Home » Articles » அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்

 
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்


ஆசிரியர் குழு
Author:

அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள் – பேராசிரியர் கே. நாகராஜ்

ஆக்சிஜன் கிடையாது, சூரிய ஒளியும் கிடையாது. ஆனாலும் பாதாள ஏரியில் உள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி நுண்ணுயிர்கள் உயிர் வாழ்கின்றன.

அண்டார்டிகா தென் துருவத்தில் அமைந்துள்ள பெரிய கண்டம். கிட்டத்தட்ட முற்றிலுமாகப் பனிக்கட்டியில் மூடப்பட்டதாகும். எங்கு நோக்கினாலும் உறை பனி தான் தென்படும். இது மனிதர் வாழ லாயக்கற்ற கண்டம். ஆனாலும் இந்தியா உட்பட பல நாடுகள் இங்கு ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. ஆராய்ச்சியாளர்களைத் தவிர வேறு யாரும் இங்கு நிரந்தரமாக வசிப்பது கிடையாது.
அண்டார்டிகா பல நூறு மீட்டர் ஆழத்துக்கு உறை பனியால் மூடப்பட்டிருந்தாலும் கெட்டியான உறை பனிக்கட்டிக்கு அடியில் மிக ஆழத்தில் பல பாதாள ஏரிகள் உள்ளன. மொத்தம் 387 பாதாள ஏரிகள் உள்ளன. லேக் வோஸ்டாக், லேக் எல்ஸ்வர்த், லேக் வில்லான்ஸ், லேக் விடா போன்றவை குறிப்பிடத்தக்க பாதாள ஏரிகள் ஆகும். ரஷ்ய ஆராய்ச்சிக் கூடத்துக்கு கீழே உள்ள ‘வோஸ்டாக்’ ஏரிதான் மிகப்பெரியது. இதன் நீளம் 250 கி.மீ., அகலம் 50 கி.மீ. இது உறை பனி மட்டத்திலிருந்து 4 கி.மீ. ஆழத்தில் உள்ளது. இவ்வளவு ஆழத்துக்கு துளை போட்டால் தான் ஏரி நீரை எட்ட முடியும்.
ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் குழாய்களைப் பயன்படுத்தி தரையில் துளையிட்டு நீண்ட உருளைகள் வடிவில் பனிக்கட்டி சாம்பிள்களை எடுத்து பல காலமாக ஆராய்ந்து வருகின்றன. ரஷ்ய ஆராய்ச்சியாளர்களால் லேக் வோஸ்டாக் ஏரியிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மிக சுத்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்நீரில் நுண்ணுயிரிகள் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் துளையிட்டு ஏரி நீர் சாம்பிள்களை எடுக்க முற்பட்டால் ஏரி நீர் பாதிக்கப்படலாம் என்றும், அண்டார்டிகாவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என்றும் கூறிய நிபுணர்கள் இவ்வித முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரிட்டிஷ் ஆராய்ச்சி குழுவினர் ‘லேக் எல்ஸ்வர்த்’ பகுதியில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பனிக்கட்டிக்கு அடியில் சுமார் 3 கி.மீ. ஆழத்தில் உள்ள ஏரியில் இருந்து நீரை எடுக்க முயற்சி செய்கிறார்கள். சூடான வெந்நீரைப் பயன்படுத்தி துளையிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராத வகையில் ஏரி நீர் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலாவதாக 3.4 கி.மீட்டர் நீளத்துக்கு ‘ஹோஸ் பைப்’ மூலம் மிகுந்த வேகத்தில் வெந்நீரைப் பீய்ச்சி உறை பனிக்கட்டியில் துளையிட்டு பாதாள ஏரியில் இருந்து தண்ணீர் சாம்பிளை எடுப்பது என்பது திட்டம். 90 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமுள்ள நீரைச் செலுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பல கடினமான சூழ்நிலைகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள். கடும் குளிர் பிரதேசம் என்பதால் வெந்நீரினால் ஏற்பட்ட ஆழமான துளையில் உள்ள நீர் விரைவில் குளிர்ந்து போய் விடுகிறது. இதனால் துளை குறுக ஆரம்பித்து விடுகிறது. துளை முற்றிலும் மூடிப்போவதற்குள் எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. பிரிட்டிஷ் குழுவினரின் கணக்குப்படி துளையிடுவதும், சாம்பிள்கள் எடுப்பதும் என எல்லா வேலைகளும் 24 மணிநேரத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பணி செய்கிறார்கள்.
‘லேக் விடா’ எனப்படும் ஏரி மிகக்குறைந்த ஆழத்தில் உள்ளதாகும். இந்த பகுதி மற்ற இடங்களைப் போலவே உறை பனிக்கட்டியால் ஆனாதே. இங்கு 60 அடி ஆழத்துக்கு அடியில் ஏரி உள்ளது. இந்த பாதாள ஏரியில் உள்ள தண்ணீரானது மைனஸ் 13 டிகிரி அளவுக்குக் கடும் குளிர்ச்சியானது. பாதாள ஏரி என்பதால் சுத்தமாக வெளிச்சம் கிடையாது. அத்துடன் ஏரி நீர் கடும் உப்புக்கரிப்புடன் காணப்படுகிறது.
பொதுவாக கடல் நீரானது சுமார் 3.5 சதவீத அளவுக்கு உப்பு அடங்கியது. ஆனால் மேற்படி பாதாள ஏரியின் நீர் 20 சதவீத அளவிற்கு உப்பு அடங்கியது. இப்படியான பாதகமான சூழ்நிலைகளில் அந்த பாதாள ஏரியில் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது. அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள பாலைவன ஆராய்ச்சிக் கழகத்தின் நிபுணர்கள் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்த ஏரியானது 2800 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்கட்டிக்கு அடியில் புதையுண்டு போயிருக்க வேண்டும் என்றும், இந்த பாதாள ஏரியில் 32 வகையான நுண்ணுயிர்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆக்சிஜன் கிடையாது, சூரிய ஒளியும் கிடையாது. ஆனாலும் பாதாள ஏரியில் உள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி நுண்ணுயிர்கள் உயிர் வாழ்கின்றன. இவற்றைப் போல வழக்கமான முறைகளுக்குப் பதில் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்வது பூமியில் புதிது அல்ல.
கடல்களில் சில இடங்களில் நல்ல ஆழத்தில் Black Smokers எனப்படும் கூம்பு வடிவ வெந்நீர் ஊற்று உள்ள இடங்களில் பல நூறு டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடான நீர் வெளிப்படுகிறது. அவற்றின் அருகே அதாவது கடும் வெப்பம் நிலவும் சூழலில் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன.
ஆனால் இதற்கு நேர்மாறான சூழ்நிலைகளில் இப்போது ‘லேக் விடா’ ஏரிப் பகுதியில் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் வியாழன், சனி போன்ற கிரகங்களில் இம்மாதிரியான சூழ்நிலைகளில் நுண்ணுயிர்கள் ஒருவேளை இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதற்கிடையே அண்டார்டிகாவில் சுமார் மூன்றரை கிலோமீட்டர் ஆழத்தில் பல லட்சம் ஆண்டுகளாக புதையுண்டு கிடக்கும் எல்ஸ்வர்த் ஏரியின் நீரை எடுத்து ஆராய பிரிட்டிஸ் ஆராய்ச்சிக் குழுவினர் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை 2012 டிசம்பர் மாத மத்தியில் இருந்து ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் மாதம் என்பது அண்டார்டிகா பகுதியில் ‘கோடைக்காலம்’. ஆனால் குளிர் நிலைமை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும்.
இதற்கிடையே அமெரிக்க நிபுணர்கள் ‘லேக் வில்லான்ஸ்’ என்னும் பாதாள ஏரியில் இருந்து நீர் சாம்பிள்களை எடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த பாதாள ஏரியானது சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த பாதாள ஏரியுடன் பாதாள ஆறுகளும் இணைந்துள்ளன.
இப்படி ‘லேக் வில்லான்ஸ்’ பாதாள ஏரியில் அமெரிக்க நிபுணர்களும், ‘எல்ஸ்வர்த்’ ஏரியில் பிரிட்டிஸ் நிபுணர்களும் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியில் பல புதிய ரகசியங்கள் வெளிப்படுவதை எதிர்காலத்தில் காணலாம்.
Box News:
அண்டார்டிகா குறித்த சர்வதேச உடன்பாட்டின்படி அக்கண்டம் யாருக்கும் சொந்தமானது அல்ல. எந்த நாடும் அங்கு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துக்கொள்ளலாம். அண்டார்டிகாவில் பாதாள ஏரிகள் தோன்றியதற்கு பல காரணங்கள் உள்ளன. நிலத்துக்குள்ளிருந்து தொடர்ந்து மேல்நோக்கி வெப்பம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வெப்பம் அண்டார்டிகா நிலப்பரப்புக்கு அடியில் உள்ள உறைபனியை உருக்கி ஏரியாக மாறச்செய்கிறது.
மேலே 100 மீட்டர் ஆழத்துக்கு உள்ள பனிக்கட்டிகளின் அழுத்தம் காரணமாக அடிப்புற பனிக்கட்டிகளின் உறைநிலை மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது. அண்டார்டிகா ஒரு சமயம் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலும் இருந்துள்ளது. பின்னர்தான் தென் துருவத்துக்கு நகர்ந்தது. அண்டார்டிகாவில் உறைந்த பனிக்கட்டிக்கு அடியில் நிலக்கரிப்படிவுகள் உள்ளன என்பது அக்கண்டம் முன்னர் ஏதோ ஒரு காலத்தில் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. அதாவது அண்டார்டிகா ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக்கொண்ட கண்டமாக இருந்தது என்று கூறப்படுகிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!