையாகப் பிரிக்கிறார்கள்.

  1)           Survival  Oriented

  2)           Security  Oriented 

  3)           Success  Oriented

  உண்டு பொழுதுபோக்கி உறங்கி எழுவதே வாழ்க்கை என்று சோம்பிக் கிடப்பவர்களும், மரம் வைத்தவன் நீரூற்றுவான் என்றும், எண்ணெய் பூசிக்கொண்டு உருண்டால் ஒட்டுவது தான் ஒட்டும் என்றும் தத்துவம் பேசுபவனும், விதியின் மீது பழிச் சொல்லி சோம்பித் திரியவனும் முதல் வகையை சார்ந்தவர்கள்.

  தன்குடும்பம், தன்பெண்டு என்று இருக்கிற செல்வத்தை கட்டிக்காத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதே போதும் என்று தற்காத்துக் கொள்பவர்கள் SecurityOriented என்ற இரண்டாம் வகையை சார்ந்தவர்கள்.

  ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற பசியோடு முயன்று, வெற்றி பெறவேண்டும், வாழ்வின் வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்ற வேகத்தோடும், சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும், தன்னம்பிக்கையோடும், தன் சார்ந்த துறையிலே ஜெயித்து சாதனை புரிபவர்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தவர்கள்.

  பசித்திரு என்றால் சாதிக்க வேண்டும் என்ற பசியும், ஆர்வமும் இருக்க வேண்டும். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேன்மைமிகு டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் சாதிக்க வேண்டும் என கனவு காணுங்கள் என்று கூறினார். அந்தக் கனவு, அந்தப்பசி, அந்த தீப்பொறி யாருடைய உள்ளத்தில் எந்த நேரத்திலும் எரிந்து கொண்டிருக்கிறதோ, அவர்கள் வாழ்விலே சாதித்துக்காட்டி தன் பெயரை வரலாற்றிலே பதிவு செய்வார்கள். அவ்வாறு  வரலாற்றிலே தன் பெயரைப் பதிவு செய்வது தான் வள்ளலார் சொன்ன மரணமில்லாப் பெருவாழ்வு.

  எந்தக் காலத்திற்கும் உங்கள் பெயர் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டுமானால் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் பசியும் ஊனோடும் உயிரோடும்  கலந்து துடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

  தனிப் பண்புகளினால், தனித்திறமைகளினால், சிறப்பான ஆளுமையினால் தன்னை முதன்மைப்படுத்தி வருகிற வாய்ப்புகளை நல்ல முறையில், தக்க வழியில் பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வோடு இருந்து வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற வெறியும், நெருப்பும், பசியும் இருந்தால் ஒருவனுடைய வாழ்வு ஒளிவிட்டு பிரகாசித்து உன்னதமான எதிர்காலத்திற்கு உத்திரவாதமாக அமையும் என்பது உண்மை. ஆதலால் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடும் தளராத மனத்தோடும் விடாமுயற்சியோடும், கடும் உழைப்பையும், உற்சாகத்தையும் கொண்டு ஈடுபாட்டுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!

  தனித்திரு      –  உன் திறமையால் உன்னை முன்னிலைப்படுத்து

  விழித்திரு      –  எல்லா நேரமும்  வாய்ப்புக்காகவும்

  பசித்திரு        –  சாதிக்க வேண்டும் என்ற  உணர்வோடு

  என்று உண்மையைப் பேசுவோம்! உரக்கப் பேசுவோம்! வெற்றியைப் போற்றுவோம்! சரித்திரம் படைப்போம்!

  இந்த மாத இதழை

   

  குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள்

  1. சளி, இருமல்

  இது பெரும்பாலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் எதிர்ப்புச் சக்தி குறையும் நிலையில் ஏற்படும் சாதாரண ஒரு பிரச்சனை ஆகும். இது வைரஸ் கிருமிகளால் பரவும். சளி, இருமல் 7 முதல் 10 நாட்களுக்குள் சரியாகி விடும்.

  2. தொண்டை அழற்சி

  (அடினோ டான்சிலைட்டிஸ்)

  இது தொண்டையின் பின்புறம் உள்ள டான்சில் மற்றும் அடினாய்டு ஆகிய சதைகள் வீங்குவதால் ஏற்படுவதாகும். இதனால் குழந்தைக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவையோ, தண்ணீரையோ விழுங்கும் பொழுது வலி உண்டாகும்,

  இதனால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் இரவு உறங்கும் பொழுது, குறட்டை மற்றும் வாயினால் மூச்சு விடுவார்கள். தொடர்ந்து வாயைத் திறந்து உறங்குவதால் அவர்களுக்கு பற்கள் முன்னோக்கி இருக்கும். டான்சில் தொந்தரவால் காதில் சீழ் ஏற்படலாம்.

  இக்குழந்தைகளுக்கு டான்சில் வீங்கி சிவந்து காணப்படும். சில நேரம் அதிலிருந்து சீழ் கூட வரலாம். இது பெரும்பாலும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுவதாகும். ஆரம்பநிலையில் இதனை ஆன்டிபயாடிக் மூலம் குணப்படுத்தலாம்.

  வருடத்திற்கு 6 முறைக்கு மேல் இத்தொந்தரவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சையின் மூலம் டான்சிலை அகற்றவேண்டும். தொடர்ந்து தூங்க முடியாமலோ (அ) வாயின் மூலமாக சுவாசித்தாலோ அடினாய்டை அகற்ற வேண்டும்.

  3. வயிற்றுவலி

  3 – 6 வயது வரை உள்ள குழந்தைகள் அடிக்கடி வயிறு வலிப்பதாகக் கூறுவர். இவ்வகை வலிகள் தொப்புள் மற்றும் தொப்புள் சுற்றியே காணப்படும். சில குழந்தைகள் பசியைக் கூட வயிற்று வலியாகக் கூறுவர்.

  வயிற்றுவலியுடன் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். அது ஒட்டுக் குடலாகவும் இருக்கலாம். வயிற்று வலி உள்ள குழந்தைகளுக்கு குடல் விழுந்து விட்டது என்று எண்ணி வயிற்றை நீவி விடுவது தவறான செயலாகும்.

  பொதுவாக தொப்புள் வலி என்று கூறும் குழந்தைகளுக்கு வயிற்று வலியின் காரணம் பயப்படக் கூடியதாக இருக்காது. தொப்புளை தவிர்த்து குழந்தைகள் வேறு இடத்தில் வயிற்று வலி என்று கூறினால் அதை சாதாரண வயிற்று வலி என்று எண்ணாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

  4. குழந்தைகள் வளரும்போது ஏற்படும் வலிகள்

  குழந்தை வளரும் பருவங்களில் இவ்வகையான வலிகள் ஏற்படுகின்றன. இந்த வலிகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த வகையான வலிகள் குழந்தைகளுக்கு 3 – 12 வயதுகளில் ஏற்படுகின்றன.

  இவை

              1)         ஆரம்ப காலம் 3 – 5 வயதில்

              2)         பின்னர் 8 – 12 வயதில் ஏற்படும்.

  இரண்டு கால்களிலும் வலிகள் 10லிருந்து 15 நிமிடங்கள் ஏற்படும். இந்த வலிகள் குழந்தைகளுக்கு முன் காலிலும், தொடையின் இரு பாகங்களிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது, இந்த வலிகள் இரவு நேரங்களில் அல்லது ஒரு நாளின் இறுதியில் ஏற்படும்.

  இந்த வலிகளின் இடைவெளி ஒரு நாளிலிருந்து ஒரு மாதம் வரை இருக்கும். தீவிர நிலையில் இந்த வலிகள் தினமும் ஏற்படும்.

  பெற்றோர்கள் குழந்தைகளின் வலி தினமும் அதிகரிக்கிறதா அல்லது குழந்தை அதிகம் கஷ்டப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். பள்ளி மற்றும் வேலைகளுக்குத் தடை ஏற்படுதல், வலிகளுக்கு அதிகமாக வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுதல் ஆகியவை தீவிர நோய்களுடன் தொடர்புடையது.

  வளரும்போது ஏற்படும் வலிகள் தொடர்ச்சியாக அதிகமாகக்கூடிய வலிகள் அல்ல. அவை இடம் விட்டு இடம் நகரக்கூடியதாக உள்ளது. இந்த வலிகள் குழந்தைகளின் அடிவயிற்றின் உள்ளே வலியை அதிகரிக்கச் செய்கிறது. இந்த குழந்தைகள் உடல் அசைவுக்குப் பின் அதிக வலியை உணர்கின்றனர்.

  தீவிர நோய்களுடன் தொடர்புடைய வலியில் இருந்து வித்தியாசப்படுத்துதல்

    தீவிரமான வலியின் அறிகுறிகள் : ஒரு பக்கமாக வலி, காலையில் மூட்டு அசைவில் இறுக்கம், எலும்பு இணைப்புகளின் வீக்கம் மற்றும் இயல்பான அறிகுறிகள் (எ.கா. காய்ச்சல், எடை குறைவு). இதனுடைய முக்கியமான பரிசோதனை முறை என்பது குழந்தைகளை தொடும்போது அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. தீவிர நிலையில் குழந்தை தன்னைத் தொடுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் தொடும்போது வலி அதிகரிக்கிறது.

  “பெற்றோர்கள்

  குழந்தைகளின் வலி தினமும்

  அதிகரிக்கிறதா அல்லது குழந்தை

  அதிகம் கஷ்டப்படுகிறதா என்பதை

  கவனிக்க வேண்டும்.”

  சிகிச்சை

  குழந்தைகளின் அசௌகரிய நிலையைப் போக்குவதற்கு அவர்களுக்கு மெதுவாக தேய்த்தல், குழந்தையின் கால்களை மெதுவாக அசைத்தல், சூடான துணியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை முயற்சிக்கலாம். மருத்துவரின் முக்கியமான பங்கு நோயின் இயல்புத் தன்மையை தெளிவாக விளக்குதல் ஆகும். இது பெற்றோரின் பயம் மற்றும் கவலையைப் போக்கும்.

  இந்த மாத இதழை

  வெற்றி உங்கள் கையில் – 5

  பார்வைகள் பலவிதம்

  நாம் பார்க்கின்ற பார்வைதான் நமது வெற்றிக்கும், தோல்விக்கும் அடிப்படையாக அமைகிறது. எந்தக் கண்ணோட்டத்தோடு ஒரு பொருளைப் பார்க்கிறோமோ, அந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்ற பொருள் நமக்குத் தெரிகிறது.

  சிவப்புக் கண்ணாடி அணிந்து நாம் ஒரு பொருளைப் பார்த்தால் அது சிவப்பாக தெரிகிறது. மஞ்சள் நிறக்கண்ணாடியை அணிந்து பார்த்தால் அந்தப்பொருள் மஞ்சளாகவே தோன்றுகிறது. பச்சை நிறகண்ணாடி மூலம் பார்க்கும்போது அந்தப் பொருள் பச்சையாக காட்சியளிக்கிறது. பார்க்கின்ற கண்ணாடியின் தன்மைக்கு ஏற்ப பொருளின் நிறம் மாறுவதைப்போல, நாம் பார்க்கின்ற கண்ணோட்டத்திற்கு ஏற்ப ஒரு பொருள் அல்லது மனிதரைப் பற்றிய எண்ணம் மாறுபடுகிறது.

  ஒரு ரயிலில் தனது மகனோடு பயணம் செய்துகொண்டிருந்தார் அப்பா. ஜன்னல் ஓர இருக்கையில் இருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த அவரின் மகனுக்கு சுமார் 27 வயது இருக்கும். திடீரென அவரின் மகன் கூச்சல் போட்டான்.

  “அப்பா இங்கே பாருங்கள். பச்சைப் பசேலென்ற மரங்களெல்லாம் மிகவும் வேகமாக ரயிலுக்குப்பின்னே ஓடுகின்றன” என்று கூறிவிட்டு மகிழ்ச்சியோடு மீண்டும் அந்த மரங்களைப் பார்த்து மகிழ்ந்தான்.

  எதிரே இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெரியவர் ஒருவர் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அதைப் புரிந்துகொண்டு அசட்டை சிரிப்பை உதிர்த்தார் அப்பா.

  வேகமாக ரயில் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த 27 வயது இளைஞன் மீண்டும் மகிழ்ச்சியில் துள்ளினான்

  “அப்பா இங்கே பாருங்கள் மேகக்கூட்டம் எல்லாம் நாம் செல்லும் இடத்தை நோக்கியே ஓடிவருகின்றன” என்றான்.

  அப்பாவுக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை.

  எதிரே இருந்த வயதான பெரியவர் மீண்டும் ஒருமாதிரியாகப் பார்த்தார். என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. நேரடியாகவே கேட்டுவிட்டார்.

  “சார்… உங்கள் பையனை ஒரு நல்ல டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனால் என்ன?” என்று நேரடியாகவே கேள்வி கேட்டார்.

  அவரது கேள்வி அதிர்ச்சியை உருவாக்கியது.

  வயதான பெரியவர் கேட்ட கேள்வியிலும் அர்த்தம் இருந்தது. 27 வயது இளைஞன் சாதாரண விஷயங்களைப் பார்த்து இப்படி ஆச்சரியப்படுகிறானே? இவன் மனநிலை பாதிக்கப்பட்டவனா? என்று அந்தப் பெரியவர் எண்ணி இருக்கலாம். ஆனால் அந்தப் பெரியவர் அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் நாசூக்காக வெளிப்படுத்தினார்.

  ஐயா, நீங்கள் சொல்வதைப்போல நானும் செய்துவிட்டுத்தான் வருகிறேன். நாங்கள் டாக்டரைப் பார்த்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து இப்போதுதான் வருகிறோம்” என்று பதில் சொன்னார் இளைஞனின் அப்பா. பதிலைக் கேட்டதும் வயதான பெரியவர் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்.

  “டாக்டரை பார்த்துவிட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னும் உங்கள் மகன் இப்படி நடந்துகொண்டால் எப்படி?” என்றார் பெரியவர்.

  “ஐயா என் மகன் பிறக்கும்போதே பார்வை இல்லாமல் குருடனாகப் பிறந்துவிட்டான். இப்போதுதான் அவனுக்கு மாற்று அறுவை சிகிச்சைமூலம் கண் பார்வை தெரிந்தது. ஆபரேஷன் முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து நேராக திருநெல்வேலியில் இருக்கும் எங்கள் வீட்டிற்குப் போகிறோம். முதன்முதலாக தனது கண்களால் இந்த உலகத்தைப் பார்க்கும் என் மகனுக்கு அவன் பார்க்கின்ற எல்லாமே ஆச்சரியமாகத் தெரிகிறது. இதனால்தான் இவன் இப்படி அதிசயமாகப் பேசுகிறான்”  என்றார்.

  வயதான பெரியவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

  இப்படித்தான் சிலவேளைகளில் நாம் ஒரு பொருளைப்பற்றி நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், உண்மை வேறுவிதமாக அமைந்துவிடுகிறது. நாம் பார்க்கும் பார்வை மற்றும் அதன் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளும் அர்த்தம் ஆகியவை சிலநேரங்களில் தவறான தகவல்களை நமக்குத் தந்துவிடும். இந்த தவறைதிருத்திக் கொள்ள விரும்பினால் நாம் பார்க்கும் பார்வையில் தெளிவான அறிவும், பகுத்தறிவும் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

  எந்தவொரு செயலையும், நிகழ்வையும் நாம் பார்க்கின்றவிதத்தின் அடிப்படையில்தான் அதனுடைய உண்மையான அர்த்தம் நமக்குப் புரியும். நமது பார்வைகள் தெளிவானால், நமது பாதைகளும் தெளிவாகும். நமது பாதைகள் தெளிவாகும்போது நமது வாழ்க்கைப் பயணங்களும் இனிமையானதாக மாறும்.

  தெளிவான சிந்தனையும், நல்ல கண்ணோட்டமும் கொண்டவர்கள்  வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலான பிரச்சனைகளை தைரியமுடன் அணுகி வெற்றி பெறுகிறார்கள்.

  “எந்தவொரு

  செயலையும்,

  நிகழ்வையும் நாம்

  பார்க்கின்ற விதத்தின்

  அடிப்படையில் தான்

  அதனுடைய

  உண்மையான

  அர்த்தம் நமக்குப்

  புரியும்”

  கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி திருநெல்வேலி, சேந்திமங்கலத்திலிருந்து ஒரு லாரி வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தாழையூத்து அருகிலுள்ள தாதனூத்து என்னும் ஊரைச்சேர்ந்த அன்பரசன் ஓட்டி வந்தார். திருநெல்வேலி அருகே வடக்கு பைபாஸ் ரோட்டில் வைக்கோல் லாரி வந்துகொண்டிருந்தபோது, மின்சார ஒயரில் உரசியது. இதனால் லாரியில் தீப்பிடித்துக்கொண்டது.

  வைக்கோல் லாரியிலிருந்து புகை வருவதை பின்னால் வந்த வாகனங்களில் வந்தவர்கள் கவனித்து லாரி டிரைவர் அன்பரசனுக்குத் தெரிவித்தார்கள். லாரியில் தீ வேகமாக பற்றி எரிந்தது. அதிர்ச்சியுடன் லாரியை காப்பாற்றமுயன்ற டிரைவர் அன்பரசன் பதற்றப்படாமல் நிதானமாக ஒரு முடிவை எடுத்தார்.

  லாரி வந்துகொண்டிருந்த இடம் அருகே தாமிரபரணி ஆறு இருந்தது. இதைக்கவனித்த டிரைவர் அன்பரசன் லாரியை ஆற்றுப்பாலம் அருகே வேகமாக ஓட்டிச்சென்றார். பின்னர் ஆற்றுக்குச் செல்லும் பாதை வழியாக சென்று லாரியை தாமிரபரணி ஆற்றுக்குள் இறக்கினார். பாதி அளவு தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு லாரி வந்து நின்றது. ஆற்றில் குளித்தவர்களும், கரையில் நின்றவர்களும் ஓடிவந்து தீயை அணைத்தார்கள். லாரியிலிருந்த வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. இருந்தபோதும் லாரியை எரியாமல் காப்பாற்றினார் டிரைவர் அன்பரசன்

  பின்னர் தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் லாரி முழுவதுமாக மீட்கப்பட்டது. லாரி டிரைவர் அன்பரசன் சந்தர்ப்ப சூழ்நிலையை அறிந்து சரியாக குழப்பம் இல்லாமல் முடிவெடுத்ததற்கு அவருடைய பகுத்தறிவு பயன்பட்டது. சரியாக சூழலைப் புரிந்துகொண்டு சரியான கண்ணோட்டத்தோடு பிரச்சினையை அணுகி சரியாக முடிவெடுத்ததுதான் அவரது பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்தது.

  ஒரு பிரச்சனையை “இதுதான் பிரச்சனை” என்று சரியாக கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் மிக எளிதாக வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். லாரி தீ பிடித்துவிட்டது என்பதை அறிந்த அன்பரசன் லாரியை நிறுத்திக்கொண்டு தப்பி ஓடியிருக்கலாம். லாரியை நிறுத்துவிட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்லிவிட்டு காத்திருக்கலாம். லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தான் மட்டும் தப்பித்திருக்கலாம். ஆனால், தீப்பிடித்ததால் ஏற்பட்ட பிரச்சனை தனக்கு மட்டுமல்ல, தன்னை நம்பி லாரியை ஒப்படைத்த லாரி உரிமையாளருக்கும் உண்டு என்பதை உணர்ந்துகொண்டு, சரியான கண்ணோட்டத்தோடு பிரச்சனையைப் பார்த்து முடிவெடுத்த அன்பரசனின் ‘பார்வை’ வித்தியாசமாக அமைந்ததால்தான் பிரச்சனையை சமாளித்து அவர் வெற்றி காண முடிந்தது.

  எனவே “எந்தவொரு பிரச்சனையையும், சிக்கலையும் எளிதில் சமாளித்து விடலாம்” என்ற நம்பிக்கையோடு நமது பார்வையை (கண்ணோட்டத்தை) தெளிவாக வைத்துக் கொண்டால், வெற்றி என்பது அடைந்துவிடும் தூரத்தில் அருகில்தான் இருக்கிறது” என்பதைப் புரிந்துகொண்டால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

  இந்த மாத இதழை

  போவோமா வெற்றிப் பயணம்!

  திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 11.05.2014; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : காலை 10.00 மணி

  இடம் : அரிமா சங்க அரங்கம்,

  குமரன் சாலை,

  திருப்பூர்.

  தலைப்பு: போவோமா வெற்றிப் பயணம்!

  சிறப்புப் பயிற்சியாளர்: Jc. HGF. R. விஜயரேகா

  மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்,

  திருப்பூர்.

  தொடர்புக்கு:

  திரு. மகாதேவன் 94420 04254

  திரு. வெங்கடேஸ்வரன் 94423 74220

  திரு. மாரப்பன் 95242 73667

  பிரச்சனை இல்லாமல் வாழலாம்!

  திருச்சி தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 11.05.2014; ஞாயிற்றுக்கிழமை

  நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

  இடம்: பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி

  தெப்பகுளம், சென்னை சில்க்ஸ் எதிரில்,

  திருப்பூர்.

  தலைப்பு: பிரச்சனை இல்லாமல் வாழலாம்!

  சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்

  சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

  கோவை.

  போன்: 97893 75278

  தொடர்புக்கு:

  மண்டல அமைப்பாளர் Er. K. நாகராஜன் 95784 08301,

  Jc. ரத்தினவேல்  99655 75590

  நந்தவனம் சந்திரசேகர்  94432 84823

  வார்த்தையே வாழ்க்கை!

  சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், லிங்கம் ஸ்டோர்ஸ் (காய்கனிகள் மொத்த வியாபாரம்) மற்றும் கிட்ஸ் & குயின்ஸ், வளசரவாக்கம் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள்  :    11.05.2014; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : காலை 10.00 மணி முதல் 12 மணி வரை

  இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

  காமகோடி நகர்,

  வளசரவாக்கம்,

  சென்னை-87.

  (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

  தலைப்பு  :“வார்த்தையே வாழ்க்கை!”

  சிறப்புப் பயிற்சியாளர்: திரு. A. டோமினிக் சேகர்

  வரலாற்றுத்துறை பேராசிரியர்,

  தஞ்சாவூர்.

  போன்: 94870 29494

  தொடர்புக்கு:

  தலைவர்  R. பாலன்  94442 37917,

  செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

  PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

  கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  தொடர்புக்கு:

  தலைவர் – திரு. P. ஜாஹிர் உசேன் 98946 23194

  துணைத்தலைவர் – திரு. எட்வின் ரிச்சர்ட்  94432 75902

  PRO- திரு. கோபிநாத்  82201 82135

  சலனமற்ற சந்தோஷங்கள்

  நண்பர், டாக்டர் சங்கர சரவணன் சார், பொது அறிவு களஞ்சியமென்று பத்தாண்டு காலக் கனவை, நனவை, கற்பனையை, உறக்கத்தை, விழிப்புணர்வை எல்லாம் கலந்து பல எதிர்பார்ப்புகளைப் பின்னிப் பிணைத்து எத்தனையோ? கேள்விகளுக்கெல்லாம் பாதுகாப்புடன் விளக்க உறைமாட்டியும் தயாரித்து, கருத்தரித்து விகடன் பிரசுரம் மூலமாக பிரசவித்தார்.

  அதன் பிறகு அவர் விமர்சனத்தை எதிர்பார்த்து கேள்விகளுக்காய், கருத்துரைக்காய், ஆழமான, சரியான ஆதாரங்களுடனான மறுப்புரைகளுக்காயும் தன்னை மாற்றி கொள்வதற்காயும் காத்திருந்த பொழுது, ஆச்சரியப்படும் வண்ணம் ஆயிரம் கேள்விகள் தாக்குப் பிடிக்க முடியாத வண்ணம் எதிர்பாராத திசையிலிருந்து வந்து சேர்ந்த பொழுது மூக்கில் விரல் வைத்து மலைத்துப் போனார்.

  எனக்கும் இதைப் போன்றே அனுபவம் இருந்ததை சொன்னதும் அவசியம் இதைப்பற்றி அடுத்த கட்டுரையில் எழுதி சலனப்படுத்து என்றார்.

  உணர்வுகளை முகங்களில் காட்டுவது கூட ஒரு வகை சலனம் தான். எப்பொழுது தேவைப்படுகின்றது, எப்பொழுது தேவைப்படுவதில்லை, ஓவராக்டிங் ஆகின்றது என்றெல்லாம் நிறையப் பழகியவர்களுக்கே தெரிவதில்லையாம்.

  உதாரணமாக நெருங்கிய நட்புலகம், திருமண சொந்த உலகம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பாசக்காரர்கள் என்று பெயரெடுப்பதற்கு “டிசிப்ளின்” மிக அதிகமாக தேவைப்படுகின்றது என்றேன்.

  சரவணன் அண்ணாச்சி அப்ளாஸ் போட்டு ஆமோதித்தார். ஏனெனில் அலாவுதீனின் அற்புத விளக்குபோல், ஆயிரம் அரேபிய இரவுகள் கதை போல் விழித்து எழுதியதெல்லாம் விட்டுவிட்டு, நன்றி என்று சொல்கின்ற ஒற்றைக் கடைசிப் பக்கத்தில் கவிஞர் ஒருவரின் உளமார்ந்த இயற்பெயரை இட்டு விட்டதால் கேட்கப்பட்டதின் கவலை அவரை வாட்டியது.

  டிசிப்பிளின் இருந்தால் உலகம் அதிகமாக எதிர்பார்க்க தொடங்குகிறது அண்ணாச்சி! சரியாக பிறந்தநாளை ஞாபகம் வைத்து பாராட்டச் சொல்கின்ற நண்பர்கள், சகோதரிகள், கணவர்கள் வாழ்க்கைத் துணைகள் என்று எதிர்ப்பார்ப்பது பாசத்தையா? நினைவாற்றலையா? என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல் உள்ளது.  பெற்றோர்கள் முன்பு கடிதம் எழுதவில்லை என்றும் இன்று தொலைபேசியில் பேசவில்லை என்று கோபித்துக் கொள்வது பாசத்தை…

  ஒரு குறிப்பிட்ட ஒலி அளவைத் தாண்டிய சில பலரால் இரைச்சல் என்று

  வகைப்படுத்தப்படக்கூடிய இசையில் இருந்து சலனத்தை பல

  வகைப்படுத்தலாம்.”

   To do list-ல் வைத்து கணினியில் ரிமைண்டர் போட்டு Yellow ஃபிளிப்பில் எழுதி மாட்டி இயந்திரத்தனமாய் நினைவுபடுத்திக் கொண்டு ஆளையும் படுத்திக் கொண்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தொல்லைப் பேசியில் பேசி  மகிழ்வதில் தொடங்குவது சலனமுள்ள சந்தோஷம். இதற்கு யாரை எப்படி, எப்பொழுது சந்தோஷிக்க வைக்க வேண்டும் சந்தேகமில்லாமல் என்கின்ற ஸ்திரமான திட்டமிடுதலும் குறிப்புத் தாள்களும் நினைவாற்றலும், செல்போன் கணினி, மின்னஞ்சல் இத்யாதிகளும் தேவைப்படுகின்றது.

  இதையெல்லாம் சரியாக நிர்வகிக்கின்ற கணினி போன்ற கவனமும் நிர்வாகத் திறமையும், ஒழுக்கமும், கட்டுக்கோப்பும் இருந்துவிட்டால் திறமையானவர் என்கின்ற பெயர்தானே வர வேண்டும், பாசமானவர் என்கின்ற தவறான அடையாளமல்லவா வந்து விடுகின்றது. அப்படியானால் திறமைக் குறைவினாலோ? அல்லது கவனக் குவிப்பினாலோ? வேறேதும் பணிகளில் மூழ்கியவர்களைப் பாசக் குறைவானவர்கள் என்று சொல்வது பாசமிகு செயலா? பாசம் என்ன பண்டமாற்றுப் பொருளா? என்று யோசித்துப் பார்ப்பது கூட பயனுள்ளதாக இருக்கும். எஸ்.எம்.எஸ்-க்கு பதில் வராததால் முறிந்து போன நட்பும் நேசமும் நமக்கு காணக்கிடைப்பதை சலனம் நோக்கிய சந்தோஷம் என்று விவரிக்காதிருக்க இயலுமா? என்ன.

  அந்தந்த நாட்களை நினைவு வைத்திருக்க நல்ல நாட்குறிப்பு போதுமே. வாழ்த்து அட்டைகளைக் குறைத்துக் கொள்ள தொடங்கிவிட்டோம். நேரடி தொலைபேசி அழைப்பு இல்லை என்று வருந்துகின்ற உறவுகள் அதிகரிக்கின்றன. ஜவர்ஹர்லால் நேரு மோதிலால் நேருவிடத்தில் சொன்னதாக ஒரு கதையை என் அப்பா சொன்னார். அதில் நேருஜி அவர்கள், “அப்பாÐ என்னிடத்தில் நம்பிக்கை இருந்தால் என் செலவுக் கணக்குத் தேவையில்லை. நம்பிக்கை இல்லாவிட்டால் செலவுக் கணக்கால் பலனில்லை” என்று.

  அதைப்போல பாசம் இருந்தால் தொலைதூர உறவுகள் சலனமில்லாத சந்தோஷத்தில் நிலைத்திருக்கும். பாசமே இல்லை என்று ஆகிவிட்டால் வெறும் சலனங்களால் மட்டும் சந்தோஷித்திருக்க முடிவதில்லை. சலனத்தின் தேவையும் பரிமாணமும் அதிகரித்துக் கொண்டே சென்று விடுகின்றது.

   ஒரு குறிப்பிட்ட ஒலி அளவைத் தாண்டிய சில பலரால் இரைச்சல் என்று வகைப்படுத்தப்படக்கூடிய இசையில் இருந்து சலனத்தை பல வகைப்படுத்தலாம்.  மோனம், ஏகாந்தம் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்ட சலனமற்ற சந்தோஷத்தை அனுபவித்துப் பார்க்க பக்குவம் தேவைப்படுவதாக கூறப்படுவதெல்லாம் நம்ப முடியுமா?  எனத் தெரியவில்லை.

  New Earth எனும் Eckhart Tolle-ன் புத்தகத்தை படித்தால் அமைதிப்படுத்துதல், ஆற்றுப்படுத்துதல், நீர் சலனமாயிருத்தல் என்றெல்லாம் ஒரு ஆங்கிலத்தனமான பற்றற்றிருத்தலைப் பற்றி பேசியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதையே இரமண மஹரிஷியும் சொல்லியிருக்கிறார் என பல இடங்களில் தோன்றியது.

  ஆனால் ஒன்று, பல நேரங்களில் பாசக்காரர்கள் என பெயர் வாங்குவதற்கு  பாசத்தைக் காட்டிலும் மன்னித்துக் கொள்ளுங்கள்… வேஷம் கூடத் தேவைப்படுகின்றது.  கூடுதலாகவோ அல்லது பாசத்துடனா? என்று கேட்க வேண்டியதில்லை. எப்படியும் இருக்கலாம், நண்பனொருவன் எப்பொழுது தொலைபேசியை எடுப்பான் எப்பொழுது எடுக்க மாட்டான் எனத் தெரியாது?

  இன்னொருவன் எல்லாருக்கும் தெரிந்த சக அலுவலரைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் செய்தியை திருமணம் முடிந்த பிறகே தெரிவித்துக் கொண்டான். இந்த மாதிரி ஆட்கள் மற்றஎல்லோரையும் போல் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லையே தவிர, பாச நேசத்தில் எந்தக் குறையும் வைப்பதில்லை.

  பாசுவைப் பொறுத்த வரையில் (எதிர்பாரா போன் நண்பன் பெயர் பாசு) எப்போதாவது எடுத்தாலும் (சில சமயங்களில் ஆறுமாத ஒரு வருட இடைவெளி ஆகிவிடும்) அப்போதுதான் பேசியது போல பேசி சமாளிப்பான். அவன் மீது கோபப்படவே முடியாது. அது அவனைப் புரிந்து கொண்டதாலா? அல்லது பொறுத்துக் கொண்டதாலா?  எனத் தெரியவில்லை.

  Fall of Sparrow (ஒரு குருவி வீழ்ந்த கதை) எனும் சலீம் அலியின் புத்தகத்தில் எந்த ஆண் குருவி கூட்டை அழகாக கட்டுகின்றதோ? அதற்கே வாழ்வை அர்ப்பணிக்கின்ற பெண் குருவிகள், அதன் பிறகு எல்லா வேலைகளையும் மேற்கொள்கின்றன.

  பாதி கட்டி விட்டுவிட்ட கூடுகள் ஆண் வீவர் (Weaver Baya) குருவிகளின் அரைகுறை சுயம் வர தோல்வியைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று நாள், மாதக் கணக்காக கருமமே கண்ணாக கவனித்து கவனித்து எழுதியிருப்பார் அவர். அப்பேர்பட்ட கவனத்தை திருவள்ளுவரும் சுடச்சுடரும் பொன்போல்.. எனும் குறளில் தவமென குறித்துள்ளார். இந்த மாதிரி பணிபுரிபவர்கள் சலனமில்லாத சந்தோஷத்தோடு இருப்பதாக அர்த்தம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் ஒரே மாதிரியான நட்போடு வாழ்வதே வரம்.

  நெல்லுக்குள் பால் பிடிக்கும் பருவத்தை பார்க்கும் பொழுது ஆச்சரியம் தோன்றுகின்றது. நெல்லில் இருபால் மலர்களும் ஒரே செடியில் இருக்க, மகரந்தச் சேர்க்கை சலனமின்றி நடைபெற்று உலக உயிர்களுக்கு உணவாகின்றது. அரிசி, தாவரங்கள் மகிழ்ச்சியை சிரிப்பை அழுகையை எப்படி வெளிப்படுத்துகின்றன. வெட்டிவிடுவோமா? என்று கிட்ட நின்று நினைத்தாலே வாடிவிடுகின்றமனித எண்ணங்களைப்  படிக்கின்ற செடிகள் இருப்பதாக தாவரவியல் வல்லுனர் டாக்டர். பாரதி சார் அவர்கள் சொன்னார்கள்.

  தாவரத்தை விடுங்கள் சக மனிதர்களின் சலனங்களைச் சரியாகத் தவறாகப் புரிந்துகொண்ட எவ்வளவு விளக்கினாலும் சரிப்படுத்திக் கொள்ளாத நண்பர்களை என்ன சொல்வது. இராபர்ட் ஃபிரௌனிங்கின் நீ தந்த நம்பிக்கைகளை நீயே எடுத்துக் கொள்!  உன் உரிமைகள் உன் நினைவுகள் மட்டுமே! என்கின்ற

              Take back the hopes you gave…

              I claim only the memory of the same.

              The last ride together

  வரிகளில் ஆழ்ந்திருக்கிற சலனமற்ற சந்தோஷத்தை எப்படி விவரிப்பது.

  தேர்வெழுதப் போகின்ற மாணவன் மதிப்பெண் (பெயர் ஏன் இப்படி உள்ளது மதிப்பு ஆணாக இருக்கலாகாதா?) மீது அபரிமிதமான எதிர்ப்பார்ப்பை வைத்தால் கை நடுங்க வைத்து விடாதா? நமக்குத் தெரிந்ததை நறுக்குத் தெரித்துவிட்டு வந்தால் வெற்றி மகள் வீட்டு விலாசம் தேடுவாள் என்கின்ற நம்பிக்கை இருந்தால் சலனமில்லாத சந்தோஷம் வரக்கூடும். சோகமும் கலவரமும் போதுமென நினைத்து விவேகானந்தரை துணைக்கு அழைக்கின்றேன்.

  நீ எதுவாக நினைத்தாலும், அதுவாகவெல்லாம் ஆன பிறகு எதற்காக சலனப்பட வேண்டியதிருக்கின்றது. என்ன தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை இயற்கையிடத்தில் விட்டுவிட்டு உழைப்பவன் உள்ளத்தில் நல்லதை பெறுகின்றான் என்று சொல்லப்படுவது நிஜமே.

  ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு தேடிய கதை என இரமண மகரிஷி சொல்லிய விஷயம்தான் சலனங்களில் சந்தோஷம் தேடுகின்ற பணி. ஆழ்ந்த கவனத்தோடு ஆற்றுகின்ற பணிகள் நிறைவான நிம்மதியைத் தேடித் தருவதால் யாரை எப்படி மகிழ்விப்போம் என முயற்சிக்காது இயல்பாக ஆற்றப்படும் பணிகள் சலனமற்ற சந்தோஷத்தை கொடுப்பது நிஜமே.

  இந்த மாத இதழை

  தன்னம்பிக்கை மேடை

  “எதிலும் புதுமை, தொழில்நுட்பம் ஆகியவை கொண்டுவர வேண்டும். செய்யும் வேலையில் உயர்ந்த தரம் இருத்தல் வேண்டும்.”

  1. இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால் இளைஞர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

  இந்தியா வல்லரசாக வேண்டும் என நீங்கள் நினைத்தால் முதலில் இளைஞர்களாகிய நீங்கள் வல்லரசாகத் திகழ வேண்டும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும்.

  ஒரு வேலை, முதலில் நீங்கள் அந்த வேலையில் முதன்மையாளராக வர வேண்டும். எல்லாரும் செய்கின்ற வேலையையே நீங்களும் செய்யக்கூடாது. எதிலும் புதுமை, தொழில்நுட்பம் ஆகியவை கொண்டுவர வேண்டும். செய்யும் வேலையில் உயர்ந்த தரம் இருத்தல் வேண்டும்.

  உங்களின் திறமையை மற்றவர்கள் புரிந்துகொண்டு அதை பாராட்டும் விதமாக இருத்தல் வேண்டும். உங்களின் திறமையை நீங்களே பலமுறை சோதனையிட்டுக் கொள்ள வேண்டும். உங்களது செயல்பாடு நீங்களே மெச்சும் விதமாகவும், மனநிறைவு கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தயாரித்த பொருள் உலகத்தரம் வாய்ந்ததாகவும், ‘ஏற்றுமதி தரம்’ (Export Quality) மிக்கதாகவும் இருந்தால் நீங்கள் ஒரு வல்லரசு.

  ஒரு நாடு வல்லரசாக இருக்கிறது என்றால் அங்கு கடினமாக உழைக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். நம் இந்தியாவில் நிறைய இளைஞர்கள் திறமை உள்ளவர்களாகவும், உழைக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில்லை. அவ்வாறு வெளிக்கொண்டு வந்தால் நிச்சயம் சாதிப்புமிக்க ஜனநாயக நாடாக நம் நாடு திகழும். உலகில் சிறந்தவர்களுக்குத் தான் மதிப்பு. அந்த வகையில் சிறந்து விளங்கினாலே போதும். நிச்சயம் நீங்கள் வல்லவராக முடியும். நாடும் வல்லரசாகும்.

  2. தோல்வியைத் தாங்கும் மனநிலையை எப்படி வளர்த்துக் கொள்வது?

  முயற்சிகள் பல செய்தும் தோல்விகள் வர நேர்ந்தால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். சமீபத்தில் நான் சந்தித்த ஒரு வெற்றியாளரின் பெயர் இளங்கோ. அவர் பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவர். ஆனாலும் கூட மாணவர்களிடையே ஊக்குவித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவருபவர். நன்றாக ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் திறன் கொண்டவர். 2000 தமிழ் பாடல்களையும் நன்றாகப் பாடுவார். அவரைப் போல நன்றாக ஆங்கிலம் பேசவும், எழுதவும் தெரிந்த ஒருவரை இதுவரையிலும் நான் சந்தித்ததில்லை என்று கூட சொல்லலாம். 

  இளங்கோ தனது பயிற்சி மாணவருடன் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை என்னிடம் சொன்னார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். “தன்னிடம் பயின்ற மிகவும் மோசமான ஒரு மாணவர், இளங்கோவை அழவைக்க முடிவு செய்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தான். அந்த மாணவர் இளங்கோவைப் பார்த்து, ‘நீ மழையைப் பார்த்து ரசித்ததுண்டா? நீ உன் அம்மாவைப் பார்த்ததுண்டா?’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதற்கு இளங்கோ பதில் சொல்லவில்லை. கீழ்தரமான அந்த மாணவன், இப்படி எதுவுமே பார்க்க இல்லாத போது எதற்காக இந்தப் பிறவி? தற்கொலை பண்ணலாமே என்று நினைத்ததுண்டா? என்று கேட்டான்.

  அந்த மாணவனிடம் இளங்கோ கூறிய பதில், “உன்னைப் போன்று கொஞ்சமும் மனிதர்களை மதிக்கத் தெரியாத கேவலமானவன் எல்லாம் இப்பூமியில் வாழும் போது என்னைப் போன்றவர்கள் இம்மண்ணில் ஏன் வாழக்கூடாது? நான் வாழ நினைக்கிறேன். வாழ்ந்து காட்டுகிறேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

  இப்படி இளங்கோவைப் போல எத்தனையோ மனங்கள் தோல்வியைச் சந்தித்திருக்கலாம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை திறம்பட எதிர்கொள்ளும் திறன் தனக்குள்ளே வளர்த்துக் கொண்டு வலிமை படைத்தவர்களாக மனதை திடப்படுத்துபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். 8வது வகுப்பில் கணிதத்தில் தோல்வியடைந்த இளங்கோ 10வது வகுப்பில் 100க்கு 100 எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

  அவரது “ஜெயிப்பது நிஜம்” என்ற நூலை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. படித்துப் பாருங்கள், உங்களுக்குத் தோல்வியைத் தாங்கும் மனவலிமை வந்துவிடும்.

  3. நம் நாட்டில் ஊழல் அதிகரித்துக் கொண்டே வருகிறது அதற்கு மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

   ஊழலுக்கு எதிராக பேசுபவர்கள் பின்னாளில் ஊழலில் ஈடுபடாமல் இருந்தாலே போதும். சிறு வயதிலிருந்தே நாணயமுடன் இருக்க நினைப்பவர்கள் உயர் பதவிகளுக்கு வரும் பொழுதும் அதை பின்பற்ற உயர்ந்த மனஉறுதி தேவைப்படுகிறது.

  ஊழல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது என்ற வார்த்தையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஊழல் எப்போதுமே இருந்திருக்கிறது. கொடுப்பவன் நிறுத்தினால் வாங்குபவன் நிறுத்தித்தான் ஆக வேண்டும். சொல்லப் போனால் ஊழலை வளர்த்தி விடுவதே கொடுப்பவர்கள் தான். ஒருவர் துணிந்து தர மறுத்தால் அதன் பின்னர் வருபவர்களும் அதையே பின்பற்றினால் தான் ஊழலை நிறுத்த முடியும். மாணவர் மத்தியில் ஊழலுக்கு எதிர்ப்பு இருப்பது வரவேற்கத்தக்கது. எந்த இடத்தில் ஊழல் தலைதூக்கினாலும் அதைத் தட்டிக்கேட்கப் பழக வேண்டும். பெற்றோர்கள் சிலரே தனது பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக பணத்தை லஞ்சமாகக் கேட்கின்றனர். அந்த இடத்திலிருந்து தான் ஊழல் ஆரம்பமாகிறது.

  இப்படி பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றார்களே என்பதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு, அடுத்த தலைமுறை பெற்றோர்களுக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுக்காமல் இருப்பது ஒரு மாணவனின் கடமையாகும். அரசு கல்லூரியில் படித்து பெரிய பதவிக்கு வருவேன் என்று ஒவ்வொரு மாணவனும் ஏன் சபதம் எடுக்கக்கூடாது?

  இன்றைய மாணவர்களாகிய உங்களால் தான் லஞ்சமற்ற புதிய இந்தியாவை உருவாக்க முடியும். நீங்கள் சமுதாயத்திற்கு நல்ல மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து நன்றாகப் படித்து உயர்பதவிகளில் வந்து அமர வேண்டும். சிறு தவறுகள் எங்கு நடந்தாலும் அதை கண்டிக்க வேண்டும். உயர் பதவிகளில் உங்களைப் போன்ற மனப்பான்மை உள்ள நல்ல இளைஞர்கள் வந்தாலே ஊழல் என்பதை இல்லாமல் செய்ய முடியும்.

  இந்த மாத இதழை