Home » Articles » பசுமரத்தாணி

 
பசுமரத்தாணி


அனந்தகுமார் இரா
Author:

எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே! என்று சற்றே பின்சென்று நினைவு சேமிப்புக் கிடங்கிலிருந்து பழைய பொருட்களை, தகவல்களை, முகங்களை, பெயர்களை, தேடி எடுக்க நாம் எல்லோரும் சில வேளைகளில் சிரமப்பட்டிருக்கின்றோம். “நல்லா ஞாபகம் இருக்குங்க! அதை மறக்க முடியுமா? அன்னிக்கின்னு பார்த்து மழை வேற விடாம பேய்ஞ்சிக்கிட்டுருந்தது. இறங்கி வேக வேகமாக போனா பஸ் வேற லேட்டு…… ஆட்டோல போலாமான்னா மனசு சிக்கனம் பற்றி யோசிக்கிது…..” என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நடந்த சாதாரண நிகழ்வுகளைக் கூட இடத்தோடு சேர்த்து பதியம் போட்டு மறக்க முடியாமல் வைத்துக்கொள்கின்றது அதே மனசு.

மனசும் நினைவு சேமிப்பு கிடங்கும் பிறகு வேறு வேறா? என்று அலசிப் பார்க்கின்றோம். ஆச்சரியங்கள் பிறக்கின்றன. வாழ்க்கை பல ஆச்சரியங்களை நாள்தோறும் நமக்காக வைத்துக்கொண்டு ஒன்றையாவது இவர் அனுபவிப்பாரா? மாட்டாரா? என்று காத்துக்கொண்டிருப்பதாக நாம் கருதினால் கட்டாயம் பல சந்தோசங்களை நம்மால் அனுபவிக்க இயலும்.

லிக்வான் யூ (Lee Kuan Yew….LKY) என்பவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்; படாதவர்கள் சிங்கப்பூரை பார்த்து மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டாவது இருப்பீர்கள்; இரண்டும் வேறல்ல ஒன்றேதான் என்று அமெரிக்காவின் மிகச்சிறந்த பத்திரிக்கையாளர் டாம் ப்ளேட் (Tom Plate) எழுதிய ஒரு புத்தகம் மூச்சு விடாமல் இரண்டு நாட்களுக்கு நம்மோடே நடந்தது. இது நடந்தது, சமீபத்திய பயணம் ஒன்றில்; கீழே வைக்கமுடியாமல் (எல்லோருக்கும் படிக்க பிடிக்குமா? என்று தெரியவில்லை ஆனால் படிக்கலாம் என்று பரிந்துரைக்க முடிகின்றது). பக்கங்கள் பறந்தன. சிங்கப்பூரின் கட்டுப்பாடுகளை, சட்டதிட்டங்களை உருவாக்கி, மக்களின் நல்வாழ்விற்கான ஒழுக்க விதிமுறைகளையும் வரையறுத்து, வாழ்க்கையில் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்த இம்மனிதரின் எண்பதைத் தாண்டிய வயதில், பத்திரிக்கையாளரோடு இரண்டு நாட்களில் நான்கு மணி நேரங்களில் பகிர்ந்து கொண்ட விஷயங்களின் தொகுப்பாக இந்தப் புத்தகம் அமைந்து இருந்தது.

சர்ச்சைகள் நிறைந்த வழிமுறைகள் மூலமாக சிங்கப்பூரின் இவ்வளர்ச்சி அமைந்திருக்கின்றது என்று உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் கருத்து கூறுகின்றார்கள். அவருடைய மகள், அவர் மனதில் பதிந்த பசுமரத்தாணியை குறித்து பேசும்பொழுது, “எனது வீடு அழுக்கானது, ஆனால் அழகானது” (My house is shabby but beautiful) என்ற கட்டுரை மிகவும் பிரபலமானது. அதில் ஒன்றரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கைப்பையை வைத்திருக்கும் பெண்மணி நான்கு இலட்சம் மதிப்பாவது உள்ள இன்னும் அழகான?!? கைப்பை வாங்க ஆசைப்படுவதுதான் இயற்கை. ஆனால் அதுதான் உற்பத்தி மற்றும் அனுபவித்தல் சுழற்சியை தீவிரப்படுத்தி விடுகின்றது என்று வருத்தப்படுகின்றார். பட்டினத்தார் பாடல்களில், “புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்”, என்கின்ற பாடலில் கூறியுள்ள கருத்து சிங்கப்பூர் சிற்பியின் மகளின் வார்த்தைகளில் கூட பிரதிபலிக்கக் காண்கின்றோம். ஆச்சரியப்படுகின்றோம்.

இன்றைக்கு இந்திய ஆட்சிப்பணி தேர்வின் முதனிலை தேர்வு முடிவுகள் வந்த நாள். மூன்று முறை வெற்றியும் ஒருமுறை தோல்வியும் கண்ட ஞாபகங்கள் சற்றே அசைந்து போன பசுமரத்து ஆணிபோல மங்கலாக ஞாபகத்தில் சஞ்சரிக்கின்றது. தேர்வு முடிவுகள் சிலருக்கு அதில் உள்ள ‘வு‘ காணாமல் போனால் கிடைக்கின்ற வஸ்துவிற்கு சமானம் என்பது போலவும் சிலருக்கு இடி போலவும் அமைந்து விடுகின்றன. இரண்டுமாகவும் இருக்க வேண்டியது இல்லை. திரு. எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய சீன ஞானம் புத்தகத்தில் லாவோட்ஸீவின் பொன் மொழியாக தீவிரமான எல்லைகளை தவிர்த்து விடுங்கள் என்று அறிவுறுத்தி இருந்ததனை……நினைவலை இழுத்து வீசுகின்றது. தேர்வு தோல்விகள்….. ஞானத்திறவு கோல்களாக மாற வேண்டும். இன்றைக்கு விளையாடிய கிரிக்கெட் மேட்சில் மொத்தம் இருபத்தியோரு நிமிடங்கள் உள்ளே நின்றதில் நிறைய நேரம் நான்-ஸ்ட்ரைக்கில் (Non-strike) தவம் செய்ய வேண்டி இருந்தது.

பந்து வீச்சை எதிர்கொள்ளும் அவசியம் இன்றி நடுவரின் அருகில், பந்து வீசுபவர் ஓடி வந்து வீசும் கட்டத்தின் அருகில் நிற்பதை நான்-ஸ்ட்ரைக்கர் முனை (Non-Striker end) என்று சொல்வார்கள். அங்கே நின்ற இருபது நிமிட மனசைக் கேட்டால் ஏராளமான பசுமரத்தாணிகள் வரிசையாக வருகின்றது.

நாம் பந்தை எந்த நேரமும் எதிர்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்படும். அப்பொழுது இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? என பல மேட்சுகளில் ஆடிய அனுபவங்களை அசைபோட்ட போதும், அந்த ஷணத்தில் அனிச்சையாக பந்துகள் எதிர்கொள்ளப்படுகின்றன. பயிற்சி அவசியம்தான் ஆனால் விளையாட்டு ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகத்தான் விடைகளை தருகிறது. கூட, ஒபன் செய்தவர் பந்து வருமுன்பே மட்டையை ஓவராக வீசி முடித்தபொழுது (கூடுதல் வேக ரிப்ளெக்ஸ்)… அதில் பட்டு காட் அண்ட் போல்ட் (caught and bowled)….. என்ற வகையிலே வெளியேறிய பொழுது வாழ்வில் நிறைய பசுமரத்தாணிகள் அவசரப்பட்டு பேசிவிடுவதாலோ … வீசிவிடுவதாலோ அடிக்கப்படுகின்றன என்று நினைவூட்டியது.
நம் மனதிற்குப் பிடித்தவர்கள் மரியாதைக்கு உரியவர்கள், விளையாட்டில் பயிற்சி அளிக்கின்ற குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள், விருட்டென்று விட்டு விடுகின்ற சில சுடு சொற்கள் ஆணி அடித்த மாதிரி நெஞ்சில் சுமக்க வேண்டியவை அல்லதான்….. ஆனாலும் அவை பிடிங்கி எடுத்த பின்னர் உருவாகி விடுகின்ற தழும்புகள், பின்னாளில் அதைப்போல எதாவது காயங்கள் வருமானால் அதற்கு மருந்திடும் களிம்புகளாக பயன்படுகின்றன. வள்ளுவர் வாயினால் சுட்ட வடு ஆறாதே! என்று ஆச்சரியப்படுவது இதைத்தானோ என்னவோ?

மீனம்பாக்கம் அருகேயிருந்த அந்த மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் அவ்வளவு எதிர்கால சச்சின் டெண்டுல்கர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஏறத்தாழ எழுபது பயிற்சி எடுக்கும் சீருடை அணிந்த வீரர்கள் நான்கடி உயரம் முதல் கல்லூரி மாணவர்கள் வரை சில பேர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேட்டை வைத்துக்கொண்டு ‘நெட்ஸ்‘ பிராக்டீஸில் அவரவர் குருக்களோடு பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர். பத்து வயதை தாண்டாத பயல்களும் உண்டு. பத்து நிமிடம் நின்று பார்க்கையில் நிறைய பக்குவம் கிடைத்தது. கோச் ஒருவர் மாணவனொருவனை கடுமையாக வார்த்தைகளால் விளாசிக்கொண்டிருந்தார், “லெக் சைடு“ போட்டா….. விலகாதே…… ஓடாதே……. நின்னு லிபிளிக் (flick) பண்ணு…… ஏன் ஓடற…ஏன்….. பயமாருக்கா? …பயப்பட்டா…… கிரிக்கெட் விளையாட வராதே!” என்று உசுப்பேற்றிக் கொண்டு இருந்தார். பையன் அடுத்து வந்த பந்துகளில் தான் கற்றுக்கொண்டதை பதம் பார்த்துக்காட்டி கோச்சிடம் நல்ல பேரெடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

ஆக மொத்தம்…… நிறைய பசுமரத்தாணிகள் இங்கே பதியம் போடப்படுவது மட்டும் உறுதியாக சொல்ல முடிந்தது. கட்டாயம் இவர்கள் நாலரை மணிக்கெல்லாம் எழுந்திருத்திருக்க வேண்டும். சில பெற்றோர்களை, ஏன், பாட்டிமார்களை கூட பார்க்கமுடிந்தது. என்ன ஒரு …..கமிட்மென்ட். ?!?….. படிக்க இதில் பாதியிருந்தால் கூட போதும் என்று தோன்றியது. கம்பேர் பண்ண கூடவே கூடாது தான். (படிப்பையும், விளையாட்டையும்); ஆனால் ஏன் “கம்பைன்” பண்ண கூடாதென்கின்றோம்?? ஸ்போர்ட்ஸ்மென் மென்டாலிட்டி மனதிற்கு மிகவும் நல்லது. எதை தருகின்றதோ? இல்லையோ? தோல்விகளை அடுத்த வெற்றிக்கான பாடப்புத்தகமாக மாற்றிக்கொண்டு படித்துக்கொள்ளும் மனப்பாங்கை உருவாக்குகின்றது அல்லது நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதனை சின்ன வயதிலே செய்கையில் பசுமரத்தாணி போல டேக் இட் ஈஸி பாலிஸி அமைத்து விடுகின்றது.

அதிலும் விதி விலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. (எதில் இல்லை?) டக் அவுட் ஆனதும் ரொம்ப நேரம் கடுகடுவென யாரோடும் போசதிருந்த பார்த்தி…… பெவிலியன் திரும்பும் பொழுதே….. கடுப்பில் பேட்டால் (க்ஷஹற்) பேடை…(ல்ஹக்)…. திரும்பத்திரும்ப அடித்துக் கொண்டே வந்த கிஷோர்….. என விளையாட்டாக,விளையாட்டை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் கொஞ்சநாளில் புரிந்துகொள்ளத்தான் போகின்றார்கள். அ~ப் கோர்ஸ்…… ஆணி அடிக்கையில் வலிக்கும் இல்லையா?

அதுபோன்றதொரு அடி தான் இரண்டாயிரத்தில் (2000 A.D) முதனிலை தேர்வில் (Preliminary UPSC) தவறியபொழுது விழுந்தது. ஆனாலும் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு, என்னென்ன மாறுதல்கள் செய்யலாம் என டாக்டர் மீனாட்சிசுந்தரம் சார் உட்பட்ட பெரியவர்களின் அறிவுரைகள் தொழில்நுட்ப வழிகாட்டுதல் முதலியவற்றை ‘கபக்‘ என கேட்ச் பிடித்து விருப்பப்பாடத்தையே மாற்றி கால்நடை மருத்துவத்திலிருந்து விலங்கியலுக்குள் நுழைந்து அடுத்த வருட முதனிலையைத் தாண்டினால்…. அடுத்து, முதன்மைத் தேர்வைத் கடந்து முதல் முறையாக சென்ற நேர்முகத்தேர்வு முடிந்த கையோடு பூச்சியத்தோடு பரிசாகப்பெற்ற மற்றொரு ஆணி கிடைத்தது, இரண்டாயிரத்து ஒன்றில்.

பட்ட கஷ்டங்களும், அனுபவித்த சிரமங்களும் வெற்றி பெற்றபிறகு சொல்லும் பொழுதுதான் கவனிக்கப்படுகின்றன என்றொரு பொன்மொழி உண்டு. உண்மை போலத்தான் தெரியும். ஆனால் ஏராளமான நண்பர்கள்…….. இன்று திரும்பிப் பார்க்கையில் …… எவ்வளவு தேவையோ அவ்வளவு சரியாக அளவெடுத்து உதவி புரிந்தது போல நேர்த்தியாக நெய்யப்பட்டிருக்கிறது வெற்றி வலை. கிரிக்கெட்டுடன் கம்பேர் செய்ய எத்தனிப்பதை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை: ஓர் அணியின் வெற்றிக்காக கேப்டனிடம் கோப்பையை கொடுத்தாலும்……. எந்த பௌலர் எவ்வளவு விக்கெட் எடுத்தாரோ? எப்பொழுது எந்த லிபில்டிங் திறமையாக செய்து இரன் எவ்வளவு தவிர்க்கப்பட்டதோ? எல்லாமே மிகச்சரியாக நடந்தது போல, வெற்றி செதுக்கப்பட்டு உள்ளது போலவே, எண்ணற்ற சின்னதும் “ஞாலத்தின் மானப் பெரிதுமான” (திருக்குறள்) ‘டைம்லி‘ உதவிகள்.

விளையாட்டும், புத்தகமும் மட்டுமல்ல…… சில திரைப்படங்களும் மனதில் நினைவுப் பதிவுகளை சேகரிக்கச் செய்கின்றன. இப்படியாக சின்ன வயதில் பார்த்த திரைப்படங்களும் (அவற்றை தரைப் படங்கள் என்றும் சொல்லலாம். கிராமத்து கணேசா டூரிங் டாக்கீஸில் மண்ணை குவித்து வைத்து கதாநாயர்களோடு சேர்ந்தவாறு மண்ணில் புரண்ட நாட்கள் பசுமரத்தாணிகள்) மனதில் பதிந்திருக்கின்றன.
மூன்றாவது வகுப்பிலிருந்தே காலணாக்களால் பந்துவாங்கி உருவான கிரிக்கெட் குழுவினரின் நட்பு பலம், பார்த்த திரைப்படங்களில் வாள் சண்டடையிடும் நாயகர் நட்புக்காக உயிரைப் பணயம் வைக்கின்ற நல்ல குணங்களின் சாயல் கலவைகளால் பொலிவு கூடுதலாக, செழித்து வளர்ந்திருக்கின்றன.

ஆச்சரியங்களுக்காக காத்திருக்காமல் அந்த நேர விழிப்புணர்வோடு, ஒவ்வொரு காரியத்தையும் உற்றுப்பார்த்தால் எல்லாமே புத்தம் புது செய்திகள் சொல்லும். பழைய பசுமரத்தாணிகளில் இருந்து ஒரு கிளைக்கதை கிளம்பி அதற்கு வலு சேர்க்கும்……

“எனக்கு அப்பவே தெரியும் சார் … போனமுறை அங்கே போனப்பவே இதே மாதிரிதான் ஆச்சுது….. நான் அந்த மாதிரி சூழ்நிலையில இருந்தப்ப…… நாங்கள்ளாம் சின்னப்புள்ளைகளாக இருந்த போது…..” என்று யார் பேசும் பொழுதும் ஆணி ஒன்று பிடுங்கப்பட்ட செய்தி உங்களுக்கு ஞாபகம் வரும் தாராளமாக, புன்னகையுங்கள் ……. தடையொன்றுமில்லை !


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!