Home » Cover Story » மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!

 
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!


ஆசிரியர் குழு
Author:

திரு. ஹரிநிவாஸ் ராஜசேகரன்
தாளாளர், விருக்ஷா குளோபல் பள்ளி, திருச்செங்கோடு

“அறிவையும், சுறுசுறுப்பையும் நம்புகிறவர்கள் எப்போதும் மகிழ்ச்சியை உணர்பவர்களாக இருந்து வெற்றியை பெறக்கூடியவர்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கக் கூடியவர்.

• மேலைநாட்டுக் கல்விமுறையினை நம் நாட்டுக் கல்வியில் புகுத்தி பேராற்றல் மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அதற்கேற்பவே செயல்பட்டு வரக்கூடியவர்.

• சமூக நலத்தோடு கல்விப்பணியில் இறங்கி இரண்டு வருடங்களிலேயே நல்லதொரு வளர்ச்சியையும், பிறரின் பாராட்டுதல்களையும் பெற்றிருப்பவர்.

• “பயனுள்ள ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டு அதனை சிறப்புறச் செய்யும்போது தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது” அது இன்று எனக்கு கிடைத்திருக்கிறது எங்கள் விருக்ஷா குளோபல் பள்ளி வாயிலாக என உள்ளம் மகிழ்ந்து, செயலில் உயர்ந்து நிற்பவர் தான் திரு. ஹரிநிவாஸ் ராஜசேகரன் அவர்கள்.

“தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் தளராத தன்னம்பிக்கையை ஊட்டுபவரே தலைவர்” என்ற திரு. ஹரிநிவாஸ் அவர்களை திருச்செங்கோடு வாசகர்வட்டத் தலைவர் JCI. Sen. G. கோவிந்தசாமி அவர்களுடன் நாம் சந்தித்தபோது…

கல்வி நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழக்காரணம்?

ஆரம்ப காலத்தில் செயல்வழிக் கற்றல் (Activity based learning) என்ற கல்வி முறை தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்தது. முன்பெல்லாம் தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மலைவாசஸ்தலங்களில் உள்ள கிருஸ்தவப் பள்ளிகளில் சேர்த்தார்கள். அங்குதான் ஒழுக்கம் நன்றாக கற்றுக்கொடுக்கப்படும் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. என்னுடைய கல்விக்காலம் முழுவதும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் விடுதி சூழலாகவே தான் அமைந்தது.

ஒருமுறை எனது தந்தையிடம், “என்னை ஏன் விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைத்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர், “நமது ஊரில் அதுபோன்ற கல்வி நிறுவனங்களே இல்லை” என்று கூறினார். அப்பொழுதுதான் நமது ஊரிலும் சர்வதேச அளவிலான கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த “விருக்ஷா குளோபல் பள்ளி”.

நீங்கள் பயின்ற கல்விமுறை பற்றி…

ஏற்காட்டிலுள்ள மாண்போர்ட் பள்ளியில் தான் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். பொறியியல் கல்வியை பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி, சத்தியமங்கலத்திலும், எம்.பி.ஏ., எம்.எஸ். படித்தது கார்டிஃப் பல்கலைக்கழகம், பிரிட்டனிலும் (Cardiff University, UK) படித்தேன்.

பொறியியல் படிப்பை முடித்த நீங்கள் தொழில் சார்ந்து செல்லாமல் ‘கல்விச் சேவையில்’ ஈடுபாடு ஆச்சரியம் தருகிறதே?

எம்.பி.ஏ. தான் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆனால் பள்ளிக்கல்வி முடிந்தவுடன் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சொல்லிப் பெரியவர்கள் அறிவுரை கூறினார்கள். அதன்படியே பொறியியல் பாடம் படித்தேன். ஆர்வம் இல்லாமல் சேர்ந்தாலும் வெற்றிகரமாகவே பட்டம் பெற்றேன்.

அதன்பிறகு என்னுடைய எம்.பி.ஏ. ஆசையை நிறைவேற்றினேன். எனது தாத்தா, அப்பா என்று வழிவழியாக பிஸினஸ் செய்துவந்தார்கள். எனவே நானும் பிஸினஸ் செய்வதற்கு எம்.பி.ஏ. துணையாக இருக்கும் என்று எண்ணி எம்.பி.ஏ. படித்து முடித்தேன். வெளிநாட்டில் நான் கற்றகல்வியை, நமது ஊரிலும் வருங்கால மாணவர்களுக்கு சிறந்த முறையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த கல்வி நிறுவனம். வெறும் கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல் தரம் வாய்ந்த, புதுமையான கண்ணோட்டத்தில் இக்கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

வெளிநாடுகளில் படிக்கும் பொறியியல் சார்ந்த தொழில் நுட்பபடிப்புக்கும், இங்கு படிக்கும் பொறியியல் படிப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து?

கல்விமுறையில் எல்லாமே வேறுபாடாகத்தான் இருக்கிறது. நமது நாட்டில் படிப்பு என்பது புத்தகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் பாடத்திட்டங்கள் அனைத்தும் செய்முறைப் பயிற்சிகளாக செய்து காண்பிக்கப்படுகின்றன.

இங்கு கல்லூரி படித்த பிறகு தான் எம்.பி.ஏ. படிப்பை படிக்க முடியும். ஆனால் அங்கு பள்ளிக்கல்வி முடித்தவுடனே மேலாண்மை சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதனால் இளம் வயதிலேயே மற்றவர்களோடு இணைந்து வேலை செய்யும் ஆற்றலையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள். எல்லாத் துறைகளிலும் நமக்கும், அவர்களுக்கும் வயது வேறுபாடும் இருக்கும். அங்கு பள்ளிக்கல்வியிலேயே மேலாண்மை சார்ந்த நுணுக்கங்களையும் உடன் கற்றுக் கொடுக்கிறார்கள். அதுமாதிரியான கல்வி முறைகள் இன்று வரையிலும் நமது நாட்டில் இல்லை என்றே சொல்லலாம்.

கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வந்தால் தொழில்நுட்ப மேலாண்மையில் நிச்சயம் நம்மாலும் சாதிக்க முடியும்.

வெளிநாடுகளில் கல்விபயின்றதால் இம்மாதிரியான கல்வி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு ஒருவேளை நமது நாட்டில் பயின்றிருந்தால் கல்விமுறை மாற்றம் பற்றிய சிந்தனை வந்திருக்கக் கூடுமா?

ஒருவேளை இங்கேயே படித்து கல்விநிறுவனத்தைத் தொடங்கியிருந்தால் கல்வி முறையில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் நிச்சயம் தோன்றியிருக்காது. அந்நாட்டுக் கல்வியால் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் நம் வருங்கால தலைமுறைக்கும் வரவேண்டும் என்றுதன் அடிப்படையில் தான் அம்மாதிரியான கல்விமுறையை வரவேற்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்.

எனது முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவு நன்றாக உள்ளது. வாழ்க்கையில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்கு இருக்கிறது. முன்னேற்றம் அடைய எது சிறந்த வழி என்பதைத் தேர்ந்தெடுத்து நன்முறையில் வழிநடத்த வேண்டும் என்பதைப் பிறவிப்பயனாகக் கருதுகிறேன்.

மாறுபட்ட கல்விமுறையைக் கொடுக்க வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்திற்குக் கிடைத்த ஒத்துழைப்பு குறித்து?

வெளிநாட்டுக் கல்விக்கு நிகராக நமது கல்விமுறையும் வரவேண்டும் என்பதே என் முதன்மையான நோக்கமாக அமைந்தபோது அப்படிப்பட்ட கல்விமுறையை கிராமப் புறங்களில் வளரும் குழந்தைகள் பெற்று சிறந்த கல்வியையும், ஒழுக்க நெறிகளையும் பெறவேண்டும் என்று எண்ணினேன். அதற்காக, ஒரு கல்வி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று செயல்பட்டேன். முதலில் ஒரு கல்விநிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றால் அதிலுள்ள பிரச்சனைகளைப் புரிந்து தெளிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டேன்.

நான் ஒரு கல்வி நிலையத்தைத் தொடங்கலாம் என இருக்கிறேன் என்று என் பெற்றோர்களிடம் கூறினேன். ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றால் 50 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்த வயதில் கல்வி நிலையத்தைத் தொடங்கினால் உன்னால் வெற்றி பெறமுடியுமா? என்று கேட்டார்கள். எனது வயது அவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் என் மேல் நம்பிக்கை வைத்து இதற்கு அனுமதி கொடுத்தார்கள்.

அவர்களது பயமே எனக்கு உந்துசக்தியாக இருந்தது. மிகவும் கவனமாகவும், துல்லியமாகவும் புதிய முயற்சிகள் மூலம் இப்பள்ளி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் எனது குடும்பத்தின் வலிமையான ஒத்துழைப்பு தான்.

பணி ஓய்வு பெற்றவர்கள் ஒரு பள்ளியை தொடங்குவதற்கும், உங்களைப் போன்று இளம் வயதினர் ஒரு பள்ளியை தொடங்குவதற்கும் உள்ள வேறுபாடுகளாக தாங்கள் நினைப்பது?

ஒரு ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்குகின்றார் என்றால், தங்களின் கல்வி வாழ்க்கையின் அனுபவத்தில் என்ன கற்றுக்கொண்டாரோ அதன் அடிப்படையில் தான் கல்வி நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்வார்.

புதுமையான கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றஆர்வம் அவர்களுக்குள் இருந்தாலும், அதைச் செயல்முறைப்படுத்துவதில் தயக்கம் இருக்கும். மாற்றங்கள் என்று பார்த்தால் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மேலாண்மை படிப்பு என்று மட்டும் சொல்லவில்லை, எந்த படிப்பு படித்தாலும் அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் போதும்.

நான் வெளிநாட்டில் படித்ததால் அங்குள்ள கல்விமுறை எப்படி இருக்கிறது, அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் எது மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும், அதை கவனமாக கையாள்வது எப்படி போன்ற முறைகளை நன்றாகத் தெரிந்து கொண்டேன். அங்கு செய்முறைப் பயிற்சியாக ஏதேனும் ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான தலைப்புகளை முதலில் கொடுத்துவிடுவார்கள். அதைச் சரிப்படுத்த எப்படியான முயற்சிகளை மேற்கொண்டீர்கள்? ஏன் அப்படிச் செய்தீர்கள்? அதனால் என்ன பயன்? என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கும் திறம்பட பதிலை சமர்ப்பிக்க வேண்டும். அம்மாதிரியான பயிற்சிகள் தான் எனக்கு இன்று பெரிதும் துணையாக நிற்கின்றது என்று நான் நம்புகிறேன்.

இந்தக் கல்விநிலையத்தை நடத்துவதில் உங்களது துணைவியாரின் பங்களிப்பு பற்றி?

இந்த நிறுவனத்தைப் பற்றிய ஆலோசனைகளானாலும் சரி, பிற முயற்சிகளில் ஈடுபடும் பொழுது கொடுக்கும் ஆலோசனைகளானாலும் சரி எனக்கு மிகுந்த உறுதுணையாக என் துணைவியார் திருமதி. நிவேதா இருக்கிறார். அடிப்படையில் அவரும் மேலாண்மைக் கல்வியைக் கற்றிருப்பதால், இந்நிறுவனத்தின் சரிநிகர் வேலைகளில் அவரும் பொறுப்பேற்றிருக்கிறார்.

எதையும் நன்கு ஆராய்ந்து செயல்படக் கூடியவர். எது சரி, எது தவறு என்று இனம்கண்டு தகுந்த முறையில் சரிப்படுத்தக்கூடிய ஆற்றல் உடையவர்.

ஏதேனும் புதிய முயற்சியை மேற்கொள்ளப் போகிறேன் என்று சொன்னால், நேர்மறையான கருத்துக்களைக் கூறி நல்ல ஊக்கம் கொடுப்பார். எந்த ஒரு செயலையும் அர்ப்பணிப்புடன் செய்யும் திறன் பெற்றவர்.

வெளிநாட்டில் கல்விபெற்று தாய்நாடு திரும்புபவர்களின் எண்ணம் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றேபெரும்பாலும் இருக்கிறது. அதற்குக் காரணம் என்று நீங்கள் கருதுவது?

படித்தது மேலாண்மைக்கல்வி. எனவே மேலாண்மை சார்ந்த தொழிலைச் செய்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். எனது குடும்பத்தில் எனது அப்பாவும், தாத்தாவும் அவரவர் காலத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு தொழிலைச் செய்து வந்தார்கள்.

அவர்கள் செய்த தொழிலை நானும் மேற்கொண்டிருந்தால் தொழில் வேண்டுமென்றால் நல்ல முன்னேற்றம் இருந்திருக்கும். அந்த தொழிலை இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெறச் செய்திருக்க முடியும். ஆனால் மாற்றம் என்று பார்த்தால் எதுவும் இருந்திருக்காது. ஆனால் கல்வி என்பது களிமண் போன்று, நாம் எதை மனதில் எண்ணி செய்தாலும் அதற்கு உருவத்தைக் கொடுத்துவிடலாம் என்பதே என் கருத்து. தரமான கல்வி கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது வேறொன்றும் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

எதிர்கால தலைமுறைக்கு நன்முறைக் கல்வி கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிறைய குழந்தைகளின் வாழ்க்கை ஒரு உயர்தரத்தை அடையவேண்டும் என்று விரும்பியே நான் இந்தக் கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தேன். மிகுந்த முயற்சிகளுடன் ஆரம்பித்திருக்கிறேன். குழந்தைகளுக்கும் நல்ல கல்வியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பது என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

விரும்பிய பணியை விருப்பத்துடன் செய்யும் போது அது எந்தத் தொழிலாக இருந்தாலும் கிடைக்கின்ற திருப்தி, அப்பணியை மேலும் சிறக்கச் செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

இப்படி பல புதுமைகளைக் கல்வியில் கொண்டுவந்துள்ளதால் எதிர்காலத்தில் எந்த மாதிரியான மாற்றங்கள் மாணவர்களிடையே ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு புத்தகத்தை ஒரு மாணவனிடம் படிக்கச் சொல்லி ஒரு ஆசிரியர் கொடுக்கிறார். அந்த மாணவனும் அதைப்படித்து அப்பொழுதே மறந்துவிடுகிறான். இதனால் அந்த மாணவனுக்கோ, ஆசிரியருக்கோ எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை. இம்மாதிரியான கல்வி முறையால் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது என்பதை நன்றாக உணரமுடிகிறது.

இதனால் கல்வித்திட்டத்தில் நிச்சயம் மாற்றம் தேவைப்படுகிறது. வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் கல்வியைக் கொடுத்தால் அக்கல்வி வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படும்.

இந்த மாதிரியான புதுமையான கல்விமுறைகளை நகர்ப்புறங்களில் கற்றுக் கொடுப்பதற்கும், கிராமப்புறங்களில் கற்றுக்கொடுப்பதற்கும் ஏதேனும் மாற்றம் உண்டாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

புதிய கல்விமுறைகளை கிராமப்புறபெற்றோர்களை விட நகர்ப்புறபெற்றோர்கள் மிகவும் எளிதாக புரிந்துகொள்வார்கள். கிராமப்புற பெற்றோர்களிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறிது கடினம் தான். அவர்களும் புரிந்துகொள்வார்கள். புரியவைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். நடைமுறையில் நல்ல மதிப்பெண் பெறுவதை வைத்து ஒரு மாணவனின் திறமைகளைக் கணக்கிட முடியாது. அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எது தேவையோ, அதை இந்த கல்வி நிறுவனத்தில் கொடுக்கிறோம் என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எந்தமாதிரியான ஊக்குவிப்புகளைக் கொடுக்கிறீர்கள்?

ஒரு பள்ளியை நன்றாக நடத்துவதற்குத் தேவை ஆசிரியர்களின் மேலான பங்களிப்பு  முக்கியமாகும். ஒவ்வொரு ஆசிரியரும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும், மனநிறைவுடனும் தனது பணியைச் செம்மையாக செய்ய வேண்டும். ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுப்பதில் தனித்திறன் இயல்பாகவே இருக்கும். அதில் நிறுவனம் சார்பாக எந்தவித தடையும் போடுவதில்லை. கல்வி கற்றுக்கொடுப்பதில் முழுச்சுதந்திரமும் ஆசிரியர்களுடையதாகவே இருக்க விரும்புகிறேன். ஆசிரியரும், மாணவரும் இணைந்து செயல்பட்டால் தான் கல்வி கற்றல் இனிமையாக இருக்கம் என்பது என் கருத்து.

வளர்ந்துவரும் காலத்தில் பாடத்திட்டத்தில் நிறைய மாறுதல்கள் நடைபெற்று வருகின்றன? அதுபற்றிய உங்கள் கருத்து?

இங்குள்ள அதிகமானவர்களின் கருத்து என்னவென்றால் CBSE கல்வி முறையும், ICSE கல்வி முறையும் தான் உயர்ந்த கல்விமுறை என்று எண்ணுகிறார்கள். அதை மட்டுமே சார்ந்த கல்வியைப் பெறவேண்டும் என்று எண்ணுவது தவறானது என்று நான் கருதுகிறேன். ஒரு பாடத்திட்டம் என்றால் அதற்குள் தான் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர அதுமட்டும் தான் நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை.

இந்த பள்ளியின் பாடத்திட்டத்தில் வயதிற்கு ஏற்றாற்போல் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. எப்படி சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் பாடங்களைப் படிப்பது என்பது மாணவர்களுக்கு இனிமையாக இருக்கும்படி செய்ய வேண்டும். பள்ளிக்கு வருவதற்கு அவர்களாகவே விரும்ப வேண்டும். மற்றவர்களின் கட்டாயத்திற்காக பள்ளிக்கு வந்தோமே, பாடங்களைப் படிக்க வேண்டுமே என்று வேண்டா வெறுப்புடன் பாடத்தைப் படிக்கக் கூடாது. எந்த மாதிரியான மாறுதல்களை மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அம்மாற்றங்களைக் கல்விமுறையில் கொண்டு வரலாம்.

பெருகிவரும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

எந்தவொரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படையாக அமைவது பள்ளிக்கல்வி தான். ஒரு மாணவனுக்கு பள்ளிக்கல்வியில் பெறும் அறிவைப் பொறுத்துதான் அவனது எதிர்கால வாழ்க்கை அமையும். இதனால் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகுவதை வரவேற்கும் காலம் இது.

உங்களது கல்விமுறையை மாணவர்களின் பெற்றோர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள்?

எங்கள் பள்ளி தொடங்கி இந்த இரண்டு ஆண்டுகளிலேயே பெரும்பாலான பெற்றோர்களின் நல்லாதரவை இப்பள்ளி பெற்றிருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களை மட்டுமல்லாமல் பெற்றோர்களையும் இந்த கல்வி முறை பெரிதும் கவர்ந்திருக்கிறது. எங்களது பள்ளியில் மாதம் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும். அதில் கலந்துகொள்ளும் பெற்றோர்களின் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்கள் சொல்லும் மாற்றங்களும் ஏற்புடையதாக இருந்தால் அக்கருத்துகளுக்கு முன்மரியாதை கொடுத்து நிறுவனத்தின் சார்பில் அவை நிறைவேற்றப்படும்.

எதிர்காலத்திட்டம் குறித்து?

இந்நிறுவனம் தொடங்கி இரண்டாண்டுகள் மட்டுமே ஆகிறது. ஆனால் அடையும் பலன் பல ஆண்டுகள் நிலைத்திருப்பதைப் போல் உணர்கிறேன். எங்களுடைய புதிய முயற்சிகள் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. இதுவே பள்ளியின் வெற்றியாக கருதுகிறேன்.

சிலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள், “உங்களது பள்ளிக் கல்வி மற்றபள்ளிகளையும் விட வித்தியாசமான முறையில் நடக்கிறது” என்று. இம்மாதிரியான உந்துதல்கள் என்னை மேலும் பணியை ஈடுபாட்டுடன் செய்ய வைக்கிறது. இன்னமும் சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருக்கிறது.

படிப்புடன் சேர்த்து விளையாட்டும், மற்றபயனுள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுவந்துள்ளோம். இப்பொழுது வளாகத்தில் நீச்சல் குளம், டென்னிஸ் அரங்கம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.

இப்பொழுது எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடனடியாக மேற்படிப்பு தொடங்கலாம் என்று யோசித்தது கிடையாது. உயர ஏறும்பொழுது வேகமாக ஏறுவதை விட, நிதானமாக, சரியாக ஏறவேண்டும் என்பது தான் முக்கியம்.

ஒவ்வொரு ஆண்டாக மேற்படிப்பை கொண்டு வந்தாலும் சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். ஒரே அடியாக எல்லாம் செய்து பிறகு தடுமாற்றம் கொள்ளக்கூடாது என்பதிலும் உறுதியுடன் இருக்கிறேன்.

குடும்பப் பின்னணி பற்றி?

எனது அப்பா திரு. ராஜசேகரன், அம்மா திருமதி. மாலதி ராஜசேகரன், எனது மனைவி திருமதி. நிவேதா. பிரேம் நிவாஸ் என் சகோதரர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு தற்பொழுது எம்.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது உங்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். முதலில் எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதை நோக்கியே மனதையும், செயலையும் செயல்படுத்துங்கள். வாழ்க்கையில் முயற்சி அவசியம். நிச்சயம் வெற்றி கிடைக்கப்பெறும்.

சாதிக்க நினைக்கும் ஒருவருக்கு அறிவைவிட ஆர்வம் மிக முக்கியம். அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். முயற்சி செய்யும்போது சில தடைகள் வரும். அவற்றைத் தடைக்கற்களாக கருதாமல் நம் முன்னேற்றப் பாதையின் படிகளாக நினைத்து முயன்றால் லட்சியத்தை அடைந்துவிடலாம்.

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்