Home » Articles » வெற்றி உங்கள் கையில் – 4

 
வெற்றி உங்கள் கையில் – 4


கவிநேசன் நெல்லை
Author:

தோல்வி  தரும் பாடங்கள்

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒரு உண்மை நமக்குத் தெளிவாகப் புரியும்.

ஒரே நாளில் ஒரு மாளிகையை எழுப்பிட முடியாது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக கல், செங்கல், மண், சிமெண்ட் போல பலவித கலவைகளால் உருவாக்கப்பட்டதுதான் மாளிகை. இதைப்போலவே ஒரே நாளில் வெற்றியை பெற்றுவிட முடியாது. ஒரு வெற்றிக்குப்பின்னால் எத்தனையோ விதமான அனுபவங்களும், தோல்விகளும், அவமானங்களும் மறைந்துகிடப்பதை வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.

முதன்முதலில் தண்டவளாங்களைக் கண்டுபிடித்தார்கள். அதன்மீது புகைவண்டிகளை இயக்க முடியும் என்று பின்னர் அறிந்தார்கள். இரயில்வே தண்டவாளங்களின்மீது புகைவண்டி செல்லும்போது பல இடங்களில் தண்டவாளங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சூரிய ஒளி தண்டவாளத்தின் மீது படும்போது இரும்பால் செய்யப்பட்ட தண்டவாளங்கள் பாதிப்படைந்தன. மிகப்பெரிய இரயில் போக்குவரத்துக்கு சோதனை அந்தக்காலத்தில் “தண்டவாளம்” வழியாக வந்தது.

இரயில்வே என்ஜினியர்கள் அதிர்ந்து போனார்கள். தண்டவாள விரிசலை சரிசெய்யும் விதத்தில், தண்டவாளங்கள் மீண்டும் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்னர் தான் ரயில் போக்குவரத்து வளர்ச்சி அடைந்தது.

தோல்வியை சந்திக்கும்போதே, தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்குபவர்கள் வெற்றியின் ரகசியத்தை அறிந்துகொள்கிறார்கள்.

“தவறுகள் செய்வதும், அந்தத் தவறுகளை எதிர்காலத்தில் தவிர்ப்பது பற்றி சிந்திப்பதும்” ‘கற்றல்’ (Learning) என்பதன் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது.

சைக்கிள் ஓட்டப்பழகும்போது எத்தனை முறைகீழே விழுந்திருக்கும் வாய்ப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

“விழுவதெல்லாம் அழுவதற்கு அல்ல. எழுவதற்கே” என்னும் கருத்தை நெஞ்சில் நிறுத்திக் கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒவ்வொரு அனுபவங்களும் நமக்குப் பல பாடங்களை உணர்த்துகின்றன.

தனது தந்தையிடம் வந்தான் மகன்.

“அப்பா… எனது வாழ்க்கை மிகவும் துன்பமயமாகிவிட்டது. எப்படித்தான் இந்த உலகில் வாழப்போகிறேனோ? எனக்குப் பயமாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஒரே சண்டையும் சச்சரவும்தான் என் வாழ்க்கையில் முக்கியமாகிவிட்டது. எல்லா நேரமும் குழப்ப மனதோடு நான் இருக்கிறேன். ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனை வந்துவிடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மகன் வருத்தப்பட்டு தனது தந்தையிடம் சொன்னான். மகனுக்கு வயது 21. அவனது தந்தை மிகப்பெரிய சமையல்காரராக இருந்தார். எனவே மகனின் வருத்தத்தைக் கேட்ட தந்தை, அவனை தான் பணியாற்றும் சமையல் அறைக்கு வரச்சொல்லி அழைத்துச்சென்றார். 3 பானைகளை கையில் எடுத்துக் கொண்டார். பின்னர், அந்தப் பானைகளில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து தனித்தனியாக சூடேற்றினார்.

முதல் பானையில் உருளைக்கிழங்கை போட்டார். இரண்டாவது பானையினுள் முட்டைகளை வைத்தார். மூன்றாவது பானைக்குள் காப்பிக் கொட்டைகளைப் போட்டார். அதன்பின்னர் தனது மகனை அருகில் அழைத்து உட்காரச்சொன்னார். அடுப்பில் இருந்த பானைகள் நன்றாகக் கொதித்தன.

மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னப்பா செய்கிறீர்கள். சும்மா காத்திருந்து, அடுப்பு எரிவதை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா” என்று கேட்டான் மகன்.

சுமார் 20 நிமிடங்கள் கழிந்தது. அதன்பின்னர் அடுப்பில் எரியும் தீயை அணைத்துக்கொண்டார். பின்னர் முதலில், முதல் பானையில் இருந்த உருளைக்கிழங்குகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தார். அதன்பின்னர் அடுத்த பானையில் இருந்த முட்டைகளை எடுத்து இன்னொரு கின்னத்தில் வைத்தார். மூன்றாவது பானையிலிருந்து காபியை வெளியே ஒரு கப்பில் ஊற்றினார். பின்னர் தனது மகனை அழைத்து, “இந்த 3 கின்னத்தைப் பார்த்ததும் உனக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்டார்.

உடனே அவரது மகன் “உருளைக்கிழங்கு, முட்டை, காப்பிபொடி” என்றான்.

“நன்றாக கூர்ந்து கவனித்துப்பார்” என்று தனது மகனுக்கு அறிவுரை சொன்னார்.

பின்னர் உருளைக்கிழங்கை கையில் எடுத்து காண்பித்தார். அது மிகவும் மிருதுவாக இருந்தது. பிறகு, முட்டை தோட்டை உடைத்து உள்ளே இருந்த முட்டையை வெளியே எடுத்தார். அந்த முட்டை நன்றாக அவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், காப்பி கின்னத்தை எடுத்து தன் மகனிடம் கொடுத்தார். காப்பியின் மனம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

“அப்பா நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று ஆர்வம் அதிகரிக்க கேட்டான்?” மகன்.

தனது மகனுக்கு விளக்கம் தந்தார் அப்பா.

“மகனே உருளைக்கிழங்குகளும், முட்டைகளும், காப்பிக் கொட்டைகளும் ஒரே விதமான பிரச்சனையைத்தான் சந்தித்தன. அதாவது இந்த மூன்றையும் ஒரே நேரத்தில், ஒரே அளவில் தீயின் வெப்பம் அவைகளை தாக்கியது. இருந்தபோதும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அந்த வெப்பத்தை சந்தித்தன. மிகவும் கடினமாக இருந்த உருளைக்கிழங்கு சுடுநீரில் அவிக்கப்பட்டதால் மிகவும் மிருதுவாகிவிட்டது. முட்டை ஓட்டுக்குள் நீர் வடிவத்தில் இருக்கும் முட்டை சுடுநீரால் கடினமான பொருளாகிவிட்டது. தோடு உடைக்கப்பட்டபின்பும் அதன் கடினத்தன்மை அதிகமாகவே இருக்கிறது. இருந்தபோதும் காப்பி கொட்டை தன்னுடைய தனித்தன்மையோடு விளங்குகிறது. சுடுதண்ணீரின் வெப்பம் பலமாக தாக்கியதும் அந்த நீரையே மாற்றி சுவையுள்ளதாகவும், புதியதாகவும் உருவாக்கி தன்னை கரைத்துக் கொண்டது” என்றார் அப்பா.

இதில் “நீ எந்த ரகம்”? உருளைக்கிழங்கா? முட்டையா? காப்பி கொட்டையா? என்று அப்பா மகனிடம் கேட்டபோது மகன் திகைத்து நின்றான்.

அப்பா மீண்டும் தொடர்ந்தார்.

“தோல்வி வருகின்ற பொழுது சிலர் உருளைக்கிழங்கைப்போல உருக்குலைந்து போகிறார்கள். தங்களின் தனித்தன்மையை இழந்துவிடுகிறார்கள். வேறுசிலர் தோல்வியை சந்திக்கின்ற பொழுது தங்களின் இளகிய மனதை கடினமாக்கி முரட்டுத்தனமாக மாறிவிடுகிறார்கள். ஆனால் காப்பி கொட்டை தோல்வி வருகின்றபொழுது அந்தத் தோல்வியை ஒரு பிரச்சனையாக மாற்றாமல் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு சுடுநீரூடன் ஒன்றாகக் கலந்து சுவையான காப்பியாக மாறி பிறருக்கு பயன்படுகிறது. இதைப்போலத்தான் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு அந்த மாற்றத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றம் ஏற்படுத்துவதுதான் வெற்றியாளர்களின் நோக்கமாக அமையும்” என்றார் அப்பா.

இதிலிருந்து ஒரு உண்மை நமக்குப் புலப்படுகிறது. நாள்தோறும் பல பிரச்சனைகள் நம்மைத் தாக்குகின்றன. சில தோல்விகள் நம்மை சுற்றி வளைத்து திக்குமுக்காடச் செய்துவிடுகின்றன. கதறி அழும் சம்பவங்களும், தோல்வி வடிவத்தில் வந்து தொல்லை கொடுக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் சூழல் ஒன்றாகவே அமைகிறது. இருந்தபோதும் அந்த சூழலை எதிர்கொள்வது எப்படி? என்று புரிந்துகொண்டவர்கள் எந்தத் தோல்வியையும் வெற்றியாய் மாற்றிவிடுகிறார்கள்.

தோல்வி என்பது நிரந்தரமல்ல. வாழ்க்கையில் நடக்கும் சின்னஞ்சிறு தவறுகளால் நடக்கும் பின்னடைவுதான் தோல்வி. தோல்வி ஏற்பட்டவுடன் அந்தத் தோல்வியை பற்றி சிந்திந்து அதற்கான காரணங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தோல்வியை உருவாக்கும் காரணிகளை அறிந்துகொண்டு அவற்றை நீக்க முயற்சி செய்யவேண்டும். தோல்விக்கு காரணமாக அமையும் மனிதர்களை சந்திப்பதை தவிர்க்கலாம். தோல்விகள் ஏற்படும் சூழல் உருவானால் அதனை தள்ளிப்போடும் நிலையை எப்படி உருவாக்க வேண்டும்? என்றும் சிந்திக்கலாம். மொத்தத்தில் தோல்வி நெருங்கிறது என்றால் அதனை எதிர்கொள்வதற்கும், மாற்று வழியில் சந்திப்பதற்கும் மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் இருந்தால் வெற்றியின் தூரம் வெகுதொலைவில் இல்லை.

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்