– 2014 – February | தன்னம்பிக்கை

Home » 2014 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  அன்பிருந்தால் துன்பமில்லை

  மனித குலம் வேட்டைச் சமூக நிலையில் இருந்து, என்றைக்கு வேளாண்மை சமூகத்திற்கு அடி எடுத்து வைத்ததோ அன்றே அன்பின் ஆணிவேர் தோன்றத் தொடங்கிவிட்டது. அன்பிருக்கும் அகத்திலிருந்து தான் ஒருமை உணர்வு தோன்றி, அது மனித நேயமாய் மலர்ந்து, மனதில் தூய மகிழ்வை பிறசிவிக்கும் என்கின்ற பேருண்மை நம் சங்க காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டது. சான்றாக, குளிரில் நடுங்கிய கோல மயிலுக்கு தான் போர்த்தி இருந்த போர்வையை எடுத்து போர்த்தி அழகு பார்த்த பேகனை மறக்க முடியுமா? தேரில் வந்த பாரி, பற்றி படற ஒரு கொம்பில்லாது தரையில் கிடந்து வாடும் முல்லைக் கொடிக்கு தன் தேரையே பற்றிப்படறக் கொடுத்து மகிழ்ந்ததைத் தான் மறக்க முடியுமா? என்றும் காண முடிகிறது.

  இப்படி எத்தனையோ நிகழ்வுகள் கண்டவுடன், கைமாறு கருதாது வெளிப்பட்டது தூய அன்பினால் தானே. இத்தகைய தூய அன்பிற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. காட்டாற்று வெள்ளம் போல அது கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும். அப்படி எதையும் எதிர்பாராமல் வருவது தான் அன்பு. சுருங்கச் சொன்னால், நம்மைச் சூழ்ந்துள்ள உயிர்கள் துன்புறும்போது, நம்மையறியாமலே நாம் அத்துன்பத்தைக் களைய எடுக்கும் முயற்சி தான் தூய அன்பு. இந்த அன்பு இரக்கம் சுறக்கும் ஈர இதயத்தில் இருந்து வெளிப்படும் உன்னத உணர்வாகும்.

  அன்பே அண்டசராசரத்தின் அடையாளம் என்றால் அது மிகையாகாது. இன்றும், அண்டத்திலுள்ள கோள்கள் ஒன்றையொன்று துன்புறுத்தாது, ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு சீராக இயங்கக் காரணம் அன்பு தான். அன்பில்லை என்றால் என்றைக்கோ இந்த உலகம் சின்னாபின்னமாகிச் சீரிழந்து போயிருக்கும்.

  அன்பென்ற ஒன்று இல்லாத இடத்தில் எதுவுமே இருக்காது. என் சுகத்தில் எனக்கிருக்கும் இன்பத்தின் காரணமாகவே நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பர் பலர். பிறர் சுகத்தில் எனக்கிருக்கும் இன்பத்தின் காரணமாகவே நான் இயங்குகின்றேன் என்பர் சிலர்.இதில் முதலாவதான இன்பம் எல்லை மீறினால் அது மூர்க்கத்தனமாகி விடுகின்றது. இரண்டாவது, இன்பம் எல்லை மீறினால் அது தெய்வத் தன்மை உடையதாகிவிடுகின்றது. இரண்டு நிலையும்  விடுத்து சமநிலையில் வெளிப்படும்போது அது சாதாரண மனிதநேயமாக உருவெடுத்துவிடுகின்றது. இன்று நாம் இறைநிலைக்குச் செல்லாவிட்டாலும், சாதாரண மனித நிலையிலாவது மையங் கொள்ளலாமே.

  “நம்மையறியாமலே நாம் அத்துன்பத்தைக் களைய எடுக்கும்

  முயற்சி தான் தூய அன்பு”

  அன்புடைய மனத்தால் ஒருபோதும் சுயநலமாய் இயங்க முடியவே முடியாது. சமூகத்தின் சகலவிதமான பிணிக்கும் அருமருந்தாக இருப்பது அன்பு மட்டுமே. ஆகையினால் தான் திருமூலர்,

  அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

  அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

  அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

  அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே!

  என்றார். இது மட்டுமா, அன்பிருந்தால் தான் பிறர் துயர் கண்டு துடிக்கும் உணர்வு உருவாகும் என்றார் வடலூர் வள்ளலார்.

      வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

      வாடினேன் பசியினால் இளைத்தே

  வீடு தோறிரந்தும் பசியறாது அயர்ந்த

  வெறற்றரைக் கண்டுள்ளம் பதைத்தேன்

  என்று நெஞ்சுறுக நினைத்து பாடினார் என்றால் பாருங்களேன்.

  இன்று நாம் சக உயிர்கள் குறித்த சிந்தனை ஏதுமின்றி சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றோமே அது எதற்கு! தர்மம் செய்யும் அறச்சிந்தனை இந்த மண்ணிலே ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்கின்ற விழிப்பு கூட இல்லாதது வருந்தத்தக்கதே. மகிழ்வை, சந்தோசத்தை, சர்வ மங்கலத்தை கொடுக்கும் மனதை, புத்தம் புது மலராய் மலரச் செய்யும் அன்பை நோக்கி பயணிக்கச் செய்வோமா இனியாவது. அன்பை நாம் வழியச் சென்று வாரிவாரி வழங்குவோம், வாருங்கள்! அன்பின் வெளிப்பாடு எத்தனை விதத்தில் இருக்கின்றது…

      “செல்வந்தன் ஏழைகள் மீது செலுத்தும்

       அன்பிற்கு பெயர்  இரக்கம்!

       பலம் படைத்தான் நோஞ்சான்

       மீது காட்டும்

       அன்பிற்கு பெயர்  கருணை!

       புல் முதல் மனிதப் புழு வரை

       எல்லா உயிரிடத்திலும் செலுத்தும்

      அன்பிற்குப் பெயர்  காரூண்யம்!

      தொழிலாளி மீது முதலாளி காட்டும்

      அன்பிற்குப் பெயர்  மனிதாபிமானம்!

      முதலாளி மீது தொழிலாளி வைக்கும்

      அன்பிற்குப் பெயர் – விசுவாசம்!

      தாய் பிள்ளை மீதும், பிள்ளை

      தாய் மீதும் காட்டும்

      அன்பிற்குப் பெயர்  தாய்ப்பாசம்!

      நண்பர்களுக்கிடையே ஏற்படும்

      அன்பிற்குப் பெயர்  நேசம்!

      நாடு, மொழி மீது நாம் காட்டும்

      அன்பிற்குப் பெயர்  அபிமானம்!

      கணவன் மனைவியிடமும்,

      மனைவி கணவனிடமும் செலுத்தும்

      அன்பிற்குப் பெயர்  காதல்!

      கடவுள் மீது அனைவரும் செலுத்தும்

      அன்பிற்குப் பெயர்  பக்தி!

  அன்பானவர்களே! இன்னும் எத்தனை எத்தனையோ அன்பின் வெளிப்பாடுகள் இருக்க, என்னிடத்தில் என்ன இருக்கு, மற்றவருக்கு உதவுவதற்கு, என்னால் அன்பை வெளிப்படுத்த இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

   உயிர்களிடத்தில் காட்டும் உள்ளார்ந்த அன்பு மட்டும் உங்களுக்குள்ளிருந்தால் போதும். ஒன்றென்ன, ஓராயிரம் அன்பின் வெளிப்பாடு உங்களிடம் இருந்து நிச்சயம் வெளிப்படும்.

  “அன்பே சிவம்; அன்பே சிவம்!”

  இந்த மாத இதழை

  வெற்றி நிச்சயம்-2

  “வெற்றி என்பது எண்ணத்தை பொறுத்து அமைகிறது”.

  என்பது மாவீரன் நெப்போலியன் வாக்கு ஆகும்.

  ஒருவரது வெற்றிக்கு பலர் துணையாக நின்றாலும், அவரது எண்ணங்களும், செயல்களும் தான் அவரின் வெற்றிக்கு பெருமளவில் பக்கபலமாக அமைகிறது. இதனால் ஒருவரது எண்ணங்களையும், செயல்களையும் சீராக்கி நெறிப்படுத்த இளம்வயதிலேயே பழகிக்கொள்வது அவசியமாகும்.

  நல்ல எண்ணங்களை இளம்வயதில் உருவாக்க விரும்புபவர்கள் தங்கள் “வாழ்வின் குறிக்கோள்” (Life Goal) எனப்படும் நோக்கத்தை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெற்றியுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு வாழ்க்கை முழுவதும் எந்தத் தொழிலில் அல்லது வேலையில் ஈடுபட வேண்டும் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

  சிலருக்கு எதிர்காலத்தில் தான் ஒரு வழக்கறிஞராக மாறவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்னும்சிலர் தொழிலதிபராக மாற விரும்புவார்கள். வேறுசிலர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட அதிக விருப்பமுடன் இருப்பார்கள். எதிர்காலத்தில் கூலி தொழிலாளியாக இருந்தால்போதும் என்றுகூட சிலர் எண்ணுவது உண்டு. டாக்டராகி மருத்துவ சேவை புரியவும் சிலருக்கு ஆசை இருக்கும். விஞ்ஞானி ஆகி புதியபுதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்த சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்றும் சிலர் விரும்புவது உண்டு. அரசியல்வாதியாக வலம் வரவும் ஆர்வம் அதிகமாகக் கொண்டவர்களும் உண்டு. இப்படி, ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு வெற்றிபெற ஒவ்வொருவருக்கும் ஆசைகள் இருப்பதுண்டு.

  பொறியியல், மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், வேளாண்மை, உடற்கல்வி, ஆடிட்டிங், ஆசிரியர் பணி போன்ற துறைகளில் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்த பின்பு அந்தத் துறையில் வெற்றிபெற்று, சிறந்து விளங்குவது எப்படி? என்பது பற்றிய எண்ணத்தை நாள்தோறும் வளர்த்துக் கொண்டே வரவேண்டும்.

  “மூட்டை தூக்குவதை வேலையாகக் கொண்டிருந்தாலும், அந்த வேலையில் சிறந்து விளங்கி ‘சிறந்த மூட்டை தூக்குபவராக’ மாறுவது எப்படி?” என்பது பற்றி சிந்தித்து தகுதிகளையும், திறமைகளையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் தெளிவான சிந்தனையையும் சிறப்பான வெற்றியையும் பெற இஸ்லும்.

  வாழ்க்கையில் குறிக்கோளை நிர்ணயித்த பின்புதான் அதனை பற்றிய எண்ணங்கள் அதிகமாகும். “எந்தத் துறையில் வெற்றி பெறவேண்டும்?” என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த துறைசார்ந்த நல்ல மனிதர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், அந்த துறைசார்ந்த நண்பர்களிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த துறை பற்றி அடிக்கடி கலந்துரையாடி, அந்தத் துறையை பற்றிய அதிக தகவல்களையும் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது நோக்கத்தை அடைவதற்குத் தேவையான திறன்கள் (Skills) உங்களிடம் இருக்கிறதா? என்பதையும் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதற்குத் தேவையான திறன்கள் இல்லையென்றால் அந்த திறன்களை பெறுவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்து அதனை பெற ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.

  நல்ல நம்பிக்கையோடுகூடிய தன்னம்பிக்கைக் கொண்டவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை படைக்கிறார்கள். இவர்கள்தான் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

  நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் முன்னேறியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் “சாதாரண நிலையிலிருந்த இவர்கள் இப்படி பெரிய அளவில் புகழ்பெற்று விட்டார்களே!” என்று பொறாமைப்படுவதற்குப் பதிலாக, அவர்களது எந்தெந்த குணங்கள் அல்லது திறன்கள் அவர்களை வெற்றியை நோக்கி நகர வைத்தது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

  வெற்றி பெற்ற மனிதர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால், அவர்களது அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடங்களாக அமையும். எத்தனை விதமான வெற்றிகளையும், தோல்விகளையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகப் புரியும்.

  “வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாக அமைவார்கள்” என்பதை உணர்ந்து கொண்டால் இளைஞர்களுக்கும், முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பெரியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வழிகாட்டியாக அமையும்.

  புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பை கண்டுபிடித்தவர். “’டங்ஸ்டன்’ என்னும் மெல்லிய இலையை பயன்படுத்தி மின்சார பல்பை ஒளிரச்செய்ய முடியும்” என்பதை உலகுக்கு உணர்த்திய அறிவியல் அறிஞர் இவர்தான். மின்சார பல்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஏராளமான பரிசோதனைகளை செய்தார் எடிசன். முதலில், கம்பிகளை இணைப்பதற்கு டங்ஸ்டனுக்குப்பதில் சின்னசின்ன கம்பிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். வேறு உலோகங்களாலான இலைகளையும் பயன்படுத்தினார். சுமார் 1000 முறை பல்வேறு சோதனைகள் செய்தபின்பும், அவரால் வெற்றிகாண முடியவில்லை. இருந்தபின்பும், முயற்சியைத் தளரவிடாமல் பல்பை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். முடிவில் மின்சார பல்பை கண்டுபிடித்தார்.

  இவரை சந்தித்த நண்பர்கள் பலர் இவரது வெற்றியைப் பாராட்டினார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் எடிசனிடம் “நீங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளைச் செய்து முடிவில்தான் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 1000 முறை தோற்றபோது உங்களது மனம் மிகவும் வருத்தப்பட்டிருக்கும். தோல்விகள் உங்கள் முயற்சிகளை தடை செய்திருக்கும் அல்லவா?” என்று கேட்டார்.

  தாமஸ் ஆல்வா எடிசன் சிரித்துக்கொண்டே அந்த நண்பருக்குப் பதில் தந்தார்.

  “நான் எனது தோல்விகளைப்பற்றி கவலைப்படவேயில்லை. எனது சோதனைகள் தோல்வியடையும் போதெல்லாம் நான் ஒரு சோதனையை எப்படி செய்யக்கூடாது? என்பதை அறிந்துகொண்டேன். அந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். அந்தத் தோல்விகள்தான் எனக்கு தொடர்ந்து முயற்சி செய்யும் சக்தியைத் தந்தன. இப்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன்” என்று பதில் தந்தார்.

  தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை இன்றைய இளைய உள்ளங்களுக்கு நிச்சயம் பாடமாக அமையும்.

  தோல்விகள் வருகின்றபொழுது அந்தத் தோல்விகளுக்கான காரணங்களையும் அறிந்துகொள்வது நல்லது.

  அறிவியல் அறிஞர்கள், சாதனையாளர்கள், புகழ்பெற்றபெரியவர்கள் என பல்வேறு சிறப்புப் பெற்ற அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கிய புத்தகங்களை படிப்பதன் மூலம் அவர்கள் சந்தித்த சோதனைகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

  புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது. வாசிப்பதை, சுவாசிப்பதுபோல நேசித்தவர்கள், வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். அறிவின் வளர்ச்சிக்கும், எண்ணங்களின் நேர்மையான எழுச்சிக்கும் புத்தகத்தை வாசிப்பது அடிப்படையாக அமைகிறது.

  தான் தேர்ந்தெடுத்தக் குறிக்கோள் அல்லது நோக்கத்தை அடைய விரும்புபவர்கள் அந்தத் துறையோடு இணைந்த குழுக்கள் (Groups), மன்றங்கள் (Associations), இயக்கங்கள் (Movements) ஆகியவற்றோடு இணைந்து செயல்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். சரியான நேரம் வரும்போது அந்த அமைப்புகளோடு உங்களை இணைத்துக்கொண்டால், உங்கள் வாழ்வில் குறிக்கோள் சம்பந்தப்பட்ட தகவல்களை அந்த அமைப்பிலுள்ள அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். மேலும், அவர்கள் வழங்கும் “அனுபவ வழிகாட்டல்கள்” உங்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

  ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக அல்லது நோக்கத்திற்காக செயல்படுபவர்கள் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு (Hobby) ஒன்றைகண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வீட்டுத் தோட்டம் அமைத்தல், விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், இசை கேட்டல், தையல் வேலை, புத்தகம் படித்தல் போன்ற “ஓய்வுநேர செயல்கள்” கூட பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய செயலாக மாறும்போது அது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். மேலும் மனநிறைவையும் உருவாக்கும். எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு உதவும் வகையில் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கை அமைத்துக்கொள்வது நல்லது.

  இவைதவிர, வெவ்வேறு சூழல்கள் அமைந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பள்ளி-கல்லூரிகளில் பயிலும்போது நாடகங்களில் பங்குபெறுதல், ஓவியப் போட்டியில் இடம்பெறுதல், விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுதல், நடனங்களில் ஈடுபடுதல் போன்றவைகளெல்லாம் வெவ்வேறு சூழல்களை ஏற்படுத்தித்தரும். இந்த சூழல்களில் பங்குபெறும்போது பல்வேறு அனுபவங்களை இளம் வயதிலேயே பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் வெவ்வேறு சூழல்களில் எவ்வாறு பங்குபெறுவது என்கின்றமன பக்குவம் தானாக வந்து அமையும்.

  “நோக்கம்” எனப்படும் “குறிக்கோள்” தெளிவாக இருந்தால் மட்டுமே ஒருவரால் அந்த நோக்கத்தை அடைவதற்கான பாதையில் செல்ல இயலும். இதனை உணர்ந்து கொண்டவர்களால் வெற்றிப் படிகளில் ஏறி வேகமாக முன்னேற முடியும்.

  வாழ்க்கையில் வெற்றிக்கும், நமக்கும் வெகுதூரம் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் அந்த வெற்றி என்பது தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டவர்கள் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் விரைந்து செயல்படுகிறார்கள். செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளியின் மகனாக பிறந்த ஒருவர் தான் ஹிட்லர். தந்தையோடு இணைந்து கட்டிட வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

  தலையில் செங்கல்களை சுமந்தபடி பல மாடி படிக்கட்டுகளில் ஏறிச்சென்று வேலைசெய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மாடி படிகளில் படியேறுகின்ற பொழுதெல்லாம் “நான் ஒருநாள் மிகச்சிறந்த பிரபலமாக மாறுவேன்” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு நாளும் மாடிப்படிகளில் ஏறும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தார் ஹிட்லர். இந்த நம்பிக்கைதான் ஹிட்லரை உலகம் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக அமைந்தது.

  வெற்றியை குவிக்க விரும்புபவர்கள் வெற்றிமீது தீவிர நம்பிக்கையைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

  இந்த மாத இதழை

  நேர நிர்வாகமும், அதன் மகத்துவமும்

  பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

  நாள்: 14.02.2014 ; வெள்ளிக்கிழமை
  நேரம்: மாலை 6 மணி

  இடம்: M.G.V. மெட்ரிக் பள்ளி (G.V. மஹால் அருகில்)
  திருச்செங்கோடு ரோடு
  பள்ளிபாளையம்

  தலைப்பு: நேர நிர்வாகமும், அதன் மகத்துவமும்

  சிறப்பு பயிற்சியாளர்: திரு. K.S. சண்முகசுந்தரம்
  ஈரோடு
  போன்: 94879 27963

  தொடர்புக்கு:
  தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850
  பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373
  PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

  மெழுகுவர்த்திகளின் அணிவகுப்பு

  சமீபத்தில் எனக்கு தெரிந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் கடன் சுமை தாளாது திடிரென தற்கொலை செய்து கொண்டார். அதனால், அவர் ஆசையாய், பிரியமாய் வளர்த்த செல்லப்பிராணிகளான இளம் பெண் நாய்குட்டியும், குட்டிப் பூனையும் நிராதரவாகி விட்டன. வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டன. மற்ற குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்டன. நாய் கூட பெண் என்பதால் அவர்களுக்கு வளர்க்க பிடிக்கவில்லை போலும். அந்த வீட்டில் எலித் தொல்லை இல்லாததால், குட்டிப் பூனையும் விரட்டப்பட்டது.

  ஆதரவு இழந்த நிலையில், பிரிந்து தனித்தனியே புகலிடம் தேடி பசியுடன் பக்கத்து தெருக்களில் அலைந்தன. அங்கே திரிந்து கொண்டிருந்த மூன்று ஆண் தெருநாய்களின் கண்களில் இளம் பெண் நாய் துரதிர்ஷ்டவசமாக பட்டுவிட்டது. அவ்வளவு தான் இளம் பெண் நாய் சிதைந்துபோனது. புகலிடம் தேடி அலைந்த குட்டிப் பூனையும் அந்த தெரு நாய்களிடம் சிக்கியது.

  மூர்க்கத்தனமாக குட்டிப்பூனையை மூன்று தெருநாய்களும் துரத்தின. நேற்று இரவு உடற்பசி தீர்ந்தபின், வயிற்றுப்பசிக்காக இன்று காலை குட்டிப்பூனையை கொடூரமாக தாக்கத் துவங்கின. குட்டிப்பூனையின் மரண ஓலம் கேட்டு அந்தப்பக்கம் வந்த யாரோ ஒருவர் மூன்று தெருநாய்களையும் விரட்டிவிட்டார்கள். அதற்குள்ளாக நடந்த போராட்டத்தில் குட்டிப் பூனையின் முன்னங்கால் முற்றிலுமாக முறிக்கப்பட்டுவிட்டது. 108-க்கு தகவல் தந்து மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அது மனித இனமில்லையே? அசையாமல், பயத்தில் உறைந்து போயிருந்தது பூனை. பேயறைமீண்டும் விழுந்து விடுமோ என அச்சத்துடனும்;, தாங்க முடியாத கால்வலி வேதனையுடனும், தன் உடலை நகர்த்திக் கொண்டு தெருவொரமாய் ஒதுங்கவே மிகவும் தள்ளாடியது. இப்படி வேதனை தாங்க முடியாமல் துடிப்பதைவிட இறந்து போவதே மேல் என நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.மனிதர்களை பொருத்தவரை பொதுவாகக் கருணைக் கொலைதான் காப்பாற்றமுடியாத போது கடைசி தீர்வு. கருணை என்பது கொலை செய்வதற்கு எதிரானது. கொலை செய்வது என்பது கருணைக்கு எதிரானது. இருப்பினும் முடிவுதான் என்ன? அந்த பூனையை தற்காலிகமாக காப்பாற்றிய அந்த நபர் அலுவலகம் செல்வதற்காக அவ்விடத்தைவிட்டு வெளியேறியதும் யாருடைய எதிர்ப்பும் இல்லாததால் மீண்டும் தாக்குதலை தொடர்ந்தன. தடுத்து நிறுத்த யாருமில்லை. குட்டிப்பூனையின் தலையை ஒரு நாய் ரத்தம் சொட்ட சொட்ட ருசி பார்த்தது. உடலை கிழித்து மற்றநாய்கள் பங்கு போட்டுக் கொண்டன. அக்கம் பக்கத்து வீடுகளில் திருட்டு, கொலை, கற்பழிப்பில் ஈடுபடும் அவைகள் வாலை தூக்கிக் கொண்டு எந்த பயமுமின்றி வலம் வருகின்றன. தங்களால் சிந்தப்பட்ட ரத்தத்திற்கெல்லாம் சரியான விதத்தில் பழி தீர்த்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்பேதுமில்லை என்ற தைரியம். அந்த தெருநாய்கள் நன்றாகவே உள்ளன.

  கடந்த நூற்றாண்டில் உலக வரலாற்றில் உச்சபட்ச கொடுமையான போர்களைத் தூண்டிய ஜெர்மனியும், ஜப்பானும் இன்று பொருளாதார ரீதியாக மிகவும் வளர்ச்சி அடைந்து விட்டன. மனிதகுல சரித்திரத்தில் ஹிட்லர் மேற்கொண்ட யூதப் படுகொலைகளைப் போல, உக்கிரமான இனப் படுகொலைச் சம்பவம் கிடையாது. கிட்டத்தட்ட அறுபது இலட்சம் யூதர்களை மிருகத்தனமாக அவர் கொன்றார். அப்போது யூதர்களை காப்பாற்றபோதுமான முயற்சிகளை மேற்கொள்ளாமல் உலகம் மௌனம் காத்தது. கொன்று குவித்த நாஜிப் படையினர் நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால், மிருகமாக நன்றாக வாழ்வதை விட, மனிதநேயத்துடன் சுமாராக வாழ்வதே மேலானது.

  ஒரு சிறிய நாட்டின்; இராணுவப் படையினரால் கூட இந்த 21-ம் நூற்றாண்டிலும், எந்தவித தண்டனைக்கோ குற்றச்சாட்டுக்கோ ஆளாகாமல் ஈவுயிரக்கமின்றி கொன்று குவிக்க முடிகிறது. கொள்ளையடிக்க முடிகிறது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடமுடிகிறது. சாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் வெறுக்கிறார்கள் இதைப் பார்த்துக் கொண்டு உலகம் பெரும்பாலும் மௌனமாக இருக்கிறது. இன்று வளர்ந்து நிற்கும்  வல்லரசு நாடுகளில் ஒன்று ஒரேயொரு தவறைச் செய்தாலும், மனித இனம்  காணாமல்  போய் விடும். கடந்த நூற்றாண்டுதான் மனித வரலாற்றில் உச்சபட்ச வன்முறை நிறைந்த நூற்றாண்டு. உலகப்போர்கள், உள்நாட்டுப் போர்கள். மதம்சார்ந்த போர்கள், இனக் குழுக்கிடையேயான போர்கள்…… இன்னும் எத்தனையெத்தனையோ பட்டியலிட்டு மாளாது.

  19-ம் நூற்றாண்டு, நெப்போலியனுடைய மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. நெப்போலியனின் இலக்கும், இலட்சியமும் என்னவாக இருந்தது? ஆக்கிரமிப்பு. ஸ்டாலினின் இலக்கு,  கிழக்கு ஐரோப்பியாவை ஆக்கிரமிக்க வேண்டுமென்பது. அப்படியே செய்தார். ஹிட்லர் உலகம் முழுமையையும், கைப்பற்றவேண்டுமென்று துடித்தார்;. ஏறத்தாழ அதில் வெற்றியும் கண்டார். இப்போது நாம் ஆகாயவெளியை கைப்பற்றவிரும்புகிறோம். முதலாளித்துவம்; எப்போதுமே சந்தைகளில் பணத்தை கைப்பற்றிக் கொண்டுதான்  இருக்கிறது. நம்மால் ஒருவரோடொருவர் அன்போடும், நல்லிணக்கத்தோடும்  இணைந்து அமைதியாக சமாதானமாக வாழ்க்கை நடத்திவர இயலாத அளவு நமக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது?  இன்று அக்கிரமங்கள், அராஜகங்களிலெல்லாம் நாம் பங்கேற்பது சரியல்ல என்றஎண்ணம் கொண்டவர்கள் நிறையவே பெருகி வருகிறார்கள். வன்முறையில் எந்த அழகையும், எந்தவிதமான விமோசனத்தையும் தீர்வையும் காண முடியாது எனப் புரிதல் எற்படத் தொடங்கியுள்ளது. மாமன்னர் அசோகர் காலத்திலேயே நாம் போருக்கு எதிரானவர்கள்.

  போர் என்பது கொலை, கூட்டங்கூட்டமாக மனிதர்கள் கொலை செய்யப்படுவது, மனிதர்கள் ஒருவரையொருவர் கொலை செய்து கொள்வது என்பது மிகவும் குரூரமானதாக, சகிக்க முடியாத ஒன்று. நாம் அகிம்சை வழியில் நடக்க உலகுக்கே பாதையமைத்தவர்கள். அநியாய அக்கிரமங்களுக்கு பலிகடா ஆனவர்களை, அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களை மனசாட்சியுள்ள பண்பான, கண்ணியமான மனிதர்கள் எப்போதுமே கைவிட்டுவிட மாட்டார்கள். மதவெறியும், இனவெறியும் மிகவும் அறுவருக்கத்தக்க அவமானத்திற்குரிய விஷயங்கள்.

  இன்றைய நாட்களில் நல்லவர்கள் இன்னும் மேலானவர்களாக மாறிவருகிறார்கள். ஆனால், கெட்டவர்கள் இன்னும் மோசமானவர்களாக மாறிவிடக் கூடாது. நாளைய உலகத்தை வடிவமைக்கப்போகும் நம்முடைய குழந்தைகளை நம்பிக்கையின் பாதுகாவலராக வளர்க்க வேண்டும். அப்போதுதான் நாம் வயதானவர்களானபின் நம்மை உபயோகமற்றவர்களாக கருதி தூக்கி எறிந்து விடமாட்டார்கள். உலகம் இப்போது இருப்பதைவிட மேலானதாக மாறுவதற்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் முன்பைவிட அதிகம் நெருக்கமானவர்களாய் இருப்போம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்க நாம் பாதையமைப்போம். சாதி, மத வேறுபாடு மறந்து மனிதநேயம் வளர்க்க வேண்டியது நம் கடமை. மனிதர்கள் மிருகங்களாக வாழ்ந்தால் இனியும் சிந்துவதற்கு கண்ணீர் மிச்சமில்லை. மனிதன் மனித நேயத்தோடு வாழ முடிவெடுத்தால் சிந்துவதற்கு இனியும் கண்ணீர் தேவையில்லை.

  இந்த மாத இதழை

  உள்ளத்தோடு உள்ளம்

  இளைஞர்கள் பலர் ஓரிடத்தில் குழுமியிருந்தார்கள். அங்கு இரயில் பாதை ஒன்று இருந்தது. இளைஞர்களில் ஒருவர், நாம் இந்த இரயில் தண்டவாளத்தின் மேல் நடந்தே பக்கத்து ஊருக்குச் செல்வோம். கீழே இறங்காமல் யாரால் அதிக தொலைவு நடந்து செல்ல முடிகிறது என்று சோதிப்போமா? என்றான்.

  எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். இரயில்தண்டவாளங்கள் இரண்டின் மேலும் நடக்கத் தொடங்கினார்கள். ஒற்றைத் தண்டவாளத்தில் தங்களைச் சமநிலைப்படுத்தி நடப்பது அவர்களுக்குக் கடினமாகவே இருந்தது. ஏறுவதும் இறங்குவதுமாக நடக்கப் போராடினார்கள். ஆனால், இரண்டு இளைஞர்கள் மட்டும் ஆளுக்கொரு தண்டவாளத்தில் ஏறிக்கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு தரையில் நடப்பது போல வேகமாக நடந்து ஊரை அடைந்தார்கள்.

  வாழ்க்கைப் பாதையில் மகிழ்ச்சியாகச் செல்ல ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து கொண்டு வாழ்தலே சிறப்பு.

  அறிமுகம்

  தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

  மெய்வருத்தக் கூலி தரும்

  என்கின்ற பொய்யா மொழியாரின் குறளை சின்னப்பெண் தீபிகாவிற்கு அறிமுகப்படுத்தியபோது நிகழ்ந்த ஆச்சரியமான ‘ஒரிஜினல் திங்கிங்’ மறக்க முடியாதது. குறளின் பொருளைத் தொடர்ந்து, அவள் தாய், “சரி, சரி, இப்பொழுது அந்த குறளுக்கேற்ப

  க, ங, ச, ஞ படிக்கத் தொடங்கு.

  எவ்வளவு முயற்சி செய்கின்றாயோ?

  அவ்வளவு நினைவில் நிற்கும்.

  தமிழ் மொழியும் உனக்கு நன்கு பிடிபடும்” என்று கூறினார்.

  பட்டென அதற்கு பதில் வந்தது. சின்னக்குழந்தையிடம் இருந்து,

  வினாடி தாமதியாமல் வந்து விழுந்த வார்த்தைகள்

  “அம்மா, அதெல்லாம் கடவுளால முடிகிற விஷயம்தானே”!  என்று.

  இனி, இதுபோல யோசிப்பவர்களை என்ன செய்வது?

  நகைச்சுவை உணர்ச்சியும், சமயோசித உணர்வும் வாழ்வில் பல கோணங்களை அறிமுகப்படுத்த வல்லவை.

  சமீபத்தில் M.A. ஆங்கில இலக்கிய தேர்வு எழுதிய அனுபவம் அலாதியானது. பல கோணங்களில் வாழ்வை புத்தம் புதிதாக இலக்கியம் அறிமுகப்படுத்தி வைக்கின்றது. மூன்று மணி நேரம் பரபரவென கைவிரல்கள் வலியெடுக்க எழுதுவது முப்பதைந்து வயதுக்கு மேல் ஒரு தனித்துவமான  நேரத்தை கணக்கிட்டு, படித்த விசயங்களை பக்குவப்படுத்தி முதலில் இது, அடுத்தது இது, என வரிசைப்படுத்தி தேர்வுத்தாளை திருந்துபவருக்கு ஒரு நல்ல மாணவனை அறிமுகப்படுத்த வேண்டும்.   அந்த ஆர்வத்தில் முதல் பதினைந்து நிமிடங்கள் கேள்வித்தாளின் இரண்டு மதிப்பெண், ஆறு மதிப்பெண், பத்து மதிப்பெண் கேள்விகள் படித்து… அ, அல்லது ஆ என்று எந்த கேள்விக்கான பதிலை எழுதலாம் என்று தேர்வு செய்வதில் கழிந்தது. கேள்விகள் உள்ளத்திற்குள் புதிதாக பிரவேசித்து அவற்றுக்கான பதில்களை பளபளப்பாக்கி துலக்கி அறிமுகப்படுத்தின.

  “அனைத்தும் காதலுக்காக” என்பது ஒரு நாடகம். இதனை எழுதியவர் டிரைடன். இது எகிப்தில் ரோமானிய அரசபிரதிநிதி ஆண்டனியின் வாழ்வை கூறுகின்றது. அவர் சாவையும் காட்டுகின்றது. அவரது காதலி கிளியோபாட்ரா. அவளுடைய அன்பையும், பண்பையும் காட்டுகின்றது. நிறைய பேருக்கு டிரைடன் இதை எழுதியது, தெரியாது. டிரைடனும் எழுதியது தெரியாது என்றாலும் மிகச்சரி. கிளியோபாட்ரா கதையை ஷேக்ஸ்பியர் முன்பே எழுதிவிடுகின்றார். தொடர்ந்து கொஞ்சம் வருடங்கள் கழித்து டிரைடனும் அதையே எழுதுகிறார். இன்று வரை எண்ணற்ற முறைகள் பேசப்பட்ட நாடகம் ஷேக்ஸ்பியரின் “ஆண்டனியும் கிளியோபாட்ராவும்” என்பது. அதை எல்லோரும் படித்திருப்பார்கள் என நினைத்திருப்பார்கள். அதனால் தான், M.A ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இது இல்லை. இருந்தாலும் டிரைடனை படிக்கையில் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுகின்றனர். பல திறனாய்வாளர்கள். ஒப்பிட்டுப்பார்ப்பது ஒரு பாடத்தை மனதில் நன்கு பதிய வைக்கின்றது. ஒரு பெரிய நூலகத்திற்கு சென்று ஷேக்ஸ்பியரது பெரிய பெரிய தலையடை சைஸ் புத்தகங்களை எடுத்து அவரது நாடக, பல அரங்கேற்றங்களை புகைப்படத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. “தேர்வை மூன்று நாட்கள், தூரத்தில் வைத்துக்கொண்டு ஏன் இப்படி, பெரிய பெரிய புத்தகங்களை படிக்கிறீர்கள்” என உள் மனதும்  நண்பர்களும் கேட்டனர். நாலு மாடிக்கு, படியேறி போகும் பொழுதே, படிப்பின் அருமை தெரிந்துவிடுகின்றது. “ஒரு மணி நேர படிப்பில் மறக்க முடியாத பெரிய கவலை எதுவுமே இல்லை” என்று யாரோ பெரிய  ஆள் ஒருவர் சொன்னது நினைவில் வந்தது.

  நான்கைந்து வருடங்களுக்கும் மேல் பழகிய பொறியாளர் ஒருவர் ஏதேச்சையாக எம்.ஏ. படிப்பதை கேள்விப்பட்டார். சந்தோஷப்பட்டார். அவர் மாமனார் ஓய்வு பெற்றபேராசிரியர் என்றார். அறிமுகமானோம். நேரில் வந்தார். “என்று தேர்வு”, என்றார். ‘நாளை’ என்று மதியம் சொன்னதும், கலங்கடிக்கவில்லை. நினைவில் நின்ற விஷயங்களை அடுக்கடுக்காக சொல்லிப் போயிருந்தார். அறிமுகம் இலக்கியத்திற்கும், இதயத்திற்கும் நடந்தது. இலகுவான மனதோடு இருந்ததால், மனப்பாடம் செய்யாமலேயே பாடம் மனதில் நுழைந்தது.  அவ்வப்போது திறந்து வைத்திருந்த கோப்புக்களில் புதிதாய் கிடைத்த அறிமுகங்கள் அரிதாரம் பூசிக்கொண்டு அலங்காரமடைந்து அரியாசனத்தில்  அமர்ந்தன. மாமனார் கூறிய இரண்டு விஷயங்கள் மருந்து போன்றவை அருமையானவை. ஒன்று தேர்வுக்கு போகும் பொழுது எல்லாம் மறந்து போன மாதிரி தான் இருக்கும், ஆனால், பேனாவை காகிதத்தில் வையுங்கள். தானாக கதாபாத்திரங்கள் உங்கள் கண்முன்னே வந்துவிடுவார்கள். நடித்து காட்டுவார்கள். காதலில் விழுவார்கள். மதிப்பெண் பாத்திரத்தையும் நிறைத்து விடுவார்கள் என்று கூறினார். இரண்டு, Donne என்கின்ற கவிஞரின் பெயர் குறித்து. டான்னி என்று அவரை சந்திக்கும் வரை உச்சரிப்பு இருந்தது.   அதன்பிறகு ‘டன்’ என்று சொல்லித் திருத்தி மாற்றினார். இன்னும் எவ்வளவோ விஷயங்கள் கற்றுக்கொடுத்து அந்த அறிமுகம். அரைமணி நேரத்திற்கும் சற்றேகூடுதலாக இருந்திருக்கும். அவ்வளவுதான். எவ்வளவோ? கற்றுக்கொண்டேன். அவருடைய மகளும் முனைவர் பட்டம் பெற்றஆங்கில பேராசிரியை. தேர்வுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப படிக்கும் குறிப்புக்களை மின்னஞ்சல் செய்தார். குறிப்பிடத்தகுந்த அளவு, தேர்வின் வெற்றி அவருக்கு  கடன்பட்டுள்ளது.

  டிரைடனுக்கு மீண்டும் போவோம். அதாவது காலத்தில் பின்னே செல்வோம். சில பத்திகளுக்கு முன்பு, ஆண்டனியை அறிமுகப்படுத்தி எழுதியவர் குறித்து கூறினோம், அல்லவா? அவரே டிரைடன். தனது நாடகத்தில் முன்னுரை ஒன்றைஅமைத்தார்.   அதை மிகவும் பணிவாக அமைத்திருந்தார். ஷேக்ஸ்பியர் எழுதிய விஷயத்தை தொட்டு எழுத நிறைய துணிச்சல் வேண்டும். முன்னுரைகள், அக்காலத்தில், பொதுவாக, படைப்புக்களின் முன்பு வைக்கப்பட்டன. அதில் அவர் கூறினார், “நீங்களெல்லாம், விருந்து சாப்பாட்டையே தொடர்ந்து அறுசுவையோடு, அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தீர்கள். அதனால்,  உங்கள் முன்பு எளிமையான இந்த உணவை படைக்கின்றேன். தொடர்ந்து விருந்தே, உண்ட பிறகு ஒருவேளை, இதை நீங்கள் விரும்பக்கூடும். மேலோட்டமாக பார்த்தீர்களேயானால், நீர்ப்பரப்பில் சோளத்தட்டு மிதப்பது போல நிறைய தவறுகள் இருக்கலாம். தயவுசெய்து, மூழ்கி, முத்தெடுங்கள்”, என்று அறிமுகம் வைத்தார். பெயர் வாங்கினார். நிறைய எழுதினார்.  பலமுறைசொல்லி பழசான கதையில், முடிக்கும் போது ஒரு பஞ்ச் வைத்தார். ‘ஆண்டனி கிளியோபாட்ரா போல் உலகத்தார் மனம் கவர  காதலித்தவர்களும் இல்லை! மாட்சிமைபடர இறந்தவர்களும் இல்லை! என்று (Loved So Well, and Died So Great) வார்த்தைகளை வளைத்திருப்பார். இதுபோன்ற வரிகள் எழுத்தாளர்களை என்றென்றும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

  குழந்தைகளுக்காக, நாயன்மார்களின் கதையையும், ஹர்ரி பாட்டர்-ரின் கதையையும் மாற்றி மாற்றி படித்துக்காட்டுவது பிரமிப்பாகத்தான் இருக்கின்றது. கதைகள் குழந்தைகளுக்கு பல வார்த்தைகளையும், வழக்கங்களையும் முன்வைத்து அறிமுகப்படுத்துகின்றன. இடையிடையே கேட்கப்படும் சுவாரசியமான கேள்விகளுக்கு குழந்தைத்தனமான பதில்கள் வருகையில் தெய்வீகமான அனுபவமும் அறிமுகமும் கிடைக்கின்றது. பெற்றோர்களது சிறுவயதில் படிக்க முடியாமல் விட்டுப்போன பல சிறுவர் கதைகள் சுவாரசியமானவை.  இழக்கக் கூடாதவை. மறுபிறப்பு போல குழந்தைகளோடு, குழந்தையாக படித்துக் கொள்வது அனுபவிக்க வேண்டிய ஒன்று. புத்தக கண்காட்சியில் காமிக்ஸ் புத்தக சாலை உள்ளது அவர்களிடம் பெரியவர்கள் கூட நிறைய எண்ணிக்கையில் புத்தகம் வாங்குகின்றனராம்.

  ஹர்ரி பாட்டரைப் படிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தீபிகாவால் நிறைவேறியது. நண்பரொருவர் நான்கு குழந்தைகள் புத்தகங்களை பொங்கலன்று தந்தபொழுது. ‘கதை படிப்பதுடன் படித்துக்காட்டுவது’ என்கின்ற புதுப்பழக்கமும் அறிமுகமானது. பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் இந்து நாளிதழ் ஒருங்கிணைத்து நடத்தும் ‘புத்தகம் படிக்கும்’ நிகழ்ச்சி நடந்தது. நண்பன் சென்று வந்தான். “எவ்வளவு  சுவையாக இருந்தது” என சிலாகித்தார். ஆணாகவும், பெண்ணாகவும், குழந்தையாகவும் குரலைமாற்றி நாவல் ஒன்றைபடித்துக்காட்டியதை ஒலிப்பதிவு செய்து கொண்டு  வந்திருந்தார்.

  இதுபோன்ற ‘ஆடியோ’ புத்தகங்கள் நிறைய இணையதளத்தில் இருக்கின்றன.  தேடிப்பார்த்தால் தெய்வத்தான் ஆகும் என்ற பொழுதும் நம்மாலும் ஆகும்! நல்ல நல்ல அறிமுகம்!

  இந்த மாத இதழை

  கட்டு நலத்தை எட்டு!

  சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 23.02.2014; ஞாயிற்றுக்கிழமை
  நேரம் : காலை 10.00 மணி முதல் 12 மணி வரை

  இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்
  காமகோடி நகர், வளசரவாக்கம், சென்னை-87.
  (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

  தலைப்பு : கட்டு நலத்தை எட்டு!
  (Emotional Freedom Technique)

  பயிற்சியாளர்: திரு. V. ரங்கநாதன், M.Sc. (Psy)
  தன்னம்பிக்கை பேச்சாளர் & பயிற்சியாளர்
  சென்னை.
  போன்: 98407 06451

  தொடர்புக்கு:
  தலைவர் R. பாலன் 94442 37917,
  செயலாளர் L. கருணாகரன் 98419 71107
  PRO யமுனா கிருஷ்ணன் 94440 29827

  நிம்மதி

  எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?

      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

  கவியரசு கண்ணதாசன் பேனாமுனை பிரசவித்த ஜீவனுள்ள வரிகள் இவை. தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை உச்சரிக்கப்படும் வாழ்வின் கீதம் அவை. ஆம், அந்த நான்கெழுத்து மந்திரம் இல்லாது போனால் எவ்வளவுதான் பெரிய பதவி, செல்வம் இருந்தாலும் வாழ்க்கை நரகமாகும், உலகமே சூன்யமாகிப் போகும். ஆகவே தான் அந்த நிம்மதியைத் தேடி ஒவ்வொருவரும் அலைகிறோம். ஆனால் அது நம் காலடியில் கிடப்பதை உணராமல். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த நிம்மதி எப்போது தொலைந்து போகிறது?

  நினைத்தது நினைத்தபடி நடக்காத போது

  கேட்டது கேட்டபடி கிடைக்காத போது

  மொத்தத்தில் ஆசைகள் நிராசைகளாகும்போது. அந்த ஏமாற்றத்தின் எதிரொலியாக கவலை நம் நெஞ்சில் தஞ்சமாகிறது. அப்போதே நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆயுளை முடித்துக் கொள்கிறது. இதற்கு யார் காரணம்? யார் யாரை நொந்து கொள்வது. தீதும் நன்றும் பிறர்தரவாரா. நாம் இருக்கும் நிலைக்கு நாமே காரணம். எப்படியெல்லாம் நாமிருக்க வேண்டுமென நினைக்கிறோமோ அப்படியே நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நமக்குள்ளே தான் இருக்கிறது.

  மதியின் பதிவுகளே விளைவுகள். அவரையை விதைத்துத் துவரையை அறுவடை செய்ய முடியாது. இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, எல்லாமே நமக்கு நாமே தேடிக் கொண்டவைகள் தான். பால் பழங்கள் உண்டு, பஞ்சனைகள் உண்டு. படுத்தால் உறக்கம் மருந்துக்கும் இல்லை. ஆனால் பழைய சோறு பச்ச வெங்காயம் தான் கட்டாந்தரையிலும் உறக்கம் மரக்கட்டை போல். இப்போது சொல்லுங்கள் நிம்மதி என்பது பணத்தாலா? இல்லை மனத்தாலா? பணம், பணம், பணமென்று பணத்தைத் தேடினால் மட்டும் நிம்மதி வந்துவிடாது. அதற்காக பணமே தேட வேண்டாம் என்பதல்ல. வாழ்க்கைக்குப் பணம் தேடத்தான் வேண்டும். ஆனால் பணம் தேடுவது மட்டுமே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்பது தான். “வாழப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும் அல்லவா??”

  மனத்தின் மாண்பே மனிதனின் மாண்பு

  மனம் எவ்வழியோ மார்க்கமும் அவ்வழி

  உடைந்த மணியிலே ஒருபோதும் ஒழுங்கான ஓசை வராது. தெளிந்த மனத்திலே தான் நல்ல சிந்தனைகள் பிறக்கும். நல்ல சிந்தனைகளே நற்செயல்களை உருவாக்கும். அத்தகைய நற்செயல்கள் தான் நிம்மதியைத் தருமேயன்றி வேறு எத்தகைய செயல்களாலும் நிம்மதியைக் காண முடியாது. வஞ்சம், பொறாமை, கோபங்களெல்லாம் நோய் கொண்ட மனத்தின் புறஅடையாளங்கள். நல்ல நெஞ்சையும் கொல்லும் நஞ்சுகள். ஆகவே தான் பராசக்தியிடம் பாரதி கேட்டான்,

  நின்னைச் சில வரங்கள் கேட்பேன்  அவை

  நேரே இன்றெனக்குத் தருவாய்  என்றன்

  முன்னைத் தீயவினைப் பயன்கள்  இன்னும்

  மூளா தழிந்திடுதல் வேண்டும்  இனி

  என்னைப் புதியவுயிராக்கி – எனக்

  கேதுங் கவலையறச் செய்து  மதி

  தன்னை மிகத் தெளிவு செய்து  என்றும்

  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

   , மதி அது தெளிவானால் மகிழ்வது தஞ்சமாகும். இதுதான் பாரதியின் கூற்று.

  காரணம் நரகத்தை மனதில் வைத்துக்கொண்டு சொர்க்கத்தைப் பார்த்தாலும் சொர்க்கமும் நமக்கு நரகமாகத்தான் தெரியும். அதுபோலவே, நிறைமனம் கொண்டவர்க்கே நிறைகள் தென்படும். குறைசூழ்ந்த மனத்தவர்க்கோ எவரிடத்தும் குறைகளே தோன்றும். ஆகவே நற்குணங்களும், நல்ல பண்புகளும் மற்றவரிடம் இருக்கிறதா என்று தேடும்முன் அவைகள் யாவும் நம்மிடமிருக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பிறரை எந்த அலகால் அளக்கிறோமோ, அதே அலகால் தான் நாமும் ஒருநாள் அளக்கப்படுவோம் என்பதை மறத்தலாகாது.

      தன்னை அறிய தனக்கோர் கேடில்லை

      தன்னை அறியாதவன் தானே    கெடுவான்

      தன்னை அறிந்த அறிவை அறிந்தபின்

      தன்னையே அர்ச்சிக்கத்தா னிருந்தானே

  என்கிறார் திருமூலர்.

  தன்னை அறிதல் என்பது தன்னிடம் எவ்வளவு சொத்து சுகம் இருக்கிறது என்று சொல்லித் திரிவதல்ல. அது தம்பட்டம். தற்பெருமை. மாறாக தன்னிடம் உள்ள குறைகளை அறிவதேயாம்.

  “இன்பம், துன்பம்,

  விருப்பு, வெறுப்பு,

  எல்லாமே நமக்கு நாமே

  தேடிக் கொண்டவைகள்

  தான்.”

  நன்றின்பால் உய்ப்பது அறிவு. அதாவது ஐம்புலன்களும் அது போகிறபோக்கில் போகவிடாமல் முறைப்படுத்துகிறஆற்றலே அறிவு. அத்தகைய அறிவின் துணையோடு அலைபாயும் மனத்திற்கோர் அணை போடுங்கள். பேராசையின் கூடாரமாய் மனமது மாறக்கூடாது. நமது ஆசைகள் நியாயமானதாகவும் எவரையும் எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் இருத்தல் வேண்டும். கோடிகோடியாய் கொட்டிக் கிடந்தாலும், மாடிமாடியாய் கட்டிவைத்தாலும் உண்பது கால்படி, உடுத்துவது நாலு முழம், படுப்பது ஆறடி தான். கொண்டு வந்தவருமில்லை. எதையும் கொண்டு போவோருமில்லை. முடிவில் ஒத்த ரூபாயை நெற்றியில் ஒட்டிவிட்டாலும் அதையும் வெட்டியான் எடுத்துக் கொண்டுதான் இறுதிச் சடங்கை முடிப்பான் என்பதை உணர்ந்தால் பொருட் செல்வங்கள் யாவும் கானல் நீர் என்பது தெளிவாகும். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. நமக்கும் மேலே உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதை விடுத்து நமக்கு கீழே உள்ளவர்கள் கோடி என்பதை நினைத்து ஈன்ற தாய்க்கு நன்றியை சொல்லுங்கள்.

  பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகும் ஒரு சுமை தான். விதி என்றும், நேரமென்றும் இயலாமைக்கு முலாம் பூசாதீர்கள். வெற்றி என்பது வெறுமனே வருவதில்லை. வியர்வைத் துளிகளின் விளைச்சல் அது. ஆனாலும் விதைத்த மறுகணமே வித்து மரமாவதில்லை. அதுபோலத்தான் உயர்வு என்பதும் ஒரே நாளில் வந்துவிடாது. பல துளிகள் சேர்ந்துதான் கடலானது. பல துகள்கள் சேர்ந்துதான் மலையானது. உழைப்பின்றி சேரும் செல்வம் ஒருபோதும் நிலைப்பதில்லை. இது இறைநீதி. பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள்களெல்லாம் பெற்றவன் பன்மடங்கு வருந்துமாறு செய்து போய்விடும். நல்வழியில் வந்த செல்வம் இழந்தாலும் பின் நன்மையே வந்து சேரும். ஆக இலக்கு மட்டும் முக்கியமல்ல. அதை அடையும் வழியும் நல்லதாய் இருத்தல் வேண்டும். அதைவிடுத்து தனது தவறான பாதையை யார் அறிவார் என்பது அறியாமை. காற்றுள்ள பந்தை கடலுக்குள் மறைத்தாலும் அது கரைக்கு வந்துவிடும். அதுபோலத்தான் நாம் செய்யும் பாவங்களும்.

       தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

      வீயாது அடிஉறைந் தற்று

  இது வள்ளுவம் கூறும் வாழ்க்கை நெறி அல்லவா.

  “சத்தியமேவ ஜெயதே” நமது தேசத்தின் கீதமது. சத்தியத்தை நாம் காத்தால், சத்தியம் நம்மைக் காக்கும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கக் கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு என்பது உண்டு. அது தன்னையோ, பிறரையோ எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நெறிப்படுத்துவதே ஒழுக்கம். அத்தகைய ஒழுக்கமே நம் அமைதிக்கும் அதன்பாற்கொண்ட நிம்மதிக்கும் வித்தென்று தெளிதல் வேண்டும். மேலும் எதிர்மறை இல்லாத ஒன்று உலகில் ஏதுமில்லை. இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கங்கள். அவமானம் இல்லாமல் வெகுமானம் இல்லை. ஆக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக்கூடாது. ஏனெனில் அஸ்த்தமனம் என்பது முடிவல்ல, அது விடியலுக்கு அஸ்திவாரம் தான்.

      எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

      எண்ணுவம் என்பது இழுக்கு

  பொதுமறையின் கூற்று.

  ஒன்றைச் செய்யுமுன் சிந்திப்பவன் அறிவாளி. செய்தபின் வருந்துபவன் ஏமாளி. எதையும் ஒருமுறைக்குப் பலமுறையோசித்துத் தொடங்குங்கள். தொடங்கியபின் யோசிக்காதீர்கள். நிம்மதி தொலைந்து போகும். தெரியாத பாதையில் விரைவாக ஓடுவதைவிட, தெரிந்த பாதையில் மெதுவாக செல்வதே மேல். நமக்கு முன்பிறவி இருந்ததா? இல்லையா? அதில் என்னவாய் பிறந்தோம். எப்படியிருந்தோம் தெரியாது. மறுபிறவி என்பதும் உண்மையா? பொய்யா? அதில் என்னவாய்ப் பிறப்போம், எப்படி இருப்போம், அதுவும் தெரியாது. ஆனால் இப்பிறவி மட்டும் ஐயமில்லாத உண்மை. அதிலும் கிடைத்தற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் கடந்த கால இழப்புகளையே கடைபரப்பிக் கொண்டு நிகழ்காலத்தில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி இன்பத்தைத் தொலைத்துவிடக் கூடாது. கறந்த பால் மடி புகாது. காலமும் அப்படித்தான் ஆக, ஒவ்வொரு நொடியும் இன்பமாய் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து விரக்தி, வெறுப்பு, கவலை இப்படியே வாழும் காலத்தைத் தொலைத்துவிட்டு அந்திமலை காலத்தில் அமைதியைத் தேடி அலைவதில் பயனேதுமில்லை. வெளிச்சம் இருக்கும்போதே விளக்கைத் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். முடியாது என்பதெல்லாம் முயலாதது மட்டும் தான். முயன்றால் முடியாதது ஏதுமில்லை. தன்னம்பிக்கை தான் வாழ்க்கை. விடியும் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்லும் நாம் முடியும் என்ற நம்பிக்கையோடு எழ வேண்டும்.

      வேகும் சோறு பானைக்குச் சொந்தமில்லை

      சுற்றும் மேகம் வானுக்குச் சொந்தமில்லை

      விளையும் பயிர் மண்ணுக்குச் சொந்தமில்லை

      அலையும் காற்று யாருக்கும் சொந்தமில்லை

  வாழும் காலமோ கொஞ்சம் தான். அதற்குள்ளாகத்தான் நான் எனது என்பதெல்லாம். விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. நான் என்ற அகந்தையை விட்டொழியுங்கள். உறவுகள் மேம்படும். உங்களை யாராவது குறைகூறின் உண்மை அதில் இருந்தால் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். பொய் என்றாயின், மௌனத்திற்கு மகுடம் சூட்டுங்கள். அந்த மௌனம் அவர்களுக்கு ஆயிரம் பதிலைச் சொல்லும். எவரையும் பழி தீர்க்க நினையாதீர்கள். அது மன உளைச்சலை தந்து நிம்மதியைத் தொலைத்துவிடும். மாறாக உங்களது மனச்சுமையை இறைவனிடம் வைத்துவிட்டு அமைதியாய் பயணத்தை தொடருங்கள். தக்க நேரத்தில் உரிய பலனை அவர்களுக்கு அவன் தந்து வைப்பான். பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை. உயர்வு, தாழ்வு என்பதெல்லாம் அவரவர் செய்யும் செயலின் விளைவுகளேயாம். முதல் தரமான மனிதராக வேண்டுமெனில் முதலில் நாம் எல்லோரையும் முதல் தரமாக மதிக்கப் பழக வேண்டும். இருக்கும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. இறந்த பின்னால் யாரும் மறக்கக்கூடாது. இதுதான் வாழ்வின் நியதி. மனித நேயமே மானுடத்தின் ஜீவநாடி. ஆம் சொல்லாலும், செயலாலும் பிறரை வருத்தாமல் தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வாய் வைத்திருக்கத் தெரிந்தவன் எவனோ, அவனே உண்மையான மனிதனாகிறான்.

  அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

  மக்கட் பண்பு இல்லாதவர்

  இது நான்முகனார் உத்தரவேதம்.

  எவ்வளவு பெரிய அறிவுடையவராயினும் மக்களை மதிக்கும் நல்ல பண்பு இல்லையாயின் அவர்கள் மரத்திற்கு ஒப்பானவனே என்று கடிந்துரைக்கிறார் வள்ளுவர். பண்பட்ட நிலமே பலனைத் தரும். அதுபோல மனமும் பண்பட வேண்டும். அன்பு ஒளியும், அறவொளியும் மனித நேயத்தின் இரு கண்கள். சுவாசிக்கும் வரை நேசி, நேசிக்கும் வரை சுவாசி என்கிறது வேதம். உப்பு நீரையும் தன்னகத்தே கொண்டு நன்னீரை வழங்குகின்றமேகம் போல் இன்னா செய்தாற்கும் இனியவையே செய்யுங்கள். எதிரியே ஆனாலும், எள்ளளவும் கேடு நினையாதீர்கள். வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருந்தால் போற்றுதற்குரிய மனிதராய் இப்புவியில் உயர்ந்து நிற்போம்.

  இந்த மாத இதழை

  தேர்வை எதிர்கொள்வது எப்படி?

  கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள்: 16.02.2014; ஞாயிற்றுக்கிழமை
  நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

  இடம்: சாரதா பாரா மெடிக்கல் கல்லூரி,
  ஜான் செல்வராஜ் நகர்
  புதிய பேருந்து நிலையம்,
  கும்பகோணம்.

  தலைப்பு: தேர்வை எதிர்கொள்வது எப்படி?

  பயிற்சியாளர்: திரு. A.டோமினிக்சேகர்
  சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,
  தஞ்சாவூர்.
  போன்: 94870 29494

  தொடர்புக்கு : தலைவர் திரு. P. ஜாஹிர் உசேன் 98946 23194
  துணைத்தலைவர் – திரு. எட்வின் ரிச்சர்ட் 94432 75902
  PRO திரு. கோபிநாத் 82201 82135

  சாதிக்கலாம் வாங்க!

  தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மாணவர் பிரிவு வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள்: 01.02.2014 முதல் 15.02.2014 வரை
  நேரம்: காலை 10 மணி முதல் 5 மணி வரை

  இடம்: கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட
  மேல்நிலைப் பள்ளிகள்

  தலைப்பு: சாதிக்கலாம் வாங்க!

  சிறப்புப் பயிற்சியாளர்:
  திரு. A.டோமினிக்சேகர்
  சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,
  தஞ்சாவூர்
  போன்: 94870 29494

  தொடர்புக்கு :
  தலைவர் முனைவர் P. பழனிசாமி 98420 53919
  ஒருங்கிணைப்பாளர் திரு. G. சுரேஷ் 94436 78709