Home » Articles » புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…

 
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…


நாகராஜ் கே
Author:

தொடர்ந்து தொழில்நுட்ப அளவில் மாற்றங்களைக் கண்டுவரும் புகைப்படக் கலை ஒரு அதிரடி மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட நிலையில் இருந்து ஆப்டிக்கல் லென்ஸ், மெகா பிக்ஸல், ஆட்டோமெடிக் மோடு என்று டிஜிட்டல் கேமரா யுகத்துக்குள் வந்துவிட்ட புகைப்படக் கலையில், போஸ் கொடுக்கும் நிலைமாறி கேன்டிட் புகைப்படங்கள், திருமண குறும்படங்கள் என்ற புதிய உத்திகள் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகின்றன.

ஆரம்ப காலங்களில் சிறந்த போட்டோக்கள் எடுக்க ஸ்டுடியோக்களைத் தான் மக்கள் நாடினர். திருமணம் என்றால் கூட மணமக்களை ஸ்டுடியோக்களுக்கு அழைத்துச் சென்று போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர் இந்நிலை மாறி திருமண விழாக்களுக்கு ஸ்டுடியோவில் இருந்து திருமணம் நடைபெறும் இடங்களுக்கு போட்டோகிராபர் வந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பிலிமில் படம் எடுத்து பிராசஸ் செய்யும் நிலை இருந்தது. பிலிம் பிராசஸ் என்பது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியதாக இருந்தது. பிராசஸ் சிறப்பாக செய்தால் தான் போட்டோ தரமாக இருக்கும்.

இதன் அடுத்த கட்டமாக போட்டோவுடன் வீடியோக்களும் சேர்ந்து கொண்டன. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆப்டிக்கல் லென்ஸ், மெகா பிக்ஸல், ஆட்டோமெடிக் மோடு உள்ள டிஜிட்டல் கேமராக்கள் வந்தது. படம் எடுக்கும்போதே டிஸ்பிளேயில் படம் தெரியும், தேவையான அளவுக்கு வெளிச்சத்தைக் குறைக்கவோ, கூட்டவோ செய்யும் வசதி என்று இன்று பல புதிய வசதிகளுடன் வளர்ந்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பழைய நினைவுகளை மீண்டும் மலரச் செய்யும் தன்மை புகைப்படங்களுக்கு இருப்பதால் தான் திருமண புகைப்படங்களுக்கு அதிக அளவு மவுசு இருக்கிறது.

மணமக்களை போஸ் கொடுக்கச் சொல்லியும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக நிறுத்தியும் புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் அன்று முதல் இன்று வரை வழக்கமாக நடப்பது.

ஆனால் கொஞ்ச காலமாக இந்த போக்கு புதிய வடிவுக்கு மாறி இருப்பதைக் காண முடிகிறது. மணமக்களையோ, பெற்றோர்களையோ, உறவினர்களையோ போஸ் கொடுக்கச் சொல்லி புகைப்படம் எடுக்காமல் மணமக்கள், பெற்றோர்கள், உறவினர்களின் உணர்வுகளையும், மனநிலையையும் அவர்கள் அறியாமலேயே காட்சிப்படுத்தும் விதமாக புகைப்படம் பிடிப்பது அதிகரித்திருக்கிறது. இதைத்தவிர முழு திருமணத்தையும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் ஓடும் வீடியோவாக எடுக்கப்பட்டு மணமக்களுக்கு பரிசாக அளிப்பதும் அதிகரித்துள்ளது சமீபகாலமாக.

‘கேன்டிட் போட்டோகிராபி’, ‘வெட்டிங் ஜர்னலிசம்’, ‘மூட் போட்டோகிராபி’ என்று பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இந்தக் கலையின் ஒரே நோக்கம் மக்களின் மனநிலையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவது தான்.

இந்தப் புகைப்படக் கலைக்கென்றே பிரத்யேகமாக புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இதன் தனிச்சிறப்பு. அதுவும் இந்தக் கலையில் ஈடுபட்டுள்ளவர்களில் கணிசமானவர்கள் சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் என்பது கூடுதல் ஆச்சரியம்.

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் இருந்து இங்கு வந்துள்ள எனது நண்பர் சந்தோஷ்குமார், தன்னுடைய சாஃப்ட்வேர் எஞ்சினியர் வேலையை விட்டுவிட்டு கேன்டிட் வெட்டிங் போட்டோகிராபராக தமிழ்நாட்டில் வேலைசெய்ய விரும்புவதாகக் கூறியது ஆச்சர்யமாக இருந்தது.

“அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் கேன்டிட் வெட்டிங் போட்டோகிராபியில் நல்ல பயிற்சி பெற்றிருக்கிறேன். அதன் மூலம் என்னுடைய படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டுவர விரும்புகிறேன். ஒரு மனிதனின் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாமல் நினைவில் நிற்கும் தருணமாக திருமணத்தில் ஏற்படும் உணர்வுகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன். மேலும் இந்தக் கலையை இந்தியாவில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது” என்றவர், “இன்றைய சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் இண்டர்நெட் போன்றவற்றில் நிறைய இளைய தலைமுறையினர் தங்களுடைய மறக்க முடியாத பயணம், விழாக்கால கொண்டாட்டங்கள், திருமணம் போன்றவற்றை கேன்டிட் போட்டோகிராபி முறையில் எடுத்து வெளியிட்டு வருவதால் இந்த கலை வேகமாக பிரபலமடைந்து வருகிறது” என்றார்.

பல பேருக்கு போட்டோகிராபி என்பது ஒரு பொழுதுபோக்காக இருப்பதுடன் தன்னுடைய ரசனையையும், உணர்வுகளை உள்வாங்கும் திறமையையும், அழகுணர்ச்சியையும், வெளிப்படுத்தும் விதமாக படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பதால் ஒவ்வொன்றிலும் வித்தியாசத்தைக் காட்ட நினைக்கிறார்கள்.

மற்ற போட்டோகிராபர்களைப் போல் இந்த கேன்டிட் போட்டோகிராபி மூலம் படம் பிடிப்பவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் இதில் போஸ் கொடுக்க மாட்டார்கள். உணர்வுகள் வெளிப்படும் சமயத்தை எதிர்நோக்கி எப்போதும் காத்திருக்க வேண்டும். சூழலை நன்கு உள்வாங்கிக் கொண்டு சந்தர்ப்பத்திற்கு காத்திருக்க வேண்டும் என்பதால் இது ஒரு சவாலானதாக இருப்பதாக கூறுகிறார்கள் இதில் ஈடுபட்டுள்ளவர்கள்.

ஆண்கள் மட்டுமின்றி அதிக அளவு பெண்களும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதே இந்த கலை எவ்வளவு ஸ்பெசல் என்பது புரியும்.

உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக போட்டோ எடுத்தாலும் பாரம்பரிய முறையில் போஸ் கொடுத்து எடுக்கப்படும் போட்டோவே சிறந்தது என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

திருமணம் நடைபெறும்போது மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை படம் எடுக்காமல் உறவினர்களின் உணர்வுகளை புகைப்படம் எடுத்து ஆல்பம் தயாரித்தால் எப்படி இருக்கும். மணமக்களின் முகங்களை லாங்சாட்டிலும், நாதஸ்வரம், தாலி போன்றவற்றை குளோசப்பிலும் படம் பிடித்தால் ரசிக்கவா முடியும்? என்று கிண்டலடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனாலும் பாரம்பரிய புகைப்படக் கலையில் இருந்து வெளியே வர விரும்புபவர்களுக்க இந்த கேன்ட்டிட் போட்டோகிராபி துறை உகந்ததாகவே இருக்கும்.

இதைப்போலவே தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது ‘வெட்டிங் சினிமா’. நாள் முழுவதும் நடைபெறும் திருமணங்களை ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுக்கப்படும் வெட்டிங் சினிமா மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

இதில் பல வசதிகள் அடங்கியிருக்கின்றன. தவிர்க்க முடியாத சில காரணங்களால் திருமணத்திற்கு வர முடியாத உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த வெட்டிங் சினிமாவை கொடுப்பதால் அதை அவர்களால் ரசிக்க முடிகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பே மணமக்களை கேன்டிட் புகைப்படமாக எடுத்து உறவினர்களிடம் காட்டி அவர்களின் அபிப்ராயங்களையும் பதிவு செய்து அவற்றைத் தொகுத்து ஒரு ஆல்பமாக தயாரித்து மணமக்களுக்கு திருமண பரிசாக அளிக்கும் புதிய பழக்கமும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் இதில் ஒரு நெருடலான விசயம் இதற்கு ஆகும் செலவு. கேன்டிட் போட்டோகிராபி செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம் சாதாரண போட்டோகிராபருக்குக் கொடுக்கப்படும் கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம்.

8 மணிநேரம் வேலை செய்வதற்கு 50,000 முதல் 75,000 வரை கட்டணம் கொடுக்கும் நிலையே தற்போது உள்ளது. மேலும் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை கூட கட்டணம் பெறும் கேன்டிட் போட்டோகிராபர் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் மனதில் இதுவரை இருந்த மனத்தடை விலகி பாரம்பரிய முறையைத் தாண்டி புதிய வடிவத்திற்கு செல்லும் கேன்டிட் போட்டோகிராபிக்கு இந்தியாவில் மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை