Home » Articles » நீங்கள்சாதனையாளரே!

 
நீங்கள்சாதனையாளரே!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

சாதனையாளருக்கு வழிகாட்டுதல்கள் தேவை என்பதைத் தெரிந்து கொண்டோம். அந்த வழிகாட்டிகள் எப்படி வழிகாட்டுகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துக்கு இதோ!

எனக்கு காது கேட்காது: நமது உடல் ஒரு மின்நிலையமாக இயங்குகிறது. மின்சாரம் எனும் உயிர்ச் சக்தியைத் தயாரித்து, மெய், வாய், கண், மூக்கு, காது, கைகள், கால்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளின் உபயோகத்துக்கும் அனுப்புகிறது. முறையாக சரியாக பயன்படுத்தினால், இந்த உறுப்புகள் தங்கள் தன்மையை தக்கவைத்துக் கொள்கின்றன.

முரண்பாடான உபயோகம் உறுப்புகளின் இயக்கத்தை சீர் குலைத்து விடும். அதனால் கண்களுக்கு கண்ணாடி அணிகிறோம்; காதுகளுக்கு சிறு மிஷின் வைக்கிறோம். முதுமையாலும், சரியான, தரமான உயிர்ச்சக்தி இல்லாததாலும் இந்த உறுப்புகளின் செயல்பாடுகள் குறைகின்றன.

இந்த நிலையில் முடங்கிவிடாமல், வழிகாட்டுகிறார் 74 வயது முதியவர். கோவை அருகில் 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் அவிநாசி. காசியில் பாதி அவிநாசி என இங்குள்ள சிவனைப் பெருமைப்படுத்திக் கூறுகின்றனர். முதியவர்தனது சட்டையின் பின்பகுதியில் “எனக்குகாதுகேட்காது” என எழுதி ஒட்டியுள்ளார்.

எளிமையாக, கௌரவமாக, சுயமான சம்பாத்தியத்தில் வாழ்வதற்காக நல்லநிலையில் வாழும் தன் வாரிசுகளைச் சார்ந்திராமல் உழைத்துப் பொருளீட்டி, வழிகாட்டி வருகிறார். இன்று இலவசங்களுக்காக வரிசையில் நாள் கணக்கில் கால்கடுக்க நிற்கும் பலருடன் ஒப்பிடும் போது இவர் சிறந்த வழிகாட்டி. இனி இவர் பேசுகிறார்:

“எப்போது என்று சொல்லத் தெரியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாகக் காது அதைக் கேட்கும் திறனை இழந்துவிட்டது. ரொம்ப சப்தமாகப் பேசினால், சில சமயம் இடது பக்கம் லேசாய்கேட்கும். என்னைப் பொறுத்தவரை, நான் செவிடன். ஆனால் அதைப் பற்றிக் கவலையில்லை.

பழகியவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். புதியவர்கள் என்னைப்பற்றித் தெரியாமல் சிரமப்படக் கூடாது என்பதற்காகவும், என்நிலையைத் தெரிந்துகொண்டால், வீணாக ஹாரன்சப்தம் கொடுத்து சிரமப்பட வேண்டாமே என்பதற்காகவும் சட்டையின் பின்பக்கத்தில் “எனக்கு காது கேட்காது” என எழுதி பின் போட்டுள்ளேன். இதில்  எனக்கு எந்த வெட்கமும் இல்லை.”

ஓய்வு எடுக்க வேண்டியது 74 வயது என இன்றைய இளைஞர்களின் கூற்று. ஆனால், ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபெட்டில் வைத்து, பொருட்களின்  மீது  விலையை ஒட்டிவைத்து, கிராமங்களுக்குச் சென்று விற்று தினமும், சுமார் ரூ. 100 முதல் ரூ. 150 வரை சம்பாதித்து மகிழ்ச்சியாக, யாருடைய தயவின்றியும் வாழ்கிறார்.

இவரது பொருட்களின் மதிப்பு ரூ.2முதல்ரூ.20 வரை தான்.வாடிக்கையாளர்களும் இவரைப் பற்றித் தெரிந்து கொண்டு பேரம் பேசாமல் பொருளை வாங்குகின்றனர். சிலர் காசு கொடுக்கவிட்டாலும் கேட்காத நல்ல மனிதர்.

ஏழைக் குழந்தைகளுக்கு விசேடமான நாட்களில் இலவசமாக பரிசுப்பொருட்கள் கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சியில்  தானும் மகிழ்ந்து வருகிறார்.

இன்று படித்துப் பட்டம் பெற்று, அந்தத் தகுதிக்குச் சரியான பணி கிடைக்கவில்லை என்று குடும்பத்துக்குப் பாரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞர்களும் உள்ளனர். அவர்களை ஆதரித்து வரும் அறிவில்லாத பெற்றோர்களும் உள்ளனர். அவர்களுக்கெல்லாம  சிறந்தவழிகாட்டி அவிநாசி கல்யாணசுந்தரம் அவர்கள்.

நோயற்ற வாழ்க்கை:

அடுத்த வழிகாட்டி 92 வயதான பாட்டி; இவர் இதுவரை எந்த மருத்துவமனைக்கும் சென்றதில்லை. சிறுசிறு உடல் உபாதைகள் வந்தால்கூட, யோகாசனம் செய்தே குணப்படுத்திக் கொள்கிறார்.

கண்பார்வைக் குறைபாடு, முதுகுவலி, மூட்டுவல என்ற எந்தப் பிரச்சனையுமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் கோவையைச் சேர்ந்த ஞானாம்பாள் பாட்டி.

தினமும் பல யோகாசனங்களைக் கடமையாகச்செய்து வருகிறார். இன்றைய சாதனைக்கு, வெற்றிக்கு அடிப்படைத் தேவை ஆரோக்கியமான உடல். பொங்கலை சுவைத்த நாக்குகள் இன்று பீசாவை ருசி பார்ப்பதாலும், அதிகாலை எழுந்த இளைஞர் கூட்டம், கல்வியால், பெற்றபணியால் இயற்கைக்கு முரணாக, அதிகாலையில் உறங்கச் செல்வதாலும், நேரமில்லை என ஓடுகின்றனர்.

ஆனால், மணிக்கணக்கில் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்து உடல்நோய்க்கு சிகிச்சைபெறும் அவலநிலையை அன்றாடம் பார்க்கிறோம். ஏன்?வியாதி. அதைக் குணப்படுத்த சாப்பிடும் மருந்துகளின் அலர்ஜி  என்ற  நிலைதான்.

தினமும் அரைமணிநேர உடற்பயிற்சி உடலைலகுவாக்கும்; நோய்களை குணப்படுத்தும்; புதிய நோய்களுக்கு இடம்தராது. சிறுவயது முதலே யோகாசனங்கள் செய்து ஆரோக்கியமாய் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வரும் வழிகாட்டி  தான்  92  வயதான  ஞானாம்பாள் பாட்டி. வாழ்க அவர்.

பற்றாக்குறை:

பேராசை,  மக்கள்  நலனில் அக்கறையின்மை போன்ற பல காரணங்களால் இன்று விலைவாசி அதிகரித்துவிட்டது. குடும்பத்தை நடத்த சிரமம். கணவனின்  வருமானம் மட்டும் போதவில்லை. எனவே, பல குடும்பங்களில் படித்த பெண்களும் சரி,படிக்காத பெண்களும் சரி, அவரவர் தகுதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று, கட்டாயமாகப் பொருள் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

பலர் வெளிநாடுகளுக்கும் சென்று பணிபுரிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தனியாகத்தான் வளைகுடாநாடுகளில் உள்ளனர். குடும்பத்துடன் வசித்தால் செலவு அதிகம்.

இதோ சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கீதாசந்திரசேகரன், துபாயில் தன் ஓய்வு நேரத்தை உபயோகமுள்ளதாக்கி,  பொருளீட்டி,  குடும்பத்துக்கு ஆதரவாயுள்ளார்.

Quilling என்று கூறப்படும் பழைய பேப்பர் மூலம் பொம்மைகளை வடிவமைக்கும் கலையைச் சுயமாகவே கற்றுக் கொண்டார். இவர் தயாரித்த பொம்மைகளை விற்பனை செய்வதுடன், பலருக்கு இந்தக் கலையைக் கற்றும் தருகிறார். ஓரளவு  வருமானம்  வருகிறது என்றுசொல்கிறார்.

இவருடன் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்கள் பெற, இதோ மெயில் முகவரி SANGI2277@YAHOO.COM (அனைத்தும்  சிறிய  எழுத்துக்களில்)

ஒரு குடும்பத்திற்குத் தேவையான அளவு பணம்இருந்தால், தட்டுப்பாடு வராது; அதனால் துன்பம் கிடையாது. முடிந்தவர்கள்சந்தோஷமாய் சிரித்து மகிழலாம்.

சிவப்புப்படை:

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கூறிய காலம் காணாமல் போய்விட்டது .உத்திரப்பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் பகுதியில் படித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், சிறுபிரச்சனைகளுக்கும் கூட, துப்பாக்கிக்குண்டுகளை உபயோகிக்கும் முரட்டுத்தனம் மேலோங்கிவிட்டது.

கடத்தல், ஜாதிமோதல், அடிதடிசகஜம். மேல்தட்டு மக்களின் செல்வாக்கு போலீசையும் செயல்பட வைப்பதில்லை. கீழ்த்தட்டு மக்கள்பொறுத்துப் பார்த்தார்கள்.“தன்கையே  தனக்கு  உதவி” எனப் பொங்கி எழுந்துவிட்டனர்.

22 லிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே உள்ள பாதுகாப்பு அணியை உருவாக்கிக் கொண்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த  அணியில் உள்ளனர். இவர்கள்  அணிவது இளம் சிவப்பு நிறப்புடவை. தினமும் காலை, மாலை, கைகளில் பெரியதடிகளுடன் ஒன்றுகூடி, பொது இடத்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் பெண்கள் படைக்கு 47 வயதான சம்பத்பால்தேவி தான் தலைவி. எந்தப் பிரச்சனை என்றாலும் கையில் தடிகளுடன் அங்கு ஆஜராகின்றனர். முதலில் சமாதானப் பேச்சு; அதில் தீர்வு இல்லையென்றால், கையிலுள்ள தடியைச் சுழற்றி, பிரித்து மேய்ந்து விடுகின்றனர்.

ஜாதி மோதல்கள், ரேஷன்கடை பிரச்சனைகள், கற்பழிப்பு, கேலி, வரதட்சனை கொடுமை, குடித்துவிட்டுத் தகராறு செய்வது என எல்லாப் பிரச்சனைகளும் போலீஸ்நிலையத்துக்கு முன்னால் செல்வது இவர்களிடம்தான். இவர்களிடம்  ஒரு தலைப்பட்சமான  போலீசும் தப்பவில்லை.

இவர்களால் அந்தப்பகுதியில் அனைத்து மக்களுமே,குறிப்பாகப் பெண்கள் பயமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களது  தன்னலம் கருதாத சேவைக்கு  கிடைத்துள்ள  வெகுமதிகள் இதோ

அரசுஅதிகாரிகளைத் தாக்குதல்,உணவுப் பொருட்களைக் கடத்துதல், சட்டவிரோதமாய் கூடுதல்போன்ற பல வழக்குகள். ஆனால், இவர்கள்சொல்வது அடி உதவுவது போல், அண்ணன்தம்பி உதவுவது இல்லை. நியாயமான பிரச்சனைகளுக்கு மட்டுமேசெல்கிறோம். வழக்குகளைப் பற்றிக்கவலைஇல்லை. தேவையில்லாமல் பிரச்னை செய்பவர்களைப் பின்னிபெடலெடுத்து விடுவோம்  என்று  வழி காட்டுகின்றனர்.  இவர்களெல்லாம்   சிறந்த வழிகாட்டிகளே

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

1 Comment

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்