Home » Articles » நீங்கள் சாதனையாளரே

 
நீங்கள் சாதனையாளரே


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

சாதனை என்பது தொடர் வெற்றி அல்லது மற்றவர்களால் முடியாததைச் செய்வது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர். உலகின் மிக உயரமான சிகரம் இது தான்.

இதில் ஒருமுறை ஏறினாலோ, அது வெற்றி மட்டுமல்ல – சாதனை தான். மலை, குளிர், பனிக்காற்று எனப் பல தடைகளுக்கிடையில் 60 வயதுக்கு மேல் ஏறுவது என்பது பலரால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

இந்தச் சிகரத்தில் ஏறுவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகின்றனர். இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையில் முதியோர்களைக் கொண்டுள்ள நாடு, அதுவும் 100 வயதைத் தாண்டியோர் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு ஜப்பான்.

ஜப்பான் நாட்டின் பாட்டி, தமனே வதான்னபே வயது 73. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 63வது வயதில் 2002-ல் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தவர்.

தன் சாதனையைத் தானே முறியடிக்க, தன் வயதையும் பொருட்படுத்தாமல் மே 2013ல் மீண்டும் ஒருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

கோவையில் முருகனுக்கு உள்ள மலை மருதமலை. மலைப்பாதை அமைத்து கார், பஸ் மேலே சென்றாலும், அங்கிருந்து சுமார் 100 படிகள் ஏறிச் சென்றால் தான் முருகனைப் பார்க்க முடியும். இந்தப் படிகளை ஏறுவதற்கு, நம்மூர் பெண்கள் 40 வயதைத் தாண்டியவர்கள், கொஞ்சம் எடை கூடுதலாக இருப்பவர்கள் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.

நினைத்துப் பாருங்கள் 73 வயது, கை கால்கள் நடுங்கும். பேச்சு ஓரளவு குளறும். 25,000 அடி உயரத்துக்கு மேலே மூச்சுவிடவும் சிரமம். இந்த தமனே பாட்டி 2வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி உங்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கட்டாயம் தரும்.

வெற்றி என்பதற்கு ஆங்கிலத்தில் SUCCESS என்று கூறுகிறோம். ஒரு செயலில் வெற்றி பெற,

பதட்டமில்லாத மனநிலை

அதைப் புரிந்து கொள்ளுதல்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்

விழிப்பு நிலையில் இருத்தல்

எதிர்மறை எண்ணம் நீக்குதல்

தன்னம்பிக்கை

அமைதி ஆகியன தேவை.

இதை,

S – Smile                                  –           புன்னகை முகம்

U – Understand Problem          –           புரிதல்

C – Control Attitude                 –           உணர்ச்சி கட்டுப்பாடு

C – Consciousness                   –           விழிப்பு நிலை

E – Eradicate Negative Thoughts –   எதிர்மறை எண்ணம் நீக்குதல்

S – Self-confidence                  –     தன்னம்பிக்கை

S – Silence                                –           மவுனம்

என்று கூறலாம்

அமைதி மிக முக்கியம். எந்த ஒன்றையும் முடிப்பதற்கு இவை அவசியம். பிறரால் செய்ய முடியாததைச் செய்யவும், தொடர் வெற்றிகளைப் பெறவும் இவை மட்டும் போதாது. என்ன தேவை என்பதைப் பார்ப்போம்.

மூன்று படிகளைக் கடந்தால் வெற்றியும் சாதனையும் என்றும் நம்மை விட்டுப் பிரியாது. அது என்ன 3 படிகள்?

முதல்படி – நம்புதல்: இதற்கு அடிப்படை நமது தேவையில் தெளிவு. என்ன வேண்டும் என்பதில் உஷாராக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் இருக்கிறது என்பதற்காக, அதுபோல் நமக்கும் வேண்டும் என ஆசைப்படக்கூடாது. அவசியமாக அது தேவை என்றால் மட்டுமே, அதற்கு ஆசைப்பட வேண்டும். என்ன தேவையோ, அது எந்த அளவு எவ்வளவு காலத்திற்குள் தேவை என்பதையெல்லாம் சரியாகக் கணித்து ஆசைப்பட வேண்டும். அது நமக்கு கிடைக்கும் என நம்ப வேண்டும்.

இரண்டாம்படி – மனக்காட்சிஇது மிக முக்கியமானது. நம்மில் பலர் சரியாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைத்தும், சாதிக்க முடியாமைக்குக் காரணம் மனக்காட்சியாகக் காணாதது தான். இதைச் சரியாகக் காண்பவர்கள் நூறு சதம் வெற்றியடைகிறார்கள்; சாதிக்கிறார்கள்.

காரணம், இவர்களின் ஆழ்மனம் செயல்படுகிறது. அதற்குத் துணையாக பிரபஞ்ச சக்தியும் உதவுகிறது.

மூன்றாம்படி – பெறுதல்மனோசித்திரமாகக் கண்டுவிட்டால் கட்டாயம் நாம் அதைப்பெற்றே ஆக வேண்டும். இடையில் பல பிரச்னைகள் வரலாம். தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, செயல்பட்டால் பிரச்னைகள் நம்மைப் பாதிக்காது.

ஆனால், நம்மில் பெரும்பாலோர், ஏதேனும் பிரச்னைகள்  வரும்போது, “நான் அப்போதே நினைத்தேன், இதுபோல் ஆகுமென்று”, “எனக்கு கொடுப்பினை இல்லை” என இதுபோல் பலவற்றைப் புலம்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதோஓர்உதாரணம்:

சீர்காழி மாரிமுத்து, இவரின் வயது 70 தான். 20 வயது இளைஞனைப் போல் குண்டு வீசுதல், வன்தட்டு எறிதலில் கலந்துகொண்டு தேசிய அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளார். இது பெரிய சாதனையல்ல. ஆனால், இதோ அவரே சொல்கிறார்:

“18 வயதிலேயே இந்த விளையாட்டில் மாநில அளவில் பதக்கம் பெற்றேன். தமிழ் நாட்டில் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆந்திராவில் என்.டி. ராமாராவ் ஆகிய முதலமைச்சர்களின் கையில் முதல் பரிசுகள் பெற்றேன். ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றேன்.

2003ல் நடந்த விபத்தால் இடது தொடை முழுதும் முறிந்து, 4 ஆண்டுகள் நடக்க முடியாமல் இருந்தேன். கால்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முன்போலவே வெற்றி பெற்று பதக்கங்கள் பெற விரும்பினேன்.

எண்ணத்தைக் குறிக்கோளாக்கினேன். ஆழ்மனதில் விதைத்தேன். எனக்குள்ளிருந்த அறிவு, உடலை சற்று பின்னுக்குத் தள்ளி, கால்களுக்கு அதிக அழுத்தம் தராமல் குண்டு எறியுமாறு வழிகாட்டியது.

மனக்காட்சியாகக் கண்டு நன்றாக நினைவில் கொண்டேன். பயிற்சியில் ஈடுபட்டேன். சுலபமாயிருந்தது. கால் வலி வரவே இல்லை. அதன்பின் 2013ல் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய போட்டியில் கலந்து, வென்று இரு பதக்கங்கள் பெற்றேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.

விரைவில் நடக்க இருக்கும் ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியிலும் கலந்துகொள்ள தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

மருத்துவர் கூறிவிட்டார்: பலரும் பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு பேசுகின்றனர். இனி விளையாட்டில் கலந்துகொள்ள இடது தொடை இடம் தராது எனத் தெளிவாக, உறுதியாக எண்ணும்போது, இவரது உள்ளுணர்வு அறிவு “உன்னால் முடியும்” என்று முன்னோக்கித் தள்ளி, வெற்றியைத் தந்தது.

ஒற்றுமை:

தனி மனிதர்கள் மட்டுமல்ல. ஓர் ஊரிலுள்ள எல்லோருமே முழு மன ஈடுபாட்டுடன் மேற்கொண்ட செயலால் அரசாங்கமே வக்கித்து நிற்கிறது.

மலையைக் குடைந்து சாலை அமைப்பது தனி மனிதனால் இயலாத ஒன்று. இந்தியாவில் மிக அதிக நீளமான, 11 கி.மீ. சுரங்க ரயில் பாதை காஷ்மீர் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பாலமலை என்ற மலை கிராமத்தில் 1350 குடும்பங்கள் உள்ளன. 8ம் வகுப்பு வரை தான் பள்ளிக்கூடம், மின் வசதி, குடிநீர் வசதி இருந்தாலும், சாலை வசதி இல்லை.

கீழேயுள்ள ஊர்களுக்குச் சென்று வர மொத்தம் 14 கி.மீ. கரடு முரடான கூரான பாறைகளில் இறங்கி ஏற வேண்டும். விவசாய விளைபொருட்களைக் கூட தலைச்சுமையாகத் தான் கீழே கொண்டு செல்ல வேண்டும்.

பிரசவத்துக்கு கர்ப்பிணிப் பெண்களைத் தொட்டில் கட்டி தூக்கிச் செல்ல வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சையின்றி, இறந்தவர்கள் பலர்.

சாலை வசதிக்காக அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலரிடமும் மனு கொடுத்தாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஊர்மக்கள் ஒன்றுகூடி, அனைவரது வாழ்க்கை லட்சியமான சாலை வசதியை மனக்கண்ணால் கண்டு, செய்து முடிக்க திட்டமிட்டனர். சாலை போடுவதில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும். வேறு வேலைக்கு போகக்கூடாது என முழு மன ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். இரண்டே வருடத்தில் மலையைக் குடைந்தும், மேலேயும் 7 கி.மீ. சாலையை போட்டுவிட்டனர் இந்தக் கிராம மக்கள்.

தனிப்பட்ட முறையில் சாதிப்பது சுலபம். பலர் சேர்ந்து செயல்படும் தொடர் ஓட்டம் (Relay Race) போன்றவற்றில் கலந்து கொள்வோர் அனைவரது முழு ஈடுபாடும் இருந்தால் மட்டுமே வென்று சாதிக்க முடியும். ஒரு கிராமம் முழுதுமே இணைந்து ஒரே இலக்குடன் செயல்பட்டு, பல தலைமுறைக் கனவான சாலையை அமைந்திருப்பது மாபெரும் சாதனை தானே!

 இவற்றையெல்லாம் படிக்கும் போது உண்டாகும் எண்ணங்களை கெட்டியாகப் பிடித்து வையுங்கள்.

 இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

1 Comment

  1. Ganesh says:

    Excellent. I really appriciate .

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை