Home » Articles » வேகமாய் வருகிறது வெற்றி – 5

 
வேகமாய் வருகிறது வெற்றி – 5


கமலநாதன் ஜெ
Author:

வெற்றிக்கான முழுப்பொருளையும் வெற்றிக்கான வயது வரம்பையும் வெற்றிக்கான அவசியத்தையும் சென்ற மாத இதழில் தெரிந்து கொண்டோம்.
வெற்றியை அடைய கைக்கொள்ள வேண்டிய ‘தகுதிகள்’ பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.
முதல் தகுதி – பேச்சுத்திறன்
1. நிறைய பேசுங்கள்
2. நிதானமாகப் பேசுங்கள்
3. அர்த்தச் செறிவோடு பேசுங்கள்
4. அவசியமானவற்றையே பேசுங்கள்
5. அழகோடு பேசுங்கள்
6. அன்போடு பேசுங்கள்
7. மொழியுணர்ந்து பேசுங்கள்
8. முழுமையாகப் பேசுங்கள்
9. மேற்கோள்காட்டிப் பேசுங்கள்
10. மேன்மையானவர்களுடன் பேசுங்கள்

இந்த பத்துக் கட்டளைகளைக் கடைபிடித்து பேசினால் அதுதான் வெற்றிக்கான வழியாகும். ‘பேசுவதில் இத்தனை வகை உள்ளதா? இவ்வளவையும் கவனத்தில் வைத்துக்கொண்டு பேச வேண்டுமா? இதில் ஒன்றிரண்டு போதுமா? எல்லாமும் வேண்டுமா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த பத்துக் கட்டளைகளையும் நிறைவு செய்து பேசினால் தான் உங்கள் பேச்சு வெற்றி பெறும்.
பேச்சு என்றால் மேடையில் பேசும் பேச்சினை, உரையாற்றலை, சொற்பொழிவுத் திறனை நான் குறிப்பிடவில்லை. நண்பர்களிடம், அதிகாரிகளிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம், நேர்முகத் தேர்வு நடத்துவோரிடம், பொதுமக்களிடம், பகைமை பாராட்டுவோரிடம், அலுவலகத் தோழரிடம், அன்றாடம் நாம் நிகழ்த்தும் பேச்சினைத்தான் குறிப்பிடுகின்றேன்.
இவர்களிடம் பேசும்போது நம் உள்ளத்தில் உள்ளதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டி உள்ளது. அரைகுறையான எண்ணப் பரிமாற்றம் நமக்கு தோல்வியையே கொண்டுவந்து தரும். ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்று மகாகவி பாரதி சொன்னதுபோல் வெற்றி பெற வேண்டும் எனில் நாவன்மை அவசியமானதாகிறது.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
என்கிறார் திருவள்ளுவர். ‘நன்றாக பேச வல்லவனாகவும், சோர்வில்லாமல் அச்சமில்லாமல் பேசுகின்றவனாகவும் உள்ளவனை யாராலும் வெல்ல முடியாது’ என்று அடித்துச் சொல்கிறார் அவர். ‘சொல்வன்மை’ என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களும் பேச்சுத்திறனின் பெருமையைத் தான் பேசுகின்றன.
இனி பத்துக்கட்டளைகளைக் காண்போம்.

நிறைய பேசுங்கள்
சிலர் மிகக் குறைவாகப் பேசுவார்கள். ஒற்றைச் சொல் தவிர வேறு ஏதும் அவர்களிடமிருந்து வராது. ‘ம்’, ‘சரி’, ‘இல்லை’, ‘ஆமாம்’, ‘ஓ.கே’, ‘அப்படியா’ இப்படியே தான் அவர்களது பதில்கள் வரும். புரட்டி புரட்டி கேள்விகள் கேட்டாலும் ஒரு சொல்லுக்குமேல் ஏதும் பதில் வராது. இப்படிப்பட்டவர்களை யாரும் விரும்பமாட்டார்கள். ‘பேசறதுக்கு காசு கேட்கிறவனய்யா அவன்’ என்று ஏளனம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் ‘தயக்கப் பட்டியலில்’ சேர்க்கப்படுவார்கள். வார்த்தைகளிலேயே கஞ்சத்தனம் காட்டினால் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? எனவே நிறைய பேச வேண்டும். நண்பர்கள் ஒரு வாக்கியம் பேசினால் நீங்கள் நான்கு வாக்கியம் பேச வேண்டும். ஒரு கேள்வி கேட்டால் விரிவான பதிலளிக்க வேண்டும். உங்கள் விளக்கமான பதில்களால், விளக்கமான உரையாடலால் அவர்கள் ‘சூட்டிகையான பையன், நல்லா பேசறான்’ என்று பெயரெடுக்கலாம். அது பிறரது அன்பை நமக்கு பெற்றுத் தரும். போற்றப்படுவீர்கள். விரும்பப்படுவீர்கள். நேசிக்கப்படுவீர்கள். நிறைய பேசுகிறவர் வாழ்வில் இவ்வளவு நடக்கும்.

நிதானமாகப் பேசுங்கள்
சிலர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் பேசுவார்கள். இரண்டுமே எரிச்சலை உண்டாக்கும். தடதடவென நாம் பேசி முடிக்குமுன் குறுக்கிட்டுப் பாய்வார்கள் சிலர். படபடவென பொரிந்து தள்ளுவார்கள். என்ன சொல்கிறார்கள் எனப் புரிந்துகொள்ளும் முன்னரே அவர்கள் குறுக்கிட்டுப் பேசி நம்மை பேசவிட மாட்டார்கள். இது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இன்னும் சிலர் ஆமையைப் போல், நத்தையைப் போல் நிதானமாகப் பேசி கடுப்பேத்துவார்கள். “நீங்க சொல்றது சரிதான்; நான் என்ன சொல்றேன்னா…” என்று இழுத்து இழுத்துப்பேசி நோகடிப்பார்கள்.
இவர்களைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். 5 நிமிடத்தில் முடிய வேண்டிய உரையாடலை 50 நிமிடம் நீடிக்கச் செய்தால் நமது நேரம் வீணாகாதா? இவர்களை சந்திக்கச் செல்லும்போதே நிறைய நேரத்தை ஒதுக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். இல்லையென்றால் நமது அடுத்த வேலை கெட்டுப்போய் விடும். எனவே வேகமாகப் பேசுதலும், ஆமை வேகத்தில் பேசுதலும் இல்லாமல் நிதானமாகப் பேசிப்பழக வேண்டும்.

அர்த்தச் செறிவோடு பேசுங்கள்
எந்த விஷயத்தைப் பற்றி பேச வந்தோமோ அதைப்பற்றி நேரடியாக சுற்றி வளைக்காமல் பேச வேண்டும். இதனையே எல்லோரும் விரும்புவார்கள். சிலர் வந்தவுடன் ‘அம்மா சௌக்யமா? உங்கள் மகள் குடும்பத்தினர் எல்லோரும் சௌக்யமா? ஊரில் மழை எப்படி? இங்கே வெயில் சக்கைபோடு போடுகிறதே, எப்படி சமாளிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சுற்றி வளைத்து, அரைமணி நேரம் பேசிவிட்டு ‘பிறகு உங்களால் ஒரு சின்ன உதவி ஆக வேண்டும்’ என்று ஆரம்பிப்பார்கள். இது நமக்கு சீற்றத்தை ஏற்படுத்திவிடும். ‘இவ்வளவு நேரம் பேசியதெல்லாம் இதற்காகத்தானா?’ என்று வெறுப்பு ஏற்பட்டுவிடும். உதவி கேட்பது போன்ற விஷயங்களையெல்லாம் தயக்கமில்லாமல் கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். பொருட்செறிவோடு பேசுதலும் எடுத்துக்கொண்ட செய்தியின் ஆழ அகலம் உணர்ந்து பேசுதலும் சரியான தகவல்களின் அடிப்படையில் பேசுதலும் நலம் பயக்கும் என்பதை மறவாதீர்கள்.

அவசியமானவற்றையே பேசுங்கள்
சிலர் பேச வேண்டியதை விட்டுவிட்டு ஊர்க்கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். வழவழவென்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நாட்டு நடப்புகளையும் ஊர் நடப்புகளையும் நமக்குச் சம்பந்தம் இல்லாத அவரது அலுவலகக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதை ஏன் நம்மிடம் சொல்கிறார் என்று தோன்றும். எந்த நோக்கத்தில் பேச வந்தாரோ அதை விட்டுவிட்டு வேறு எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசி 5 நிமிடம் மட்டுமே தான் வந்த விஷயத்தைச் சொல்வார். இதையெல்லாம் கேட்கும்போது நமக்கு அவர்மீது எதிர்மறையான எண்ணங்களும் அபிப்ராயங்களுமே தோன்றும். அவர் கேட்கும் உதவியைச் செய்யும் எண்ணமே நமக்கு வராது. அவசியமானவற்றை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்து கொண்டால் இவற்றையெல்லாம் தவிர்க்கலாம். அவசியமானவற்றைப் பேசுதல் என்பது நாம் விரும்பும் தேவையைப் பெற்றுத்தரும்.

அழகோடு பேசுங்கள்
அதாவது நல்ல கற்பனை வளத்தோடு பேசுங்கள். வருணனையோடு பேசுங்கள். இனிய, யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை கலந்து பேசுங்கள். நட்போடு பேசுங்கள். படித்த செய்திகளை பக்குவமாகக் கலந்து பேசுங்கள். பண்பான நோக்கத்தில் பேசுங்கள். அறிவார்ந்த அழகுடன் பேசுங்கள். நீங்கள் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றிய செய்திகளை இணைத்துக் கொள்ளுங்கள். நாளிதழில் அன்று படித்த மிக முக்கிய செய்திகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பேச்சுக்கு அறிவார்ந்த தோற்றத்தைத் தரும். உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை, எண்ணத்தை உயர்வுபடுத்தும். ‘ஓ… இவர் நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவர் போலிருக்கிறதேÐ’ என்று எண்ணுவார்கள். நடந்த சம்பவங்களை விவரித்து கலையழகோடு பேசுங்கள். நீங்கள் சென்று பார்த்து வந்த திருத்தலங்கள் சுற்றுலாத் தலங்கள் இவற்றை வருணித்துப் பேசுங்கள். சுவை கூடும்.

அன்போடு பேசுங்கள்
யாரிடமும் சீற்றத்தோடும் சினத்தோடும் பேச வேண்டாமே. நல்லன்போடு நகைமுகத்துடன் எதிர்மறைச் சிந்தனைகளை சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளப்படும். ‘கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்’ என்பது ஜெர்மானியப் பழமொழி. கோபத்துடன் பேசும் சொற்கள் எதுவும் வெற்றியைக் கொண்டுவந்து தராது. வெறுப்பையே தேடித் தரும். நமது நோக்கமும் நிறைவேறாது. அன்புடன், புன்சிரிப்புடன் பேசினால் எல்லோரையும் கவர்ந்து இழுக்க முடியும். வெற்றி காண முடியும். சரிதானே?


Share
 

5 Comments

  1. Rajendran.G says:

    திருவள்ளுவர். ‘நன்றாக பேச வல்லவனாகவும், சோர்வில்லாமல் அச்சமில்லாமல் பேசுகின்றவனாகவும் உள்ளவனை யாராலும் வெல்ல முடியாது’ என்று அடித்துச் சொல்கிறார்

  2. kasi says:

    It is true word

  3. rs sens says:

    very nice sir.i learn lot of .really thanks sir,,,,,,,,,,,,,,,,,

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!