Home » Articles » சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”

 
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”


ராமசாமி R.K
Author:

ஆர்.கே. ராமசாமி
ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனங்கள், உடுமலைப்பேட்டை

சிலர் எப்போது பார்த்தாலும் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை நினைத்து நினைத்து குழப்பத்தோடு முகம் வாடி இருப்பார்கள். அந்த பிரச்சனைக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்பார்கள். குழப்பம் பிரச்சனையில் இல்லை. அவர்கள் அந்த பிரச்சனையை அணுகும் முறையில் தான் குழப்பமே உண்டாகிறது.

ஒரு லாடம் அடிக்கும் தொழிலாளியின் மகன் லாட ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது கண்ணில் ஊசிபட்டு அவனது பார்வையே பறிபோனது.

அந்த லாடம் அடிக்கும் தொழிலாளியின் மகன் பிரச்சனையை வேறு விதமாக அணுகினான். “எந்த ஊசி என் கண்களை பறித்ததோ அதே ஊசியைக் கொண்டு கண்ணில்லாதவர்களுக்கு எழுத்துக்களை உருவாக்குவேன்” என்று சொல்லி ‘பிரைல்’ எனும் எழுத்து முறையை உருவாக்கினான். அவர் தான் லூயிஸ் பிரைல்.

ஒரு மனிதன் தன் குறைகளை உணர்கின்றபோது பாதி மனிதன் ஆகிறான். அந்தக் குறைகளைக் களைகிறபோது முழு மனிதன் ஆகிறான்.

ஒரு மன்னன் உறக்கத்தின்போது ஒரு கனவு கண்டான். அம்மன்னன் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அரசவையைக் கூட்டி தான் கண்ட கனவினால் ஏற்பட்ட குழப்பத்தைத் தெரிவித்தான். கனவில் தான் மிகப்பெரிய பிரச்சனையில் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கும்போது முதல் மந்திரியோ, அரசவை ஆலோசகரோ, தளபதிகளோ யாரும் அருகில் இல்லை என்று கூறினான்.

இப்படி எனக்கு ஆலோசனைகளைக் கூற யாருமே இல்லாதபோது நான் என்ன செய்வது இதற்கு உடனே பதில் தெரிந்தாக வேண்டும் என ஆணை பிறப்பித்தான். இதற்கு பதில் கூறவே முடியாது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தபோது ஒரு முதியவர் எழுந்து நான் இதற்கு தீர்வு சொல்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து மன்னா! ஒரு சிறு நிபந்தனை. இதற்கு பதில் ஒரே வரிதான். அதை நீங்கள் இப்போது படிக்கக்கூடாது. ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது மட்டுமே அதை படிக்க வேண்டுமென்று சொன்னார். மன்னரும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு வரி பதிலை ஒரு மோதிரத்தில் பதித்து அதை அரசனின் விரல்களுக்கு அணிவித்தார் முதியவர்.

சில காலங்களுக்குப் பிறகு அண்டை நாட்டோடு போர் மூண்டது. போரில் படுதோல்வி ஏற்பட்டது. மன்னன் மட்டும் தப்பித்து குதிரை மீது ஏறி ஓட, எதிரிகளும் துரத்திக் கொண்டே வந்தனர். மன்னர் ஓர் இடத்தில் தனிமையாக ஒரு குகையில் மறைந்து கொண்டார். அடுத்து என்ன செய்வது எனக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அமைச்சர்களோ, தளபதிகளோ இங்கே இல்லையே என்று மன்னன் வருந்தியபொழுது மோதிரத்தில் எழுதப்பட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. உடனே மோதிரத்தைத் திறந்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்த்தார்.

‘This too Will Pass Away’ ‘இந்த நிலையும் நிச்சயம் மாறிவிடும்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த வாசகம் மன்னனுக்கு ஆறதலைத் தந்தது. எதிரிகள் மன்னனைத் தேடி வழி மாறிசென்று விட்டார்கள் மன்னன் தப்பித்தான்.

தப்பித்த மன்னன் சில மாதங்களுக்குப் பிறகு அதே எதிரி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கண்டான். வெற்றிக் களிப்பில் இருக்கும்போது மீண்டும் மோதிரத்தைத் திறந்து பார்த்தான்.

‘This too Will Pass Away’ ‘இந்த நிலையும் நிச்சயம் மாறிவிடும்’ இப்பொழுது அந்த வாசகம், வெற்றி பெற்றுவிட்டதால் கர்வம் கொள்ள வேண்டாம் என எச்சரிப்பது போல் இருந்தது.

இதையே கௌதம புத்தர் தெளிவாகச் சொல்கிறார். மெல்லியதாக ஓடிக்கொண்டு இருக்கும் நதியைக் கடக்க இரண்டாவது காலடியை முதல் காலடி பதித்த நீரின் மேல் வைக்க முடியாது. புதிய நீரில் தான் கால் பதிக்க நேரிடும். முதல் காலடிபட்ட நீர் கடந்து போய்விடும். காலமும், நிகழ்வுகளும் அதுபோல கடந்து போய்விடும். இதற்கு ‘கண பங்க வாதம்’ என்று பெயர்.

இதுபோன்று தான் எல்லாம் மாறிவிடும். காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்ற உண்மை தெரிந்திருந்தால் எந்தப் பிரச்சனையையும் எளிதாக அணுகலாம். காலங்கள் மாறும்போது கோலங்கள் மாறும். கோலங்கள் மாறும்போது கொள்கைகளும் மாறும். கொள்கைகள் மாறும் போது அணுகுமுறையும் மாறும். அணுகுமுறை மாறும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு எளிதில் வரும்.

அதனால் குழப்பமாய் இருக்கிறபோது தயவுசெய்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். 10 நிமிடம் கழித்து பதற்றம் தணிந்து மனம் கொஞ்சம் அமைதியடைந்த பின் உற்சாகமான சூழ்நிலையில் தெளிவான முடிவை எடுங்கள்! நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும்.

பிரச்சனை உச்ச கட்டத்திற்குச் சென்றாலும் அஞ்சாதீர்கள். பொறுத்து இருந்தால் அடுத்த நிமிடமே தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவருமே ஒத்துக்கொள்ளும் உண்மை.

மன்னனைப் போல நிச்சயம் இந்த நிலை மாறிவிடும் என்று காத்திருந்து ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கும் கொக்கைப் போல காத்திருந்து பிரச்சனையை வெற்றி கொள்வது ஒரு வகை.

பிரச்சனையோடு போராடி வெற்றி பெறுவது இரண்டாவது வகை. இது மிகவும் கடினமானது. மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் சோதனை இல்லாமல், துன்பப்படாமல் கஷ்டப்படாமல் கிடைப்பது இல்லை.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயின்”

என்ற வள்ளுவரின் வாக்குப்படி செய்யப்போகும் செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, அச்செயலுக்கு எதிராக இருக்கும் மாற்றான் வலிமை, தனக்கு உதவ வரும் துணைகளின் வலிமை, மாற்றானுக்கு உதவ வருகிற துணைகளின் வலிமை, இவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து அறிந்து தெளிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை