“வெற்றி” என்ற சொல்லே மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது. “தோல்வி” என்ற சொல் மனதிற்கு சுமையாகிறது; துன்பம் தருகிறது. ஒருவரது வெற்றியை, தொடர் வெற்றியைக் கூர்ந்து ஆய்ந்தால் அது அவரது மனம் சார்ந்ததாகிறது. மனம் என்பது எண்ணங்களின் பிறப்பிடமாகிறது.
மனதைப் பற்றி முழுமையாக அறிவதென்பது வெறும் அறிவியலால் மட்டும் முடியாது. மனோதத்துவ நிபுணர்களாலும் அறிய முடியாத, புரிய முடியாத பல புதிர்கள் மனம் சார்ந்துள்ளன.
மனதைக் கொண்ட மனிதன் உயர்வதும், தாழ்வதும் அதனாலே தான். மனதை வென்ற மனிதன் உயர் ஞானியாகிறான்.
பொதுவாக மனம் ஐம்புலன்கள் சார்ந்து இயங்குகிறது. ஐம்புலன் இன்பங்களுக்கு அடிமையானோர் பலர்.
நாவின் சுவைக்கு அடிமையானதால், உடலுக்கு ஊறு விளைவிக்கும் நோய்வயப்படுகின்றனர்.
கண்களால் காணப்படும் காட்சிகளால் கட்டுண்டு விடுகின்றனர்.
சிலர் மூக்கால் உணறும் நறுமணங்களுக்கு அடிமையாகின்றனர்.
சிலர் சிலரின் தொடு உணர்வுகளுக்காக ஏங்குகின்றனர்.
சிலர் காதால் கேட்கும் இசைக்கும், பேச்சுகளுக்கும் இரசிகர்களாக உள்ளனர்.
ஆறாவது அறிவை, பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்துபவர்கள் எதற்கும் அடிமையாகாமல், அதன் வசப்படாமல், தனக்கென ஒரு இலக்கை அமைத்து, அதை நோக்கி பயணிக்கும் பாதை வகுத்து வெற்றிக்கனியைப் பறிக்கிறார்கள்.
ஐம்புலன் இன்பங்களிலேயே திளைத்திருக்க மனம் எப்போதும் ஏங்கிக் கொண்டுள்ளது. ஐந்தறிவே கொண்ட மிருகங்களுக்கு இது இயற்கை. அவ்வின்பங்களிலேயே ஈடுபாடு கொண்டு வாழ்வை முடிக்கிறது.
ஆனால் ஆறாவது அறிவையும் கொண்ட மனிதன், ஏழாவது அறிவையும் பெறும் வாய்ப்பு கொண்ட மனிதன் வெற்றி காணவே படைக்கப்பட்டுள்ளான். பகுத்தறிவு மூலம் மனிதன் கொண்ட வெற்றிகள் எத்தனை! எத்தனை! கற்கால மனிதனுக்கும், நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் கோலோச்சும் இன்றைய மனிதனுக்கும் எத்தனை வேறுபாடுகள்.
எத்தனை வகைப்பட்ட படிப்புகள், தொழில்கள்… ஆனாலும் எல்லா மனிதராலும் வெற்றியடைய முடியவில்லையே!
உயர் படிப்புகள் படித்தும் உயர்ந்து நிற்க முடியவில்லையே!
கடினமாக உழைத்தும், கனிசமான முன்னேற்றமில்லையே!
ஏன்? ஏன்? ஏன்?
இதற்கான காரணங்களை ஆராய முற்பட்டால், அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது நமது எண்ணங்களே.
எண்ணங்களின் குவியலே மனம்.
“எதை எண்ணுகிறாயோ அதுவாக மாறுகிறாய்”
“நல்ல எண்ணங்கள் நம்மை உயர்த்தும். தீய எண்ணங்கள் நம்மை வீழ்த்தும்”
“மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பு”
“எதிர்மறை எண்ணங்கள் நம் முன்னேற்றத்தின் தடைக்கற்கள்”
போன்ற ஆன்றோர், சான்றோர் வாக்குகளை சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும்.
நமது எண்ணங்களை ஆராய்ந்து, வகைப்படுத்தி, நெறிப்படுத்தும்போது மாற்றங்கள் நம்முள் நிகழ்வதை அறியலாம்.
மனம் மாற்றங்களை விரும்புகிறது புதிய, புதிய செயல்களில் நாட்டம் கொள்கிறது. எனவே மனதை நம் வயப்படுத்த வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
பத்து, பதினைந்து, இருபது வருடங்களாக புலன் இன்பங்களிலேயே ஈடுபட்டுள்ள மனதை திசை திருப்பும்போது அது எதிர்க்கும்.
ஒன்றை மட்டும் நன்கு உணருங்கள் அன்பர்களே!
மனதை அதன் போக்கிலே விட்டு, அதன் நாட்டங்களை அறிந்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேற சில பயிற்சிகளை, மன பயிற்சிகளைச் செய்யச்செய்ய நம்மை நோக்கி நகரும்.
“மனம் ஒரு வேலைக்காரன். நீ அதன் முதலாளி” (Mind is a Servant; You are the Master) என்பதை நன்கு நினைவு கொள்ளுங்கள்.
மனதை வேலைக்காரனாக எண்ணி, அதனிடம் வேலை வாங்குவதிலேயே முயற்சி மேற்கொண்டால் அது முரண்டு பிடிக்கும்.
சில வேளைகளில் அதற்கு நாம் நண்பனாக வேண்டும். அதற்கென சிறிது நேரம் ஒதுக்கி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அதே வேளையில் அப்பயிற்சிகளில் நுழையும்முன் நம்மைப்பற்றி, நம் உடலைப்பற்றி, உடல் உறுப்புகளைப் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்வது அவசியம்.
“ஆறாவது அறிவை, பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்துபவர்கள் எதற்கும் அடிமையாகாமல்,அதன் வசப்படாமல், தனக்கென ஒரு இலக்கை அமைத்து,அதை நோக்கி பயணிக்கும் பாதை வகுத்து வெற்றிக்கனியைப் பறிக்கிறார்கள்.”
கண்களுக்கு தெரிந்த உடலின் வெளி உறுப்புகள், கண்களுக்குத் தெரியாத உடலின் உள் உறுப்புகள், இவைகளின் அடிப்படை இயக்கங்கள், இரத்த ஓட்டம், நுரையீரலின் இயக்கம், கண்களின் விழித்திரையில் (Retina) கண்களை மூடிய நிலையில் காணும் காட்சிகள் (உறக்கத்தில் அல்ல), கனவுகள் (உணர்வு நிலையில்) இவைகளைப் பற்றிய அடிப்படை அறிவு சற்று தேவை.
மனம் எண்ணங்கள் கனவுகள் வெற்றிகள்
இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, பிணைந்தவை. அனைத்து இயக்கங்களுக்கும் மூலமாக இருந்து இயக்குகின்ற சூத்திரதாரி “மூளை”.
அதைப்பற்றிய தகவல்களும் தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் மனமாற்றத்தைப் பற்றி அறிய முடியும், தெளிய முடியும், இயக்க முடியும்.
இந்த மாத இதழை