Home » Articles » எப்படி ஜெயித்தார்கள்

 
எப்படி ஜெயித்தார்கள்


நாகராஜ் கே
Author:

கிரண் மஜம்தார் பயோகான்

30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் வேலைக்குச் செல்கிறேன் என்றால் டீச்சர் வேலையோ அல்லது வங்கிப் பணியோ என்றுதான் முடிவெடுப்பார்கள். பெண்களுக்கு அந்தவேலைதான் சரிப்படும் என்று நினைத்தார்கள்.

இதையும் மீறி யாராவது வேறு வேலைக்குச் செல்ல முயற்சி செய்தாலும் நிறுவனங்கள் வேலை தரத் தயங்கின. எவ்வளவு படித்திருந்தாலும் திறமை இருந்தாலும் உயர் பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. அதற்குச் சொல்லப்பட்ட காரணம் ஒரு பெண்மணிக்குக் கீழ் பணியாற்ற ஆண்கள் விரும்புவதில்லை. சில சமயம் பெண்களே பெண்களுக்கு எதிரி போல் உயர்பதவியில் பெண்கள் அமர்த்தப்பட்டால் அவருக்குக் கீழ் பணியாற்ற பெண்களே விரும்பாத நிலையும் இருந்தது.

இந்நிலையில் தான் 30 ஆண்டுகளுக்கு முன் தன்முன் இருந்த பல தடைகளையும் போராடி வென்று இன்று இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாகவும், அதிகமான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகவும் மாற்றி அருக்கிறார் ஒரு பெண்.

இத்தகைய  சாதிப்பு  பல  கரடுமுரடான  பாறைகளைத் தாண்டி பயணித்து தான்  கடைத்திருக்கிறது. அந்த ஆச்சரியப்படத்தக்க பயணத்தை மேற்கொண்டு சாதித்தவர் தான் கிரண் மஜம்தார்

குஜராத்தைச் சேர்ந்தவரான கிரண் படித்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். கிரணுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம். உயிரியல் பாடத்தில் அதிக விருப்பம் கொண்டிருந்த கிரணுக்கு டாக்டர் ஆக  வேண்டுமென்பதே  லட்சியம்.  ஆனால்  வீட்டின்  பொருளாதார  நிலை அப்படி  ஈல்லை. அதனால்  பி.எஸ்.சி.  விலங்கியலை  இளங்கலைப்  பட்டமாகப்  பெற்றார் கிரண். உயர்கல்விக்காக சென்றது  ஆஸ்திரேலியாவுக்கு. அங்கு  எம்.எஸ்.ஸியை  முடித்த அவர்  பெங்களூர் திரும்பினார்

கிரணின்  அப்பா‘யுனைடெட்  ப்ரூவரிஸ்’ நிறுவனத்தில் ப்ரூ மாஸ்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மது  ஆலைகளில்  மது தயாரிப்பைக்  கவனித்துக்கொள்ளும்  ப்ரூ மாஸ்டர் வேலைக்கு  விண்ணப்பித்தார்  கிரண்.

நேர்முகத்  தேர்வுக்கு  அழைப்புக் கடிதம் வந்தது. தனது  அப்பா பணியாற்றும் நிறுவனம், அந்நிறுவனத்தின்  தலைவர்  விட்டல்  மல்லையாவுக்கு  சிறுவயதில்  இருந்தே  கிரணைப்  பற்றி  நன்கு தெரியும்.  படிப்பிலும்  கெட்டிக்காரியாக  இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் நேர்முகத் தேர்விற்குச் சென்றார்.

நேர்முகத் தேர்வில்  தொழில் ரீதியான  கேள்விகளுக்கு  சிறந்த பதில்களையே அளித்தார். இன்டர்வியூ செய்த  விட்டல் மல்லையாவுக்கும்,  மற்றவர்களுக்கும்  மிகுந்த மகிழ்ச்சி  கிரணின் பதிலால். ஆனாலும் வேலை  கிடைக்கவில்லை. அதற்கு ‘ யுனைடெட் ப்ரூவரிஸ்’  நிறுவனத்தின் முதலாளி சொன்ன காரணம்  கிரணின்  முகத்தில்  ஓங்கி அ றைந்தது போன்று இருந்தது.

“எங்கள் நிறுவனத்தில் சேருவதற்கான அனைத்து தகுதிகளும் உன்னிடம் இருக்கின்றன. ஆனாலும் வேலை கொடுக்க முடியாது.  ஏனென்றால் நீ ஒரு பெண். உனக்கு இந்த  வேலைகள் சரிபட்டு வராது. இது ஆண்களுக்கானது.  அதுமட்டுமின்றி ஏற்கனவே இங்கு பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆண்கள். வயதிலும், அனுபவத்திலும் உனக்கு சீனியர்கள். ஒருபோதும்  உன்னைப் போன்ற பெண்ணுக்குக்  கீழ் பணியாற்ற அவர்கள் ஒப்புக்  கொள்ள மாட்டார்கள். நீ வேறு வேலையைத் தேடிக் கொள்” என்று விட்டல் சொன்னதைக் கேட்ட கிரணுக்கு தூக்கிவாரிப்போட்டது.

என்னடா உலகம்… திறமை இருக்கு. அதற்கு மதிப்பு இல்லையே… வெறும் பாலினத்தை அளவுகோளாக வைத்து ஒரு நிறுவனத்தை நடத்தினால் எப்படி? திறமைக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஆண், பெண் என்று பேதம் பார்க்கப்படுகிறதே என்று நினைத்து மனம் உடைந்து போகவில்லை. தொடர்ந்து வேலையைத் தேடினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகள் கிரணின் வாழ்வு நேர்முகத் தேர்வுக்குச் செல்வதும், பெண் என்ற காரணத்திற்காக வேலை மறுக்கப்படுவதுமாகவே  கடந்தது. இதே காலகட்டத்தில் கிரணுடன் படித்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரு கட்டத்தில் தனக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்று கூட நினைத்து அஞ்சினார். ஆனால் அப்படி  எதுவும்  நடந்துவிடவில்லை.

ஒருநாள் “நான் சொந்தமாக தொழில் செய்யலாம் என்று இருக்கிறேன். அதற்கு ஒரு கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறேன்” என்று கிரண் சொல்லவும், “சபாஷ்… சரியான முடிவு” என்று பாராட்டிய அப்பா, கண்கள் கலங்க… “உன்னுடைய திறமையை நான் நன்கு அறிவேன். உன்னுடைய புத்திசாலித்தனமும், துணிவும் நீ எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றியைக் கொண்டு வந்து தரும்… உன் மீது யார் நம்பிக்கையை இழந்தாலும் நான் இழக்க மாட்டேன்… அதேபோல் யார் எதிர்மறையாகப் பேசினாலும் அதை ஒரு பொருட்டாக நினைக்காதே… நம்பிக்கையுடன் நட… உனக்கு பின்னால் இந்த அப்பா இருப்பார் உனக்குத் துணையாக… நீ சாதிக்கப் பிறந்தவள்… நிச்சயம் வெற்றி உனக்கே”  என்று சொன்னதுடன் தன்னுடைய வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்து “இதை வங்கியில் அடமானமாக வைத்து பணம் பெற்றுக் கொள்” என்று கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட கிரண்  அப்பாவுக்கு நன்றியைக்  கூறிக்கொண்டு அடுத்த கட்ட திட்டமிடுதலை ஆரம்பித்தார்.

கம்பெனி  ஆரம்பிப்பது  என்று முடிவு எடுத்தவர், அதற்காக தேர்ந்தெடுத்த  துறை தான் யாரும் அதுவரை  தேர்ந்தெடுக்காத, யோசிக்காத துறை… ‘என்சைம்’ எனப்படும் நொதிப்பொருட்களை உற்பத்தி  செய்யும்  தொழிற்சாலையை  தொடங்க முடிவெடுத்தார்.

அதற்குக் காரணம்  கிரணுக்கு  அயர்லாந்தில் இருந்து  வந்த ஒரு வாய்ப்பு. அயர்லாந்தில்  உள்ள ஒரு பயோடெக்னாலஜி  நிறுவனம்  இந்தியாவில்  ஒரு கிளையை  ங்களூரில் தொடங்க முடிவு செய்தது. அந்த செய்தி கிரணுக்கு கிடைக்க உயிரியல் பாடத்தில் பட்டம் பெற்றிருந்த கிரண் விண்ணப்பிக்கவும், அதற்கு ஒப்புதல் கிடைக்கவும் கம்பெனியை ஆரம்பிக்கும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். அதில் ஒரு விசயம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அயர்லாந்து நிறுவனம் கிளையைத் தொடங்கினாலும் அதனைத் தொடங்கும் செலவுகள் அனைத்தையும் கிரண்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னது.

வெறும்  10,000  ரூபாய்  முதலீட்டில்  செரிமானத்தை  துரிதப்படுத்தும் நொதிப்பொருட்களை உற்பத்தி செய்யும்  தொழிற்சாலையை  ஆரம்பிக்க  இடம்  தேடும் படலம் தொடங்கியது.

இங்கும்  பல தடைகள்…  என்ன மாதிரியான  பொருட்களை  உற்பத்தி  செய்யப்  போகிறார்கள்  என்று சொல்வதும்  பலருக்குப்  புரியவில்லை. ஒரு  பெண்ணுக்கு  வாடகைக்குக் கொடுத்தால் மாதம் தவறாமல் வாடகை கொடுப்பாரா… என்று  சந்தேகம் பலருக்கு… இப்படி  சில தடைகளால்  மனம் சோர்ந்து விடவில்லை  கிரண்.

“யாரும் இடம் தர வேண்டியதில்லை. எனக்கு வீடு இருக்கு. அங்கேயே நான் தொடங்கிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு  தன்னுடைய  வீட்டிலேயே நொதிப்பொருட்களை  உற்பத்தி செய்யும்  தொழிற்சாலையை  ஆரம்பித்தார் கிரண்.

1978ல் “பயோகான்” என்று  பெயரிடப்பட்டு  அழைக்கப்பட்ட  அந்நிறுவனத்தில் பப்பாளிப் பழத்தில் இருந்து  நொதிப் பொருட்களை எடுக்கும் வேலை என்று அறிவிக்கப்பட்டு வேலைக்கு பணியாட்களைத் தேடினார்கள்.  இப்படி பப்பாளி பழத்தில் இருந்து எடுக்கப்படும் என்சைம் இறைச்சியைப்  பதப்படுத்தப் பயன்படும்.

வேலைக்கு  பணியாளர்களைத்  தேடினார்கள். அதிகபட்சம்  5 பேர் தான்  தேவைப்பட்டார்கள். ஆனால்  அதுவுமே  கிடைக்கவில்லை. அதற்குக்  காரணமும்  விசித்திரமாக இருந்தது.

ஒரு  பெண்  துவங்கியிருக்கும்  தொழிற்சாலையில் நான்  பணியாற்றுவதா? அதற்கு  சும்மாவே இருந்துவிடுவேன்  என்று  கூறி யாரும்  வேலைக்கு  சேரவில்லை. ஒருவர்  மட்டும்  விருப்பப்பட்டு வந்தார்.

டிராக்டர்  மெக்கானிக்  செய்யத்  தெரிந்த  அவருக்கு ‘பயாலஜி’ சொல்லிக்  கொடுக்கப்பட்டு வேலை வாங்க வேண்டிய  சூழல்  தான்  அப்போது ஏற்பட்டது. சரி, ஆண்கள்  தான் இப்படி என்றால் ஒரு பெண்  தொடங்கியிருக்கும்  நிறுவனத்தில் நாம் பணியாற்றலாம் என்று ஒரு பெண் கூட முன்வரவில்லை  என்பதும்  ஒரு அ திர்ச்சி தான்.

இந்நிலையில்  தான்  ஒரு எதிர்பாராத திருப்புமுனை நிகழ்வு நடந்தது.  தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு தோழிக்கு அவள் வேலை செய்த நிறுவனத்தில் வேலை பறிபோக… கிரணின் பயோகனில் வேலைக்குச் சேர்ந்தார்.

சில  மாதங்களுக்குப்  பிறகு, ஒருநாள்  சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துக் கொண்டு இருந்த ஒரு மாணவன் பயோகான் நிறுவனத்தைத் தேடி வந்தார். தான் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்கு ‘என்சைம்’  தேவைப்படுகிறது… என்னிடம் அதைப்  பெற்றுக்கொள்ள பணம் இல்லை, நீங்கள் கடனாகக்  கொடுத்தால் பிறகு  பணத்தைத் தந்து விடுகிறேன் என்றார்.

1978ல் மாணவன்  கேட்ட  என்சைமின்  மதிப்பு 300 ரூபாய். அதை மாணவனுக்கு உதவித்தொகையாக  கொடுத்த கிரண் இன்னும்  தேவைப்பட்டால் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தார்.

சில ஆண்டுகளில்  படிப்பை  முடித்த  அந்த மாணவன்  வேலை தேடி வந்தது பயோகானுக்குத்தான். மாணவன் செய்த ஆராய்ச்சிக்கு வெளிநாட்டில் பணிவாய்ப்புகள் குவிந்தன. ஆனாலும்  கிரணின் உதவியும், அவரின் அணுகுமுறையும் பிடித்துப் போனதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பை வேண்டாம்  என்று  கூறிவிட்டு பயோகானில் சேர்ந்தார்.

இப்படி  பல  கதைகள்… பல  தடைகள்… பல முயற்சிகள் என்று பெரிய  போராட்டத்திற்குப்  பிறகே பயோகானில் பணியாளர்கள் சேர்ந்தார்கள்.

ஒரு வழியாக  பணியாளர்கள் பிரச்சனை  முடிவுக்கு வந்த நிலையில்  நிறுவனத்தை  விரிவாக்கம் செய்ய பணம்  தேவைப்பட்டது. வேலைக்கு  வருவதற்கே  ஆட்கள்  தயங்கிய  நிலையில் தொழிற்சாலைக்கு வங்கி மட்டும் கேட்டவுடனே பணத்தை கொடுத்துவிடுமா? இந்தியன் வங்கி,  கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.  வங்கி என்று அலைந்தவருக்கு  கனரா வங்கியும்,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் கடன் கொடுக்க,  அதைக்  கொண்டு  தன்னுடைய தொழிற்சாலையை  விரிவுபடுத்தினார்.

சில  ஆண்டுகளிலேயே   வெளிநாட்டிற்கு  ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தொழிலை விரிவுபடுத்தினார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று பலவற்றிற்கும் உற்பத்தி செய்த நொதிப்பொருட்களை  ஏற்றுமதி செய்தார்.

தொழில் விரிவடையும் போது  பணியாளர்களும்  அதிகரித்தார்கள். ஆனால்  அவர்களைத்  தக்க வைக்க பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது. பயோகானில்  பெரும்பாலானவர்கள் ஆராய்ச்சி சார்ந்த பணிகளையே செய்ததால், சம்பளம் மட்டுமே கொடுத்தால் அவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவர் அவர்களை தன்னுடைய நிறுவனத்தின் பங்குதாரர்களாக்கும்  பொருட்டு  லாபத்திலும் அவர்களுக்க பங்குகளை வாங்கினார்.  இதனால்  பல திறமையான  நபர்கள்  பயோகானை  நோக்கி வந்தார்கள்…

பல  ஆண்டு  அனுபவத்தில் நொதிப்பொருட்களை  மட்டுமே உற்பத்தி  செய்து கொண்டிருந்தால்  ஒரு கட்டத்திற்கு  மேல் விரிவடைய முடியாது என்பதை உணர்ந்த கிரண் தன் பார்வையை மருந்துகள் தயாரிப்புப் பக்கம் திருப்பினார்.

தகவல் தொழில் நுட்பம் வேகமான வளர்ந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் பயோடெக்னாலஜிக்கும் அதிக வாய்ப்புகள்  இருக்கும் என்பதை  உணர்ந்த கிரண் மருந்துகள் தயாரிக்க முடிவெடுத்து அதற்கான முதலீட்டுக்காக பயோகானின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்டார். ஒரே நாளில் 4500 கோடி ரூகாய் கிடைத்தது. நிறுவனமும் வேகமாக வளர்ந்தது. அவரிக்  சொந்த  வாழ்விலும் ஒரு மாற்றம்  ஏற்பட்டது.

மிகலும்  துணிச்சல்  கொண்ட பெண். வேலையில் மிகுந்த ஈடுபாடும் கவனமும் கொண்டிருப்பார். எந்த விசயத்திலும் ஆழமாக யோசித்தே முடிவுகளை எடுப்பார்… அந்த முடிவுகளும் விரைவாக எடுக்கப்படும்… இவைதான்  கிரணின்  வெற்றிக்குக்  காரணம் என்று  சொல்லும் ஸ்காட்லாந்தில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் ஜான் ஷாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜான் ஷா  சொன்னதைப்  போலதான்  இன்றுவரை  பயோகானுக்கு என்ன தேவைப்பட்டாலும் தான் மட்டுமே முடிவெடுத்து செயல்படுத்துகிறார். பெரிய தொழிலதிபராக தன் கணவர் இருந்தாலும் முடிவுகளை கிரண் மட்டுமே எடுக்கிறார் அதற்கு உதாரணமாக பலரும் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வு பயோகானில் ஜான் ஷா முதலீடு செய்ததை நினைவு கூறலாம்..

பயோகானில்  முதலீடு செய்யும்  சந்தர்ப்பம் வந்தபோது  தன்னுடைய மனைவியின்  நிறுவனம் என்று பார்க்காமல் தன்னுடைய ஸ்காட்லாந்து வீட்டை வித்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பயோகானின் பங்குகளை வாங்கினார் ஜான் ஷா.

சொந்தமாக  தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் மூன்று  அடிப்படை விசயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  1.  நான் உட்பட என்  நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.  2.  முதலாளி, தொழிலாளி  என்ற  பாகுபாடு இல்லாமல்  ஒருவரை  ஒருவர்  மதித்து  பணியாற்ற வேண்டும். 3.  யார் மீதும் பொறாமை கொள்ளாமல் அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட்டதால் தான் இந்த வெற்றி சாத்தியப்பட்டது என்று சொல்லும் கிரணின் பயோகான்  இன்று  உலகிலேயே  7வது  பெரிய  பயோடெக்னாலஜி கம்பெனியாக ஊழியர்களின் எண்ணிக்கையில்  உள்ளது.

பெண் என்று ஒதுக்கப்பட்டதையும் பெண்களுக்கு சாதகமான துறையல்ல இது என்று சொல்லப்பட்டதையும் சொந்தத்  தோழில்  தொடங்குவது தற்கொலைக்குச்  சமம் என்று கூறியதையும் தாண்டி இன்றும்  சாதிக்கும் பயோகானில்  கணிசமான  அளவில்  பெண்கள்  உயர்பதவிகளில் முக்கிய முடிவுகளை  எடுக்கும்  இடத்தில்  இருக்கிறார்கள்.

வெற்றி  பெற வேண்டும்  என்ற  அடங்காத ஆசைதான்  என்னை  வெற்றியை  நோக்கி  செலுத்தியது என்று சொல்லும்  பல போராட்டங்களைத்  தாண்டிய கிரண்  மஜம்தாரின் வெற்றி நிச்சயம் வணக்கத்துக்குறியது…

வெற்றியின் அடிப்படை…

துணிச்சலான  முடிவெடுக்கும்  திறன்

பொறுப்பும் , ஈடுபாட்டுடன்  கூடிய  உழைப்பு

வாய்ப்புகளைச்  சரியாகப்  பயன்படுத்திக்  கொண்டது.

தொலைநோக்குப்  பார்வை

சாதிக்க  வேண்டும்  என்ற வேட்கை..

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

1 Comment

  1. prijesh says:

    legend lady

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்