Home » Articles » “விருந்தோம்பல்”

 
“விருந்தோம்பல்”


ராமசாமி R.K
Author:

“மோப்பக்குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக்குழையும்விருந்து”– என்பது வள்ளுவர் வாக்கு

  எத்தகைய எதிர்பார்ப்போ கைம்மாறோ கருதாமல் வீட்டுக்கு வருகிற புதியவர்களைக் கனிவாக விருந்தினராக ஏற்றுக்கொள்வதே விருந்தோம்பல் என்பார்கள். நம் இல்லங்களுக்கு விருந்தினர்கள் வரும்போது அவர்களை வரவேற்கும் விதமும், உபசரிக்கும் முறையும் உன்னத நிலையில் இருக்க வேண்டும்.

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டில் உள மகிழ்ச்சியோடு, திருமகள் தங்கியிருப்பாள் என்கிறது வள்ளுவம். பிறருக்கு உணவளிக்கும் போது அன்புடன் முகம் மலர்ந்து மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கோபத்துடன் உணவு பரிமாறினால் அது நமக்கும் உணவு உண்பவருக்கும் மிகுந்த தீமையை அளிக்கும். தாயும் கூட தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது அமைதியான மனத்துடன் கொடுத்தால் தான் குழந்தைக்கு ஆரோக்கியம் கூடும். அவ்வாறு இல்லாவிடில் குழந்தையின் நலத்துக்குப் பாதிப்பு அதிகமாகும்.

ஒப்புடன்முகமலர்ந்துஉபசரித்துஉண்மைபேசி
உப்பில்லாகூழிட்டாலும்உண்பதுஅமிர்தமாமே!
முப்பழம்பாலொடு அன்னம்முகம்கடுத்திடுவாராகில்
கப்பியபசியினோடுகடும்பசிஆகும்தானே! – என்பது ஆன்றோர் வாக்கு

உபசரிப்பவர்கள் சிரித்த முகத்துடன், மகிழ்ச்சியுடன் உள்ள நிறைவோடு அன்புடன் படைக்கும் உணவு உப்பில்லாது இருந்தாலும் தேவலோக அமிர்தத்திற்கு இணையாகும் .அவ்வாறு முக மலர்ச்சியின்றி அன்பில்லாமல் கடுகடு என்ற முகத்தோடும், கோபத்தோடும், வேண்டா வெறுப்போடும், முப்பழங்களோடு பாலும் கலந்து உணவு படைத்தாலும்  அது பயன்தராது.

சைவ நாயன்மார்களில் தலைசிறந்த உழவாரத்தொண்டு புரிந்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்.தன் உழவாரப் பணிக்காக திங்களூர் செல்கிறார்.திங்களூரில் திருநாவுக்கரசு சுவாமிகளின் மேல் அளவு கடந்த பக்தியும்,அன்பும் கொண்டவரான சிவனடியார் அப்பூதியடிகள்,திருநாவுக்கரசு சுவாமிகளை வரவேற்று உபசரித்து தன் வீட்டில் விருந்துண்ண வேண்டும் என்று வேண்டுகிறார்.

திருநாவுக்கரசு சுவாமிகளும் தன் மீது அப்பூதியடிகள் வைத்துள்ள அளவற்ற பக்தியையும், அன்பையும் கண்டு விருந்துக்கு வருவதாக ஒப்புக்கொள்கிறார். அப்பூதியடிகளும் அவர்தம் அன்புமனைவியும் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தனர். அவர் துணைவியார் விருந்து தயாரித்து முடித்து தன் மூத்தமகனை அழைத்து விருந்தினர்களுக்கு வாழையிலை அறுத்துவருமாறு பணித்து அனுப்புகிறார். வாழையிலை அறுக்கச் சென்ற அப்பூதியடிகளாரின் மூத்தமகனை வாழைமரத்தில் இருந்த நாகம் தீண்ட அவன் இறந்து போகிறான்.

விருந்தினரை உபசரிக்கும் நேரம்,மகனோ!  பாம்பு தீண்டி இறந்துவிட்டான். துக்கத்துடனும் சோகத்துடனும் தன்மகன் இறந்ததை மறைத்துவிட்டு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களுக்கு, அப்பூதியடிகளும், அவர் துணைவியாரும் உணவு பரிமாறுகிறார்கள். இதை அறியாத திருநாவுக்கரசு சுவாமிகள் தங்கள் மகன் எங்கே?  எனக்கேட்டு மகன் வந்து தன்னோடு அமர்ந்து உணவு உண்ணவேண்டும்  என  வற்புறுத்துகிறார்.

உபசரித்துக்கொண்டு இருந்த சிவனடியார் செய்வதறியாது திகைத்து உண்மையைச் சொல்லி விம்மி அழுது மன்னிப்பு கோருகிறார்.எங்கள் மகன் இறந்துவிட்டான் என்ற செய்திகேட்டால் தாங்கள் உணவு உண்ண மாட்டீர்கள் என்றுதான் உண்மையை மறைத்துவிட்டோம் என்று அழுது வேண்டுகிறார்கள்.திருநாவுக்கரசு சுவாமிகள் அந்த இறந்த இளம் பாலகனைக் கோயிலுக்குத்தூக்கிச் சென்று சிவபெருமான் முன்கிடத்தி பதிகம்பாடி உயிர் பிழைக்கவைக்கிறார்.

மகன் இறந்த நிலையிலும் கூட அதை மறைத்துவிட்டு விருந்தோம்பிய சிவனடியார் அப்பூதியடிகளும், அவர் தம் துணைவியாரின் பண்புகளும் இன்றும் சிறப்புடன் பேசப்படுகிறது; நாளையும் பேசப்படும்.

கனிவு, சலுகை, தியாகம், அறச்செயல், இன்முகம், அன்புநலம், நேசம், பாசம் ஒரு இனம்புரியாத பிரியம் ஆகிய பண்பு நலன்களால் அலங்கரிக்கப்படுவதே விருந்தோம்பல். உண்மையான அன்புநிறைந்த உறவும், கலங்கமில்லாத  அகநக நட்பும் கலந்த கலவையே விருந்தோம்பல்.

பச்சைமயில்கள் நடனமிடும் பசுஞ்சோலைகள் கண்களுக்கு விருந்தாகும், குயில்களின் இசையும், கிளிகளின் மொழிகளும் செவிகளுக்கு விருந்தாகும், மரம், செடி கொடிகளிலிருந்து வெளிவரும் மலர்களின் நறுமணம் நாசிக்கு விருந்தாகும். தென்றலின் தீண்டுதல் உடலுக்கும், மனத்துக்கும் விருந்தாகும், இதுபோன்ற இயற்கை திருவிளையாடல் ஒவ்வொன்றும் நமக்குவிருந்து படைத்து உள்ளத்தை வளப்படுத்தி உடலை நலமுறச் செய்துவிருந்தோம்பல் பண்பைகளை மனிதனுள் விதைக்கின்றது.

செல்விருந்து ஓம்பிவரும் விருந்து பார்த்திருந்து விருந்தோம்பவேண்டும். முகர்ந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்போல-விருந்தினர் முகம்வாடாமல் விருந்தோம்ப வேண்டும். ஏனெனில் நாள்தோறும் தன்னை நாடிவரும் விருந்தினர்களைப் போற்றுபவரின் இல்வாழ்க்கையில் என்றுமே துன்பம் வருவதில்லை.

ஆதலின் புனிதமான புதிய உறவு விருந்தோம்பல் என்பதற்கு இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்போம். அவர்கள் முகம் கோணாமல் விருந்தோம்பி மகிழ்வோம். விருந்தோம்பல் மனித நேயத்தின் முதல்படி என்பதை உணர்ந்து மகிழ்வோம்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்