Home » Articles » சாதிக்கலாம் வாங்க

 
சாதிக்கலாம் வாங்க


ஆசிரியர் குழு
Author:

-ஜெட்லி

நமது நாட்டில் தோன்றி பின்னர் ஜப்பான், சீனா போன்றநாடுகளில் பெரிதும் பரவிய கராத்தே, குங்பூ போன்றகலைகள் மீண்டும் நமது நாட்டில் தற்போது தான் வளர்ச்சி பெற்று வருகின்றது. தற்காப்பு கலைகளான இவை நமது நாட்டிலிருந்து தான் ஜப்பான், சீனா போன்றநாடுகளுக்கு அறிமுகமானது என்பது வரலாற்று உண்மை. அப்படிப்பட்ட இந்த கலை வெளிநாட்டினரிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றிருப்பது இதன் சிறப்பு.

இச்சிறப்பு பெற்ற தற்காப்புக் கலைகள் உருவெடுத்த இந்த மண்ணில் இன்னும் நல்ல வளர்ச்சி நிலையை அடையவில்லை என்பது தான் கவலைப்பட வேண்டிய ஒன்று. எனினும் ஒருசிலர் மிகுந்த ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் இந்தக் கலையை முறையாகக் கற்று இந்தக் கலையால் அவர்களும், அவர்களால் இந்தக் கலையும் பெருமைப்படும் படியாக இக்கலையை வளர்த்து வருகிறார்கள். அந்த ஒருசிலரில் ஒருவர் தான் தீர்த்தமலை என்ற பெயர் கொண்ட ‘ஜெட்லி’. தற்காப்பு கலைகளில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார் இவர். இவரைப் பற்றிய அறிமுகம் இதோ…

“என்னுடைய ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள அரசுப்பள்ளியில் தான் 10ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி காலத்திலேயே விளையாட்டின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அப்பொழுது தான் ‘கராத்தே’ என்ற தற்காப்புக் கலையை கற்க ஆரம்பித்தேன். வீட்டில் வசதியின்மை காரணமாக 10ம் வகுப்பிற்கு மேல் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பின்னர் ஓட்டப்பயிற்சி, தற்காப்புப் பயிற்சி போன்றவற்றில் எனது ஆர்வத்தைச் செலுத்தினேன். அப்பொழுது தான் கோவையில் திரு. சிவானந்தம் அவர்களிடம் 3 ஆண்டுகள் பயிற்சியை மேற்கொண்டேன். 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையிலும் கராத்தே, குங்பூ, ஓட்டப்பந்தயம், ஜிம் போன்றபயிற்சிகளை மேற்கொண்டேன். எனது 18ம் வயதில் கருப்பு நிறபெல்ட்டை பெற்றேன்.

அதன் பிறகுதான் இப்பயிற்சிகளில் சாதனைகள் செய்ய வேண்டும் என்றஎண்ணம் எனக்குத் தோன்றியது. நமது தேசத் தலைவர்களின் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றநாட்களில் மட்டுமே ஏதேனும் சில சாதனை முயற்சிகளைச் செய்து வந்தேன். 2000ம் ஆண்டில் 12 டன் பேருந்தை தலைமுடியில் கட்டி அரை கிலோ மீட்டர் தூரம் வரையில் இழுத்திருக்கிறேன்.அதன்பிறகு லாரியைக் கட்டி இழுத்தேன். இந்த சாதனைகள் பாராட்டு பெறும் அளவிலேயே இருந்தது. லிம்கா, கின்னஸ் போன்றபுத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என்றஎண்ணத்தை முயற்சிகளாக மேற்கொண்டேன். அந்த அளவிற்கு சாதனைகள் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய அறிவு கிடைக்கப் பெறாமல் இருந்தது. பின்னர் நட்பு வட்டம் பெருக பெருக இதைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

அப்பொழுது தான் லிம்காவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நிறைய விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அந்த விதிமுறைகளின் படி சாதனை செய்தேன். 2003ம் ஆண்டில் லிம்காவில் என் பெயர் இடம் பெற்றது.

இந்த 16 வருடத்தில் 100 சாதனைகளைச் செய்திருக்கிறேன். அதில் 50 சாதனைகள் இந்தியாவிலும், லிம்காவில் இடம்பெற்றசான்றிதழ்கள் இருக்கின்றன. என்னுடைய சாதனை எனக்கு மட்டும் பயன்தந்தால் போதாது. மற்றவர்களுக்கும் இந்த சாதனையில் பங்கு வேண்டும் என்று விரும்பி 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தேன். அதன்மூலம் அவர்கள் தேசிய மற்றும் உலக அளவில் சாதனை படைத்திருக்கிறார்கள்.

2004ம் ஆண்டு சுனாமி வந்தபோது நிறைய பேர் இறந்தார்கள். அவர்களின் நினைவாக ஐந்து நாள் பெங்களூரிலிருந்து திருச்சி வரை மாரத்தான் ஓடி வந்தேன். இதற்காகவும் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றது. அதிக அளவில் இரத்த தான விழிப்புணர்வு, உலக அமைதி போன்றவற்றிற்காக பல இடங்களில் ஓடி இருக்கிறேன். 20 முறைகள் எனது மார்பின் மீது 2 டன் எடையுள்ள கார் ஏற்றி சாதனை முயற்சிகள் செய்திருக்கிறேன். சுட்டு விரலில் ‘குவாலிஸ்’ காரை 22 நிமிடத்தில் 200 மீட்டர் தூரம் இழுத்திருக்கிறேன். இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கிறது. என் கண் புருவத்தின் இடையில் ஒரு கிலோ எடையுள்ள 10 கம்பிகளை தூக்கி சாதனை படைத்திருக்கிறேன்.

உலக நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு 3 முதல் 5 வயதுகளில் இயல்பாகவே 92 வகையான திறமைகள் இருக்கும். இதை பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அல்லது உறவினர்கள் அறிந்து அவர்களை ஊக்கம் கொடுத்து வந்தால் நிச்சயம் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளர்கள் உருவாவது உறுதி.

என்னுடைய ஒரே நோக்கம் 2020க்குள் 100 உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே. இந்தியாவில் இப்பொழுது 6 லட்சம் பேர் கராத்தே, குங்பூ போன்றபயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது வெறும் தற்காப்பு சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உடற்பயிற்சிகள் சார்ந்ததாகவும் இருக்கிறது. இதனால் உடற்பயிற்சியின் மீது இப்பொழுதுதான் ஆர்வம் வந்துள்ளது என்று நினைக்கிறேன். 2003ல் திருச்சியில் கலெக்டராக இருந்த திரு. மணிவாசகம் அவர்கள் தனது சொந்த செலவிலேயே 20 ஆயிரத்திற்கு உடற்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து பெரிதும் ஊக்குவித்தார். கராத்தேவில் எனக்கென்று தனித்திறமை என்றால் தண்டால் என்னும் பயிற்சி செய்வேன். இதில் மட்டும் நான் ஐந்து முறைஉலக சாதனை படைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் யோகாவில் நான்கு முறை உலக சாதனை படைத்துள்ளேன். கண்ணாடி டம்ளரைக் குப்புர சாய்த்து தலையில் ஒன்று, கைக்கு இரண்டு என்று இரண்டு கட்டை விரல்களை மட்டும் ஊன்றி 4 நிமிடம் தலைகீழாக நின்று உலக சாதனை படைத்திருக்கிறேன். தண்டால் ஒரு நிமிடத்திற்கு 160 வரை எடுப்பேன். முதுகில் 20 கிலோ எடை வைத்துக்கொண்டு 1 நிமிடத்திற்கு 38 தண்டால் எடுப்பேன். இந்த முயற்சி 2014ம் ஆண்டின் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

என்னுடைய பயிற்சியாளர் ஜப்பானில் இருக்கிறார். இரண்டு வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே இந்தியாவிற்கு வருவார். அவரிடம் நான் 5 முறைஉலக சாதனை பெற்றதற்காக சான்றிதழ் வாங்கி இருக்கிறேன். இது என்னால் மறக்க முடியாத ஒன்றாகும். எனக்கு பயிற்சி கொடுத்தவர்களில் முக்கியமான பயிற்சியாளர் தென் இந்தியாவின் தற்காப்பு கலையின் தலைமைப் பயிற்சியாளர் திரு. கோகுல கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் வருடத்திற்கு 2 முறைபயிற்சிகளை கற்றுக்கொள்வேன். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு யோகா மற்றும் தற்காப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.

என்னால் இயன்றஅளவில் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த தற்காப்புக் கலைகளால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க சாதனை முயற்சிகளை மேற்கொள்வேன். இந்த சாதனைகள் மூலம் பிறகுழந்தைகளும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம்.

சிறு வயது முதலே பெற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுகளிலும் நன்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்களது எதிர்கால பணிகளுக்கும் விளையாட்டு சிறந்த விதத்தில் துணைபுரியும். என் எதிர்கால திட்டமாக, ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து

நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்ற இவரின் இலட்சியப் பணிகள் மேலும் மேலும் சிறக்க, இவரது புகழ் பெருக, தன் எதிர்காலத் திட்டம் செம்மையுடனும், செழிப்புடனும் தொடர தன்னம்பிக்கை இதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்