Home » Articles » சாம்பியன் உருவான கதை

 
சாம்பியன் உருவான கதை


செல்வராஜ் P.S.K
Author:

“உலகின் மாபெரும் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்
சாம்பியனாக உருவான கதை!”

“நான் ஆடவந்த போது எல்லாம் மங்களாக இருந்தது. வாசிம் அக்ரம், வரிசையாக நான்கு பவுன்சர்கள் வீசினார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என நினைத்தேன்”- 1989ம் ஆண்டு, 16 ஆண்டுகள் 206 நாட்களில் இந்தியாவுக்காக விளையாடும் மிகவும் இளம் வீரராக பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் அறிமுகமான முதல் போட்டியின் போது சச்சின் சொன்ன வார்த்தைகள் இவை.

1989 நவம்பர் 15ம் தேதி இந்திய அணியின் சீருடை அணிந்து சுருண்ட தலைமுடியுடன் 16 வயதில் கிரிக்கெட் களத்தில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து கடந்த 24 ஆண்டுகளாக ஒரு தலைமுறையை நிர்ணயிக்கும் உருவகமாக சச்சின் திகழ்ந்து வந்திருக்கிறார்.

டெஸ்ட்டில் 16,000 ரன்கள். ஒருநாள் போட்டியில் 18,426 ரன்கள், 100 சர்வதேச சதங்கள் என நம்பமுடியாத எண்ணிக்கைகளை அவர் சேர்த்து வைத்திருக்கிறார். இத்தனை சாதனைப் புதையல் விபரங்களைத் தன்னிடம் வைத்திருக்கும் சச்சினின் வாழ்க்கை அவருக்குச் சொந்தமான கதை அல்ல. கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீது மோகம் கொண்ட ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமான கதை.

சச்சின் முதல் போட்டிக்காக தேர்வானதே ஒரு நெகிழ்ச்சியான கதை தான்.

1989, நவம்பர் 4 வான்கடே ஸ்டேடியத்தில் இராணி கோப்பை கிரிக்கெட் போட்டி. 16 வயது சச்சின் விளையாடுதைப் பார்த்தார் இந்தியத் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேரில் ஒருவரான ஆகாஷ் லால். சச்சினின் திறனைப் பற்றி தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டார்.

5 நபர்கள் கொண்ட தேர்வுக்குழு பாகிஸ்தானுக்கு செல்லப்போகிற அணியைத் தேர்வு செய்ய கூடுகிறது. தேர்வுக் குழுவின் தலைவர் ராஜ்சிங் துங்கர்பூர் சச்சினின் பெயரை முன்மொழிகிறார்.

தேர்வுக் குழுவில் இருந்த இருவர்,“சச்சின் வயதில் மிகவும் இளையவராக இருப்பதால் இம்ரான்கான், வாசிம் அக்ரம், வாக்கர் யுனிஸ் போன்றோரை சமாளிக்க முடியுமா?” என்ற சந்தேகத்தை எழுப்பினர்.

“18 வயதில் ஹனிப் முகம்மது, 17 வயதில் இயன் க்ரெய்க் போன்றவர்கள் விளையாடிய போது, ஏன் சச்சின் விளையாடக் கூடாது” என்று கேட்டார் ஆகாஷ் லால். இறுதியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் எடுத்தால் அவர் பாகிஸ்தான் போகலாம் என்று முடிவானது.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடிய டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, சச்சின் 83 ரன்களில் இருந்த போது குர்சரண் தன் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவால் மைதானத்திலிருந்து வெளியேறினார். அப்போது ராஜ்சிங் துங்கர்பூர் குர்சரணிடம், “அந்தப் பையன் 100 அடிக்க வேண்டும்.அவனுக்கு உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். குர்சரண் மீண்டும் பேட் செய்வதற்காக மைதானத்திற்குள் செல்கிறார். சச்சின் முகத்தில் சந்தோசம். குர்சரண், “ஒரு கையால் சமாளிக்கிறேன். எப்படியாவது 100 எடுங்கள்” என்று சச்சினிடம் சொல்கிறார்.

அதன்பின் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொண்டு நூறு அடித்தார். சச்சின் இந்திய அணிக்குத் தேர்வானார். பாகிஸ்தான் பறந்தார்.

இன்று சச்சின் புள்ளி விபரங்களை அதன் உச்சத்துக்குக் கொண்டு சென்று, அவை மூலமே தன்னைப்பற்றி சொல்ல வைத்துள்ளார். நிறைய சாதித்திருக்கிறார்.அதிலும் நீண்ட காலம் தொடர்ந்து சாதித்திருக்கிறார். அவரது ஆரம்பம் நாம் டீ.வியில் பார்ப்பது போலவே சுவையானது. ஒருநாள் பக்கத்து வீட்டில் இருந்த மரத்தில் இருந்து மாங்காய் திருடிய போது பிடிபட்டு ராம்காந்த் ஆச்சரேகரிடம் அழைத்துச் செல்லப்பட்டார் சச்சின்.

அப்படி சென்ற சச்சின் கிரிக்கெட்டில் முதலில் சம்பாதித்தது 25 பைசா. பயிற்சி நேரம் முழுவதும் ஆட்டம் இழக்கமால் இருந்ததற்காக ஆச்சரேகர் கொடுத்த பரிசு அது. அன்றில் இருந்து ஆச்சரேகரின் ஸ்கூட்டரில் பின்னே அமர்ந்து மைதானம் மைதானமாக சென்று ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடினார். போட்டிக்குத் தயாராவது என்பது அவருக்கு மிகுந்த ஈடுபாடுடையது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவும் அவரால் சரியாகத் தூங்க முடியாது.

பிப்ரவரி 24, 2010 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரராக சச்சின் டெண்டுல்கர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் நடந்த 2961 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒருவருமே 200 ரன் எடுத்ததில்லை.டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் அதிக எண்ணிக்கையிலான ரன் எடுத்தவர் சச்சின்.

அவருடைய சாதனையையும், வாழ்க்கைப் பயணத்தையும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் அவர் சாம்பியன் ஆன கதை புரியும். மனிதர்களுக்கிடையே விஸ்வரூபம் எடுத்தவரின் ஒரு சிறிய வரலாறு இதோ…

1989, டிசம்பர் பாகிஸ்தானின் சியால்காட் நகரம். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அது.சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் அது நான்காவது போட்டி.

மூன்று போட்டிகளுக்குப் பிறகு அந்தத் தொடர் 0 – 0 என்ற கணக்கில் இருந்தது. நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 65 ரன்களுடன் முன்னணியில் இருந்தது இந்தியா. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் வாக்கர் யுனிஸூம், வாசிம் அக்ரமும் இந்திய ஆட்டக்காரர்களைத் திணறடித்துக் கொண்டிருந்தார்கள்.

4 விக்கெட்டுகள் இழப்புக்கு 38 ரன்கள்.தோல்வியின் விளிம்பில் இந்திய அணி. போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் தொடரை இழக்க வேண்டிய நிலை. அப்போது சித்துவுடன் கைகோர்த்தார் சச்சின். மஞ்ரேகர், ஸ்ரீ காந்த், அசாருதீன், ரவி சாஸ்திரி போன்றவர்கள் கூட பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்காமல் பெவிலியனுக்குத் திரும்பி இருந்தனர். 16 வயதில் மொழு மொழு கன்னத்துடன் இருந்த இளம்பிஞ்சு எப்படி அந்தப் புயல்வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ளப் போகிறது?

வக்கார் யுனிஸ் மிக மோசமான பௌன்சர் ஒன்றைப் போட்டார். அது சச்சினின் மூக்கைப் பதம் பார்த்தது. மூக்கில் இருந்து இரத்தம் கொட்டியது. எல்லோரும் ‘உச்’ கொட்டினார்கள். 16 வயது பையனுக்கு இப்படி பவுன்சர் போடுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூட சிலர் நினைத்திருப்பார்கள். பாகிஸ்தான் வீரர்கள் இரத்தம் வடிவதைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திய அணியின் மருத்துவர் முதலுதவிக்காக மைதானத்துக்குள் ஓட, சித்து சச்சினைத் தூக்கிவிட அவர் அருகில் சென்றார்.

மருத்துவர் சச்சினின் மூக்கில் வடியும் ரத்தத்தை நிறுத்த முயற்சிக்க, ‘காயம் சரியானவுடன் விளையாட வா’ என்று அறிவுரை கூறுகிறார் சித்து… காயம் சற்று பெரிய அளவில் இருந்தது…‘போ… சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு விளையாட வா’ என்று சித்து மீண்டும் கூறினார். இதுவே சச்சினுக்குக் கடைசி போட்டியாக அமைந்து விடுமோ என்று கூட நினைத்தார் சித்து…‘வா நான் மருந்து இடுகிறேன்’ என்றார் மருத்துவர்.

ஆனால் சச்சின் யார் சொல்லியும் கேட்பதாக இல்லை. அனைவரும் சச்சினை அந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதைக் காதில் ஏற்றுக்கொள்ளவில்லை.

‘நான் விளையாடுவேன்’ என்று சச்சின் சொன்னார். அந்த நிமிடம் தான் ஒரு நட்சத்திர வீரன் இந்திய அணிக்கு ஜொலிக்க ஆரம்பித்தான். அந்த இரண்டு வார்த்தைகள், வெற்றியடைய முயலும் ஓர் இளைஞனின் உத்வேகத்தை எடுத்துக் காட்டின.

அந்த சமயத்தில் சச்சின் டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்று சாவகசாமாக ஓய்வெடுத்துக் கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இந்தியா மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. மூர்க்கத்தனமான அந்தத் தாக்குதல் உச்சத்திற்குச் சென்றது. கையுறை, மேல்சட்டை, முகம், தன்னம்பிக்கை என அனைத்தின் மீதும் குருதி படிந்திருந்தது.

ஆனால் அதைப் பற்றி எந்தக் கவலையும் அந்தச் சிறுவன் அடையவில்லை. நான் விளையாடுவேன் என்று களத்தில் நின்று 57 ரன்கள் எடுத்ததுடன், சித்து – சச்சின் இணை பார்ட்னர்சிப்பாக 101 ரன்களை எடுத்தனர். ‘நான் விளையாடுவேன்’ என்ற சச்சினின் அந்த இரண்டு வார்த்தைகள் தான் திறமையான ஒருவரை சியாட்டில் மேதையாக உருமாற்றியது.

எப்போதுமே இப்படித்தான் சாதாரண வீரர்களிடம் இருந்து சாம்பியன்களை வித்தியாசப்படுத்துவது திறமை மட்டும் அல்ல அவர்களின் மனப்பாங்கும் கூட. அவர்களின் மன உறுதியும், இக்கட்டான சூழலில் போராடுவதற்கான உள்ளக்கிடக்கையும், நான் விளையாடுவேன் என்கிற அந்தத் துடிப்பு, ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்காக அல்லாமல் தன் அணியின் உயர்வுக்காக விளையாடும் வெறி.

நம் மீது அழுத்தம் அதிகரிக்க, நம்மை அந்த அழுத்தம் சுழற்றி வீசுவது போல உணர்கிற பல சமயங்கள்.நம் வாழ்வில் இருக்கின்றன.அந்த சமயங்களில் தாக்குப்பிடித்து நிற்கிற விரல்விட்டு எண்ணக்கூடிய மனிதர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும். நான் விளையாடுவேன் என்று சொல்வதற்கான நேரம் தான் அது.

16 வயதில் கிரிக்கெட் விளையாடத் துவங்கியது முதல் சச்சின் நெருக்கடியைத் தவிர வேறு எதையும் சந்தித்ததில்லை. அவர் தோளில் எந்த அளவு எதிர்பார்ப்பின் சுமையைக் கொண்டுள்ளார் என்பதை உணர இந்தியாவில் அவர் விளையாடப் பார்க்க வேண்டும். அவர் புகழை எப்படி கையாள்கிறார் என்பது மற்றும் அவரின் செயல்கள் எல்லாம் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணமானது. அத்தகைய வீரர்கள் கிடைத்தது கிரிக்கெட்டுக்கு நல்லது என்று சொல்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன். தன்னுடைய ‘மை டாப் 100 டெஸ்ட் பிளேயர்ஸ்’ புத்தகத்தில்.

ஷேன் வார்ன் சொன்னதைப் போல கடந்த 24 வருடங்களாக தன் செயல்பாட்டினால் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார் சச்சின். தன் திறமையால் பல வெற்றிகளை இந்தியாவின் பக்கம் இழுத்ததை நாம் இமை மூடாமல் கண்டு களித்திருக்கிறோம். அவர் ஆட்டம் இழந்தால் தேசம் முழுவதன் நம்பிக்கையும் தவிடு பொடியாவதையும் நாம் கவலையுடன் பார்த்திருக்கிறோம். நம் கனவுகள் மெய்ப்பட, நாம் வெற்றியடைய அவர் உதவியிருக்கிறார். தன் வழியில், நாம் சிறந்தவர்கள் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார். நாம் இந்தியர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளச் செய்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை எழுச்சி பெறும் இளம் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கிறது. சச்சினின் மிகப்பெரிய பங்களிப்பு இந்த தேசம் முழுவதற்கும் எதிர்த்து நின்று போராடக் கற்றுக்கொடுத்தது தான். விட்டுக் கொடுக்காமல் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

பல நேரங்களில் ஒரு தலைவராக, உங்களை எப்போதும் இந்த உலகம் மட்டம் தட்டுவதாக நீங்கள் உணரலாம். வெற்றி பெறுவதாக நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் தோல்வி உங்கள் முகத்தில் அறையும். அதுபோன்ற சமயங்களில் நல்ல தலைவர்கள் தன் அணியில் இருக்கும் நல்ல மனிதர்களை ஒருங்கிணைக்க வேண்டும். சச்சினைப் போல நான் விளையாடுவேன் என்கிற துடிப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்தத் துடிப்பு தொற்று போன்றது. ஒருவர் கை தூக்கினால் இன்னொருவர் கை தூக்குவார். அடுத்து ஒருவர். பிறகு அந்த அணிக்கே தன் மீது நம்பிக்கை ஏற்படும்.போராடவும், வெற்றி கொள்ளவும் கற்றுத் தந்திருக்கிறார் சச்சின். நான் விளையாடுவேன் என்ற இரண்டு வார்த்தைகளின் மூலம். சாம்பியன் துடிப்பை வரையறுத்த அந்த இரண்டு வார்த்தைகள், திறமையான செயலாற்றலாக மாற்றிய அந்த இரண்டு வார்த்தைகளை நமது பேரக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.

மாஸ்டர் பிளாஸ்டர் ஓய்வு பெறுகிறார். இனிமேல் பவுண்டரிக்கான ஆன்டிரைவ், சிக்சருக்குப் பிறந்த அப்பர்கட், ஒவ்வொரு சாதனைக்குப் பின்னும் தலையைப் பின்னே சாய்த்து, வானத்தை நோக்கி பேட்டை தூக்குவது ஆகியவை வீடியோ கிளப்புகளாகத்தான் இருக்கும். எழுச்சி பெறும் இளம் இந்தியாவின் அடையாளமான சச்சினுக்கு ஒரு நன்றி.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்