Home » Articles » உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்

 
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்


கவிநேசன் நெல்லை
Author:

இளமைப் பருவத்தில் இளைஞர்களில் பலர் பல்வேறு எதிர்காலக் கனவுகளோடு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்ந்து கல்வி பயிலுகிறார்கள். இவர்கள் கல்வி நிலையங்களில் தங்களின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள்.

மிக அதிக நேரத்தை பள்ளி மாணவ – மாணவிகள் கல்வி நிலையங்களில் செலவிடுவதால் இளம்பருவத்தில் அவர்களுக்கு ஏராளமான பிரச்சனைகளும், இடையூறுகளும் மாணவர்களுக்கு தானாக வந்துவிடுகின்றன.

இந்த இனிமை நிறைந்த இளமைப் பருவத்தில் மிகவும் சரியான முறையில் திட்டங்களை உருவாக்கி நல்ல செயல்களில் ஈடுபட்டவர்கள் மட்டும்தான் வாழ்க்கையின் வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும்போது மாணவ – மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள். இவர்கள் தங்களது உடல் அமைப்பு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் அமைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். உடலமைப்பு கவர்ச்சியாக இருந்தால்தான் ஊரிலுள்ளவர்களும், உடன் படிக்கும் மாணவ – மாணவிகளும் மரியாதைத் தருவார்கள் என்ற எண்ணத்தோடு தங்கள் உடலை பராமரிப்பதில் அதிக நேரத்தைப் போக்குவார்கள்.

இதனால் இளம்வயதில் மாணவ – மாணவிகள் அடிக்கடி தங்களைப்பற்றி மட்டுமே அதிகமாக சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். உடல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்கள் இளம் பருவத்தினரின் மனதிலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது. பொதுவாக உடல் வளர்ச்சி காணும் நிலையில் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். “இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்க வேண்டும்” என்ற எண்ணத்தின் அடிப்படையில் இவர்களது செயல்கள் அமையும். தங்களுக்கு எவையெல்லாம் மகிழ்ச்சி தருமோ அவையெல்லாம் உடனே கிடைக்க வேண்டும் என்றும், மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் உடனே நிகழ வேண்டும் என்றும் சிந்தித்து அந்தவிஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சி கிடைப்பதற்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் எதிரியாக பார்ப்பார்கள்.

எதிலும் தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலையில் இவர்கள் காணப்படுவார்கள். எப்போதும் ஆழ்ந்து கவனம் செலுத்த இயலாத நிலையில் இருப்பார்கள். ஆர்வத்தோடு பணிகள் செய்ய விருப்பம் இல்லாமல் இருக்கும் நிலையை இந்த இளமைப் பருவம் செய்துவிடும். மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்து குறைசொல்லும் பழக்கமும் இந்த மாணவப் பருவத்தில் அதிகமாகக் காணப்படும். மிகப்பெரிய குற்றம் செய்தது போன்ற உணர்வோடு சிலவேளைகளில் இளம் வயதினர் இருப்பதற்கும் இந்தப் பருவம் தான் காரணம் ஆகும். எதையோ ஒன்றை இழந்ததுபோன்ற உணர்வும், எதிர்மறையான எண்ணங்களும் அடிக்கடி இந்த இளம்பருவத்தில் மனதில் தோன்றுகிறது.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பல பிரச்சனைகள் இளம்பருவத்தினரை தாக்கும் ஆயுதங்களாக மாறிவருகின்றன.

இந்தியாவிலுள்ள மாணவ – மாணவிகள் என்னென்ன பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்? என்று ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பிரச்சனைபற்றிய ஆய்வு முடிவுகள் மாணவர்களின் உண்மையான பிரச்சனையை படம்பிடித்துக் காட்டுகிறது.

“தரமான கல்வி (Quality Education) பல இந்திய கல்வி நிலையங்களில் வழங்கப்படவில்லை” என்பது இந்திய கல்வி பற்றிய ஆய்வின் முடிவாகும். இது இந்திய கல்விமுறைக்கு எதிரான மிகப்பெரிய குற்றச்சாட்டு ஆகும்.

ஏராளமான பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் கல்வியை வழங்கி வருகின்றன. கட்டுப்பாடான சூழலில் பள்ளியில் பயின்று, கல்லூரியில் நுழைந்த பின்னர், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆண்டுதோறும் உருவாக்கப்படுகிறார்கள். இருந்தபோதும் அவர்களில் பலர் தரமான வேலையைப் பெற இயலாமல் தவிக்கின்ற சூழல் உருவாகிவிடுகிறது.

“பட்டம் பெற்றபின்பும் வேலை கிடைக்கவில்லையே?” என்ற வேதனையில் வீழ்ந்து இளம் பட்டதாரிகள் தவிக்கிறார்கள். இருப்பினும் தனது தகுதியையும், தரத்தையும் உயர்த்திக்கொள்ள இயலாத மனநிலை சில இளைஞர்களிடம் இன்றும் காணப்படுகிறது.

“வேலையைப் பெற்றுத்தருகின்ற அளவுக்கு மாணவர்களுடைய சிறப்புத் திறன்களை வளர்ப்பதற்கு கல்விநிலையங்கள் தவறிவிட்டன” என்பது சில கல்வியாளர்களின் கருத்து ஆகும்.

படித்து முடித்த பின்பும், பட்டம் பெற்ற பின்பும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பதால் பல பட்டதாரிகள் “படிப்பதால் பலனில்லை” என்று தங்கள் அனுபவத்தை இளைய மாணவ – உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் ‘நன்றாக படிக்க வேண்டும்’ என்ற ஆர்வம் படிக்கும் இளைஞர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. இது இளம் மாணவர்களைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதமாகவே திகழ்கிறது.

இந்தியாவில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பு அறிவில்லாத பெற்றோர்களின் அரவணைப்பில் வளரும் பல மாணவர்களுக்கு படிப்பைப் பற்றிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. இதனால், எந்தப் படிப்பை விருப்பப்பாடமாக எடுத்து படிப்பது? என்கின்ற குழப்பம் பல மாணவர்களிடம் இன்றும் காணப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் படிப்புகளைப் பற்றிய விவரங்களும் சிலருக்குத் தெரிவதில்லை. இன்னும் சில மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பு பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத மனநிலையிலும் காணப்படுகிறார்கள். இதுவும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் சூழலை உருவாக்கி மாணவர்களின் வளர்ச்சியை பெருமளவில் தாக்குகிறது.

குடும்பத்தில் நிலவும் ஏழ்மை நிலைமை பல மாணவ – மாணவிகளின்  படிப்புக்கு தடையாக அமைந்துவிடுகிறது. பிறரிடம் கடன்வாங்கி, கல்வி நிலையங்களில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் சில பெற்றோர்கள், கல்வி கடனை திருப்பி செலுத்துவதற்காகவே பல வருடங்கள் தீவிரமாக உழைக்கவேண்டிய நிலை உள்ளது. கல்வி உதவித்தொகையை மத்திய மாநில அரசுகள் வழங்கினாலும் தனியார் கல்வி நிறுவனங்களின் பள்ளிக் கட்டணமும், கல்லூரி கட்டணமும் மிக அதிகமாகவே அமைவதால் இது பெரும் சுமையாக மாணவர்களுக்கு அமைந்துவிடுகிறது.

தகுதியும், தரமும் குறைந்த அனுபவமில்லாத நபர்களை ஆசிரியர்களாக நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வாய்ப்பு வழங்குவது இளம் தளிரின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும். இது – சப்தமில்லாமல் சமுதாயக்கொலை செய்வதற்கு ஒப்பாகும். இந்த செயல் மாணவ உள்ளங்களில் காயங்களை ஏற்படுத்தி அவர்களின் வளர்ச்சியை அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பள்ளிகளில் படிக்கும்போது பாடப்புத்தகங்களின் சுமை அதிகமாகிவிடுவதால் பெரும்பாலான மாணவர்களுக்கு “மனச்சுமை” அதிகமாகிவிடுகிறது. இதனால், படிக்கும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த இயலாத நிலை மாணவ – மாணவிகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இன்னும் சில மாணவர்கள், “தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம்” என்கின்ற பயத்தோடு நாள்தோறும் இருக்கிறார்கள். தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் தங்கள் பெற்றோர்கள் அதிகமாக வருத்தப்படுவார்கள் என்று சிலர் எண்ணி பயப்படுகிறார்கள். “என் குடும்பத்திற்கு நான் வீண் பாரமாக அமைந்துவிட்டேன்” என்று நினைப்பதாலும் சில மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்தமுடிவதில்லை. இதனால் உண்மையிலேயே அவர்கள் தேர்வில் தோல்வியடையும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இதுவும் மாணவர்களைத் தாக்கும் பெரும் ஆயுதமாகத் திகழ்கிறது.

மாணவப் பருவத்தில் ஏற்படும் ‘பாலினக் கவர்ச்சி உணர்வு’ மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த உணர்வை மிகவும் கவனமாகவும், முறையாகவும் கையாளாவிட்டால், அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிவிடும். கல்விநிலையங்களில் பயிலும்போது உருவாகும் பல்வேறு பாலினப் பிரச்சனைகள் (Sex problems) பலவேளைகளில் பாலின உணர்வுகள்பற்றித் தெளிவாக அறியாததினால்தான் (Ignorance) ஏற்படுகிறது. சினிமா, டி.வி., போன்றவற்றால் இந்த உணர்வு அதிகரிக்கப்படுவதால் மாணவர்களின் படிப்பு கவனம் பெருமளவில் சிதைக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்களில் புதிதாக சேருபவர்களை “ராகிங்” செய்து கொடுமைப்படுத்தும் பழக்கம் சில கல்விநிலையங்களில் அரங்கேறிவிடுகிறது. இதனால் முதலாம் ஆண்டு சேர்ந்து படிக்கும் மாணவ – மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். “சீனியர்கள்” என்ற பெயரில் புதியவர்களை அழைத்து தரக்குறைவான செயல்களைச் செய்யும்படி தூண்டுவது பெரும் பயத்தை புதிய மாணவ – மாணவிகள் மனதில் ஏற்படுத்திவிடுகிறது. அது நீங்காத வடுவாக மனதில் அமைந்துவிடுகிறது.

கல்வி நிலையங்களில் காணப்படும் போதைப்பழக்கம், மதுபானம் அருந்துதல், புகைப் பிடித்தல் போன்ற செயல்கள் “மாணவர்களின் எதிர்காலத்தை வீழ்த்தும் ஆயுதங்கள்” என்பதை இளம் உள்ளங்கள் அறியாமல் இருக்கிறார்கள். இதனால் இந்தப் பழக்கத்திற்கு சிலர் அடிமையாகிவிடுகிறார்கள். இதன்காரணமாக ஏராளமான பிரச்சனைகள் அவர்கள் வாழ்வில் அடிக்கடி தோன்றி நிம்மதி இழக்கச் செய்துவிடுகிறது.

பள்ளிகளில் படிக்கும்போதே, சில பாடங்கள் சில மாணவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் அந்தப் பாடத்தின்மீதும், அந்தபாடம் நடத்தும் ஆசிரியரின் மீதும் வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டு, காரணமில்லாமல் அந்தப் பாடத்தை படிக்காமல் இருப்பது மாணவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது.

படிக்கும் காலத்தில் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்குக்கூட “தற்கொலை செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை சிலர் உருவாக்கிக் கொள்கிறார்கள். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும், தேர்வில் தோல்வியடைந்ததற்கும், ‘ஆசிரியர் திட்டிவிட்டார்’ என்பதற்கும், அர்த்தமில்லாமல் ஆத்திரப்பட்டு தற்கொலை ஆயுதத்தை கையில் எடுப்பது தரமிக்க செயல் அல்ல என்பதை இளைய உள்ளங்கள் உணர வேண்டும்.

மாணவர்களைத் தாக்கும் கொடூர ஆயுதங்களாக இந்தப் பிரச்சனைகளெல்லாம் பல்வேறு வடிவங்களில் கல்வி நிலையங்களில் தோன்றுகின்றன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் முன்வர வேண்டும்.

மிகவும் கவனத்துடன் செய்யவேண்டிய பணி எது? வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய செயல் எது? என்பதற்கான வித்தியாசத்தை இளம் பருவத்தினர் தெளிவாக உணர்ந்துகொள்ளும்படி செய்வதற்கு, பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும். இதன்மூலம், இளம் மாணவ – மாணவிகள் சமுதாயப் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ள உதவலாம். மேலும், சமுதாயப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.

பாலினப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக ‘கவுன்சலிங்’ (Counselling) எனப்படும் “கலந்துரையாடித் தீர்வுகாணும் முறை”யை மாணவ – மாணவிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பாலினப் பிரச்சனைகளால் தோன்றும் நோய்களைப்பற்றி விளக்கம் அளிக்கும்வகையில் இவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை கல்விநிலையங்களில் நடத்தவும் ஏற்பாடு செய்யலாம்.

தங்கள் பிரச்சனைகளுக்குத் தாங்களே தீர்வுகாணவும், மாணவ – மாணவிகள் முன்வர வேண்டும். தங்களுக்கு மன ரீதியாகப் பிரச்சனைகள் எழும்போதும், பிரச்சனைகள் உருவாகி தற்கொலை எண்ணம் ஏற்படும்போதும் தகுந்த மருத்துவ ஆலோசகரிடம் சென்று பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சி செய்யவேண்டும். இளம்பருவத்தில் இறை நம்பிக்கையுடன்கூடிய பக்தி உணர்வை வளர்த்துக்கொள்வதும், மாணவ – மாணவிகள் தாங்களாகவே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவும். கல்வி நிலையங்களில் நடத்தப்படும் கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு கலை ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவியாய் அமையும்.

தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தகுந்த நண்பர்களிடம் மனம்விட்டு பிரச்சனை தரும் மன அழுத்தங்களை குறைத்துக்கொள்ளலாம்.

இப்படி – பல்வேறு முறைகளில் மாணவ – மாணவிகள் தங்கள் பிரச்சனைகளை அடையாளம்கண்டு அவைகளைத் தீர்ப்பதற்கான சரியான வழிகளில் ஈடுபட்டால் வாழ்க்கையில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் எப்போதும் நிறைந்திருக்கும்.

தொடரும்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை