Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

திரு. S. அங்கண்ணன்

உதவியாளர் & தேர்வாணையர் அலுவலகம்

பாரதியார் பல்கலைக்கழகம்

எந்தவித எதிர்பார்ப்பும், தேவைகளும் இல்லாமல்  பயமும், பதற்றமுமாக  செல்லும் ஓர் இடம் ஆரம்பப் பள்ளி. அந்த ஆரம்பக் கல்வி தந்த அனுபவங்களை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்த வகையில் தன் கல்வி வாழ்க்கையை அழுத்தமான நினைவுகளுடன் பகிர்கிறார் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையர் அலுவலத்தில் உதவியாளராய் பணிபுரியும் திரு. எஸ். அங்கண்ணன் அவர்கள்.

எனது ஆரம்பப் பள்ளி மருதாபுரம் அரசினர் பள்ளியில் ஆரம்பமானது. அப்பொழுது கல்வியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. பிறகு ஆறாம் வகுப்பு மருதமலை தேவஸ்தான அரசினர் பள்ளியில் சேர்ந்தேன். அப்பள்ளியில் அடிப்படை வசதிகள் கூட இருந்ததில்லை. சாலைக் கூரையில் தான் வகுப்பு எடுக்கப்பட்டது. மழைக் காலங்களில் பள்ளிக்கு விடுமுறை தந்துவிடுவார்கள். அரை நாள் மட்டுமே பள்ளி நடக்கும்.

வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் பேருந்துக் கட்டணம் 25 பைசா. அந்த 25 பைசா கொடுத்து பேருந்தில் செல்ல முடியாத நிலையில் தான் நான் இருந்தேன். குடும்ப வறுமையின் காரணமாக பேருந்துக் கட்டணம் வேண்டும் என்று என் பெற்றோர்களிடம் கேட்காமல் 3 கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்வேன். ஆண்டுக்கு ஒருமுறை தான் பள்ளிச்சீருடை. அதை தினமும் துவைத்து, கிழிந்தால் தைத்துக் கொண்டு தான் அதே சீருடையை அணிந்து செல்வேன்.

மதிய உணவு வேளைகளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். நான் அவர்களுடன் கலந்துகொள்ள மாட்டேன். குடும்ப வறுமையின் காரணமாக பல நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறேன். மாணவர்கள் என்னை தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பார்கள். என்றாலும் கடின உழைப்பு, அன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு எந்த பலனையும் எதிர்பாராமல் உதவி செய் என்று எனது தந்தை கூறியதை இன்று வரை கடைபிடித்து வாழ்ந்து வருகிறேன்.

எனது பள்ளிக் காலத்தில் என்றும் மறக்க முடியாத ஆசிரியர்கள் என நிறைய பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும் ஒவ்வொரு விசயங்களைக் கற்றுக்கொண்டேன். திரு. கனகராஜ் ஆசிரியர், திருமதி லீலாவதி ஆசிரியை, திருமதி அங்கம்மாள் ஆசிரியை ஆகியோர் எனது வாழ்நாளில் மறக்கமுடியாத ஆசிரியர்கள். திரு. சோமசுந்தரம் ஆசிரியர் அவர்கள் எனது வறுமை நிலைகண்டு எனக்கு இலவசமாக டியூசன் சொல்லிக்கொடுத்தார். எனது அப்பாவிற்கு வருமானம் குறைவாக இருந்தாலும் என்னை படிக்க வைப்பதில் ஆர்வமாகவே இருந்தார்.

என்னையும் விட எனது படிப்பில் ஆர்வமாக இருந்த எனது அப்பா பள்ளிக்காலம் முடிவடைவதற்குள் காலமாகிவிட்டார். அவரது இறப்பு என்னால் தாங்க முடியாத அளவிற்கு துயரத்தைத் தந்தது. மேற்கொண்டு என்னால் படிக்கவும் முடியவில்லை. என் தாயார் அரவணைப்பில் இருந்தாலும் தொலைதூரக்கல்வியில் பி.ஏ. பயின்றேன். வறுமையின் பிடியில் இருந்தாலும் ஒருவர் உதவியையும் நாடாமல் எனது தந்தையின் வாக்கைக் கடைபிடித்தேன். அப்போதைய மாத வருமானம் ரூ. 16. பகுதி நேர வேலையாக மருந்துக் கடை ஒன்றில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் வேலை செய்தேன்.  1990ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காகிதம் சுமக்கும் வேலைக்கு முதலில் சேர்ந்தேன்.  நேரங்களைச் சரியாக பிரித்து வேலைகளை காலை முதல் இரவு 12 மணி வரையிலும் இடைவிடாது செய்து வந்தேன்.

எனக்கு துன்பம் வந்த நேரங்களில் பெரும் உதவிபுரிந்தவர்களில் முதன்மையானவர்களாக இருந்தவர்கள் டாக்டர் உஷா மேத்தா, கீர்த்திலால் காளிதாஸ், திரு. ஈழ். கண்ணன், ஐஅந ஆகியோர் முக்கியமானவர்கள். துன்பத்தில் இருந்த நேரங்களில் யார் ஆதரவுக்கரம் தருகிறார்களோ அவர்கள் நிச்சயம் நமது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதவர்கள் .

இப்பொழுது படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்தாலே வாழ்க்கையில் எல்லாவிதமான வெற்றிகளையும் அடைந்துவிடுவார்கள். மாணவர்கள் முதலில் குடும்பநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். வறுமை எப்பொழுதும் நல்ல வழி காட்டும் என்பதை மாணவர்கள் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரது வெற்றிக்கும் குடும்ப பின்னணியும், சமுதாய பின்னணியும் பிணைந்திருப்பது நிச்சயம். எனது வெற்றிக்கு என் அம்மா விஜயலட்சுமி மற்றும் துணைவியார் திருமதி. சுமதி அவர்கள் பெரிதும் துணையாக இருக்கிறார்கள். என்னுடைய மகன்கள் திரு. பிரகாஷ், திரு. சஞ்ஜிவ் இவர்கள் இருவரும் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

2001ம் ஆண்டு டாக்டர் திரு. இன்னாசிமுத்து துணைவேந்தராக இருந்தபொழுது எனக்கு பணிநியமனம் கிடைத்தது. நான் இதுவரையிலும் ஆறு துணைவேந்தர்களின் கீழ் பணியாற்றி இருக்கிறேன். அவர்களிடமிருந்து கிடைத்த அனுபவங்கள் எனது பணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இப்பொழுது பணியாற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் திரு. ஜேம்ஸ் பிச்சை அவர்களின் வழிகாட்டுதலில் தற்போதைய எனது பணி சீராகவும், சிறப்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், தினக்கூலி பணியாளர்கள் ஆகியோர் என் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு துணையாக இருக்கிறார்கள் என்பதில் பெரிதும் பெருமைப்படுகிறேன்.

“யாரிடமும் எதையும் எதிர்பாராமல், தன்னை மட்டுமே நம்பினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்று தன்னம்பிக்கைக்கு உதாரணமான திரு. எஸ். அங்கண்ணன் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கிறது தன்னம்பிக்கை…

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்