Home » Articles » தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி

 
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி


பானுப்பிரிய .ஆ
Author:

இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்க பிறந்த தலைமகன்! தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் வளர்ச்சிக்காக, இவரை வளர்த்த தமிழுக்குப் பெருமைச் சேர்த்திட பிறந்த தமிழன்னையின் தவப்புதல்வன்!ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கையை உருவாக்கி சரித்திரம் படைத்திட உதித்த கதிரவன்! சொற் திறனுக்கும், கருத்துத் திறனுக்கும், எழுத்துத் திறனுக்கும் சொந்தக்காரர்.

மனம் உடைந்து உதிரும் நிலையிலுள்ள மனிதப் பூக்களுக்கு ஒரு நிமிடத்தில் தன்னம்பிக்கையை தந்து மீண்டும் தன்னம்பிக்கையோடு வாழ்வை மலரச் செய்யும் பெருமைக்குரிய சுயமுன்னேற்ற இதழான தன்னம்பிக்கை இதழின் தந்தை இல.செ. கந்தசாமி அவர்கள் மண்ணுலகை விட்டுப்பிரிந்த இந்த மாதத்தில் (ஏப்ரல் 6, 1992) அவரின் நினைவுகளை கொஞ்சம் புரட்டும் விதமாக அவரின் சிந்தனைகளுடன் சில நிமிடங்கள் பயணிப்போம்! நம் தன்னம்பிக்கையை வளர்ப்போம்!

இருளில் இருந்த உழவர்கள், இளைய சமுதாயம் என அனைவரின் வாழ்வையும், ஒளிமயமாக்கிட, 24.12.1939ல் சேலம் மாவட்டம், ராசிபுரம் மண்ணிற்கு பெருமைச் சேர்ந்திட, இலக்கபுரம் என்னும் இடத்தில் பேராற்றல் நமக்காக அனுப்பிவைத்த கதிரவன் திரு இல.செ.கந்தசாமி ஐயா அவர்கள்.

“தோன்றின் புகழொடு தோன்றுக” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணம் இவர்.

வானளவு கொண்ட இவரின் சிந்தனைகளிலிருந்து, நம் வாழ்வினை செம்மைப்படுத்தும் பல சிந்தனைகளுள் சில சிந்தனைகளை இங்கு காண்போம்.

சான்றோர்களுக்குரிய பண்புகள்:

சான்றோர்க்குரிய பண்புகளைப் பற்றி தெளிவாக விளக்கும் இவர். சான்றோர்களுக்கே உரிய 5 பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

1. சான்றோர்க்கு முதன்மையானது பிறரிடம் கொள்ளும் “அன்பு”

2.இரண்டாவது பழிவாங்குபவர்களுக்கு அஞ்சுதலாகிய “நாணம்”

3. பிறரிடம் கொள்ளும் “ஒப்புரவு”

4. பிறர்மீது கொள்ளும் “இரக்க தன்மை” உடைய கண்ணோட்டம்

5. மனிதப் பண்புகளுள் உயர்ந்த பண்பான “வாய்மை

இந்த குணங்கள் கொண்டவரே சான்றோர்கள் அவர்களே கண்முன் காணும் தெய்வம் என தன்னுடைய சிந்தனை மூலம் நம்மை தெளிவுபடுத்துகிறார்.

தன்னம்பிக்கை:

தன்னம்பிக்கை பற்றி இவரின் சிந்தனை “இதை செய்ய முடியும், இதை செய்து முடிக்க முடியும், இதைச் செய்து முடித்தே தீருவேன் என்று திடமாக எண்ணுவது, தான் குறித்த ஒன்றைச் செய்ய தொடங்குவது, அதை செய்து முடிப்பது என்ற இந்த வலுவான எண்ணம் தான்  இந்த எண்ணத்தைத் தொடர்ந்து செய்கின்ற முயற்சி தான்  இந்த முயற்சிகளின் விளைவு தான் தன்னம்பிக்கை”.

என தன்னம்பிக்கைக்கு பொருள் வகுத்தவர். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்தவர்.

எழுத்தாளர்களுக்கு:

“எழுத்தாளன் விமர்சனங்களுக்கு அஞ்சுதல் கூடாது. பாராட்டுதலாக இருந்தாலும், குறைகூறுதலாக இருந்தாலும் சமநிலை மனப்பான்மையோடு ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் தம்மை செப்பம் செய்துகொள்ள வேண்டும். எழுத்துப்பணி புனிதமானது. இந்தப் புனிதமான பணியை நாம் ஆற்றுகிறோம் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். புகழுக்கோ, இகழுக்கோ செவி சாய்க்காத செம்மார்ந்த நிலையோடு எழுத்தாளர்கள் தம் பணியை ஆற்றுதல் வேண்டும்.

என எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.

நேர்மை:

நேர்மை பற்றிய இவரின் சிந்தனைத் துளிகளில் சில:

1. நமக்கு என்று கொடுத்த பணியைச் சரிவரச் செய்து முடிப்பது நேர்மை.

2. நமக்கு மேலே உள்ளவர்கள், நம்மைக் கண்காணித்துக் கொண்டிருந்தாலும், கண்காணிக்காவிட்டாலும் நமது கடமைகளைச் செய்து முடிப்பது நேர்மை.

3. நியாயமானது எதுவோ அதைத் துணிந்து செய்வது நேர்மை.

4. நேர்மை எளிமையானது, புகழையோ, பாராட்டையோ விரும்பாதது. அது நீதிக்குத் தலைவணங்கும்; அநீதியை எதிர்த்துப் போராடும்.

ஒழுக்கம்:

 “அன்றாட நடைமுறைகள் தான் ஒழுக்கம். எதையும் உரிய காலத்தில் செய்வது, பொருள்களை வீணாக்காமை, எதையும் முறையாக திருத்தமாகச் செய்வது போன்றவை”. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதற்கிணங்க ஒழுக்கம் பற்றி தன்னுடைய “எனது சிந்தனைக் களமும், காலமும்” என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

குறிக்கோளை நோக்கி:

“நம்மையே நாம் ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டு நமக்குள்ளே மறைவாக மறைந்து கிடக்கின்ற குற்றங்குறைகளை அகற்றி, “ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்போமாயின்” நாடு கெட்டுவிட்டது என்றபேச்சினைப் பேசவும், கேட்கவும் இடமிருக்காது. ஒவ்வொருவர் இதயமும் குறிக்கோளை நோக்கிச் செல்கின்ற நல்லெண்ணங்கள் என்ற குளிர்ந்த நீரோடையில் நனையட்டும்”.

நாம் உயர்ந்தவைகளையே குறிக்கோளாக கொள்ள வேண்டும் எனவும், அவற்றில் வெற்றி, தோல்வி எவை கிட்டினும் அவை நன்மை தருவது எனவும், எனவே நாம் நம்முடைய குறிக்கோளை எண்ணும்போது அது நமக்கும், நாட்டிற்கும் நலம் பயக்கும் வகையில் நிலத்தினும் பெரியதாக, வானிலும் உயர்ந்ததாக, கடலினும் ஆழமானதாக இருக்க வேண்டும் என விளக்குகிறார்.

தமிழைப் போற்றி வணங்கிடும் இவர் தமிழ் மணத்தைத் தரணிக்கு எடுத்துரைக்க தமிழ் இளைஞர்களும், மகளிரும் தங்களால் இயன்ற பணியினை மேற்கொள்வதை இன்றியமையாத கடமையாக மேற்கொள்ள வேண்டும் என விளக்கும் இவர் தன் வாழ்நாளில் பெரும்பங்கினை வேளாண்மையின் வளர்ச்சிக்காகவும் செய்துள்ளார்.

இவரின் உயிர் இன்று நம்மோடு இல்லை என்றாலும், பிறரின் வாழ்விற்கு உயிர்கொடுக்கும் அவரின் எழுத்துக்கள், இந்த தரணி உள்ளவரை இவரின் புகழ் பாடும். நாமும் இவரின் சிந்தனைகளைப் படித்துணர்ந்து வாழ்வில் செழிப்போம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்