Home » Articles » என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்

 
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்


ஆசிரியர் குழு
Author:

வழக்கறிஞர் சத்யவாணி

ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பசுமையாய் பதிந்திருக்கும் நினைவுகளில் பள்ளி நினைவுகள் தனித்துவம் வாய்ந்தவை. அந்த நினைவுகளை ஒருமுறை தன்னம்பிக்கை மாத இதழுக்காக மீட்டெடுத்தேன்…

கடவுளுக்குப் பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட குழந்தைகளுக்கு கற்பிக்கும் உதடுகளே மேலானவை என்பதற்கு ஏற்ப கற்றுக்கொடுத்த என் பள்ளியைப் பற்றி என் உள்ளத்தில் பதிந்திருக்கும் நினைவுகளில் சில…

உடுமலைப் பேட்டையில் உள்ள ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் ஆறாம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படித்தேன். சொந்த ஊரான சாளரப்பட்டி கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் வரை வரப்பு வாய்க்கால் என்று நடந்து வந்து பேருந்தைப் பிடித்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலையில் தான் எங்கள் வாழ்விடம் இருந்தது.

அதிகாலையில் எழுந்து, கிளம்பி 7 மணிக்கு நடக்க ஆரம்பித்து 7.45 மணிக்கு பேருந்தைப் பிடித்து பள்ளிக்குச் செல்லும்போது, என்னுடன் 2ம் வகுப்பு படிக்கும் என் தங்கையையும் அழைத்துச் செல்வேன். இதற்கிடையில் என் அப்பா வேலை செய்த சுகர் மில்லில் அவருக்கு சாப்பாட்டைக் கொடுக்க வேண்டிய வேலையும் இருக்கும்.

மழை, பனி என்று வரும் காலங்களில் கூட எங்கள் நடைப்பயணம் பள்ளியை நோக்கி நடந்து கொண்டுதான் இருந்தது. மழையும், பனியும் நனைத்த என் கால்சட்டையின் ஈரம் மாலை வரை கூட காயாமல் இருந்த காலங்களும் உண்டு.

இப்படி இப்படி எல்லா பொறுப்புகளையும் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்று படித்தேன். படித்தேன் என்று மட்டும் சொல்ல முடியாது. என் பள்ளியில் தான் என் வாழ்க்கையின் பல பரிமாணங்களையும், பன்முகத் தன்மைகளையும் கற்றுக்கொண்டேன். பாடப் புத்தகங்களுக்கிடையில் பேச்சுத்திறன், கவிதை, நாடகம் என்று பல ஆளுமைகளை அந்தப் பள்ளி கற்றுத்தந்தது.

என் பள்ளியில் என் பெற்றோரை விட ஆசிரியர்கள் அதிக அக்கறையோடு கவனித்துக் கொண்டார்கள். படிப்பில் நான் சுமாரானவளாக இருந்தாலும் பேச்சுத்திறனில் திறமை வாய்ந்தவளாகவும், பேசுவதில் ஆர்வம் கொண்டவளாகவும் இருந்தேன்.

பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் நாடகம், கவிதை, பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி என்று எது நடந்தாலும் அதில் என் பெயர் முதலிடத்தில் இருக்கும். எனக்கான இடத்தை விட்டுவிட்டுத்தான் மற்ற மாணவிகளை எடுப்பார்கள். நானும் அவர்களின் தேர்வு சரிதான் என்று நிரூபிப்பது போல மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பரிசுகள் வென்று வருவேன். இப்படி நான் முதலிடம் பெறுவதற்காக எனது தமிழாசிரியைகள் என்னைச் சிறந்தமுறையில் தயார்படுத்தி வைத்திருந்தனர்.

6ம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலில் நான் நடித்த நாடகம் ‘நூறு சவுக்கடி’. அதில் நான் தெனாலிராமனாக நடித்தேன். அந்தப் பாத்திரத்திற்கு என் உடல்வாகு சரியாக பொருந்தியிருந்தது. அன்றிலிருந்து என்னை தெனாலிராமன் என்றே பலரும் அழைத்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு என்னுடைய தமிழாசிரியை திருமதி. லீலாவதி தமிழ் கண்காட்சி ஒன்றை பள்ளியில் நடத்தினார். அதில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய நாடகம் போடப்பட்டது. அதில் நான் பாண்டிய மன்னனாக நடித்தேன். கம்பீரமான பாண்டிய மன்னனாக நான் நடித்தபோது அந்த மன்னனாகவே உணர்ந்து வசனங்களை பேசியதைக் கேட்டு அசந்து போனார்கள்.

ஒரு விதத்தில் அந்த நாடகம் எனக்குள் இருந்த கம்பீரத்தை எனக்குக் காட்டியது என்று கூட கூறலாம். விவசாயத் தொழிலை மேற்கொண்டிருந்த குடும்பத்துப் பெண் அஞ்சாமல் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட நான் அன்று அதன் கம்பீரத்தை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

அதே நாடகத்தில் என் தோழி கரிகாலச்சோழன் வேடம் போட்டிருந்தாள். அவளது இரண்டு கால்களையும் கருப்பு மையினால் கலர் செய்திருந்தோம். அதைப் பார்த்த சிறப்பு விருந்தினர்கள் “கரிகாலச் சோழனுக்கு ஒரு கால் தான் தீயில் கருகியிருக்கும். நீங்கள் இரண்டு கால்களும் கருகியிருப்பதாக நடிக்கிறீர்கள். வரலாற்றைப் பிழையுடன் சொல்லாதீர்கள்” என்றனர். உடனே எனது தமிழாசிரியை ஒரு காலில் பட்ட தீயின் ‘செகை’ மற்ற காலில் பட்டதால் அதுவும் கருப்பாகிவிட்டது என்று சமயோசிதமாக பதில் கூறியது இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.

தமிழ் மீது எனக்கு பற்றுவரக் காரணமாய் இருந்தவர்கள் என் தமிழாசிரியைகள் திருமதி லீலாவதியும், கல்லூரி பேராசிரியை திருமதி தேவகியும் தான். இவர்களைப் போலவே என்னுடைய தலைமையாசிரியை விமலா தங்கபுஷ்பம் என்றுமே என்னை கனிவுடன் கவனித்து வந்தார். கல்வி மட்டுமின்றி தன்னம்பிக்கை, ஒழுக்கம், அன்பு என்று பல சிறந்த பண்புகளையும் கற்றுக்கொடுத்தார்.

10ம் வகுப்பு படிக்கும் போது ‘மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தானம் அவர்கள் 2000, ஜனவரி 26, குடியரசு தினத்தன்று பரிசு தர இருக்கிறார். நீ பெற்றோருடன் சென்று கலெக்டரிடம் பரிசை பெற்று வா என்று தமிழாசிரியை லீலாவதி அவர்கள் சொன்னார்கள் என்று எனக்கு பரிசு பெற வேண்டும் என்பதைவிட தமிழாசிரியை சொற்படி நடக்க வேண்டும் என்பதால் நானும் இதை என் பெற்றோரிடம் சொன்னேன்.

‘ஆமா, உனக்கும் வேலையில்லை, கலெக்டருக்கும் வேலையில்லை. நான் காட்டில் களை எடுக்க வேண்டும். அருகு அதிகமாயிடுச்சு. அருகு பிடுங்கணும். நாங்க வர முடியாது’ என்று என் அம்மாவும், அப்பாவும் சொல்லிவிட்டார்கள். கலெக்டர் என்பவர் யார்? அவரிடம் பரிசு பெறுவது எத்தகைய சிறப்பு வாய்ந்தது? என்று இந்த அளவுக்குத்தான் எனக்கும், என் பெற்றோருக்கும் தெரிந்திருந்தது. அதே நேரத்தில் பக்கத்து ஊரில் உள்ள என் தோழியும் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றதால் அவரும் வருவதாக கூறினாள். பரிசு பெறப் போகும் நாளுக்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தான் அம்மாவும், அப்பாவும் சம்மதம் சொல்ல, இரவோடு இரவாக எங்கள் ஊரில் இருந்த ஒரு மளிகைக் கடையில் இருந்து, பக்கத்து ஊரில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு போன் செய்து என் தோழியை வரச்சொல்லிய பின் முதன் முறையாக கோயம்புத்தூருக்கு பயணித்தேன்.

பெரிய கூட்டம். பல ஆடல் பாடல் கொண்டாட்டத்திற்கு நடுவே சீராக அலங்காரப்படுத்தப்பட்ட ராணுவக் குதிரைகளின் அணிவகுப்பு என்று நிகழ்ச்சி கலைகட்ட, கலெக்டரிடம் பரிசு பெற்றேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. குஜராத் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடுமையான பூகம்பம் என்ற செய்தி அங்கு பரவ எங்கள் கொண்டாட்டம் அதோடு நின்று போனது.

11ம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவில் பேச்சுப் போட்டி நடப்பதாக அறிவிப்பு வந்தது. வழக்கம்போல் என் பெயர் சேர்க்கப்பட்ட போது வழக்கத்துக்கு மாறாக ‘எப்போதும் சத்யா தானா? இந்த முறை வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று இரண்டு ஆசிரியர்களுக்கிடையில் அபிப்ராய பேதம். என் தமிழாசிரியையும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார். பேச்சுப் போட்டி தானே வேண்டாம். அவளை கவிதைக்கு நான் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி என்னை கவிதைப் போட்டியில் சேர்த்துக் கொண்டார்.

கவிதை எழுதுவது எப்படி என்று ஒன்றுமே தெரியாமல் இருந்த நான் அன்று மாலை நூலகத்துக்குச் சென்று கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல்களைப் படித்துப் பார்த்தேன். வீட்டில் வந்து எழுதிப் பார்த்தேன். ஒன்றுமே வரவில்லை. போட்டிக்கான நாளும் வந்தது. நான் ஒரு கவிதையும் எழுதியிருக்கவில்லை.

பொள்ளாச்சிக்கு பேருந்து ஏறியாயிற்று. பயணத்தின் போது யோசித்து யோசித்து எழுதுகிறேன். பொள்ளாச்சி போய் சேர்வதற்குள் 15 பக்க அளவுக்கு கவிதை எழுதிவிட்டேன். போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றால், ‘இந்தப் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தான் பள்ளி மாணவர்களுக்கு இல்லை’ என்று சொன்னார்கள்.

என் ஆசிரியை அவர்களிடம், ‘இவர்களும் கலந்து கொள்ள அனுமதியுங்கள். நன்றாக இருந்தால் பரிசு கொடுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதால் நாங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றோம். போட்டியில் என் கவிதை தான் முதல் பரிசு பெற்றது.

இந்த நிகழ்வு எனக்குள் இருந்த கவிதை எழுதும் ஆற்றலை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். எந்தவொரு கலை வடிவத்திலும் பங்கு பெறும்போது அதில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது, சாதிக்கலாம் என்பதை அந்நிகழ்வு எனக்குக் கற்றுத்தந்தது. மாவட்ட அளவில் கவிதைக்கு முதல் பரிசு பெற்ற நான் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்காக முதன்முறையாக தலைநகர் சென்னை சென்றேன். போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன்.

எனக்குள் இருந்த பன்முகத் தன்மைகளை ஒவ்வொன்றாக நுணுக்கமாக ஆராய்ந்து, அதை வளர்த்தெடுத்த அதே பள்ளி தான் வாழ்க்கை என்றால் என்ன என்றும் கற்றுத்தந்தது. எங்கள் வகுப்பில் என்னுடன் படித்த என் நெருங்கிய தோழி சத்யகுமாரி. ஒருநாள் பள்ளியில் நடைபெற்ற ‘மெடிக்கல் கேம்ப்’ல் அவளது இதயத்தின் துடிப்பில் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சில மாதங்களில் மேல் சிகிச்சைக்காக சென்னை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது எங்கள் தலைமையாசிரியர் எங்கள் இருவரையும் அழைத்து, என்னிடம் ‘சத்யா உன் தோழி சிகிச்சை முடித்து நன்றாகத் திரும்பி வருவாள். நீ கவலைப்படாமல் பாடங்களைப் படி’ என்று கூறிவிட்டு, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமிய முறைப்படி மும்மதப் பிரார்த்தனைகளையும் செய்து அனுப்பி வைத்தார்கள்.

9ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது ஒருநாள் என் ஆசிரியை, ‘சத்யகுமாரி இறந்துவிட்டாள்’ என்று கூறியதைக் கேட்ட நான் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தபோது எனது வகுப்பாசிரியை நீ முதலில் தேர்வு எழுது என்று கட்டாயப்படுத்தித் தேர்வு எழுத வைத்தார். அந்த மரணம் எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அவளின் மரணத்தைவிட அவளது நட்பை இழந்தது எனக்கு கடுமையான மனவேதனையைத் தந்தது. அதிக அன்பு அதிக வேதனையைக் கொடுக்கும் என்று அவள் மரணத்தின் போது தான் உணர்ந்தேன்.

நான் எடைக் குறைவாகத் தான் இருப்பேன். அதனால் என் பள்ளியின் ஆசிரியைகள் என் வீட்டைவிட அதிக அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள். அறிவியல் ஆசிரியை ராஜலட்சுமி அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை எனக்குக் கொண்டுவந்து தருவார். தன் பிள்ளையைப் போலவே என்னையும் கவனித்துக் கொள்வார். மதியம் சாப்பாடு கொண்டு செல்லாதபோது அவர் தன்னுடைய சாப்பாட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர் சும்மா இருந்த காலங்களும் உண்டு. இப்படி அன்பும், அரவணைப்பும், தாய்மையும், கண்டிப்பும் நிறைந்த நாட்களை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது.

என் தோட்டத்துச் சாலையில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்லும்போது வேலா மரத்தின் காய்ந்த காய்களை கொழுசாக அணிந்து சென்றதும், அப்பாவின் சாப்பாட்டு கேரியரில் உள்ள ‘கரண்டி’யை தங்கைக்கு ஸ்பூனாகப் பயன்படுத்தக் கொடுத்துவிட்டு, எட்டிஎட்டிக் குதித்து வேப்ப மரத்தில் குச்சியை ஒடித்து, சாப்பாட்டுக் கேரியரில் சொருகிவிட்டு அந்த சாப்பாட்டு கேரியரில் அப்பாவுக்கு ஒரு கடிதத்தைத் தப்பும், தவறுதலாகவும் எழுதி வைத்தது, உடைந்து போன வீட்டின் கதவை அப்பா திறந்தால் அவர் மேல் விழுந்து அடிபட்டு விடுமென்ற பதற்றம் ஒரு புறமும், விளையாடப் போக வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறமும் இருக்க அதற்கும் ஒரு கடிதம் எழுதி கதவில் ஒட்டிவிட்டுச் சென்று விளையாடவும் முடியாமல், வீட்டிற்கு வரவும் முடியாமல் தவித்த தருணங்கள் என்று பல நினைவுகள் தற்போது மீட்டெழுகின்றன.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

1 Comment

  1. Charles R says:

    Every village have some guys like Satyavani….Its really wonderful to recalling our School days…I am doing too…Nice article….Thanks & Regards Engg.Charles

Post a Comment