Home » Articles » கால்பந்தும் காலப்பந்தும்

 
கால்பந்தும் காலப்பந்தும்


அனந்தகுமார் இரா
Author:

ஒரு நிறுவனத் தலைவரின், மனப்பூர்வமான, ஆதரவு, ஒரு விளையாட்டு வீரனின் செயல்திறனை எவ்வளவு உயரம் உயர்த்தும் என்பதை கால்பந்துப் போட்டியில் விளையாடிப் பார்த்தால் தான் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். முடிந்தளவு அதனை வார்த்தைகளால் விவரித்துவிட வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் அடையாளமே இந்த கட்டுரை.

யாம் பெற்ற இன்பத்தை உங்களையும் பெறவைத்துவிடுகின்றேன். கொஞ்சம் பொறுமையுடன் மூச்சைப்பிடித்துக் கொண்டு படித்து முடித்துவிடுங்கள். ஒரே மூச்சாய்தான் எழுதியிருக்கின்றேன். இந்த கால்பந்தாட்டப் போட்டி இன்றைய தினத்தில் (ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு சனிக்கிழமையில்) மூன்றாவதாக  நடைபெற்றது. எங்களது அணி காலை நடந்த இரு போட்டிகளில் வென்றுள்ளது. (போன வருட டோர்ன்மென்ட்டில் காலிறுதிக்கு முன்பே காலியாகிவிட்டோம்) இந்த முறை இரண்டாவது மேட்ச்சில் மேட்ச் ஃபேவரிட் என்றும் ‘கப்பை’ வெல்லும் என்றும் கருதப்படக்கூடிய சாய் அணியினை காலி செய்திருக்கின்றனர் நமது நண்பர்கள்.

காலை எட்டு மணிக்கு ஒரு மேட்ச் ஆரம்பித்தது. அதில் ஒன்பதே காலுக்கு நான் கடைசி ஐந்து நிமிடங்கள் பங்கேற்றேன். ரைட் ஃபார்வேர்டாக இறக்கி விடப்பட்டேன். இறங்கியவுடன், முன்னே கொண்டு சென்ற ஒரு கிராஸ்ஸை ரிசீவ் செய்ய யாருமின்றி சீறிக் கொண்டு சென்றது. இராஜன் டீமின் மேனேஜர், கால்பந்தாளர்கள், கடைசி காலத்தில் செமகுண்டாகி உடம்பை பராமரிக்காமல் விட்டுவிடுகின்றார்கள் என்பதற்கு வளரும் எடுத்துக்காட்டாக இருக்கின்ற இராஜன்….. கத்திக் கத்தி…. வாங்கிக் கொடுத்த சப்ளைகளை அதிகமாக டிரிப்பிள் செய்யாமல்….. இரண்டு தட்டுக்களில் கோலின் முன்பாகவோ…… கோலுக்குள்ளேயோ…….. அடிக்க முயற்சித்துக் கொண்டே இருந்தேன். ஏற்கனவே இரண்டு கோல் லீடிங்கில் சென்று கொண்டு இருந்தோம். அந்த மேட்ச் குறித்து சொல்ல அதற்கு மேல் எதுவும் இல்லை.

காலை ஆடிய முதல் மேட்சில், ரொம்ப நன்றாக ஆடினீங்க 12 மணி மேட்சுக்கு வந்திடுங்க, என்று இராஜன் கூறிய போது, போன டோர்ன்மென்டில் கடைசி வரை உள்ளே இறக்காமல் வைத்திருந்த அதே மேனேஜரா இவர் என்று தோன்றியது. ஆடுகளத்தில் ஒரு ஆட்டக்காரராக மட்டுமே அடையாளம் காணப்படுதல் வேண்டும் என்று ஒரு கொள்கையோடிருப்பதால், “நிஜமாவா?” என்று கேட்டேன்.

நீங்க வந்தப்புறம் தான் பால் மேலே, ஏறி வந்தது சார். கிராஸ் போட்டீங்கோ ஆனா….. பசங்க வந்து சேரலை என்றார். அதன்பின்பு, மதிய மேட்சில் ஆச்சரியம் நிறைந்தது. அலுவல் கூட்டம் காரணமாக கலந்து கொள்ளாத அந்த மேட்சில் தான் சாயை சாய்த்திருந்தார்கள்.

கரடுமுரடாக ஆட்டம் சென்றதாம், “சும்மா…. ரஃப் அண்ட் டஃபா போய்க்கினே இருந்துச்சு சார். ஒன் ஆல் முடிச்சப்புறம், டை பிரேக்கர்ல நம்ப பசங்க ஐஞ்சையும் தள்ளிட்டானுங்க. அவங்க கோச், கடுப்பாய்ட்டான் சார். போர்டிங் லாட்ஜிங் ஃபிரி டீம்சார் அது. சின்ன பசங்க சார். ஒரு கோல் ஃபர்ஸ்ட்டே போட்டாங்க காத்து கியக்கேர்ந்து வீசிச்சில்ல. ஆனா நாமளும் செகன்ட் ஆஃப்லே போராடி ஒன்டை உள்ளே தள்ளினோம். அதுக்கப்புறம், ஒரே கலவரந்தான் சார்” என்று விளக்கம் அளித்த போதே அவர்களின் கலக்கம் புரிந்தது. அதன்பிறகு டை பிரேக்கர் நடந்தது என்றும், அதில் ஐந்து பேருமே வெற்றிகரமாக கோல் கன்வெர்ட் செய்தனர் என்றும் தெரிந்தது. கல்லூரி காலத்தில் டை-பிரேக்கர் ஒன்றில் கடைசி வாய்ப்பில், “டு த லெஃப்ட் ஆஃப் கோலி”, ரெய்ஸ் செய்து அடித்த பந்தின் நினைவு 1999 முதல் இன்று வரை அப்படியே இருக்கிறது..

மூன்றாவது போட்டி ஆரம்பித்தது.  நிறுவன தலைவரே சென்று விளையாடு என்று அனுமதி அளித்திருந்தார். இடைவேளை வரை ஒன்-ஆல் என்று கூறி எஸ்.எம்.எஸ் செய்திருந்தேன் அவர் உடனே வர வேண்டும். என்று எதிர்பார்ப்பு இருந்ததென்னவோ உண்மைதான். போட்டியில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட சென்னை பொது மக்கள் அணிகள் கலந்து கொண்டிருந்தன. வழக்கம் போல சார்…. ஒரு இராசிக்காக  பர்ஸ்ட்  ஆஃப் வெளியே இருங்க என்று என்னை நிறுத்தியிருந்தாலும்,  என் சந்தேகம் அப்படியே இருந்தது. ஒரு மரியாதை மற்றும் பெருமைக்காகவா? அல்லது திறமைக்காகவா? நம்மை டீமில் வைத்திருக்கின்றார்கள்? அல்லது நாம் விளையாடி, அடிபட்டு நமகெதாவது ஆகிவிடுமோ? அல்லது டீமுக்கெதாவது ஆகிவிடுமோ? என்கின்ற பயத்தில் தான் ஆட விடமாட்டேன் என்கிறார்களோ? என்று சந்தேகம் வந்துவிட்டது.

இரண்டாவது பாதியில் முகப்பேர் கிழக்கு அணிக்கெதிரே இறக்கி விட்டனர். வழக்கம் போல வலது முன்கள  ஆட்டக்காரர் தான் கடைசி பத்து நிமிடம் இருக்கும் போது அவர்கள் ஒரு கோலை எங்களையும், காற்றையும் எதிர்த்தே போட்டுவிட்டனர். கண்கள் இருட்டியது. அந்த சமயத்தில், மேட்சை பார்க்க வருகை புரிந்திருக்கின்ற நிறுவன தலைவரை வரவேற்கின்றோம் என்று மைக்கில் அறிவிப்பு காதுகளில் கத்திக்குத்து மாதிரியே விழுந்தது. அணி அடுத்த ஏழு நிமிடங்களில் இந்த வருட வாய்ப்பை ஊத்தி மூடிக்கொள்ளப்போவது கூட கொடுமையாய் படவில்லை. ஆனால் இவ்வளவு மாதங்களாக வராத பெரியவர் வரும் பொழுது, அந்த நாள் பார்த்தா, இப்படி  நடக்க வேண்டும் என்றபொழுது இனி நேரமில்லை, நாமே புகுந்து ஆட வேண்டும் என்று நினைத்த பொழுது ஒரு இருபது வருடங்கள் வயதில் கர கரவென கரைந்து போனது. இருந்த இடத்திலிருந்து வானில் பறப்பது போல ஒடமுடிந்தது….. எப்படி என இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். மூன்று கார்னர் கிக்குகள் கிடைத்தன. கோலாகவில்லை இன்னொரு கார்னரை எதிர்பக்கத்தில் இருந்து அடிக்க, அதில் பெனால்டி கிடைத்தது.

அந்த நிமிடத்திற்கு முன்புதான் ஆடுகளத்திற்கு மிக அருகில் நாற்காலி ஒன்றில் தலைமை விருந்தினர் கம்பீரமாக வீற்றிருக்க, இராஜனிடம் நேரம் மீதம் எவ்வளவு உள்ளது? என்றேன். இராஜன் உதட்டை பிதுக்கி மூன்றோ இரண்டோ என சைகையால் காட்ட, இதெல்லாம் தொலைக்காட்சியில் தானே பார்த்திருக்கின்றோம். இன்று சந்தோஷத்தையுமா தொலைக்கப் போகின்றோம்? என்று பதட்டம் கூடியது.

அதன் பின்னர் கடைசி நிமிடத்தில் பெனால்டியால் சமனடைந்தது. கால்பந்தில்…. ரெகுலர் டைமில் ஆடி முடிந்ததும் (45-45) நிமிடங்கள், அதன் பிறகு 10-10 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் என்று கொடுப்பார்கள் அதன் பிறகும் கோல் சமமாக இருப்பின், டை – பிரேக்கர் என்கின்ற முறை பின்பற்றப்படுகின்றது.

டை-பிரேக்கரில் ஐந்து ஐந்து பந்துகள் 36 அடி தொலைவிலிருந்து உதைத்து ஐந்து பேரால் இரு அணிகளும் மாறி மாறி ஒவ்வொன்றாக தள்ளப்படும். கோலி அதை தடுப்பார். இதில் வாய்ப்பு முடிவாகும் பொழுது என்னை நடு ஆடுகளத்திற்கு சென்று அங்குள்ள வட்டத்தில் அமருமாறு நடுவர் பணித்தார். முதல் பந்து நம் அணி – கோலாகின்றது. அவர்களும் அப்படியே, இரண்டாம் வாய்ப்பு. நமது டான்னி, எதிரணி கோலியின் கையிலேயே அடித்து விட்டான். ஏற்கனவே ஒரு கோல் சான்ஸையும் மிஸ் பண்ணி இருந்ததால் அவன் மீது எல்லாரும் காண்டானாயினர். இருந்தாலும் சமாதானமாகி விட்றா…. விட்றா…. தண்டன்னா…. மடக்குண்ணா….. என கோலி தண்டபாணியை ஊக்குவித்து… நடுகிரவுண்டை மேலும் பதட்ட இரணகளமாக்காமல் அமைதியாயினர். அதில், ஒருவேளை பதட்டத்தில் நாமும் தவறிழைக்க நேர்ந்தால் என்னவாவது? “என்கின்ற டீம் சைகாலஜி தெரிந்தது”. எதிரணி கன்வர்ட் செய்தது. அடுத்து  மூன்றாம் வாய்ப்பில் இரு அணிகளும்  கோலடிக்க 3-2 என முகப்பேர் முன்னாடி நின்றது. நான்காம் வாய்ப்பில் நாம் அடித்து தண்டபாணி தடுக்க 3-3 என சமனடைய,  நான்காம் வாய்ப்பு முடிந்து கடைசி வாய்ப்பில் நாம் அடித்தாக, வேண்டும்

எமது  அன்பான தலைமை விருந்தினர் வேறு பார்த்துக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்பே தெரியாது, யார் ஐவரோ அதில் நான் இல்லை என்று. சார், நீங்க போங்க என்றனர் கேப்டனும், நண்பர்களும்.

ஐ.ஏ.எஸ் பயிற்சியின் பொழுதும் முடிவாகின்ற டை-பிரேக்கரில் ஒரு கோல் கன்வெர்ட் செய்த அனுபவம் இருந்தது. ராபர்டோ – பேக்கியோ இத்தாலியை சேர்ந்த வீரர் பந்தை வெளியே அடித்து 20 உலகக் கோப்பையை இழந்தது நினைவு வந்தது.

டை-பிரேக்கரை அடுத்து அதிலும் சமம் அடைந்தால் சடன்-டெத் என்ற முறை பின்பற்றலாகும். அதில் அணிக்கு ஒவ்வொரு வாய்ப்பாய் ஏதாவதொரு அணி வெற்றி பெறும் வரை தருவார்கள்.

நடந்தது என்ன?

உடல் வயதாவதை மறந்து போன மந்திர தருணத்தைப் பற்றி மீண்டும் நினைக்கையில் கால்பந்து உருண்டு ஓடியிருப்பதை கவனிக்க முடிந்தது. கால்பந்து காலத்தை வெல்லும் என நம்பிக்கை பிறந்தது. நிலத்தில் விளையாடியதை நீலத்தில் (பேனா / மை) விளையாடிவிடுவதே பதிவு செய்யும் வழியென நினைத்து இக்கட்டுரையால் கால பந்தை உங்களிடத்தில் உதைத்து அனுப்புகின்றேன். விளையாட்டு வெல்லட்டும்!

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்