Home » Post » சித்திரைக் கனி-புனிதா

 
சித்திரைக் கனி-புனிதா


ஆசிரியர் குழு
Author:

ஏழை ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் என்ன சேர்த்து வைக்க முடியும்? நடுத்தரக் குடும்பங்கள் எல்லாமே இப்படித் தான். இல்லாமையை வெளியில் சொல்லவும் முடியாத நிலை. அம்மாவின் நினைவாக அந்த ஒரு கழுத்துச் செயினையாவது பாதுகாத்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டேன். நாங்களே இல்லாத நிலை ஏற்படுமானால் பிறகு பாதுகாத்து வைப்பது எதற்காக? தாயின் நகை மகளுக்கு ஆகும் என்பார்கள். என் தாயின் நகை எங்கள் வயிற்றுக்குத்தான் ஆகியது.
அப்பாவின் ஓய்வு ஊதியத்திற்குப் பல நாள் பலமுறை நடந்ததுதான் மிச்சம். எல்லாரும் அனுதாபத்தோடு பேசுகிறார்கள். ஆனால் செயலில் ஒன்றுமே நடைபெறவில்லை. அதிலும் சிலர் என் இளமைக்காக ஆசைப்பட்டு அனுதாபப் பட்டதே அதிகம் என்பதை இந்த ஓராண்டு அனுபவம் நன்றாக எடுத்து விளக்கியது.
சொந்தக்காரர்களோ, சொல்ல வேண்டியதில்லை. ‘இருந்தால்தான் சொந்தம்’ . . . அவர்களைப் பற்றி எனக்கு எப்போதும் பரிதாபமே தோன்றியது. ‘இல்லாத ஊருக்கு வழி’ கூறிக்கொண்டிருப்பார்கள். அப்படி இருக்க வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள், யாருக்கு வேண்டும் அறிவுரை? நடைமுறைக்கு ஒவ்வாத அறிவுரைகளால் என்ன பயன்?
அப்பா யார் யாருக்கோ சொல்லி அனுப்பி வரச் சொல்லுவார்கள். அவரைப் பார்க்க யார் வருவார்கள்? அவர் என்ன அமைச்சரா? அமைச்சர்கள் நிலையே பதவியில் இருக்கும் வரைதான். அப்படி இருக்கும்போது?
‘துன்பம் வந்துற்ற போது அறிவில் தெளிவும் இருக்காது’ என்பார்கள். அது மிகவும் உண்மைதான் போலும். இந்த நிலையில் எனக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற ஆசையும் அப்பாவுக்கு இருந்ததை அறிந்து வேதனைப் பட்டேன். பெற்ற தந்தைக்கு இருக்க வேண்டிய நியாயமான உணர்வுகள் அவருக்கும் இருந்ததில் வியப்பில்லை.
எங்கள் நிலை என்னை ஓர் ஆண்மகனாவே ஆக்கி விட்டது. இரண்டு தங்கைகளும் நிலையை உணர்ந்து நன்றாய்ப் படித்தார்கள். எங்களுக்குள் ஒரு வெறியே மூண்டிருந்தது. இந்த உலகை எதிர்த்துப் போராடுவது என்ற வெறிதான்.
எங்கள் துன்பத்தை வேறு ஒருவர் மீது சுமத்த நான் என்றுமே விரும்பவில்லை. சொந்தக்காலில் நிற்பதையே பெரிதும் விரும்பினேன். பிறர் என்மீது அனுதாபப்படும் போது எனக்கு வெறுப்பே வளர்ந்தது. ‘எனக்காக யாரும் அனுதாபப்பட வேண்டியதில்லை’ என்று சொன்னபோது சிலருக்கு எரிச்சலாகவும் இருந்தது. இந்த நிலையில் இவளுக்குத் தலைக்கனம் என்றார்கள். இருந்தாலும் நான் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. ‘அனுதாபங்கள் நன்மை செய்யாது’ என்பது எனது திடமான முடிவு. என் தந்தைக்காவும் தங்கை களுக்காகவும் என்னைத் தியாகம் செய்து விடுவது என்று உறுதி பூண்டேன்.
ஆனால்?
அந்த ஒரு நிகழ்ச்சிதான் என்னை இன்னும் பெண்ணாக வைத்திருக்கிறது.
அவரை மட்டும் சந்திக்காமலே இருந்திருந்தால்?
அவரை நினைக்கும் போதெல்லாம் என் அடிவயிற்றின் ஆழத்திலிருந்து ஒரு வகையான உணர்வு தோன்றித் தோன்றி என்னைத் துடிதுடிக்கச் செய்து விடுகின்றது.
அது என்ன உணர்வு? இன்ப உணர்வா? துன்ப உணர்வா? இரண்டும் கலந்தா! அதுதான் . . .
என்னைப் பற்றிக் கவலைப் படுவதைவிட அவரைப் பற்றிய கவலையே எனக்கு அடிக்கடி உண்டாகிறது.
என்மீது காட்டிய அன்பால் அவரது வருங்கால வாழ்வுக்கு ஏதேனும் தொல்லை நேர்ந்து விடுமோ என்ற அச்சமே எனக்கு அதிகமாகி வருகிறது.
ஒன்றுமே பேசாமல் அவரது பேச்சுக்களையே கேட்டுக் கேட்டு மகிழ்ந்தவள். . .
கேட்டதற்கெல்லாம் ஏதேனும் பொதுவாகப் பேசிக்கொண்டே இருந்தவள் . . .
அவர் என்னைச் ‘சகுந்தலை’ என்ற வருணித்தபோது. . . ‘துஷ்யந்தன் ஆகாமல் இருந்தால் சரி’ என்றேன்.
அப்போதும் பேசாமல் இருந்திருந்தால் இன்று இந்த வேதனைக்கு ஆளாகி இருக்க மாட்டேன்.
அவர் அன்பை ஏற்றுக் கொண்டுதானே அப்படிச் சொன்னேன்? எத்தனைமுறை இந்தக் கேள்வியை என்னுள் கேட்டுக் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.
அந்த வார்த்தைச் சொல்லும்போது என்னையும் அறியாமல் தான் சொன்னேன். என்னைவிட என் உள்ளம் அவரை விரும்பி விட்டதோ?
நான் வேறு என் உள்ளம் வேறா?
எப்படியோ அவரது அன்புக்கு நான் ஆட்பட்டு விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான் என்னையும் அறியாமல் என் உள்ளம் அவர்பால் சென்றுவிட்டது. அவர் கொடுத்த சண்பக மலரை நீண்டநேரம் கையில் வைத்திருந்தேன். பிறகு அதனைத் தலையில் வைத்துக் கொண்டேனே அதற்குப் பொருள்
என்ன?
அவர் யார்? நான் யார்? இதையெல்லாம் அறிந்து கொள்ளும் முன்பே எங்களுள் அன்பு மலரத் தொடங்கி விட்டதோ? அதற்குப் பிறகும்கூட நாங்கள் யார் யார் என்று தெரிந்து கொள்வதில் அதிகம் அக்கறை காட்டிக் கொள்ளவில்லையே ஏன்?
நான் புறப்படும் நிலையில் தாகூரின் ‘கனி கொய்தல்’ என்ற கவிதை நூலை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். ஒரு கவிதையின் சில வரிகளை எழுதி ‘என் அன்புப் புனிதாவுக்கு’ என்று கையெழுத்திட்டிருந்தார். புத்தகத்தில் இடை இடையே சில வரிகளில் அடிக்கோடும் இட்டிருந்தார். எழுதியிருந்த அந்தக் கவிதை வரிகள் அவர் உள்ளத்தைத் தெளிவாக்கி இருந்தன.
எந்தப் பொற்பாதங்கள்!
என் இதயப் பாதையில்
நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டாக்கினவோ!
எந்தப் பூ விழிகள்
என் நெஞ்சில்
புதிய புதிய
கனவுகளைப் படைத்தனவோ
அவற்றிற்கு . . .
இந்தக் கவிதையை நானும் படித்திருக்கிறேன். வங்கக் கவியின் நூலில் தமிழ்க் கவிஞரின் கவிதையை ஏன் எழுத வேண்டும் என்ற சந்தேகம் இருந்தது. தாய்மொழியில் உணர்த்தும் பொருளைப் பிற மொழியில் உணர்த்தமுடியுமா?
அந்தக் கவிதையின் ஆழ்ந்த பொருளை முன்னர் படிக்கும் போது இந்த அளவுக்கு உணரவில்லை. இப்போது? அவர் கைபட்டு எழுதியவுடன் என்னென்னவோ பொருள்கள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன.
என் பாதங்கள் பொற்பாதங்களாம்! அவை அவர் நெஞ்சப் பாதையில் நடந்து, அவரைக் கவிஞராக்கியதாம்! எத்தனை நாட்கள் நடந்தன? என் விழிகள் பூ விழிகளாம்! அவர்க்குப் புதிய புதிய கனவுகளை உண்டாக்கினவாம்! இவை எல்லாம் என்னால்தானாம்!
‘காதலுக்குக் கண் இல்லை’ என்பது எவ்வளவு உண்மை. அவரது அமைதியான வாழ்க்கையில் என் வருகை ஒரு சலனத்தை உண்டாக்கி விட்டது என்றே தோன்றியது. ஆனால் என் நிலை?
அந்த இனிய நாட்களை எண்ணி மகிழும் நிலையிலா நான் இருக்கிறேன்? ‘நாளைக்கு என்ன செய்வது?’ என்ற நிலையில் இந்த நினைப்புகள் எல்லாம் ஏன்? ஏழைகட்குக் காதல் உணர்வுகளும் வேண்டாதவைதான். அன்று அவரைச் சந்திக்க நேர்ந்த காலத்தில் என் தாயும் உயிரோடு இருந்தார். என் தந்தையும் உடல் நலத்தோடு இருந்தார். இன்று என் தாயும் இல்லை, தந்தையும் . . .
கண்களில் நீர் வழிந்தது. தங்கைகள் பார்த்துவிடக் கூடாதே என்று அவசர அவசரமாக எழுந்து குளியறைக்கு ஓடினேன். அங்கேதான் யாரும் வரமாட்டார்கள். வேதனையான நேரங்களில் யாரும் காணமுடியாத தனிமை எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
பாரி இறந்தபோது ஆதரவற்றவர்களாகி விட்ட அம் மன்னனது மகளிர் இருவரும் பாடிய பாடலே என் நினைவுக்கு வந்தது.
‘சென்ற மாத நிலவொளியில் நாங்கள் எங்கள் தந்தையோடு இந்தக் குன்றில் மகிழ்ந்திருந்தோம், இந்த மாத நிலவொளியில் எங்கள் தந்தையையும் பகைவர்கள் கொன்றுவிட்டார்கள், எங்கள் குன்றும் எங்கட்குச் சொந்தமாகவில்லை. நாங்கள் அனாதைகளாகி விட்டோம்’ என்று தாம் வாழ்ந்து மகிழ்ந்த குன்றைவிட்டு வெளியேறும் போது அவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்திச் சென்றார்கள்.
நமக்குத்தான் தந்தையும் இருக்கிறார். இந்த வீடும் இருக்கிறதே, நாம் ஏன் கலங்க வேண்டும்?
நீண்ட நேரத்திற்குப்பின் குளியல் அறையை விட்டு வெளியே வந்தேன். கண்ணாடியில் பார்த்து முகத்தைச் சரிசெய்து கொண்டேன். கண்கள் சிவந்திருந்தன.
தங்கையர் இருவருமே என்னை உற்றுப் பார்த்தும் ஒன்றும் கேட்கவில்லை. ஒருவேளை என்னைப் போல்தான் இவர்களும் தனித்தனியாகக் கலங்குகிறார்களோ? ஒரு தாய்க்கு உரிய பொறுப்பில் இருக்கும் நான் இப்படிக் கலங்கலாமா?
இத்தனை மன உளைச்சல்களிலும் ‘நாளைக்கு வாம்மா பார்க்கலாம்’ என்ற சொற்களே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.


Share
 

2 Comments

  1. vijayalakshmi says:

    arumai…..

  2. n.palanisamy says:

    malarum nenaiyoukal

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை