Home » Cover Story » உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!

 
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!


ஆசிரியர் குழு
Author:

திரு. எஸ். சின்னுசாமி
நிறுவனர், “தி பிரிசிசன் சயின்டிபிக் கோ”
கோயம்புத்தூர்

“வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவும் கிடைப்பதில்லை” என்பதனை உணர்ந்து அமைந்ததை தைரியமாக செயல்பட்டு செய்யும் தொழிலில் தனி இடத்தைப் பெற்றிருக்கும் கடின உழைப்பாளி இவர்,

உன் நிலை எப்படிப்பட்டதாகினும் கவலைப்படாமல் இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு முன்னேறியபடி இரு என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு. அவர் வாக்கிற்கேற்பவே கவலைகளைக் கடந்து விடாமுயற்சியால் அடுத்தடுத்து தொழில்களில் கால்பதித்து சாதித்து வருபவர்,

சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் செயல்படுகிறவருக்குத்தான் இந்த உலகம் சொந்தம் என்பார்களே அப்படியாய் 60-லிலும் சுறுசுறுப்போடு ஆர்வத்தோடு உழைத்து உறவுகளையும் – நல்ல நட்புகளையும் ஒருங்கிணைத்து பலருக்கும் பாதையாக இருந்து வருபவர்,

ஒருவரிடம் உள்ள பணம், மதிப்பு, மரியாதை, அறிவு அனைத்தையும் காட்டிலும் தலைசிறந்தது நல்ல சுபாவம் என்பார்கள். அந்த நல்ல சுபாவம் கொண்டவராக கல்விக்கு, மருத்துவத்திற்கு, ஆன்மீக பணிகளுக்கு பெரும் சேவை புரிந்து வருபவர்,

இப்படி பல்வேறு சிறப்புகளுக்கு உரியவரான திரு. சின்னுசாமி அவர்களை டாக்டர் செந்தில் நடேசன், ஆசிரியர் க. கலைச்செல்வி அவர்களுடன் நாம் சந்தித்த போது “நம்மைப் படைத்தவர், அபார வலிமையோடு திறமையோடு தான் படைத்திருக்கிறான். இதை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்” என்றவரோடு இனி நாம்…

உங்களைப் பற்றி?

எனது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகிலுள்ள காவிரிக்கரையின் மேல் அமைந்துள்ள கொக்கராயன் பேட்டை. எனது தந்தை செங்கோட கவுண்டர். தாயார் பாவாயி அம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி பழனிச்சாமி (நிறுவனர், சின்னம்மாள் டிம்பர்), தங்கை சகுந்தலா.பள்ளிக்கல்வியை அதே ஊரில் முடித்து, மேல்நிலைக் கல்வியை ஈரோட்டிலும், கல்லூரிப் படிப்பை (B.A. Economics) சென்னையிலும் முடித்தேன். எனது தங்கை கணவரின் பிரிசிசியன் சயின்டிபிக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். முதன் முதலாக சயின்டிபிக் கம்பெனியை சென்னையில் 1964ல் ஆரம்பித்த அவரிடம் 1969ல் இருந்து பாடம் கற்றுக்கொண்டது என்றுமே மறக்க முடியாதது.என் மீது அவர் கொண்ட நம்பிக்கை, பாசத்தின் காரணமாக கோயம்புத்தூரில் உள்ள பிரிசிசியன் சயின்டிபிக் நிறுவனத்தை என்னிடம் 1974ல் ஒப்படைத்தார். காந்திபுரம் ஜி.பி. பேருந்து நிறுத்தம் அருகில் சிறியதாய் இருந்த இந்நிறுவனமே, இனி நமக்கு எல்லாமும் பெற்றுத்தரப்போவது என்று அயராது உழைக்க ஆரம்பித்தேன்.

வாடிக்கையாளர்களை வரவேற்று அவர்களுக்கு தேநீர் வாங்கி வந்து உபசரிப்பதில் இருந்து, அலுவலகத்தை பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது வரை நானே பார்த்தேன். அலுவலகம் தான் வீடு. ஆர்டர் எடுப்பது, லாரி அலுவலகத்தில் இருந்து பார்சலை எடுத்து வருவது, பில் போடுவது, டெலிவரி செய்வது இப்படி அத்தனை பொறுப்புகளையும் தனி ஒருவனாக இருந்தே செய்தேன்.

இத்தனைக்கும் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் வியாபாரம் ஆனாலே அது பெரிய வியாபாரம். அந்த வியாபாரத்திற்கு அவ்வளவு போராட்டம் இருக்கும். ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு அப்போது ஆர்டர் கொடுத்தாலே அது எனக்கு பெரிய ஆர்டர்.

படிப்பிற்கும், தொழிலுக்கும் சம்பந்தமே இல்லையே?

உண்மை தான். ஆனாலும் படிக்கும் காலத்திலேயே இன்ஸ்ட்ரூமண்ட் உடன் ஏதேனும் ஆராய்ச்சியில் இருந்து கொண்டே வளர்ந்தேன்.அரசு உத்தியோகத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்றாலும் என் தங்கை கணவரின் வழிகாட்டுதலில் இத்துறைக்கு வரவேண்டியதாக அமைந்தது. அமைந்ததை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு நன்கு செயல்பட்டேன். இன்று நல்ல முறையில் வளர்ந்திருக்கிறேன். மைக்ராஸ்கோப்பை கையாள்வதில் நன்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறேன். எல்லாமே பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் போது உன்னிப்பாகக் கவனித்து அதனை நான் தனியாக செய்து பார்த்து இத்துறையில் என்னை நான் உயர்த்திக் கொண்டேன்.

எது அமைகிறதோ அதை சிறப்பாக அமைத்துக் கொள்வது நம்முடைய உழைப்பிலும், விடாமுயற்சியிலும் தான் இருக்கிறது.

அன்றும், இன்றும் இத்துறையின் வளர்ச்சி…

பள்ளிக்கல்வி என்பது வரை இத்துறையில் பெரிய மாற்றம் இல்லை. மேல்நிலைக் கல்வி பாடப்பிரிவு வந்ததற்கு பின்பு, புதிது புதிதாக தொழில்நுட்ப வளர்ச்சி என்று வந்த போது இத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆயிரம் ரூபாய் ஆர்டர் என்பது இன்று சர்வசாதாரணமாக லட்சமாகியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதிது புதிதாக இன்ஸ்ட்ரூமண்ட் வாங்கப்பட வேண்டியதாக இத்துறை வளர்ந்து கொண்டே போகிறது.

போட்டியாளர்கள் நெருங்க முடியாத வளர்ச்சியைப் பெற்ற பிரிசிசன்ஸ் நிறுவனத்தை உயர்த்தியிருக்கும் உங்களுக்கு மாற்றுத் தொழில் சிந்தனை எழுந்ததா?

நிச்சயம் எழுந்தது. எனது மனைவியின் தம்பி படிப்பை முடித்துக்கொண்டு வந்தபோது அவருக்காக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தேன். அவருக்குள்ளும் தொழில் ஆர்வம் இருந்தது. அதற்கேற்பவே காலம் கை கூடி வந்தது. வெங்கடேஸ்வரா பேக்கேஜிங் நிறுவனத்தை 1983ல் ஆரம்பித்துவிட்டோம். இன்றைக்கு பேக்கேஜிங் துறையிலும் உயர்ந்தே நிற்கிறோம். ஒருவர் எத்தனை தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம். ‘மேன் பவர்’ இருந்தால் மனித ஆற்றல் தான் எல்லா சாதிப்பிற்கும் காரணம். எனக்கு அது என் சொந்தங்களின் மூலம் நிரம்பவே கிடைத்திருக்கிறது.

போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நாங்கள் வளர்ந்து நன்கு அனுபவம் பெற்றவர்களாக இத்துறையில் இருக்கிறோம். புதிதாக கல்லூரியோ, தொழில் நிறுவனமோ ஆரம்பிக்கிற போது முதல் தரம் கொண்டவர்களைத் தான் தேடுவார்கள். நாங்கள் அந்த இடத்தைப் பெற்றிருப்பதால் எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல் நேர்த்தியாக, நாணயமாக தொழிலைச் செய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களே புது வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அதனால் நாங்கள் போட்டியாளர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

நாம் நம் வேலையை தவறுக்கு இடம் கொடுக்காது சரியாக செய்தால் தொழிலில் எத்தனை பேர் வந்தாலும் சரிவு இருக்காது. உயர்வு தான் இருக்கும்.வெற்றி என்பது ஒரு குழுவைப் பொறுத்தது. எங்கள் குழுவில் என் மனைவியின் தம்பியும், மூத்த மாப்பிள்ளையும் இருப்பது எங்களுக்கு பெரும்பலம்.

இந்தச் சாதிப்பிற்காக நீங்கள் இழந்தது?

கொஞ்சம் நஞ்சமல்ல. வீட்டை மறந்து உழைப்பு உழைப்பு என ஒவ்வொரு நாளும் படாதபாடு பட்டிருக்கிறேன். அழுக்குத் துணி சேர்ந்தால் தான் வீடு நினைவு வருகிறது. இல்லையென்றால் வீடே நினைவுக்கு வருவதில்லை என்று என் மனைவி அப்போது சொல்வார். அந்த அளவு வீட்டை மறந்து உழைத்திருக்கிறேன்.

72ல் திருமணம், 74ல் தனியாக இத்தொழிலுக்கு வந்தேன்.கடன் வாங்கி பழக்கமில்லை. மனைவியின் நகைகளை விற்று தொழிலை விரிவுபடுத்த நான் கஷ்டப்பட்டபோதெல்லாம் குடும்பத்தை, குழந்தைகளைக் கவனித்து எனக்கு பலமாக இருந்தவர் என் மனைவி.தியாகம் இல்லாமல் சாதிப்புகளை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்பதை என் மனைவியும் உணர்ந்தார்கள். நானும் உணர்ந்தே உழைத்தேன். இன்று அதை அனுபவிக்கிறேன்.

இளைய தலைமுறைக்குத் தேவை இது என்று நீங்கள் கருதுவது?

பொறுமை. மேலும் புதுத்தொழில் ஒன்று தொடங்கும்போது அதில் ஏற்றம் இறக்கம் வரலாம். இறக்கம் வரும்போது துவண்டுவிடக் கூடாது. விடாமுயற்சியோடு போராடும் குணத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களால் இன்றும் மறக்கமுடியாதது?

வாடிக்கையாளர்களைச் சந்தித்து ஆர்டர் எடுத்திருக்கிறேன். ஒன்றுக்கு பத்து தடவை சென்றாவது ‘ஆர்டர்’ எடுத்துவிடுவேன். ஆனால் முதன்முதலாக நான் உங்களிடம் தோல்வி அடைந்திருக்கிறேன் என்று ஒரு நூற்பாலை மேலாளரிடம் தோல்வியை ஒப்புக்கொண்டேன். அது எனக்கு வருத்தம் தான். என்றாலும் இவரிடமும் ஆர்டர் பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கவே செய்தது. அந்த நம்பிக்கை வேறொரு ரூபமாக அவரே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுக்குமளவு செய்தது. அதை இன்றும் என்னால் மறக்க முடியாது.

கூடவே, பள்ளி ஒன்றிற்கு தேவையான கெமிக்கல் எடுத்துக்கொண்டு போகும் போது, அதிக எடை காரணமாக, தனியாளாக அதனை பள்ளி வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல முடியவில்லை. உதவிக்கு ஒரு மாணவனை அழைத்துக்கொள்ள, ஆசிரியர் ஒருவரிடம் உதவி கேட்ட போது அவர் என்னை உதாசீனப்படுத்திவிட்டார். அதற்காக கோபப்படாமல் நானே மெல்ல மெல்ல நகர்த்தி வேலையை முடித்துவிட்டு வந்தேன். அதே பள்ளிக்கு இப்போது நான் போனால் அவர்கள் கொடுக்கும் மரியாதை என்பதே வேறு. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே நமக்கு எல்லாம் பெற்றுத்தரும் என்பதை அடுத்த தலைமுறை உணரவேண்டும் என்பதற்காகத்தான்.

விவசாயப் பாரம்பரியம் இருந்தும் விவசாயத்தின் பக்கம் நீங்கள் சொல்லாது இருப்பது ஏனோ?

விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் விவசாயத்தின் மீது பற்றுதல் இல்லாமல் போக என் தந்தையும் ஒரு காரணம். எப்படியென்றால் விவசாயத்தை நான் கவனித்துக் கொள்கிறேன். வேறு தொழிலைத் தேடி நீ நகர்ப்புறம் சென்று நாலுபேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர வேண்டும் என்று அப்போதே என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவரின் எண்ணப்படியே இன்று பலபேருக்கு வேலை வாய்ப்பு அளிக்குமளவு உயர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே. இன்று விவசாயத்தின் மீது நாட்டம் இல்லை என்றாலும், எதிர்வரும் காலத்தில் விவசாயத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை உணர்பவனாகவே இருக்கிறேன்.

நன்றிக்குரியவர்கள்…

டாக்டர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி (TNAU-விற்கு அறிமுகப்படுத்தியவர்), டாக்டர் சுப்பிரமணியம் (தொழில் கூடங்களை அறிமுகப்படுத்தியவர்), டாக்டர் ஆறுச்சாமி (எப்போதும் உதவிக்கரம் நீட்டுபவர்), தலைமை ஆசிரியர் திரு. கல்யாணசுந்தரம் (என் மீது அதிக அக்கறை கொண்டவர்), திரு. பழனியப்பன் சகுந்தலா (தொழிலைக் கொடுத்தவர் மற்றும் தொழில் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தியவர்) மற்றும் எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அலுவலர்கள்.

இளைய தலைமுறை தொழிலை துவங்கும்போது கவனிக்க வேண்டியது…

  • துவக்கும் தொழிலைப் பற்றிய அறிவு
  • உடனே லாபத்தை எதிர்பார்க்காமல் தொழிலை நிலைபெறச் செய்வதற்கான முயற்சி
  • இழப்புகள் வரும்போது பொறுமை
  • ஆண்டுகள் கடந்தாலும் வெற்றிக்கான விடாமுயற்சியை தொடர்தல்
  • அடிக்கடி தொழிலை மாற்றாத மனப்பக்குவம்

தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ள நீங்கள் தரும் ஆலோசனை?

தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள காலம். தொழிலாளர் ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அதனை புரிய வைக்கத்தான் வேண்டுமே தவிர புறப்பட வைக்கக்கூடாது. அடுத்த நாளே அவர் வேறொரு தொழில் நிறுவனத்தில் வேலையில் அமர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, தொழிலாளர்களிடம் அனுசரித்துப் போக பழகிக்கொள்ள வேண்டும். அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தொழிலில் வெற்றிக்கு உற்பத்தி மேலாண்மை, நிதிநிலைமை – இதில் எது முக்கியமானது?

முதலில் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம். அடுத்து தொழில்நுட்பம். அதற்கடுத்தது தான் பணம்.

‘பார்ட்னர்ஷிப்’ தொழில் வெற்றி பெறத் தேவை?

  • ஈகோ இருக்கக் கூடாது
  • நம்பிக்கை இருக்க வேண்டும்

தொழில் ‘மன அழுத்தம்’ தவிர்க்க…

வேலைகளைப் பங்கிட்டுத் தர வேண்டும். எல்லாவற்றையும் தானே எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது.

பிறரின் செயல்பாட்டைக் கண்டு மகிழும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடன் பணிபுரிபவர்களின் மீது நம்பிக்கை வேண்டும். அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் காலத்தில் இத்துறையின் வளர்ச்சி என்பது எப்படி இருக்கும்?

நன்றாகவே இருக்கும். அழிவில்லாத தொழில் இது. தொழில்நுட்பம் வளர வளர வளர்ந்து கொண்டே இருக்கும்.

உங்கள் குடும்பம் பற்றி…

பிரிசிசன் கெமிக்கல் நிறுவனத்திலிருந்து இப்போது வெங்கடேஸ்வரா பேக்கேஜிங், ஜெய் விக்னேஷ் ஸ்பின்னர்ஸ் என்று தொழிலில் மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு குடும்ப உறவுகளே பக்கபலமாக இருந்து வருகிறார்கள். என் மனைவி சாந்தி, சாந்தியின் தம்பி வேலுச்சாமி, மகள்கள் கலைச்செல்வி, புவனேஸ்வரி, சுபத்திரா மற்றும் மருமகன்கள் சண்முகசுந்தரம், அரவிந்த், சிவக்குமார்.

‘தன்னம்பிக்கை’ இதழ் குறித்து…

வரவேற்கத்தக்க இதழ்.பயனுள்ள கட்டுரைகள் அதிகம். ஒவ்வொருவரும் பொறுமையாக படித்தால் நிச்சயம் பெருமையைப் பெறும் உந்துதல் கிடைக்கும்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்