Home » Articles » உனக்குள்ளே உலகம்-34

 
உனக்குள்ளே உலகம்-34


கவிநேசன் நெல்லை
Author:

மனம் என்னும் மந்திர சக்தி

“எனக்கு கணக்குப் பாடம் பிடிக்காது”.
“எங்கள் ஆங்கில ஆசிரியர் வகுப்புக்குள் வந்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது”.
“ஏன்தான் சனிக்கிழமையும் பள்ளியை நடத்துகிறார்களோ. ஒரே எரிச்சலாக இருக்கிறது”.
“நம்ம ஏரியாவுலயே இந்தமாதிரி ‘ஸ்ட்ரிக்ட் டிசிப்ளின்’ என்ற பெயரில் மிரட்டுகின்ற பள்ளியை நான் பார்த்ததே இல்லை”.
“வீட்டில்போய் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாலே எனக்குத் தூக்கம் வந்துவிடுகிறது”

– இப்படியெல்லாம் பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளில் சிலர் படிப்பு சம்பந்தப்பட்ட பலவித கருத்துக்கள் கூறுவதை நாம் இன்றும் கேட்கலாம்.

“எனக்கு இது பிடிக்காது. அதுதான் பிடிக்கும்” – என்று மனதிற்குள்ளே வேலிகளைப் சிலர் போட்டு வைத்துக்கொள்கிறார்கள். இதனால் தனக்குப் பிடிக்காத எந்தவொரு செயலையும் அவர்கள் செய்வதில்லை. மனதுக்கு பிடிக்காத ஈடுபட்டால் பொதுவாக அது வெற்றியைத் தராது.

ஏனென்றால் நமது மனம் எதை ஆழமாகவும், அழுத்தமாகவும் எண்ணுகிறதோ அந்த எண்ணம்தான் நம்பிக்கையாக மாறுகிறது. அந்த ஆழ்ந்த நம்பிக்கைதான் செயல்வடிவமாக உருவாகிறது. செய்யும் செயலில் ஆர்வமும், அதிக ஈடுபாடும் இருக்கும்போதுதான் செய்கின்ற அந்தச் செயல் சிறப்புப் பெறுகிறது.

இதனால் எந்தவொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்வதற்கு இளம் வயதிலேயே மாணவ – மாணவிகள் தங்கள் மனத்தைப் பழக்கிக் கொள்வது நல்லது.

குறிப்பாக – பள்ளியில் படிக்கும்போது படிப்பது மட்டும்தான் முக்கிய செயலாக அமையும். இதனால் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ – மாணவிகள் படிப்பதை மட்டுமே கருத்தில்கொண்டு தங்கள் செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் தூங்குவதற்காக படுக்கைக்கு செல்வதற்குமுன்பு “அடுத்தநாள் செய்யவேண்டிய செயல்கள் எவை?” என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அதன்பின்னர் அந்த செயல்களை வரிசைப்படுத்தி தனியாக ஒரு வெள்ளைத் தாளில் எழுதிக்கொள்ள வேண்டும். அடுத்தநாள் செய்யவேண்டிய செயல்கள் பற்றிய விவரம் தெளிவாகத் தெரிந்ததும், அவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் அதாவது, முக்கிய செயல்களுக்கு (Important Activities) முன்னுரிமைக் (Priority) கொடுத்து அவற்றை முதலில் செய்யவேண்டும் என திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்தநாள் செய்யவேண்டிய செயல்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒருநாளைக்கு முன்னரே காட்சிப்படுத்துதல் மூலம் (Visualization) மனதில் பதிய வைத்துவிட்டால் அடுத்தநாள் செய்யவேண்டிய பணிகள் மிக எளிதாக நிறைவேறும்.

இப்படி செயல்திட்டம் வகுப்பதற்கு உதவியாக செய்யவேண்டிய செயல் பற்றிய ஆர்வத்தை முதலிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும். சிலர் ஒருநாளைக்கு முன்னரே தான் செய்யவேண்டிய செயல் பற்றிய ஆர்வத்தை வளர்க்காமல் அந்த செயல்பற்றி கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

“நாளைக்கு காலையில் அறிவியல் பாடத்தில் தேர்வு நடத்துவார்கள். நான் எப்படி எழுதப்போகிறேனோ?” – என்று கவலைப்படும் மாணவ – மாணவிகளும் உண்டு. அதாவது – ஒரு செயல் நடைபெறுவதற்குமுன்பே அதில் தோற்றுவிடுவோம் என்று அவர்கள் கனவு காணுகிறார்கள். இதனால் தோல்வி பற்றிய கவலையை அந்த நிகழ்வு நிகழ்வதற்கு முன்பே மனதில் உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கவலை மனதில் குழப்பத்தை உருவாக்கிவிடும்.

இதனால் படிக்கவேண்டும் என்கின்ற ஆசை அடிமனதிலிருந்து விடைபெற்றுவிடும். அதன்பின்னர் எப்படித்தான் படித்தாலும் படித்தப் பாடங்களை நினைவில் நிறுத்த இயலாது. இதனால்தான் தெளிவான செயல் திட்டத்தை முன்கூட்டியே வகுத்து தெளிந்த மனதோடு படிக்கத் தொடங்குவது நல்லது.

மனதில் தோன்றிய எண்ணங்களை செயல்திட்டமாக உருவாக்கியபின்பு அடுத்தநாள் அதனை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும். சில மாணவ – மாணவிகள் நன்றாகத் திட்டமிடுவார்கள். ஆனால், அவற்றை செயல்படுத்தும்போது சோம்பேறித்தனமாக இருந்துவிடுவார்கள்.

உதாரணமாக – காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து படுக்கையைவிட்டு எழும்ப நினைப்பார்கள். ஆனால், அலாரம் அடித்ததும் அவர்களை அறியாமலேயே அவர்கள் கை அலாரத்தை நிறுத்திவிடும். மீண்டும் குறட்டைப்போட்டுத் தூங்குவார்கள். முதல்நாள் இப்படி தவறு நடக்கும்போது அதற்காக அவர்கள் வருத்தப்படுவதில்லை.

“நான் என்ன செய்வேன். எனக்கு தூக்கம் வந்துவிட்டது. நாளைக்குப் பார்த்துக்கொள்வோம்” – என்று தனக்குத்தானே, தான் செய்தது நியாயம் என்பதை நிரூபித்துவிட்டு தவறுக்கு வருந்தாமல் தப்பித்துக்கொள்வார்கள். இதனால் முதல்நாள் காலையில் எழும்ப மறுத்த மனது, மறுநாள் தொடர்ந்து அந்தப் பழக்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒரு பழக்கம் வழக்கமாகி பின்னர் பழக்கவழக்கமாக (Habits) மாறிவிடுகிறது.

தேவையில்லாத தூக்கத்தைத் தொலைக்க விருப்பமில்லாதவர்கள் பின்னர் துக்கத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

காலையில் விழித்தெழும் பழக்கம் உள்ளவர்கள்கூட சிலவேளைகளில் கவனத்தோடு பாடங்களைப் படிப்பதில்லை. கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு வேறு எதையோ சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கு மன ஒருமைப்பாட்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது – படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு நிமிடம் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு “நான் இப்பொழுது எனது முன்னேற்றத்திற்காக பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கிறேன். படிக்கின்ற பாடங்களை தெளிவான முறையில் கவனத்தோடு படிப்பேன். முதலில் அறிவியல் பாடத்தைப் படிக்கிறேன். இந்த அறிவியல் பாடத்தில் இரண்டாம் பகுதியை கவனிக்க இருக்கிறேன்…” இப்படி செய்ய வேண்டிய செயல்களை மனதிற்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டால் உடலும், மனமும் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிடும்.

படிப்பதில் மட்டுமல்ல உணவு உட்கொள்ளும்போதுகூட உணர்வுபூர்வமாக செயல்பட்டால் அந்த உணவு ருசியாகவும், பசிக்கு விருந்தாகவும் அமையும். ஒரு செயலை உணர்வுபூர்வமாக செய்வதற்கு பழகிக்கொண்டால் அந்த செயல் நமக்கு வெற்றியைத் தரும். இதனால்தான் படிக்கின்ற காலங்களில் உணர்வுபூர்வமாக மனம் ஒருமித்து பாடங்களைப் படிக்க இளம்வயதில் பழகிக்கொள்வது நல்லது.

பள்ளி – கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்வது வீணான பதற்றத்தைக் குறைக்கும். மேலும் – காலந்தவறாமை என்னும் நல்ல குணத்தை உருவாக்குவதற்கு அது அடித்தளமாக அமையும்.

உரிய காலத்தில் பாடங்களைப் படித்து மனதில் நிறுத்திக் கொள்ளும் பழக்கம் நினைவாற்றலை வளர்க்க உதவும். வாழ்க்கையில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு மிகவும் உதவியாக அமைவது நினைவாற்றல்தான். அதுமட்டுமல்லாமல் எந்தவொரு செயலையும் வெற்றிகரமாக செய்வதற்கும் இந்த நினைவாற்றல் உறுதுணையாக அமைகிறது.

பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளிடம் சகோதர உணர்வோடு பழகுவதும் அவர்களை நண்பர்களாக்குவதும் சிறந்த பண்பாகும். நல்ல மனதுடன் பிறரோடு பழகும்போது மனதில் மகிழ்ச்சி உருவாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் மனநிறைவு உருவாகும். அந்த மனநிறைவுதான் உடலில் புது சக்தியை உருவாக்கும். அந்த மந்திர சக்திதான் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும்.

தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!