Home » Articles » பொய் கடிகாரம்

 
பொய் கடிகாரம்


அனந்தகுமார் இரா
Author:

‘பஞ்சுவாலிட்டி’’ என்னும் சரியான நேரத்திற்கு போவதை தவறென்று சொல்ல வரவில்லை. பரபரப்பான உலகில் கடிகாரங்கள் காட்டும் எல்லா காரியங்களையும் செய்ய எல்லோராலும் முடியாது. தேர்வு எழுதும் முன்பு, எந்த தேர்வு எழுதுவது என்று ‘தேர்வு’ செய்ய வேண்டி இருக்கின்றது.

சிறப்பாக வேலை செய்துவிட்டோம், என்று சந்தோஷப்படுவது தவறு… என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? … இது பொருந்துவது எப்பொழுது எனில், அது செய்தே இருக்க வேண்டியில்லாத வேலை என்று தெரிய வந்தால்…

கடிகாரங்கள் வீசுகின்ற கயிற்றில் நாம் கட்டுண்டு விட வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு நான்கு வரிகளில் கடிதம் எழுதி தகவல் தொடர்பு கொண்டு சரியான காரியங்களை நிதானமாக இரசித்து – ருசித்து செய்து மகிழலாம்.

நாள்காட்டியைப் பார்ப்பது இரண்டாம் தலைமுறை திட்டமிடல், திசைகாட்டியைப் பார்ப்பது மூன்றாம் தலைமுறை திட்டமிடல், (கடிகாரம்) முதல் என்று ஸ்டீவன்கோவே (Steven covey) அவரது புத்தகத்தில் சொல்லியிருக்கின்றார்.

தத்துவ ஞானிகள் கடிகாரமின்றி வாழ்வதாக சொல்கின்றனர். வாரென் பஃப்பெட், டெல்லி மெட்ரோ ஸ்ரீதரன் போன்றோர் மாலை வேளையில் குறித்த நேரத்தில் வீடு செல்ல முடிகின்றது. குறித்த நேரத்தில் காரியம் செய்வதற்கும் கடிகாரத்திற்கும் நேரடி தொடர்பில்லை. அதையே பார்த்தால், காரியம் சிதறிவிடாதா?

நண்பர் ஒருவரது அறையில் கடிகாரம் இருபது நிமிடம் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. பதறி அடித்துக் கொண்டு எழுந்தால், பக்குவமாக ஆசுவாசப்படுத்தினார்!!  பொய்? கடிகாரம். சில நேரங்களில் இவை போன்ற கடிகாரங்கள், நன்கு, தயாரித்துக் கொண்டு மன அமைதியோடு, விமானநிலையம், இரயில், பேருந்து உயர்நிலை கூட்டங்கள், அத்தியாவசிய சந்திப்புகள் முதலானவற்றில் திறம்பட பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றது.

அடுத்து தென்கொரியாவிற்கு போகலாம் வாருங்கள், தென்கொரியா ஒரு அழகான நாடு. சமீபத்தில் அங்கு பயிற்சிக்காக சென்று இருந்தோம். கொரியர்களது நாணயம் வோன் (Won) என்பதாகும். ஒரு ரூபாய்க்கு இருபத்தைந்து வோன்கள் (Won) என்று பரிமாற்ற மதிப்பு, எதையெடுத்தாலும் ஆயிரக்கணக்கில் விலைபேசி கொரியர்கள் அசத்தினார்கள். தங்கியிருந்த விடுதியில் சாதாரணமாக ஒரு ஆடையை துவைக்க மூவாயிரம் வோன்கள், நம்மூரில் புதிதாகவே வாங்கிவிடலாம்.

சாப்பாட்டிற்கு ஒரு வேளை இருபதினாயிரம் வோன் என்று எகிறினாலும் இந்திய ரூபாய்களில் கணக்கிட்டு அல்லது  இன்னும் பிரமிப்பு குறையாமலேயே — இருந்தால் டாலர்களில் பேசி, சமாளிக்க வேண்டி வந்தது… எல்லாம்… நேரம் தான்… பொய் கடிகாரம் காட்டுகின்ற நேரம்…

தென் கொரியாவில் இரயில் முதல், அதில் பயணம் செய்யும் பயணிகள் வரை எல்லாருமே வேகமாக இயங்குகின்றார்கள். முதலாளித்துவ உச்சியிலிருக்கின்ற தென் கொரியாவில் தொழிற்சாலைகள் நிரம்பி வழிகின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் கடும் பஞ்சத்தால் உணவுக்கே அமெரிக்க உதவியை நம்பி இருந்தவர்கள் ஏற்றுமதி செய்த முதல் பொருள் சவுரி முடியாம்!

அனைத்து கொரியர்களும், இந்நாட்டுப் பெண்களின் நீண்ட கூந்தல் தியாக வரலாற்றை, அடிக்கடி நினைவூட்டினர். முன்பு நீண்ட கூந்தலை கண்ணீரோடு வெட்டி அனுப்பியதாலோ என்னவோ … தற்பொழுது கிராப்புத் தலையோடுதான் நிறையப்பேர் இருக்கின்றனர்.

உலக பொருளாதார சிக்கலின்பொழுது கொரிய மகளிரின் தியாக உணர்வு மீண்டும் வெளிப்பட்டதாம்.  கடந்த 1997ல் பொருளாதார வீழ்ச்சியின் பொழுது ஆசியப் புலிகள் என்றழைக்கப்பட்ட கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் பண மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பணம் வீழ்ந்ததால் தங்கம் வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்கள் நாட்டை தாங்கிப் பிடிக்க அவசியப்பட்டது. அதனால் கொரிய நாடு மகளிரிடம், அதாவது தன் தாய்க்குலத்திடம் கையேந்தியது. தாகம் தீர்க்கக் கோரியது.

எங்களுக்கு ஒரு வீடியோ காட்சியைக் காட்டினார்கள் …. நம்பமுடியாத காட்சி.   பெண்கள் சாரை சாரையாக வரிசையாக வந்து தங்கள் கைகளில், கழுத்தில், காதில், மூக்கில் இருந்த எல்லா விலைமதிப்புள்ள ஆபரணங்களையும் ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் கொட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எந்தவித ஏற்பு சான்றிதழும் கொடுக்கப்படவில்லையாம். நிலைமை அப்படி, பெண்கள் கையில் கிடைத்ததை, கையில் இருந்தததை, கைக்கு வந்ததை என எல்லா தங்கத்தையும் அள்ளித் தந்தனர். மொத்தமாக உருக்கி ஒன்பது டன் வந்ததாம். அந்த காலக்கட்டத்தில் மெல்லிய சர்வாதிகாரம் கோலோச்சியது என்று சலசலப்பும், முணுமுணுப்பும் வரலாற்று பக்கங்களில் இருப்தென்னவோ உண்மையே.

கொரியாவின் அசுரவேக வளர்ச்சி குறித்து, மனதில் தோன்றிய கேள்விக் குறிகள் எல்லாம் தென்கொரிய வரலாற்று நிகழ்வுகளை கேள்விப்பட்டதும், ஆச்சரியக் குறிகளாக தென்கொரிய மக்களின் உழைப்புச் சம்மட்டியால் அடிபட்டு நிமிர்ந்தன என்றே சொல்லலாம்.

சூரியன் இங்கே காலை ஐந்து மணிக்கு தோன்றுகின்றது. இரவு ஏழரை மணி வரை வெளிச்சமாகவே இருக்கின்றது. (ஜீன் மாதம்) ஆனாலும் உக்கிரமாக நேரடித் தாக்குதல் கதிரவன் நடத்துவதில்லை.  நில நடுக்கோட்டுக்கும் கடக ரேகைக்கும் மேலே வடதுருவம் அருகே இருப்பதால் இப்படி.

ஆனால், மக்களும் சூரியனோடே எழுந்து விடுகின்றார்கள் போல, கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேருக்கு மேலிருக்கும் சியோலில் குதிங்கால் செருப்போடு வேகநடை போட்டு, காத்திருக்கின்ற வாகனங்களில் ஓடிசென்று ஏறுவதை பார்க்க முடிகின்றது. சப்-வே (Subway) எனப்படும் நிலத்தடி சுரங்க இரயில்களில் அவசர அவசரமாக பயணிகள் பரபரக்கின்றனர்-பர-பற-க்கின்றனர்.

சமீபத்தில் பரபரப்பான PRISM டெக்னாலஜி என்கின்ற சொல்லின் ழுமு அர்த்தமும் சியோல் நகரில் புரிகின்றது. PRISM என்பது அமெரிக்கா உளவு பார்க்க இணையதளத்தை பயன்படுத்தியது குறித்தது. கொரியாவில் மக்கள் இணைய தளத்தில்தான் மூச்சு விடுகிறார்கள் என தோன்றுகிறது. பெரும்பாலோனோர் பெரும்பாலான நேரம் கரங்களில் தவழும் செல்லிடத் தொலைபேசியையே உற்று பார்த்துக்கொண்டு பொம்மைகள் போல நகர்கின்றனர்.

நகரின் நடுவே ஓடிக்கொண்டிருந்த கழிவு நீரோடையாக அசுத்தமாகிப்போன, பின்பு பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்ட பளிங்கு நீரோடை ஒன்றை காட்டினார்கள். அள்ளிக் குடிக்கலாம் போன்ற நீரில் மீன்கள் துள்ளி, விளையாடிக்கொண்டு இருந்தன.

ஒரு கால கட்டத்தில் இக்கழிவு நீர்ப் பாதையை மூடி  அதன் மீது சிமென்ட் சாலை அமைத்துவிட்டனராம். அதன் பின்னர் கழிவு நீர்ப்பாதைகளை தனித்துப் பிரித்து இதனை சாதித்து இருக்கின்றனர். தென் கொரியாவில் ஓடுகின்ற சந்தோசத்தோடு நதி சலசலப்பதாக தோன்றியது. புகைப்படங்கள் நிறைய நிறைய எடுத்து மனதை நிறைத்துக் கொண்டோம். இரண்டு வருடங்கள் வேலை நடந்ததாம்.  வந்தவுடன் கண்ட மாற்றங்கள் நிறைய அதில் ஒன்று, முதலாவது தேதியை அவர்கள் வருடத்தில் மாதம் வழியாக நாளில் முடிக்கின்றனர். எனவே தொலை நோக்கும் பார்வை இருப்பதாக தோன்றியது. எப்போதோ நடக்கப்போகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடலடி தூர்த்து இரயில் பாதைகள் அமைத்து கட்டிடங்கள் விளையாட்டு மைதானங்களை அமைத்து சுறுசுறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றது இஞ்சியான் நகர்புறம். அங்கேதான் விமான நிலையத்தில் வந்து இறங்கினோம். நுழைவுப் பட்டியல் நிரப்புகையில் தேதி குறிப்பிடுகையில் சுதாதேவியும் கூட  தேதியை தவறாக நிரப்பி அடித்துவிட்டு சரியாக தலைகீழாக திருப்பி எழுதினோம்! இதர விஷயங்களை திருப்புவதும் இவ்வளவு எளிதாக இருந்தால் எப்படி இருக்கு!

இப்போது குடியரசு தலைவியாக இருக்கும் சீமாட்டி பார்க் அம்மையாரின் தந்தையார் முக்கியமான கட்டத்தில் தென் கொரியாவின் குடியரசு தலைவராக மிக நீண்டகாலம் இருந்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து வந்திருக்கின்றார்.

சேமால் டுங் என்பது 1970களில் தொடங்கப்பட்ட கிராம வளர்ச்சி திட்டம். அது துளிர்விட்ட கிராமத்தை சென்று பார்த்தோம். அங்கே ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கு சாலை அமைத்ததோடு மட்டும் அன்று தேவைப்பட்டவர்களுக்கு வீட்டின் கூரையையும் சரி செய்து கொடுத்துக் கொண்டார்களாம். ‘பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கின்ற பாசம்’ என்று வைரமுத்து கவியரசரின் வரிகள் மின்னியது.

சப்-வே (Subway) என்னும் நிலத்தடி இரயில்கள் செல்லும் வழிகளில் சியோல் நகரை குறுக்கும் நெடுக்குமாக இணைத்து வினாடிய பொழுதில் மக்களை வேண்டுமிடம் சேர்க்கின்றன. இயந்திரம் பொத்தானை அழுத்தினால் பயணச்சீட்டை தருகின்றது. உள்ளே நுழைய இயந்திர தடுப்புகளை பயண சீட்டால் உரசி செல்ல வேண்டும். பின்னர் சேருமிடத்திலிருந்து வெளியே வருகையிலும் அதுவே, அதன்பின்னர் பயணசீட்டை திருப்பி ஒப்படைக்க ஒரு இயந்திரம். ஐநூறு வோன்கள் அது திரும்ப தருகின்றது. ஆறு பேர் பயணிக்க டிக்கெட் எடுக்க, பயணம் இனிதே முடிந்தது.

இட்டேவான் என்ற இடத்தில் திருநெல்வேலி தமிழர் ஒருவர் (அலெக்ஸ்) முன்னின்று நடத்தும் அசோகா விடுதியில் இந்திய உணவை உண்டனர். திரும்ப வந்தால் எல்லார் டிக்கெட்டும் சரியாக இருக்க, கதிர் என்கிற நண்பர் உள்ளே மாட்டிக்கொண்டார். ஒன்றரை அடி கண்ணாடி தடுப்புதான் வெளியே ஐவரும் உள்ளே நண்பரும் கடுமையாக யோசித்துக்கொண்டே தவித்தனர். அரையடி என தாண்டிவிட முடியாதே!  காமிராவில் பிடிபட்டு, போலீஸில் என்ன சொல்வது? பக்கத்து ஸ்டேஷன் வரை போய் வா?  என்று டிக்கேட் எடுக்கலாம் என ஒருத்தர் ஐடியா (Idea). மணி இரவு பத்துக்கும் பக்கம். தனியாக எப்படி ? தவறு எப்படி என பார்ப்போம்? திரும்பி கொடுத்த போது மொத்தமாக பழையதிற்கு பதில் புது டிக்கெட்டை போட்டிருக்கலாம் ? அல்லது உரசி பீப் (Beep) சத்தம் வந்த உடன் தடுப்பை தள்ளி வெளியே வரவேண்டும். கதிர் வெளியே வர டோங்குக் பல்கலைகழக டிக்கெட்டை ( அது தான் விடுதி பக்கம்) அங்கேயிருந்தே எடுத்தனர். அதாவது மாம்பலம் டிக்கெட்டை மாம்பலத்திலேயே எடுக்கிற மாதிரி. கம்ப்யூட்டர் இடைப்போடு தந்தது. பெருமூச்சு விட்டனர். இப்போது சிங்கம் அதை வாங்கி உரச… கம்பி காப்பாளன்… ‘எர்ரர்’’(error) தவறு என சிவப்பாய் காட்டினான். எல்லோரும் ‘டென்ஷன்’ (Tension) ஆனோம், மன்னிக்கவும் ஆனார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட தவறுகளில் இப்பொழுது சொன்ன தவறை கண்டால்… இந்த சீட்டுக்காரர் உள்ளே வரவில்லையே என கணினி கேள்வி கேட்டது. இதற்காக இனி என்ன செய்வது என யோசித்ததில் சீனி என்கிற நண்பர் அருமையாக யோசனை சொன்னார்… உரசி உள்ளே போவது போல கைகளில் தள்ளிவிட்டு பிறகு சற்று நேரம் கழித்து உள்ளேயிலிருந்து உரசி கதிர் வெளியே வரலாம் என்று…

அதுவே நடந்தது… இயந்திரங்கள் வாழ்வை எளிமையாக்கிடிலும் மனித மூளையை இன்னும் விஞ்சிவிடவில்லை என தோன்றியது. கவனமாக வெளிநாடுகளில் பயணிக்க வேண்டி உள்ளது. தனியாக செல்வது சுதந்திர சௌகர்யம் எனினும் நண்பர்களோடு செல்கையில் அனுபவமும், அறிவும் அமைதியாக அதிகரிக்கின்றது. பாதுகாப்புணர்வும் கூடவே கூடுகின்றது.

இன்னும் கிம்சியை பற்றி பேசவில்லை… ஹங்குல் எனப்படும் கொரிய மொழியைப்பற்றியும் அதை அறிவாளிகள் காலையில் தொடங்கி முடிப்பதையும் அல்லாதோர் இரவுக்குள் கற்று முடிப்பதையும் குறித்து கூறவேண்டி உள்ளது.

கிம்சி என்பது முட்டைகோஸ் இதழ்களில் பதப்படுத்தப்பட்ட மீன் துகளை தூவி வெட்டி தயாரிக்கப்படும் ஒரு உணவு வகையாகும். மீன்கள், நண்டுகள், பாம்பு, ஆக்டோபஸ் என பல சுவையான உணவு வகைகள் இருந்தாலும், கிம்சி கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வகைகளில் தென்கொரிய சாப்பாட்டு மேஜைகளில் இடம் பிடித்திருக்கின்றது.

இதில் புரோ- பயாடிக் (Foor-biotic) எனப்படும் நம்மூர் தயிர் வகையில் உள்ள லாக்டோ பேசில்லஸ் (Lacto-bacislls) நன்மை விளைவிக்கும் பாக்டீரியங்கள் நிறைய உள்ளனவாம். கொரியர்களில் பெரும்பான்மையானோர் தொப்பை இன்றி வலிமை நிறைந்தவர்களாக காணப்பட்டதற்கு காரணங்கள் வினவுகையில் வியப்பான விஷயங்கள் வெளிவந்தன. மங்கோலிய இனப்பெண்கள் கண்கள் பெரியதாக இருப்பதே அழகு என்று ‘இரட்டை இமைகள்’ (Double eye lid) வேண்டி, அதற்காக மேலிமை மீது இருக்கும் தோலில் சிறு அறுவை சிகிச்சை வெட்டுத் தையல் போட்டு அழகை அதிகரிக்க விரும்பும் அதிசயம் குறித்து திருமதி கிம் என்கின்ற தூதராக பெண்மணி கூறுகையில் அவர் கண்களையே உற்றுப் பார்த்ததில்… தான் அந்த சிகிச்சை செய்யவில்லை என சிரித்தார்… இதை தெரிந்ததும் இனி நீங்களும் கண்களை உற்றுப் பார்பீர்களோ?

தென் கொரிய பொருளதாரத்தில் ‘சபோக்கள்’ எனப்படும் மிகப்பெரிய குழுமங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு கொள்கை முடிவுகளில் அவற்றின் விருப்பங்கள் பிரதிபலிக்கக்கூடிய வாய்ப்பினை முற்றிலுமாக மறுப்பதற்கில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஹூண்டாய் என்று நாம் சொல்கின்ற வாகன நிறுவனத்தை கொரிய மொழியில் ‘ஹண்ட்’ என்று சொல்வதில் தொடங்கியது சபோல்களின் விஸ்வரூபம்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment