தன்னம்பிக்கை உள்ளவன் பார்வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். முன்னோக்கிச் செல்வது என்பதே அவனது வாழ்விற்கு அவன் அமைத்துக்கொண்ட சட்டமாகவும் இருக்கும். அதுவே அவனது இலட்சியம்.
முன்னோக்கிய பார்வை தேவை
குதிரைகளுக்கு மட்டும் “சீனி” என்ற முன்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி போடுகிறோமே ஏன்? மாடுகள் போல குதிரைகள் மெதுவாகச் செல்லக்கூடியவை அல்ல; வேகமாகச் செல்ல வேண்டியவை. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே போனால் அதன் வேகம் தடைப்பட்டுப் போய்விடும். முன்னோக்கிப் பார்ப்பதற்கு மட்டுமே அவை பழக்கப்பட்டிருக்கின்றன. அப்பொழுது தான் அதன் வேகம் அதிகமாகும். செல்ல வேண்டிய இடத்தைச் சீக்கிரம் சென்று அடையமுடியும்.
நமது வாழ்க்கையையும் நாம் முன்னோக்கியதாக அமைத்துக் கொள்ளவேண்டும். வளர்ச்சிக்கு அதுதான் வழி. கவனத்தைச் சிதறவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந் தால், ஆங்காங்கே நின்று நின்று போனால் நாம் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேர முடியாது.
நிகழ்காலமே உயிருள்ள காலம்
அதேபோல வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும் பயனில்லை. வாழ்வில் நடந்ததற்காகவும் கடந்ததற்காகவும் வருந்திக் கொண்டிருப்பதும் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாகும்.
தன்னம்பிக்கை உடையவன் ஒருகாலும் கடந்த காலக் குறைபாடுகளை எண்ணி மறுகிக் கொண்டிருக்கமாட்டான். கடந்தது இனி மீளாது என்பது அவனுக்குத் தெரியும். அதனால், நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்று ஒரு முடிவுக்கு வருவான். நடந்த தவறுகளிலிருந்து விடுபட முயல்வான். அவற்றிற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பான். முன்னோக்கிச் செல்வதில் நாட்டங்கொள்வான்.
நடந்தது வாழ்க்கையின் கடந்தகால வரலாறே தவிர # உயிருள்ளவை நிகழ்காலம்தான். நிகழ்காலச் சாதனைகளே வெற்றி நிறைந்த வரலாற்றை உருவாக்கும்.
மகிழ்ச்சியானவற்றை நினைவு கூருங்கள்
முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர் வந்த பாதைகளை # அனுபவங்களை வருங்கால வளர்ச்சிக்கு உதவியாக எடுத்துக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான செயல்பாடுகளாக இருந்தால் சிறிது நேரம் அசைபோட்டுப் பார்க்கலாம், அவ்வளவுதான். கடந்தகால நிகழ்ச்சிகளே வாழ்க்கை ஆகிவிடாது.
பழம்பெருமைகளைப் பேசாதீர்கள்
இன்றும் நாம் நடைமுறையில் காணலாம், பின்னோக்கிச் செல்பவர்கள் பழம் பெருமைகளையே பேசிக் கொண்டிருப் பார்கள். பழம் பெருமை யாருக்கு வேண்டும்? உங்கள் தாத்தாவும் தந்தையும் செய்தவை உங்கள் சாதனைகள் ஆகிவிடுமா?
நான் இளமையில் அப்படி இருந்தேன், வாலிபத்தில் இதை இதைச் செய்தேன், வயதில் இப்படி இருந்தேன் என்று ஒரு பெரியவர் சொல்வாரானால் அதற்கு என்ன பொருள்? அவரால் இப்போது எதுவும் முடியவில்லை என்பதுதானே பொருள். இவர்கள் உயிரோடு இருக்கும்போதே இறந்து போனவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆற்று நீர் போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்
அன்றியும் பழம்பெருமை பேசுபவர்கள், வாழ்க்கையைப் பின்னோக்கி மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை. ஏதோ இருக்கிறார்கள் என்று பொருள். இனி நாம் எதுவும் செய்ய இயலாது என்ற தன்னம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்பது பொருள்.
இத்தகையவர்களை நீங்கள் சந்தித்தே இருப்பீர்கள். அவர்களை உங்கள் மனம் விரும்புகிறதா? என்று பாருங்கள். நிச்சயமாக இல்லை. அத்தகையவர்களை நீங்கள் வெறுக்கவே செய்கிறீர்கள். அவர்கள் நட்பை ஒதுக்கவே செய்கிறீர்கள்.
பழம்பெருமை பேசுகின்றயாருக்கும் இதே நிலைதான் ஏற்படும். நாமும் இந்தத் தவற்றினைச் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உள்ளவன் ஆற்றுநீர் போல ஓடிக்கொண்டே இருப்பான். அவன் ஒருபோதும் குட்டைபோலத் தேங்குவதே இல்லை. வாழ்க்கை தேங்கினால் வளர்ச்சி முடிந்து விட்டது என்று பொருள்.
சிலர் கை குலுக்குவதைப் பாருங்கள்
ஒருவரை ஒருவர் கை குலுக்குவதைப் பாருங்கள். கையை யார் முன்னோக்கி நீட்டுகிறார்களோ அவர்களைத்தான் கைகுலுக்கி வரவேற்கிறார்கள். கையை பின்னால் கட்டிக்கொண்டு நிற்பவர்களுக்கு? அவர்கள் தோற்றமே நமக்கு எதைப் புலப்படுத்துகிறது? இவர் கை குலுக்குவதற்குத் தயாராக இல்லை, விரும்பவும் இல்லை என்பதுதானே பொருள்? அதனால்தானே கைகுலுக்கி வரவேற்கின்றஇடத்தில்கூட இவர் ஜோப்பில் கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
இத்தகையவர்கள்தாம் பின்னோக்கிச் செல்பவர்கள். இவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் இவர்களது நட்பு நமக்குத் தேவையானது அல்ல.
கைகுலுக்கலில் ஓர் ஆற்றல் பிறக்கிறது
கை குலுக்குவதில்கூட கவனித்துப் பாருங்கள். 60ம் 70ம் கடந்தவர்கள் கூட ஏனோ தானோ? என்று இல்லாமல் குலுக்கவேண்டியவர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் குலுக்குவார்கள். இரும்புப் பிடிபோல் ஓர் பிடிப்பு இருக்கும். அந்தக் கை குலுக்கலில் ஓர் ஆர்வம், ஓர் உற்சாகம், ஒருவேகம் பிறக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக சுறுசுறுப்பாக இருக்கக் கற்றுக்கொள்; இப்படி சோம்பல் முறித்துகொண்டு இருக்காதே என்பது அந்தக் கை குலுக்கல் நமக்கு குற்றுக் கொடுக்கின்றபாடம்.
மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குங்கள்
தன்னம்பிக்கை உள்ளவன்தான் கைகளை நீட்டுகிறான். வாய்ப்பை எதிர்நோக்கிச் செல்கிறான். கை குலுக்கல் கிடைக்கின்றது. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறான். பிறர் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறான். தன் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக ஆக்கிக்கொள்கிறான். மகிழ்ச்சி ஆற்றலைப் பெருக்குகிறது. அவன் படிப்படியாக முன்னேறுகிறான்.
கைகளை நீட்டுங்கள்
முன்னோக்கிச் செல்வதுதான் தன்னம்பிக்கை, எழுந்திருந்தால்தான் விடியல். எழுந்து எழுந்து படுத்துக் கொண்டவர்களுக்கு விடியலும் இல்லை; விடிவும் இல்லை. எப்போதும் இருள்தான். அவர்களுக்கு நன்பகல் கூட இருளாகத்தான் தோன்றும்.
கைகளை நீட்டுங்கள், உங்களுக்கு நிச்சயம் கைகுலுக்கல்கள் கிடைக்கும். முன்னோக்கிச் செல்லுங்கள், முன்னேற்றம் வழி தேடி உங்களுக்காக வந்து கொண்டிருக்கிறது.
Share

September 2013

















4 Comments
Sir,
Excellent.
Regards
Indira
Dear Sir,
I learned lot of things from this.
Regards
Indira
super
nice narration