Home » Post » நல்லதும் கெட்டதும்

 
நல்லதும் கெட்டதும்


admin
Author:

நாட்டில் உள்ள நல்லவர்களே!, உங்களுக்கு ஒரு கெட்டச் செய்தி சொல்லப் போகிறேன். உலகில் நீங்கள் மிக மிக நல்லவராக இருந்தாலும், உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் என்பது இல்லை. ஆனால் நீங்கள் நல்லவராகவும் இருந்து, சரியானதையும் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு அனேகமாக நல்லதே நடக்கும். ஆக, உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நல்லதே நடக்க வேண்டுமானால், நீங்கள் சரியானதையே தெரிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் விருப்பு வெறுப்பு விட்டுத் தெரிவு செய்தால், உங்களால் சரியானதைத் தெரிவு செய்ய முடியும். சரி, அன்பர்களே!, வெளியே தெரிவு செய்வது பற்றி இன்னொரு சமயம் பார்ப்போம். இன்று, நம் உள்ளே சரியானதைத் தெரிவு செய்வது பற்றி பார்ப்போமா?
நண்பர்களே ! நமக்குள்ளே உள்ள நல்லது கெட்டது பற்றித் தெரிந்து கொண்டால், நாம் நலமாக வாழச் சரியானதைத் தெர்வு செய்வோம். இந்த நல்லதுதான், நமது தோல் ஆரோக்கியம், இரத்த நாள இலகுத்தன்மை, இருதய செயல்பாடு, நரம்புச் சூட்டிகை, மூளைத் திறன், நுரையீரல் செயல்பாடு, மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. இவ்வளவுக்கும் உபயோகமாக இருப்பது வேறு எதுவும் அல்ல, நமது உடலில் உள்ள நல்லக் கொழுப்புதான். நமது உடலில் எங்கெல்லாம் சுருங்கி விரியும் நிகழ்வு நடை பெறுகிறதோ அங்கெல்லாம் நல்லக் கொழுப்பு அவசியம் தேவை. இந்த இடங்களில் நல்லக் கொழுப்புக்கு பதிலாகக் கெட்டக் கொழுப்புச் சேரும் போதுதான் சிக்கல்கள் ஆரம்பமாகின்றன. சரி, அன்பர்களே!, நல்லக் கொழுப்புக்கும் கெட்டக் கொழுப்புக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் சரியானதைத் தெரிவு செய்ய உதவியாக இருக்கும். அது பற்றி இனி பார்ப்போம்.
காரணிகள் நல்லக் கொழுப்பு கெட்டக் கொழுப்பு
எது எப்படி? இது இலாஸ்ட்டிக் (Elastic) போல் சுருங்கி விரியும் தன்மை உடையது. மிக இலகுவாக இருக்கும். இது பிளாஸ்ட்டிக் (Plastic) போல் விரிந்தால் சுருங்காத தன்மை உடையது. அழுத்தமாக இருக்கும்.
எவை எவை? ஓமேகா-3 (Omega-3), ஓமேகா-6 மற்றும் ஓமேகா-9, மிகக் குறை அடர் கொழுப்பு (VLDL), குறை அடர் கொழுப்பு (LDL), மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் (Triglyricides)
சக்தி தருவது எது? விரதமிருந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ சுலபமாக கழன்று சக்தியாக மாறக்கூடியது. எவ்வளவு பட்டினி கிடந்தாலும் அல்லது உடற்பயிற்சி செய்தாலும் அசைந்து கொடுக்காது. இதைக் கரைக்க நிறையச் சக்தி தேவை. கெட்டக் கொழுப்பு கரையாததால், சதையும் எலும்பும் கரைந்து உடலியக்கம் நடைபெறும்.
மனநலம் புத்தி கூர்மை, மனத் தளர்வு (Relaxation), மற்றும் மன அமைதி. புத்தி மந்தம், மன இறுக்கம் (Mental stress) மற்றும் மன உளைச்சல்
உடல் நலம் உடல் மென்மை (Suppleness), நல்ல தூக்கம், நோய் எதிர்ப்புச் சக்தி, ஆரோக்கியமான உள்ளுறுப்புகள் மற்றும் அழகான ஆரோக்கியமான தோல். உடல் கடினத்தன்மை (Hardened), தூக்கமின்மை, மாரடைப்பு, பித்தக்கல், மூளைச் செயலிழப்பு, குண்டாகுதல், நரம்புத் தளர்ச்சி, வாத நோய் மற்றும் தோல் நோய்கள்.
எதில் உள்ளது? மீன் எண்ணை, குளிர் கடல் மீன்கள் (Cold water fish), ஆலிவ் எண்ணை, பாதாம், பிஸ்தா, நாட்டுக் கோழி, சிறிய மீன்கள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, முட்டை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை ஆகியன. குளத்து மீன்கள், பெரிய மீன்கள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பிராய்லர் கோழி, கடலை எண்ணை, வனஸ்பதி (டால்டா), பனீர், துரித உணவுகள், நொறுக்குத் தீணிகள், வறுத்த உணவுகள், கொண்டைக் கடலை ஆகியன
உண்மையை ஆதரிக்கும் உன்னதமானவர்களே ! ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நீங்கள் கொழுப்பே சாப்பிடாவிட்டாலும் உங்களுக்குள் கொழுப்பு சேரத்தான் செய்யும். நம் உணவில் இருக்கும் மாவுச்சத்து (Carbohydrates), புரதம் (Proteins) மற்றும் கொழுப்பு (Fats) ஆகிய மூன்றும் முறையே, குலுக்கோஸ் (Glucose), அமினோ அமிலங்கள் (Amino Acids) மற்றும் அமிலக் கொழுப்பாக (Fatty Acids) செரிமாணம் மூலம் தன்மாற்றம் அடைகின்றன. பின்னர் இந்த மூன்றும் அசிடைல் கோ-ஏ (Acetyl Co-A) என்ற ஒரே பொருளாகத்தான் மாறுகின்றன. இந்த அசிடைல் கோ-ஏ ஆனது நம் உழைப்பின் தேவைக்கு ஏற்ப சிட்ரிக் அமில சுழற்சியின் (Citric Acid Cycle) மூலம் சக்தியாக (ATP மூலக்கூறாக) மாறி நம் உழைப்புக்கு ஆற்றலைத் தருகிறது. நம் உழைப்புக்கு போக மீதம் உள்ள அசிடைல் கோ-ஏ எல்லாம் கல்லீரலில் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தரமான உணவும், செரிமாணமும் இருக்கும் வரை இந்தச் சக்தி மாற்றம் மற்றும் கொழுப்புச் சேமிப்பு சிக்கலின்றி நிகழும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு கேடு விளைவிப்பதாக இருப்பின், அது சக்தியாக மாறமுடியாமல் கெட்டக் கொழுப்பாக கல்லீரலிலும் அதைத் தாண்டி உடலின் பல இடங்களிலும் தேங்க ஆரம்பிக்கின்றன. இப்படித்தான் நாம் கெட்டக் கொழுப்பின் வசம் சிக்கிப் போகிறோம்.
அறிந்து, புரிந்து, தெளிந்த மண்ணின் மைந்தர்களே!, நம் உணவு இரசமாகி, இரத்தமாகி, சதையாகி பின் கொழுப்பாகிறது. பின் இந்தக் கொழுப்பு எலும்பாகி, நரம்பாகி, விந்து நாதமாகிறது. நம் உணவு நல்லதும் கெட்டதுமாக இருக்கும் பட்சத்தில், இரசமும் தசையும் ஓரளவுக்குத் தேறி விடுகிறது, ஆனால், இது கெட்டக் கொழுப்பாக மாறியதும் சக்தி மாற்றம் ஆக முடியாது சிக்கிப் போகிறது. ஆகவே, கொழுப்பானது எலும்பு, நரம்பு மற்றும் விந்து நாதங்களுக்குச் சக்தியாக மாறமுடிவதில்லை. எலும்பு பலவீனத்தால், உடல் வலிமை குறைவதும், நரம்பு பலவீனத்தால், உடல் நோய் வளர்வது தெரியாமலும், விந்து நாத சக்தியிழப்பால் ஆண்மை அல்லது பெண்மை குன்றுவதும் நிகழ்கின்றன. விந்து நாதத்தை உசுப்புவதற்கு நாம் வயக்ரா உள்ளிட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால், மிச்சமிருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளை கரைத்துக் கொஞ்ச காலத்திற்கு வீரியத்தைக் கொடுத்து விட்டு, அப்புறம் உள்ளதும் போய் வருந்தி வாழ்வோம்.
நல்ல நண்பர்களே! நமது உடலில் கெட்டக் கொழுப்பு சேராமல் இருக்க வேண்டுமானால் இவைகள் அவசியம் வேண்டும்.
1. தரமான கல்லீரல் செரிமாணம்: அதிக உடல் உஷ்ணம், கல்லீரல் செரிமாண நொதிகளை அழிந்து கொழுப்புச் செரிமாணத்தைக் கெடுக்கிறது.
2. தரமான சமச்சீர் புரதம்: நல்லக் கொழுப்பைச் சக்தியாக மாற்ற எல்லா அத்தியாவசியமான அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதம் தேவை. நல்ல கொலஸ்ட்ரால் என்பது நல்லக் கொழுப்பும் சமச்சீர் புரதமும் சேர்ந்தக் கூட்டாகும்.
3. உழைப்புக்கு ஏற்ற உணவு அளவு: நமது உணவிலிருந்து கிடைக்கும் சக்தியானது உழைப்புக்குப் போக மீதமெல்லாம் கொழுப்பாக மாறிவிடுவதால் உழைப்புக்கு மிஞ்சிய உணவு அதிகக் கொழுப்பாக மாறி, அதற்கேற்ற அளவு புரதக் பற்றா குறைவால் கெட்டக் கொழுப்பாக தேங்கிவிடுகின்றன.
நல்லக் கொழுப்பை உணவில் தினமும் சேர்ப்போம்!
நல்ல இரசம் முதல் விந்து நாதம் வரை சிறப்போம்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை