Home » Articles » புனித யாத்திரை – கயிலயங்கிரி

 
புனித யாத்திரை – கயிலயங்கிரி


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள நல்ல நீர் ஏரி இது. அந்த இடத்தின் உயரம் சுமார் 15,600 அடியாகும். இந்த ஏரி பல புனித நதிகளின் பிறப்பிடம். கங்கை, பிரம்மபுத்ரா, சட்லெஜ், இண்டஸ் ஆகியவை இந்த ஏரியிலிருந்து செல்வதாய் கூறினர். 15 மைல் விட்டமும், 55 மைல் சுற்றளவும் உடையதாய் பெரிய கடல் போல் தோற்றமளிக்கிறது.
நாங்கள் சென்ற இடத்தில் கரையிலிருந்து சுமார் 30 அடி தூரம் வரை அரை அடி உயரமே நீர் இருந்தது. சில இடங்களில் 10 அடிக்குள்ளேயே ஆழம் 5 அடிக்கும் மேலே இருக்கும் என்றனர். இந்த ஏரியை பிரம்மா, தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன் மனதை ஒருமுகப்படுத்தி, மனதிலிருந்து உண்டாக்கியதால் ‘மானஸ சரோவர்’ என்ற பெயர் வந்தது என்று வரலாறு கூறுகிறது. பெரும்பாலும் 300 அடி ஆழம் உள்ளது என்றனர். நீர் தெளிவாகவும் சுவையாகவும் உள்ளது.
கரையில் அமர்ந்து சிவபுராணம், படித்து, பாடல்கள் பாடி, சூடம் ஏற்றி கயிலை மலையை வழிபட்ட பின் ஏரியில் குளித்தனர். நானும் ஏரிக்குள் சென்று பிளாஸ்டிக் மக்கில் மொண்டு குளித்தேன். நேரம் மதியமாயிருந்ததால் குளிர் அதிகம் தெரியவில்லை. சீக்கிரமாகவே குளித்து வந்துவிடுமாறு கூறுகின்றனர்.
சிலருக்கு அந்த விறுவிறுப்பு பாதம் வழி உடலுக்குள் சென்று இரத்தத்தை உறைய வைத்து, இறுதியில் இறப்பையும் கொடுப்பதாய் கூறினர். அதன்பின் அவரவர் கொண்டுசென்ற பாட்டில்கள் கேன்களில் தீர்த்தமாக மானசரோவர் ஏரி நீரை எடுத்துக் கொண்டோம். சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் பெரிய குடிநீர் கேன் (20 லிட்) களிலும் மானசரோவர் தீர்த்தம் எடுத்து வந்து, காத்மாண்டு நகரில் தருகிறார்கள்.
குளிர்காலத்தில் இந்த ஏரி நீர் பனிக்கட்டியாக உறைந்துவிடுமாம். இந்த ஏரிக்கரையில் பல மைல் தூரம் காரிலேயே அழைத்துச் செல்கின்றனர். அந்தப் பகுதியில் தொலைவில் இராவணன் ஏரி என்ற ஒன்று உள்ளது. அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. பாஸ்பேட், மெக்னீசிம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதே காரணம் என்றனர். வழியில் புத்தர் ஆலயம் ஒன்று உள்ளது. அதன் வலது புறமாக மானசரோவர் என்ற நல்ல நீர் ஏரியும், சிறிது தூரத்தில் இடது புறமாக இராவணன் ஏரியும் (ராட்சஸ ஏரி) தெரிகின்றன. மானசரோவர் ஏரியில் பல இடங்களில் வெண்ணிற அன்னப்பறவைகள் கூட்டம் கூட்டமாக நீந்தி மகிழ்கின்றன. அவை போடும் சப்தம் உமா என்ற ஒலியாய் நம் காதில் கேட்கிறது. வெண்ணிறக் கூட்டத்தின் இடையில் சில பொன்னிறப் பறவைகளும் தென்பட்டன. இராவணன் ஏரி வழியாக சுமார் 100 கி.மீ. தூரம் பயணித்து தார்ச்சன் அடையலாம். மானசரோவர் ஏரியில் சிறுசிறு கற்கள் சேகரித்தோம். இதை மூர்த்தங்கள் என்றும் கூறுகின்றனர். சிவபக்தர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து இதைச் சிவனாகவே வழிபட்டு வருகின்றனர்.
தார்ச்சன்
இந்த இடம் சுமார் 16,000 அடி உயரம். இங்கு செல்லுமுன் மானசரோவர் கரை அருகில் தங்கி, ஹோமம் நடத்துவது வாடிக்கை. இரவு நேரங்களில் சிலருக்கு தேவர்கள் விண்மீன்கள் போல் ஏரிக்குள் இறங்கி, நீராடி ஏறிச் செல்லும் காட்சி கிடைப்பதாய் கூறினர்.
கைலாஷ்
தார்ச்சன் சென்று கயிலை மலையை வலம் வருபவர்கள் குதிரை மற்றும் பொருள் சுமக்கும் ஆள் வாடகைக்கு அமர்த்தி, சுமார் 2 நாட்கள் 42 கி.மீ. சென்று வருகின்றனர். நடந்தும் சிலர் பரிக்ரமாவை முடிக்கின்றனர்.
எங்கள் குழுவில் 6 பேர் நடந்தும் 7 பேர் குதிரை மூலமும் பரிக்ரமாவை முடித்தனர்.
கைலாஷ் என்றால் ஐஸ் கட்டியால் மூடிய பனிமலை என்று பெயர். இதை ஸ்படிக லிங்கம் என்றும் அழைக்கின்றனர். கைலாய மலை மீது எந்த நாட்டு விமானமும் பறக்கக்கூடாது; மலை மீது யாரும் ஏறக்கூடாது என சீன அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பரிக்ரமா என்பது மலையைத் தொலைவில் சுற்றிவருவது.
பரிக்ரமா துவங்குமுன் எமத்துவார் என்ற இடத்தில் வழிபட்டு, எமன் அனுமதியுடன், மரண பயம் நீங்கி கிரிவலம் செல்வதாய் நம்பிக்கை. அங்கு நிலவும் குளிர் பலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. பரிக்ரமா பாதை உயரம் சுமார் 18,000 அடியாகும்.
இந்த எமத்துவார் என்ற இடத்திலுள்ள சிறு கோபுர நுழைவாயிலை மூன்று முறை சுற்றிவந்து, அதனுள் நுழைந்து, மறுபுறம் சென்றாலே, முந்தைய பிறவிகள், இந்தப்பிறவி, மறுபிறவி என அனைத்துப் பிறவியும் முடிந்து சிவனுடன் இரண்டறக் கலந்து விடுகிறோம் எனத் தெரிவித்தனர். தார்ச்சனிலிருந்து எமத்துவார் சுமார் 30 கி.மீ. தூரம் காரிலேயே செல்லலாம். அங்கிருந்து தான் பரிக்ரமா ஆரம்பமாகிறது.
அஷ்டபத்
தார்ச்சன் சென்று சேர்ந்த அன்று பிற்பகலில் சுமார் 20 கி.மீ. தூரத்திலுள்ள அஷ்டபத் என்ற இடத்திற்கு அவரவர் செலவில், நாம் பயணம் செய்த காரிலேயே சென்று வர ஏற்பாடு செய்து தருகின்றனர். சென்று வர கார் கட்டணம் 75 யுவான். சுமார் ரூ. 750.
மேகமூட்டம் இல்லாமலிருந்தால், எட்டு மலைகளுக்கு நடுவில் கயிலை மலை இருப்பதைக் கண்டுகளிக்கலாம். பெரும்பாலும் மேக மூட்டம் இருப்பதில்லை. வழியில் உமா என்ற பெயரில் நதி ஒன்று ஓடுகிறது. நீர் ஓடினாலும், கார்கள் அந்த நீரிலேயே ஓடுகின்றன.
ஆனால் பனியால் அந்த ஆற்றுநீர் உறைந்துவிட்டால், கார் போகாது என நிறுத்திவிடுகின்றனர். இறங்கி சுமார் 3 கி.மீ. தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். இந்த இடம் சென்று சேர்ந்தால், மிக அருகில் கயிலயங்கிரியின் தென்முக தரிசனம் கிடைக்கிறது. அதன் வலது புறம் நந்திதேவர் முகடு என்ற ஒரு குன்றைக் காண்பிக்கின்றனர். அது காளைமாட்டின் தலைபோல் தோற்றமளிக்கிறது. தென் முக தரிசனம் தட்சிணாமூர்த்தி வடிவம் என்று கூறுகின்றனர்.
தீர்க்கபுரி
தார்ச்சனிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது தீர்த்தபுரி என்ற இடம். 2 மணி நேர கார் பயணம். இங்கு செல்ல அங்குள்ள சீன அரசு அலுவலகத்தில் பெர்மிட் பெற வேண்டும். இதற்கு சுமார் 100 யுவான். காரில் சென்று வர நம் செலவு சுமார் 250 யுவான். மொத்தம் 350 யுவான். சுமார் ரூ. 3500. ஏன் சுமார் என எழுதுகிறேன் என்றால் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு சீசனிலும் கூட்டத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதேபோல் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பதற்கும் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். இந்தச் செலவுகளையெல்லாம் கணக்கில் கொண்டு குதிரையில் பரிக்ரமா செல்பவர்கள் ரூ. 30,000 நடந்து செல்பவர்கள் ரூ. 20,000, மற்றவர்கள் ரூ. 10,000க்கு காத்மாண்டு நகரிலேயே யுவான்களாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.
தீர்த்தபுரி என்ற இடத்தில் பஸ்மாசுரன் என்ற அரசன் தவம் செய்து, சிவன் தரிசனம் பெற்று, யார் தலையில் கை வைக்கிறானோ, அவர்கள் பஸ்பமாகி (சாம்பலாகி) விடும் வரமும் பெற்றான். இவன் தொந்தரவு தாங்காத, உச்சகட்ட நிலையில் திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அவனைத் தன் தலையிலேயே கையை வைத்து பஸ்பமாக்கினார் என்ற வரலாறு கூறினர். இந்த இடம் சென்று வருவது நம் ஆணவத்தை (Ego) அழிப்பதற்குச் சமம் என்றனர்.
இதனால் தான் கயிலைப் பயணம் முடித்து வந்த பலர், வயது வித்தியாசமின்றி, ஆணவமின்றி எல்லோரையும் சிவனாகவே பார்த்து, அவர்களுக்குள் உள்ள ஆன்மாவைப் பரம்பொருளென உணர்ந்து வணங்குகின்றனர். தீர்த்தபுரியில் குன்று போன்ற பகுதியில் ஏறினால் புத்தர் கோயில் உள்ளது. லாமாக்களும் அங்கு இருக்கின்றனர். வழியில் வெந்நீர் ஊற்றுக்கள் (Hot Springs) பல உள்ளன. இந்தப் பகுதியில் செந்நிற மண்மலை, இடையிடையே வெண்ணிறமாய் உள்ளது. அந்த இடத்தில் தோண்டினால் வாசனையுள்ள விபூதி கிடைக்கிறது. இந்த விபூதியைத் தோண்டி எடுத்துவந்து, பிரசாதமாய் கொடுக்கின்றனர்.


Share
 

1 Comment

  1. Prakash says:

    i would like to go to kailyam. please gv me some contact details. please let me knw, what shoud i knw, before go to kailayam.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!